அத்தியாயம் 50: நடுக்கம் நீடித்தது

சிகராசுரன் வட்ஸாவிற்கு சென்று அங்கே ஆசான் மிகவும் சோர்வாக படுத்திருந்ததைப் பார்த்தான். உடனே ஓடிச் சென்று அவர் அருகே அமர்ந்து நாதவேழிரியிடம்

“வேழி நமது ஆசானுக்கு என்ன ஆயிற்று?”

“மாமா அவர் இரண்டு நாட்களாகவே மிகவும் சோர்வாகத்தான் இருக்கிறார். அவரின் உடல்நலம் மோசமாகிக்கொண்டே இருக்கிறது. எங்களுள் ஒருவர் வந்து உங்களுக்கு தகவல் சொல்லலாம் என்று இப்போது தான் பேசிக்கொண்டிருந்தோம் அதற்குள் தாங்களே வந்துவிட்டீர்கள்.”

“ஆசானே இங்கே என்ன நடக்கிறது?”

“சிகரா…சிகரா…மதிநாகசுரனிடமும் மற்றவர்களிடமும் எதற்கும் அஞ்ச வேண்டாம் என்றும் நான் நன்றாக இருக்கிறேன் என்றும் நீ சொல்ல வேண்டும். இங்கு என் நிலைமையை அவர்களிடம் சொன்னால் பின் அனைவரும் இங்கு வந்து விடுவார்கள். அது கூடாது. நமக்கான நேரம் குறைந்துக் கொண்டே வருகிறது. நாம் அந்த தேவேந்திரனை அழித்தே ஆக வேண்டும். புரிகிறதா. என்னைப் பார்த்துக் கொள்ள உங்கள் வாரிசுகளாகிய நமது பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். இதை நீ கட்டாயம் செய்ய வேண்டும்.”

“ஆசானே!! உங்களை இந்த நிலைமையில் பார்க்கவா நான் வந்தேன். மிகவும் வேதனையாக உள்ளது.”

“எனது நேரமும் நெருங்கிக்கொண்டே இருக்கிறது சிகரா. நான் மறைவதற்குள் தேவேந்திரனை அழித்துவிட்டோம் என்ற நற்செய்தியை கேட்க வேண்டும். ம்…புறப்படு”

அப்போது சிகராசுரன் சாம்பீனிகள் சாம்பலாவதைப் பற்றி ஆசானிடம் சொல்லி அவரை மேலும் வேதனைப்படுத்த விரும்பாமல் அவர் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டு அது படியே நடப்பதாக கூறி தங்களின் அடுத்த அசுர வாரிசுகளிடம் ஆசானை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து மீண்டும் பாதாள சுரங்கத்திற்குள் சென்றான்.

சிகராசுரனின் வரவுக்காக காத்திருந்த அசுரர்கள் தங்களின் சாம்பீனிப் படையில் முக்கால் படையை இழந்திருந்தனர். மீதமிருந்த கால் வாசி சாம்பீனி படையுடன் சிகராசுரன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தனர். மதிநாகசுரனும் மந்திராசுரனும் ஓரிடத்தில் அமராமல் அங்குமிங்குமாக நடந்துக் கொண்டே இருந்தனர். அப்போது மதிநாகசுரன் மந்திராசுரனிடம்

“மந்திரா நமது ஆசானுக்கு நிச்சயம் ஏதோ நடந்திருக்கிறது.”

“அதெல்லாம் ஒன்றும் இருக்காது மதி. கவலை வேண்டாம்”

“அப்படி ஏதாவது நடந்திருந்தால்! அதன் பின் நாம் என்ன செய்வோம் மந்திரா?”

“மதி நீ உன் பலமறியாமல் பேசுகிறாய். முதலில் அவருக்கு ஒன்றும் நேராது. அப்படியே நேர்ந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொண்டாக வேண்டுமே தவிர அதை நினைத்து நமது செயலில் எந்த பின்னடைவும் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும். அதைத் தான் ஆசானும் விரும்புவார். அதுவுமில்லாமல் எங்கள் தலைவனாகிய நீ இவ்வாறு கேட்பது நியாயமா? சொல்.”

“கவலை துக்கம் எல்லாம் தலைவனுக்கு இருக்கக்கூடாதென்று ஏதாவது கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதா? நாம் இன்று உயிரோடிருப்பதற்கு காரணமானவர் நம் ஆசான். நமது திறமைகளின் குரு அவர். அது எப்படி கவலையில்லாமல் இருக்கும்?”

“கவலை என்பது எங்கள் அனைவருக்கும் உள்ளது தான் ஆனால் உன்னை அது கட்டிப்போட்டுவிடக்கூடாது என்று தான் கூறுகிறேன்”

“ம்…ம்…புரிகிறது. என்ன இந்த சிகராவை இன்னும் காணவில்லையே?”

என்று பேசிக்கொண்டே காத்திருந்தனர்.

பாதாள சுரங்கத்தில் சிகராசுரனுக்காக காத்திருந்தவர்கள் அவனின் வருகையைக் கண்டதும் மதிநாகசுரன் சிகராசுரன் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து சேர்வதற்கு முன்னதாக வேகமாக அவனருகே சென்று

“சிகரா சொல்…நமது ஆசானுக்கு என்ன ஆயிற்று?”

“அது வந்து மதிநாகசுரரே”

என்று கூற ஆரம்பித்ததும் ஆசான் அவனிடம் சொன்னது ஞாபகம் வர சொல்ல வந்ததை அப்படியே விழுங்கிவிட்டு ஏதும் சொல்லாமல் நின்றவனிடம் மதிநாகசுரன்

“எதற்காக இழுக்கிறாய் சிகரா. சொல். ஏன் ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் நிற்கிறாய் சிகரா.”

என்று கேட்டும் மௌனமாக நின்ற சிகராசுரனை பிடித்து உலுக்கிக் கொண்டே

“சிகரா அசுரகுலத் தலைவனான மதிநாகசுரன் கேட்கிறேன். நீ சொல்ல வந்ததை முழுவதுமாக சொல்லி முடி.”

என்று ஆக்ரோஷத்துடன் முதன்முதலில் தான் தலைவன் என்ற முறையில் ஆங்காரமாக கேட்டான் மதிநாகசுரன். அவனின் ஆங்காரக் குரல் அந்த பாதாளச் சுரங்கத்தையே நடுநடுங்கச் செய்தது.

தலைவர் வீரசேகரனைக் காணச் சென்ற கேசவன், முழுமதியாள், ஞானானந்தம், வேதாந்தகன் மற்றும் கோதகன் அவர்கள் சென்றுக் கொண்டிருந்த வழியில் முழுமதியாளுக்கு திடீரென ஓரிடத்தைக் கடந்து சென்ற போது உடல் முழுவதிலும் நடுக்கம் ஏற்பட உடனே அவள் மற்ற நால்வரையும் நிற்கச் சொல்லி தனக்கு நேர்ந்ததைச் சொன்னாள். அனைவரும் முழுமதியாள் சொன்ன அந்த இடத்திற்குச் சென்றனர். அங்கே சென்றதும் வேதாந்தகன்

“மதி இங்கேயா? இல்ல இங்கேயா?”

“நீங்கள் நின்றுக் கொண்டிருக்கும் இடத்தில் தான்”

“சரி இப்போது வந்து நின்று அதே போல் இருக்கிறதா என்று சொல்”

“ம்…ஆகட்டும் கேசவன் அண்ணா”

என்றுக் கூறிக்கொண்டே அதே இடத்தில் மீண்டும் சென்று நின்றாள் முழுமதியாள்.

“ஆமாம் மீண்டும் என் உடல் முழுவதிலும் நடுக்கம் ஏற்படுகிறது வேதா.”

“ஏன் குறிப்பாக அந்த இடத்தில் மட்டும் அவ்வாறு ஏற்படுகிறது? சரி மதி நீ அந்த பதக்கச் சங்கிலியை கழற்றித் தந்து விட்டு மீண்டும் அங்கே நின்று பார்”

“ம்…சரி ஞானானந்தம் அண்ணா. இந்தோ இதை வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நின்றுப் பார்க்கிறேன்.”

என்று சங்கிலியை ஞானானந்தத்திடம் கழற்றிக் கொடுத்துவிட்டு மீண்டும் அதே இடத்திற்குச் சென்று நின்ற முழுமதியாள்

“ம்….இப்போது என் உடலில் எந்தவித நடுக்கமும் ஏற்படவில்லையே!”

“அப்படியா? சரி நீ இங்கே வா நான் நின்றுப் பார்க்கிறேன்”

என்று கேசவன் நின்றான் அவனுக்கும் ஒன்றும் நேரவில்லை அப்போது ஞானானந்தம் கேசவனிடம் அந்த சங்கிலியைக் கொடுத்து

“கேசவன் இதை அணிந்துக் கொண்டு நின்றுப் பாருங்கள்”

“ம்…சரி ஞானானந்தம். தாருங்கள். ம்….ம்…மதி சொன்னதுப் போலவே என் உடலிலும் நடுக்கம் ஏற்படுகிறது ஞானானந்தம்.”

“அப்படியா? இதுக்கு என்ன அர்த்தம்?”

“இதை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே தெரியவில்லையே!”

“கேசவன் மற்றும் ஞானானந்தம் அண்ணாக்களே இதிலிருந்து எனக்கொரு விஷயம் தோன்றுகிறது”

“என்னது அது வேதாந்தகா?”

“இந்த பதக்கம் நமக்கு இந்த இடத்தில் ஏதோ இருப்பதை உணர்த்துகிறது.”

“இந்த இடத்திலா! இங்கு ஒன்றுமே இல்லையே!”

“அதுதானே! கேசவன் சொல்வது போல இது நம் வீரசேகரன் அரண்மனைக்கு செல்லக் கூடிய குறுக்குவழியாச்சே இங்கே என்ன இருக்கப் போகிறது?”

“ஞானானந்தம் அண்ணா இது குறுக்கு வழியானாலும் காட்டுப் பாதை. அதுவுமில்லாமல் வீரசேகரரின் அரண்மனையிலிருந்து இந்த இடம் எப்படியும் ஐந்து காத தூரமிருக்கும்”

“சரி அதற்கு என்ன இப்போ வேதா? நீ என்ன சொல்ல வருகிறாய் என்றே புரியவில்லையே!”

“உங்களுக்கு வேண்டுமானால் புரியாதிருக்கலாம் கேசவன் அண்ணா ஆனால் நம்ம ஞானானந்தம் அண்ணனுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் இந்த இடத்தின் வெளிபுறத்தில் ஒன்றும் வித்தியாசமாக இல்லா விட்டாலும் அவருக்கு ஏன் இந்த இடத்தில் உடல் நடுக்கம் ஏற்படுகிறது என்பதற்கான ஒரு யூகம் நிச்சயம் இருக்கக்கூடும். என்ன ஞானானந்தம் அண்ணா நான் சொல்வது சரிதானே?”

“என்ன சொல்கிறாய் வேதா? எனக்கா யூகமா?”

“நீங்கள் பிரயாகா வந்த வழியை நன்றாக சிந்தித்துப் பாருங்கள் ஞானானந்தம் அண்ணா. நிச்சயம் ஏதாவது புலப்படும்”

“ம்…சரி தான் வேதா. நீ சொல்வது சரிதான்”

“ஞானானந்தம், வேதாந்தகா நீங்கள் இருவரும் பேசிக்கொள்வது எங்களுக்கும் புரியும்படி இருந்தால் நன்றாக இருக்கும்.”

“அது தானே! என் கேசவன் மாமா சொல்வது தான் சரி. நீங்கள் இருவரும் ஏதோ புதிர் வைத்துப் பேசுவது போல இருக்கிறது. ஒன்றுமே புரியவில்லை”

“எனக்கும் தான் கோதகன். அப்படி வேதா சொன்னதில் எது சரி?”

“கேசவன், கோதகன், முழுமதியாள்… இந்த இடத்தில் வெளிப்புறம் ஏதும் நமக்கு வித்தியாசம் தெரியவில்லை என்றாலும் நான் இந்த பிரயாகாவிற்கு வர எனக்கு வகுக்கப்பட்ட வழி தான் பாதாளச் சுரங்கம். அதைத்தான் வேதா நான் பிரயாகா வந்த வழி என்று எனக்குச் சுட்டிக்காட்டினான். இப்போது புரிகிறதா?”

“எனக்கு ஒன்றும் புரியவில்லை”

“கோதகா ஞானானந்தம் சொல்வது என்னவென்றால் அந்த இடத்துக்கு அடியில் அதாவது நிலத்தடியில் ஏதோ இருப்பதாகவும் அதைத் தான் அந்த பதக்கம் நமக்கு தெரியவைப்பதாகவும் கூறுகிறார். சரிதானே ஞானானந்தம்”

“மிக சரி கேசவன்”

“அப்படி என்றால் எல்லா இடத்திலும் நடுக்கம் ஏற்படாமல் ஏன் அந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏற்படுகிறது? ஏன் இதைக் கேட்கிறேன் என்றால் நமது தலைவரின் மனை இங்கிருந்து ஐந்து காத தூரம் உள்ளது இல்லையா!”

“ஆமாம் மதி”

“ஆகையால் நீங்கள் சொல்வது போல பாதாள சுரங்கம் அந்த இடத்தின் அடியில் உள்ளதென்றால் அது வீரசேகரரின் மனை வரை அல்லவா செல்ல வேண்டும்! அப்படிப்பார்த்தால் இந்த வழி நெடுக்க நம் உடல் நடுங்க வேண்டுமே! ஏனெனில் நீங்கள் அவ்வழியே வந்து அவரின் வீட்டினுள் இருக்கும் வாயில் வழியல்லவா பிரயாகா வந்தீர்கள்.”

“ம்…அதுவும் சரிதான்.”

“மதியின் சந்தேகம் சரிதான் கேசவன் ஆனால் இங்கே பாதாள சுரங்கம் இருப்பதால் தான் பதக்கம் நமக்கு நடுக்கம் கொடுக்கிறது என்று நானோ அல்லது வேதாவோ கூறவேயில்லையே!”

“பின் தாங்தளின் உரையாடலுக்கான அர்த்தத்தை நாங்கள் இவ்வாறு யூகிப்பதற்கு முன் தாங்களே சொல்லிவிடுங்களேன் ஞானானந்தம்”

“கேசவன் அண்ணா நான் கேட்டது அவர் வந்த பாதாள சுரங்கத்தைப் போல ஏதாவது இந்த இடத்தின் அடியில் இருக்கக் கூடுமா என்பதாகும்”

“ம்…இப்படி முன்னாடியே கேட்டிருந்தால் நான் தேவையில்லாமல் யூகித்திருக்க மாட்டேனே வேதா”

“ம்…எங்களுக்கும் தெளிவு பிறந்திருக்கும் அல்லவா வேதா”

“மன்னித்து விடுங்கள் கேசவன் அண்ணா மற்றும் முழுமதியாள். நான் முதலிலேயே இவ்வாறு சொல்ல தவறிவிட்டேன்.”

“சரி அதெல்லாம் இருக்கட்டும் இப்போது இங்கு என்ன இருக்கிறது? ஏன் உடல் நடுக்கம் ஏற்படுகிறது? இதன் மூலம் இந்த பதக்கம் நமக்கு என்ன தெரிவிக்க தவிக்கிறது என்பதைப் பத்தி பேசுவோமா?”

“கேசவன் அதற்கு முன்…இந்த இடத்தில் ஏதோ இருக்கிறது என்று ஊர்ஜிதமாகிவிட்டது. இதை நாம் நால்வர் மட்டும் கண்டறிந்திட முடியாது பேசாமல் தலைவர் வீரசேகரிடம் இதைப் பற்றி கூறிவிடுவோம். அவர் என்ன சொல்கிறாரோ அதுபடியே செய்திடுவோம். என்ன சொல்கிறீர்கள்?”

“ஞானானந்தம் அண்ணா சொல்வது தான் சரி. நாம் அது படியே செய்திடலாம். என்ன சொல்கிறீர்கள் கேசவன் அண்ணா?”

“ம்…ம்…அதுதான் சரி. நாம் வீரசேகரரிடம் சொன்னால் அவர் இந்த இடத்தை தோண்டி பார்க்க ஏற்பாடு செய்வார். ம்…வாருங்கள் நாம் வேகமாக அவர் மனைக்குச் செல்வோம்.”

“வேதா நான் ஒன்று சொல்ல விருப்பப்படுகிறேன்”

“என்னது கோதகா? எதுவானாலும் சொல். நீயும் எங்களில் ஒருவர் தான்”

“அப்படி என்றால் இனிமுதல் நாங்கள் நால்வர் என்பதை நாங்கள் ஐவர் என்று கூறுகிறாயா?”

“ஹா!ஹா! ஹா! அப்படியே ஆகட்டும் கோதகா. இப்போது நாம் ஐவரும் தலைவர் மனைக்குச் சென்று, விவரங்களை தெரிவித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவென்று அறிந்துக் கொண்டு வரலாமா?”

“ம்…செல்லலாம் வாருங்கள்”

என்று ஐவர் அணி வீரசேகரரைக் காண விரைந்துச் சென்றனர். முதலில் வீரசேகரனிடம் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று கேட்டுத்தெரிந்துக் கொள்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட ஐவர் அணி இப்போது வீரசேகரன் என்ன செய்ய வேண்டுமென்று கூறுவதற்காக விரைந்துச் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

தலைவனை கண்டு அடுத்து என்ன என்று அறிந்திட
ஐவர் அணி புறப்பட்டுச் சென்றிட
ஒன்றாக இணைந்த நீர்த்துளிப் பதக்கம் தன் வேலையில் இறங்கிட
உடல் நடுக்கத்தின் மூலம் நால்வருக்கும் குறிப்பொன்றை தந்திட
குறிப்பறிந்ததும் செயல்படுத்திட தலைவனை கண்டு அடுத்து செய்ய வேண்டியதை விளக்கிட
ஐவர் அணி சென்றிட
பதக்கம் அதன் முதல் வெற்றிக் கண்டிட
பரமபதப் பகடை உருண்டிட
ஆட்டம் சூடுப் பிடித்திட
நான்கு இதழ் பதக்கமா? ஏழு வகை சித்து விளையாட்டா? என்ற கேள்வி எழுந்திட
காலத்தின் பிடியில் விடை இருந்திட
காலம் உணர்த்தக் காத்திருப்போம்
பதில் அறிந்திட பொறுமைக் காப்போம்.

பகடை உருளும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s