“ஆமாம் ராமு சொல்லு”
“இருங்கப்பா….இருங்க….அந்த லைன்ல “சேர்த்திட நினைக்குது மதி”ன்னு எழுதினதுக்கு பதிலா “சேர்ந்திட நினைக்குது மதி”ன்னு எழுதிருந்தா அர்த்தம் வேற ஆகியிருக்கும் இல்ல….இப்போ இருக்குற லைன் படிப் பார்த்தா எதையோ யார்கிட்டயோ சேர்க்கறதுக்கு துடிக்கறான்னு அர்த்தம் வருது அதே நான் சொன்னா மாதிரி எழுதியிருந்தா அவ யார் கூடயோ சேர துடிக்கறதா இல்ல.. அர்த்தம் வரும்….இப்போ புரியுதா….மை ஃப்ரெண்ட்ஸ்”
“ஓ!!! ஆமாம் ஆமாம்….புரியுது புரியுது….இப்போ புரியுது ராமு..”
“ஆமாம் ராமு புரியுது. ஆனா ஆவ எதை சேர்க்கத் துடிக்கறா? அப்படீன்னா அவ உயிரோட இல்லையா?”
“அதுக்கு என்னால ஊர்ஜிதமா பதில் சொல்ல முடியாது. சரி அடுத்து என்ன பண்ணலாம்? இதைப் படிச்சதோட அப்படியே விட்டுடலாமா இல்ல இந்த புக்கு சொன்ன அல்லது காட்டின இடத்துக்கு நேராப் போய் என்ன ஏதுன்னு ஒரு தடவை பார்த்துட்டு வருவோமா?”
“அப்படியே எப்படி விடறது ராமு!!! அந்த பொண்ணுக்கு என்ன நடந்திருந்தாலும் அதுக்கு நாமும் ஒரு காரணம் தானே!!”
“ராஜா நீ சொல்லுறது ஹன்ட்ரட் பர்சன்ட் கரெக்ட்……அதுவுமில்லாம அவ நம்மை நம்பி தானே இந்த புத்தகம் மூலமா தொடர்புக் கொண்டிருக்கா….அப்போ நம்ம உதவுவோம்ங்கற அவளோட நம்பிக்கையை நாம் வீணாக்காமல் இருக்கணும் இல்லையா!!! என்ன ராமு நானும் ராஜாவும் சொல்லறது சரி தானே!!”
“ம்…சரி தான்….அதுக்கு முன்னாடி அந்த பொண்ணு தானா இந்த மங்களம் அக்கா சொன்ன பொண்ணுன்னு எப்படி கன்ஃபார்ம் பண்ணறதுனு யோசிச்சிக்கிட்டிருக்கேன்”
“ம்….அதுவும் கரெக்ட் தான் ராமு. ம்….எனக்கு ஒரு யோசனை…அது சரி வருமான்னு நீங்க சொல்லுங்க”
“என்னது ராஜா? சொல்லு இப்போ நாம அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணணும்னு முடிவெடுத்துட்டதால எல்லா வழிகளையும் யோசிச்சு, டிஸ்க்கஸ் பண்ணதான் வேணும்…உங்களுக்கு தோணுற சின்ன ஐடியாவா இருந்தா கூட சொல்ல தயங்க வேண்டாம்..ம்…சொல்லு ராஜா.”
“பேசாம மங்களம் அக்காவ விட்டுட்டு நாம நேரா அந்த பொண்ணு வீட்டுக்கே போனா என்ன? அது தான் இப்போ அவங்க வீடு நமக்கு தெரியுமே!!”
“மொதல்ல அது அந்த பொண்ணு தானானே நமக்கு தெரியாது அதுக்குள்ள அந்த பொண்ணோட வீடு தெரியும்ன்னு சொல்லறது சரியில்லை ராஜா…நம்மளைப் பொறுத்தவரை மங்களம் அக்கா சொன்ன அந்த காணாம போன டீச்சரோட வீடு தான் நமக்குத் தெரியும் புரியுதா!!”
“ஓகே!! ஓகே!! ராமு டன்.”
“சரி ராஜா… அவங்க வீட்டுக்குப் போய் என்ன பண்ணப்போறோம்?”
“அது தானே!! ராஜேஷ் கேட்கிறா மாதிரி அங்க போய் என்ன பண்ணப்போறோம்? நம்ம புக்குல இருக்குற அந்த பொண்ணுப் படத்தைக் காட்டி அந்த டாக்டர்ட்ட கேட்கலாம்ன்னா ….இந்த புக்குல இருக்குறதெல்லாம் நம்ம கண்களுக்கு மட்டும் தான் தெரியுது…ஸோ அப்படியும் கேட்டு தெரிஞ்சுக்க முடியாதே!!!”
“புத்தகத்தை எல்லாம் காட்ட வேண்டாம் ராமு…..நமக்கு அந்த பெண்ணினுடைய முகம் தெரியும்…அவ கண்ணு எப்படி இருக்கும்னும் தெரியும் …ஸோ அவங்க வீட்டுக்குப் போனா.. அங்கே அந்த காணாம போன டீச்சரோட ஃபோட்டோ ஏதாவது அவங்க வீட்டுல வச்சிருப்பாங்க இல்ல…அதை பார்த்து நாம கன்ஃபார்ம் பண்ணிக்கலாமே!! என்ன சொல்லுறீங்க?”
“ம்….இது நல்ல யோசனையா இருக்கு ராஜா. எதுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு கிளம்புங்க நாம போயிட்டு வந்துடலாம்.”
“ஓகே!!! சரி இந்த புத்தகத்தை என்ன பண்ணறது”
“ராஜேஷ் நீ அந்த புக்கை மூடி வைக்கலாம்”
“ஆமாம் ராஜேஷ் ராஜா சொல்லுறது போல மூடி வச்சுட்டே வா”
“ஆனா….மறுபடியும் எப்படித் திறக்கறது? யாரு திறக்கறது?”
“அந்த கவலையே வேண்டாம் ராஜேஷ். நீயா மூடி வைக்கலாம் ஆனா அதுவா கீழே விழுந்து தானா மூடக்கூடாது அவ்வளவு தான்….ஸோ நீ மூடி வச்சுட்டு வா”
“அட பாவிகளா!!! ரெண்டு நாளா என்னை இந்த புக்கை மூடாதே…மூடிடாதேன்னு எல்லாம் சொல்லி சொல்லி என் கனவுல கூட புக்கை மூடக்கூடாதுனு வர ஆரம்பிச்சிடுச்சு தெரியுமா!!! நேத்து நைட்டு கூட என் சிஸ்டர் அவளோட பாட புஸ்தகத்தை மூடி வச்சப்போ நான் போய் திறந்து வச்சேன்….அதைப் பார்த்த அவ என்னை ஏற இறங்க ஒரு மாதிரி பார்த்தா பாரு!!!!”
“இல்ல ராஜேஷ் முதல்ல எங்களுக்கும் இது தெரியாது. இப்ப கொஞ்சம் முன்னாடி நாம அந்த கடைசி பக்கத்தை படிச்சு முடிச்சதும் நீ உன்னை அறியாம புத்தகத்தை மூடிட்ட…அப்போ நானும் ராஜாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கிட்டோம்…. அது தான் கதை முழுசும் தெரிஞ்சிடுச்சே விடுன்னு ராஜா சொன்னான். ஆனா அந்த குழந்தைப் படத்தைப் பார்க்கலாம்னு நாம பேசிக்கிட்டப்போ நீ மறுபடியும் உனக்கே தெரியாம… நீ மூடி வைத்த புத்தகத்தை திறந்த …..அப்ப தான் எங்களுக்கும் அந்த விஷயமே தெரிஞ்சுது.”
“ஓ!!!! அப்படீன்னா சரி.”
“ஏன் நாம இன்னும் லேட் பண்ணணும் வாங்க அந்த டீச்சர் வீட்டுக்கு உடனே போயிட்டு வந்திடலாம்”
என்று மூவரும் கிளம்பி கீழே சென்றனர். கீழே வீட்டின் தரையை துடைத்துக் கொண்டிருந்த மங்களத்திடம் ராஜா…
“அக்கா நாங்க கொஞ்சம் வெளிய போயிட்டு வந்திடறோம்.”
“தம்பி மத்தியம் சாப்பிடறதுக்கு உங்க நண்பர்களும் இருப்பாங்களா? ஏன் கேட்குறேன்னா…சாதம் அதுக்கு தகுந்தா மாதிரி வைக்கணும் அதுக்குத் தான்”
“ஆங் வச்சிடுங்க அக்கா. அவங்க இன்னைக்கும் என் கூட தான் சாப்பிடப் போறாங்க…சரி வாங்கடா போயிட்டு வருவோம்”
“ஆங்….ராஜா ஒரு நிமிஷம் இரு….அக்கா உங்க கிட்ட ஒண்ணு கேட்கணுமே”
“என்ன ராஜேஷ் தம்பி? கேளுங்க தெரிஞ்சா சொல்லுறேன்”
“நீங்க சொன்ன அந்த மூனாவது தெருவுல இருந்த… காணாம போன டீச்சர் அம்மா கையில கறுப்பு நிற பட்டாம்பூச்சி மச்சமோ இல்ல டாட்டூவோ இருந்துச்சா அக்கா?”
“அதெல்லாம் நான் கவனிச்சதில்ல தம்பி…….அதுவுமில்லாம மனுஷாளுக்கு பட்டாம்பூச்சி மாதிரி எல்லாமா மச்சம் இருக்கும்!!!!”
“சரி அக்கா நாங்க போயிட்டு வர்றோம்”
“ஆங் ….தம்பி ….ராஜேஷ் தம்பி….ஒரு விஷயம் ஞாபகம் வருது….ஆனா நீங்க கேட்டதுக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல தான்….”
“பரவாயில்லை அக்கா என்ன சொல்ல வந்தீங்களோ அதை சொல்லுங்க”
“அந்த பொண்ணு எப்பவுமே கறுப்பு நிற பட்டாம்பூசியை வரைஞ்சுக்கிட்டே இருக்கும்….நான் கூட ஒரு தடவை அவங்க கிட்ட கேட்டேன்…ஏன்ம்மா பட்டம்பூச்சியை பல நிறங்கள்ல வரையாம இப்படி கறுப்புக் கலர்லேயே வரையறேங்களேன்னு…. அது தான் அவங்களுக்கு பிடிச்ச பட்டாம்பூச்சின்னு சொல்லிச்சு அந்த புள்ள…அவங்க வீட்டு ஹால்ல கூட அந்த அம்மா வரைஞ்ச கறுப்பு நிற பட்டாம் பூச்சி படம் பெரிசா மாட்டியிருப்பாங்க”
“ஓ!!! அப்படியா!!! சரிக்கா…எங்களுக்கு நேரமாச்சு…நாங்க போயிட்டு வர்றோம்”
“சரி தம்பிகளா.”
என்று அங்கிருந்து கிளம்பிய நண்பர்கள் டீச்சர் வீட்டுக்கு போகும் வழியில் பேசிக்கொண்டே சென்றனர். அப்போது ராஜேஷ்
“டேய் ராமு அன்ட் ராஜா….மங்களம் அக்கா இன்னைக்கு சொன்னதை வச்சுப் பார்த்தா நாம தேடுற பொண்ணும் தொலைஞ்சுப் போனதா இவங்க எல்லாரும் சொல்லுற பொண்ணும் ஒண்ணு தான்னு எனக்குத் தோணுது.”
“எனக்கும் இப்போ மங்களம் அக்கா சொல்லுற வரை அப்படி இருக்கல ஆனா அக்கா சொன்னதைக் கேட்டதும் அப்படித் தான் தோணுது”
“டேய் ராஜா அன்ட் ராஜேஷ்…எப்ப நாம எதையாவது ஆராய ஆரம்பிக்கறோமோ அப்பன்னு பார்த்து அந்த அக்கா எதையாவது சொல்லிடறாங்க…நீங்களும் அதையே மனசுல பதிவு பண்ணிக்கிறீங்க…அப்புறம் நீங்களும் குழம்பி என்னையும் குழப்பறீங்க!!!”
“இல்ல ராமு இந்த தடவை எனக்கென்னவோ மனசு ரொம்ப தெளிவா தான் இருக்கு. அந்த பொண்ணு தான் இந்த பொண்ணா இருக்கும்னும் என் மனசு சொல்லுது டா”
“சரி சரி….எதுக்கு நாமளே விவாதிச்சுக் கிட்டு இதோ வீடு வந்திடுச்சு…வாங்க உள்ள போய் நாமளே பார்த்தும் ..கேட்டும்..தெரிஞ்சுக்குவோம். அப்புறமா ஒரு முடிவுக்கு வருவோம்”
“அண்ணே வணக்கம்…நாங்க டாக்டர் சாரைப் பார்க்கணும். அவர் வீட்டுல இருக்காறா?”
“ம்…இருகாரு தம்பிங்களா. எதுக்கா அவரைப் பார்க்க வந்திருக்கீங்க?”
என்று வீட்டின் காவலர் கேட்டதும் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“தம்பிகளா…நான் கேட்டது உங்களுக்கு கேட்கலையா என்ன…மாத்தி மாத்தி உங்களை பார்த்துக்கறீங்க…பதில் சொல்லுங்கப்பா”
“டீச்சரைப் பத்தி….”
“டேய் ராஜா என்ன உளர்ற!!! இல்ல அண்ணே …அவர் தான் எங்க அம்மாவைக் காப்பத்தி தந்தவரு…அதுவும் இலவசமா வைத்தியம் பார்த்திருக்காரு….அப்போ நான் வெளியூர்ல இருந்தேன்….அதுனால உடனே வர முடியலை….போன வருஷம் நவம்பர் மாசம் தான் எனக்கு லீவு குடுத்தாங்க அப்போ தான் ஊருக்கு வந்தேன்…. அப்படியே இங்கேயே செட்டில் ஆகிட்டேன்….அதுதான்….அதுக்கு நன்றி சொல்லலாம்னு அவரு ஆஸ்பிட்டலுக்கு தினமும் போய் பார்த்தேன் ….ஆனா ஆஸ்பிட்டல் ஒரு வருஷமா மூடியே கிடக்குது….அதுதான் அவரோட வீட்டைத் தேடிட்டிருந்தேன்…நேத்து தான் டாக்டரோட வீட்டு அட்ரெஸ் எங்களுக்கு கிடைச்சுது…அதுதான் நேர்ல பார்த்து நன்றி சொல்லிட்டுப் போகலாமேன்னு வந்திருக்கோம். அவரு மட்டுமில்லைன்னா எங்க அம்மா இப்போ எங்க கூட இருந்திருக்க மாட்டாங்க அண்ணே.”
“அதெல்லாம் சரி தான்…ஆனா…அவரு இப்பெல்லாம் யாரையுமே பார்க்க விரும்புறதில்லையேப்பா….”
என்று காவலர் பேசிக்கொண்டிருக்கும் போது டாக்டர் வீட்டு மாடி பால்கனியிலிருந்து டாக்டரின் தம்பி மனைவி
“வாட்ச்மென் யாரு அங்கே?”
“அம்மா….இந்த மூணு தம்பிங்களும் நம்ம டாக்டர் ஐயாவைப் பார்க்க வந்திருக்காங்கம்மா”
“அப்படியா சரி சரி அவங்க மூணு பேரையும் உள்ள வரச்சொல்லு”
“சரிங்கம்மா ….தம்பிங்களா அந்த அம்மா யாரையுமே உள்ள விடமாட்டாங்க….மீறி யாரையாவது நான் விட்டேன்னா… என்னைய உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க….ஆனா உங்க நல்ல நேரம் போல ……உங்களை அவங்களே கூப்பிடறாங்க….ம்….உள்ளே போங்கப்பா”
தொடரும்…..