அத்தியாயம் 47: ஓரிடம் சேர்ந்தனர்

ஞானானந்தமும் கேசவனுமாக கோதகன் தங்கியிருந்த இடத்திற்கு சென்றனர். அங்கேயிருந்த காவலாளியிடம் கோதகனைப் பார்க்க வேண்டுமென சொல்ல உடனே காவலர்கள் மறுக்க அந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டே வந்த மாயாபுரி ஊர் தலைவர்

“என்ன இங்கே ஒரே சத்தம்?
அட அடே கேசவா!!
வா வா வா”

“ம்…பாருங்கள் தலைவரே இந்த காவலர் உள்ளே வரக்கூடாது என்று எங்களை தடுக்கிறார்”

“ஐயா! நான் உள்ளே போகக் கூடாது என்று தடுக்கவில்லை ஆனால் கோதகனை காண அனுமதியில்லை என்று தான் அவர்களைத் தடுத்து நிறுத்தினேன்.”

“ஓ!! கோதகனைக் காண வந்துள்ளாயா?”

“ஆம் தலைவரே அவனை காண தான் வந்துள்ளோம்.
தாங்கள் ஏன் அவனை என்னுடன் அனுப்பவில்லை தலைவரே”

“ம்…சரி சரி சற்று நேரம் இங்கேயே இருவரும் அமர்ந்திருங்கள்.
இதோ நான் வந்துவிடுகிறேன்.”

என்று மாயாபுரி ஊர் தலைவர் ஞானானந்தத்தையும், கேசவனையும் அங்கேயே உட்கார வைத்துவிட்டு வீரசேகரனை சந்தித்து

“வீரசேகரா…வீரசேகரா…”

“என்ன? என்ன?
என்ன ஆயிற்று?
ஏன் இவ்வளவு பதற்றம்?”

“என் அறையின் வாசலில் அந்த கேசவனும் ஞானானந்தமும் கோதகனைக் காண வேண்டுமென காத்திருக்கிறார்கள்.
இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?”

“அப்படியா.
பரவாயில்லையே எல்லாம் படு வேகமாக தான் நடக்கிறது”

“என்னது?
தாங்கள் என்ன சொன்னீர்கள்?”

“ஒன்றுமில்லை மாயாபுரி தலைவர் அவர்களே…
தாங்கள் அவ்விருவரையும் கோதகனைக் காண அனுப்பிவையுங்கள்.”

“வீரசேகரா உண்மையாக வா!!”

“ஆமாம் அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் நாள் வருமென்று எதிர்ப்பார்த்தது தான் ஆனால் அது இன்றே நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.
எங்கள் மத குருவின் கணக்குப் படி அவர்களின் சந்திப்பில் தான் நால்வரும் பதக்கத்தை ஒன்று சேர்ப்பார்கள். ஆகையால் அவர்கள் சந்தித்துக் கொள்ளட்டும் தடுக்காதீர்கள்”

“ஓ!! அப்படியா. அப்போ சரி வீரசேகரா நான் உடனே சென்று அவர்களை சந்தித்துக்கொள்ளச் செய்கிறேன்.”

என்று வீரசேகரனிடம் கேட்டுக்கொண்டு விட்டு மீண்டும் கேசவனிடம் சென்று அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு கோதகனைத் தங்க வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார் மாயாபுரி ஊர்த்தலைவர். அங்கே கேசவன் கோதகனைப் பார்த்ததும் ஓடிச் சென்று கட்டியணைத்துக் கொண்டு அழுதான். அப்போது ஊர்த்தலைவர் கேசவனிடம்

“கேசவா நீ உன் மைத்துனனை உன்னுடனே கூட்டிக்கொண்டு செல்லலாம்.
அதற்கான நேரம் வந்து விட்டது.”

“என் மைத்துனனை சந்திகவும் என்னுடன் அழைத்துச் செல்லவும் எதற்காக நேரம் காலம் பார்க்க வேண்டும் தலைவரே?”

“ம்…அப்படியா? அப்படி என்றால்
இத்தனை நாட்களாக கோதகனைத் தேடி வராத நீ ஏன் இன்று வந்துள்ளாய்?”

“அது…அது…அது வந்து.”

“என்ன பேச்சில் தடுமாற்றம் தெரிகிறதே?”

“அவனிடமிருந்து எங்களுக்கு சில விவரங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் தலைவரே…அதுதான்”

“அந்த விவரம் தெரியவேண்டியதற்கான அவசியம் இப்போது தான் வந்ததா?”

“ஆமாம் தலைவரே!”

“ம்…இப்போது புரிகிறதா கேசவா. நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் பல காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.
அவை எப்பப்போ நமக்கு எது எது தெரிய வேண்டுமோ அப்பப்போ அது அதை நமக்கு தெரிய வைக்கும்.
ஏதோ ஒரு காரணத்திற்காக தான் உன்னை கோதகனிடமிருந்து இத்தனை நாட்கள் பிரித்து வைக்க வேண்டியிருந்தது.
இப்போது அந்த தடை நீங்கிவிட்டது. நீங்கள் சந்தித்து தெரிந்துக் கொள்ள வேண்டியவை தெரிந்துக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. உன்னுடனேயே அவனை அழைத்துப் போ.”

“நன்றி தலைவரே. இத்தனை நாட்கள் அவனை பத்திரமாக பார்த்துக் கொண்டமைக்கு நன்றி தலைவரே!”

“இது தலைவர்களான எங்களின் கடமையாகும் கேசவா.
இதற்கு ஏன் நன்றி?
அதெல்லாம் தேவையில்லை. ம்…கோதகனை அழைத்துச் சென்று ஆக வேண்டியவைகளைப் பார்.
எனக்கு வீரசேகரனுடன் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் உள்ளது.
நான் அதற்குச் சென்று வருகிறேன். நீங்கள் அனைவரும் இப்போது முழுமதியாள் வீட்டிற்குச் சென்று வாருங்கள். நான் பிறகு வந்து உங்களைப் பார்க்கிறேன்.”

“ஆகட்டும் தலைவரே.
நாங்கள் விடைப்பெற்றுக் கொள்கிறோம்.”

கோதகனைப் பார்ப்பது பெரும் போராட்டமாக இருக்கும் என்றெண்ணி வந்த கேசவன் தன் ஊர்த்தலைவரின் பேச்சைக் கேட்டதில் இன்னும் குழம்பிப் போய் ஞானானந்தத்திடம்

“எங்கள் ஊர்த்தலைவர் சொல்படிப் பார்த்தால்…
இந்த பதக்கம் நம்மிடம் வந்ததற்கும் நிச்சயம் ஏதாவது ஒரு முக்கிய காரணமிருக்கும்.
ஆனால் அது என்னவென்று எப்படித் தெரிந்துக் கொள்வது?
கோதகா நீ அன்று இரு தலைவர்களிடமும் மாயாபுரி பிரயாகா இரு ஊருக்கு இடையே நீ மறைந்திருந்து கேட்ட விஷயங்களை முழுவதுமாக எங்களிடம் விவரமாக கூறு.
அதிலிருந்து ஏதாவது கிடைக்கிறதா என்று பார்ப்போம்”

“ஆகட்டும் மாமா. அதாவது…”

என்று ஆரம்பித்து மீண்டும் அன்று நடந்ததை முழுவதுமாக கோதகன் கூறி முடித்ததுமே

“எல்லாம் சரி.
ஆனால் எதற்காக அந்த ராட்சதர்கள்…”

“ராட்சதர்கள் இல்லை மாமா அசுரர்கள்.”

“மனிதனாக இல்லையென்றால் ராட்சதனானால் என்ன அசுரர்களானால் என்ன!!
எல்லாம் ஒன்று தான் கோதகா.”

“ம்…அதுவும் சரி தான் மாமா.
நீங்கள் கேட்க வந்ததைக் கேளுங்கள்”

“ம்…எதற்காக அந்த அசுரர்கள் நாலு பதக்கத்தில் ஒன்றையாவது கைப்பற்ற வேண்டுமென்றுப் பேசிக் கொண்டனர்?”

“அது ….அது….”

“கோதகா நன்றாக ஞாபகப் படுத்திப் பார்த்து சொல்.
வேற ஏதாவது இது சம்பந்தமாக பேசிக்கொண்டார்களா?”

“ம்…..ம்……”

“ம்..அப்படித் தான் நன்றாக யோசித்துப் பார்”

“கேசவன் நமது வீடு வந்து விட்டது. வாருங்கள் உள்ளே சென்று அனைவரிடமும் கோதகனை அறிமுகப்படுத்தி வைப்போம்”

“ம்…ஆகட்டும் ஞானானந்தம்.
வா கோதகா நமக்கு இங்கு சில சொந்தங்கள் கிடைத்துள்ளார்கள்.
அதில் ஒருவர் தான் இவர் ஞானானந்தம். மன்னிக்கவும் ஞானானந்தம் தங்களை முன்பே அறிமுகப் படுத்தியிருக்க வேண்டும்.
விவரங்களை தெரிந்துக் கொள்ளும் பரபரப்பில் அதை மறந்து விட்டேன்.”

“இருக்கட்டும் கேசவன்.
எனக்குள்ளும் அதே நினைப்பு இருந்ததால் தான் நானும் என்னை நானே அறிமுகப் படுத்திக் கொள்ள தவறிவிட்டேன்.
சரி சரி வாருங்கள் உள்ளே போவோம்.”

“ஞானானந்தம் அண்ணா, கேசவன் அண்ணா வாருங்கள் வாருங்கள்.
என்ன சென்ற காரியம் ஜெயமா?
தங்கள் மைத்துனரிடமிருந்து விவரங்கள் தெரிந்துக் கொள்ள முடிந்ததா?”

“இதோ இவன் தான் என் மைத்துனன் கோதகன்.
கோதகா இவள் தான் இனி நம் தங்கை முழுமதியாள். இவர் அவளின்….
இல்லை இல்லை நம் தாயார்.
இவர் நமது பாட்டனார். இவர்கள் மூவரும் இதே பிரயாகாவை தங்களின் சொந்த ஊராக கொண்டுள்ளவர்கள்.
இவர்கள் நம் அண்ணியார் சீதை, ஞானானந்தத்தின் மனைவி.
இவர்கள் அவந்தியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் நம்மைச் சித்தப்பா என்று அழைக்கப் போகும் சிறுவண்டுகள்.
இவன் வேதாந்தகன்.
த்ரிகான்தக்கைச் சேர்ந்தவன்.
எனக்கு தம்பி உனக்கு அண்ணன்.”

என்று கேசவன் அனைவரையும் கோதகனுக்கும் கோதகனை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் அவர்கள் ஒருவரையொருவர் வரவேற்று நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். மதி உள்ளே சென்று வெளியிலிருந்து வந்தவர்களுக்கு பலகாரங்களும், பாலும் கொண்டு வந்துக் கொடுத்தாள். அதை அவர்கள் உண்டு முடித்ததும் அனைவருமாக வட்டமாக அமர்ந்துக் கொண்டு பேசலானார்கள். அப்போது கோதகன் மீண்டும் தான் கண்டதையும் கேட்டதையும் அனைவரிடமும் விவரித்தான். தங்களிடம் சொன்னதையே தான் சொல்லப் போகிறான் என்று அவன் சொல்வதை கவனிக்காதிருந்தான் கேசவன். ஞானானந்தமும் கோதகன் சொல்வதில் ஏதும் முக்கியமானதில்லை என்றெண்ணி தன் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது முழுமதியாள் கோதனை ஓர் இடத்தில் அவன் பேச்சை நிறுத்தச் சொன்னாள். உடனே கேசவன் திரும்பி முழுமதியாளைப் பார்த்து

“என்ன ஆயிற்று மதி?
எதற்காக கோதகனை நிறுத்தச் சொன்னாய்?”

“அண்ணா உங்களிடம் இதை கூறிவிட்டுத் தானே இங்கே எங்களுக்கு விவரிக்கிறார்?”

“ஆமாம்.
இதைக் கேட்பதற்காகவா அவனை நிறுத்தச் சொன்னாய்!!”

“இல்லை அண்ணா.
எப்படி நீங்கள் இருவரும் அவர் சொன்னதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்காதிருந்தீர்கள்?”

“அப்படி முக்கியமான விஷயமாக எதுவும் எங்களுக்குப் படவில்லையே..”

“இவன் சொன்னது எல்லாமே அந்த சுக்கிராச்சாரியார் எங்களிடம் சூட்சகமாக கஷியில் வைத்து சொல்லிவிட்டார். அசுரர்கள் குருவான அவர் சொன்னதைத் தான் கோதகன் மறைந்திருந்து கேட்டதில் அந்த இரு அசுரர்களும் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.”

“இருக்கலாம்.
ஆனால் இப்போது இவர் சொன்னதில் எனக்கொன்று தெரிய வந்துள்ளது.”

“என்னது அது முழுமதியாள்?”

“கேசவன் அண்ணா மதி சொல்வது சரிதான். நானும் ஒரு விஷயத்தைப் புரிந்துக் கொண்டேன்.
அதை எப்படி தாங்கள் தவற விட்டீர்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை. நேற்று நாம் நமக்குள்ளேயே கேட்டுக்கொண்ட கேள்விக்கான பதிலை இப்போது கோதகன் சொன்னார்.”

“டேய் கோதகா அப்படி என்னத்தை சொன்ன?
எங்க கிட்ட சொன்னதை தானே சொன்ன?”

“ஆமாம் மாமா.
அதைத் தான் சொன்னேன்”

“ஞானானந்தம் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா அல்லது புரிந்ததா?”

“கோதகன் நம்முடன் வரும்போது சொன்னதில் ஏதும் வித்தியாசமாக எனக்குப்படவில்லை…
இங்கே அவர் சொல்லும் போது …
அதையே தானே விவரிக்கிறார் என்றெண்ணி என் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்துவிட்டேன். மன்னிக்கவும்”

“அச்சச்சோ அண்ணா இதற்கெல்லாம் ஏன் மன்னிப்புக் கேட்கிறீர்கள்?
எங்கள் இருவருக்கும் என்னவென்றால் எப்படி நீங்கள் இருவரும் இதை கவனிக்காது தவற விட்டீர்கள் என்பதில் தான் ஆச்சர்யமாக இருக்கிறது.
அதனால் தான் மறுபடியும் மறுபடியும் கேட்கிறோம்”

“சரி போகட்டும் விடு மதி.
அப்படி என்ன விஷயத்தை நாங்கள் கவனிக்காதிருந்துள்ளோம்?
அதை நீ கூறு நாங்கள் தெரிந்துக் கொள்கிறோம். எங்கள் ஊர் தலைவர் சொல் போல எது எது எப்பெப்போ தெரிய வேண்டுமோ அது அது அப்பப்போ அவரவர்களால் அறியப்படுவோம்.
இதன் படி நீங்கள் இருவரும் சொல்லித்தான் நாங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் அப்படியே ஆகட்டுமே!.”

“சரியாக சொன்னீர்கள் கேசவன். முழுமதியாள், வேதாந்தகன் இருவரும் கோதகனின் பேச்சில் புரிந்துக் கொண்டதை எங்களிடம் சொல்லி எங்களுக்கும் புரிய வையுங்களேன்”

“அதாவது அந்த அரக்கர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் நம் நால்வரிடமிருக்கும் இந்த நான்கு நீர்த்துளிப் பதக்கங்களில் ஒன்றையாவது அழிக்கவோ அல்லது கைப்பற்றவோ வேண்டும் என்று….”

“ஆங் நாங்க இதை எல்லாம் கேட்டோமே ஆனாலும் எனக்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லையே!!! உங்களுக்கு ஞானானந்தம்?”

“இல்லை கேசவா எனக்கும் அப்படித்தான்.”

“ம்….எங்களை முழுவதுமாக சொல்லி முடிக்க விடுங்கள்.
அப்போது தான் புரியும்.”

“ம்‌…சரி சொல்லுங்கள்.”

“அதாவது நம்மிடமிருக்கும் இந்த நான்கு பதக்கங்களும் ஒன்றானால் அவர்களால் நம்மை அழிக்க முடியாது என்பதாகும் அது.”

“ஓ!!! ஆமாம் ஆமாம்”

“அதே போல இதிலிருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் நால்வரும் நம்மிடமிருக்கும் இந்த நான்குப் பதக்கங்களையும் இணைக்க வேண்டும் என்பதாகும்.”

“ஓ!! ஓ!! ஓ!! ஆமாம் ஆமாம்.
இப்போது புரிகிறது…
எதற்காக நான்கில் ஒரு பதக்கத்தை கைப்பற்ற துடிக்கின்றனர் அந்த அசுரர்கள் என்று நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். ஆனால் இப்படி சிந்திக்கவில்லை.
பலே முழுமதியாள் பலே வேதாந்தகா பலே”

“ஆம் நாங்கள் இருவரும் இவ்விதத்தில் சிந்திக்கவில்லை.
நீங்கள் இருவரும் மிகவும் அற்புதமாக சிந்தித்து நாம் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை தெளிவுப்படுத்தியுள்ளீர்கள்.
மிக்க நன்றி!”

“அச்சோ! கேசவன் அண்ணா மற்றும் ஞானானந்தம் அண்ணா நீங்கள் எதற்கு எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்? அனைவரும் ஒரே மாதிரி எல்லாவற்றையும் சிந்திப்பதில்லையே. ம்…கேசவன் அண்ணா அடுத்து ஏதோ ஒரு சிந்தினையில் இறங்கிவிட்டீர் போல் தோன்றுகிறதே!!”

“ஆமாம் முழுமதியாள்.
நீங்கள் சொல்வது படியே நாம் நால்வரும் அந்த நான்குப் பதக்கங்களையும் இணைத்தால் என்னவாகும்?”

“அது நாம் அதைச் செய்துப் பார்த்தால் தானே தெரியும் கேசவன்”

“அதுவும் சரிதான் ஞானானந்தம்.
அதை இப்போதே செய்துப் பார்த்திடுவோமா?”

“அண்ணா இப்போது இரவாகிவிட்டது. அதுவுமில்லாமல் இவற்றை இணைத்தால் என்னவாகும் என்பதும் நமக்குத் தெரியாது.
ஆகையால் நாளை விடியற்காலையில் எழுந்து நீராடிவிட்டு, சுவாமிக்குப் பூஜை செய்து முடித்தப்பின் இணைத்துப் பார்ப்போம். என்ன சொல்கிறீர்கள்?”

“ம்…அதுவும் நல்ல யோசனை தான்.
சரி அப்போ காலையிலேயே பதக்கங்களை இணைப்போம்.
என்ன நேர்ந்தாலும் அதை தைரியமாக சந்திப்போம்.”

“என்ன எல்லாருமா பேசி முடிச்சாச்சா பசங்களா.
வாங்க இரவு சாப்பாடு தயாராகிவிட்டது. எல்லாருமா ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுங்கள்.”

என்று முழுமதியாளின் தாயார் சொன்னதும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு எழுந்தனர். அன்றிரவு இருள் சூழ்ந்தது, மெல்லியக் காற்று அனைவரையும் வருடிச் சென்றது ஆனாலும் எவருக்கும் உறக்கம் வரவில்லை. எல்லோரும் மறுநாள் காலை அந்த பதக்கங்களை இணைத்தால் என்ன நடக்கும் என்பதுப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தார்கள்.

தொடரும்…..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s