அத்தியாயம் 25: தேடல் முடிந்தது!

“ஆங்… சார் இதோ வர்றோம் சார்.”

“டேய் ராஜா இங்கே தானே அந்த புக்கை வச்சிட்டுப் போனோம் எங்கடா போச்சு?”

“தெரியலையே ராமு!!”

“போச்சு போச்சு அந்த ரஞ்சித் நம்ம மூணு பேரையும் ஒரு வழி பண்ணப் போறாரு!!”

“ராஜேஷ் அப்படி எல்லாம் எதுவும் நடக்காதுடா!!

“சரி வாங்க கீழே போய் சொல்லுவோம். வேற வழியில்லை”

என்று பேசிக் கெண்டே மூன்று நண்பர்களும் கீழே ஹாலுக்குச் சென்றனர். மூவரும் இறங்கி வருவதைப் பார்த்த டாக்டர் வேகமாக அவர் அமர்ந்திருந்த சோஃபாவிலிருந்து எழுந்துச் சென்று அவர்கள் கைகளையே பார்த்தார். அவரிகளிடம் புத்தகம் இல்லை என்றதுமே

“என்னப்பா என்ன ஆச்சு? நீங்க மூணு பேரும் சொன்ன புத்தகம் எங்க?”

“அது வந்து சார்…”

“ராமு இரு நானே சொல்லறேன். சார் நாங்க அதை என் ரூமுல தான் வச்சுட்டு உங்க வீட்டுக்கு வந்தோம் ஆனா இப்போ வந்து பார்த்தா அதை காணம் சார். இது தான் உண்மை நம்பினா எங்க கூட அந்த ஊருக்கு வாங்க….இல்லாட்டி விட்டிடுங்க நாங்க மூணு பேரும் எப்படியும் அங்கே போகப்போறோம்.”

இதைக் கேட்டு டாக்டர் மிகவும் வருத்தமடைந்தார். அப்போது ரஞ்சித் ராஜாவின் சட்டைக் காலரைப் பிடித்து

“டேய் என்ன விளையாடுறீங்களா? எங்களுக்கு என்ன வேற வேலையில்லன்னு நினைச்சுக்கிட்டிங்களா? புக்குன்னு சொன்னீங்க, அதை காட்டறோம்னு கூட்டிக்கிட்டு வந்தீங்க, இப்ப என்னடான்னா அது மாயமா மறைஞ்சிடுச்சுனு சொல்லுறீங்க!!!! எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது? ம்….”

“டேய் ரஞ்சித் விடு விடு….”

“எப்படி அண்ணே இவங்கள விட முடியும்?”

ஹாலில் நடந்த கலவரம் அடுப்படி வரை கேட்க உடனே மங்களம் ஹாலுக்கு வந்து பார்த்தாள். ரஞ்சித் தன் எஜமானி அம்மாவின் மகனின் சட்டையைப் பிடித்திருப்பதைப் பார்த்ததும் ஓடிச் சென்று

“ஐய்யா உங்க தம்பி கிட்ட சொல்லி ராஜா தம்பியை விடச் சொல்லுங்கயா…..இந்த புள்ளைங்க ரொம்ப நல்ல பசங்க ஐய்யா!!”

“ம்….அப்படீன்னா உன் நல்ல பசங்க கிட்ட அந்த புத்தகம் எங்கேன்னு கேட்டு சொல்லு. இப்போ அது இங்க வரலை அப்புறம் உன் நல்ல பசங்க கம்பி எண்ண வேண்டியிருக்கும்”

“ராஜா தம்பி அவுரு கேட்குறதைக் குடுத்திடுங்களேன். எதுக்கு உங்களுக்கு இதெல்லாம்!!! அம்மாவுக்கு தெரிஞ்சா மனசு ரொம்ப கஷ்டப்படுவாங்க இல்ல!!”

“ஐய்யோ!! அந்த புத்தகத்தை என் ரூமுல காணம் அக்கா. இல்லாததை எப்படி நான் கொண்டு வர்றது அக்கா”

“எது தம்பி நேத்து ஒரு புத்தகத்தை கொடுத்து திறக்க சொன்னீங்களே அதுவா”

“ஆமாக்கா… நீங்க அதைப் பார்த்தீங்களா?”

“அட அந்த புத்தகம் வந்ததிலிருந்து நீங்க ஆளே சரியில்லைனுட்டு நான் தான் அதை எடுத்து குப்பையில போட்டேன்…”

“அக்கா!!! என்ன சொல்லுறீங்க? என் கிட்ட ஏன் கேட்காம செஞ்சீங்க”

“அது எதுக்கு தம்பி? தொறக்கக் கூட முடியாத அந்த புத்தகம் எதுக்குன்னுட்டு தான் தூக்கிப் போட்டேன்…விட்டுத் தள்ளுங்க தம்பி”

என்று மங்களம் சர்வ சாதாரணமாக சொன்னதைக் கேட்டதும் டாக்டர்

“ஏய் மங்களம் ஏன் அப்படி செஞ்ச? இப்போ அந்த புத்தகம் எங்க இருக்கு?”

“ஐய்யா…நீங்க ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க?”

“அக்கா ப்ளீஸ் அவர் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”

“நம்ம வீட்டு வாசல்ல இருக்குற குப்பைத் தொட்டியில தான் போட்டிருக்கேன் தம்பி”

என்று மங்களம் சொல்லி முடித்ததும் ராஜா, ராமு, ராஜேஷ் மூவரும் வேகமாகச் சென்று குப்பையை கிளறிப் பார்த்தனர். அது அந்த தெருவின் பொது குப்பைத் தொட்டி என்பதால் அவர்கள் தேடி எடுக்க சற்று நேரமானது. அது கிடைத்ததும் வீட்டினுள் எடுத்து வந்தனர். ராஜா கையிலிருந்து வெடுக்கென அந்த புத்தகத்தைப் பிடுங்கினான் ரஞ்சித். திறந்துப் பார்க்க முயற்சித்தான் ஆனால் அவனால் திறக்க முடியவில்லை. அந்த புத்தகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டர். அப்போது ராமு ரஞ்சித்திடமிருந்து அந்த புத்தகத்தை வாங்கி டாக்டரிடம் நீட்டினான். அவரோ தன் சாண்டியே நேரில் நிற்பதுப் போல அந்த புத்தகத்தையேப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவரின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது. ராமு அவரின் கையை பிடித்து அந்த புத்தகத்தை அவர் கைகளில் வைத்தான். அனைவரும் டாக்டரையும் அந்த புத்தகத்தையுமே ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். டாக்டர் அந்த புத்தகத்தைத் திறந்தார். புத்தகம் திறந்துக் கொண்டது. அதைப் பார்த்த ரஞ்சித் அதிர்ச்சியடைந்தான். டாக்டர் மெல்ல முதல் பக்கத்தைத் திருப்பினார். முகவுரையைப் படித்தார் உடனே

“சாண்டி…மை டியர் சாண்டி…..நீயே தான் மா …நீயே தான்….இதோ வர்றேன் மா…உன் கிட்ட இதோ வர்றேன்.”

என்று ஓவென்று அழுது கதறினார். அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த ரஞ்சித்தை அவன் மனைவி ரஞ்சிதா உலுக்கி

“வாங்க நாம எல்லாருமே அந்த பசங்க சொன்ன இடத்துக்குப் போய் பார்ப்பாம். இனியும் நேரம் கடத்த வேண்டாம். ம்…அண்ணனை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வாங்க….”

என்று கூறியதும் அனைவரும் காரில் ஏறினர். அப்போது ராஜா மங்களத்திடம்

“அக்கா அம்மா வந்தா இங்க நடந்த விவரத்தை எல்லாம் சொல்லிடுங்க. நாங்க இவங்களோட கொஞ்சம் வெளியில போயிட்டு வந்திடறோம். பத்திரமா வந்திடுவோம்னு சொல்லிடுங்க. அப்படியே நீங்க ராமு ராஜேஷ் வீட்டுக்கும் ஃபோன் போட்டு சொல்லிடுங்கக்கா.”

“தம்பி இங்க என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியலை. அப்புறம் எப்படி நான் உங்க அம்மாகிட்ட …..என்னதை சொல்லுவேன்!!! ஒண்ணும் புரியலையேப்பா!!”

“அக்கா உங்களுக்குப் புரிஞ்சதை மட்டும் சொல்லுங்க மீதியை நான் வந்து சொல்லிக்கறேன். நான் வர்றேன்க்கா”

என்று மங்களத்திடம் சொல்லிவிட்டு காரில் புறப்பட்டனர். பயணத்தின் போது ராமு ராஜேஷ் அவரவர் வீடுகளுக்கு ஃபோன் செய்து விவரத்தை கூறினார்கள். வண்டியில் அந்த புத்தகத்தை ஒவ்வொரு பக்கமாக பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டே சென்றார் டாக்டர் ராஜேந்திரன். அப்போது ரஞ்சித் மூன்று நண்பர்களிடமும்

“டேய் பசங்களா நியாயமா பார்த்தா உங்க மூணு பேரையும் நீங்க செஞ்ச ஆக்ஸிடென்ட்டுக்கு போலீசுகிட்ட சொல்லி உள்ளே தள்ளியிருக்கணும்….ம்….”

“சார் அந்த விபத்தை நாங்க தெரிஞ்சோ இல்ல வேணும்னேவோ பண்ணலை சார்”

அதன் பின் வண்டியில் அமைதி நிலவியது. டாக்டர் முழு புத்தகத்தையும் பார்த்து முடித்ததும்…

“இந்த குழந்தை….அதுவும் என் சாண்டியோட மச்சம் மாதிரியே ஒரு மச்சம்….எப்படி இது சாத்தியம்? எனக்கு ஒரே குழப்பமா இருக்குதே!!! அப்படீன்னா!!! சாண்டி கர்ப்பமா இருந்தாளா!!!! ஆண்டவா இது என்ன சோதனை? டிரைவர் கொஞ்சம் ஃபாஸ்ட்டா போப்பா”

“வேண்டாம் சார் நிதானமாவே போவோம். ஏன்னா ஒரு தடவை வேகமா போனதுக்கே என்னென்னமோ நடந்திடுச்சு….மறுபடியும் வேண்டாம் சார் ப்ளீஸ்”

என்று ராமு சொன்னதும் டாக்டர்

“ம்…சரிப்பா. டிரைவர் கரெக்ட் ஸ்பீடுல போப்பா…ஓகேவா தம்பி!”

“தாங்ஸ் சார்”

“சரி… தம்பி நான் பார்க்கும் போது….எனக்கு அந்த ஓவியங்கள் உயிரோடு வரலை?ஏன்?”

“சார் அது ஒரு தடவை அந்த பக்கத்தைப் பார்த்துட்டோம்னா மறுபடியும் லைவ்வா வராது சார்”

“ஆனா நான் இப்போ தானே ஃபர்ஸ்ட் டைம் பார்க்கறேன்”

“ஆனா நாங்க உங்களுக்கு முன்னாடியே பார்த்துட்டோமே சார் அது தான் நீங்க பார்க்கும் போது வரவில்லை”

“ஓ!!! அப்படியா!!! சரி சரி. ஆமாம் என் சாண்டி என்னைத் தேடி வராம ஏன் உங்கள்ட்ட வந்தா?”

“அது‌…. அது….மே பீ… அவங்களுக்கு நடந்த விபத்துல எங்களுக்கும் பங்கு இருப்பதனால எங்கள்ட்ட வந்தாங்கன்னு நாங்க நினைச்சுக்கிட்டிருக்கோம் சார்.”

“ம்….அப்படியும் இருக்கலாம்”

“ஆமாம் அவ காருக்கு என்ன ஆச்சு? அது ஆக்ஸிடென்ட் ஆகி இருந்த இடத்துக்கு போலீஸ் ஏதும் போய் பார்க்கலையா?”

“அதெல்லாம் நாம் அங்க போனாதான் சார் தெரிஞ்சுக்க முடியும்”

என்று பேசிக்கொண்டே ஆவலாக ஒன்பது மணி நேரம் பயணித்து அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்

“ஆங்….சார் நாம அந்த விபத்து நடந்த இடத்தை நெருங்கிட்டோம்….” என்று ராமு கூறியதும்

“அப்படியா !!! எங்கே எங்கே”

“டாக்டர் சார் அதோ அந்த மரத்துல தான் சாண்டி மேடம் வண்டி இடிச்சுச்சு” என்று ராமு கூற

“ரஞ்சித் அந்த மரத்துக் கிட்ட போய் வண்டியை நிப்பாட்டு”

என்று டாக்டர் கூறியதும் டிரைவர் வண்டியை நிப்பாட்டினார். அனைவரும் வண்டியிலிருந்து இறங்கினர். முதலில் டாக்டர் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தார்.

“என்னப்பா இது சுத்தீலும் வெறும் காடா தான் இருக்கு!!! இதுல நாம சாண்டியை எப்படித் தேடுறது? “

இதைக் கேட்டுக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கிய ராஜா

“சார் அவங்க டீச் பண்ணத் தானே இங்கே வந்திருக்காங்க அப்படீன்னா இங்கே இருக்குற கிராமங்கள்ல விசாரிச்சா தெரிஞ்சுடுமே”

“அது கூட வேண்டாம் ராஜா…நாமே இந்த ரோட்டுல வரும்போது டீச்சர் நமக்கு முன்னாடி அதோ அங்க தெரியுது பாரு கிச்சப்பட்டி போர்டு …அதை ஒட்டியிருந்த ரைட் சைடு மண் ரோடு வழியா தானே நாம போயிகிட்டிருந்த ரோட்டுல ஏறினாங்க?”

“ஓ அப்படியா?”

“என்னப்பா ராஜா!!! எல்லாம் நடந்த போது நீங்களும் தானே இருந்தீங்க அப்புறம் என்ன ஏதோ தெரியாத மாதிரி கேட்குறீங்க?”

“ரஞ்சித் சார் அவங்க ரெண்டு பேருக்கும் அந்த விபத்துல தலையில அடிப்பட்டதனால ரிட்ரோக்கிரேடு அம்னீஷியா வந்திடுச்சு. அதுனால அவங்களுக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை.”

“ஓ!! இஸ் இட்”

“ஆமாம் டாக்டர் அது ஒரு தனிக் கதை. அப்புறமா சொல்லுறேன். சாண்டி மேடம் இந்த மண்ணு ரோடு வழியா தான் கார்ல வந்து நாங்க வந்துட்டிருந்த ரோட்டுல ஏறினாங்க . ஸோ இந்த பாதையிலேயே போனோம்ன்னா தெரியும்னு நினைக்கிறேன்….சரி வாங்க காருல ஏறுங்க நாம போகலாம் “

“ஏன்ப்பா ராமு இந்த பாதை காட்டுக்குள்ள போவுது?”

“அப்படித் தான் தோணுது ரஞ்சித் சார். போய் பார்ப்போம்”

என்று அனைவரும் காரில் ஏறிக் கொண்டு அந்த காட்டு வழிப் பாதையில் காரில் மெதுவாகச் சென்றனர். அந்த வழியைப் பார்த்ததும் டாக்டர்

“என் சாண்டி இவ்வளவு தூரமா இருக்குற இந்த காட்டுக்குள்ளயா வந்து சேவை செய்யணும்!!!”

“சார் இந்த மாதிரி இடத்துல இருக்குறவங்களுக்கு தான் சார் படிப்போட முக்கியத்துத்தை எடுத்து செல்லணும்.”

“அதெல்லாம் சரி தான்ப்பா தம்பி… ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் இல்ல..”

“ஒரு வேளை நீங்க விட மாட்டீங்கன்னு நினைச்சிருக்கலாம் இல்லையா சார்”

“ம்….குவைட் பாஸிபிள்….இப்பவே ஏன் இந்த இடத்துக்கு வந்தான்னு சொல்லறேனே….அப்போ அவ சொல்லியிருந்தா நிச்சயம் விட்டிருக்க மாட்டேன் தான்”

“ம்…அண்ணே அதோ பாருங்க ஒரு சின்ன காட்டுவாசிங்க வசிக்கிற இடம் மாதிரி இருக்கு”

“ஆமாம் ரஞ்சித் அங்கே போய் பார்ப்போம். டிரைவர் வண்டியை அந்த ஊருக்குள்ள விடு”

என்று டாக்டர் சொன்னதும் டிரைவர் வண்டியை நேராக அந்த ஊரின் நடுவே சென்று நிறுத்தினார். வண்டி ஊருக்குள் செல்லும் போதே பின்னாலேயே பல பேர் ஓடி வந்தனர். வண்டி நின்றதும் ஒரு ஐம்பது பேர் வண்டியை சூழ்ந்துக் கொண்டனர். அப்போது மெதுவாக டாக்டர் வண்டியிலிருந்து இறங்கினார். பின் ஒவ்வொருவராக இறங்கினர். அவர்களைப் பார்த்ததும் ஒரு சிறுவன் வேகமாக ஓடிச் சென்று ஒரு வயதான பெண்மணியை அழைத்து வந்தான். அவள் மெல்ல அசைந்து அசைந்து நடந்து வந்து காரின் முன் நின்றாள். அவளைப் பார்த்ததும் மூன்று நண்பர்களும் டாக்டரிடம்

“இவங்க அதே பாட்டி தான் சார்”

“ஆமாம் அப்படியே இருக்காங்க தம்பி. வணக்கம் அம்மா. நான் சாண்டியோட கணவர். அவளைத் தேடி சென்னையிலிருந்து வந்திருக்கேன்”

என்று டாக்டர் கூறியதும் அந்த மூதாட்டி அவரை மேலும் கீழுமாக பார்த்து

“என்னது? யாரு அது சாண்டி?”

என்றாள். உடனே ராமு குறுக்கிட்டு

“பாட்டியம்மா…உங்க புள்ளைங்களுக்கெல்லாம் பாடம் சொல்லிக் குடுக்க வருவாங்களே டீச்சர் அவங்களைத் தேடித் தான் நாங்க எல்லாரும் வந்திருக்கோம்.”

“ஓ!!! எலே கேட்டுச்சா….நம்ம டீச்சரம்மாவைத் தேடி வந்திருக்காங்க லே!!! போங்க போங்க அவுங்க அவுங்க சோலியைப் போய் பாருங்க…இவங்களை நான் பார்த்துக்கறேன்”

என்று அந்த மூதாட்டி கூறியதும் அங்கு கூடியிருந்த அனைவரும் கலைந்துச் சென்றனர். வந்தவர்களை தன் பின்னால் வரும் படி கூறி மெல்ல அசைந்து அசைந்து வந்த பாட்டி திடீரென இளவயது பெண் போல வேகவேகமாக நடந்துச் சென்றாள். அனைவரும் பல சந்துகளைக் கடந்துச் சென்றனர் . கடைசியில் ஒரு குடிலின் வாசலில் சென்று நின்ற பாட்டி கூடவே வந்த சிறுவனிடம்

“டேய் ராசா அந்த ஓலைகளை அங்கேந்து நீக்குடா”

என்று சொல்லிக்கொண்டே தன் பின் வந்தவர்களிடம் அவள் நின்றிருந்த வீட்டின் வாசலின் வலது புறமாக கையைக் நீட்டி ஓலைகளால் மூடப்பட்டிருந்த ஒன்றை காட்டினாள்

“ம்….இது தான்ப்பா அந்த பொண்ணு எப்பவும் எங்க ஊருக்கு ஓட்டிக்கிட்டு வரும் வாகனம்”

என்று காட்ட உடனே டாக்டர் ஓடிச் சென்று வேகமாக ஓலைகளை நகர்த்திப் பார்த்தார். அவர் கண்டது டீச்சரின் சான்ட்ரோ காரே தான்….அதைப் பார்த்ததும்

“ஐய்யோ!!! இது என் சாண்டியின் காரே தான் அம்மா. இது அவ காரே தான். அம்மா என் மனைவி எங்கம்மா?”

என்று அழுது கதறினார். அவரை ரஞ்சித் தாங்கிப் பிடித்துக் கொண்டே அந்த மூதாட்டியிடம்

“அம்மா இது என் அண்ணியின் வண்டி தான். அவங்க எங்க இருக்காங்க மா….நாங்க ஒரு வருஷமா அவங்களைத் தேடிக்கிட்டிருக்கோம்”

“ம்….அப்படியா சரி வாங்க…முதல்ல உள்ளே போவோம்”

என்று அந்த குடிலின் வாசலில் போடப்பட்டிருந்த வாழையிலைத் திறையை அகற்றி உள்ளே வரும்படிச் சொன்னாள். அந்த குடில் முழுவதும் மருந்து வாசம் நிறைந்திருந்தது. ஓர் ஓரத்தில் விதவிதமான மூலிகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அனைத்தும் நாட்டு மருந்துகள். அனைவரும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில்…மூதாட்டி உள்ளே இருந்த ஓர் அறைக்குள் சென்று கையில் ஒரு ஆறு மாத குழந்தையுடன் வந்து…

“இந்தாப்பா உன் ராசாத்தி. எப்படி செவப்பா இருக்கான்னு பாரு….அப்படியே உன் பொஞ்சாதி மாதிரியே இருக்குது பாரு…..இவளை பெத்ததுக் கூட உன் பொஞ்சாதிக்குத் தெரியாதுப்பா!! இந்தா புடி உன் புள்ளைய”

என்று டாக்டர் கையில் கைக்குழந்தையை கொடுத்தாள். அதைப் பார்த்ததும் டாக்டர் அந்த குழந்தையையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் அப்போது ரஞ்சித்

“பாட்டிமா இந்த குழந்தையோட அம்மா எங்க? என் அண்ணி எங்க?”

“இருப்பா புள்ளையை அப்பன் கொஞ்சட்டும்”

டாக்டர் அந்த குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு கண்களில் கண்ணீருடன் அதன் நெற்றியில் முத்தமிட்டார். உடனே உள்ளே இருந்த அறையிலிருந்து யாரோ மூச்சை இழுத்து இழுத்து விடும் சப்தம் வந்தது. அதைக் கேட்டதும் குழந்தையை ரஞ்சிதாவிடம் குடுத்துவிட்டு அந்த சப்தம் வந்த அறையை நோக்கி டாக்டர் சென்றார். அவர் பின்னாலேயே பாட்டியம்மா மீண்டும் மெல்ல அசைந்து அசைந்து நடந்து சென்றாள். வீட்டின் ஒரு மூலையில் நின்றிருந்த மூன்று நண்பர்களும் அதை கவனித்தனர். அப்போது ராஜேஷ் தன் நண்பர்களிடம் மெதுவாக…

“என்னடா இது இந்த பாட்டி எவ்வளவு வேகமா நம்மள இங்கே கூட்டிட்டு வந்துச்சு!!! இப்ப என்னடான்னா இங்கேந்து அந்த ரூமுக்கு போறதுக்கே இவ்வளவு நேரமெடுக்குது!!!”

“டேய் ராஜேஷ் இதுவும் நம்ம ராமு காலையில மாறினானே அது மாதிரி போல தெரியுது டா”

“ஆங் இருக்கலாம் ராஜா இருக்கலாம்”

“என்னங்கடா ரெண்டு பேருமா ஏதோ என்ன வச்சு சொல்லறீங்க!!! நான் எப்போ என்னவா மாறினேன்?”

“ராமு அது ஒரு பெரிய கதை…அப்புறமா வீட்டுக்கு போனதும் சொல்லுறோம் என்ன ராஜேஷ்”

“எனக்கேவா!!”

“ம்…ஆமாம் ஆமாம்…உஷ் ….உள்ளே என்ன நடக்குது?”

என்று மெல்ல நகர்ந்து சென்று மூவரும் எட்டிப் பார்த்தனர். உள்ளே ஒரு இலைகளால் ஆன படுக்கையில் ஒரு பெண் படுத்திருந்தாள்….அவளைப் பார்த்ததும் ராமு தன் நண்பர்களிடம்

“டேய் ராஜா அன்ட் ராஜேஷ் இவங்க தான் அந்த பொண்ணு !!! ஆக்ஸிடென்ட் ஆனப்போது பார்த்தா மாதிரியே படுத்திருக்காங்க டா”

என்றதும் ராஜாவும் ராஜேஷும் நன்றாக கண்களைக் கசக்கிக் கொண்டுப் பார்த்தனர்.

டாக்டர் பாட்டியிடம்… தான் ஒரு டாக்டர் என்பதையே மறந்துப் போய்

“பாட்டிம்மா என் மனைவிக்கு என்ன ஆச்சு?”

“இந்த பொண்ணு ரொம்ப நல்லப் பொண்ணுப்பா….எங்க புள்ளைங்களுக்கெல்லாம் வாராவாரம் வந்து படிப்பு சொல்லிக் குடுத்துட்டு போகும். அப்படி ஒரு நாள் போகும் போது அதோட வண்டிக்கு ஏதோ ஆகிடுச்சுப் போல…..ரோட்டு மேல மரத்துல மோதி நிக்குதுன்னு….தேனு விக்கப் போண எங்க பசங்க பார்த்துட்டு வந்து சொன்னாங்க….உடனே நாங்க எல்லாருமா போய் வண்டியையும் அந்த பொண்ணையும் இங்க கூட்டிட்டு வந்துட்டோம். எனக்கு இந்த புள்ளைய ரொம்ப பிடிக்கும் தம்பி….அதே போல அதுக்கும் என்னைய ரொம்ப பிடிக்கும். அது இங்கேந்து கிளம்பும்போதே சொன்னேன் தம்பி….நீ முழுவாம இருக்க …போகணுமான்னு கேட்டேன்…அதுதான் போயே ஆவேன்னு கிளம்பிச்சு….”

“நீங்க ஏன் இப்படி ஒரு விபத்து நடந்ததை பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷன் ல புகார் குடுக்கலை பாட்டி?”

“எங்க தம்பி எங்களைப் பார்த்தாவே அவிங்களுக்கு கிறுக்குப் பிடிச்சிடுது….எங்க பசங்களையும் பொண்ணுகளையும் பாடாப் படுத்துவாங்க…அதுனால நாங்க அவங்க கிட்ட எல்லாம் சொல்லலை…அதுவுமில்லாம இந்த பொண்ணு போய் மரத்துல மோதிக்கிட்டதுக்கு எங்களைப் புடிச்சு உள்ளே போட்டிவாங்கன்னு நம்ம சின்னபைய சொன்னானா அதுனால பயந்துகிட்டு நாங்க அங்கே எல்லாம் போகலை தம்பி. அன்னியிலேந்து இன்னை வரைக்கும் நாங்க இந்த பொண்ணை பத்திரமா பார்த்துக்கிட்டு வர்றோம்…எப்பையாவது இதோட சொந்தம்ன்னு சொல்லிக்கிட்டு யாராவது வருவாங்கன்னு காத்துக்கிட்டுக் கிடக்கறது நாங்க மட்டுமில்ல தம்பி உன் பொஞ்சாதியும் தான்”

“இவ ஏன் இப்படி கிடக்கா பாட்டி?? ரஞ்சித் ஐ திங் ஷு இஸ் இன் கோமா!! பாட்டி எப்பலேந்து இவ இப்படி படுத்தப் படுக்கையா இருக்கா?”

“அது மரத்துல மோதினதுலேந்தே இப்படி தான் கிடக்குத் தம்பி. நாங்க குடுத்த மருந்துல அநேகமா நாளைக்கு நினைவு வந்திடும் தம்பி கவலைப்படாதீங்க. நல்லதுப் பண்ணினப் புள்ளைக்கு எல்லாமே நல்லாதா தான் நடக்கும்…இதோ இப்போ மூச்ச நல்லா இழுத்து இழுத்து விடுதுல….இது நாள் வரை இப்படி இருக்கலியே…சரி நீங்க எல்லாரும் வெளியில இருங்க….இந்த பொண்ணுக்கு மருந்து கொடுத்து உடையை மாத்தி இலைப் படுக்கையையும் மாத்தணும்…ஏய் அச்சாரி அச்சாரி இங்க வாடி…”

என்று பாட்டி சொன்னதும் அனைவரும் அந்த குடிலின் வெளியே சென்றனர். அப்போது டாக்டர் ரஞ்சித்திடம்

“ஏன்டா இப்படி?? எல்லாருக்கும் நல்லது மட்டுமே செஞ்சவளுக்கு எதுக்கு இப்படி ஒரு தண்டனை?”

“விடுங்க அண்ணே. ஏதோ திருஷ்டி மாதிரின்னு எடுத்துக்குவோம்….என்ன பண்ண!!! அதுதான் பத்திரமா அண்ணி கிடைச்சுட்டாங்க இல்ல…”

“ஒரு வருஷம் டா!!!! ஒரு வருஷம்…..அவ பெத்தப் புள்ளையைக் கூட அவ இன்னும் பாக்கலைடா”

“அண்ணே எனக்கு ஒரு டவுட்…கேட்கலாமா”

“கேளு ரஞ்சிதா”

“ஏன் அண்ணே… அண்ணி விபத்து நடந்ததிலிருந்து கோமாவுல தான் இருக்காங்கன்னு பாட்டி சொல்லுறாங்க…அப்படி இருக்கும் போது எப்படி குழந்தையைப் பெத்தெடுத்தாங்க? அவங்களுக்கு வலி வந்திச்சுன்னு கூட சொல்ல முடியாம படுத்த படுக்கையா இருக்காங்களே!!!”

“ரஞ்சிதா இது சாத்தியம் தான் மா. அவ சுயநினைவை இழந்து உடலின் வெளிப்புற பாகங்கள் தான் செயலிழந்து இருக்கு….அவளோட உடலுக்குள்ளே எல்லா உறுப்புகளும் பக்காவா தான் செயல்பட்டுக்கிட்டிருக்கு…..அதோட இந்த மலைவாசிங்களோட மருந்து, கவனிப்பு இதெல்லாம் தான் அவளுக்குள்ள எங்க குழந்தை ஆரோக்கியமா வளர்ந்து இந்த பூமிக்கு வர வழிவகுத்திருக்கு.”

“அது சாத்தியமா அண்ணே!! இப்படி எங்கயாவது நடந்திருக்கா?”

“ம்…நடந்திருக்கு ஏன் நடக்காம? பயோலாஜிக்கலி அவங்க உடம்புக்குள்ள எல்லாமே நல்லாதான் வேலை செய்யும். அரிசோனா அப்படிங்கற இடத்துல ஒரு பொண்ணு கோமால இருக்கும் போது குழந்தையை பெத்தெடுத்திருக்கா…..அது ஒரு பெரிய விவகாரம்…..ஆனா இது சாத்தியம்ங்கறதுக்காக தான் நான் இப்போ அதை சொன்னேன்.”

“ஐய்யா ஐய்யா!!! வாங்க வாங்க “

என்று வீட்டினுளிருந்து குரல் கேட்டதும் அனைவரும் ஓடிச் சென்றனர். டாக்டருக்கு சாண்டியின் அருகில் ஏதோ ஒரு உருவம் நிற்பது போல தெரிந்தது. தன் கண்களை கசக்கிப் பார்த்தார்…அது சாண்டியின் உருவம் தான்….அவள் டாக்டரையே பார்த்து சிரித்தாள் ….பின் மேலே எதையோ பார்த்தாள்….மீண்டும் டாக்டரைப் பார்த்து சிரித்து காற்றில் முத்தமிட்டாள். உடனே டாக்டர் படுத்திருந்த சாண்டியை தூக்கி உலுக்கினார்…

“சாண்டி…..சாண்டி ….கமான் சாண்டி கமான்….ப்ளீஸ் டோன்ட் லீவ் சாண்டி…..ப்ளீஸ் சாண்டி ப்ளீஸ்…..கடவுளே”

என்று கத்தினார்…கதறினார்….அங்கிருந்த மற்றவர்களுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. டாக்டரின் அருகில் சென்று அவரை சமாதானப் படுத்த அவர் தோளில் கையை வைத்து ரஞ்சித்

“அண்ணே என்ன ஆச்சு அண்ணே? ஏன் இப்படி அழுவுறீங்க?”

“ரஞ்சித் என் சாண்டி என்னை விட்டுட்டு போயிட்டாடா…..எனக்காக….எங்க குழந்தையை என்ட்ட சேர்கறதுக்காக அந்த எமனோடப் போராடி உயிரை பிடித்து வைத்திருந்திருக்கா டா…..நாம வராம இருந்திருந்தா அவ இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருந்திருப்பாளே!!!! ஐய்யோ அவளை பார்க்கும் ஆவலில் ஓடி வந்து அவ நம்மளைப் பிரிய நானே காரணமாகி விட்டேனே டா….ரஞ்சித்….”

என்று டாக்டர் சொன்னதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள். அப்போது அந்த மூதாட்டி சாண்டியின் கைகளைப் பிடித்து நாடிப் பார்த்தாள்….பின்

“ஆமாம் தம்பிகளா அந்த புள்ள இவ்வளவு நாள் உன்னையப் பார்க்கறதுக்கும் உன் புள்ளய உன் கிட்ட ஒப்படைக்கறதுக்கும் தான் உசுரோட இருந்துச்சுப் போல….என்னப் பண்ண தம்பி…அதோட காலம் இந்த பூமில முடிஞ்சிடுச்சு..மேற்கெண்டு ஆவுறதப் பாருங்கப்பா”

என்று கூறிவிட்டு குடிலில் இருந்து வெளியே சென்று எல்லோரிடமும் விவரத்தைக் கூறி சாண்டியின் இறுதிச் சடங்கிற்கு எல்லாம் தயார் செய்தாள் பாட்டி….அதைப் பார்த்த ரஞ்சித்….பாட்டி நாங்க அவங்க உடலை எங்க ஊருக்கு எடுத்துக்கிட்டு போகணும் என்று சொன்னதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் கோபமாக ரஞ்சித்தைப் பார்த்தனர். அப்போது பாட்டி மெல்ல அவனருகே வந்து

“தம்பி அந்த பொண்ணு எங்க மண்ணுல தான் உசுர விட்டிருக்கு அப்போ அதை நாங்க எங்க சம்பிரதாயப் படி தான் எல்லாம் செய்வோம். அப்படி நாங்க செய்யலைன்னா அப்புறம் எங்க மலைச்சாமி எங்களை சும்மா விடாது. போப்பா போ”

என்றதும் ரஞ்சித் வாக்குவாதத்தில் இறங்க உடனே டாக்டர் வெளியே வந்து

“ரஞ்சித் விடு அவங்க தான் என் சாண்டியை இந்த ஒரு வருஷமா பார்த்துக்கிட்டு அவளை கடைசியா என் கண்ணுலேயும் காட்டினாங்க. அவளோட சிரிச்ச முகத்தைப் பார்த்துட்டேன்…எங்களோட குட்டி சாண்டியையும் பத்திரமா என்கிட்ட இவங்க துணையோட சேர்த்துட்டா என் சாண்டி… அப்புறம் ஏன் நாம் இவங்களை தடுக்கணும். விடு அவங்க முறைப்படியே எல்லாம் நடக்கட்டும்….நீ அப்பாவுக்கு ஃபோன் போட்டு வரச்சொல்லு”

என்று கூறிக் கொண்டே அங்கே மூலையில் பயந்தபடி நின்றுக் கொண்டிருந்த மூன்று நண்பர்களைப் பார்த்தார். கையில் குழந்தையுடன் நேராக அவர்களிடம் சென்றார்.

“தம்பிகளா உங்களோட ஒரு சின்ன ஆசையை நிறைவேற்ற நீங்க செஞ்சது என் குடும்பத்தையே சிதைச்சுடுச்சுப் பார்த்தீங்களா!!!”

என்றுதும் மூவரும் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அழுதனர். அதைப் பார்த்த ரஞ்சித் வேகமாக வந்து

“எல்லாம் இவங்களால தானே நடந்தது….இவங்களை மொதல்ல போலீஸ் கிட்ட பிடிச்சுக் குடுக்கணும்…இருங்க நான் இப்பவே போலீஸுக்கு ஃபோன் பண்ணறேன்”

என்று சொன்னதும் மூன்று நண்பர்களும் பயத்தில் உறைந்து நின்றனர். அப்போது டாக்டர் ரஞ்சித்திடம்

“விடு ரஞ்சித்…. என் சாண்டியே அவங்களை ஒண்ணும் செய்யாமல் மன்னிச்சுட்டுப் போயிட்டா….”

“என்ன சொல்லுறீங்க அண்ணே?”

“ஆமாம் அவ நினைச்சிருந்தா இந்த மூணு பசங்களையும் நமக்கு காட்டிக் கொடுத்திருக்கலாம்….ஆனா அவ அப்படி செய்யலையே….இந்த மூணு பேரை வச்சே நம்மளை இதே இடத்துக்கு வர வச்சா இல்ல….அவங்களையே பார்க்க வச்சா இல்ல….அது தான் டா என் சாண்டி…..அவ பிரிவும் பாடம் சொல்லிக் குடுத்திருக்கு பார்த்தியா….இனி அவங்களும் அப்படி நடந்துக்க மாட்டாங்க மத்தவங்களையும் அப்படி நடக்க விட மாட்டாங்கங்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அவங்களை விட்டு விடு போகட்டும்…போங்கப்பா…ரஞ்சித் நம்ம டிரைவர்ட்ட சொல்லி இந்த பசங்களை அவங்கவங்க வீட்டுல விட்டுட்டு வரச்சொல்லு”

என்று டாக்டர் சொன்னதும் மூன்று நண்பர்களுக்கும் அடக்க முடியாமல் அழுகை வர …ஓடி சாண்டியின் உடலின் அருகில் சென்று மன்னிப்புக் கேட்டு அழுதனர். ரஞ்சித் அவர்களை தட்டிக் கொடுத்து எழுப்பி காரில் அமரவைத்து… டிரைவரிடம் தன் அண்ணன் சொன்னபடி வீட்டில் இறக்கி விடச் சொன்னான்.

டிரைவர் காரை ஸ்டார்ட் செய்தார். கார் ஸ்டார்ட் ஆனதும் வேகமாக ஓடி காட்டிலிருந்து ரோட்டின் மீது ஏறியது…அப்போது ராமு டிரைவரிடம்

“அண்ணே பளீஸ் நிதானமா ஓட்டுங்க.”

என்று கூறிக் கொண்டிருக்கும் போதே க்ரீச்ச்ச்ச்ச்ச் என பலமான சப்தம் கேட்டது…..வண்டி நேராக சென்று சாண்டியின் வண்டி மோதிய மரத்தில் மோதி நின்றது.

திரையரங்கின் மின்விளக்குகள் பளிச்பளிச்சென்று மின்னியது. ஷார்ட் ஃபிலிம் போட்டிக்கு வந்திருந்த போட்டியாளர்கள், நடுவர்கள், பத்திரிகையாளர்கள் அரங்கிலிருந்த மற்ற பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர். நடுவர்களின் தீர்ப்புக்காக அனைவரும் காத்திருந்த போது அங்கிருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் எழுந்து பின் வரிசையில் அமைதியாக அமர்ந்திருந்த ராமுவிடம்

“நல்ல படம் சார். சூப்பரா எடுத்திருக்கீங்க!! நிச்சயம் உங்க படம் தான் ஜெயிக்கும். ஆமாம் நான் ஒண்ணு உங்கிட்ட கேட்கலாமா?”

“ம்…கேளுங்க”

“இது உண்மைக் கதையா?”

என்று அந்த பத்திரிகையாளர் கேட்டதும். ராமு அந்த பத்திரிகையாளர் கழுத்தில் மாட்டியிருந்த அடையாள அட்டையைப் பார்த்தான். அதில் “சாண்டி” என்று அச்சிடப்பட்டிருந்தது.

❤️முற்றும்❤️

🙏நன்றி🙏

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s