அத்தியாயம் 41: நிச்சயம்

மாலையானது வீரசேகரனுக்காக காத்திருந்த கேசவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் மனவருத்தத்தில் வாசலில் இருந்த திண்ணையில் அமர்ந்திருந்த கேசவனருகேச் சென்ற வேதாந்தகன்

“அண்ணா கவலையை விடுங்கள். தலைவர் வீரசேகரனுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும் ஏனெனில் இப்போது நிலைமை அப்படி இல்லையா..அதை நாங்கள் காலையிலேயே புரிந்துக் கொண்டு விட்டோம் அதனால் தான் யுத்தம் முடிந்து திருமணம் செய்துக் கொள்வதாக கூறினோம்”

என்று கேசவனை சமாதானம் செய்துக் கொண்டிருக்கும் போது தலைவர் வீரசேகரன் பிரயாகாவின் முக்கிய பிரமுகர்களுடன் பழங்கள், இனிப்புகள் என்று கூடை கூடையாக எடுத்துக் கொண்டு முழுமதியாள் இல்லம் நோக்கி வந்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த கேசவன் உடனே எழுந்து வேதாந்தகனிடம்

“அங்கே பார் தலைவர் வீரசேகரன் நம் வீட்டை நோக்கி வருகிறார். நமது தலைவர்கள் சொன்ன சொல்லை என்றுமே மீறியதில்லை. அப்படி மீறினால் அவன் தலைவனாக இருக்க தகுதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ம்…வா வா அவரை வரவேற்போம்”

என்று பெருமிதத்தோடு கூறிக் கொண்டே வீரசேகரனையும் அவருடன் வந்தவர்களையும் வணங்கி வரவேற்று வீட்டினுள் அமரச்செய்தனர். அப்போது வீரசேகரன் வேதாந்தகனிடம்

“உனக்கென்று யாருமில்லை என்றெண்ணாதே வேதாந்தகா. நாங்கள் இருக்கிறோம். ம்..‌வஜ்ரகேசவா நாங்கள் பிள்ளை வீட்டுச் சார்பாக உங்கள் வீட்டு பெண் முழுமதியாளை எங்கள் பிள்ளைக்கு திருமணம் முடிக்க கேட்டு வந்துள்ளோம். தங்களுக்கும் தங்கள் தங்கைக்கும் இதில் சம்மதமானால் மேற்கொண்டு பேசலாம்”

கேசவன் முழுமதியாளின் சம்மதத்தைப் பெற அவளைப் பார்த்தான். அவள் சிறு புன்னகையால் சம்மதத்தைத் தெரிவித்தாள். பின் அவள் தாயார் மற்றும் பாட்டனாரிடமும் கேட்டான் கேசவன். அவர்களும் சம்மதமென்று சந்தோஷமாக தலையாட்டினர். உடனே வீரசேகரன்

“வஜ்ரகேசவா அது தான் அனைவரும் சம்தம் தெரிவித்து விட்டனரே!! பின்பு ஏன் தயங்குகிறீர்கள்? ம்…வாருங்கள் இன்று தட்டை மாற்றிக் கொள்வோம். நாளை மறுநாள் நல்ல நாளாம் அன்று திருமணத்தை வைத்துக் கொள்வோம்”

“தலைவரே! பெரியவர்கள் தாங்கள் பேசும்போது இடையில் பேசுவதற்காக மன்னிக்கவும். எனக்கும் வேதாந்தகனுக்கும் இந்த திருமணத்தில் முழு சம்மதம் தான் ஆனால்….”

“மன்னித்தோம். அப்புறம் என்ன ஆனால் என்று இழுக்கிறாய் முழுமதியாள்! எதுவானாலும் சொல்லிவிடு மா”

“அது வந்து….நாங்கள் இருவரும் இந்த தீய சக்தியுடனான யூத்தம் முடிந்ததும் திருமணம் செய்துக் கொள்ளலாமென்று இருக்கிறோம்”

“ஹா!ஹா!ஹா! அது பாட்டுக்கு நடக்கும் போது நடக்கட்டும் முழுமதியாள் அதற்காக ஏன் உங்கள் தகருமணத்தைத் தள்ளிப் போட வேண்டும்?”

“இல்லைத் தலைவரே நமது ஊர் இருக்கும் நிலைமையில் இப்போது எங்களின் திருமணம் தேவையா என்று தான் நினைக்கின்றோம்”

“ஆமாம் தலைவரே! இது நாங்கள் இருவரும் ஒருமித்து எடுத்த முடிவு”

“உங்கள் இருவரின் பொறுப்புணர்ச்சியைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அதே சமயம் இறுக்கமான சூழலில் இருக்கும் நமது ஊருக்குள் ஒரு கோலாகலமான விழா நடந்தால் நாமும் நமது ஊர் மக்களும் சற்று நேரமாவது மகிழ்ச்சியாக இருக்க நேருமே என்று தான் நான் பல முறை சிந்தித்து இந்த முடிவுக்கே வந்துள்ளேன்”

என்று வீரசேகரன் சொன்னதும் வேதாந்தகனும் முழுமதியாளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அதை கவனித்த வீரசேகரன் அவர்களிடம்

“உங்களுக்கு இதில் விருப்பமில்லை என்றால் வேண்டாம் இதை இங்கேயே இப்படியே விட்டுவிடுவோம். என்ன சொல்கிறீர்கள்”

என்ற சொன்னதும்… முழுமதியாள் அவரிடம்

“சரி தலைவரே நீங்கள் சொல்வதுப் போல நம் ஊர் மக்களும் தாங்களும் எங்களின் திருமண விழாவால் மகிழ்வீர்கள் என்றால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனக்கு முழு சம்மதம்”

“ரொம்ப சந்தோஷம் மா. ம்….வேதாந்தகா நீ என்ன சொல்கிறாய்?”

“தலைவரே மழுமதியாள் விருப்பமே என் விருப்பமும்”

“ஹா! ஹா! ஹ!!! பிழைக்கத் தெரிந்தவனடா நீ. சரி சரி திருமண விழா வேலைகளை ஆரம்பிக்கச் சொல்லிவிடுங்கள் அமைச்சரே”

“ஆகட்டும் தலைவரே”

“இப்போதாவது இந்த தட்டை மாற்றிக் கொள்ளலாமே கேசவா”

“ஆங்!! சந்தோஷமாக மாற்றிக் கொள்ளலாம் தலைவரே. தாருங்கள். இந்தாங்கள் எங்கள் வீட்டுத் தட்டு.”

“ஆக எங்கள் வீட்டு பிள்ளையான வேதாந்தகனுக்கும், கேசவனின் தங்கையும் வீராதிபதி, பொண்ணம்மாளின் மகளுமான முழுமதியாளுக்கும் நாளை மறுதினம் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப் படுகிறது.”

என்று தட்டை மாற்றிக்கொண்டு அன்றிரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர். பின் தலைவரும் அவருடன் வந்தவர்களும் புறப்பட்டுச் சென்றதும் கேசவன் முழுமதியாளையும் வேதாந்தகனையும் பார்த்து

“நானும் இதையே தான் காலையில் சொன்னேன் ஆனால் நீங்கள் இருவரும் என் பேச்சைக் கேட்கவேயில்லை ஆனால் இப்போது தலைவர் வந்து சொன்னதும் தலையை ஆட்டிவிட்டிர்களே….ம்….அண்ணன் பேச்சுக்கு அவ்வளவு தான் மதிப்பு”

“அய்யோ அண்ணா அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. தலைவரே அப்படி சொல்லும் போது எப்படி மறுத்துப் பேசுவது? அதனால் தான் சம்மதம் தெரிவித்தேன்”

“இருக்கட்டும் மா!! நான் சும்மா விளையாட்டாக தான் கேட்டேன். எப்படியோ உன் அம்மாவும் தாத்தாவும் ஆசைப்பட்டது நடக்கப் போகிறது. அவர்களும் தங்கள் கண் குளிரப் பார்த்திடுவார்கள்.சரி சரி நாளை ஒரு நாள் தான் உள்ளது அதற்குள் உனக்குப் புடவை மாப்பிள்ளைக்கு வேஷ்டி சட்டை எல்லாம் எடுத்தாக வேண்டும். இப்போது சீக்கிரம் தூங்குங்கள் நாளை கடலவீதி சென்று வரலாம்”

“ம்… ஆகட்டும் அண்ணா”

“வேதாந்தகா எங்கே முழுமதியாள் பின்னாலேயே செல்கிறாய்? நீ வா …வந்து என்னுடன் திண்ணையில் உறங்கு. அம்மா மதி இன்னொரு பாய் தலையணை தாம்மா”

“ம்…இந்தாங்க அண்ணா”

“அதை உன் வருங்கால கணவரிடம் கொடுத்து வெளியே திண்ணையில் படுக்கச் சொல்லிடு தாயி”

“போங்கள் கேசவன் அண்ணா சொல்வதுப் போலவே திண்ணையில் படுத்துறங்குங்கள்”

என்று சந்தோஷம், கேளி, கிண்டலென அன்றையப் பொழுது கழிந்தது. மறுநாள் காலை உணவு உண்டப் பின் கடைவீதி செல்ல கிளம்பிக்கொண்டிருந்தனர் முழுமதியாள், வேதாந்தகன், கேசவன். அப்போது ஒரு குதிரை வண்டி வந்து அவர்கள் வீட்டின் வாசலில் நின்றது. அதிலிருந்து நான்கு அரண்மனைப் பணிப்பெண்கள் கையில் தட்டுகளுடன் வந்திறங்கினர். அவற்றை முழுமதியாள் வீட்டிற்குள் சென்று வரிசையாக அடுக்கி வைத்தனர். அதைப் பார்த்த கேசவன் அவர்களிடம்

“யாரம்மா நீங்கள் எல்லாம்? எதற்காக இந்த தட்டுகளை எல்லாம் எங்கள் வீட்டினுள் வைத்துள்ளீர்கள்? அவற்றில் எல்லாம் என்ன இருக்கிறது?”

“ஐய்யா வணக்கம். நாங்கள் தலைவர் அரண்மனையிலிருந்து வந்துள்ளோம். அவைகள் அனைத்தும் இவர்களின் திருமணத்திற்காக தலைவர் அனுப்பியுள்ள ஆடைகள் மற்றும் நகைகள். அவர்கள் இருவருக்கும் மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தினருக்கும் அதோ அந்த தட்டில் இருக்கிறது. தாங்கள் அனைவரும் நாளை விடியற் காலையில் தயாராகி நமது அம்மன் கோவிலுக்கு வந்து விடும் படி தலைவர் சொல்லச் சொன்னார். மேலும் இன்று மாலை அவர் அரண்மனையில் உங்கள் அனைவரோடு இந்த ஊர் மக்களுக்கும் விருந்தும் புதுத்துணியும் வழங்கவுள்ளதாக சொல்லச் சொன்னார். அதற்கும் தாங்கள் அனைவரும் வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கச் சொன்னார் நாங்களும் தங்களை அழைத்து விட்டோம். நாங்கள் வருகிறோம்.”

என்று கூறிவிட்டுத் தட்டுக்களை எல்லாம் அடுக்கி வைத்துவிட்டு வந்த வண்டியிலேயே ஏறிச் சென்றனர். அவற்றைப் பார்த்த கேசவன்

“தலைவரே எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வதைப் பார்த்ததும் எனக்கு எங்க ஊர் தலைவர் தான் ஞாபகத்திற்கு வருகிறார். ம்…சரி அப்போ நாம கடைவீதி போக வேண்டிய வேலையில்லை. எல்லாருமாக மாலை தலைவர் அரண்மணைக்குச் சென்று வருவோம்”

“ஆமாம் நமக்காக இவ்வளவு செய்கிறார். நாம அதற்கு மரியாதை நிச்சயம் கொடுத்தாக வேண்டும். அனைவரும் சென்று வருவோம். அம்மா தாத்தா நீங்களும் தான். உங்களை பத்திரமாக நாங்கள் கூட்டிக் கொண்டு போகிறோம் சரியா”

“ம்….சரி மா. ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா கேசவா. நீ இல்லாட்டி இதெல்லாம் நடந்திருக்காதுப்பா. உனக்குத் தான் நன்றி சொல்லணும்”

“அய்யோ!!! அம்மா!!! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நம்ம மதிக்கு வேதா தான்னு மேலே ஆண்டவன் முடிச்சுப் போட்டுட்டார். அதை நானுன்னு இல்ல வேற யாரா இருந்தாலும் இல்ல யாருமே இருக்காவிட்டாலும் இந்த திருமணம் நடந்திருக்கும். அதுனால எனக்கு நன்றி எல்லாம் சொல்லி என்னை உங்கள் குடும்பத்திலிருந்து தள்ளி வைத்து விடாதீர்கள்”

“அச்சச்சோ அண்ணா அப்படி எல்லாம் தள்ளி வைக்க மாட்டோம். எங்களுக்குப் பொறக்கப் போற குழந்தைக்கு தாய் மாமனான உங்களை எப்படித் தள்ளி வைப்பதாம்?”

“ஹா! ஹா! ஹா! ரொம்ப சந்தோஷம் மா. என் மனம் நிறைந்திருக்கிறது. நான் கோவிலுக்குச் சொன்று வருகிறேன்.”

“அண்ணா இருங்கள் நானும் உங்களுடன் வருகிறேன்”

“ம்…வா வேதாந்தகா வா வா. நாம் சென்று வருவோம்”

“நாங்கள் மூவரும் தான் கிளம்பி நிற்கின்றோம். நாங்களும் கோவிலுக்கு வரலாமில்லையா”

“ஓ !!! தாராளமாக ….வாருங்கள் அனைவரும் சென்று வருவோம்”

“இல்லைத் தம்பி. நீங்களும் மாப்பிள்ளையும் போயிட்டு வாங்க. நாங்க வீட்டிலேயே இருக்கோம்”

“அம்மா ஏன் மா. வாங்க நாமும் போயிட்டு வருவோம்”

“நாம எப்படியும் சாயந்தரம் தலைவர் அரண்மணைக்குப் போகணும். போற வழியில தானே கோவிலிருக்கு அப்போப் போயிட்டு அப்படியே அரண்மணைக்கும் போயிட்டு வந்துடலாம். நீங்க போயிட்டு வாங்கத் தம்பி”

“சரி மா அப்படியே ஆகட்டும். நாங்கள் இருவரும் சென்று வந்து விடுகிறோம்.”

என கூறிவிட்டு வேதாந்தகனும், கேசவனும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் முழுயதியாள் தன் தாயிடம்

“ஏன் மா நாமும் போயிட்டு வந்திருக்கலாமில்ல”

“அது நல்லா இருக்காது மா. நாளைக்கு கல்யாணத்தை வச்சுகிட்டு இன்னைக்கு அப்படி வெளியில போயிட்டு வர்றதெல்லாம் சரியா வராது மா. அம்மா சொன்னா கேட்பயில்ல….போ உன் ஆடைகளை எல்லாம் எடுத்துப் பாருப் போ”

என்று முழுமதியின் தாய் சொன்னதும் மதியும் அதை மதித்து உள்ளேச் சென்று தனக்கான உடைகள் மற்றும் நகைகளை எல்லாம் ஒவ்வொன்றாக திறந்துப் பார்த்தாள். அவளுக்கு எல்லாமும் மிகவும் பிடித்திருந்தது.

கஷியில் காற்கோடையனும் மதிநாகசுரனுமாக அவர்கள் அடைத்து வைத்திருந்த ஞானானந்தத்தையும் அவனது குடும்பத்தினரையும் காண பாதாளச் சிறைக்குச் சென்றனர். அந்த சிறையின் வாயிலில் நின்றிருக்க வேண்டிய சாம்பீனிகள் அங்கே இருக்கவில்லை. அதைப் பார்த்ததும் காற்கோடையன் வேகமாகச் சென்று சிறையின் கதவைப் பார்த்தார். பூட்டுப் போடப்பட்டிருந்ததும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு…

“மதி இந்த சாம்பீனிகள் சொல்ப் பேச்சுக் கேளாமல் எங்கோ சென்றுள்ளது பாரேன். அது யாருடைய சாம்பீனியோ அவர்கள் அவைகளை கண்டித்து வைக்க வேண்டும் என்று சொல்லிவிடு”

“ஆகட்டும் ஆசானே!! பொதுவாக நம் சொல் மீறி அவைகள் ஏதும் செய்திடாதே!! எதற்கும் இன்னும் ஒரு முறைச் சொல்லச் சொல்கின்றேன்”

என்று இருவரும் பேசிக் கொண்டே சிறையின் கதவைத் திறந்தார் காற்கோடையன். கதவு திறந்ததும் அதிர்ந்துப் போனார்கள் இருவரும்!

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s