மங்களத்திற்கு தெரியாத அந்த பெண்ணின் ஓவியம் மூன்று நண்பர்கள் பார்த்தப் போது அவர்கள் கண்களுக்கு தெரிந்தது. அந்த ஓவியத்தைக் காட்டி ஓர் முடிவுக்கு வந்துவிடலாம் என்று நினைத்திருந்த நண்பர்கள் மீண்டும் ஆரம்ப இடத்திற்கே வந்து நின்றனர். மங்களத்திற்கு தெரியவில்லை என்பதை அறிந்ததும் ராஜா…
“அக்கா சும்மா உங்களை டெஸ்ட் பண்ணினோம். அவ்வளவு தான்….நீங்க போய் உங்க வேலையைப் பாருங்கக்கா”
உடனே ராமு குறுக்கிட்டு மங்களத்திடம்
“அக்கா நேத்து ஒரு டீச்சர் பொண்ண பத்தி எங்க கிட்ட சொன்னீங்க இல்ல…”
“ஆமாம் ராமு தம்பி. அவங்களுக்கென்ன?”
“இல்லக்கா…அவங்க வீடு எங்கே இருக்கு?”
“இதோ அந்த மூணாவது தெருவுல பெரிய வீடு அவங்க வீடு தான் தம்பி…”
“எது எல்லாரும் அரண்மனை வீடுன்னு சொல்லுவாங்களே அந்த வீடா?”
“ஆமாம் தம்பி பெரிய க்ரே கலர் கேட்டு போட்டிருக்குமே….அந்த வீடே தான்”
“ஆனா நான் அந்த வீட்டுலேந்து யாருமே வெளியில வர்றதோ இல்ல உள்ளே போறதோ பார்த்ததே இல்லையேக்கா!!!”
“ம்…நீங்க எல்லாரும் காலையில எழுந்திரிக்கறதுக்கு முன்னாடியே அந்த அம்மா வேலைக்கும், ஐய்யா தன்னோட ஆஸ்பத்திரிக்கும் போயிடுவாங்க…..சாயந்தரம் அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டாங்கன்னா அப்புறம் வெளியே எங்கேயும் போக மாட்டாங்க. ஏன்னா சினிமா தியேட்டர்லேந்து, நீச்சல் குளம், ஜிம்மு, விளையாட்டு அறைன்னு எல்லாமே வீட்டுக்குள்ளேயே இருக்கு. அந்த அம்மா மட்டும் சனிக்கிழமை விடியற் காலையில வெளில போகும் ஆனா எப்போ வரும்ன்னு எனக்கு தெரியாது. நான் திங்கட் கிழமை சாயந்தரம் வேலைக்கு போனா வீட்டுல இருக்கும்”
“அப்படின்னா நீங்க அவங்களை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை சாயந்தரங்கள்ல அவங்க வீட்டுக்கு வேலைக்குப் போனபோது பார்த்ததே இல்லையா?”
“இல்ல தம்பி அவங்க வீட்டுக்கு சனி ஞாயிறு வேலை செய்ய போக மாட்டேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் குடுப்பாங்க அந்த அம்மா….இதோ இந்த ராஜா அம்மா மாதிரி வாரம் முழுக்க வந்தாகணும்னு சொல்லாது அந்த பொண்ணு”
“ஓ!!! அப்படியா அக்கா…இருங்க இருங்க எங்க அம்மா வரட்டும் நான் சொல்லறேன்”
“ஐய்யோ தம்பி ஏதோ விளையாட்டா சொன்னேன்…”
“அக்கா ராஜா அம்மா உங்களை வாரம் முழுக்க வரச்சொன்னாலும் உங்களை வேலையில வச்சிருக்காங்க இல்ல…ஆனா வாரத்துல ரெண்டு நாள் லீவு குடுத்தவங்க உங்களை பாதிலேயே துரத்தி விட்டுட்டாங்க தானே!!!!”
“அட ஆமாம் ராமு தம்பி….அது என்னவோ உண்மை தான்….அதுவுமில்லாம ராஜா தம்பி அம்மா தான் என் ரெண்டு புள்ளைங்கள படிக்க வைக்குது தம்பி….”
“ஆங்!!! இவ்வளவு செய்றவங்களை சட்டுன்னு அப்படி சொல்லலாமாக்கா!!”
“அதுதானே!!! ராமு கேட்கறதுக்கு பதில் சொல்லுங்கக்கா”
“மன்னிச்சுக்கோங்க ராஜா தம்பி….ஏதோ புத்திக் கெட்டுப் போய் பேசிப்புட்டேன்…அம்மாகிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்கறேன்”
“சரி சரி ராமு ராஜேஷ் வாங்க நாம என் ரூமுக்கு போகலாம்.”
என்று ராஜா கூறியதும் மூவருமாக ராஜாவின் ரூமுக்குள் சென்றனர். ராமு ராஜேஷிடம்
“டேய் ராஜேஷ் மொதல்ல அந்த புக்கை ஃபுல்லா பார்த்திடுவோம் அப்புறமா என்ன பண்ணலாம்னு யோசிப்போம்….என்ன சொல்லுறீங்க ரெண்டு பேரும்”
“எஸ் ராஜா நீ சொல்லுறது தான் சரி…ராஜேஷ் வா வந்து உட்கார்ந்து புத்தகத்தைத் திற”
என்று ராமுவும் ராஜாவும் சொன்னதும் ராஜேஷ் புத்தகத்தைத் திறந்தான். அவர்கள் அதுவரை திறந்திடாத…பார்த்திடாத பக்கத்துக்குச் சென்றனர். அதில் ஒரே ஒரு இதயம் வரையப்பட்டிருந்தது. மூவரும் சற்று நேரம் பார்த்ததுமே அது படபடவென துடிக்க ஆரம்பித்தது. அதைப் பார்த்த ராஜேஷ்…
“டேய் என்னடா இது ஒரே ஒரு இதயம் இப்படி வேகவேகமா துடிக்குது!!! இது யாரோடது? அந்த பொண்ணோட இதயமா? இல்லை அந்த அழுத குழந்தையோட இதயமா?”
“ஏய் ராஜா அன்ட் ராஜேஷ் ஒண்ணு கவனிச்சீங்களா!!!”
“என்ன ராமு?”
“ராமு என்னன்னு சொல்லுடா…ஃபாஸ் விட்டு எல்லாம் பேசாதே டா…”
“இல்ல மொதல்ல ஒரு பட்டாம்பூச்சிக்குள்ள ரெண்டு இதயங்கள் துடிக்கறா மாதிரி இருந்துச்சு….அடுத்தது குழந்தையை காட்டிச்சு….அதுக்கப்புறமா அந்த பொண்ண காட்டிச்சு ….இப்போ ஒரே ஒரு இதயம் துடிக்கறதைக் காட்டுது….”
“அதுக்கு என்ன?”
“இரு ராஜேஷ் ராமுவை சொல்லி முடிக்க விடு டா…நீ சொல்லு ராமு”
“அப்படிப் பார்த்தா …இந்த புக்கு என்ன சொல்ல வருதுன்னா இரண்டு உயிர்கள்ல ஏதோ ஒண்ணு மட்டும் உயிரோட இருக்குதுன்னு நமக்கு சொல்ல வருது”
“அப்படீன்னா அந்த பொண்ணு இல்லாட்டி அந்த குழந்தை இதுல யாரு உயிரோட இக்காங்க.. யாரு உயிரோட இல்லை? ஏன்னா இந்த புத்தகம் நமக்கு இவங்க ரெண்டு பேரைத் தான் காட்டிச்சு”
“அது தான் தெரியலை ராஜா!! யாரோ ஒரு உயிர் இறந்திடுச்சுன்னு நினைக்கிறேன்”
“சரி ராஜேஷ் நீ அடுத்தப் பக்கத்துக்குப் போ…ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு பார்ப்போம்”
“ஓகே ராஜா….”
என்று கூறிக்கொண்டே அடுத்தப் பக்கத்துக்குச் சென்றான் ராஜேஷ். அதில் மெல்ல ஒவ்வொரு வரியாக எழுதிக் காண்பிக்கப்பட்டது. அதை மூவருமாக ஒரு சேர வாசித்தனர்.
“என்னைப் பிரித்தது விதி
சேர்த்திட நினைக்குது மதி
காலமும் நேரமும் நன்றாக இல்லாததால் இந்த கதி
உங்களிடம் கொண்டு வந்து சேர்த்தது விதி
வென்றிட வேண்டுமென துடிக்குது மதி
விதியிலிருந்து விடுப்பட்டு தாருங்கள் நிம்மதி… நிம்மதி …நிம்மதி…
உங்களோடு நான் பயணித்த இந்த பயணம் முடிவுற்றது.
இப்படிக்கு
சாண்டி”
என்று எல்லா எழுத்துக்களும் சற்று நேரம் பளிச்சிட்டது. பின் சாதாரண எழுத்துக்களாக மாறியது. அதனைக் கண்ட ராஜேஷ்….
“ஏய் ராமு நீ….நம்பிக்கையில்லன்னு சொன்னீயே இப்ப என்ன சொல்லுற? இது அந்த பொண்ணோட பேயே தான் டா. நம்மகிட்ட அவளை கண்டு பிடிச்சு யார் கூடயோ சேர்த்து விடச் சொல்லுது பாரு!!”
“அப்படியா சொல்லுது ராஜேஷ்?”
“ஏய் ராமு!!! ராஜேஷ் சொன்னதுல என்ன தப்பிருக்குன்னு இப்படி கேட்குற?…அவன் சொன்னது சரி தானே!”
“சரி நீங்க ரெண்டு பேரும் சொன்னதுப்படிப் பார்த்தா அந்த கடைசிப் பக்கத்துல அந்த பொண்ணோட பேய்….நோ….நோ…நோ…இனி அப்படி சொல்ல வேண்டாமே….அந்த பொண்ணோட ஆவி ஏன் “சேர்த்திட நினைக்குது மதின்னு” எழுதிக் காமிச்சுதாம்?”
“டேய் ராமு நீ என்ன டீச்சர் எழுதினதுலேயே மிஸ்டேக் கண்டிப்பிடிக்கறயா!!!!”
“ராஜேஷ் உனக்கு அந்த சென்டன்ஸோட டெப்த் புரியாம பேசுற டா”
“சரிப்பா…எனக்குப் புரியலைன்னே வச்சிப்போம்….அப்படீன்னா வேறென்ன எழுதி காமிச்சிருக்கணும்? நீயே சொல்லு!!”
“அது தானே!! வேற என்னன்னு எழுதிக் காமிச்சிருக்கணும் ராமு?”
தொடரும்…..