அத்தியாயம் 8: மூன்றாவது ஆடு!

ராஜா அவன் வீட்டிலும், ராமு அவன் வீட்டிலும் அந்த புத்தகத்தைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்ததில் உறக்கம் வராமல் புரண்டுப் படுத்துக் கொண்டிருந்தனர். எப்போது விடியுமென்று காத்திருந்தனர். அன்றைய இரவு முடிவுக்கே வராததுப் போல இருந்தது இருவருக்கும். விடிந்ததும் பால் காரர் சப்தம் கேட்டது ராமுவுக்கு. உடனே எழுந்து பல் துலக்கி அடுப்படிக்குச் சென்று தன் அம்மாவிடம் காபிக் கேட்டான். லீலாவதி தன் மகனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்

“அம்மா என்னமா என்னையவே பார்த்துக்கிட்டு இருக்க? காபி குடும்மா”

“அடேய் இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சுடா?”

“ஏன் மா அப்படி கேட்குற?”

“நான் எழுந்திரிக்கும் நேரத்துல மொதோ தடவையா நீ எழுந்துரிச்சிருக்கயே அது தான் கேட்டேன். காபிக்கு கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு. இப்பத்தான் டிகாக்ஷன் போட்டிருக்கேன். எனக்கே நீ இவ்வளவு சீக்கிரம் எழுந்ததில் ஆச்சர்யம்!! ஆனா அந்த ஃபில்டருக்கு தெரியாதேப்பா அது எப்பவும் போல தான் டிகாக்ஷன் தரும்”

“அதுனால தான் மா நான் லேட்டா எழுந்திரிக்குறேன். அது தெரியாம தினமும் என்ன திட்டுறீங்களே!!”

“எதுனால ப்பா….புரியலையே!!”

“காபி டிகாக்ஷன் இறங்க லேட்டாகும்னு….புரியுதா மை டியர் லீலாம்மா!”

“அடேய் காலங்காத்தால ஏன்டா இப்படி? போய் ஹால்ல உட்காரு நான் காபிப்போட்டுக் கொண்டு வரேன்”

“சரிமா”

என்று ஹாலில் சென்று சோஃபாவில் படுத்துக் கொண்டான். லீலாவதி மூன்று காபிப் போட்டுக்கொண்டு வந்தாள். அதைப் பார்த்ததும் ராமு

“ஏன்மா நீ தினமும் இப்படி ரெண்டு டம்பளர் காபி குடிச்சீன்னா உன் உடம்பு என்னத்துக்காகும்?”

“டேய் அது எனக்கில்லடா உங்க அப்பாக்கு ஒண்ணு”

“அம்மா அப்பா தான் இன்னும் எழுந்து வரவேயில்லையே…அதுக்குள்ள எதுக்கு அவருக்கும் போட்ட?”

“ம்….என்ன பேச்சு சத்தம் இன்னைக்கு அதிகமா இருக்கு!! அதுவும் விடியற்காலையிலேயே?…அட என்ன ஆச்சு நம்ம வீட்டு சார் இன்னிக்கு இவ்வளவு சீக்கிரமா எழுந்திரிச்சிருக்கார்!!”

என்று லீலாவதி போட்ட காபியை கையில் வாங்கிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தார்.

“தூக்கம் வரலைப்பா அதுதான் எழுந்துகிட்டேன்.”

“ஒரு மனுஷன் எப்போ சீக்கிரம் காலையில எழுந்திரிக்கறானோ அப்பவே அவனோட வெற்றி ஆரம்பமாயிடுச்சுனு அர்த்தம். பார்ப்போம் அது உனக்கு பலிக்குதான்னு”

“நிச்சயம் பலிக்கும்ப்பா. அம்மா நான் போய் குளிச்சிட்டு வரேன்”

என்று அங்கிருந்து குளியலறைக்குச் சென்று குளித்து டிரெஸ் போட்டுக் கொண்டு பூஜை அறைக்குச் சென்று கடவுளிடம் ஏதோ மனுவை பலமாக கொடுத்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்துக் கொண்டு கடிகாரத்தைப் பார்த்தான் அதில் ஏழு என்றிருந்தது. அவன் மனதிற்குள்

“ஐய்யோ !! இன்னும் இரண்டு மணி நேரமிருக்கே”

என்று அடுப்படிக்குள் பார்த்தான் லீலாவதி படு வேகமாக சமையல் டிபன் என்று பத்துக்குப் பத்தடி அடுப்படியில் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருந்தாள்.
அன்று தான் முதன் முறையாக தன் அம்மா எவ்வளவு வேலைகளை எவ்வளவு வேகமாக செய்கிறாள் என்பதைப் பார்த்தான் ராமு. ஹாலில் இருந்து எழுந்துப் போய் லீலாவதியிடம்

“அம்மா நான் ஏதாவது உதவி செய்யட்டுமா?”

“டேய் கண்ணா!! எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திடப்போவுதுடா….எல்லா மாற்றத்தையும் ஒரே நாளையில காமிச்சீன்னா அப்புறம் அம்மாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண வேண்டி வரும்ப்பா”

என்று பேசினாலும் அவளின் கைகள் வேலைகளை செய்துக்கொண்டே இருந்ததைப் பார்த்த ராமு

“அம்மா நீ க்ரேட் மா”

“சரி உனக்கு இன்னிக்கு என்னால ஏதோ காரியம் ஆகணுமோ?”

“அம்மா….விளையாடாதே!!! நான் நிஜமா சொல்லுறேன்”

“சரி சரி வா இன்னிக்கு உங்க அப்பாவோட சேர்ந்து டிபன் சாப்பிடு வா..அவரும் சந்தோஷப்படுவார். வா வா…அவர் டைனிங் டேபிள் வர நேரமாச்சு”

“லீலா லீலா டிபன் ரெடியா!!”

“பாரு வந்துட்டார்!! ஆங் வரேங்க”

என்று ராமுவுக்கும் அவன் அப்பாவுக்கும் டிபன் பரிமாறினாள் லீலாவதி. அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளேச் சென்று அப்பாவுக்கான மத்திய சாப்பாட்டுப் பையை எடுத்து வந்து டேபிள் மீது வைத்தாள். இருவரும் சாப்பிட்டு எழுந்தனர். ராமுவின் அப்பா சரியாக எட்டு மணிக்கு தனது ஸ்கூட்டரில் ஆஃபீஸுக்கு சென்றார். அவரை அனுப்பிவிட்டு உள்ளே வந்ததும் தங்கை ரம்யா எழுந்து குளித்து ஸ்கூலுக்கு ரெடியாகி டிபன் சாப்பிட வந்தமர்ந்தாள். லீலாவதி அவளுக்கும் பரிமாறிவிட்டு மத்திய சாப்பாட்டுப் பையை கொண்டு வந்து வைத்தாள். அவளையும் ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்து சோஃபாவில் அமரும் போது மணி எட்டரை ஆகியிருந்தது. தனது இரு கண்களையும் மூடிக்கொண்டு அமர்ந்திருந்த லீலாவதியிடம் ராமு

“அம்மா இந்தா நீ டிபன் சாப்பிடுமா. எங்க எல்லாருக்கும் முன்னாடி எழுந்துக்கற ஆனா நாங்க எல்லாரும் சாப்பிட்டதுக்கப்புறமா தான் சாப்பிடற…சாப்பிடற இல்ல!!!!”

என்று தட்டை நீட்டினான். தன் மகன் முதன்முதலில் தன் வேதனையறிந்து டிபன் கொண்டு வந்து தந்ததைப் பார்த்ததும் அவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அதைத் துடைத்து விட்டு அம்மாவை சாப்பிட வைத்ததில் நேரத்தை கவனிக்கத் தவறிப் போனான். ஆனால் லீலாவதி

“டேய் ராமு நீ ஒன்பது மணிக்கு ராஜா வீட்டுக்கு வர்றதா சொல்லியிருந்த இல்ல..இப்போ மணி ஒன்பதாச்சுப்பா”

“ஓ!! ஆமாம் மா…சரி மா நீ ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கோமா…உன் புள்ள பெரிய ஆளா ஆகி உன்னைச்சுற்றி வேலை ஆட்களை நியமித்து உன்னை ராணிமாதிரி பார்த்துக்கறேனா இல்லையான்னு பாரு”

“நீ பார்த்துக்கறையோ இல்லையோ!!! நீ சொன்னதே எனக்குத் தெம்பு தான்ப்பா. சரி சரி ராஜா தம்பி உனக்காகக் காத்துக்கிட்டிருக்கும்… போயிட்டு மத்திய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வா”

என்றதும் ராமு வேகவேகமாக நடந்து ராஜா வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினான். மங்களம் கதவைத் திறந்தாள்

“ராமு தம்பி நீங்க வருவீங்கனு ராஜா தம்பி சொல்லியிருந்துச்சு. நீங்க மேலே அவரு ரூமுக்குப் போங்க தம்பி”

“தாங்ஸ்க்கா”

“அட என்ன புதுசா தாங்ஸ் எல்லாம் சொல்லுறீங்க? போங்க தம்பி”

ராமு மாடிப்படியில் வேகமாக ஏறிச் சென்று ராஜாவின் அறைக் கதவைத் தட்டினான். ராஜா கதவைத் திறந்ததும்

“டேய் ராமு ஏன்டா லேட்டு? வா வா உள்ளே வா. உட்காரு”

“சாரி டா ராஜா. வீட்டுல கொஞ்சம் வேலை அது தான் லேட்டாயிடுச்சு…சரி அந்த புக் எங்க”

“ராமு நான் என் அப்பா அம்மாவிடமும் அந்த புக்கைக் கொடுத்து திறக்கச் சொன்னேன்”

“திறந்திடுச்சா?”

“இல்ல டா”

“ஓ!!! ஓ!!! அப்போ அதை எப்படித்தான்? யார்தான் திறக்கறது? மீதமிருக்கும் பக்கங்களை நாம பார்க்கறது?”

“ம்….அது தான் நானும் காலையிலேந்து யோசிச்சுக்கிட்டிருக்கேன் ராமு”

“ம்…ஐடியா! நம்ம ராஜேஷை மறந்துட்டோமே ராஜா!!”

“அட ஆமாம். ஆனா அவனாலேயும் திறக்க முடியலைனா?”

“நம்ம ராஜேஷை வரச்சொல்லி அவனை வைத்து திறந்து பார்த்தா தெரிஞ்சிடப்போவுது?”

“இல்ல நாம தான் ஒரே நாள்ல இந்த புக்குப் பைத்தியமா ஆகிட்டோம் அவனையும் ஆக்கணுமானு தான் யோசிக்கறேன்”

“எனக்கென்ன தோனுதுனா என்னால இந்த புத்தகத்தைத் திறக்க முடிஞ்சுது, என் நண்பனான உன்னால திறக்க முடிஞ்சுது அப்போ நம்ம ரெண்டு பேருக்கும் நண்பனான ராஜேஷாலையும் திறக்க முடியும்னு நினைக்கறேன்”

“லாஜிக்கலி நீ சொல்லறது சரின்னு தான் படுது. அப்படின்னா….நம்ம மூணு பேரால மட்டும் தான் திறக்க முடியும்னு சொல்ல வரியா ராமு?”

“அப்படின்னு முடிவுக்கு வர முடியாது ராஜா…ஏன்னா என் வீட்டு ஆளுங்க உன் வீட்டு ஆளுங்கன்னு யாராலையுமே திறக்க முடியாத அந்த புக்கை நீயும் நானும் திறந்திருக்கோம்…ஸோ என் கணக்குப் படி நம்ம ராஜேஷாலையும் முடியும்னு தான் நினைக்கறேன். ட்ரைப் பண்ணிப் பார்த்து அவனால திறக்க முடிஞ்சுதுன்னா தான் என் யூகம் சரி”

“நாம இந்த புக்குக்கிட்ட மாட்டிக்கிட்டது பத்தாதுன்னு அவனையும் பிடிச்சு உள்ளேப் போடுவோம். இரு நான் அவன் மொபைலுக்கு கால் பண்ணறேன். ஆங் ரிங் போவுது ராமு….ஹலோ ராஜேஷ்”

“ம்….சொல்லுடா ராஜா..என்ன இவ்வளோ காலையில கூப்பிட்டிருக்க? கதை கிடைச்சிடுச்சா என்ன?”

தொடரும்…….













Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s