அத்தியாயம் 21: சமாளிப்பும்! சஞ்சலமும்!

வாட்ச்மென் உள்ளே போக சொன்னதும் மூன்று நண்பர்களும் கேட்டைத் தாண்டி டாக்டர் வீட்டிற்குள் சென்றனர். அவர்களை வீட்டு வேலை செய்யும் ஒரு வட நாட்டுப் பெண் வரவேற்று ஹாலில் இருந்த சோஃபாவைக் காட்டி அதில் அமரச் சொன்னாள். மூவரும் அமர்ந்துக் கொண்டே ஹாலை சுற்றிப் பார்த்தனர். மங்களம் அக்கா சொன்னது போலவே அங்கிருந்த சுவற்றில் கறுப்பு நிறத்தில் பெரிய ராட்சதப் பட்டாம்புச்சி ஓவியம் மாட்டப் பட்டிருந்தது. அதை மூவரும் பார்த்ததும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கண்ணால் அந்த ஓவியத்தை பார்த்தாயா என்று ஜாடைக்காட்டிக் கொண்டனர். அப்போது மாடிப் படிகளில் இறங்கி வந்துக் கொண்டிருந்த டாக்டரின் தம்பி மனைவி

“ம்…யாரு நீங்க மூணு பேரும்? எதுக்காக டாக்டர் அண்ணாவைப் பார்க்க வந்திருக்கீங்க?”

“நாங்க நாங்க…”

“என்னப்பா இழுக்கறீங்க? மூணு பேருல யாராவது ஒருத்தர் பதில் சொல்லுங்க.”

என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஆறு அடி உயரத்தில் பெரிய மீசையுடன் ஒருவர் வந்து…

“என்ன டியர்? யார் கிட்ட பேசிட்டிருக்க? யார் இந்த மூணு பசங்க?”

“அது தாங்க நானும் கேட்டிட்டிருக்கேன்….ஆனா வாயைத் திறக்க மாட்டிங்கறாங்க…உங்க அண்ணனைப் பார்க்க வந்திருக்காங்க…அது மட்டும் தான் எனக்குத் தெரியும்”

“தம்பிகளா யாருப்பா நீங்க? எதுக்கு எங்க அண்ணனைப் பார்க்கணும்?”

“சார் …அவரு தான் எங்க அம்மாவுக்கு போன வருஷம் ஃப்ரீயா ஆப்பரேஷன் பண்ணி பொழைக்க வச்சிருக்காருன்னு எனக்கு போன நவம்பர் மாசம் லீவுல வந்தப்போ தான் தெரிய வந்தது…அதுதான் அவரைப் பார்த்து நன்றி சொல்லலாமேன்னு ஆஸ்பிட்டலுக்கு போனோம் ….அது மூடி பல மாசமாச்சுன்னு சொன்னாங்க….அதுக்கப்புறம் அவரோட வீட்டு அட்ரெஸை தேடிக் கண்டுப்பிடிச்சு வர்றதுக்கு இவ்வளவு மாசமாகிடுச்சு..”

“ஏன் ஒரு நன்றி சொல்லறதுக்காகவா ஆறு மாசமா அவரத் தேடி அலையறீங்க!!”

“ஆமாம் சார்….அம்மா உயிரைக் காப்பாத்தினவராச்சே சார்….”

“ம்….அவரு எங்கப்பா வெளில வர்றாரு!!”

“ஏன் சார்? அவருக்கு என்ன ஆச்சு?”

“அவரோட வைஃப் காணாம போனதிலிருந்து அவர் யாரையும் பார்க்க விரும்புறதில்லப்பா…பார்த்ததுமில்ல”

“சார் ப்ளீஸ் அவரை ஒரே ஒரு தடவைப் பார்த்துட்டுப் போயிடறேனே”

என்று ராமு ஒருமையில் பேசியதும் ராஜாவும், ராஜேஷும் ராமுவைப் பார்த்தனர். ஆனால் ராமு அவர்களை கண்டுக் கொள்ளவேயில்லை. அவன் டாக்டரைப் பார்ப்பதிலேயே தீவிரமாக இருந்ததைக் கவனித்தனர் இருவரும். அப்போது டாக்டரின் தம்பி…

“ம்….சரிப்பா நான் உங்களுக்காக சொல்லிப் பார்க்கறேன்…அவரு ஒத்துக்கிட்டா வருவாரு இல்லாட்டி நீங்க கிளம்பிடணும். சரியா”

“எப்படியாவது ஒத்துக்க வையுங்களேன்”

“ம்….ம்….என்ன நீ மட்டும் அவரைப் பார்க்கறதுல ரொம்ப ஆர்வமா இருக்க தம்பி?”

“அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல சார் அவன் கொஞ்சம் எமோஷனல் டைப் அதுதான்”

என்று சொல்லி சமாளித்தான் ராஜா.

“ம்….சரி சரி இருங்க நான் போய் சொல்லிப் பார்க்கறேன்”

என்று ஏதோ குழப்பத்தில் வலதுபுறம் திரும்பியவரிடம் சட்டென ராமு

“எங்கே வலதுபுறம் போறீங்க இடதுபுறமா போய் அவரை சீக்கிரம் கூட்டிட்டு வாங்க”

என்றதும் டாக்டரின் தம்பி வெடுக்கென மூவர்ப் பக்கம் திரும்பி…

“ஏய் யாருடா நீங்க மூணு பேரும்? எங்க அண்ணன் ரூம் இடதுபுறமிருக்குன்னு உங்களுக்கு அதிலும் குறிப்பா இவனுக்கு எப்படி டா தெரிஞ்சுது?”

“ம்…ஆங்….”

“என்னடா மழுப்புறீங்க….சொல்லுங்கடா”

“இல்ல சார் அவன் வாஸ்துப் படிப்பில் பட்டம் பெற்றவன். அதுதான் வாஸ்துப் படி டாக்டர்களின் அறை வீட்டின் இடதுபுறமாகத் தான் இருக்கும்னு தெரிஞ்சு சொல்லறான்.”

“ஆமாம் ராஜா யூ ஆர் கரெக்ட்…ஆமாம் சார் ….எங்க ராமு வாஸ்துப் படிப்புல கோல்டு மெடலிஸ்ட் சார். ஒண்ணு கவனீச்சீங்களா சார்…அவன் சொன்னது போலவே டாக்டர் ரூமும் இடதுபுறமா தான் இருக்கு….அப்படீன்னா டாக்டருக்கும் வாஸ்து மேல நம்பிக்கையிருக்கு அது தான் அவர் கரெக்ட்டா கட்டியிருக்கார்.”

“ம்…ஆமாம் ஆமாம்…அண்ணன் அதெல்லாம் பார்ப்பார் தான்….அது உண்மை தான். சரி அவன் தான் அந்த படிப்பு படிச்சிருக்கான்…ஆனா நீங்க ரெண்டு பேரும் படிச்சா மாதிரி பேசுறீங்க!! அது எப்படி?”

“ம்….சொல்லு ராஜா நீ சொல்லுறியா இல்ல நானே சொல்லட்டுமா…சார் கேட்கறாரு இல்ல!!”

“ம்…சரி சரி நானே சொல்லறேன். சார் அவன் படிக்கறதோட நிப்பாட்டிருந்தா எங்களுக்குத் தெரிஞ்சிருக்காது தான்…ஆனா அவன் படிச்சதனைத்தையும் வீட்டுக்கு வந்ததும் எங்களோட ஷேர் பண்ணிப்பான் அப்படி தெரிஞ்சுகிட்டது தான் சார் இதெல்லாம்….எல்லாம் கேள்விஞானம் சார்.”

“ஓ!!! அப்படியா…சரி…இருங்க நான் போய் அண்ணனைக் கூட்டிட்டு வர்றேன்”

“ஓகே சார் !! ஓகே சார்!!!”

என்று அவர் அங்கிருந்து போனதும் ராஜாவும் ராஜேஷும் ராமுவை பார்த்து முறைத்தனர்… ஆனால் ராமு அதை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாததுப் போல அமர்ந்திருந்தான். அது ராஜாவுக்கும் ராஜேஷுக்கும் வித்தியாசமாக பட்டது….ராஜேஷ் ராஜாவிடம்

“ராஜா…எப்பவுமே எல்லா இடத்துலேயும் நாம சொதப்புவோம் அவன் தான் சமாளிப்பான்….ஆனா இன்னைக்கு என்ன அவன் சொதப்பறான் நாம சமாளிக்க வேண்டியிருக்கு?”

“எனக்கும் அதுதான் ஆச்சர்யமா இருக்கு ராஜேஷ்…ஒண்ணும் புரியலை…..அவர்கிட்ட இடதுபுறம் போகணும்னு இவன் சொன்னதும் எனக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்டுச்சு பாரு…!!!!”

“அதை விட அவரு சட்டுன்னு சினிமா வில்லன் மாதிரி திரும்பி நம்மளை பார்த்து முறைச்சுக்கிட்டே வந்ததும்…இன்னைக்கு அவ்வளவு தான்….எல்லாம் முடிஞ்சிடிச்சு…..நாம மூணு பேரையும் சாவடிச்சு இந்த வீட்டுக்குள்ளயே பொதச்சிடுவாங்கன்னு தான் நினைச்சேன்….ஏன்னா மங்களம் அக்கா தான் சொன்னாங்களே இந்த வீட்டுக்குள்ள எல்லாமே இருக்குன்னு…அப்போ மார்ச்சுவரியும் இருக்குமோன்னு அப்பத் தான் நினைச்சேன் ராஜா…”

“ம்….ம்……வர்றாரு வர்றாரு பாரு”

“என்ன ராஜா அவரு மட்டும் தான் வ்ரறாரு டாக்டரைக் காணமே”

“உஷ்….பேசாம இரு”

டாக்டரின் தம்பி ஹாலுக்கு வந்ததும்…அதுவரை ராஜாவும் ராஜேஷும் பேசிக்கொண்டிருந்தபோது கண்டுக் கொள்ளாது அமர்ந்திருந்த ராமு சட்டென எழுந்து…

“அவர் எங்கே?”

“அவருக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை அதுனால படுத்திருக்கார். நீங்க போயிட்டு இன்னொரு நாள் வாங்க தம்பி”

“இன்னொரு நாள் எல்லாம் வரமுடியாதுங்க. இப்பவே அவரைப் பார்க்கணும். அவருகிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”

என்று முன்னே போக முயன்ற ராமுவை பிடித்து நிறுத்திய டாக்டரின் தம்பி….

“என்ன தம்பி நானும் வந்ததுலேந்து பார்க்கறேன் நீ ஒரு டைப்பா நடந்துக்கற!!!!என்ன முக்கியமான விஷயம்? நன்றி தானே !!! அதை ஒரு பேப்பர்ல எழுதி தாங்க நான் கொண்டு போய் குடுக்கறேன்”

“இல்ல இல்ல நேரம் ரொம்ப கம்மியா இருக்கு…இப்பவே அவரைப் பார்த்தாகணும்.”

என்று கிளம்பியவனை ராஜாவும் ராஜேஷுமாக பிடித்துக் கொண்டு ராஜா ராமுவிடம்

“ராமு ….அவருதான் சொல்லறாருல்ல …வாடா இன்னொரு நாள் வந்து பார்த்துக்கலாம்”

என்றதும் ராமு அதை மறுக்க…ஹாலில் சப்தம் அதிகமானது….அது டாக்டர் ரூம் வரை செல்ல …டாக்டரே எழுந்து ஹாலுக்கு வந்து

“என்ன ஒரே கூச்சலும் சத்தமுமா இருக்கு?”

“அண்ணே அதெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணே…நீங்க போய் ரெஸ்ட் எடுங்க போங்க”

“உங்களைப் பார்க்கத் தான் வந்திருக்கேன்”

என்ற ராமுவை அனைவரும் உற்றுப் பார்த்தனர்…உடனே அதை கவனித்த ராமு

“வந்திருக்கோம்னு சொன்னேன்”

“ம்…ம்…சரி சரி இதோ வர்றேன்”

என்று கூறிக்கொண்டே கீழே ஹாலுக்கு வந்தார். அப்போது அவரின் தம்பி…

“சரி அண்ணே நீங்க பேசிட்டு இவங்களை அனுப்பிடுங்க. எனக்கு கட்சி ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான வேலையிருக்கு அதை முடிச்சிட்டு வந்திடறேன்…வரேன் அண்ணே”

“டேய் போய் உன் பொண்டாட்டி கிட்ட சொல்லிக்கிட்டு கிளம்பு….எனக்கு தான் இல்ல …உனக்கிருக்கா ல போய் அவகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அப்புறமா எங்க வேணும்னாலும் போயிட்டு வா”

“ம்…சரி அண்ணே. அவகிட்ட சொல்லிட்டு அப்படியே கிளம்பறேன். டேய் பசங்களா சீக்கிரமா சொல்ல வேண்டிய நன்றியை சொல்லிட்டு கிளம்புங்க…”

“சரி சார்.”

என்று கூறினர் ராஜாவும் ராஜேஷும். ராமு ஏதும் பேசாமல் டாக்டரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அதை கவனித்த டாக்டருக்குள் ஏதோ செய்தது…உடனே தன் கவனத்தை ராமு மீதிருந்து ராஜா ராஜேஷ் பக்கம் திருப்பி

“என்னப்பா என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கீங்க?”

உடனே ராஜேஷ் முந்திக் கொண்டு

“சார் நீங்க தான் எங்க அம்மாவுக்கு போன வருஷம் இலவசமா ஒரு ஆப்பரேஷன் செஞ்சு எங்க அம்மா உயிர காப்பாத்தினீங்க. அதுக்கு நன்றி சொல்லத் தான் வந்திருக்கோம்”

“என்னது? ஆப்பரேஷனா? நானா?”

தொடரும்…..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s