அத்தியாயம் 45: ஒளியின் வழி

ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதும் மீண்டும் வேந்தாந்தகனும் முழுமதியாளும் மண்டபத்திற்குச் சென்று மற்ற சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மேற்கொண்டனர். பிரயாகா தலைவர் வீரசேகரன் அவரைத் தேடி வந்தவர்களுக்கு விருந்தளித்து அதன் பின் ஒர் அறையில் இளைப்பாறும்படி கூறி காவலுக்கு இரண்டு பேரையும் வைத்துவிட்டு மண்டபத்துக்குச் சென்றார். அங்கே வீரசேகரன் சென்றதும் அவரை நோக்கி வேகமாக சென்றார் மாயாபுரி தலைவர். அவர்கள் இருவரும் மும்முரமாக ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தான் கேசவன். அவனால் அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவர்களை அவர்களுக்குத் தெரியாமல் பின் தொடரலானான்.

இரு தலைவர்களும் மணமக்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து அவர்களை அவர்களுக்கான இடத்தில் கொண்டுச் சென்று விட்டுவிட்டு நேராக அந்த அகதிகளாக வந்த குடும்பத்தைக் காண அவர்களை தங்கவைத்திருந்த இடத்திற்கு மாயாபுரி தலைவரை அழைத்துச் சென்றார் தலைவர் வீரசேகரன். அவர்கள் பின்னாலேயே சென்றான் கேசவன்.

இருவரும் ஒர் அறையினுள் சென்றனர். அதற்கு மேல் காவலாளிகளைத் தாண்டி செல்லமுடியாத கேசவன் அந்த அறையின் வாயிலிலேயே ஓர் தூணுக்குப் பின்னால் மறைந்துக் கொண்டு அவர்கள் திரும்பி வருவதற்காக காத்திருந்தான்.

உள்ளே சென்ற தலைவர்களை கண்டதும் அந்த குடும்பத்தினர் எழுந்து வணக்கம் என்று கூறினர். அப்போது மாயாபுரி ஊர் தலைவர் அவர்களைப் பார்த்து,

“அவந்தியை முழுவதுமாக அந்த அசுரர்கள் அழித்துவிட்டன என்ற தகவல் எங்களுக்கு வந்த நாள் முதல் நாங்கள் இடிந்துப் போயிருந்தோம். இன்று நீங்கள் பிரயாகா வந்து சேர்ந்துவிட்டீர்கள் என்று வீரசேகரன் கூறிய பிறகே எங்களுக்கு நிம்மதியானது. ம்….சொல்லுங்கள் என்ன நடந்தது? எப்படி நீங்கள் அவர்களிடமிருந்து தப்பித்து இங்கு வந்து சேர்ந்தீர்கள்?”

“ஐய்யா!! தாங்கள்….”

“பயப்பட வேண்டாம் ஞானானந்தம். இவர் நம் மாயாபுரி தலைவர் தான். தைரியமாக விவரங்களைக் கூறுங்கள்.”

“மன்னிக்கவும் தலைவரே!! நாங்கள் மிகவும் பட்டுவிட்டோம் ஆகையால் தான் யாரிடம் எதை சொல்கிறோம் என்ற பதற்றத்தோடே இன்னும் இருக்கிறோம்”

“இனி தங்களுக்கு அந்த பதற்றம் வேண்டாம் ஞானானந்தம். நாங்கள் இருக்கிறோம். உங்களுக்காக தான் நாங்கள் இத்தனை நாட்கள் காத்திருந்தோம்.”

“ஆமாம்… பிரயாகா தலைவர் எனக்காக காத்திருப்பார் என்றும் அவரிடம் இந்த மரப்பேழையைக் கொண்டு போய் சேர்த்திட வேண்டும் என்றும் எங்கள் அவந்தியின் தலைவர் என்னிடம் கூறியுள்ளார். அதற்காக தான் நாங்கள் பல இன்னல்களை சந்தித்தாலும் அவற்றை எல்லாம் முறியடித்து இங்கு உங்கள் முன்னால் இந்த மரப்பேழையுடன் வந்து சேர்ந்துள்ளோம்.”

“ம்…மிக்க மகிழ்ச்சி ஞானானந்தா. சரி இப்போது சொல்லுங்கள் என்ன நேர்ந்ததென்று”

என்று தலைவர்கள் கேட்டதும் நடந்தது அனைத்தையும் கூறி முடித்தான் ஞானானந்தம். அதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தனர் தலைவர்கள். அப்போது மாயாபுரி தலைவர் ஞானானந்தனைப் பார்த்து

“ம்…அப்போ தாங்கள் அந்த அரக்கர்களின் அரண்மனைக்குள்ளேயே சிறையிருந்துள்ளீர்கள்…..அவர்களின் தலைவன் யார் என்ற விவரம் ஏதாவது தங்களுக்கு தெரியுமா?”

“தலைவன் யாரென்று தெரியாது ஆனால் அவர்கள் கூட்டத்தில் அரக்கர்கள் வடிவில் ஒரு ஆறு பேரை தான் நாங்கள் கண்டுள்ளோம். அதிலும் ஒரு வயதானவர் இருக்கிறார். அவரை மற்றவர்கள் ஆசான் என்று தான் அழைத்தார்கள். அவர் தான் சிறையிலிருந்த எங்களிடம் வந்து இந்த மரப்பேழையைத் கொடுத்திட வலியுறுத்தினார்.”

“வெறும் ஆறு பேர் கொண்ட படை எப்படி இத்தனை ஊர்களை அழித்திருக்கக் கூடும் வீரசேகரா?”

“இல்லை தலைவரே…அரக்கர் ரூபத்தில் தான் ஆறு பேர் இருந்தனர் மற்றவைகள் எந்த இனத்தைச் சேர்ந்ததென்றே எங்களுக்கு தெரியவில்லை அவைகள் அகோரமாக இருந்தன. எங்கள் அவந்தியை தாக்க வந்த போது அந்த பெரும்படையில் இரண்டே அரக்கர்கள் தான் இருந்தனர் அதிலும் ஒருவர் பெண் மற்றவை அனைத்தும் அந்த அகோரமான ஜந்துக்கள் தான் இருந்தன. அவை நூற்றுக் கணக்கிலிருந்தன.”

“ம்…..எல்லாம் சரி ஆனால் எப்படி நீங்கள் கஷியிலிருந்து மாயாபுரியைக் கடந்து இங்கு வந்தீர்கள் என்று சொல்லவேயில்லையே!!”

“அது ஒரு பெரிய கதை தலைவரே!!”

“கூறுங்கள் அதைக் கேட்கத்தான் வந்துள்ளோம்”

“நாங்கள் இந்த மரப்பேழையின் உதவியோடு எங்களை அரக்கர்கள் அடைத்து வைத்திருந்த இடத்தை விட்டு தப்பித்து வந்ததும் எங்களுக்கு எங்கே! எந்த வழியில் போவதென்றே தெரியாதிருந்தோம். அப்போது இருட்டில் கானல் நீர் போல ஆங்காங்கே சிறிய விளக்கின் ஒளி தோன்றியது. அது பளிச் பளிச்சென்று வரிசையாக மின்னத் துவங்கியது. அவை ஓர் நேர் கோடாக சில இடங்களிலும்… பலது வளைந்து நெளிந்தும் காற்றில் இருந்ததன. அதைப் பார்த்ததும் எங்கள் பிள்ளைகள் அவற்றை நெருப்பு பூச்சிகள் என்று நினைத்துக் கொண்டு அவற்றைப் பிடிக்க அந்த ஒளியைப் பின் தொடர ஆரம்பித்தனர். அதைப் பார்த்ததும் எங்கள் விதிக்கு வழிவகுக்கும் ஒளி விளக்குகள் என்று எண்ணிக் கொண்டு அந்த ஒளி காட்டிய வழியே சென்றதில் மிகவும் விரைவாக கஷியை சென்றடைந்தோம். கஷியையும் இருள் சூழ்ந்திருந்தது. அங்கும் மனிதர்கள் எவருமே இருக்கவில்லை. எங்களுள் இருக்கும் வயிற்றுக்குத் தெரியவில்லை நாங்கள் பேராபத்தில் இருந்தோம் என்று. அதனால் பசி எங்களை வாட்டி எடுத்தது. பிள்ளைகள் பசியில் துவண்டுப் போனார்கள். கஷியில் எல்லா வீடுகளும் திறந்தே கிடந்தது. நாங்கள் அதில் ஓர் வீட்டுக்குச் சென்று அங்கே இருந்த பொருட்களை வைத்து என் மனைவி சீதை செய்து தந்த உணவினை உண்டு சற்று இளைப்பாறிக் கொண்டிருந்தோம். என் மனைவியும் பிள்ளைகளும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் இந்த மரப்பேழையை பாதுகாப்பிற்காக வைத்துவிட்டு நான் மெல்ல அந்த வீட்டின் வெளியே சென்று சற்று நேரம் அடுத்து என்ன செய்யலாமென்ற சிந்தனையிலிருந்த நேரம் என் தலைக்கு மேல் ஏதோ வேகமாக காற்றில் கடந்துச் சென்றதை கவனித்தேன். ஒன்று மட்டும் என்றால் அதை கண்டுக் கொண்டிருக்க மாட்டேன் ஆனால் அவை வரிசையாக பத்து பதினைந்து சர்ரென்று சென்றன. அவைகள் எங்களைத் தேடி வந்திருக்கும் அந்த அரக்கர்கள் அனுப்பிய அந்த ஜந்துக்களாகத் தான் இருக்க வேண்டுமென்று நான் முடிவு செய்து வீட்டினுள் சென்று என் மனைவியை எழுப்பி வெளியே நான் கண்டதைச் சொன்னேன். அவள் சற்று பதற்றமானாள். குழந்தைகள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். உடனே மரப்பேழையை எடுத்து என் கைகளில் இறுக்கமாக வைத்துக் கொண்டு எங்களை காப்பாற்றும் படி மனதார அந்த பரந்தாமனை எண்ணி வேண்டிக் கொண்டேன். பின் சிறிது நேரம் யோசித்தேன் அதற்குள் அதே ஒளி தோன்றியது…ஆனால் இந்த முறை ஒன்று மட்டும் இருந்தது. எங்களுக்கு புரியாது நின்றிருந்தோம் அப்போது தரையில் மூன்று நான்கு தோன்றியது.‌..உடனே எனக்குப் புரிந்தது…அவை எங்களை தரைக்கு அடிவழியாக அழைக்கிறதென்று.அதை நான் சீதையிடம் சொன்னதும் அவள் சரி அவைகளைப் பின் தொடர்வோம் என்றாள். ஆனால்…பூமியின் அடியில் என்னென்ன காத்திருக்கிறதோ? இல்லை இவைகள் எல்லாம் அந்த அரக்கர்களின் வேலையாக இருக்குமோ என்ற எண்ணங்களால் நான் சற்று தயங்கி நின்றேன். அப்போது சீதை கூறினாள் “அரக்கர்களின் இடத்திலிருந்து நம்மைக் காப்பற்றி இங்கு அழைத்து வந்தவை இந்த ஒளி அப்போது இவைகளை நம்பிய நீங்கள்! ஏன் இப்போது தயங்குகிறீர்கள்?” என்று கேட்டாள். அப்பொழுது என் பிள்ளைகள் அந்த ஒளியின் பின் சென்றதால் நானும் அவர்கள் பின் செல்ல நேர்ந்தது ஆனால் இப்போது இந்த ஒளி பூமிக்கு அடியில் வரச்சொல்கிறதே அது எப்படி சாத்தியமென்று கேட்டதும்…அந்த ஒளி நாங்கள் இருந்த அந்த அறையின் ஓரிடத்தில் வட்டமான நிலவு போல மிளிர்ந்தது. உடனே அங்கு சென்று பார்த்தோம் அங்கே எதுவும் வித்தியாசமாக எங்களுக்கு தென்படவில்லை அப்போது சீதை என்னை நன்றாக அந்த இடத்தைச் சுற்றித் தேடச்சொன்னாள் அவளும் என்னுடன் சேர்ந்து தேடினாள் அப்போது அங்கு ஓரிடத்தில் இருந்த தரையைத் தட்டிப்பார்த்தேன் அதன் சப்தம் வித்தியாசமாக இருந்தது. உடனே அந்த தரை மீது விரிக்கப் பட்டிருந்த அலங்கார விரிப்பை நகற்றிப் பார்த்தேன் அங்கே ஒரு மூடி போல ஏதோ இருந்ததைப் பார்க்க முடிந்தது. அது மிகவும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தது. அதை இழுக்க முயற்சித்தேன் முடியவில்லை. அப்போது அந்த மூடியின் மேல் அந்த ஒளி மீண்டும் தோன்றி இடதிலிருந்து வலமாக சுற்றிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் சீதை அந்த மூடியை மேலே இழுக்காமல் இடதிலிருந்து வலப்புறமாக சுற்றச் சொன்னாள். அதே போல செய்தேன் திறந்துக் கொண்டது. அது ஏதோ சுரங்கப் பாதைப் போல இருந்தது. அதனுள் நான் இறங்கியதும் பளிச் பளிச்சென்று அந்த ஒளி வரிசையாக தோன்ற ஆரம்பித்தன. சரி அதை விட்டால் வேறு வழியேதுமில்லாது நான் மேலே வந்து எங்கள் குழந்தைகளில் ஒன்றை சீதையிடம் கொடுத்து அவளை முதலில் அந்தனுள் இறங்கச் சொன்னேன். அவள் பின்னாலேயே நான் எங்களின் மற்றொரு பிள்ளையைத் தூக்கிக் கொண்டு இறங்கும் போது அந்த மூடியின் ஓரம் என் கையைக் கிழித்தது. ரத்தம் மிகுதியாக வெளிவந்தது. உடனே நான் தூக்கிக் கொண்டிருந்த பிள்ளையை சுரங்கத்தின் தரையில் படுக்க வைத்துவிட்டு மீண்டும் மேலே சென்று அங்கிருந்த துணியால் ரத்தம் வந்த இடத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டேன். கையை கட்டுப்போட்ட இடத்தில் எல்லாம் எனது ரத்தம் சிந்தியிருந்தது. உடனே அந்த இடத்தை வேறொரு துணிக் கொண்டு துடைத்து அங்கேயே ஒரு மூலையில் போட்டுவிட்டு அந்த அலங்கார விரிப்பை மூடிக்கு மேல் சரியாக வைத்து விட்டு மூடியை மெல்லத் திறந்து சுரங்கத்திற்குள் இறங்கியதும் அந்த மூடியை மறுபடியும் இறுக்கமாக மூடி வைத்துவிட்டு தரையில் படுக்க வைத்திருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த ஒளி சென்ற வழியையே பின்பற்றினோம் இங்கு பிரயாகா வந்து சேர்ந்தோம். கஷியிலிருந்து இங்கு வரை வந்த அந்த சுரங்கம் வழியாக பல வழிகள் பிரிந்துச் சென்றதை நான் பார்த்தேன். ஆனால் நாங்கள் நால்வரும் அந்த ஒளியையே தொடர்ந்து வந்ததில் இங்கு பிரயாக தலைவரின் வீட்டினுள் வந்துச் சேந்துள்ளோம்.”

“அப்படி என்றால் …வீரசேகரா இவர்கள் கஷியின் தலைவர் வீட்டில் தான் தங்கி உணவருந்தியுள்ளார்கள்!!”

“ஆமாம் மாயாபுரி தலைவரே ஆமாம்.”

என்று இரு தலைவர்களும் பேசிக்கொண்டது புரியாது ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் ஞானானந்தமும் சீதையும். அவர்களின் வியப்பான முக பாவத்தைக் கண்டதும் வீரசேகரன் அவர்களிடம்

“என்ன குழப்பமாக உள்ளதா? எப்படி நீங்கள் தங்கியிருந்த வீட்டை நாங்கள் சரியாக கூறுகிறோமென்று கேட்கத் தோன்றுகிறதா?”

“ஆமாம் தலைவர்களே!!”

“எப்படி சரியாக சொன்னோம் என்றால் நம் ஒவ்வொரு ஊர் தலைவர்கள் இல்லத்திலும் இவ்வாறு சுரங்கப் பாதை வைத்துள்ளோம் அந்த பாதையில் பல வழிகள் பிரிந்து செல்வதாக கூறினீர்கள் அல்லவா அவை அனைத்தும் ஒவ்வொரு ஊரின் தலைவர் வீட்டிற்கு கொண்டு செல்லும். அப்படித் தான் இவர்கள் என் வீட்டின் சுரங்கப் பாதை வழியே வெளி வந்துள்ளனர். அதைப் பார்த்த காவலர்கள் இவர்களை பிடித்து வைத்துக் கொண்டு எனக்கும் என் தம்பி வீரராகவனுக்கும் செய்தி அனுப்பினர்.”

“எல்லா தலைவர்களுக்கும் ரொம்ப நன்றி. ஏனெனில் இப்படி ஒன்றை தாங்கள் அனைவரும் செய்யாதிருந்தால் நாங்கள் இங்கு வந்திருக்கவே முடியாது”

“ம்….சரி சரி…தாங்களை நன்றாக கவனிக்கின்றனரா? உங்களுக்கு ஏதாவது தேவையா?”

“எங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் தலைவரே. எந்த குறையுமில்லை. ரொம்ப நாள் கழித்து நன்றாக உண்டோம். நன்றி”

“யார் அங்கே!! ம்…அங்கே வையுங்கள். ம்…ஞானானந்தம் தங்களுக்கான மாற்று உடைகள் இதோ இந்த பெட்டிக்குள் உள்ளது. தாங்கள் குளித்துவிட்டு மாற்றிக் கொள்ளுங்கள். நன்றாக ஓய்வெடுங்கள் நாளை தங்களுக்கு முக்கியமான மூவரை அறிமுகம் செய்து வைக்கிறேன்.”

“ஆகட்டும் தலைவரே.”

“சரி நாங்கள் சென்று வருகிறோம். நாம் போகலாமா வீரசேகரா?”

“ஆங் …இதோ…”

என்று இரு தலைவர்களும் ஞானானந்தத்தைக் கண்டு பேசி விவரங்களை அறிந்துக் கொண்டபின் வெளியே வந்தனர். அந்த அறையின் கதவு திறக்கும் சப்தம் கேட்டு தூணுக்குப் பின்னால் வெகு நேரமாக காத்துக்கொண்டிருந்த கேசவன் மெல்ல மறைந்திருந்து அந்த அறைக்குள் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய எட்டிப்பார்த்தான். தலைவர்கள் வெளியே வந்ததும் காவலர்கள் அறையின் கதவை மூடினர். அதனால் உள்ளே இருந்தவர்களைப் பார்க்க முடியாது தவித்தான் கேசவன். இரு தலைவர்களும் ஏதோ பேசிக் கொண்டு போனதைப் பார்த்த கேசவன்….அறையினுள் இருப்பவர்களை காண முடியாது போனதால் தலைவர்கள் பேசிக்கொள்வதை ஒட்டுக் கேட்க நினைத்து அவர்கள் பின்னாலேயே சென்றான்.

அப்போது வீரசேகரன் மாயாபுரி ஊர் தலைவரிடம்

“அந்த அரக்கர்கள் வெறும் ஆறு பேர் தான் உள்ளார்கள் என்று இவர்கள் சொல்வதையும்…அந்த கோதகன் சொன்னதையும் வைத்துப் பார்த்தால்…அவர்கள் அழித்த ஊரிலிருந்த நம் மக்களே அந்த அகோரமான ஜந்துக்களாக இருக்க வேண்டுமென்று எனக்கு தோன்றுகிறது. தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

“ஆமாம் அவர்கள் படையை பெரிதாக்கவே மக்களை அழித்து அவ்வாறு மாற்றி தங்கள் படைகளாக்கி வைத்துள்ளனர். அதை நம்மால் மீண்டு மாற்ற முடியாதா?”

“தெரியவில்லையே….பார்ப்போம் எங்கள் மதகுருவிடம் இதற்கான வழி இருக்கிறதா என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்”

என்று அவர்கள் பேசிக்கொண்டதை கேட்ட கேசவன் இன்னும் குழம்பிப் போனான். அவனால் அதற்கு மேல் காவலர்கள் அதிகமாக இருந்ததால் தலைவர்களை பின் தொடர முடியாது போனது. அங்கேயே நின்றுக் கொண்டிருந்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் வேகமாக அங்கிருந்து புறப்பட்டு மண்டபத்தில் நடந்துக் கொண்டிருந்த நலங்கு விசேஷத்தில் கலந்துக் கொண்டான். அப்போது வேதாந்தகன் தன் கண்களாலேயே கேசவனிடம் “எங்கு போனீர்கள்?” என்று கேட்டான். அதற்கு கேசவனும் கண்ணாலேயே பதிலளித்தான்.

தொடரும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s