அத்தியாயம் 49: சாம்பீனிகள் சாம்பலாகின

வட்ஸாவில் காற்கோடையன் அவர்கள் இனத்தின் அடுத்த வாரிசுகளுக்கும் ஆசானாக இருந்து அவர் அறிந்து வைத்திருந்த அனைத்து மந்திரங்களையும், சித்துக்களையும் கற்றுக் கொடுப்பதில் மும்முரமானார். அசுரர்கள் பிள்ளைகளாயிற்றே அசுர வேகத்தில் கற்றுக் கொண்டிருந்தனர்.

பாதாள சுரங்கத்தில் மற்ற அனைத்து அசுரர்களும் சாம்பீனிகளும் பிரயாகாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.

முழுமதியாள் கழுற்றை அலங்கரித்துக் கொண்டிருந்த நீர்த்துளி பதக்கம் ஒளிர்ந்ததைப் பார்த்த நால்வரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர்

“கேசவன் அண்ணா இந்த பதக்கச் சங்கிலி எனது கழுத்தில் ஏறியதை நினைத்தால் எனக்கு ஏதோ ஒரு பெரிய பொறுப்புள்ளது போலவும் அதை நான் செய்யாது இருப்பது போலவும் என் மனதில் ஒரு கலக்கம் தோன்றுகிறது”

“எனக்கு அந்த பதக்கங்கள் இணைந்ததுமே அப்படி தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஞானானந்தம் உங்களுக்கு?”

“என்று அந்த மரப்பேழையை வைத்து அந்த அரக்கர்களிடமிருந்து தப்பி வந்தேனோ அன்று முதலே எனக்கு அந்த எண்ணம் இருக்கிறது.”

“வேதாந்தகா உனக்கு?”

“நான் அந்த அரக்கர்களை கண்டும் அவர்களிடமிருந்து நான் மட்டும் தப்பித்து வந்ததிலிருந்தே அவ்வாறு தோன்ற ஆரம்பித்தது. எனது ஊர் மக்கள் அனைவரும் அந்த அரக்கர்களால் கொல்லப்பட்டு அவர்களின் அடிமைகளாகியுள்ள நிலையில் நான் மட்டும் தப்பித்திருப்பது எதற்காகவோ நான் போராட வேண்டியுள்ளதை எனக்கு அவ்வப்போது நினைவுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது.”

“வேதா நீ சொல்வதெல்லாம் உண்மை. நானும் இதோ என் மைத்துனன் கோதகனும் மட்டும் தான் எங்கள் ஊயிலிருந்து தப்பித்து பிரயாகா வந்து சேர்ந்துள்ளவர்களாவோம்”

“கேசவன் நானும் என் குடும்பமும் அப்படித்தான் எங்களின் ஊரிலிருந்து தப்பித்த ஒரே குடும்பம் எங்களுடையது தான்.”

“அப்படிப் பார்த்தால் நமது மூன்று ஊர்களும் அழிந்தும் நாம் மூன்று நபர்கள் மட்டும் உயிரோடிருப்பது ஏதோ ஒரு பெரிய நிகழ்வுக்காக தான் இருக்க வேண்டும்”

“ஆமாம் கேசவன் அண்ணா எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது. ஆனால் எதற்கு? ஏன்? என்று நமக்கு யார் புரிய வைப்பார்கள்?”

“நமது ஊர்களிலிருந்து தப்பி இங்கு வரவழைத்த அந்த பரந்தாமனே அதற்கான காரணத்தையும், இனி நாம் என்ன செய்ய வேண்டுமென்பதையும் நமக்குப் புரிய வைப்பார் என்று நம்புவோம்”

“அதெல்லாம் சரி தான் ஞானானந்தம். எனக்கு இருக்கும் சந்தேகமெல்லாம் ஒன்று தான்…அப்படியே காரணமிருந்தாலும் அது நிச்சயம் நமது ஊர் தலைவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்…ஆனால் அவர்கள் ஏன் நம்மிடம் அதை கூற மறுக்கின்றனர். நேற்று தலைவர் வீரசேகரனும் மாயாபுரி தலைவரும் கூட நம்மிடம் எந்த விவரங்களையும் கூறவில்லையே! அது ஏன்?”

“அதற்கும் காரணமிருக்குமோ என்னமோ”

“அதுதான் என்ன? எதற்கு என்று தெரிந்தால் தானே நாம் அதற்கு தயாராக முடியும்”

“யார் கண்டா… கேசவன்! நமக்கே தெரியாது நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோமோ என்னவோ?”

“அப்படியா சொல்கிறீர்கள் ஞானானந்தம்?”

“இருக்கலாம் …இல்லாமலும் இருக்கலாம் கேசவன்.”

“ஞானானந்தம் அண்ணா எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?”

“எதை வைத்து என்றால்…ம்…இதோ இப்போது இந்த பதக்கத்தை இணைத்தை கூட சொல்லலாமே!! நம்மிடம் இதை இப்படி இணைக்க வேண்டுமென்று எவரும் சொல்லித் தரவோ, நம்மை தயார் செய்யவோ இல்லையே!! நாமே தான் செய்தோம்…நம்மை இப்படி செய்ய வைத்தது அந்த பரந்தாமனே தான்.”

“ம்…இது ஏற்கக்கூடியதாக உள்ளது.”

“சரி இனி அடுத்து என்ன?”

“நாம் இந்த பதக்கச் சங்கிலியோடு நமது தலைவர் வீரசேகரரைச் சென்று பார்த்து வருவோமா அண்ணா?”

“ஆம் மதி. நீ சொல்வது சரி தான். இத்தனை வருடங்களாக மக்களாகிய நமது நலனுக்காக இதைப் பாதுக்காத்து வந்தவர்கள் அவர்கள். ஆகையால் நாம் அவசியம் சென்று அவர்களிடம் இதை காண்பித்தாக வேண்டும். சரி சரி இப்படியே பேசிக்கொண்டிருக்காமல் கிளம்பிச் சென்று அவரைப் பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள்”

“ஆம் கேசவன் நீங்கள் சொல்வதும் சரிதான். நான் சீதையிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வருகிறேன்”

“வாருங்கள். கோதகா நீயும் எங்களுடன் தலைவரைக் காண வருகிறாயா?”

“நீங்கள் நால்வரும் பேசிக்கொண்டதிலிருந்து எனக்கு என்ன புரிந்தது என்றால் என்னையும் அந்த பரந்தாமன் இரு முறை காப்பாற்றியிருப்பதற்கும் ஏதாவது ஒரு காரணமிருக்க தான் வேண்டும். அதில் ஒன்று நான் அந்த அசுரர்களின் உரையாடலைக் கேட்டு தங்களுக்கு விளக்கியது. மற்ற ஒன்று எதற்காக இருக்கும்?…”

“நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும் கோதகா. அதைப் பற்றி பிறகு யோசிக்கலாம். இப்போது எங்களுடன் வருகிறாயா?”

“ம்…வருகிறேன் கேசவன் மாமா.”

“சரி வாருங்கள் நாம் சென்று வருவோம். மதி நீ அம்மா மற்றும் தாத்தாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பு மா.”

“ஆங் சரி அண்ணா. இதோ சொல்லிவிட்டு வந்து விடுகிறேன்.”

என்று ஐவரும் முழுமதியாள் இல்லத்திலிருந்து புறப்பட்டு வீரசேகரன் மனையை நோக்கிச் சென்றனர்.

பாதாள சுரங்கத்திலிருந்து பிரயாகா வழியைத் தேர்ந்தெடுத்து சென்றுக் கொண்டிருப்பதாக ஒரு சாம்பீனியை தூதனுப்பி காற்கோடையனுக்கு செய்தி அனுப்பிவிட்டு பிரயாகாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அசுரர்கள் வெகு நேரமாக நகர்ந்தும் பிரயாகா சென்றடையாததைப் பற்றி விமர்சித்துக் கொண்டே சென்றனர்

“நீங்கள் இருவரும் ஆளுக்கொரு வழியைத் தேர்ந்தெடுத்து சென்று வருவதற்கு ஏன் அவ்வளவு நேரமெடுத்தது என்று எங்களுக்கு இப்போது புரிகிறது மதி”

“நவியாகம்ஷி இத்தகைக்கு அவர்கள் இருவரும் அவரவரின் இலகிமா சித்தி உபயோகித்துள்ளனர்.”

“ஆமாம் ஆமாம். இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் மதிநாகசுரரே”

“யாழி இதோ நாம் பிரயாகாவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.”

“மதிநாகசுரரே…இங்கே பாருங்கள் நமது சாம்பீனிகள் ஒவ்வொன்றாக கீழே விழுந்து சாம்பலாகின்றன.”

ஆறு அசுரர்கள் முதலிலும் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக அவரவர்களின் சாம்பீனிகளும் சென்றுக் கொண்டிருந்த அசுரர்களின் வரிசையில் கடைசியாக வந்துக் கொண்டிருந்த கோபரக்கன் கூறியதும் மற்ற அசுரர்கள் அனைவரும் நின்றுத் திரும்பிப் பார்த்தனர். அவர்களால் நம்ப முடியாத ஒன்றை, அதுவரை அவர்கள் கண்டிராத ஒரு காட்சியைக் கண்டனர். சாம்பீனிகள் ஒவ்வொன்றாக பொத் பொத்தென்று தரையில் வீழ்ந்து சாம்பலாகிக் கொண்டே இருந்தன. இதற்கான காரணமறியாத அசுரர்கள் அவர்வர்களின் சாம்பீனிகளை தூக்கி நிப்பாட்ட முயற்ச்சித்தனர் ஆனால் முடியாது போகவே அவர்களுக்குள் பதற்றம் எழந்தது. ஏனெனில் அவர்களின் சித்து வேலைகள் எதுவும் சாம்பீனிகளிடம் பலிக்காது போனது. அங்கு நடந்ததைப் பார்த்த மந்திராசுரன் மதிநாகசுரனிடம்

“மதி இது என்ன விபரீதம் நடக்கிறது. நாம் பிரயாகாவை சென்றடைய உள்ள இந்த நேரத்திலா இந்த சாம்பீனிகளுக்கு இப்படி ஆக வேண்டும்? என்ன நடக்கிறது இங்கே?”

“இந்த சாம்பீனிகள் விழுவதற்கான காரணமென்ன என்று தான் இப்போது நான் யோசிக்கிறேன் மந்திரா. எனக்குத் தெரிந்த வரையில் இரண்டு காரணங்களே எனக்குப் புலப்படுகிறது.”

“அது என்ன இரண்டு காரணங்கள் மதிநாகசுரா?”

“ஒன்று பிரயாகாவில் உள்ள நான்குப் பதக்கங்களின் சக்தி இவைகளை அழிக்கிறது. இரண்டு…”

“ஏன் நிறுத்தி விட்டாய் மதி? அது என்ன இரண்டாவது காரணம்?”

“அது வந்து…”

“என்ன மதி நீங்களா தயங்குகிறீர்கள்?”

“அதற்கில்லை நவியா. அந்த காரணம் அப்படிப்பட்டது. அது தான் அதை கூறுவதற்கு தயக்கமாக இருக்கிறது”

“அப்படி என்ன அசுரர் குலத் தலைவரே சொல்வதற்கு தயங்கும் காரணம்?”

“அது என்னவென்றால்…இந்த சாம்பீனிகளை உருவாக்கியது நமது ஆசான் காற்கோடையன் அல்லவா!”

“ஆமாம் அதற்கென்ன மதிநாகசுரரே?”

“இரு யாழி. பொறுமையாக இரு. அதுதான் மதி சொல்ல வருகிறான் அல்லவா.”

“சரி மந்திராசுரரே. மன்னிக்கவும்”

“நீ சொல் மதிநாகசுரா”

“சாம்பீனிகளின் நடமாற்றம் நம் ஆசானுடையதாகும். அதாவது அவைகள் மூலம் நம்மோடு இது வரை இருந்துக் கொண்டிருப்பது நமது ஆசான் காற்கோடையரின் ஆன்மாவாகும்.”

“என்னது? என்ன சொல்கிறீர்கள் மதி?”

“ஆமாம் நவியா. அவரின் மந்திர சக்தியால் தன்னிடமிருந்த மூன்று வகை ஆன்மாக்களை அதாவது பகுத்தறிவு, உணர்திறன், தாவர ஆன்மாக்களிலிருந்து புது வகையான ஒரு ஆன்மாவை அவரே உருவாக்கி அதை வைத்துத்தான் எல்லா ஊர்களிலும் இறந்த நரன்களை எல்லாம் சாம்பீனிகளாக மாற்றியுள்ளார்.”

“சரி அதற்கும் இப்போது இந்த சாம்பீனிகள் விழுவதற்கும் என்ன சம்மந்தமுள்ளது?”

“நமது ஆசானின் ஆன்மா மெல்ல மறைந்துக் கொண்டிருப்பதால் தான் இந்த சாம்பீனிகளும் விழுந்துக் கொண்டிருக்கின்றன என்பது தான் அந்த இரண்டாவது காரணம்.”

“ஐய்யோ அப்படி என்றால் நமது ஆசானுக்கு ஏதாவது விபரீதம் நேர்ந்திருக்குமா?”

“தெரியாதே!! சிகராசுரா”

“நான் வேண்டுமானால் சென்று என்ன ஏது என்று பார்த்துவிட்டு வரவா மதிநாகசுரரே”

“ம்…நல்ல யோசனை தான். சென்று வா சிகரா. சென்று என்னவென்று அறிந்து வா. அதுவரை நாங்கள் இங்கேயே காத்திருக்கிறோம்”

“ஆகட்டும் இதோ நான் சென்று விவரங்களுடன் வருகிறேன்.”

என்று சிகராசுரன் இலகிமா உபயோகித்து வட்ஸாவிற்குச் சென்றான். மற்ற ஐவரும் அவர்களது சாம்பீனிகள் ஒவ்வொன்றாக விழுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே அவ்விடத்திலேயே அமர்ந்திருந்தனர். அப்போது மந்தாகிஷி

“இதற்காகவா என் சிம்பா உயிர் நீத்தார்? இப்படி இந்த சாம்பீனிகள் விழுவதற்காகவா நாம் எல்லா ஊர் மக்களையும் அழித்தோம்? இப்படியே இவைகள் கீழே விழுந்து அழிந்துப் போனால் மீதமிருக்கும் நாம் ஐவரும் தான் அந்த பிரயாகா மக்களை எதிர்த்துப் போரிட வேண்டும். மீண்டும் நாம் நமது ஆரம்பக் காலக்கட்டத்துக்கே வந்து நிற்கிறோம். என்ன !…அப்போது நாம் சிறுவர்களாக இருந்தோம் இப்போது வளர்ந்துவிட்டோம் அவ்வளவு தான் வித்தியாசம் வேறொன்றுமில்லை அப்போதும் இப்போதும்.”

“அப்படி சொல்லாதே மந்தா. அப்போது நம்மிடம் ஒன்றுமில்லை உண்மை தான் ஆனால் இப்போது நமக்கென நாம் கற்றுக் கொண்டுள்ள சித்தி இருக்கிறது. நமது ஆசானின் ஆசி இருக்கிறது. அவர் கற்றுத் தந்த பாடங்கள் நம்மோடு இருக்கிறது. ஆகையால் கவலை வேண்டாம். எனக்கிருக்கும் ஒரே கவலை நமது ஆசானைப் பற்றியது மட்டும் தான். அவருக்கேதும் நேர்ந்திடாதிருக்க வேண்டும் என்பதைப் பற்றியது மட்டும் தான். எங்கே இந்த சிகராசுரன்? ஏன் இவ்வளவு நேரம் ஆகியாம் அவன் வரவில்லை?”

“ம்…இப்படித்தான் நீங்கள் இருவரும் பிரயாகா வழியைத் தேடிச் சென்ற போது எங்களுக்கு இருந்தது. இன்னும் நேரமாகும் பேசாமல் சிகராசுரன் வரும்வரை இங்கே வந்து அமர்ந்துக் கொள்ளுங்கள்”

“என்னால் என்ன விவரம் என்றறியாமல் அமரமுடியாது நவியா”

“நமது ஆசானுக்கு ஒன்றும் ஆகாது மதிநாகசுரா. கவலை வேண்டாம்”

“இல்லை மந்திராசுரா என் மனதில் இதுவரை இல்லாத ஒரு வகையான அச்சம் தோன்றுகிறது.”

“என்னது அசுரக் குலத் தலைவருக்கு அச்சம் தோன்றுகிறதா? அப்போது எங்களின் நிலை என்னவாகும்?”

“எனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா?”

“ம். கேள் யாழி.”

“நவியா…இப்படியே இந்த சாம்பீனிகள் அழிந்துக் கொண்டே போனால்!! போனால் என்ன பாதி படையும் அழிந்துவிட்டது. முழுவதும் அழிந்து விட்டால் அதன் பின் பிரயாகாவிற்கு நாம் ஆறு பேர் தான் போக வேண்டும். நம் ஆறு பேரால் அந்த ஊரை அழிக்க முடியுமா?
ம்…ம்…அப்படி முறைக்காதே நவியா…நெருப்பு என்றால் வாய் சுட்டுவிடவா போகிறது.”

“ஏன் முடியாது யாழி? நம்மால் ஏன் முடியாது? நம் ஆறு பேரால் அந்த பிரயாகாவை மட்டுமல்ல அந்த தேவந்திரனையே அழிக்க முடியும்.”

“மதிநாகசுரா நீ சொல்வது நடக்க வேண்டுமெனில் நீ மீண்டும் ஈசத்துவம் சித்தியை பெற அதற்கான பூஜைகளை செய்தும், மந்திரங்களையும் உச்சரித்தும் பெற வேண்டும். அது உன்னுள் உள்ளது. நீ அதை விசிறி விட்டாலே போதும். அதன் பின் அந்த இந்திரன் என்ன அந்த பரந்தாமனையே நமக்கு அடிமையாக்க முடியும்”

“பார்ப்போம் எல்லாம் சிகராசுரன் கொண்டு வரக்கூடிய செய்தியில் தான் உள்ளது”

என்று சிகராசுரன் கொண்டு வரக்கூடிய செய்திக்காக தவிப்போடு காத்திருந்தனர் அசுரர்கள். அவர்கள் கண் முன்னே அவர்களோடு அத்துனை ஆண்டுகளாக இருந்து வந்த சாம்பீனிகள் தரையில் விழுந்து சாம்பலாகிக் கொண்டே இருந்தததைப் பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது, செய்வதறியாது திகைப்பிலிருந்தனர் அசுரர்கள்.

தொடரும்…..Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s