அத்தியாயம் 48: பாதாளம் திறந்தது, பதக்கம் இணைந்தது

வட்ஸாவில் தடுமாறி விழப்போன காற்கோடையனை தாங்கிப் பிடித்த மதிநாகசுரன் அவரை கைத்தாங்கலாக கூட்டிச் சென்று ஓரிடத்தில் அமரவைத்து

“ஆசானே அந்த ஞானானந்தமும் அவன் குடும்பமும் இங்கில்லை என்றால் எப்படி உங்களுக்கு நரன் நாற்றம் வந்தது?”

“அது தான் எனக்கும் குழப்பமாக உள்ளது மதி. இன்னமும் எனக்கு நரனின் நாற்றம் வந்துக் கொண்டு தான் இருக்கிறது. எதற்கும் அந்த வீட்டினுள் சென்று இன்னும் ஒருமுறை நன்றாக பார்த்திடுவோமா?”

“நீங்கள் வேண்டாம் ஆசானே நாங்கள் சென்று பார்த்து வருகிறோம். நீங்கள் இங்கேயே ஓய்வெடுங்கள். இதோ பார்த்து என்ன ஏது என்ற விவரம் அறிந்து வருகிறோம். மந்திரா வா நாம் சென்று பார்த்து வரலாம்”

“ஆகட்டும் மதி. ஆசானே நாங்கள் சென்று வருகிறோம்.”

“ம்…இருவரும் சென்று வாருங்கள்.”

என்று ஆசான் கூறியதும் மதிநாகசுரனும், மந்திராசுரனுமாக அந்த வீட்டினுள் சென்று சுற்றும் முற்றும் பார்த்தனர். அப்போது மந்திராசுரன் அந்த வீட்டின் ஒரு அறையின் மூலையில் ரத்தம் படிந்த ஒரு கிழிசல் துணியை எடுத்து மதிநாகசுரனிடம் அதை காட்டி

“மதி இங்கே பார் ரத்தம் படிந்த துணி ஒன்று இங்கிருந்து கிடைத்துள்ளது. இது அந்த நரனுடயதாக இருக்குமோ! இதனால் தான் ஆசானுக்கு நரனின் நாற்றம் வந்துள்ளதா?”

“ம்….அதுமட்டுமில்லை மந்திராசுரா. இங்கே பார். முதலில் நான் ஏதோ வரைப்பட்டிருக்கிறது என்று தான் நினைத்தேன். ஆனால் இந்த ரத்தம் படிந்த துணியைப் பார்த்ததும் தான் இங்கே தரையில் இருப்பதும் ரத்தமாக இருக்கும் என்றெண்ணத் தோன்றுகிறது. பார்த்தாயா! இந்த கறை நீளமாக சென்று அதோ அந்த வட்டமான கம்பளத்தின் அருகில் சென்று முடிகிறது!”

“ஆமாம் மதிநாகசுரா. நீ சொல்வதும் சரி தான். அப்படி என்றால் இங்கே அந்த நரன்களுக்கு ஏதோ நடந்திருக்கிறது! அதனால் ரத்தம் வந்திருக்க வேண்டும். அதைத் துடைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நம்மை விட அவர்களுக்கு வேறு யார் எதிரியாக இருந்திருக்கக் கூடும்?”

“அதைப் பற்றிய கவலை நமக்கு எதற்கு மந்திரா? வா அந்த வட்ட வடிவிலான கம்பளத்தின் அருகே சென்றுப் பார்ப்போம்”

“ம்…அதுவும் சரிதான். ஆனால் அந்த கம்பளம் வரை எதற்காக இந்த ரத்தத்தை துடைத்திருக்கிறார்கள்?”

“ம்….இங்கே பார்த்தாயா மந்திரா இந்த கம்பளத்தின் அடியில் ஏதோ மூடிப் போல இருப்பதை! இது வரை தான் அந்த ரத்தத்தின் கறை படிந்துள்ளது. சரி சரி நீ சென்று நம் ஆசானை அழைத்து வா”

“ஆகட்டும் மதி. இதோ சென்று அழைத்து வருகிறேன்.”

“என்ன மந்திராசுரா நீ மட்டும் வருகிறாய்? மதிநாகசுரன் எங்கே?”

“ஆசானே உள்ளே என்னென்னவோ இருக்கிறது. நீங்கள் வந்து பார்க்க வேண்டும் என மதிநாகசுரன் தங்களை அழைத்து வர என்னை அனுப்பியுள்ளான். தங்களால் வர முடியுமா ஆசானே!”

“ஆங்…இப்போது கொஞ்சம் பரவாயில்லை மந்திராசுரா. வா உள்ளே சென்றுப் பார்ப்போம்.”

“மெதுவாக வாருங்கள் ஆசானே. இதோ பாருங்கள் ரத்தம் படிந்த துணி. இது தான் எங்களை சிலைவற்றைக் கண்டுப் பிடிக்க உதவியுள்ளது.”

“ம்…இது நரனின் ரத்த வாசமே தான். அப்படி என்றால் அவர்கள் இங்கு தான் உள்ளனரா?”

“இல்லை ஆசானே ஆனால் ரத்தம் வருமளவிற்கு அவர்களுக்கு ஏதோ நடந்துள்ளது. அவர்கள் அதை மறைக்க எண்ணி துடைத்திருக்கிறார்கள் பாருங்கள் அதன் கறையை. இது அந்த அறையிலிருக்கும் ஒரு வட்ட வடிவிலான கம்பளத்தின் அடியில் சென்று மறைந்துள்ளது. வாருங்கள் உள்ளே செல்வோம். ஆ!! மதிநாகசுரா மதிநாகசுரா!”

“மந்திராசுரா எங்கே நம் மதியை காணவில்லை?”

“இங்கே தான் இருந்தான் ஆசானே! நான் தங்களை அழைத்து வருவதற்குள் எங்கு சென்றான்?”

“மதி விளையாடுவதற்கும். உன் சித்து வேலைகளைக் காட்டுவதற்கும் இது உகந்த நேரமல்ல. எங்கே இருக்கிறாய்?”

“மந்திரா!! ஆசானே!! நான் இங்கே உள்ளேன்”

“என்னடா இது நம் மதியின் குரல் மட்டும் கேட்கிறது ஆனால் ஆளைக் காணவில்லையே!! மதி மதி!!”

“ஆசானே. சற்று கீழே பாருங்கள்.”

“ஆங்!! மதி இது என்ன குழிக்குள் இருக்கிறாய்? அங்கு எப்படி எதற்காகச் சென்றாய்?”

“ஆசானே முதலில் நீங்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்து நில்லுங்கள் அப்போது தான் நான் வெளியே வர முடியும்.”

“ம்…சரி சரி சரி ஆசானே வாருங்கள் நாம் நகர்ந்து நிற்போம்.”

என்று ஆசானும் மந்திராசுரனும் அந்த வட்டத்தின் விளிம்பிலிருந்து நகர்ந்து நின்றதும் மதிநாகசுரன் மேலே வந்து

“ஏய் மந்திரா !! உள்ளே ஏதோ குகைப் போல தெரிகிறது. அந்த நரன்கள் ரத்தக் காயங்களுடன் நகர்ந்து வந்து இந்த குகைக்குள் தான் சென்றுள்ளனர். ஆனால் இந்த குகைக்கு முடிவேயில்லாததுப் போல சென்றுக் கொண்டே இருக்கிறது ஆசானே”

“ம்…ம்….அப்படி என்றால் அவர்கள் பாதாள வழியையும் வகுத்துள்ளார்கள். இதன் வழி சென்றுள்ளதால் தான் நம்மிடம் அவர்கள் சிக்கவில்லை.”

“இருக்கலாம் ஆசானே. ஆனால் இங்கே முழுவதும் இருள் சூழ்ந்துள்ளதே! எப்படி அவர்கள் சென்றிருக்க முடியும்? தீப் பந்தம் ஏந்திச் சென்றாலும் அது வெகுநேரம் வெளிச்சம் தந்திருக்காதே!!”

“மதி அப்படி என்றால் அவர்கள் இந்த இருள் குகைக்குள் தான் எங்காவது இருக்க வேண்டும் என்று சொல்கிறாயா?”

“இருக்கலாம் மந்திரா. இப்போது நாம் பேசுவதை கேட்டுக்கொண்டு அந்த இருளோடு இருளாக கலந்திருக்கலாம்.”

“இப்போது என்ன செய்வது ஆசானே?”

“மதிநாகசுரா …நாம் நமது படைகளை உடனடியாக இங்கு வரவைத்து இதனுள் நாம் அனைவரும் சென்றுப் பார்த்தால் தான் விவரம் அறிந்துக் கொள்ள முடியும்”

“ஆகட்டும் ஆசானே நான் சென்று நம் படையுடன் வருகிறேன்”

“மதி நான் சென்று வருகிறேன். நீ ஆசானுடன் இங்கிரு.”

“இல்லை இல்லை மந்திரா நீயே இங்கிரு. நான் சென்று அனைத்து ஏற்பாடுகளுடன் நம் படையை அழைத்து வருகிறேன்”

“சரி. சென்று வா மதி”

என்று காற்கோடையனிடமும், மந்திராசுரனிடமும் இருந்து விடைப்பெற்றுக் கொண்டு மாயாபுரிக்குச் சென்றான் மதிநாகசுரன். அவன் சென்றபின் காற்கோடையன் ஏதோ பலத்த சிந்தனையில் இருந்ததைப் பார்த்த மந்திராசுரன் அவரிடம்

“ஆசானே என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் அறிந்துக் கொள்ளலாமா?”

“ம்…ம்… பாதாள வழியில் நரன் சென்றால் நம்மால் கண்டுப் பிடிக்க முடியாதென்பது இப்போது தான் எனக்கே தெரிய வந்துள்ளது மந்திரா. இதை நான் ஏன் முன்பே தெரிந்துக் கொள்ளாது இருந்தேன்?”

“ஆசானே அதற்கான சந்தர்ப்பம் இதுவரை வராததால் தெரியாதிருந்திருக்கும்.”

“இல்லை எனது முதுமை என்னை நிறைய விஷயங்களை மறக்கச் செய்கிறது. ஆங்….இப்போது ஞாபகம் வந்து விட்டது.”

“என்ன ஞாபகம் வந்துவிட்டது ஆசானே?”

“நரன் தப்பிச் சென்றுள்ள படிப் பார்த்தால்…நாமும் இதே வழியில் சென்றால் பிரயாகா அல்லது மாயாபுரி அல்லது ஏதாவது ஒரு இடத்திற்கு …எனக்குத் தெரிந்த வரையில் இந்த சுரங்கம் பிரயாகா தான் கொண்டு செல்லும் இல்லையா!! அந்த நீர்த்துளிப் பதக்கமும் பாதாளத்தில் வேலை செய்யாது இருந்தால்!!”

“அப்படி மட்டுமிருந்தால் நாம் பிரயாகாவிற்குள்ளும் சென்றிடலாமே”

“பிரயாகாவுக்குள் செல்லலாம் ஆனால் அவர்களை அழிக்க முடியுமா?”

“ம்….அதற்கும் இதுபோல ஏதாவது ஒரு வழிப் பிறக்காதா என்ன?”

“ம்…இருக்கலாம்…இல்லாமலும் இருக்கலாம். பார்ப்போம். மதிநாகசுரன் வரட்டும். உள்ளேச் சென்றுப் பார்த்தால் எல்லாம் தெளிவாகிவிடும்”

“இதோ மதிநாகசுரன் வந்துவிட்டான். வா மதி வா.”

“வணக்கம் ஆசானே இதோ நம் இனத்தினருடனும், நமது சாம்பீனிப் படைகளுடனும் வந்து விட்டேன். அடுத்து என்ன?”

“நமது அடுத்த தலைமுறையினரான உங்களின் வாரிசுகளும் நானும் இங்கேயே இருக்கிறோம்‌. மற்ற அனைவரும் இந்த பாதாள சுரங்கத்திற்குள் சென்று அது எங்கு வரை செல்கிறது என்பதை அறிந்து வாருங்கள். ஒரு வேளை அது பிரயாகாவிற்கு அழைத்துச் சென்று அங்கு உங்களால் நுழைய முடிந்தால்…என்ன செய்ய வேண்டுமென்பது உங்களுக்கே நன்றாக தெரியும் என்று நம்புகிறேன்.”

“ஆகட்டும் ஆசானே. நாங்கள் அனைவரும் நமது சாம்பீனி படைகளுடன் இப்போதே செல்கிறோம். தங்களுக்கு அவ்வப்போது ஏதேனும் ஒரு சாம்பீனி மூலம் தகவல் தெரிவிக்கின்றோம்.”

“நல்லது மதிநாகசுரா. சென்று வாருங்கள். நாங்கள் உங்களின் வெற்றிச் செய்திக்காக இங்கேயே வட்ஸாவில் காத்துக் கொண்டிருப்போம். என்ன சொல்கிறீர்கள் எனது செல்லவங்களே!”

“ஆமாம் அப்பா. நம் ஆசான் தாத்தா சொல்வதுப் போல நாங்கள் அந்த நல்ல செய்தியைக் கேட்பதற்காக இங்கே காத்திருப்போம்”

“நாங்கள் நிச்சயம் வெற்றியுடன் திரும்புவோம். மகளே நாதவேழிரி அதுவரை நீ நமது ஆசானையும் உனது சகோதர சகோதரிகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்”

“ஆகட்டும் தந்தையே. நான் இவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சென்று வாருங்கள்.”

“ஆகட்டும் மகளே. ஆசானே நாங்கள் சென்று வருகிறோம். அனைவரும் அவரவரின் சாம்பீனிப் படைகளுடன் உள்ளே இறங்கி முன்னே சென்றுக் கொண்டிருங்கள். நவியாகம்ஷி நீயே முதலில் உன் சாம்பீனிகளுடன் சென்று மற்றவர்களுக்கு வழிகாட்டு”

“அப்படியே செய்கிறேன் மதி. ஆசானே நான் சென்று வருகிறேன்”

“சென்று வெற்றியுடன் வா மகளே”

என்று ஆசானிடம் ஆசிப் பெற்றுக் கொண்டு அனைவரும் பாதாள சுரங்கத்திற்குள் சென்றனர். அவர்களில் சிகராசுரன் தனது இலகிமா சித்தி உபயோகப்படுத்தி அனைவருக்கும் வழிகாட்டினான். ஓரிடம் வந்ததும் அவர்கள் அப்படியே நின்றனர். ஏனெனில் அங்கிருந்து நான்கைந்து வழிகள் பிரிந்துச் சென்றது. அதைப் பார்த்த மதிநாகசுரன்.

“சிகராசுரா நீ இலகுவாகி சென்று நரன்கள் எந்த திசையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து வா. அது வரை நாங்கள் இங்கேயே காத்திருக்கின்றோம்.”

“மதிநாகசுரா நமது சிகராசுரன் இந்த ஐந்தாறு வழிகளிலும் சென்று கண்டறிந்து வருவதற்கு கால தாமதமாகும்.”

“அப்படி என்றால் இப்போது நாம் என்ன செய்வது நவியா?”

“அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் மதி”

“ம்…நவியா நாம் ஆறு பேர் அவரவர் படைகளுடன் உள்ளோம். இங்கு ஆறு வழிகள் உள்ளது. நாம் அவரவர் படைகளுடன் ஒவ்வொரு வழியில் சென்றுப் பார்த்தால் என்ன?”

“யாழி நல்ல யோசனை தான். இதனால் சீக்கிரம் கண்டும் பிடித்திடலாம் ஆனால்…”

“இதில் ஆனால் என்பதற்கு என்ன இருக்கிறது மதி? நம் யாழி சொல்வதும் நல்ல யோசனை தானே”

“அதற்கில்லை நவியா. நம்மிடமிருந்து தப்பியுள்ளது பிரயாகா மட்டுமே. ஆகையால் மற்ற எந்த வழியாக யார் சென்றாலும் அங்கு ஒன்றுமிருக்கப் போவதில்லை. பின் ஏன் வீணாக சென்று வரவேண்டும் என்று தான் யோசிக்கிறேன்”

“ம்…அதுவும் சரி தான். அப்படி என்றால் உங்களுக்கும் இலகிமா சித்தி தெரியும் தானே! நீங்கள் ஒரு பக்கம் சிகராசுரன் ஒரு பக்கம் என தேடிச் செல்லுங்கள். இப்படிச் செய்தால் தேடிக் கண்டுப்பிடிக்கும் நேரம் பாதியாக குறைந்திடும் அல்லவா! என்ன சொல்கிறீர்கள் மதி”

“ம்…இது சாத்தியமே. சரி நீங்கள் அனைவரும் இங்கேயே இருங்கள் நாங்கள் இருவரும் சென்று வருகிறோம்.”

என்று கூறிவிட்டு அங்கிருந்து எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ள தங்களின் இலகிமா சித்தி உபயோகித்து ஆளுக்கொரு வழியில் மிதந்துச் சென்றனர் மதிநாகசுரனும், சிகராசுரனும். அவர்கள் வரும் வரை அங்கேயே தங்கள் சாம்பீனி படைகளுடன் மந்திராசுரன், நவியாகம்ஷி, யாகம்யாழி, கோபரக்கன், மந்தாகிஷி காத்திருந்தனர்.

முதலில் சென்ற சிகராசுரன் திரும்பி வந்ததும் அனைவரும் அவனின் பதிலுக்காகக் காத்திருந்தனர். அவன் ஏதும் சொல்லாது அடுத்த பாதையைத் தேர்ந்தெடுத்துச் சென்றதைப் பார்த்ததும் அனைவரும் மீண்டும் அமைதியாக அங்கேயே அமர்ந்துக் கொண்டனர். அடுத்துச் சென்ற மதிநாகசுரனின் வருகையைப் பார்த்ததும் மீண்டும் எழுந்து நின்றனர். ஆனால் மதிநாகசுரனும் ஏதும் சொல்லாது வேறு வழியைத் தேர்ந்தெடுத்ததும் அவனை நவியா தடுத்து நிறுத்தி

“மதி அவ்வழியே நம் சிகராசுரன் சென்றுள்ளான். நீங்கள் இந்த வழியில் சென்று வாருங்கள்”

என்று நவியா சொன்னதும் தன் வழியை மாற்றிக் கொண்டுச் சென்றான் மதிநாகசுரன். சிறிது நேரத்திற்குள் சிகராசுரன் திரும்பி வந்து மற்றுமொரு வழியைத் தேர்ந்தெடுத்துச் சென்றான். அவன் பின்னால் மதிநாகசுரன் வந்து

“இந்த வழி பிரயாகா தான் அழைத்துச் செல்கிறது. வாருங்கள் நாம் இவ்வழிச் செல்வோம்.”

“மதி நம் சிகராசுரன் இன்னும் வரவில்லையே!”

“ஓ!! சரி அவன் வருகைக்குக் காத்திருப்போம்.”

“இதோ சிகராசுரன் வந்துவிட்டான். மதி இப்போது நாம் செல்லலாம். சிகரா நில்‌. நாம் செல்ல வேண்டிய பாதையை நம் மதி கண்டறிந்துவிட்டான். உனக்காகத் தான் நாங்கள் காத்திருந்தோம் வா வந்து எங்களுடன் மதியின் வழியில் செல்வோம்”

“ஆகட்டும் மந்திராசுரரே. அப்படியே செய்கிறேன்”

என்று அனைவரும் பிரயாகாவை நோக்கி பாதாள சுரங்கம் வழியாகச் சென்றனர்.

பிரயாகாவில் காலை சூரியன் உதித்ததும் அனைவரும் எழுந்துக் கொண்டனர். கேசவன், வேதாந்தகன், ஞானானந்தம், முழுமதியாள் ஆகிய நால்வரும் முன்தினம் பேசிக்கொண்டது போலவே எழுந்து நீராடி சுவாமிக்குப் பூஜை செய்துக் கொண்டே தங்களின் நீர்த்துளிப் பதக்கங்களுடன் பூஜை அறையில் அமர்ந்திருந்தனர். பூஜையை முடித்ததும் நால்வரும் அவரவர் பதக்கத்தை மரப்பேழையிலிருந்து வெளியே எடுத்தனர். அன்று தான் நால்வரும் அந்த அமிர்தத்தை தன்னுள் அடக்கிக் கொண்டிருந்த நீர்த்துளிப் பதக்கத்தை முதன் முறையாக பார்த்தனர்.

“கேசவன் அண்ணா இந்தப் பதக்கம் மிகவும் வழுவழுப்பாக இருக்கிறது”

“ஆம் முழுமதியாள். அதனுள் உற்றுப் பார்த்தால் எனக்கு அந்த பாற்கடலே தெரிவது போல இருக்கிறது.”

“கேசவன் தெரிவது போல அல்ல தெரிகிறது”

“ஞானானந்தம் அண்ணா ஆமாம் எனக்கும் தெரிகிறது.”

“சரி இப்போ நாம் இதை இணைத்துப் பார்ப்போமா?”

“ஆகட்டும் வேதாந்தகா. இதோ எனது பதக்கம்”

என்று கேசவனும்

“இதோ என்னுடையது”

என்று ஞானானந்தமும்

“இதோ என்னுடய பதக்கம்

என்று வேதாந்தகனும்

முழுமதியாளிடம் நீட்டினர். அவர்கள் மூவரிடமிருந்தும் பதக்கங்களை வாங்கிய முழுமதியாள் தன்னுடையப் பதக்கத்தையும் அதனுடன் சேர்த்து அவைகளை ஒன்றாக பக்கத்துப் பக்கத்தில் வரிசையாக அடுக்கி வைத்தாள். ஒன்றுமே ஆகவில்லை. பின் அதன் வடிவத்தை மாற்றி வைத்துப் பார்த்தாள் அப்போதும் ஒன்றும் ஆகவில்லை. நால்வரும் குழம்பிப் போனார்கள் அப்போது அங்கேயே ஒரு மூலையில் அமர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த கோதகன் அவர்களிடம்

“நான்கு நபர்களுக்கு கொடுக்கப்பட்ட பதக்கங்களை ஒருவர் மட்டும் சேர்க்க நினைத்தால்… இப்படி தான்!”

“என்ன சொல்ல வருகிறாய் கோதகா?”

“ஏதோ காரணமாகத் தான் உங்கள் நால்வரிடமும் இந்தப் பதக்கங்களைத் தந்துள்ளனர். அப்படியிருக்கும் போது மதி மட்டும் அவற்றை இணைக்க முயன்றால் எதுவும் நடக்காது போகும் என்று தான் கூற வந்தேன் கேசவன் மாமா”

“அண்ணாக்களே, கணவரே! கோதகன் சொல்வதிலும் அர்த்தம் உள்ளது. நீங்கள் அனைவரும் அவரவர் பதக்கங்களை இப்படி என்னிடம் தராமல் அப்படியே நீட்டிப் பிடியுங்கள் நானும் என் பதக்கத்தைப் பிடித்துக் கொள்கிறேன். அப்போதாவது இணைகிறதா என்று பார்ப்போம். ம்…இப்படிப் பிடியுங்கள்”

என்று முழுமதியாள் சொன்னதும் மற்ற மூன்று பேரும் அதுபடியே அவரவர் பதக்கங்களை நீட்டிப்பிடித்தனர். நால்வரும் பிடித்தும் அந்த பதக்கங்கள் இணையாதிருந்ததைப் பார்த்த ஞானானந்தம் ஒன்றை கவனித்ததில்

“வேதாந்தகா நீ திருப்பிப் பிடித்திருக்கிறாய் பார். சரியாக எங்களைப் போலவே பிடி”

“ஓ!! ஆமாம் ஆமாம். மன்னிகவும். ம்….இப்போது சரியா?”

“ம்….இப்போ எங்கள் மூவரின் கையருகே வா”

என்று ஞானானந்தும் சொன்னதும் வேதாந்தகன் தனது பதக்கத்தை சரியாக பிடித்துக் கொண்டு அவர்களின் பதக்கங்களுக்கு அருகேச் சென்றதும் நான்கு இதழ்களாக நான்கு நபரிடமிருந்த நீர்த்துளிப் பதக்கமானது ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு அழகிய மலர் போல முழுமதியாளின் கையிலிருந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட பிரகாசமான ஒளி கதிர்கள் வீடு முழுவதும் பரவியது. அதை வாய் பிளந்து பார்த்தான் கோதகன். அந்த மலரின் பிரகாசத்தில் திகைத்துப் போய் செய்வதறியாது உறைந்துப் போய் அமர்ந்திருந்தனர் நால்வரும்.

முழுமதியாளின் கைகளில் அழகிய வழுவழுப்பான கண்ணாடி மலர் போல நான்கு இதழ்களும் ஒன்றாகி நான்கு இதழ்களிலிருந்த அமிர்தமும் ஒன்றெனக் கலந்து அந்த மலரின் நடுவில் தேங்கி நின்ற அழகைப் பார்த்துத் திகைத்துப் போயிருந்தனர் நால்வரும். அந்த மலரின் இரண்டு இதழ்களின் ஓரத்திலிருந்து தங்க நிறத்தில் சங்கிலி இரண்டு பூட்டப்பட்டு ஒரு அழகிய அணிகலனாக மாறியிருந்ததைப் பார்த்த ஞானானந்தம்

“மதி நாங்கள் நால்வர் பிடித்திருந்த நான்குப் பதக்கங்கள் இப்போது ஒன்றாகி உன் கைகளில் மட்டுமே இருக்கிறது. அதனால் இதை நீ உன் கழுத்தில் அணிந்துக் கொள்.”

“நானா? எனது கழுத்திலா?”

“ஆமாம் மதி ஞானானந்தம் சொல்வது சரிதான். அதற்காகத் தான் அந்த சங்கிலி கொடுக்கப் பட்டிருக்கிறது. அவர் சொன்னதுப் போல கழுத்தில் மாட்டிக் கொள்.”

“ம்…மாட்டிக் கொள் மதி”

என்று ஞானானந்தம், கேசவன் மற்றும் வேதாந்தகன் ஆகிய மூவரும் சொன்னதைக் கேட்டதும் முழுயதியாள் சற்று தயக்கத்துடன் அந்த பதக்கமிருந்த சங்கிலியை தன் கழுத்தில் மாட்டிக் கொண்டாள்.

முழுமதியாள் கழுத்தில் அந்த பதக்கம் ஏறியதும் வட்ஸாவில் காற்கோடையனுக்கு அவர் உடலில் நடுக்கம் ஏற்பட்டது. அதைப் பார்த்த நாதவேழிரி

“தாத்தா என்ன ஆயிற்று? ஏன் உங்கள் உடல் இப்படி நடுங்குகிறது?”

“நாதவேழிரி அங்கே அந்த நீர்த்துளிப் பதக்கங்கள் ஒன்றாக இணைந்துவிட்டன. நம் இனத்திற்கான அழிவு நெருங்கிவிட்டது. நான் எது நடக்கக்கூடாது என்றிருந்தேனோ அது நடந்துவிட்டது மகளே…அது நடந்துவிட்டது!”

“இருக்கட்டும் தாத்தா. அதற்காக ஏன் நீங்கள் ஏன் நடுங்க வேண்டும். நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். அப்படி எல்லாம் நம் இனத்தை ஓழித்திட முடியாது தாத்தா. கவலை வேண்டாம்.”

என்று காற்கோடையனைத் தேத்தினாள் நாதவேழிரி. ஆனாலும் காற்கோடையனை அச்சம் தொற்றிக் கொண்டது. அதைப் பார்த்த நாதவேழிரி இந்த தகவலை எப்படியாவது தன் தந்தைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கியவள்…சிறிது நேரத்தில்

“தாத்தா…தாத்தா நான் சென்று மதி அப்பாவிடம் விவரத்தைக் கூறிவிட்டு வரவா”

“வேண்டாம் நாதவேழிரி வேண்டாம். நீங்கள் எவுரும் அங்கு செல்ல வேண்டாம். நம் இனம் தழைக்க நீங்கள் தான் எங்களின் கடைசி நம்பிக்கை. ஆகையால் உங்களை இழக்கு அவர்களும் விரும்ப மாட்டார்கள்.”

“தாத்தா நான் அவர்களுடனே சென்றுவிடுகிறேன் என்று கூறவில்லையே…போய் தகவலை மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேனே”

“வேண்டாம் கண்ணே வேண்டாம். அவர்கள் அந்த பாதாள சுரங்கத்திற்குள் எங்கே இருக்கிறார்களோ? நீ செல்ல வேண்டாம். அவர்களே தகவல் சொல்லி அனுப்புவார்கள் இல்லையா அப்போது நாம் இந்த தகவலை சொல்லிக் கொள்ளலாம் சரியா. அதுவரை நான் உங்களுக்கு நமது சித்துகளை, உங்கள் தாய் தந்தைக்குக் கற்றுக் கொடுத்ததை அப்படியே உங்கள் அனைவருக்கும் சொல்லித் தருகிறேன். நீங்களும் நன்றாக கற்றுக் கொள்ளுங்கள். ம்…வாருங்கள். என் முன் வந்து வரிசையாக நில்லுங்கள்”

என்று காற்கோடையன் தங்கள் அசுரர் குலத்தின் அடுத்த தலைமுறையினருக்கு அவர்களின் பெற்றவர்கள் அவரிடமிருந்துக் கற்றுக் கொண்ட அனைத்து சித்து வேலைகளையும் கற்பிக்கத் துவங்கினார்.

தொடரும்….


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s