“ஏன் சார் ஷாக் ஆகிட்டீங்க?”
“நான் சர்ஜன் இல்லையேப்பா!!! நான் ஆப்பரேஷன் எல்லாம் பண்ண மாட்டேன், பண்ணவும் கூடாது….அது தான் அப்படிக் கேட்டேன்…ஒரு வேளை… மே பீ… நான் நல்ல சர்ஜனுக்கு ரெஃபர் பண்ணியிருப்பேன்”
“ஆங்….ஆமாம் சார்….அதுவும் நீங்க சொல்லித் தானே நடந்தது அதுனால தான் உங்க கிட்ட எங்க நன்றியை தெரிவிக்க வந்திருக்கோம்.”
“உங்களுக்கு எப்படி என் வீட்டு அட்ரெஸ் கிடைத்தது?”
“நாங்க நிறைய இடத்துல தேடித் தேடி கடைசியில இதோ என் நண்பன் ராஜா வீட்டுல வேலை செய்யுற மங்களம் அக்கா சொல்லித் தான் கண்டுபிடிச்சோம்”
என்று ராஜேஷ் உளர…உடனே அவனைப் பார்த்து முறைத்தான் ராஜா….அவன் பிதற்றலை சமாளிக்க முயன்ற போது டாக்டர் சட்டென
“என்னது!!! அப்போ நான் யோரோட அம்மாவைக் காப்பாத்தினேன்? நீங்க மூணு பேரும் ப்ரதர்ஸ்னு நினைச்சுட்டேன்…ஆம் சாரிப்பா”
என்று சொன்னதும்…ராஜாவுக்கு யோசிக்க நேரம் கிடைத்தது. அவர் பேசி முடித்ததும் ராஜா அவரிடம்
“இவங்க ரெண்டு பேரோட அம்மாவைத் தான் நீங்க காப்பாத்திருக்கீங்க சார். இவன் பெயர் ராஜேஷ் …அவன் இவனோட அண்ணன்… பெயர் ராமு. அன்ட் நான் இவங்க உயிர் நண்பன் ராஜா”
“ம்….மங்களம் என் வைஃப்க்கு ரொம்ப பிடிச்ச மேய்டு. என் மனைவியோட மனமறிந்து எல்லா வேலைகளையும் செய்வா…நல்ல பெண்.”
“இப்போ அவங்க உங்க வீட்டுல வேலைப் பார்க்கறதில்லையாமே சார்”
“ஆமாம்ப்பா…என் மனைவி காணாம போனதுக்கப்புறம் அவ பேசி பழகின வேலையாட்களை எல்லாம் பணம் செட்டில் பண்ணி அனுப்பிட சொல்லிட்டேன்…”
“ஏன்?”
என்று கேட்டான் ராமு. அதற்கு டாக்டர்
“ஏன்னா அவங்க நம்ம வீட்டுக்குள்ள அங்கேயும் இங்கேயுமா நடக்கும் போது எனக்கு உன் ஞாபகமாவே இருந்தது…அது என் வேதனையை கூட்டியது…நீ அவங்களோட பேசினது….பழகியதுன்னு எல்லாமே என்னை வாட்டி எடுத்தது. அதுதான் அப்படி செய்தேன்…”
என்று டாக்டரும் ராமுவுமாக பேசிக்கொண்டே ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட ராஜாவும் ராஜேஷும் ஒருவரையொருவர் பார்த்து என்ன நடக்கிறது என்று கண்களாலேயே கேட்டுக் கொண்டனர். உடனே ராஜா தொண்டையில் ஏதோ சிக்கியது போல் இருமினான். அப்போது ஏதோ மயக்கத்தில் இருந்தவர் போல டாக்டர் சிலிர்த்து எழுந்து…
“ஆங்…சொல்லுங்கப்பா”
“சரி சார்…. இஃப் யூ டோன்ட் மைன்ட்…. உங்க வைஃப்புக்கு என்ன ஆச்சுன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?”
“அதுதான் ஊரே தெரிஞ்சிருக்கே அப்புறம் உங்களுக்கு தெரிஞ்சா என்ன? அவ போன வருஷம் மார்ச் மாசம் காணாம போயிட்டாப்பா!! இன்னே வரைக்கும் தேடிக்கிட்டிருக்கோம்…அவ எப்பவுமே சனிக்கிழமை காலையில எங்கயோ கார் எடுத்துக்கிட்டு போவா ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் வந்திடுவா. அப்படித்தான் அந்த வாரம் சனிக்கிழமை காலையில கிளம்பிப் போனவ இன்னும் வீடு வந்து சேரலை.”
“அவங்க எங்க போனாங்களோ அங்கே போய் தேடினீங்களா சார்?”
“அங்க தான்ப்பா நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்….அவளை ஏதும் நான் கேள்வி கேட்க மாட்டேன்….அவளும் என்னிடமிருந்து எதையும் சொல்லாமல் இருந்ததில்லை….அவள் ஃப்ரீயா யாருக்கோ டீச் பண்ண தான் போறான்னு சொல்லிருக்கா…நானும் அது ரொம்ப நல்ல விஷயம்ன்னு அவளை என்கரேஜ் பண்ணினேனே ஒழிய அவ அதுக்காகா எங்கே போறான்னு நான் கேட்டதுமில்லை அவள் சொன்னதுமில்லை. அதை மட்டும் கேட்டு வைத்திருந்தேன்னா …அவளை கண்டுப் பிடித்திருப்பேன்.”
“அது எப்படி சார் கேட்காம விட்டீங்க?”
“அதுதான் விதி போல!!! என்னமோ எனக்கு அவகிட்ட கேட்கணும்னு தோணாம போயிடுச்சு…ஆனா ஒண்ணுப்பா அவ என் கூடவே இருக்கறா மாதிரிதான் எப்பவுமே எனக்கிருக்குது… இப்பக் கூட அவ என்னோடு இங்கே இருக்குறா மாதிரி தான் இருக்கு. அவளோட மூச்சுக் காத்து இங்கேயே தான் சுத்திக் கிட்டிருக்குதுப்பா…என்னால அதை உணர முடியுது”
“சார் உங்க மனைவி இறந்துட்டதாகவும் ….அவங்க பேயா உங்க வீட்டையே சுத்துறதாகவும் வெளியில பேசிக்கிட்டிருக்காங்களாமே!!!!”
என்று ராஜேஷ் மீண்டும் பிதற்ற….அதை சாமாளிக்க வேண்டி ராஜா
“…ம்………..அப்படீன்னு மங்களம் அக்கா தான் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க சார்”
“ஊருக்கு என்னப்பா!! அவங்க இஷ்டத்துக்கு பேசுவாங்க!! அவங்களுக்கெல்லாம் வேற வேலை என்ன? என்னைப் பொருத்தவரை என் வைஃப் உயிரோட தான் இருக்கா. எங்கயோ பத்திரமா தான் இருக்கா…ஆனா எங்கே என்னன்னு தான் தெரியலை!! புரியலை!! அதுவும் கூடிய சீக்கிரம் தெரிஞ்சிடும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு.”
“நிச்சயமா சார்….உங்க நல்ல மனசுக்கு அவங்க உங்க கிட்ட வந்து சேர்ந்திடுவாங்க சார்.”
“ஆமாம் சார்…உங்களை இவ்வளவு நேசிக்க வைச்சிருக்குற உங்க வைஃப் பெயர் என்ன சார்?”
“அவ பெயரு…”
என்று டாக்டர் சொல்ல வரும்பொழுது அவரின் தம்பி மனைவி அங்கு வந்து…
“ராஜேந்திரன் அண்ணா என்ன நீங்க இந்த பசங்களோட இவ்வளவு நேரமா பேசிக் கிட்டிருக்கீங்க??? நீங்க இப்படி பேசி ஒரு வருஷமாகுதே!!! இந்தாங்க உங்க டாப்லெட்…”
“ம்…ஆமாம் ரஞ்சிதா….நான் பேசி ஒரு வருஷமாச்சு தான்…ஆனா இந்த பசங்களைப் பார்த்ததும் எனக்கென்னவோ பேசணும் போல இருந்தது பேசினேன்…..சாரிப்பா உங்க கிட்ட என் கதையை சொல்லி உங்க நேரத்தை வீணடிச்சிட்டேனோ…ம்…இருங்க இந்த மாத்திரையைப் போட்டுக்கறேன்…இல்லாட்டி ரஞ்சிதா கோவிச்சுக்குவா”
என்று மாத்திரையை ரஞ்சிதாவிடமிருந்து வாங்கிப் வாயில் போட்டுக்கொண்டதும் அவள் அங்கிருந்து அடுப்படிக்குள் சென்றாள். அப்போது ராஜா அவரிடம்
“இட்ஸ் ஓகே சார். நன்றி சொல்ல வந்த இடத்துல உங்களுக்கு எங்களால ஒரு ரிலீஃப் கிடைக்குதுன்னா…எங்களுக்கு அது சந்தோஷம் தான் சார். உங்க வைஃப் உங்களை கணவரா அடைய புண்ணியம் செய்திருக்கணும் சார்….அந்த அதிர்ஷ்ட்டசாலியின் பெயர் சொல்ல வந்தீங்க அதுக்குள்ள மேடம் வந்து மாத்திரைக் குடுத்துட்டாங்க”
“அவ எனக்கு மனைவியா கிடைக்க நான் தான் அதிர்ஷ்டம் செஞ்சிருக்கேன் தம்பி. சரி தம்பி நான் ஒரு வருஷம் கழிச்சு இவ்வளவு நேரம் பேசினதுல கொஞ்சம் டையர்டா இருக்கு….நான் போய் படுத்துக்கறேன். ரொம்ப மாசம் கழிச்சு மனம் திறந்து பேசினதுல எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்குப்பா.”
என்று அவர் தன் மனைவியின் பெயரைச் சொல்லாது எழுந்துப் போனார். அவர் பல மாதங்களாக ஒரு அறைக்குள்ளேயே அடைப்பட்டு இருந்ததால் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வடைந்திருந்தார். அவர் ராஜா ராஜேஷுடன் பேசிவிட்டு எழுந்து அவரின் அறைக்குப் போகும் போது சற்று தடுமாறியதால் ….பிடிப்பிற்காக…. பக்கத்திலிருந்த மேஜையை பிடித்துக் கொண்டார். அந்த மேஜை அவர் பிடித்த வேகத்தில் ஆடியதில் அதன் மேல் வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பொருட்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படமும் கமுந்து தரையில் விழுந்ததில் அதன் கண்ணாடி ஃப்ரேம் உடைந்தது.
அவர் தடுமாறியதும் முதலில் ராமு எழந்து ஓடிச்சென்று அவரைத் தாங்கிப் பிடித்தான். அவன் ஓடிய வேகத்தைப் பார்த்து அதிர்ச்சியிலிருந்த ராஜாவும் ராஜேஷும் எழுந்துச் சென்று டாக்டர் ராஜேந்திரனுக்கு உதவினர். அப்போது கீழே உடைந்து கிடந்த கண்ணாடி ராஜாவின் காலில் குத்தியதும் ராஜா..”ஆ” என்று சத்தம் குடுத்தான். உடனே டாக்டர் அவனிடம்
“தம்பி கண்ணாடி குத்திடுச்சாப்பா…இரு இரு நான் போய் ஃபர்ஸ்ட் ஏய்டு கிட்டை எடுத்து கிட்டு வர்றேன்…ரஞ்சிதா அந்த ஷில்பாட்ட ஒரு பாத்திரத்துல வெண்ணீர் கொண்டு வரச் சொல்லுமா”
“ஆங் சொல்லறேன் அண்ணா. …ஏய் ஷில்பா ஹாலுக்கு ஒரு பாத்திரத்துல வெண்ணீர் எடுத்துட்டுப் போய் டாக்டர் அண்ணன் கிட்ட குடு போ…அப்படியே அந்த இடத்தையும் க்ளீன் பண்ணிடு”
“சரிம்மா.”
என்றுக் கூறிக்கொண்டே வெண்ணீரை எடுத்துச் சென்று ஹாலில் வைத்து விட்டு துடப்பத்தை எடுத்து வந்து அங்கு சிதறிக் கிடந்த கண்ணாடிகளை முறத்தில் அள்ளிக் கொண்டிருக்கையிலே அந்த உடைந்த பொருட்களுடன் சேர்ந்து கமுந்து விழுந்த ஃபோட்டோவையும் சேர்த்து முறத்தில் அள்ளினாள். அதைப் பார்த்த டாக்டர் அவளிடம்…
“ஏய் ஷில்பா என்ன பண்ணற நீ? அந்த ஃபோட்டோ என்ன உனக்கு குப்பையா?”
“இல்ல ஐய்யா அது கீழே விழுந்ததில் உடைஞ்சிடுச்சு அது தான்…”
“அதோட கண்ணாடி தானே உடைஞ்சிருக்கு….ஃபோட்டோ எங்க உடைஞ்சிருக்கு….?”
“அண்ணே அண்ணே என்னாச்சு ஏன் இப்படி சத்தம் போடுறீங்க!!!”
“இங்க பாரு ரஞ்சிதா இந்த ஷில்பா பண்ணிருக்குற வேலையை…. என் தேவதையோட ஃபோட்டோவை குப்பைகளோட சேர்த்து அள்ளறா பாரு!!!”
என்று டாக்டர் சொன்னதும் அந்த ஃபோட்டோவைப் பார்க்க தவித்தனர் ராஜாவும், ராஜேஷும்….அப்போது ராஜேஷ் ராஜாவுக்கு மட்டும் கேட்பதுப் போல மெல்ல
“டேய் ராஜா நாம இவ்வளவு நேரம் இங்கேயே தானே உட்கார்ந்திருந்தோம்…எப்படிடா அந்த ஃபோட்டோவை மிஸ் பண்ணினோம்?”
என்று கேட்டான். அதற்குள் ரஞ்சிதா வேலைக்காரியிடம் போட்ட சத்தத்தில் அமைதியானான் ராஜேஷ்.
“அச்சச்சோ!!! ஏய் ஷில்பா என்ன பண்ணி வச்சிருக்க? அண்ணே அந்த ஃபோட்டோவைக் குடுங்க நான் இப்பவே அதோட ஃப்ரேமை மாத்திக் கொண்டு வந்துத் தந்துடறேன். இதுக்காக நீங்க டென்ஷன் ஆகாதீங்க அண்ணே….ஷில்பா நீ போய் உள்ளே வேற வேலையைப் பாரு போ”
என்று ரஞ்சிதா சொன்னதும் ராஜாவுக்கு அந்த ஃபோட்டோவைப் பார்க்க ஒரு யோசனை உதித்தது…உடனே அவன் ரஞ்சிதாவிடம்
“மேடம் தாங்க நான் போய் அந்த ஃபோட்டோவுக்கு உடனே புது ஃப்ரேம் போட்டுட்டு வந்துடறேன்”
என்றவனை மேலும் கீழுமாகப் பார்த்தாள் ரஞ்சிதா…
தொடரும்…..