அத்தியாயம் 46: கோதகனைத் தேடி

வேதாந்தகன் முழுமதியாள் திருமணம் இனிதே நடந்தேறியது. அவர்களும் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையை துவங்கினர்.

இரு ஊர் தலைவர்கள் பேசிக்கொண்டதையும் அவர்கள் மறைத்து வைத்திருந்த நபர்கள் யாராக இருக்கும் என்றும் யோசித்துக் கொண்டே இருந்ததில் இரவு முழுவதும் கேசவன் உறங்காது புரண்டு படுத்துக்கொண்டிருந்ததில்… காலை விடிந்தது கூட தெரியாது அதே சிந்தனையிலிருந்தான். அப்போது முழுமதியாளின் அன்னை அவனை பல முறை அழைத்தும் எழாது படுத்திருந்தவனை தட்டி எழுப்பினாள். உடனே எழுந்துக் கொண்ட கேசவன்

“ஆங்!! ஆங்!! ஆங்!!! அவர்கள் யாராக இருக்கக்கூடும்?”

“ம்….என்னப்பா கேசவா!! கண்களை விழித்துக்கொண்டே கனவா? என்ன நீ இரவு முழுவதும் உறங்கவே இல்லை போல தெரிகிறதே!! உன் கண்கள் சிவந்திருக்கிறதே!!! சரி சரி எழுந்து குளித்து விட்டு வா எல்லோருமாக காலை உணவருந்தலாம்”

“ஆகட்டும் தாயே. இதோ வந்து விடுகிறேன்.”

“கேசவா எங்கே செல்கிறாய்?”

“குளித்து வரச் செல்கிறேன் தாயே”

“ஆற்றுக்கு இந்த பக்கம் செல்ல வேண்டும்…நீ தவரான பக்கம் திரும்பியுள்ளாய்”

“ம்…..ஆமாம் ஆமாம்…மன்னிக்கவும் தாயே…”

“உனக்கு என்ன ஆயிற்று? நீ ஏதோ குழப்பத்தில் இருக்கிறாய். என்ன அது?”

“ம்…அதெல்லாம் ஒன்றுமில்லை தாயே. நீங்கள் செல்லுங்கள். நான் குளித்து விட்டு வருகிறேன்”

என்று கூறி அங்கிருந்து ஆற்றங்கரைக்குச் சென்றான் கேசவன். அவன் பின்னாலேயே ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தான் வேதாந்தகன். அவனைக் கண்டதும் கேசவன் வேகமாக அவனிடம் சென்று

“வேதாந்தகா நேற்று மாலை என்ன நடந்தது……”

“போங்க அண்ணா… அது… என்னென்னவோ நடந்தது…அதை எல்லாம் நான் எப்படி உங்களிடம் கூறுவேன்!”

“ம்…..அதை விடு நேற்று மாலை நான் நம் தலைவரை பின் தொடர்ந்துச் சென்றதில் சில விஷயங்கள் தெரிய வந்துள்ளது”

“ஓ!!!! நீங்க அதைப் பற்றியா சொல்ல வந்தீர்கள்? நான் தான் வேற ஏதோ நினைத்துக் கொண்டுவிட்டேனா!!!”

“வேறெதைப் பற்றி நான் சொல்ல வந்தேன் என்று நீ நினைத்தாய்?”

“அது ஒன்றுமில்லை. மேலே கூறுங்கள்.”

“அங்கே தலைவர்கள் யாரோ ஒரு நான்கைந்து பேரை ஒரு அறையில் தங்க வைத்துள்ளனர்.”

“நான்கைந்து பேர் இல்லை அண்ணா. அவர்கள் நான்கு பேர் தான். அவந்தியிலிருந்து வரவேண்டியவர்கள்…தலைவர்கள் யாருடைய வரவுக்காக காத்திருந்தனரோ அவர்கள் தான் வந்துள்ளனர்.”

“ஓ!! அப்படியா? சரி…இது உனக்கு எப்படி தெரியும்?”

“நானும் மதியுமாக தலைவரிடம் ஆசிர்வாதம் வாங்கச் சென்ற போது அவர்கள் தலைவருடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன், கேட்டேன்…தெரிய வந்தது. அதற்காக தானே தாங்களும் எங்களை அனுப்பினீர்கள்!!!”

“ஓ!! சரி சரி சரி…அது தான் தலைவர்கள் அவர்கள் அறைக்குள் சென்று வெளியே வர அத்துனை நேரமானதா?”

“சரி அண்ணா நாம் குளித்து விட்டு சீக்கிரம் வீட்டிற்குச் செல்ல வேண்டும். நமக்காக அனைவரும் காத்திருப்பார்கள்.”

“ம்….ம்….சரி வா போகலாம்”

“அண்ணா நீங்கள் அற்றில் இன்னும் இறங்கவே இல்லையே!! குளிக்காமல்…. அதற்குள் கிளம்பலாம் என்கிறீர்கள்”

“ஓ!! ஆமாம். இதோ ஒரு நொடியில் குளித்து விடுகிறேன்”

என்று இருவரும் குளித்து விட்டு வீட்டிற்குச் சென்றனர். அங்கே சென்றதும் முழுமதியாளும் அவள் அம்மாவும் கேசவன், வேதாந்தகன் மற்றும் மதியின் தாத்தா ஆகிய மூவருக்கும் வாழ இலைப் போட்டு காலை உணவான சுட சுட இட்டிலி, பொங்கல், வடை, சட்னி, சாம்பார், கேசரி என பரிமாறினர். அனைத்தையும் ரசித்து ருசித்துக் கொண்டிருந்தான் வேதாந்தகன். ஆனால் கேசவன் ஏதோ சிந்தனையிலேயே சரியாக சாப்பிடாமல் எழுந்தான். அப்போது முழுமதியாள் அவனிடம்

“அண்ணா என்ன ஆயிற்று? ஏன் நீங்கள் சரியாக சாப்பிடவில்லை? உணவு பிடிக்கவில்லையா? காலையில் ஆற்றங்கரைக்கு தவறான பாதையில் செல்ல இருந்தீறாமே!! அம்மா சொன்னார்கள் “

“அது ஒன்றுமில்லை மதி… கேசவன் அண்ணா நேற்று சில துப்பறியும் வேலையில் இறங்கி அதில் அரைகுறையாக சில விஷயங்களை அறிந்துக் கொண்டதில் மிகவும் குழப்பமடைந்துள்ளார். அதுவே அவர் இன்று காலை முதல் வினோதமாக நடந்துக் கொள்வதற்கான காரணம்‌”

“ஓ!! அப்படியா? அது என்ன என்பதை நானும் தெரிந்துக் கொள்ளலாமா?”

என்றதும் வேதாந்தகன் நடந்ததை முழுமதியாளிடம் கூறினான். அவன் கூறி முடித்ததும் பிரயாகா தலைவரின் தேர் நான்கந்து பேரை அழைத்துக் கொண்டு முழுமதியாள் வீட்டின் வாசலில் வந்து நின்றது. குதிரையின் சப்தம் கேட்டதும் கேசவனும், வேதாந்தகனும், முழுமதியாளும் வீட்டிற்கு வெளியே சென்றுப் பார்த்தனர். வேதாந்தகன் மதியிடம் கண்களாலேயே தான் முன்தினம் சொன்னது சரிதானே என்று கேட்க அதற்கு முழுமதியாள் பொறுத்திருந்து பார்ப்போம் என்று மான் விழியால் கூறினாள். வந்தவர்களைக் கண்டு கேசவன் மீண்டும் குழப்பத்திற்கு ஆளானான்‌. இப்படி மூவரும் ஒவ்வொரு சிந்தனையிலிருந்ததில் வந்தவர்களை வரவேற்காமல் நின்றிருந்தனர். அப்போது வீட்டினுளிருந்து வெளியே வந்த மதியின் தாயார்

“அடடே…தலைவரே வணக்கம். வாருங்கள் வருங்கள்.”

என்று கூறியதும் அவரவர் உலகத்திலிருந்து வெளிவந்த கேசவன், வேதாந்தகன் மற்றும் முழுமதியாள் மூவரும் ஒன்றாக

“வணக்கம் தலைவரே. வாருங்கள்”

என்றனர்.

“இவர்கள் புதுமண தம்பதியர் ஏதோ உலகில் இருக்கிறார்கள் சரி….உனக்கென்ன ஆயிற்று கேசவா? நீ எங்கு உள்ளாய். உன் உடல் மட்டும் தான் இங்குள்ளது என்று நினைக்கிறேன்”

“சரியாக சொன்னீர்கள் தலைவரே. நேற்று முதல் அண்ணன் ஒரு விஷயத்தை எண்ணி மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்.”

“அப்படியா!! என்ன அது?”

“இதோ தாங்கள் அழைத்து வந்துள்ளீர்களே இந்த நால்வரைப் பற்றிய சிந்தனை தான் அது.”

“இவர்களை எப்போது கேசவன் பார்த்தான்?”

“அது ஒரு பெரிய கதை தலைவரே….அதை விடுங்கள்”

“அப்படி எப்படி விட முடியும் வேதாந்தகா!!! கேசவன் குழப்பத்தைப் போக்கிடவே யாம் வந்துள்ளோம்”

“அப்படியா!!”

“ஆம் கேசவா. இதோ இவர்கள் தான் அவந்தியிலிருந்து தங்கள் இருவரைப் போலவே மரப்பேழையுடன் பிரயாகா வந்திருக்கும் ஞானானந்தம் அவன் மனைவி சீதை அவர்களின் இரு பிள்ளைகளும் ஆவர். இனி இவர்களும் தங்களுடன் தான் தங்கிடப் போகிறார்கள். அம்மா தங்களுக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லையே.”

“எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை தலைவரே. சொல்லப் போனால் எங்கள் குடும்பம் பெருகிக்கொண்டே போவதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.”

“தாங்கள் சொல்வதைக் கேட்கும் போது எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது தாயே.”

“தாங்கள் தான் எல்லா ஏற்பாடுகளும் செய்துத் தந்துள்ளீர்கள் பின்ன என்ன தலைவரே”

“அப்படி இல்லை தாயே…என்ன தான் ஏற்பாடுகள் செய்திருந்தாலும்…தங்களுடன் தங்குவதற்கு தங்களின் விருப்பமும் மிக முக்கியமானதல்லவா. அதனால் கேட்டேன்”

“தாங்கள் கேட்கவே வேண்டாம். ஆணையிடுங்கள் அது படி நடக்க நாங்கள் காத்திருக்கின்றோம்”

“மிக்க நன்றி தாயே! என்ன கேசவா உன் குழப்பம் தீர்ந்ததா?”

“இவர்கள் யாரென்ற குழப்பம் தீர்ந்தது…ஆனால் எதற்காக எங்கள் நால்வரிடம் மட்டும் இந்த மரப்பேழையை கொடுத்தனுப்பியுள்ளனர் தலைவர்கள்?”

“ஏனெனில் நான்கு தான் உள்ளது கேசவா..”

“அது சரி…ஆனால் குறிப்பாக ஏன் நாங்கள் நால்வர்?”

“ஏனென்றால் அசுரர்களும் தேவர்களும் புனிதமான அந்த அமிர்தத்திற்காக பாற்கடலைக் கடைந்து போது…அவர்களுக்குள் யார் முதலில் கிடைத்த அமிர்தத்தைப் பருக வேண்டுமென்ற கேள்வி எழுந்தது…அந்த பிரச்சினைக்கிடையே கருடர் அதை மகாவிஷ்ணு கையிலிருந்து பரித்துக் கொண்டு பறந்தார். அப்படி அவர் அமிர்த கலசத்தோடு பறந்ததில் அமிர்தம் கலசத்துக்குள் தளும்பியதில் நான்கு சொட்டு அமிர்தம் பூமியில் விழுந்தது. அந்த நான்கு புண்ணிய தலங்கள் தான் மாயாபுரி, அவந்தி, த்ரிகான்தக் மற்றும் பிரயாகா. அவ்வாறு விழுந்த அமிர்தத் துளியை எடுத்து ஓர் பனிதுளி வடிவில் பதக்கம் செய்து அதனுள் வைத்து இத்தனை வருடங்களாக இந்த நான்கு ஊர் தலைவர்களின் வம்சத்தினரும் அதைப் பாதுகாத்து வந்துள்ளோம். அப்படிப் பட்ட அந்த நான்கு புண்ணியத் தலத்தில் குறிப்பிட்ட நாள் நட்சத்திரம் மற்றும் பெயரில் பிறந்த உங்கள் நால்வரிடம் தான் அதை சேர்க்க வேண்டும் என்பது தலைவர்களான எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆணை. அது படியே நான்கு ஊர் தலைவர்களும் அவரவர் ஊரின் புண்ணிய ஆத்மாக்களிடமே அதை ஒப்படைத்து விட்டோம். இனி அவை உங்கள் பொறுப்பு.”

“எல்லாம் சரி தலைவரே…ஆனால்…”

“என்ன ஆனால் என்று இழுக்கிறாய் கேசவா? எதுவென்றாலும் கேட்டுவிடு. உன் மனதில் போட்டு உன்னை நீயே குழப்பிக் கொள்ளாதே”

“நாங்கள் இப்போது இதை வைத்து என்ன செய்ய வேண்டும்?”

“அது உங்கள் நால்வருக்கு மட்டுமே தெரியும். ஊர் தலைவர்களான எங்களின் கடமை தங்களிடம் ஒப்படைத்து இங்கே ஒன்றுக் கூடச் செய்வதே!! இதற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்? என்பதை நீங்கள் நால்வரும் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் நால்வரும் என்ன செய்ய நினைத்தாலும் அதற்கான உதவிகளை செய்ய நாங்கள் பிரயாகா மக்களும் மற்ற மூன்று ஊர்களிலிருந்தும் அந்த அசுரர்களிடமிருந்து தப்பி பிரயாகா வந்துச் சேர்ந்தவர்களும் இருக்கிறோம். நேற்று நான் சிலரை உனக்கு இன்று அறிமுகம் செய்து வைப்பதாக கூறியிருந்தேனே ஞானானந்தம்…உனக்கு ஞாபகம் இருக்கிறதா?”

“நன்றாக ஞாபகமிருக்கிறது தலைவரே”

“அவர்கள் தான் இவர் மூவர். இவன் பெயர் கேசவன் மாயாபுரியை சேர்ந்தவன். இவன் வேதாந்தகன் த்ரிகாந்தக்கிலிருந்து தங்களைப் போலவே மகவும் சிரமப்பட்டுப் பிரயாகா வந்து சேர்ந்துள்ளான். அது மட்டுமல்ல இவன் புது மாப்பிள்ளையும் ஆவான். நேற்று தான் இவனுக்கும் எங்கள் ஊர் சிங்கப் பெண் முழுமதியாளுக்கும் திருமணம் நடந்தது. இவள் தான் அந்த சிங்கப் பெண் முழுமதியாள். எங்கள் ஊர் சார்பாக உங்கள் நால்வரில் ஒருவர் ஆவாள்.”

“அப்படியா!!! உங்கள் மூவரையும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறோம்.”

“சரி என் வேலை இங்கே முடிந்தது. நான் எனது அரண்மனைக்கு திரும்பிச் செல்ல வேண்டும். ஞானானந்தத்தையும் அவன் குடும்பத்தினரையும் இங்கு கொண்டு வந்து விடவே நான் வந்தேன். நான் விடைப்பெற்றுக் கொள்கிறேன்.”

“ஆகட்டும் தலைவரே. எங்களை காப்பாற்றி ஒன்றுக் கூட வைத்தமைக்கு மிகவும் நன்றி”

என்று கேசவன் கூறியதும் மற்றவர்கள் அதை தலையசைத்து ஆமோதித்தனர். நால்வரையும் ஓரிடத்தில் கூட வைத்தத் திருப்தியோடும்…அதனால் அசுரர்களின் அழிவு நெருங்கிவிட்டதாலும் வீரசேகரன் மனமகிழ்வோடு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். தலைவர் சென்றதும் ஞானானந்தத்தையும் அவனது மனைவியையும் மற்ற அனைவரும் சூழ்ந்துக் கொண்டு அவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்க ஆரம்பித்தனர். அவர்களின் இரண்டு பிள்ளைகளையும் மதியின் தாத்தா அவருடன் அழைத்துக் கொண்டு வெளியே சென்று விளையாட்டுக் காட்டுக் கொண்டிருந்தார்.

அனைவரும் கேட்டுக் கொண்டதால் ஞானானந்தமும் அவன் மனைவி சீதையும் நடந்தது அனைத்தையும் விவரமாக கூறி முடித்தனர். அதைக் கேட்தும் வேதாந்தகன்

“அம்மாடியோ!!! நீங்கள் மிகப் பெரிய போராட்டத்திற்கும் பேராபத்திற்கும் உள்ளாகியுள்ளீர்கள். எனக்கு இப்படி நேர்ந்திருந்தால் நான் பிரயாகா வந்து சேர்ந்திருப்பேனா என்பது சந்தேகம் தான்.”

“அப்படி சொல்லாதே வேதாந்தகா!! உங்களுள் யாருக்கு இப்படி நேர்ந்திருந்தாலும் நிச்சயம் நீங்களும் எங்களைப் போலவே வந்து சேர்ந்திருபீர்கள். ஏனெனில் நாம் இங்கு வந்து சேரவேண்டும் என்பதும் இப்படி ஒன்றாக அமர்ந்து உரையாட வேண்டும் என்பதும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது. அது தான் நடந்துக் கொண்டிருக்கிறது.”

“ஞானானந்தம் தங்களிடம் நான் ஒன்று கேட்கலாமா?”

“ம்…தாராளமாக கேளுங்கள் கேசவன்.”

“அந்த மரப்பேழையின் அருகில் அந்த அசுரத் தலைவன் நெருங்க முடியவில்லை இல்லையா?”

“அசுரத் தலைவன் அல்ல அசுர குல ஆசான். ஆமாம் அவரால் நெருங்க முடியவில்லை. அவரால் மட்டுமல்ல அங்கு காவலுக்கு இருந்த இரண்டு அகோர ஜந்துக்கள்களாலும் முடியவில்லை. அதனால் தான் எங்களால் அங்கிருந்து தப்பித்து வர முடிந்தது.”

“சரி…அப்போது கூட உங்களுக்கு இதனுள் என்ன இருக்கிறதென்பதைப் பார்க்கத் தோன்றவில்லையா?”

“இல்லை கேசவா. எனக்கு அப்படித் தோன்றவில்லை ஆனால் இதனுள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று என் மனதிற்குள் ஓர் எண்ணம் வந்தது”

“அதெல்லாம் இருக்கட்டும் கேசவன் அண்ணா…நாமும் நம் தலைவர் சொல் மீறி திறந்திருக்க மாட்டோம் திறக்கவுமில்லையே!!”

“ஆமாம் வேதாந்தகா. அதுவும் உண்மைதான்.”

“ஏன் நான் அதைச் சொன்னேன் என்றால் நேற்று மாலை வரை ஏதோ ஒன்றைத் தெரிந்துக் கொள்வதற்காக துப்பறியும் வேலைகளில் இறங்கிய உங்களுக்கு இதை திறந்து அதனுள் என்ன இருக்கிறதென்று பார்க்கத் தோன்றவில்லையே அதை வைத்துத் தான் நான் அப்படிச் சொன்னேன்.”

“ம்…புரிகிறது வேதாந்தகா. இப்போது தான் எனக்கு எனது முட்டாள் தனமான செயல் புரிகிறது.”

“இப்போது நாம் நால்வரும் ஓரிடத்தில் கூடிவிட்டோம். ஒருவரையொருவர் நன்றாக தெரிந்துக் கொண்டு விட்டோம். இனி என்ன செய்யப் போகிறோம் அல்லது நாம் என்ன செய்ய வேண்டும்?”

“நீங்கள் இருக்கும் மனநிலையில் தான் நாங்களும் இருக்கிறோம் ஞானானந்தம். தலைவர் சொன்னது படி யோசித்தோமேயானால் இந்த மரப்பேழை இப்போது நம்முடையது. முதலில் இதைத் திறந்துப் பார்ப்போம். ஏதாவது இதற்குள் இருந்து நமக்கு தெரியவராலாம். அப்படி தெரியவந்தால் அது படியே ஒன்றாக செயல்படுவோம் என்ன சொல்கிறீர்கள் ஞானானந்தம், முழுயதியாள், வேதாந்தகா?”

“ம்…இது நல்ல யோசனை தான் ஆனால் இதற்குள் இருப்பது ஒரு பதக்கம் தானே. அதிலிருந்து நமக்கு என்ன தெரிய வந்திடப் போகிறது?”

“ஒன்றில்லை வேதாந்தகா நான்கு இருக்கிறது”

“சரி நான்கு. அப்புறம்”

“அது தானே!!! நாம் இதை வைத்துக் கொண்டு என்ன செய்யவேண்டும்? இந்த பதக்கத்தை இனி நாம் நால்வரும் தான் பாதுக்காத்து வர வேண்டுமா?”

“ம்…..இருங்கள் எனக்கு ஏதோ தோன்றுகிறது…”

“என்னது அண்ணா?”

“வேதாந்தகா நான் அன்று சொன்னேன் அல்லவா எனக்கென்று மீதமிருப்பது ஒரே ஒரு சொந்தம் தான் என்று”

“ஆமாம் உங்கள் மைத்துனர் தானே அந்த சொந்தம். இப்போ அவருக்கு என்ன?”

“இங்கே மதி அவள் குடும்பத்தினருடன் இருக்கிறாள். ஞானானந்தமும் தன் குடும்பத்தினருடன் இருக்கிறார். ஆனால் என் சொந்தமான கோதகனை மட்டும் ஏன் என்னுடன் இருக்க விடாது தனிமையில் வைத்துள்ளனர் இந்த தலைவர்கள்?”

“தலைவர்கள் ஏன் அப்படி உங்களையும் உங்கள் மைத்துனரையும் பிரித்து வைக்க வேண்டும்?”

“ஞானானந்தம் அவர்களே அது தான் யோசனையாகவே இருக்கிறது”

“அண்ணா அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று தாங்கள் நினைக்கிறீர்களா?”

“நிச்சயம் இருக்க வேண்டும். ஏனெனில் அவன் உங்கள் திருமணத்திற்கு கூட வரவில்லை. அதைப் பற்றி நான் எங்கள் ஊர் தலைவரிடம் கேட்டபோது அவர் ஏதேதோ சொல்லி மழுப்பியதைப் பார்த்தால் …அதில் ஏதோ உள்ளது என்று என் மனம் கூறுகிறது.”

“அது என்னவாக இருக்கக் கூடும் அண்ணா?”

“தெரியவில்லையே மதி… எனக்கென்னவோ நான் அறிந்துக் கொள்ளக் கூடாத ஏதோ ஒரு விஷயம் அவன் தெரிந்து வைத்திருக்கிறானோ? அல்லது அடுத்து நாம் என்ன செய்ய வேண்டுமென்பது அவனுக்கு அறிந்திருக்குமோ? அதனால் தான் அவனையும் என்னையும் ஒரே இடத்தில் இருக்க விடவில்லையா!!!”

“கேசவன் தங்கள் யூகத்தில் முதலாவது இருக்கக்கூடும் ஆனால் இரண்டாவது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.”

“ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் ஞானானந்தும்?”

“ஏனெனில் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தங்கள் மைத்துனர் தெரிந்து வைத்திருந்தால் நம்முடன் அல்லவா அவரை இருக்கச் செய்திருப்பார் தலைவர்!!!”

“ம்…அதுவும் சரி தான். அப்புறம் ஏன் அவனை என்னிடமிருந்து பிரித்து தனியாக ஓரிடத்தில் வைத்திருக்க வேண்டும்?”

“அதை அவரிடமே கேட்டுத் தெரிந்துக் கொண்டால் இந்த குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கலாம் அல்லவா!”

“அது சரி தான் வேதாந்தகா… அவனை எங்கள் ஊர் தலைவருடன் தங்க வைத்திருக்கிறார் தலைவர் வீரசேகரன் என்று தான் எனக்கு தெரியும். ஆனால் அது எவ்வளவு தூரம் நம்பகமான விஷயம் என்று தான் யோசிக்கிறேன்”

“இதில் எதற்கு யோசனை கேசவன். வாருங்கள் நேராகச் சென்று பார்ப்போம். அவர் அங்கிருந்தால் கேட்டுத் தெரிந்தும் கொள்ளலாமில்லையா!”

“அதுவும் சரிதான். நாம் நேராகச் சென்று பார்த்துத் தெரிந்து வருவோம்”

“ம்…வாருங்கள் அண்ணா நாம் உடனே சென்று வருவோம்”

“வேதாந்தகா முழுமதியாள் நீங்கள் இருவரும் இங்கேயே இருங்கள் நானும் ஞானானந்தமும் சென்று என்ன ஏது என்று தெரிந்து வருகிறோம்.”

“நாங்கள் ஏன் வரக்கூடாது அண்ணா?”

“உங்களுக்கு நேற்று தான் திருமணமாகியுள்ளது. அதனால் நீங்கள் உங்களுக்கான நேரத்தை சந்தோஷமாக செலவிடுங்கள். நாங்கள் சென்று தெரிந்து வருகிறோம். யார் கண்டார் அதற்குப் பின் ஏதாவது பெரிய வேலை வந்தால்….வந்தால் என்ன வரலாமென்று என் மனம் கூறுகிறது. அப்போது உங்களுக்கான நேரம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகலாம். அதனால் இப்போது கிடைக்கும் இந்த நேரத்தில் இருவரும் மகிழ்ச்சியாக இருங்கள்.”

“ஆகட்டும் அண்ணா.”

“அம்மா என் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் தங்களை நம்பி விட்டுச் செல்கிறேன். நான் வரும் வரை தாங்கள் தான் இவர்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்”

“ஆகட்டும் தம்பி. நான் இருக்கிறேன். இதோ மதியின் தாத்தா இருக்கிறார். அங்கே பாருங்கள் உங்கள் பிள்ளைகள் என் தந்தையுடன் நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டனர். நீங்கள் எந்த கவலையுமின்றி சென்று வாருங்கள்.”

“ஆகட்டும் தாயே. சீதை நான் சென்று வருகிறேன்”

“ம்…சரி”

“ஞானானந்தம் தாங்கள் சொல்லிக் கொண்டுப் புறப்படும் அளவிற்கு நாம் யுதத்துக்கு போகவில்லை..இதே ஊரிலிருக்கும் ஓர் இடத்திற்கு தான் போகப் போகிறோம். நிச்சயம் பத்திரமாக திரும்பி வந்துவிடுவோம் கவலை வேண்டாம் வாருங்கள் சென்று வரலாம்”

“ம்.. இதோ …வாருங்கள் போய் விட்டு வருவோம்”

இருவரும் மாயாபுரி தலைவர் தங்கியிருந்த கூடாரத்தை சென்றடைந்தனர்.

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s