அத்தியாயம் 44: புது வரவு

பிரயாகா ஊர் தலைவர் வீரசேகரன் திருமண மண்டபத்திலிருந்து எழுந்து சென்றதும், கேசவன் நேராக தன் ஊர் தலைவரிடம் சென்று

“தலைவரே இந்த திருமண விழாவை இவ்வளவு சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைப்பெற எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்த நம் தலைவர் வீரசேகரனின் ஆசிர்வாதம் இந்த தம்பதியருக்கு மிகவும் முக்கியமாகும். ஆனால் எல்லாம் செய்துவிட்டு வேதாந்தகன் முழுமதியாளுக்கு தாலி கட்டும் நேரத்தில் அவர் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.”

“என்ன செய்ய கேசவா? பொறுப்பு அழைத்தால் போகாமல் இருக்க முடியுமா? ஊர் தலைவராயிற்றே!!! வந்து விடுவார். கவலை வேண்டாம். நடப்பவை எல்லாம் நல்லவையாகவே நடந்தேறும். நீ சென்று மாப்பிள்ளைத் தோழனாக வேதாந்தகன் அருகில் நில் போ கேசவா”

“சரி தலைவரே…நானும் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தேன்…எங்குமே என் மைத்துனன் கோதகனைக் காண முடியவில்லையே!!! அவன் எங்கே சென்றான்? எனக்கு சொந்தம் என்றிருப்பது அவன் ஒருவன் தான். பேசாமல் அவனையும் என்னுடனே தங்க வைத்திருக்கலாமே!!!”

“அவன் என்னுடன் என் இருப்பிடத்தில் பத்திரமாக இருக்கிறான் கேசவா. நீ அவனைப் பற்றிக் கவலை பட வேண்டியதில்லை.”

“இல்லை …ஊரே இங்கு தான் உள்ளது அவனைத் தவிர…அந்த கவலையில் தான் சொன்னேன்”

“அவனையும் என்னுடன் வரும்படி அழைத்தேன். ஆனால் அவன் வர மறுத்துவிட்டான். தன் அக்காளின் பிரிவினால் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறான்”

“ம்…இருக்காதா தலைவரே!! அவனின் ஆருயிர் அக்காவாயிற்றே. அவர்கள் இருவரும் பேசத் துவங்கினார்களே என்றால் விடிய விடிய பேசிக்கொண்டே இருப்பார்கள். அவனுக்கென்று இருந்த ஒரே பந்தம் என் மனைவி லட்சுமி தானே….மற்ற குடும்பத்தினர் அனைவரையும் கொன்று விட்டனரே அந்த அரக்கர்கள்!! ம்… என்ன செய்ய? இந்த திருமணம் முடிந்ததும் நான் அவனைப் பார்க்க வேண்டும்”

“ம்….ம்ம்….சரி சரி… தாலி கட்டப் போகிறான் வேதாந்தகன். இந்த திருமணத்தைப் பேசி முடித்த மாப்பிள்ளை தோழன் அங்கில்லாவிட்டால் எப்படி? போ கேசவா போ. எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்”

“ஆகட்டும் தலைவரே. இதோ செல்கிறேன்”

என்று கூறிய கேசவன் மனதை ஆயிரம் பாரங்கள், குழப்பங்கள், பதற்றம் ஆகியவை ஆக்கிரமித்திருந்தன. அதை எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாது சென்று வேதாந்தகன் அருகில் நின்றான். கெட்டிமேளம் முழங்க, பூக்களுடன் அட்சதையும் சேர்ந்து மழைப் போல் மணமக்கள் மீது பொழிய வேதாந்தகன் முழுமதியாளின் கழுத்தில் தாலியைக் கட்டினான். பின் அங்கிருந்த அனைத்து பெரியோரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். அப்போது வேதாந்தகன் யாரையோ சுற்றும் முற்றும் தேடினான். அதை கவனித்த கேசவனுக்குப் புரிந்தது அவன் தலைவர் வீரசேகரனைத் தான் தேடுகிறான் என்று…

“வேதா நீ பிரயாகா ஊர் தலைவரைத் தானே தேடுகிறாய்?”

“ஆமாம் அண்ணா. அவர் இல்லையெனில் எங்களுக்கு இந்த திருமணமே நடந்திருக்காது. அவரின் ஆசிர்வாதம் எங்கள் வாழ்வைத் துவங்க மிகவும் அவசியமானதாகும்”

“ம்…உண்மை தான் வேதா. அவர் உள்ளே இடது புறமாக ஏதோ வேலையாக சென்றுள்ளார். நீங்கள் இருவரும் அங்கேயே சென்று ஆசிர்வாதம் பெற்று வாருங்கள்”

“ஆகட்டும் அண்ணா. நாங்கள் சென்று தலைவரின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு வருகிறோம்”

“ம்…அப்படியே அங்கே அனைத்தையும் நன்றாக கவனித்தும் வாருங்கள்”

“ம்….சரி அண்ணா”

என்று கேசவன் கூறியதும் முழுமதியாளுக்கு குழப்பமாக இருந்தது. முன் நாள் இரவு கேசவனுடனான உரையாடல் வேதாந்தகனை அவர் சொன்னதில் ஏதோ காரணமிருக்கிறது என்று உணரச் செய்தது. இருவரும் தலைவரைக் காண சென்றுக் கொண்டிருந்த போது முழுமதியாள்

“கேசவன் அண்ணா ஏன் அப்படி கூறினார்? அதற்கு பொருள் என்னவாகயிருக்கும்?”

என்று வேதாந்தகனிடம் கேட்டாள். அதற்கு வேதாந்தகன் முன் நாள் அவருடன் நடந்த உரையாடலை… தலைவர் வீரசேகரனின் அறையை நோக்கி நடந்துக் கொண்டே முழுமதியாளிடம் விவரித்தான். அதைக் கேட்டதும் முழுமதியாள்

“என்ன சொல்கிறீர்கள்? நாம் என்ன செய்யவேண்டும்? அந்த அரக்கர்களை நம் நால்வரால் மட்டும் வீழ்த்த முடியுமா?”

“என்னது இது மதி? நாம் நால்வரும் ஏதோ ஒரு நல்ல காரியத்துக்காக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். அப்படியென்றால் நம்மால் முடியும் என்பதால் தான் நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர்!!! அதுவுமில்லாமல் என் ஊர் மக்கள் அனைவரையும் அழித்தனர் அந்த அரக்கர்கள் ஆனால் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி இங்கு கொண்டு வந்து உன்னிடம் சிக்கவைக்கவில்லையா? எல்லாம் நல்லதுக்கே என்று எண்ணுவோம் மதி. நம் எண்ணமே நம் வாழ்க்கை புரிகிறதா?”

“என்ன சொன்னீர்கள்? நீங்கள் என்னிடம் வந்து மாட்டிக்கொண்டுவிட்டீர்களா? ம்…அப்படி ஒரு எண்ணமிருந்தால் இப்போதே என்னை விட்டுச் சென்றிடலாம். ஹா!! ஹா!! ஹா!!”

“நான் எவ்வளவு விஷயங்கள் கூறினேன் நீ எதை எடுத்து பேசி நகையாடுகிறாய் மதி!!!”

“தாங்களும் முக்கியமான விஷயத்தின் ஊடே தான் நகையாடினீர்கள்!!! அப்போது அது தவறாக தெரியவில்லையோ!”

“மன்னிக்கவும் தேவி.”

“ம்…இது நல்ல பிள்ளைக்கு அழகு”

“சிறு மாற்றம்”

“என்ன அது?”

“நல்ல கணவனுக்கு அழகு என்பதே சரியாக இருக்கும்”

“பரவாயில்லையே திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆனாலும் பல ஆண்கள் அறிந்துக் கொள்ளாத விஷயத்தை திருமணமான சில மணி நேரத்திலேயே புரிந்தும் அதுபடி நடந்தும் காட்டிவிட்டீரே…பலே பலே!!!”

“போதும் மதி. விஷயத்துக்கு வா”

“என்ன விஷயமென்றே நமக்குத் தெரிந்திடாத போது எங்கேயிருந்து அதற்கு வருவது? நாம் அவசரப்பட்டு தலைவர்களின் வேலையில் நமது மூக்கை நுழைக்காமலிருப்போம் அது தான் நம் அனைவருக்கும் நல்லது. அப்படியே நம்மால் ஏதாவது நடக்க வேண்டுமென்றால் அதையும் அவர்கள் சொல்லும் வரை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாது இருப்போம். வீணாக சிந்தித்து ஏன் இவ்வாறு நம்மை நாமே குழப்பிக் கொள்ள வேண்டும்? அதற்கான அவசியம் என்ன?”

“ம்…நீ சொல்வதும் சரி தான்… அதோ தலைவர் வீரசேகரன் இருக்கிறார். வா மதி நாம் சென்று ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வரலாம் “

“சற்று இருங்கள் வேதா. அங்கே அவர் மட்டுமல்ல …நமது தளபதி இருக்கிறார். மேலும் இரண்டு பேர் சிறு குழந்தைகளுடன் இருக்கின்றனர் கவனித்தீர்களா?”

“ஆமாம்!!! அவர்கள் யார்? அவர்கள் தான் அவந்தியிலிருந்து நம்மிடமிருக்கும் மரப்பேழையைப் போலவே ஒன்றை எடுத்து வந்திருப்பவர்களா?”

“தலைவர் வீரசேகரன் மிகவும் ஆவேசத்துடன் பேசிக் கொண்டிருக்கிறாரே!!! ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ?”

முழுமதியாளும் வேதாந்தகனும் தலைவர் வீரசேகரன் இருந்த அறைக்கு வெளியே நின்றுப் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த தலைவர் வீரசேகரனின் தம்பியும் பிரயாகா ஊர் தளபதியுமான வீரராகவன் கவனித்தார். உடனே

“வாருங்கள் வாருங்கள் புது மணதம்பியரே!! ஏன் அங்கேயே நின்றுக் கொண்டிருக்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்.”

“ம்…உள்ளே வாருங்கள் வேதாந்தகன் மற்றும் முழுமதியாள். ஏன் தாங்கள் இருவரும் இங்கே வந்துள்ளீர்கள்?”

“தலைவரே எங்கள் இருவருக்கும் இவ்வளவு சிறப்பாக திருமணத்தை நடந்தி வைத்த தாங்கள் முகூர்த்த நேரத்தில் அங்கில்லாமல் போனது எங்கள் இருவருக்குமே வருத்தம் தான். ஆனாலும் தங்களின் ஆசிர்வாதம் எங்கள் வருத்தத்தைத் துடைத்தெறிந்து விடும் என்ற நம்பிக்கையில் தங்களிடம் ஆசி பெற வந்துள்ளோம்”

என்றுக் கூறிக்கொண்டே தலைவர் வீசேகரனின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்த வேதாந்தகனையும், முழுமதியாளையும் ஆசிர்வதித்து தன் கரங்களால் அவர்களைப் பிடித்து எழுப்பி

“இப்போது மகிழ்ச்சியா?”

“மிகவும் மகிழ்ச்சியடைந்தோம் தலைவரே!”

என்று இருவரும் வீரசேகரனிடம் கூறி வணங்கியதும் அவர் தன் கழுத்திலிருந்த முத்து மாலையைக் கழற்றி வேதாந்தகன் கழுத்தில் போட்டுவிட்டார். பின் “யார் அங்கே” என்று குரல் எழுப்பியதும் காவலர் இருவர் வந்தனர். அவர்களிடம்

“இவர்கள் இருவரையும் நம் விருந்தினர் மாளிகையிக்கு அழைத்துச் செல்லுங்கள்….வேதாந்தகா, முழுமதியாள் நான் இங்கே இந்த முக்கியமான வேலை முடிந்ததும் அங்கு வந்து உங்களை சந்திக்கின்றேன். இப்போது இருவரும் எங்கள் விருந்தினர் மாளிகைக்குச் சென்றிடுங்கள்.”

“தலைவரே தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளாவிட்டால் நான் ஒன்று உங்களிடம் கேட்கலாமா?”

“என்ன வேண்டுமானாலும் கேள் மகளே முழுமதியாள்”

“இவர்கள் எல்லாம் யாரென்று நாங்கள் தெரிந்துக் கொள்ளலாமா? ஏனெனில் இவர்களை நம்மூரில் இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லை!!! ஒருவேளை எங்கள் திருமணத்திற்காக வந்திருக்கிறார்களா?”

“அப்பப்பா!!! எத்தனை கேள்விகள்? வேதாந்தகா நீ பாவமடா!!! நீ மிகவும் பாவப்பட்ட கணவனடா!! அம்மா முழுமதியாள் அவர்களே… தாங்கள் சென்று ஓய்வெடுங்கள். தங்கள் இருவருக்கும் மற்றும் கேசவனுக்கும் நாளை மறுநாள் அனைத்தும் தெரியவரும். அதுவரை உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்திடுங்கள் சரியா!!”

“ம்…சரி தலைவரே. தவறாக கேட்டதற்கு மன்னித்திடுங்கள்.”

“நீ கேட்டது தவறென்று நான் சொல்லவேயில்லையே!!! எல்லாம் தெரிய வேண்டிய நேரத்தில் தெரிய வரும். கவலைப்படாமல் சென்று வா பெண்ணே”

“ஆகட்டும் தலைவரே. நாங்கள் சென்று வருகிறோம்”

என்று அங்கிருந்து விடைப்பெற்றுக் கொண்டு தலைவர் வீரசேகரனின் விருந்தினர் மாளிகையிக்கு சென்றனர் முழுமதியாளும், வேதாந்தகனும். அங்கே அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்

“மதி… கேசவன் அண்ணா கூறியப்படி… தலைவருடன் நாம் கண்ட அந்த குடும்பத்தினரின் வரவுக்காகத் தான் அனைவரும் காத்திருந்திருக்கிறார்கள்”

“ஆமாம் வேதா. எனக்கும் அந்த சந்தேகமிருக்கிறது.”

“எனக்கு சந்தேகமே இல்லை”

“அப்படி எல்லாம் அடித்துப் பேசக்கூடாது வேதா!! ஏன் அவர்கள் ஏதாவது முக்கியமான விஷயத்தைத் தெரிவிப்பதற்காக வந்திருக்கலாம் இல்லையேல் ஏதாவது உதவி கேட்டு வந்திருக்கலாம். இவற்றை எல்லாம் யோசிக்காமல் நீங்கள் ஏன் அவர் தான் கேசவன் அண்ணா சொன்ன அந்த நான்காவது ஆள்!! என்றும்…அவர் வந்தாச்சு ஆகையால் நாமும் அவருடன் இணைந்து ஏதோ செய்ய வேண்டுமென்றும் எல்லாம் எண்ணுகிறீர்கள்?”

“என்ன பேசுகிறாய் மதி? உதவி கேட்டு வந்தவர்களை பார்க்கவா நம் திருமண மண்டபத்திலிருந்து பாதியிலேயே எழுந்து வந்திருப்பார் தலைவர்?”

“ம்…அதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்…சரி சரி திருமணமான புது தம்பதியரைப் போலவா நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம்?”

“இல்லை தான் மதி…ஆனால் எனக்கு துளியும் சந்தேகமில்லை மதி. அது அவர்களே தான்!!! அவந்தியிலிருந்து யாருக்காக பிரயாகா, மாயாபுரி தலைவர்கள் காத்திருந்தனரோ!! வந்துள்ளவர்கள் அவர்கள் காத்திருந்தவர்களே தான்!!!”

“மீண்டும் அதே விஷயத்துக்கு சென்றுவிட்டிரே!!! சரி…அது எப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள் வேதா?”

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s