அத்தியாயம் 6: தாழிட்ட புத்தகம்

ராஜாவின் செயலைப் பார்த்ததும் தன் தலையில் கையை வைத்துக் கொண்ட ராமு

“ஏன்டா ராஜா!!! போடா!!!”

என்று கூறியதும் சற்று நேரம் அமைதி நிலவியது. இருவரும் ஒருவருக்கொருவர் ஏதும் பேசாமல் இருந்தனர். ராஜா கீழே வீசியெறிந்த புத்தகத்தையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அதை கவனித்தான் ராமு. தன் மீது ராட்சத பட்டாம்பூச்சிகள் அந்த புத்தகத்திலிருந்து பறந்து வந்த போது எப்படி பயத்தில் உறைந்து நின்றானோ அதே போல் பயந்து போய் நின்றிருந்த ராஜாவை சுயநினைவுக்கு வரவழைக்க அவனைப் பிடித்து உலுக்கினான் ராமு. சுயநினைவுக்கு வந்ததும் ராமுவைப் பார்த்து

“டேய் ராமு என்னடா நடக்குது? “

“ம்…நான் சொன்னப்போ நம்பல இல்ல … சரி சரி மறுபடியும் அந்த புத்தகத்தை எடுத்து திறந்துப் பார்ப்போம் வா”

“மறுபடியுமா!! இன்னும் அதுலேந்து என்னென்ன வருமோ?”

“அதெல்லாம் நம்மளை பயமுறுத்திப் பார்க்குது அவ்வளவு தான்….நம்மளை  ஒண்ணும் செய்யறதில்லையே ராஜா”

“அப்படின்னு நினைக்கிறோம்!! அடுத்தடுத்து அதிலிருந்து வர்றது நம்மை ஏதாவது செஞ்சுதுன்னா?”

“இப்படி நானும் நினைச்சிருந்தேன்னா இந்த அஞ்சு பக்கங்களை கூட திருப்பிப் பார்த்திருக்க மாட்டோம். பேசாம வா ராஜா …சின்ன புத்தகம் தானே இன்னும் என்ன இருக்குன்னு பார்த்து முடிச்சிடுவோம் வா வா”

என்று கீழேயிருந்து புத்தக்கத்தை எடுத்தனர். ராமுவால் திறக்க முடியாதென்பதால் ராஜா திறக்க முயற்சித்தான் ஆனால் முடியவில்லை. அதைப் பார்த்த ராமு

“ச்சே….போடா இதுக்குத் தான் நான் படிச்சுப் படிச்சு சொன்னேன் எக்காரணம் கொண்டும் புத்தகத்தை கீழே போடாதேன்னு….இப்ப பாரு உன்னாலேயும் தொறக்க முடியலை”

“இரு இரு ராமு. இதுக்கு ஒரு வழியிருக்கு”

என்று கூறிக்கொண்டே ரூமின் கதவைத்திறந்து

“என்ன வழி அது ராஜா?”

“அக்கா… மங்களம் அக்கா..இங்க கொஞ்சம் வாங்களேன்?”

“ஏய் ராஜா!! இப்போ ஏன் அந்த அக்காவைக் கூப்பிடற?”

“இரு ராமு! வெயிட். நான் சொன்ன இன்னொரு வழி தான் நம்ம மங்களம் அக்கா…புரியுதா?”

“ம்..ஹூம் எனக்கு இப்போ எதுவுமே புரியலை”

“மங்களம் அக்கா….அக்கா”

“ம்…இதோ வரேன் தம்பி”

என்று கூறி முடிப்பதற்குள் ராஜாவின் அறை முன் நின்றாள் மங்களம். அவளிடம் அந்த புத்தகத்தைக் கொடுத்து திறந்து தருமாறு கூறினான் ராஜா. அதை கையில் வாங்கிப் பார்த்த மங்களம் ராஜாவையும் புத்தகத்தையும் மாறி மாறி பார்த்தாள்.

“என்ன அக்கா? என்னையும் இந்த புத்தகத்தையும் மாறி மாறி பார்த்துட்டே இருக்கீங்க. ம்…தொறந்துத் தாங்க”

“ஏன் தம்பி புக்கைத் தொறக்கறதுக்காகவா என்னையக் கூப்பிட்டீங்க?”

“அட ஆமா அக்கா!! அவன் சொன்னான் இந்த மாதிரி வேலையெல்லாம் சொன்னா நீங்க செய்ய மாட்டீங்கன்னு அது தான் …

“அப்படியா சொல்லிச்சு ராமு தம்பி?”

“அட ஆமாக்கா! நான் கூட சொன்னேன் எங்க மங்களம் அக்கா நிச்சயம் செய்வாங்கன்னு”

“ம்…அது எங்க ராஜா தம்பி. என்னையும் என் புள்ளையையும் காப்பாத்தின உங்களுக்காகவும் இந்த குடும்பத்துக்காகவும் எதுவும் செய்வேன்னு அந்த தம்பிகிட்ட நல்லா சொல்லுங்க ராஜா தம்பி”

“ம்…அதெல்லாம் அப்புறமா சொல்லறேன் அக்கா…இப்போ இந்த புத்தகத்தைத் திறந்து மட்டும் குடுங்கக்கா ப்ளீஸ்”

“ஐய்யோ!!! இதுக்கு எதுக்கு தம்பி ப்ளீஸ் எல்லாம் சொல்லிகிட்டு….தாங்க  தொறந்து தர்றேன்”

என்று புத்தகத்தை ராஜாவிடமிருந்து வாங்கித் திறக்க முயற்சித்தாள் ஆனால் புத்தகம் திறக்கவில்லை அதைப் பார்த்த மங்களம்

“என்ன தம்பி என்னைய வச்சு ஏதாவது காமிடி பண்ணறீங்களா? புதத்கத்தைப் பசைப் போட்டு ஒட்டிட்டு திறந்துத் தரச் சொல்லறீங்களா!”

“ஐய்யோ அக்கா!!!! நீங்க சூப்பர் போங்க!! பார்த்தயாடா அக்கா எப்படி கண்டுப் பிடிச்சுட்டாங்கனு. சரிக்கா நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க”

“டேய் ராஜா அவங்க கீழே போயிட்டாங்களா?”

“ம்..ம்..போயிட்டாங்க ராமு. இரு கதவ சாத்திடறேன். ம் இப்போ சொல்லு”

“என்னத்த சொல்ல அதுதான் அந்த புக்கு மறுபடியும் பூட்டுப் போட்டுகிச்சே”

“சரி எனக்கு ஒண்ணு புரியலை ராமு!! ஏன் மங்களம் அக்கா தொறந்துப் பார்த்தப்போ திறக்கலை?”

“எனக்கு என்ன தெரியும் ராஜா! நான் எங்க அம்மாகிட்ட குடுத்தும் திறந்து பார்க்கச் சொல்லியிருக்கலாமோ?”

“ஒரு வேளை இந்த புத்தகத்தை பெண்கள் திறந்தால் திறக்காதோ!!”

“அது தான் சொல்லறேன் என் அம்மாகிட்ட கொடுத்து திறக்க சொல்லியிருந்தேன்னா அந்த டவுட்டும் க்ளியர் ஆகியிருக்கும்ன்னு”

“சரி ராமு பண்ணியிருந்தா க்ளியர் ஆகியிருக்கும் அது தான் நீ பண்ணலையே !!!! இப்போ என்னப் பண்ணறது? அதை சொல்லு”

“சரி நான் போய் என் அம்மாகிட்ட கொடுத்து திறக்கச் சொல்லிப் பார்க்கறேன். திறந்துச்சுன்னா அப்படியே எடுத்துகிட்டு இங்கே வர்றேன் இல்லையா இந்த புக்கை எடுத்துகிட்டு போனா மாதிரியே திருப்பிக் கொண்டு வரேன்..‌நீ வெயிட் பண்ணு நான் ஓடி என் வீட்டுக்குப்  போயிட்டு வந்திடறேன்”

“டேய் ராமு நானும் வர்றேன் டா. என்னால உங்க வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரியாம இங்க நிம்மதியா உட்கார்ந்திருக்க முடியாதுப்பா”

“சரி வா வேகமா நடந்து போயிட்டு வந்துடலாம்”

“நடந்துப் போனா கூட லேட் ஆகிடும் வா என்னோட பைக்குல போயிட்டு வருவோம்”

என்று ராஜா கூறியதும் இருவருமாக ராமு வீட்டிற்குச் சென்றனர்.

அங்கே ராமுவின் அப்பா வேலை முடித்து வீட்டிற்கு வந்து  ஹாலில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் ராமு ராஜாவிடம்…

“டேய் ராஜா நீ என் அப்பாகிட்ட பேச்சுக் குடுத்திட்டே இரு. நான் போய் அம்மாட்ட புக்கைக் கொடுத்து திறந்துப் பார்க்கச் சொல்லறேன். என்னை என் அப்பா பிடிச்சுகிட்டார்ன்னா அப்புறம் காரியம் கெட்டுவிடும். புரியுதா!! உன்னை வச்சுதான் நான் மறுபடியும் உன் வீட்டுக்கு திறந்த புத்தகத்தோட வர முடியும். எங்க வீட்டுல வச்சுப் படிக்க முடியாது. சரியா”

“ம்…சரி சரி….ஹாய் அங்கிள். எப்படி  இருக்கீங்க?”

தொடரும்…….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s