“அதுதான் ஃபோட்டோவுல இருக்குறது அப்படியே அந்த பொண்ணு மாதிரியே தானே இருக்கு. அதே கண்கள். அப்புறம் என்னடா… ராஜா அன்ட ராஜேஷ் யோசனை?”
“அதுகில்ல ராமு….அந்த பொண்ணு பெயர் சாமுண்டீஸ்வரின்னு டாக்டர் சொன்னாரு…அது தான்….யோசிக்க வேண்டியிருக்கு….படம் மேட்ச் ஆகுது ஆனா பெயர் மேட்ச் ஆகலையே டா!!!”
“ராஜா!!! என்னடா!!! இது கூடவா தெரியாது!!! சில வீடுகள்ல அவங்க ஒர்ஜினல் பெயர் ஒண்ணு இருக்கும் ஆனா கூப்பிடறதுக்கு செல்லப் பெயர் வச்சுப்பாங்க இல்ல…அது மாதிரி இந்த சாமுண்டீஸ்வரியோட செல்லப் பெயர் சாண்டியா இருக்குமோ என்னவோ!!!”
“ம்…இதுக்கு தான் நம்ம ராமு வேணும்ங்கறது….சூப்பர் டா…..சாண்டி இஸ் சாமுண்டீஸ்வரி ….. சாமுண்டீஸ்வரி இஸ் சாண்டி”
“ராஜேஷ் அதை அவங்க வீட்டுக்குப் போய் தான் கன்ஃபார்ம் பண்ணணும்.”
“சரி அப்புறமும் ஏன் இங்கே நின்னுகிட்டு….கிளம்புங்க அவங்க வீட்டுக்கு மறுபடியும் போவோம்!!”
“போகலாம்….ஆனா!!”
“என்ன இழுக்குற ராஜா!!”
“இல்ல அங்கே போனா …. நீ மறுபடியும்….ஜடம் மாதிரி ஆகிட மாட்டியே!!!”
“டேய் எனக்கே நான் எப்படி இருந்தேன்னு தெரியாதப் போ….மறுபடியும் அப்படி இருக்க மாட்டேன்னு நான் எப்படி டா சொல்லுறது?”
“சரி வா….வேற வழியில்லை….அப்படியே நீ மாறினாலும் நாங்க சமாளிக்க வேண்டியது தான். வாங்க போவோம்”
என்று பேசிக்கொண்டு மூவரும் மீண்டும் டாக்டர் வீட்டுக்குச் சென்றனர். அங்கே வாட்ச்மென் அவர்களைப் பார்த்ததும்…
“என்னப்பா? தம்பிகளா!!! இப்ப தான் போனீங்க அதுக்குள்ள மறுபடியும் வந்திருக்கீங்க? என்ன எதையாவது விட்டுட்டுப் போயிட்டீங்களா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணே. ஒரு முக்கியமான விஷயத்தை டாக்டர் கிட்ட சொல்லணும் அதுதான் வந்திருக்கோம்.”
“அப்படியா!!! இருங்க நான் ஃபோன் போட்டுக் கேட்கிறேன்…அவங்க உள்ளே வரச் சொன்னாங்கன்னா உங்களை விடறேன்”
“ம்…சரி அண்ணே! நாங்க வெயிட் பண்ணறோம்”
வாட்ச்மென் ஃபோன் போட்டு கேட்டதில் டாக்டர் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றும் வந்தவர்களை திருப்பி அனுப்பிவிடும்படியும் ரஞ்சிதா சொல்ல அதை வாட்ச்மென் மூன்று நண்பர்களிடமும் சொன்னார். வேறு வழியில்லாமல் மூவரும் ராஜா வீட்டுக்கு செல்ல திரும்பினர். அப்போது டாக்டரின் தம்பியின் கார் வந்தது. உடனே ராமு அந்த கார் வீட்டினுள் போக முடியாதவாறு கேட்டின் நடுவே நின்றுக் கொண்டான். அதை கவனித்த டாக்டரின் தம்பி காரின் ஜன்னல் கண்ணாடியை கீழே இறக்கி …
“டேய் பசங்களா இன்னுமா நீங்க இங்கேருந்து கிளம்பல?”
என்றதும் வாட்ச்மென் வேகமாக காரின் அருகே ஓடிச் சென்று
“இல்ல சார் அப்பவே கிளம்பிட்டாங்க….ஆனா மறுபடியும் டாக்டரைப் பார்க்கணும்ன்னு வந்திருக்காங்க…நான் அம்மாகிட்ட கேட்டேன் ஆனா அவங்க விட வேண்டாம்னு சொல்லிட்டாங்க அதைத் தான் இவங்க கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன் நீங்க வந்தீங்க…ஆனா அந்த பையன் இப்படி குறுக்கால நிக்கும்னு நான் நினைக்கலை சார். சொன்னாலும் நகரவும் மாட்டேங்கறாங்க…”
“சரி சரி நீங்க போங்க….டேய் இங்க வாங்கடா”
என்றதும் ராமு நின்ற இடத்தை விட்டு அசையாதிருந்தான். ராஜாவும் ராஜேஷும் காரின் அருகே சென்றனர்…
“ம்…சொல்லுங்க சார்.”
“என்னடா வேணும் உங்களுக்கு…ஏன் இப்படி எல்லாம் பண்ணுறீங்க? காலையிலேயே நினைச்சேன் உங்களைப் பார்த்தா நன்றி சொல்ல வந்தா மாதிரி இல்லையேன்னு….எதுக்கு கலாட்டா பண்ணறீங்க? அவனை வழிவிடச் சொல்லுங்க ….இல்லாட்டி போலீசுக்கு ஃபோன் போட்டு உங்க மூணு பேரையும் உள்ளே கம்பி எண்ண வச்சிடுவேன்”
“சார் நாங்க சொல்ல வந்ததை நீங்களும் டாக்டரும் கேட்டீங்கன்னா….நீங்க எல்லாரும் தான் எங்களுக்கு நன்றி சொல்லுவீங்க சார்”
“என்னடா சொல்லுறீங்க? நாங்க நன்றி சொல்லுவோமா? எதுக்கு?”
“சார் சார்…ப்ளீஸ் சார்….எங்களை இந்த ஒரு தடவை மட்டும் உள்ளே விட்டு….நாங்க சொல்லுறதை மட்டும் கேளுங்க சார்…”
“ம்….சரி வாங்க. வாட்ச்மென் இவங்களை உள்ளே விடுங்க. அதுதான் உள்ளே விடச் சொல்லிட்டேனே… அந்த பையனை வழிவிடச் சொல்லுங்கப்பா”
“டேய் ராமு சார் நம்மை உள்ளே விட சம்மதிச்சுட்டாரு…அவர் காருக்கு வழிவிடு”
என்றதும் ராமு வழியிலிருந்து ஓரமாக நகர்ந்துக் கொண்டான். கார் உள்ளே போனதும் வாட்ச்மென் மூவரையும் உள்ளே போகும்படி சொன்னார். வேகமாக உள்ளேச் சென்றனர்.
காரிலிருந்து இறங்கிய டாக்டரின் தம்பி மூன்று நண்பர்களையும் பார்த்து
“ம்…வாங்க ….உள்ளே வாங்க”
என்று அவருடனேயே அழைத்துச் சென்றார். காரின் சப்தம் கேட்டு ஹாலுக்கு வந்த ரஞ்சிதா தன் கணவருடனிருந்த மூவரையும் பார்த்து…
“நான் தான் டாக்டர் அண்ணா தூங்குறார்ன்னு சொன்னேனே அப்புறமும் இவங்க மூணு பேரும் எப்படி உள்ளே வந்தாங்க? வாட்ச்மென்….வாட்ச்மென்”
“இரு ராஞ்சிதா…இரு… வாட்ச்மென் நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்….ரஞ்சிதா நான் தான் இவங்களை உள்ளே விட்டேன்.”
“எதுக்குங்க? இந்த மூணு பசங்களும் நன்றி சொல்ல வந்தது போலவே இல்லங்க”
“ம்….அதுதான் விசாரிக்க கூட்டிட்டு வந்தேன். உட்காருங்கப்பா….இதோ வந்துடறேன்”
என்று கூறிவிட்டு தன் உடைகளை மாற்றிக் கொண்டு வந்து சோஃபாவில் அமர்ந்து….
“ஷில்பா நாலு ஜூஸ் கொண்டு வா”
என்றதும் ஜில்லென்று ஆப்பில் ஜூஸ் வந்தது. அதை எடுத்துக் கொள்ளச் சொன்னதும் எடுத்துக் கொண்டனர் மூவரும். அதில் ஒரு சிப் எடுத்ததும் மூவரையும் பார்த்து
“ம்….இப்போ சொல்லுங்க தம்பிகளா…என்ன விஷயமா நீங்க மூணு பேரும் இங்க வந்திருக்கீங்க?”
“ஆங்…அது வந்து சார்…”
“இங்க பாருங்கப்பா …..உண்மையை மட்டும் சொல்லுங்க….மறுபடியும் நன்றி அது இதுன்னு சொன்னீங்க அப்புறம் வெளியில போக மாட்டீங்க சொல்லிப்புட்டேன்”
“அய்யோ சார் நான் உண்மையை சொல்லிடறேன். நாங்க நன்றி சொல்ல எல்லாம் வரலை சார்”
“அதுதான் எனக்கு காலையிலேயே தெரிஞ்சுடுச்சே….மேலே சொல்லுங்க”
“ஒரு முக்கியமான விஷயம் பத்தி சொல்லணும் சார். அது உங்க அண்ணன் மனைவிப் பத்தி சொல்லணும்”
“அவங்களைப் பத்தி சொல்லணுமா? என்ன அது?”
“அட என்னப்பா மூணு பேரும் இன்னுமா வீட்டுக்குப் போகலை!!!”
என்று பேச்சுக் குரல் கேட்டு அவர் ரூமிலிருந்து வெளியே வந்த டாக்டர் கேட்க…அதற்கு அவரின் தம்பி…
“அண்ணே இவங்க ஏதோ நம்ம அண்ணியை பத்தி சொல்லணும்ன்னு வந்திருக்காங்கலாம்…அதுதான் விசாரிச்சுக்கிட்டிருக்கேன்”
என்றதும் உணர்ச்சிவசப்பட்ட டாக்டர் வேகமாக மூவரின் அருகில் வந்து
“என்னது என் சாண்டியைப் பத்தியா?”
என்று கேட்டதும் மூவரும் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளதாக கண்களாலேயே பேசிக் கொண்டனர். அப்போது டாக்டர் அவர்களிடம்
“என்னது அது? அவ இருக்குற இடம் உங்களுக்குத் தெரியுமா? ஏன்ப்பா சிலை மாதிரி நிக்குறீங்க…சொல்லுங்கப்பா உங்களுக்கு என்ன தெரியுமோ அதை சொல்லுங்க”
“சார் நாங்க சொல்லுவோம் ஆனா நீங்க அதை நம்பணும் சார்”
“என்னப்பா… தம்பிகளா இதை வச்சு பணம் பார்க்க நினைக்குறீங்களா?”
“ஐய்யோ!! சார் அதெல்லாம் ஒண்ணுமில்லை”
“டேய் ரஞ்சித் கொஞ்ச நேரம் சும்மா இருடா…”
என்று டாக்டர் அவர் தம்பியை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு
“நீங்க சொல்லுங்கப்பா…நான் நம்புவேன்…என் சாண்டியைப் பத்தி தெரிஞ்சுக்க நான் யாரை வேணும்னாலும் நம்புவேன்….”
என்று டாக்டர் ராஜேந்திரன் சொன்னதும்…மூன்று நண்பர்களுமாக மாறி மாறி நடந்ததை எல்லாம் விலாவாரியாக…. புத்தகம் வாங்கியதிலிருந்து…அதை முகவுரையிலிருந்து முடிவுரை வரை படித்ததையும் பார்த்ததையும்…அவர்கள் அனுபவித்ததையும் முழுவதுமாக கூறி முடித்ததும்….தங்களுக்கு சர்வ் செய்யப்பட்ட ஜூஸை முழுவதுமாக குடித்து கிளாஸை காபி டேபிளில் வைத்தனர். அதை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் ராஜேந்திரன், அவர் தம்பி ரஞ்சித், அவர் மனைவி ரஞ்சிதா மூவரும் அதிர்ந்துப் போய் அமர்ந்திருந்தனர். அப்போது ராஜா மெல்ல
“சார் ….சார்….மேடம்…”
என்று கூப்பிட்டதும்….டாக்டர் ராஜேந்திரன்…
“என்னப்பா சொல்லுறீங்க? நீங்க சொன்னதெல்லாம் ஓகே….சிவப்பு நிற சான்ட்ரோ கார் என் சாண்டியோடது தான்….ஆனா அவ ஒவ்வொரு வாரமும் இவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணிட்டா வந்தா!!!”
“என்ன அண்ணே நீங்க வேற!!!! டேய் நீங்க மூணு பேரும் சொன்னதெல்லாம் சரின்னே வச்சுக்குவோம் ஆனா அந்த குழந்தை எங்கேந்து வந்துச்சு? ஏன் வந்துச்சு?”
“அதுக்கு நாம் அங்க போனா தான் பதில் கிடைக்கும் ரஞ்சித் சார்”
“சரி….இவ்வளவு நேரமா ஒரு புக்கைப் பத்திப் பேசினீங்களே அந்த புக்கு எங்கே?”
“அது…அது….அது…வந்து”
“என்னடா இழுக்குறீங்க…..”
“அந்த புத்தகம் என் வீட்டில் தான் சார் இருக்கு. அதை நான் எடுத்துட்டு வந்திடுவேன்….ஆனா”
“என்ன ஆனா ஆவன்னான்னு…”
“இல்ல சார் அந்த புத்தகத்துல இருக்கறதை நாங்க மூணு பேரு மட்டும் தான் படிக்கவோ பார்க்கவோ முடியும். மத்தவங்களால அட்டைப் படத்தையும் அதன் டைட்டிலையும் தான் பார்க்க முடியும்….புத்தகத்தைத் திறக்க முடியாது சார்.”
“என்னடா கதையா விடுறீங்க? நல்லா கிளம்பி வர்றீங்கடா”
“ஏய் ரஞ்சித்…உஷ்….எனக்கென்னவோ இந்த பசங்க சொல்லுறது பொய் மாதிரி தெரியலை. சரிப்பா வாங்க நாம உங்க வீட்டுக்கே போய் அந்த புத்தகத்தைப் பார்ப்போம்.”
“அண்ணே என்ன அணணே….இந்த பசங்க சொல்லுறதைக் கேட்டு நீங்க அவங்க வீட்டுக்கெல்லாம் போறேங்கறீங்க”
“எங்கெங்கயோ சாண்டியை நாம தேடிப் பார்த்துட்டோம் ஆனா அவ கிடைக்கலை…இப்போ இந்த பசங்களை நம்பி போய் பார்ப்போமே ரஞ்சித்…அவ கிடைச்சா நமக்கு சந்தோஷம் தானே”
“என்னமோ அண்ணே…சரி வாங்க நானும் உங்க கூட வர்றேன். வாங்கப்பா எங்க கார்லேயே உங்க வீட்டுக்குப் போயிட்டு வருவோம்”
என்று ரஞ்சித் சொன்னதும் டாக்டர் உட்பட அனைவரும் காரில் ஏறினர். ராஜா வழி சொல்ல கார் அவன் வீட்டு வாசலில் நின்றது. அனைவரும் இறங்கியதும் ராஜா வேகமாகச் சென்று வீட்டின் கதவைத் தட்டினான். மங்களம் கதவைத் திறந்தாள். வெளியே டாக்டரைக் கண்டதும்
“ஐய்யா நீங்களா? நீங்க எப்படி இங்க?”
“மங்களம் எப்படி இருக்க? நீ எப்படி இங்க?”
“நான் இங்கே தான் காலையிலேந்து சாயந்தரம் வரைக்கும் வேலைப் பார்க்கறேன் ஐய்யா”
“ஓ!!! அப்படியா…”
“மங்களம் அக்கா எல்லாருக்கும் குடிக்க ஏதாவுது எடுத்துக் கிட்டு வாங்கக்கா”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா…”
என்று டாக்டர் சொன்னதும்…மங்களம் அவரிடம்
“இருங்க ஐய்யா நான் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஆரஞ்சு ஜூஸ் எடுத்துகிட்டு வர்றேன்”
என்று கூறிக்கொண்டே அடுப்படிக்குள் சென்றாள்
“இருக்கட்டுமா….நீ அந்த புத்தகத்தை சீக்கிரம் எடுத்துக் கிட்டு வாப்பா”
“நீங்க ரெண்டு பேரும் உட்காருங்க சார். அந்த புத்தகம் என் ரூமுல தான் இருக்கு நாங்க போய் எடுத்துட்டு வந்திடறோம்”
என்று கூறிவிட்டு டாக்டரையும் அவர் தம்பியையும் சோஃபாவில் அமரச் சொல்லிவிட்டு மூன்று நண்பர்களும் மாடிக்கு புத்தகத்தை எடுத்து வரச் சென்றனர்.
மங்களம் ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தாள்.
“ஒரு புத்தகத்தை எடுத்துக்கிட்டு வர்றதுக்கு ஏன் மூணு பேரும் போயிருக்காங்க?”
என்று ரஞ்சித் டாக்டர் ராஜேந்திரனிடம் கேட்டதுக்கு மங்களம் குறுக்கிட்டு
“அவங்க எப்பவுமே இப்படி இல்ல சார். எப்பவாவது வீட்டுக்கு வருவாங்க போவாங்க …. அது என்னவோ தெரியல முந்தா நாள் அந்த ராமு தம்பி ஒரு புஸ்தகத்தை எடுத்துகிட்டு இங்கே வந்துச்சு…அன்னையிலேந்து இவங்க மூணு பேரும் இப்படி தான் ஒட்டிக்கிட்டு பிறந்தவங்க மாதிரியே இருக்காங்க.”
“ஏன் மங்களம் நீ அந்த புத்தகத்தைப் பார்த்தியா?”
“ஆங் பார்த்தேன் ஐய்யா. அதோட தலைப்பு கூட….உங்களோடு நான்னு இருந்துச்சு….ஆனா அந்த புத்தகத்தை திறக்கவே முடியலை ஐய்யா. அதை வச்சுக்கிட்டு இவங்க மூணு பேரும் என்ன பண்ணறாங்கன்னு தான் எனக்கு புரியலை. சரிங்க நீங்க ஜூஸை குடிச்சுக்கிட்டிருங்க நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”
என்று மங்களம் கூறிவிட்டு சென்றதும் டாக்டர் ரஞ்சித்தைப் பார்த்து
“கேட்டயா ரஞ்சித்…மங்களம் சொன்னதைக் கேட்டியா!!! அந்த பசங்க சொன்னது எல்லாம் உண்மைன்னு இப்போ நம்புறயா?”
“ம்…ம்…”
என்று மட்டும் சொல்லி அமைதியாக இருந்தார் ரஞ்சித். நண்பர்கள் மூவரும் வைத்துச் சென்ற இடத்தில் புத்தகம் இருக்கவில்லை. ஆம்…ராஜாவின் அறையில் அந்த புத்தகம் இருக்கவில்லை…மூவரும் ரூம் முழுவதும் தேடினர். கீழேயிருந்து டாக்டரின் தம்பி ரஞ்சித்…
“என்னப்பா ஒரு புக்கை எடுத்துகிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா?”
தொடரும்….