அத்தியாயம் 51: பாதாள பாதை பாதியானது!

வீரசேகரனைக் காணச் சென்ற ஐவர் அணி அவரைக் கண்டு நடந்த விவரங்களை எல்லாம் விளக்கி அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதையும் கூறினர். அங்கு மாயாபுரி தலைவரும் இருந்தார். அவர்கள் கூறியதனைத்தையும் கேட்ட வீரசேகரன்

“நீங்கள் நால்வரும் அந்த நீர்த்துளிப் பதக்கத்தை இணைத்தில் எங்களுக்கு பெருமகிழ்ச்சியாக உள்ளது. அதற்கு காரணமான கோதகா உனக்கும் எங்களது பாராட்டுக்கள்.”

“தலைவரே நான் ஒன்று கேட்கலாமா?”

“ம்..கேளுங்கள் கேசவன்”

“இவ்வாறு இந்த பதக்கத்தை இணைக்க வேண்டுமென்பது தங்களுக்கு முன்பே அறிந்திருந்தால் ஏன் எங்களிடம் கூறாது இருந்தீர்கள்? கேட்டது தவறென்றால் மன்னியுங்கள் தலைவரே!”

“எதற்கு மன்னிப்பு கேசவன். சில செயல்கள் சில விதிமுறைப்படி நடந்தால் மட்டுமே அதன் முழு பலனை நாம் பெற முடியும். அதை விடுத்து நாமே ஏதாவது அந்த விதியை நம் மதிக் கொண்டு மாற்ற முயற்சித்து இறுதியில் விதியும் மதியும் நம்மை கைவிட்டு நாம் நிர்க்கதியான நிலையில் இருப்போம். அதனால் தான் நாங்கள் உங்களிடம் எதுவும்…அதாவது எல்லாம் தெரிந்திருந்தும்…சொல்லாதிருந்தோம்.”

“இன்னும் இது போல தாங்கள் தெரிந்தும் சொல்லாதது ஏதாவது உள்ளாதா தலைவர்களே?”

“அதையும் விதி வழி விட்டுவிட்டு நாம் ஆக வேண்டிய வேலைகளைப் பார்ப்போம் வாருங்கள். யார் அங்கே”

என்று தன் கைகளைத்தட்டி தனது வேலையாட்களை வரவழைத்து அனைவருமாக அந்த நடுக்கம் ஏற்பட்ட இடத்துக்கு …அங்கு ஏன் அப்படி நேர்ந்தது என்று தெரிந்துக் கொள்வதற்காக விரைந்துச் சென்றனர்.

இதற்கிடையில் பாதாளச் சுரங்கத்தில் மதிநாகசுரன் கோபம் ஏற்படுத்திய நிலநடுக்கத்தை உணர்ந்த சக அசுரர் இனத்தினர் அவனை சமாதானம் செய்ய முயற்சித்தனர். அப்போது நவியாகம்ஷி மதிநாகசுரன் அருகில் சென்று

“மதி உனது கோபம் அந்த பிரயாகாவை எச்சரித்திடப் போகிறது. தயவுசெய்து கோபத்தை தவிர்த்திடுங்கள்.”

“பின்ன என்ன நவியா. இந்த சிகராசுரன் வாயைத்திறந்து ஏதாவது சொல்கிறானா பார். இப்படி இருந்தால் எனக்கு கோபம் வரத்தானே செய்யும்”

“சிகரா… மதி சொல்வதும் சரிதானே. அவர் ஆசான் மீது வைத்திருக்கும் அன்பை நான் சொல்லி உனக்குப் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை. அங்கு வட்ஸாவில் என்ன நடந்ததோ அதை அப்படியே சொல்லி விடு அதுதான் நம் அனைவருக்கும் நல்லது”

“நவியாகம்ஷி நான் அங்கு கண்ட காட்சியைக் கூறினால் நம் தலைவரான மதிநாகசுரன் தாங்க மாட்டார். அதுவுமின்றி ஆசான் என்னிடம் அது பற்றி உங்கள் யாரிடமும் கூறக்கூடாது என்றும் கூறியுள்ளார்.”

“இவனை…”

என்று தன் வாளால் வெட்டச் சென்ற மதிநாகசுரனைத் தடுத்த நவியாகம்ஷி

“மதி என்ன இது? நம்மிடமிருக்கும் சாம்பீனிகளும் அழிந்துக் கொண்டே வருகின்றன. நாமே ஆறு பேர் தான் இருக்கிறோம். இதில் சிகராவையும் வெட்டி விட்டீரேயானால் பின் நாம் ஐவர் தான் இருப்போம். சிகரா ஆசான் சொன்னது இருக்கட்டும். தயவுசெய்து அங்கு அவர் எப்படி இருக்கிறார் என்ற உண்மையை சொல்லிவிடு”

“நவியாகம்ஷி… மதிநாகசுரா…நமது ஆசான் மிகவும் மோசமான நிலையில் தான் இருக்கிறார். அவரின் கடைசிக் காலத்தில் இருக்கிறார். தான் மறையும் முன் இந்திரனை நாம் வென்றோம் என்ற செய்தியைக் கேட்பதற்காக தான் உயிருடன் இருப்பதாகவும், அதற்கான வேலைகளை செய்து முடித்துவிடவும், அந்த நற்செய்தியுடன் வந்து தன்னைக் காணும்படியும் கூறினார். அவரை நாதவேழரியும் மற்ற நம் பிள்ளைகளும் நன்றாக கவணித்து வருகின்றனர். இதை சொன்னால் நீங்கள் அனைவரும் அவரைக்காண அங்கு சென்றுவிடுவீர்கள் என்பதாலும் அதனால் நமது திட்டம் தள்ளிப்போகும் என்பதாலும் தான் அதை எல்லாம் உங்களிடமிருந்து மறைத்து அவர் நன்றாக இருப்பதாகக் கூறச் சொன்னார். ஆனால் என்னால் அது முடியாது போனது… மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. முதல் முறையாக என் ஆசானின் சொல்ப் பேச்சுக் கேளாதவனாய் நிற்கின்றேன். என்னை மன்னித்துவிடுங்கள் ஆசானே!”

என்று சிகராசுரன் கூறி முடித்ததும் சற்று நிலைத் தடுமாறிய மதிநாகசுரன்

“மந்திரா …மந்திரா…கேட்டாயா! நான் சந்தேகப்பட்டது சரியானது பார்த்தாயா! மந்திரா …மந்திரா”

என்று மதிநாகசுரன் தன் சிறு வயது முதலே மிகவும் நெருக்கமாக பழகிய தன் உயிர்த் தோழனான மந்திராசுரனைத் தேடினான். அவனின் கண்ணீர் நிறைந்த கண்களில் மந்திராசுரன் தெரியவில்லை என்றதுமே கண்களைத் தன் இருக்கைகலாலும் துடைத்துக் கொண்டு பார்த்தான் மந்திராசுரன் அந்த பாதாளச் சுரங்கத்தகலிருந்து வட்ஸாவை நோக்கி வேகவேகமாக சென்றுக்கொண்டிருந்தான். அதைக் கண்ட மதிநாகசுரனும் தன் இலகிமா சித்தியை பிரயோகித்து அவனைத் தொடர்ந்து வட்ஸாவிற்குச் சென்றான். தங்கள் தலைவரே திரும்பிச் சென்றதும் மற்ற அசுரர்களும் எஞ்சிய சாம்பீனிகளும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர்.

அசுரர்கள் அந்த பாதாளச் சுரங்கத்திலிருந்து வட்ஸாவை நோக்கி நகர்ந்ததும் அந்த சுரங்கத்தின் மேல் கூரை இடிந்து நொருங்கியது. அந்தப் பாதாளச் சுரங்கத்தில் அசுரர்கள் சிகராசுரனுக்காக காத்திருந்த இடத்தின் மேல் கூரையிலிருந்து கயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினர் வீரசேகரனின் வேலையாட்கள். அவர்களின் பாதய் அந்த பாதாளச் சுரங்கத்தின் தரையைத் தொட்டதும் அவர்களைக் கட்டியிருந்த கயிறு தளர்த்தப் பட்டது. உடனே அவர்கள் அந்த சுரங்கத்தில் அங்குமிங்குமாக சென்றுப் பார்த்தனர். அங்கே அவர்கள் கண்டக் காட்சி அவர்களுக்குப் பயத்தை உண்டாக்கியதும் அவர்கள் தங்கள் கயிறுகளை பிடித்து பலமாக இழுத்தனர். கயிறு கீழிருந்து இழுக்கப்பட்டதும் மேலே அந்தக் கயிற்றைப் பிடித்திருந்த வேலையாட்கள் உடனே அந்த கயிறுகளை மேல் நோக்கி இழுத்தனர். கீழே சுரங்கத்திற்குள் சென்றவர்கள் பயத்தில் உறைந்துப் போய் மேலே வந்தவர்களிடம் வீரசேகரரும் அவர் தளபதியான தம்பியும் அவர்களிடம்

“ஏன் பயந்துக் காணப்படுகிறீர்கள்? கீழே அப்படி என்ன தான் இருந்தது?”

“அதுதானே மிகவும் பயந்துள்ளீர்கள். நீங்கள் பயப்படும் அளவிற்கு எதைக் கண்டீர்கள்?”

என்று வினவிக்கொண்டிருக்கையிலே மேலே நின்றுக் கொண்டு கயிறுகளை இழுத்த வேலையாட்களில் ஒருவர்

“தலைவரே!! தலைவரே!! இன்னும் நம் ஆட்களில் ஒருவர் மேலே வரவில்லை.”

“அப்படியா? ஏன் என்ன ஆயிற்று? மேலே வந்தவர்களை வாய்த் திறந்து ஏதாவது சொல்லச் சொல்லுங்கள்.”

என்றுப் பேசிக் கொண்டிருக்கும் போதே சுரங்கத்தின் கீழேயிருந்த அந்த நபரின் கயிறும் பலமாக இழுக்கப்பட்டதும், மேலே இருந்த வேலையாட்கள் அந்தக் கயிற்றையும் மேலே இழுத்தனர். ஆனால் அது மிகவும் பாரமாக இருக்கவே இன்னும் சிலர் சேர்ந்து இழுக்க வேண்டியதாக இருக்க…அதைக் கண்ட வீரசேகரன்

“கீழ் இருந்து மேலே வருவது நம் ஆள் தானா என்ற சந்தேகம் வருகிறது. ஆகவே கயிற்றை மேலே இழுப்பவர்களைத் தவிர மற்ற அனைவரும் சற்று தூரமாகச் சென்றிடுங்கள்.”

என்று கூறியதும் அனைவரும் சற்றுத் தள்ளிப்போய் நின்று கீழிருந்து மேலே வருவது என்னவாக இருக்கும் இல்லை யாராக இருக்கும் என்ற பதற்றத்தில் இருந்தனர். அப்போது ஞானானந்தம் சுரங்கத்திலிருந்து வெளியே வந்து பயத்திலிருந்த ஒரு வேலையாளிடம் சென்று

“ஏன்ப்பா அப்படி என்னத்தைப் பார்த்தீர்கள்? நீங்கள் சொன்னால் தானே நாங்கள் ஏதாவது அதற்கான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக் கொள்ள முடியும். இப்படி வாய்த்திறக்காதிருந்தால் பின் நாம் அனைவரும் அழிய நேரலாமில்லையா. சொல்லுப்பா.”

“அது வந்து …அது வந்து…வந்து…வந்து…”

“ம்…வந்து …சொல்லுப்பா”

“அகோரமான பெரிய உருவங்கள்…ம்…”

“ம்…அந்த உருவங்கள் …என்ன உங்களைத் தாக்கியதா?”

“ம்…இல்லை இல்லை”

“பின் என்ன தான் நேர்ந்தது என்று கூறுங்களேன்”

“அவைகள் கீழே ….கீழே…”

என்று அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் சுரங்கத்திலிருந்து மேலே வந்ததது அந்த பரமான கயிறு…அதில் முதலில் வெளியே வந்தது ஒரு கை. அதைப் பார்த்ததும் அனைவரும் சற்றுப் பதற்றத்துடன் இரண்டடி முன்னால் வைத்து அந்த குழியையேப் பார்த்துக் கொண்டிருந்தனர். மேலே வந்த அந்த வேலையாள் மிகவும் மெல்லிய தேகமுடையவர் ஆவார். அவர் மேலே வந்ததும் கயிற்றை விட நினைத்த வேலையாட்களிடம் வெளியே வந்த மெலிந்த வேலையாள்

“நான் வந்துவிட்டேன் என கயிறு இழுப்பதை நிறுத்திவிடாதீர்கள்.”

“ஏன் இன்னும் யாராவது வர வேண்டியுள்ளதா”

“இல்லைத் தலைவரே! எனக்குத் தெரிந்து நான் தான் கடைசியாக வந்தேன். ஆனால் நாங்கள் கீழே கண்டவைகளையும் எனதுக் கயிற்றிலேயேக் கட்டிக் கொண்டும் வந்துள்ளேன். அதனால் தான் இழுப்பதை நிறுத்த வேண்டாமென கூறினேன்…ஆங் …அதோ பாருங்கள்…அவைகள் வருகின்றன”

என்று அந்த வேலையாள் கூறியதும் வீரசேகரன் உட்பட அனைவருமாக பார்த்தனர். பெரிய பெரிய அகோரமான உருவங்கள் வெளிவந்தன. அவைகளைக் கண்டதும் அனைவரும் அவரவர வாள்களை உறுவினர். அதைப் பார்த்ததும் அந்த மெலிந்த வேலையாள்

“உங்கள் வாள்களுக்கு வேலையில்லை. அவற்றை உள்ளே வைத்திடுங்கள். இவையனைத்தும் உயிரற்ற நிலையில் தான் சுரங்கத்தில் கிடந்தன. அதுதான் அது என்னவாக இருக்கும் என்றும், இது போல இன்னும் இருக்குமா என்றும் தெரிந்துக் கொள்வதற்கும் தாங்கள் அனைவரும் பார்ப்பதற்குமாக தான் கட்டி இழுத்து வந்துள்ளேன்”

“சபாஷ்!! பலே!! உனது இந்த வேலைக்கு பாராட்டுக்களுடன் பரிசுகளும் தரப்படும்”

“நன்றி தலைவரே! ஆனால் இவை எந்த இனத்தைச் சேர்ந்தவைகள்? எப்படி அந்த சுரங்கத்திற்குள் இருக்கின்றன? இவைகளை உங்களில் யாராவது பார்த்ததுண்டா?”

என்று மெலிந்த வேலையாள் கூறி முடித்ததும் கோதகன் முதலில் சென்றுப் பார்த்தான்

“தலைவரே இவைகள் தான் அந்த அசுரர்கள் நம் ஊர்களை அழிக்க பயன்படுத்திய படையில் இருந்தன. இது மனித இனமே இல்லை”

அவனருகே நின்றிருந்த வேதாந்தகன்

“ஆமாம் இவைகளிடமிருந்து தப்பித்தான் நான் இங்கு வந்து சேர்ந்தேன். தயவு தாட்சண்யமின்றி மனித இனத்தைக் கொன்று குவிக்கும் ராட்சதர்கள்”

அதைப் பார்த்த ஞானானந்தம்

“ஆமாம் இது போன்ற உருவங்கள் ஆயிரக்கணக்கில் நான் அந்த அசுரர்களின் அரண்மனையில் பார்த்திருக்கிறேன். இவைகளுக்கு மூளைக் கிடையாது. ஆனால் இவைகளின் மூளையாக இருந்து அனைத்தையும் செய்து வருவது அந்த காற்கோடையன் என்கிற அசுரர்க் குல ஆசான் ஆவார்.”

நடந்தவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டுமிருந்த கேசவன் முன் வந்து

“அப்படி என்றால் கீழே அந்த சுரங்கத்திற்குள் அசுரர்கள் தான் இருந்தனரா? அதைத் தான் இந்த பதக்கம் நமக்கு குறிப்பளித்து உணர்த்தியதா? ஆனால் ஏன் இவைகள் உயிரற்று இருக்கின்றன? அப்படி அசுரர்கள் கீழே இருந்திருந்தால்…அவர்கள் இப்போது எங்கே? இந்த பாதாள சுரங்க வழியை அவர்கள் ஏன் உபயோகிக்க வேண்டும்?”

“என்னுள்ளும் இதே கேள்விகள் தான் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது கேசவன். அதை அப்படியே தாங்கள் கேட்டுள்ளீர்கள். எதுவானால் என்ன இனி அவர்கள் இந்த பாதையை உபயோகிக்காது பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.”

“அதை நான் பார்த்துக் கொள்கிறேன் அண்ணா. நீங்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு ஊருக்குள் செல்லுங்கள் நான் நமது வேலையாட்களை வைத்து இந்த சுரங்கத்தை அழித்துவிட்டு வருகிறேன்”

“சபாஷ் வீரராகவா சபாஷ். நீ இந்த வேலையை முடித்துவிட்டே வா. நாங்கள் சென்று வருகிறோம். வாருங்கள் இனி நடக்க வேண்டியதை வீரராகவன் பாரத்துக் கொள்வான். நாம் ஊருக்குள் செல்லலாம்.”

என்று வீரசேகரன் அனைவரையும் அங்கிருந்து ஊருக்குள் அழைத்துச் சென்றார். வீரராகவன் அங்கிருந்த வேலையாட்களிடம்

“ம்…இந்த இனங்களை தூக்கி அந்தப் பக்கமாக வைத்து விடுங்கள்”

“ஆகட்டும் தளபதியாரே”

“ம்…இப்போது இந்த சுரங்கப் பாதையை முழுவதுமாக வலது புறம் ஒரு ஐந்து காத தூரம் இடது புறம் ஐந்து காத தூரம் என முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்குங்கள்”

“ஆகட்டும் தளபதியாரே”

என்று வேலை மளமளவென நடந்தேறியது. எடுத்துக் கொண்ட வேலை முடியும் வரை வேலையாட்களை மேற்பார்வைப் பார்த்துக் கொண்டே அங்கேயே நின்றிருந்த வீரராகவன்

“ம்….சபாஷ்…நீங்கள் அனைவரும் சுறுசுறுப்பாகவும் மிகவும் கச்சிதமாகவும் இந்த வேலையை செய்து முடித்தமைக்கு வாழ்த்துக்கள். இன்றிரவு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் அரண்மனையில் விருந்தளிக்கவிருக்கிறேன் அனைவரும் குடும்பத்துடன் வந்துவிடுங்கள்.”

“ஆகட்டும் தளபதியாரே. மிக்க நன்றி.”

“ம்…அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். ஆனால் நீங்கள் அனைவரும் செய்ய வேண்டிய இன்னுமொரு முக்கியமான வேலை ஒன்றிருக்கிறது.”

“என்ன செய்ய வேண்டும் தளபதியாரே? கட்டளையிடுங்கள். செய்து முடிக்கக் காத்திருக்கின்றோம்”

“இதோ இந்த அகோர பிராணிகளை தீயிலிட்டு எரித்திட வேண்டும்”

“இதோ செய்து முடிக்கிறோம்”

“ம்….ஆகட்டும்”

என்று வீரராகவன் சொன்னதும்…அனைவரும் காண மேலே இழுத்து வரப்பட்ட உயிரற்ற சாம்பீனிகளை எல்லாம் ஓரிடத்தில் வைத்து அவற்றின் மீது எண்ணெயை ஊற்றி எரித்தனர் பிரயாகா தலைவரின் வேலையாட்கள். அவர்கள் அனைவருக்குமான வேலைகள் முடிந்ததும் தளபதி வீரராகவனுடன் சேர்ந்து ஊருக்குள் சென்றனர். தளபதியார் சொன்னது போலவே அனைவருக்கும் அவரின் மனையில் விருந்தளிக்கப்பட்டது.

ஆசானைக் காணச் சென்ற அசுரர்களும் எஞ்சியிருந்த சாம்பீனிகளும் வட்ஸாவை சென்றடைந்தனர். அங்கே படுத்தப் படுக்கையாக கிடந்த காற்கோடையனைக் கண்டதும் மந்திராசுரனும் மதிநாகசுரனும் ஓடி அவரருகேச் சென்றனர். மற்ற அசுரர்களும் கண்ணில் கண்ணீர் பெருக காற்கோடையனின் அருகில் சென்றனர். அவர்களின் வருகையைப் பார்த்த காற்கோடையன் சிகராசுரனைப் பார்த்து முறைத்தார். அப்போது சிகராசுரன்

“ஆசானே என்னை மன்னித்து விடுங்கள். என்னால் இவர்களிடமிருந்து உண்மையை மறைக்க முடியவில்லை.”

அப்போது நாதவேழிரி மதிநாகசுரனிடம் வந்து

“தந்தையே நமது குல ஆசானின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. எங்களால் உங்களுக்குத் தகவல் அனுப்பவும் முடியாது தவித்தோம். நல்ல வேளையாக சிகராசுரன் மாமா வந்தார். நானும் வியழியசுரியும் இந்த விவரத்தை தங்களிடம் சொல்ல தவித்தோம் தெரியுமா!”

“நமது ஆசானை தனியே விட்டுவிட்டு எங்களைத் தேடி வராது அவருடனே இருந்து நல்ல காரியம் செய்துள்ளீர்கள் எங்கள் கண்மணிகளே. இனியும் இவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.”

“ஆகட்டும் தந்தையே”

“ஆசானே உங்களுக்கு என்ன ஆயிற்று?”

“வயதாகிவிட்டது மதிநாகசுரா. வயதாகிவிட்டது. நீங்கள் திரும்பி என்னைக் காண்பதற்காக இங்கு வந்திருக்கக்கூடாது. பெரிய தவறிழைத்து விட்டீர்கள்.”

“ஆசானே எங்களை எல்லாம் காப்பாற்றி இவ்வளவு நாட்கள் எங்களுக்கு எல்லா சித்துக்களையும் பயிற்றுவித்து, ஆளாக்கிய உங்களை எப்படி கண்டுக் கொள்ளாது விட்டுவிட்டு எங்களால் செல்ல முடியும் சொல்லுங்கள்.”

“கோபம் மட்டும் நிதானம் தவறி நடக்கச் செய்திடாது…பாசம், அன்பும் நிதானம் தவறச் செய்திடும் பார்த்தீர்களா!”

“ஆசானே இப்போதும் பாடம் எடுக்க வேண்டுமா என்ன?”

“நமது ஒவ்வொரு தவறும் ஒவ்வொரு பாடமாகும் மதிநாகசுரா.”

“அப்படி என்றால் தங்களைப் பார்க்க ஓடோடி வந்தது தவறு என்கிறீர்களா?”

“மனதளவில் வருத்தப்படுவது சரிதான் ஆனால் அதற்காக சென்ற வேலையை முடிக்காது பாதியிலேயே வந்துவிட்டீர்களே இது தவறில்லையா?”

“இப்போ என்னவாயிற்று ஆசானே. இதோ தங்களைப் பார்த்துவிட்டோம். உங்களுக்கான எல்லா சௌகர்யங்களையும் செய்துக் கொடுத்துவிட்டு மீண்டும் வந்த வழியே சென்றிடுவோம்.”

“ம்…பார்ப்போம்…பார்ப்போம்”

என்று கூறியதும் உறங்கிப் போனார் காற்கோடையன். உடனே அவரை எழுப்ப முயற்சித்த மதிநாகசுரனிடம் நாதவேழிரி

“தந்தையே இப்படித் தான் நன்றாக பேசிக் கொண்டிருப்பார் உடனே தூங்கிப் போய்விடுவார். எழுப்பாதீர்கள். அவரே சற்று நேரத்தில் எழுந்துக் கொள்வார். அவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் சென்று உங்கள் வேலைகளை முடித்துவிட்டு வாருங்கள்”

“அதுவும் சரிதான். இவருக்கு என்னவோ ஏதோ என்ற பதற்றம் இப்போது தான் என்னுள் கொஞ்சம் தனிந்துள்ளது. ம்….ஆகட்டும் உங்களுடன் மந்திராசுரனை உதவிக்கு விட்டுவிட்டுச் செல்கிறேன்”

“மதிநாகசுரா நானே நம் ஆசானுடன் இங்கேயே இருந்து அவரைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல வந்தேன்…என் மனமறிந்து நீயே கூறிவிட்டாய்”

“மநி…மந்திராசுரன் இங்கேயே இருந்துவிட்டால் நாம் ஐவர் தான் இருப்போம்.”

“பரவாயில்லை நவியா. நாம் சமாளித்துக் கொள்ளலாம். நமது சித்திகளை நாம் பிரயோகித்து நம்மையும் பாதுகாத்து இவர்களையும் பாதுக்காப்போம்”

“சரி மதிநாகசுரா. அப்படியென்றால் உடனே புறப்படுங்கள். சென்று அந்த பிரயாகாவையும் கைப் பற்றிடுங்கள். நான் இங்கிருந்து இவரைப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் மனநிம்மதியுடன் சென்று வென்று வாருங்கள்.”

“ஆகட்டும் மந்திரா. நாங்கள் வருகிறோம். ஆசான் எழுந்ததும் கூறிவிடு. ம்…வாருங்கள் நாம் மீண்டும் பாதாள சுரங்கம் வழியாக பிரயாகா செல்வோம்”

என்று ஒவ்வொருவராக குழந்தைகளையும் மந்திராசுரனையும் தவிர மற்ற அனைவரும் சுரங்கத்திற்குள் இறங்கி பிரயாகாவை நோக்கி சென்றனர். அவர்கள் பாதி தூரம் கடந்துச் சென்றதும் அவர்கள் முன்புச் சென்ற சுரங்கப் பாதை அத்துடன் முடிவுற்றிருந்தது. அதைப் பார்த்த மதிநாகசுரன்

“இது என்ன விந்தை? இந்த பாதை எப்படி நாம் ஆசானைக் கண்டு வருவதற்குள் காணாமல் போனது? யாரின் வேலை இது?”

“மதி நான் அப்போதே தங்களிடம் சொன்னேன். தங்களின் கோபம் அந்த இடத்தையே அதிரச் செய்தது. யார் கண்டார்கள் அந்த அதிர்வைக் கண்டறிந்த அந்த பிரயாகா மக்கள் தான் இவ்வாறு செய்திருக்க வேண்டும். ஏனெனில் வேறு எவரையும் நாம் விட்டுவைக்கவில்லையே!”

“சரி சரி என் மீது பழி போடுவதற்கு பதிலாக ஏதாவது மாற்று வழி உள்ளதா என்று அனைவரும் யோசியுங்கள். நான் வேறு பாதை ஏதும் உள்ளதா என்று அவ்வழியே சென்று கண்டு வருகிறேன். என்ன சிகரா? நான் கேட்டதும் பதிலளித்திருந்தால் இது நேர்ந்திருக்க வாய்பிருந்திருக்காது அல்லவா! ம்…வா வா என்னுடன் வா நாம் இருவரும் தான் இதற்கான மாற்று வழியைக் கண்டறிந்து வரவேண்டும்.”

என்று மதிநாகசுரனும் சிகராசுரனுமாக மாற்று வழி கண்டுபிடிக்க இலகிமா சித்தியை பிரயோகப்படுத்தினர். அவர்களின் வருகைக்காக மீண்டும் சுரங்கத்தில் அமர்ந்தப்படி காத்திருந்தனர் மற்ற அசுரர்களும் அவர்களின் சாம்பீனிகளும்.

பிரயாகா மக்களை அழிக்க வேண்டி வந்த அசுரர்கள் மீண்டும் ஆரம்பப்புள்ளியிலேயே வந்து நின்றனர்.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s