“ராஜா லைன்ல இருக்கே ல….ஹலோ”
“ஆங் …இருக்கேன் ராமு இருக்கேன்.”
“அப்போ பதில் சொல்லுடா”
“நான் அந்த பொண்ணத் தானே படமெடுத்தேன்”
“ஆமாம்”
“ஆனா இப்போ என் மொபைல்ல மொதல்லப் பார்த்தோமே அந்த படுத்துகிட்டிருக்குற கைக் குழந்தைப் படம் தான் காமிக்குது.”
“அது எப்படி பொண்ணு ஃபோட்டோ குழந்தைப் ஃபோட்டோவா மாறிச்சு ராஜா”
“அதுதான் எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு ராமு. அதுவுமில்லாம அந்த குழந்தையோட காலுக்கடியில அந்த புக்குல முதல்ல பார்த்தோமே கறுப்பு நிற ராட்சதப் பட்டாம்பூச்சி அதே மாதிரி ஒரு மச்சமிருக்குது டா.”
“பட்டாம்பூச்சி மாதிரி மச்சமா!!!!”
“ஆமாம் ராமு”
“ஏய் ராஜா அப்போ அந்த பொண்ணு கையில நான் பார்த்தது டாட்டூ இல்ல அதுவும் மச்சம் தான்னு நினைக்கிறேன்”
“அப்படீங்கற….அப்போ இதை எப்படி எடுத்துக்கறது? என்னன்னு எடுத்துக்கறது?”
“ராஜா என் அப்பா வந்து பார்த்துட்டு போறாரு…நான் நாளைக்கு காலையில வரேன் அப்போ இதைப் பத்தி பேசிப்போம் சரியா. நீயும் இப்போ போய் தூங்கு. பை. குட் நைட்”
“டேய்….டேய்…டேய்…ச்சே வச்சிட்டான்….இப்போப் பார்த்து தான் அவன் அப்பா வரணுமா!!! இந்த குழந்தைப் ஃபோட்டவ எப்படி மங்களம் அக்கா கிட்ட காமிச்சு அடையாளம் காட்ட சொல்லுறது!!!! ஒரு வேளை இது அந்த பொண்ணு குழந்தையா இருந்த போது எடுத்த படமாயிருக்குமோ!!! ராமு …அந்த பொண்ணு கையில இல்லையா அந்த மச்சம் பார்த்திருக்கான்!!!! ஆனா இந்த படத்துல இருக்குற குழந்தைக்கு காலுக்கு அடியில இல்ல மச்சமிருக்கு!!! ஏய் புத்தகமே உன்னால என்னோட தூக்கம் இன்னைக்கும் போச்சு போ!”
என்று கூறிக்கொண்டே அந்த புத்தகத்தையும், அதிலிருந்ததையும், ராமு சொன்ன விஷயங்களையும், அவன் மொபைளில் படமெடுத்ததையும், அந்த படம் மாறியதையும் எல்லாம் எண்ணிக்கொண்டே…அதைப் பற்றி பலவிதமாக யோசித்துக் கொண்டே படுத்திருந்ததில் ராஜா உறங்கவேயில்லை. காலை ஆறு மணி ஆனது. வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. உடனே ராஜா எழுந்து கதவைத் திறப்பதற்காக கீழே சென்றான். அவனுக்கு முன் அவனது அம்மா கதழைத் திறந்தாள்.
“குட் மார்னிங் அம்மா.”
“வா வா மங்களம் உள்ளே வா.”
என்றதும் மங்களம் வீட்டினுள்ளே வந்தாள். வந்ததும் மாடிப்படியில் நின்றிருந்த ராஜாவைப் பார்த்து
“என்ன ராஜா தம்பி இரண்டு நாளா சக்கிரமா எழுந்துக்கறீங்க….என்ன ஆச்சு?”
“அது தானே நானும் கவனிச்சேன் டா ராஜா. நேத்தும் இன்னைக்கும் என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துகிட்ட…இல்லாட்டி நான் ஆஃபீஸ் போறதுக்கு முன்னாடி எழுப்பினா தான் எழுந்துப்ப அதுவும் சலிச்சுக்கிட்டே…நம்ம மங்களம் கேட்டா மாதிரி உனக்கு என்னடா ஆச்சு?”
“ஒண்ணுமில்லைமா. அக்கா எனக்கொரு காஃபி தாங்களேன்.”
“இதோ அஞ்சே நிமிஷத்துல தர்றேன் தம்பி.”
“டேய் ராஜா என்னப்பா? என்ன ஆச்சு? ஏதாவது ப்ராப்ளமா? எதுவானாலும் அம்மாட்ட சொல்லுப்பா. என்னால ஏதாவது சல்யூஷன் தர முடிஞ்சா சொல்லுவேன்ல”
என்று ராஜாவின் அம்மா சொன்னதும் அவனுக்கு அவன் அம்மாவிடம் நடந்தவற்றை எல்லாம் சொல்ல வேண்டுமென்று மனம் துடித்தது. ஆனால் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. அதையும் மீறி சொல்ல முயன்றபோது மங்களம் காபிக் கொண்டு வந்து கொடுத்ததும் ….அதை வாங்கி குடித்ததில் சொல்ல வந்த விஷயத்தை அவன் குடித்த காபி அவனின் தொண்டையிலிருந்து வயிற்றுக்குள் அடித்துக் கொண்டுச் சென்றுவிட்டது. ஆனாலும் தன் மகன் சொல்லுவான் என்று காத்திருந்தாள் ராஜாவின் தாய். காபியைக் குடித்ததும்
“சரி மா நான் போய் குளிச்சிட்டு வர்றேன்”
“ஓகே ராஜா. உனக்குள்ள ஏதோ இருக்கு ஆனா அதைப் பத்தி இப்ப என்கிட்ட சொல்ல வேண்டாம்னு இருக்க. இட்ஸ் ஓகே ராஜா உனக்கு எப்போ சொல்லணும்னு தோணுதோ அப்ப சொல்லு ஓகேவா…சரி போய் குளிச்சிட்டு வா …இன்னைக்கு ஒண்ணா சேர்ந்து டிபன் சாப்பிடலாம்”
“தாங்ஸ் ஃபார் அண்டர்ஸ்டாண்டிங் மீ மா. லவ் யூ மா”
என்று சொல்லி விட்டு வேகமாக படி ஏறி அவனது ரூமிற்குச் சென்றான். அப்போது மங்களம்… ராஜாவின் அம்மாவிடம்
“அம்மா முந்தானாள் சாயந்தரம் நம்ம தம்பியோட ஃப்ரெண்டு அந்த ராமு பையன் ஒரு புத்தகத்தை எடுத்துகிட்ட நம்ம வீட்டுக்கு வந்ததுலேந்து ராஜா தம்பி வித்யாசமா தான் நடந்துக்குதுமா. நேத்து முழுவதும் ராஜா தம்பியும் அவரோட சினேகிதன்கள் அந்த ராமுவும் ராஜேஷும் அவரு ரூமுக்குள்ளயே தான் இருந்தாங்கமா….மத்தியானம் சாப்பிட மட்டும் தான் கீழே வந்தாங்க…”
“ம்….விடு மங்களம் பசங்கன்னா அப்படி தான் இருப்பாங்க…அந்த ராமு ரொம்ப நல்ல புள்ளதான் மங்களம்”
“அதெல்லாம் சரி தான் மா….ஆனா நேத்து மத்தியானம் அவங்க மூணு பேரும் என் கிட்ட ….பேய் பிசாசு மேல எல்லாம் எனக்கு நம்பிக்கையிருக்கான்னு கேட்டாங்கம்மா…”
“அப்படியா!!! ஏன்னு நீ கேட்டிருக்க வேண்டியது தானே”
“கேட்டேன் மா….அதுக்கு ஏதோ அவங்க கதைக்காக சர்வே எடுக்கறாங்களாம் அதுக்காக கேட்டோம்னு சொன்னாங்க”
“ஆங்…இருக்கலாம் மங்களம்…அந்த ராமு ராஜேஷ் வீட்டுல அந்த பசங்களுக்கு ஆறு மாசம் தான் டைம் குடுத்திருக்காங்களாம் அதுக்குள்ள இந்த பசங்க ஏதாவது படமெடுத்து ஜெயிச்சுக்காட்டணும்னு பாவம் பாடாய் படுறாங்க புள்ளைங்க. சரி அவங்க கேட்டாங்க ஓகே!!! அதுக்கு நீ என்ன பதில் சொன்ன?”
“எனக்கு நம்பிக்கையிருக்குனு சொல்லி நம்ம மூனாவது தெருவுல இருக்காங்களே டாக்டர் குடும்பம்….”
“யார சொல்லுற நீ?”
“அது தாம்மா அந்த அரசியல்வாதி பையன் …டாக்டர்ம்மா…இலவசமா வைத்தியம் பார்ப்பாரே…”
“ஆங்!!! ஆங்…..ஆமாம் ஆமாம் மங்களம்…அவரு வைஃப் கூட காணாம போயிட்டாங்கனு போன வருஷம் ஒரே பரபரப்பா இருந்ததே!!! அந்த பொண்ணு கூட ஏதோ பெரிய இன்டர்நேஷனல் ஸ்கூல்ல டிச்சரா இருந்துச்சு இல்ல”
“ஆமாம் மா அவங்களே தான். அந்த நிகழ்வைப் பத்தி தான் தம்பிங்க கிட்ட சொன்னேன்”
“ஆனா அதுக்கும் பேய் பிசாசுக்கும் என்ன சம்மந்தமிருக்குனு நீ சொல்லருக்க?”
“என்ன மா நீங்க!! இந்த ஏரியாவுல ஒரு வருஷமா இந்த பேச்சு தான் போயிட்டிருக்கு ….உங்களுக்குத் தெரியாதாமா?”
“என்ன அது?”
“அந்த காணாம போன டீச்சர் பொண்ணு தான் ஆவியா அவங்க வீட்டையே சுத்திகிட்டிருக்குதாம்”
“அந்த பொண்ணு காணாம தானே போயிருக்கா….என்ன செத்தா போயிட்டா ஆவியா சுத்தறதுக்கு!!!”
“அது தாமா எங்களோட டவுட்டும்….”
“இதை எல்லாம் ஏன் நீ பசங்க கிட்ட சொல்லி அவங்களை பயமுறுத்திருக்க மங்களம்”
‘அட போங்கமா அவங்கெல்லாம் பயப்பட மாட்டாங்க நீங்க வேற!!! சரி மா வாசலை அலம்பி கோலம் போட்டுட்டேன், இட்டிலி வச்சிருக்கேன் நான் போய் அதை எடுத்துட்டு சட்னி அரைக்கிறேன்.”
“ம்…சரி சரி போய் வேலையைப் பாரு போ. நானும் போய் குளிச்சிட்டு ஆஃபீஸுக்கு கிளம்பறேன். உன் கூட பேசிட்டிருந்ததுல நேரமாகிடுச்சுப் பாரு”
“உங்க கூட பேசிட்டிருந்ததுல எனக்கும் நேரமாகிடுச்சுமா…”
“ம்….சொல்லுவ சொல்லுவ….வர வர…உனக்கு வாய் ஜாஸ்த்தியாயிடுச்சு மங்களம்…”
“அட போங்கமா…உங்களுக்கு உங்த வேலைக்கு நேரமாயிடுச்சுன்னா எனக்கு இது தானே வேலை அதுதான் அப்படி சொன்னேன்!!”
என்று கூறிக்கொண்டே வேலையில் மூழ்கினாள் மங்களம். ராஜாவின் அம்மாவும் குளித்து ஆஃபீஸுக்கு ரெடியாகி வந்தாள். ராஜாவும் குளித்துவிட்டு வந்தான். அம்மாவும் மகனுமாக சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்தனர் அப்போது ராஜா தன் அம்மாவிடம்
“அம்மா… அப்பா எங்க காலையிலேந்து காணமே!!”
“அவருக்கு ஆறு மணிக்கெல்லாம் ஏதோ ஆஸ்திரேலியா கால் இருக்குணு காலங்காத்தாலேயே கிளம்பி ஆஃபீஸுக்கு போயிட்டார் ராஜா.”
“ஓ!!! ஓகே ஓகே! அம்மா இன்னைக்கும் என் ஃப்ரெண்ட்ஸ் ராமு அன்ட் ராஜா நம்ம வீட்டுக்கு வருவாங்கமா. நாங்க மூணு பேருமா ஒரு புக் டிஸ்கஷன்ல இருக்கோம். அதோட தொடர்ச்சி இன்னைக்கும் இருக்குமா.”
“அப்படியா ராஜா. இட்ஸ் ஓகே பா. ஆல் தி பெஸ்ட் கண்ணா. சரி ஆஃபீஸுக்கு லேட் ஆகிடுச்சு நான் கிளம்பறேன்…பை.. பை…டேக் கேர் ராஜா”
“ஓகே மா. பை.”
தன் அம்மா ஆஃபீஸ் சென்றதும் ராஜா வீட்டுக் கடிகாரம் ஓன்பது தடவை மணி அடித்து …மணி ஒன்பதென்பதை பறைசாற்றியது. கடிகார சப்தம் நின்றதும் அவன் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. ராஜா ஓடிச் சென்று கதவைத் திறந்தான். ராமுவும் ராஜேஷும் நின்றிருந்தனர். அவர்களிடம்
“ஹேய் ராமு அன்ட் ராஜேஷ் வாங்கடா வாங்க. நான் உங்க ரெண்டு பேருக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன்…வாங்க என் ரூமுக்கு போகலாம்…..அக்கா மங்களம் அக்கா நாங்க எங்க ரூமுக்கு போறோம்”
“ஆங் …சரி தம்பி”
“ஏய் ராஜா நம்ம ராமு உன் மொபைல் படம் பத்தின கதையை வரும் வழியில சொன்னான். எங்கே உன் மொபைல் ல இருக்குற அந்த குழந்தைப் படத்தைக் காமி”
“இதோ பாருங்க…”
என்று ராஜா எடுத்துக் காண்பித்ததும் ராஜேஷ்
“அட ஆமா…இந்த பாப்பா ஃபோட்டோ தான் முன்னாடிப் பக்கத்துல இருந்துச்சு இல்ல…”
“ராஜேஷ் அது நம்ம ராஜா திருப்பின பக்கத்துல தான் இருந்தது. இதோட அழுகை சத்தம் கீழே வரைக்கும் போய் மங்களம் அக்கா என்ன ஏதுனு கேட்டுக்கிட்டு மேலயே வந்துட்டாங்க…அப்புறமா டிவி பார்த்துட்டிருந்தோம் அது இதுனு சொல்லி நாங்க சமாளிக்க வேண்டியதாகிடுச்சு….அப்படி சத்தமா அழுதது இந்த பாப்பா”
“சரி சரி நாம இன்னைக்கு ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணக் கூடாது. வாங்க அந்த புக்கைத் திறந்துப் பார்ப்போம்.”
“ஏய் எனக்கொரு ஐடியா இப்போதான் ராஜேஷ் இங்கே இருக்கானே அவனை வச்சு அந்த புக்குல… அந்த பொண்ணு இருக்குற பக்கத்தையே மங்களம் அக்காகிட்ட காட்டி அடையாளம் காட்ட சொன்னா என்ன?”
“நல்ல ஐடியா ராமு…சரி ராஜேஷ் நீ அந்த பொண்ணு இருக்குற பக்கத்துக்குப் போ. ம்…இப்போ இதேப் பக்கத்தை மங்களம் அக்கா கிட்ட காட்டி கேட்போம் வாங்க.”
“ராஜேஷ் புக்கை பத்திரமா புடிச்சுக்க. தப்பித் தவிரிக் கூட கீழே போட்டுடாதடா…அப்புறம் திறக்க முடியாம போயிடும்”
“ஆமாம் ராஜேஷ் ராமு சொல்லறது சரிதான். ஜாக்கிரதை டா”
“சரி சரி நீங்க ரெண்டு பேரும் பயப்படாதீங்க நான் இந்த புக்கை ஜாக்கிரதையா ஹாண்டில் பண்ணிக்கறேன். வாங்க கீழே போகலாம்”
என்று கூறிக்கொண்டே ராஜேஷ் அந்த புத்தகத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு ராமு ராஜாவுடன் கீழே சென்றான்.
“அக்கா மங்களம் அக்கா…இங்க ஹாலுக்கு கொஞ்சம் வாங்களேன்”
“இதோ வரேன் தம்பி…. என்ன தம்பி?”
“அக்கா நம்ம ராஜேஷ் உங்க கிட்ட ஒரு பொண்ணோட டிராயிங் காட்டுவான். அதைப் பார்த்ததும் உங்களுக்கு அந்த படத்துல இருக்குறா பொண்ணு மாதிரியே யாரையாவது தெரியுமான்னு சொல்லுங்க அக்கா.”
“அதுக்கென்ன தம்பி காட்டச் சொல்லுங்க..தெரிஞ்சா… யாரு என்னனு சொல்லுறேன்!!!”
“ராஜேஷ் மங்களம் அக்காகிட்ட …நீ வரைஞ்ச அந்த படத்தைக் காமி”
“நானா!!!”
“ஆமாம் டா நேத்து வரைஞ்சயே!!! பாருங்க அக்கா அதுக்குள்ள மறந்துட்டான்”
“ஓ!!! ஓகே !! ஓகே!! ஓகே!!! …ஆமாம் ஆமாம் நான் தான் வரைஞ்சேன் இல்ல…..அக்கா இதோ இந்த படம் தான். நிதானமா பார்த்து ….இவங்களை எங்கேயாவது பார்த்திருக்கீங்களானு சொல்லுங்க”
என்று ராஜேஷ் புத்தகத்திலிருந்த அந்த பெண் படம் வரையப்பட்டிருந்த பக்கத்தைக் காட்ட ராமுவும் ராஜாவும் மங்களத்தையே பார்க்க…மங்களம் அந்த பக்கத்தைப் பார்த்தாள்….பின் ராமு, ராஜா, ராஜேஷைப் பார்த்தாள்….மீண்டும் அந்த பக்கத்தைப் பார்த்தாள் ….மூவரையும் பார்த்தாள்…. சஸ்பென்ஸ் தாங்காது ராஜேஷ்
“அக்கா என்னக்கா அந்த படத்தைப் பார்க்றீங்க எங்க மூணு பேரையும் பார்க்கறீங்க மறுபடியும் படத்தைப் பார்க்றீங்க எங்க மூணு பேரையும் பார்க்கறீங்க…சொல்லுங்க அக்கா உங்களுக்கு இந்தப் படத்துல இருக்குற பொண்ண தெரியுமா?”
“என்ன தம்பிகளா விளையாடறீங்களா?”
“அக்கா ஏன் அப்படி கேட்குறீங்க?”
“பின்ன என்ன ராஜா தம்பி முந்தா நாள் என்னடான்னா அதே புத்தகத்தை நல்லா கோந்து போட்டு ஒட்டிட்டு திறந்து தரச் சொல்லிக் குடுத்தீங்க….இன்னைக்கு என்னடான்னா காலி பக்கத்தைக் காமிச்சு …பொண்ணு படம் இருக்குன்னும் அதை அடையாளம் தெரியுதான்னும் கேட்குறீங்க.!!!!”
“என்னது காலிப் பக்கமா!!!”
என்று மூன்று நண்பர்களும் ஒரு சேர சொல்லிக்கொண்டே அந்த பக்கத்தைப் பார்த்தனர்.
தொடரும்……..