அத்தியாயம் 42: இடமாற்றம்

காற்கோடையனும் மதிநாகசுரனும் சிறைக்குள் நுழைந்துப் பார்த்ததும் உள்ளே இருந்த சாம்பீனிகள் இரண்டும் அவர்களைப் பார்த்தன. பின் திறந்த கதவு வழியாக வெளியே சென்று காற்கோடையன் ஆணையிட்டு நிற்க சொன்ன இடத்திலேயே சென்று நின்றுக் கொண்டன. அதைப் பார்த்ததும் இருவரும் குழப்பத்தில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“மதி இது எப்படி சாத்தியம்? நமது சாம்பீனிகள் எப்படி சிறைக்குள்? அந்த ஞானானந்தமும் அவன் குடும்பத்தினரும் எங்கே? விஷயமறிந்து நவியா கேட்டால் நாம் என்ன பதில் சொல்வது? கையில் கிடைத்த அந்த ஒரு பதக்கமும் இப்போது கைநழுவிப் போனதே!!!”

“ஆசானே அவன் எங்கு சென்றிருக்கப் போகிறான்? நிச்சயம் பிரயாகா நோக்கி தான் பயணித்துக் கொண்டிருப்பான். உடனே சென்று அவர்களை மீண்டும் சிறைப்பிடித்து வருகிறேன்”

“நில் மதிநாகசுரா நில். அவர்கள் எப்போது தப்பித்து சென்றார்களோ?”

“அன்று அவர்களை சிறையிலிட்டபோது தான் நாம் அனைவரும் அவர்களை கடைசியாக பார்த்தது. அதனால் நீங்கள் சொல்வது போல அவர்கள் என்று தப்பித்தனரோ? இன்னேரம் பிரயாகா சென்றிருப்பார்களோ என்னவோ? இப்போது என்ன செய்வது ஆசானே?”

“ம்….இல்லை இல்லை…மதிநாகசுரா…அதுதான் இல்லை அவர்கள் நேற்று மாலை வரை இங்கு தான் இருந்தனர்.”

“ஆசானே!!! அப்படியா? தாங்கள் எப்படி இவ்வளவு ஊர்ஜிதமாக சொல்கிறீர்கள்?”

“ஏனென்றால் நான் நேற்று மாலை இங்கு வந்து அவர்களிடம் பேசினேன்.

“அப்படியா? அப்போதே நீங்கள் அவர்களிடமிருந்து அந்த பதக்கத்தை எடுத்திருக்கலாமே ஆசானே!!! இல்லையெனில் எங்களையாவது அழைத்திருக்கலாமே”

“இல்லை மதிநாகசுரா….அவனுக்கு அந்த மரப்பேழையில் தான் எதைச் சுமந்துக் கொண்டுப் போகிறோம் என்பது கூட அறியாது பிரயாகா எடுத்துச் செல்வதாக கூறினான்”

“அது ….அவன்….தங்களிடம் பொய் கூறியிருக்கலாமே ஆசானே”

“இல்லை மதி அவன் பொய் சொலல்வில்லை. அவன் சொன்னதனைத்தும் உண்மை தான். அதை அவன் கண்களே காட்டிக் கொடுத்தது.”

“தாங்கள்‌ ஏன் பதக்கத்தை அவனிடமிருந்து எடுக்காமல் விட்டீர்கள்?”

“அதை எடுக்க முயற்சித்தேன் ஆனால் அவர்களிடம் என்னால் நெருங்கக்கூட முடியாது போனது. அதில் சற்று அதிர்ச்சியுற்றேன். நவியாவும் அவர்களை நம்மிடத்துக்கு அழைத்து வரும் பொழுது அவர்களிடமிருந்து தள்ளித் தான் இருந்தாள்….அது ஏன் என்று அவள் அப்போதே சொல்லியிருந்தால் நாமும் சுதாரித்துக் கொண்டிருக்கலாம்.”

“ஆனால் ….நவியா அவர்களின் பிள்ளைகளை பிடித்து வைத்திருந்தாளே!!! அவர்களிடம் நெருங்க முடியவில்லையெனில் அது எப்படி அவளால் முடிந்தது?”

“அந்த பிள்ளைகளை அவள் ஞானானந்தத்தைப் பிடிப்பதற்கு முன்னதாகவே பிடித்திருக்கிறாள். அதன் பின் ஞானானந்தத்தை கண்டறிந்ததும் அவளுக்குப் புரியவந்துள்ளது அவனருகே செல்ல விடாமல் ஏதோ அவளை தடுக்கிறதென்ற விஷயம். உடனே சுதாரித்துக் கொண்ட நவியாகம்ஷி அவனை அவன் பிள்ளைகள் மனைவியை வைத்து மிரட்டித் தான் இங்கு அழைத்து வந்திருக்க வேண்டும்.”

“அப்போ எதற்காக நாம் அவர்களை ஒன்றாக ஒரே சிறையிலிட்டோம்?”

“அங்கே தான் நாம் தவறிழைத்து விட்டோம் மதிநாகசுரா. நவியா இந்த விவரத்தை முன்னதாகவே… அதாவது அவர்களை அழைத்து வந்தபோதே தெரிவித்திருந்தால்….அல்லது அவர்களை சிறையிலிட நாம் தீர்மானித்தப் போது அவர்களை தனிதனிச் சிறையிலிடும்படி அறிவுறுத்தியிருந்தால்….இப்போது அவர்களை தொலைத்திருக்க மாட்டோம்.”

“ஆம் ஆசானே!! ஆனால் நவியா ஏன் அதை நம்மிடம் சொல்லவில்லை என்று தான் எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது”

“எல்லாம் அந்த பரந்தாமனின் வேலையாக தான் இருக்கும். நாம் இங்கே அமைக்கும் படையையும், நாம் அந்த இந்திரனை நெருங்கப் போவதையும் அந்த இந்திரன் அறிந்ததால் வந்த விளைவுகள். இவற்றிற்கெல்லாம் நாம் அஞ்சாது நமது வேலையில் இன்னும் வேகத்தைக் கூட்டவேண்டும். இங்கு நடப்பதெல்லாம் நம் எதிரியை அஞ்சவைப்பதினாலேயே நாம் இவ்வாறு சில இடையூறுகளை சந்திக்க நேரிடுகிறது.”

“இப்போது நாம் என்ன செய்யலாம் ஆசானே?”

“நாம் இனி கஷியிலிருக்கக் கூடாது. இன்றே புறப்பட்டு பிரயாகா எல்லையிலிருந்து சற்றுத் தள்ளி இருக்கும் கொசம்பியில் நமது பரமபத அரண்மனையை நிறுவ வேண்டும். அப்போது தான் நம்மால் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துக் கொண்டு அதுபடி நாமும் நமது காய்களை நகற்ற முடியும். அதுவுமின்றி நாம் பிரயாகா செல்லும் வழியில் அந்த ஞானானந்தத்தையும் அவன் குடும்பத்தையும் பார்க்க நேர்ந்தால் அவர்களை மீண்டும் சிறைப் பிடித்திடுவோம்”

“ஆகட்டும் ஆசானே இப்போதே கிளம்பிடுவோம். நான் சென்று அனைவரையும் பிரயாணத்துக்கு தயாராகச் சொல்லி நானும் தயாராகிறேன். தாங்களும் தயாராகுங்கள்.”

மதிநாகசுரன் அனைவரையும் அழைத்து ஆசானின் திட்டத்தை தெரிவித்ததும் உடனே அனைவருமாக புறப்பட்டு கொசம்பியை நோக்கிச் சென்றனர்.

ஞானானந்தமும் அவன் குடும்பத்தினரும் கஷியிலிருந்த சிறையிலிருந்து தப்பித்து பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு வேகவேகமாக நடந்தும் ஓடியும் வட்ஸா வந்தடைந்தனர். ஆனால் அங்கு ஏதுமில்லாது ஊரே இருண்டுக்கிடந்தது. அங்கே இருந்த ஒரு திறந்த வீடடிற்குள் சென்றனர். அந்த வீடடின் சமையலறையிலிருந்த பொருட்களை வைத்து ஞானானந்தத்தின் மனைவி சீதை நால்வருக்கும் சமைத்தாள். அனைவரும் மனதில் இருண்ட ஊரின் பயத்தோடும், வயிற்றில் பசியோடும் சாப்பிட அமர்ந்தனர். கஷியிலிருந்து வட்ஸா வரை நடந்தே வந்ததில் மிகவும் களைப்பிலிருந்தவர்கள் நன்றாக உண்டு எழுந்தனர்.

“சீதை… நானும் நம் பிள்ளைகளும் நல்ல பசியிலிருந்தோம். நீயும் பசியிலிருந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாது இவ்வளவு சுவையான சாப்பாட்டை இங்கே இருக்கும் பொருட்களை வைத்து சமைத்துத் தந்துள்ளாய். நான் உன்னை மனைவியாகவும் நம் பிள்ளைகள் உன்னை அம்மாவாகவும் அடைந்ததற்கு நாங்கள் பெரும்பாக்கியம் செய்திருக்க வேண்டும் சீதை”

“ம்…நன்றி மாமா. அதெல்லாம் இருக்கட்டும். நாம் சிறையிலிருந்து தப்பித்து விட்டோமென இன்னேரம் அந்த அரக்கர்கள் கண்டுப்பிடித்திருப்பார்களா?”

“கண்டுப் பிடித்திருக்கலாம்….பிடித்திருக்காமலும் இருக்கலாம்.”

“அப்படி கண்டுப் பிடித்திருந்தால் அவர்கள் நம்மை தேடுவதற்கு அந்த அகோரமான பிசாசுகளை அனுப்பியிருப்பார்களே!!! நாம் இனி இங்கு இருக்க வேண்டாம். நமக்கு தேவையான உணவை செய்து எடுத்துக் கொண்டு இங்கிருந்து பிரயாகாவை சீக்கிரம் சென்றடைவோம். அப்போது தான் எனக்கு நிம்மதி.”

“சீதை நீ பயப்படுவது சரிதான். ஆனால் இதோ பார் நம் பிள்ளைகள் அசந்து உறங்குகின்றனர். நீயும் களைத்திருக்கிறாய். பேசாமல் இன்றிரவு இங்கிருந்துவிட்டு நாளை விடியற் காலையில் புறப்பட்டு விடுவோம்.”

“அதற்குள் அந்த அரக்கர்கள் வந்துவிட்டால்?”

“ம்…பார்த்துக் கொள்ளலாம். நம்மிடம் தான் இந்த மரப் பேழையிருக்கிறதே. இதை வைத்துத்தானே நாம் அந்த சிறையிலிருந்தும் அதைக் காவல் காத்திருந்த அந்த பிசாசுகளிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளோம். அதனால் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாது அமைதியாக, நிம்மதியாக படுத்துறங்கு சீதை. நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும்.”

கஷியிலிருந்து புறப்பட்ட அசுரர்களும் அவர்களின் சாம்பீனி படைகளையும் எப்படி கன்னியார்த்தீர்த்தியிலிருந்து கஷிக்கு தங்களின் சித்து வேலைகளால் அனைவரையும் அழைத்து வந்தனரோ அதே போல அனைவரையும் அணு அளவாக்கி கூடையிலிட்டு இருவர் சுமந்துக் கொண்டு பறந்துச் சென்றனர்.

அப்போது அவர்கள் வட்ஸாவைக் கடக்கும் பொழுது காற்கோடையனுக்கு நரனின் நாற்றம் அவரை கூடைக்குளிருக்க விடாது அங்குமிங்குமாக நடக்கச் செய்தது. மதிநாகசுரனும், சிகராசுரனும் தாங்கள் சுமந்து வந்த கூடைகளில் ஒன்றான ஆசானிருக்கும் கூடை மிகவும் ஆடத்துவங்கியதும் ….அவர்கள் சென்ற வேகத்தினால் வட்ஸாவைத் தாண்டி மாயாபுரியில் நின்றனர். கூடைகளை கீழே வைத்தனர். ஆசானிருந்த கூடையைத் திறந்தனர். ஆசான் வெளியே வந்ததும் அவர்களின் சித்தியை உபயோகித்து மீண்டும் அவரின் உருவத்தைக் கொண்டதும் காற்கோடையன்

“மதிநாகசுரா சற்று முன் நாம் எங்கிருந்தோம்.?”

“நாம் கஷியிலிருந்து வட்ஸாவை தாண்டி இப்போது மாயாபுரி வந்துள்ளோம் ஆசானே. ஏன் கேட்கிறீர்கள்?”

“இல்லை சற்று முன் ….அப்படி என்றால் வட்ஸாவில் எனக்கு நரன்களின் நாற்றம் வந்தது.”

“அது எப்படி ஆசானே நாம் தான் பிரயாகாவைத் தவிர அனைத்து ஊர்களையும் அழித்துவிட்டோமே. பின் எப்படி தங்களுக்கே வட்ஸாவில் நரன்களின் வாசம் வரும்?”

“ம்….ஆசான் சொல்வது சரிதான் சிகராசுரா. நாங்கள் எவருக்கும் இன்னும் இந்த விஷயத்தை சொல்லவில்லை.”

“என்ன அது மதிநாகசுரா?”

“நாம் சிறைவைத்திருந்த அந்த ஞானானந்தமும் அவன் குடும்பத்தினரும் நமது சிறையிலிருந்து தப்பி விட்டனர். ஆசான் சொல்வதைப் பார்த்தால் அவர்கள் வட்ஸாவில் தான் இருக்க வேண்டும். ஆசானே நாம் வட்ஸாவிற்கு செல்லலாம் வாருங்கள்”

“இல்லை இல்லை வேண்டாம்….மீண்டும் நாம் திரும்பிச் செல்ல வேண்டாம் மதிநாகசுரா.”

“அப்படி என்றால் எவ்வாறே அவர்களை பிடிப்பது ஆசானே”

“அவர்கள் எப்படியும் மாயாபுரியை கடந்து தானே பிரயாகா செல்ல வேண்டும். அதற்கிடையில் கொசம்பி வேற உள்ளது. இதில் எங்கேயாது அவர்கள் நம்மிடம் சிக்கத்தான் போகிறார்கள். அதனால் நாம் இப்போது மாயாபுரியிலேயே இருந்து விட்டு அவர்களை பிடித்துக் கொண்டு கொசம்பிக்கு அவர்களுடனே செல்லலாம்.”

“ஆகட்டும் ஆசானே. சிகராசுரா அனைவரையும் கூடையிலிருந்து வெளியே வரச்சொல். நாம் மாயாபுரியிலேயே தங்குவோம். ஆசானே அப்படி என்றால் நமது பரமபதமனையை இங்கேயும் நிறுவ வேண்டுமா?”

“இல்லை வேண்டாம். இந்த இடம் நமக்கு தற்காலிகமானதே!! அந்த ஞானானந்தம் நம்மிடம் அகப்பட்டுக் கொண்டுவிட்டால் கொசம்பி தான் நமது அடுத்த இருப்பிடமாகும்…ஆகையால் நான் எனது மந்திர சக்தியால் நாம் தங்குவதற்கான சிறிய குடில்களை ஏற்பாடு செய்கிறேன். அதில் நாம் அனைவரும் இன்று தங்குவோம்”

“ஆகட்டும் ஆசானே”

“மதிநாகசுரா நீ உனது சாம்பீனிகளை நன்றாக நான் சொன்னதுப் போலவே பயிற்று வத்திருக்கிறாய் தானே”

“ஆம் ஆசானே தாங்கள் சொன்னடி தான் பயிற்று வித்திருக்கிறேன்”

“ம்….சரி அவற்றில் இரண்டை நமது பாதுகாப்புக்கும்….நரன் நாற்றமறிந்த இரண்டை முதல் இரண்டுடனும் சேர்த்து காவல் காக்கச் சொல்”

“ஆகட்டும் ஆசானே. இப்போதே செய்து முடிக்கிறேன்.”

“அப்படியே மந்திராசுரனை வந்து என்னைப் பார்க்கச் சொல்”

“ஆசானே என்னை தாங்கள் அழைத்ததாக மதிநாகசுரன் சொன்னான்”

“ஆங்!!! வா மந்திரா வா! அந்த ஞானானந்தமும் அவன் குடும்பத்தினரும் நம்மிடமிருந்து தப்பி விட்டனர்.”

“அப்படியா? அது அவர்களால் எப்படி சாத்தியமானது?”

“அந்த பதக்கம் கொண்ட மரப்பேழையால் தப்பித்துள்ளனர்.”

“அப்படி என்றால் முதலிலேயே அந்த பேழையை நாம் எடுத்திருக்கலாமே!”

“அது ஒரு பெரிய கதை சொல்கிறேன் கேள்….”

என்று ஆசான் சொல்லி முடித்ததும். மந்திராசுரன்

“அதுதான் வட்ஸாவில் உள்ளனர் என்று தெரிந்து விட்டதே ஆசானே!!!! சென்று மீண்டும் சிறையெடுத்து வந்திருக்கலாமே……ஏன் நாம் மாயாபுரியில் அவர்களுக்காக காத்திருக்க வேண்டும்?”

“மந்திரா அந்த ஞானானந்ததிடமிருந்து அவன் பிள்ளைகளையும் மனைவியையும் பிரிக்க வேண்டும். அப்போது தான் அவன் நம் வழிக்கு வருவான்.”

“அதற்கும் நாம் மாயாபுரியில் காத்திருப்பதற்கும் என்ன சம்மந்தம் ஆசானே?”

“சம்மந்தம் இருக்கிறது மந்திராசுரா இருக்கிறது. முதலில் அவர்கள் இந்த வழியாகத்தான் கடந்து சென்றிடுவார்கள் அப்போது பிடிக்கலாமென்றிருந்தேன்… அதனால் தான் இங்கேயே இருக்கலாமென்று மதியிடம் சொன்னேன்……ஆனால் இப்போது எனக்கொன்று தோன்றுகிறது….. நம்மால் அந்த ஞானானந்தத்தை நேரடியாக மோதி எதுவும் செய்திட முடியாது. ஆகையால் அவனின் குடும்பத்தை முதலில் சிறையெடுக்க வேண்டும். அதனால் நாம் அவர்கள் இருக்கும் இடத்தை இப்போதே கண்டறிந்து ….நிச்சயமாக நடந்த களைப்பில் நன்றாக‌ உறங்கிக் கொண்டிருப்பார்கள்….அதனால் மெல்ல அவனின் குடும்பத்தை நாம் பிடித்திட வேண்டும். உடனே இதை நீ மதியிடம் கூறி அவனை அழைத்து வா. நாம் மூவரும் மட்டும் சென்று இதை செய்திடுவோம். இதை செய்து விட்டால் நாளை காலை அந்த ஞானானந்தம் தானாக நமது அடிமையாகிடுவான். ம்….சென்று மதியை இங்கே அழைத்து வா”

“ஆகட்டும் ஆசானே. இதோ மதியுடன் வருகிறேன்”

“ஆங் வாருங்கள் வாருங்கள். மந்திராசுரா….மதிநாகசுரனிடம் எல்லாம் கூறிவிட்டாயல்லவா?”

“ம்….தங்களின் திட்டமனைத்தையும் கூறிவிட்டேன் ஆசானே”

“என்ன மதிநாகசுரா உனக்கும் சம்மதம் தானே?”

“எனக்கும் சம்மதம் ஆசானே. வாருங்கள் நாம் சென்று வென்று வருவோம்”

தொடரும்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s