அத்தியாயம் 40: கலவரமும்! கல்யாணமும்!

வேதாந்தகன் உள்பட அனைவருக்கும் இரவு உணவு தயார் செய்துக் கொண்டிருந்த சமையல்காரர்கள் இருக்குமிடத்திற்கு முழுமதியாளை அழைத்து….இல்லை இல்லை இழுத்தேச் சென்றான் கேசவன். முழுமதியாள் திரும்பி திரும்பி வேதாந்தகனையே பார்த்துக் கொண்டே கேசவன் பின் தொடர்ந்தாள். வேதாந்தகன் தன் கண்ணிலிருந்து மறைந்ததும் சுயநினைவுக்கு வந்த முழுமதியாள்

“கேசவன் அண்ணா நான் ஏன் சமையற்கட்டில் இருக்கிறேன்? எனக்கிங்கு என்ன வேலை? எப்படி? எப்போதிங்கு வந்தேன்?”

“சபாஷ். நான் உன்னை இழுத்துக் கொண்டு இங்கு வந்தது உனக்கு தெரியவில்லை…இல்லையா”

“என்ன சொல்லுகிறீர்கள் அண்ணா? என்னை ஏன் நீங்கள் இழுத்துக் கொண்டு சமையற்கட்டிற்குள் வரவேண்டும்?”

“ஏனெனில் அதுதான் அருகிலிருந்தது..போதுமா?”

“சரி ஏன் இழுத்து வந்தீர்?”

“ம்…சாப்பிடத் தான்.”

“அது தயாரானதும் அவர்களே கொண்டு வந்து தருவார்களே பின் ஏன் நாம் இங்கே வரவேண்டும்?”

“சரிம்மா சரி….உன்னை விட்டால் நீ பாட்டுக்குக் கேள்வி மேல கேள்வி கேட்டு கிட்ட போவ நானே சொல்லிடறேன்….நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறானே அந்த இளைஞன்”

“ஆமாம் வேதாந்தகன்! அவருக்கென்ன?”

“ம்….அவன் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அதனால் தான் அவனின் பார்வையிலிருந்து உன்னை அகற்றி இங்கே இழுத்து வந்தேன்”

“அப்படியா அண்ணா?”

“அடே அப்பா உனக்குத் தெரியாது!!!”

“பார்த்தார் தான்….ஆனால் நீங்கள் சொல்வதுப் போல எல்லாம் ஒன்றுமில்லை அண்ணா”

“நான் ஒண்ணுமே சொல்லவில்லையேம்மா”

“ஐய்யா சாப்பாடு தயாராகி விட்டது. பரிமாறலாமா?”

“ஆங்‌… ஆங்….சரி அம்மா நீங்கள் எடுத்து வாருங்கள் நாங்கள் அனைவரும் கையை கழுவி விட்டுச் சென்று அமர்கிறோம். வா முழுமதி நாம போகலாம்”

“அண்ணா நீங்க முதல்ல போய் உட்காருங்க…பின்னாடியே நான் வர்றேன்”

“ம்…சீக்கிரமா வந்திடுமா”

என்று கூறிவிட்டு அடுப்படியிலிருந்து வெளியே சென்று முழுமதியாளின் அம்மாவையும் பாட்டனாரையும் அமரவைத்து தானும் அமர்ந்துக் கொண்டே அந்த அறையின் மூலையில் நின்றிருந்த வேதாந்தகனையும் தன்னருகில் அமரச் செய்தான். அவர்கள் அனைவரும் வரிசையாக அமர்ந்ததும் வாழையிலைப் போடப்பட்டது. அதில் ஒவ்வொரு பதார்த்தமாக பரிமாறவும் செய்தனர். அதில் ஒவ்வொன்றும் மெல்ல ஒரு நடுவயது பெண்மணியால் பரிமாறப்பட்டது ஆனால் ஒரு சில இனிப்பு பதார்த்தங்கள் மட்டும் வேகவேகமாக இலையில் பரிமாறப் பட்டது. அதைப் பரிமாறுவது யாரென்று நிமிர்ந்துப் பார்த்தான் கேசவன். அதேப் போல தன் இலையில் சிலப் பதார்த்தங்கள் மெல்ல வந்ததையும் சிலது வேகமாக வந்ததையும் மேலும் சீக்கிரம் பரிமாறப்பட்ட இனிப்புகள் பரிமாறிய கரங்கள் மிகவும் அழகாக செக்கச்செவேலென மருதாணியிட்டு, கண்ணாடி வளையல்கள் சலசலக்க இருந்ததை கவனித்த வேதாந்தகனும் அது யாரென்று நிமிர்ந்துப் பார்த்தான்.
முழுமதியாள் தான் பரிமாறுகிறாள் என்றுணர்ந்ததும் இலையில் சாதத்தைப் பிசைந்துக்கொண்டே அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் அவனருகே பரிமாறச் சென்றவள் அங்கேயே ஓரமாக அமர்ந்துக் கொண்டு வேதாந்தகனையேப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அண்ணலும் நோக்க… அவளும் நோக்க…அவர்களை கேசவன் நோக்க….

“அம்மா முழுமதி போய் சாதம் எடுத்துட்டு வாம்மா…..அம்மா முழுமதி ….முழுமதி”

“ஆங் அண்ணா என்ன கேட்டிங்க?”

“உள்ளேந்து கொஞ்சம் சாதம் எடுத்துக் கிட்டு வாம்மான்னு சொன்னேன்”

“ஆங் இதோ வருகிறேன் அண்ணா”

என்று மின்னலைப் போலச் சென்று சாம்பார் பாத்திரத்தை எடுத்து வந்து நேராக வேதாந்தகன் இலையில் ஊற்றலானாள். அவனும் சாதத்தைப் பிசைந்துக் கொண்டே இருந்தான். இதை கவனித்த கேசவன்.

“முழுமதி….முழுமதி….”

“ஆங் அண்ணா …இதோ நீங்க கேட்ட சாம்பார்.”

“வெறும் இலையில சாம்பாரை ஊற்றிக்கொள்ள நான் என்ன வேதாந்தகனா என்ன?”

என்று கேசவன் சொன்னதும் வேதாந்தகன் நிகழ்காலத்துக்கு வந்தான். பின் அனைவரும் சட்டென சாப்பிட்டு எழுந்தனர். இதை இப்படியே வளர விட்டால் சரிவராது என்றெண்ணி முழுமதியாளின் தாயாரிடமும் பாட்டனாரிடமும் விவரத்தைச் சொல்லி முழுமதியாள் வேதாந்தகன் திருமணத்திற்கு அவர்களின் சம்மதத்தையும் வாங்கிக் கொண்டு நேராக வேதாந்தகனிடம் சென்று

“வேதாந்தகா!! எனக்கு புரிகிறது”

“என்னது?”

“எல்லாமும்….உனக்கு எங்கள் முழுமதியாளைப் பிடித்திருக்கிறது என்பதும்….அவளுக்கும் உன்னை மிகவும் பிடித்திருக்கிறது என்பதையும் நான் நன்கு அறிவேன்”

“ம்….அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை”

“பார்த்தயா….சரி போ….நான் தான் தப்பா நினைச்சுக்கிட்டு முழுமதியோட அம்மா, தாத்தாகிட்ட எல்லாம் உங்கள் இருவருக்கும் திருமணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சிட்டேன்….இப்போ அதுக்கென்ன அவங்க கிட்டப் போய் வேதாந்தகனுக்கு முழுமதியாளைப் பிடிக்கலையாம்னு சொல்லிட்டு வந்திடறேன்”

“அய்யயோ!!! அண்ணா நீங்க நினைச்சது எல்லாமே சரிதான். எனக்கு முழுமதியாளை ரொம்ப் பிடிச்சிருக்கு. அவளை திருமணம் செய்துக் கொள்ள எனக்கு சம்மதம் தான்”

“அப்படி வா வழிக்கு….ஒண்ணுமில்லையாமே!!!!”

அங்கு நடப்பதனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த முழுமதியாள் நேராக அவர்கள் இருவரும் இருந்த அறைக்குள் நுழைந்து

“இது உங்களுக்கே நல்லா இருக்கா அண்ணா? அதென்ன அவருக்கு என்னைப் பிடிச்சா மட்டும் போதுமா என்ன? அப்படி அவருக்கு பிடித்துவிட்டால் நான் அவரைத் திருமணம் செய்துக் கொண்டாக வேண்டுமா என்ன? என்னிடம் நீங்கள் யாருமே இவரைப் பிடித்திருக்கிறதா என்று கேட்கவேயில்லையே”

“அது நம்ம மரபு இல்லையேம்மா!!”

“அப்படி ஒரு மரபை உண்டாக்குங்கள். அதில் தவறொன்றுமில்லையே! திருமணம் என்னும் பந்தத்தில் இணையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பரஸ்பரம் பிடித்திருந்தால் தானே அவர்கள் இல்லறம் சிறப்புறும்!”

முழுமதியாளின் அமைதியான முகத்தையும் அவளின் மௌனத்தையுமே சில நாட்களாக ரசித்து வந்த வேதாந்தகனுக்கு அவளின் அன்றையப் பேச்சும் மிகவும் பிடித்துப் போய்

“அண்ணா முழுமதியாள் சொல்வதும் சரி தானே. அவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்று கேட்டுவிட்டு மேற்படி ஏற்பாடுகளைச் செய்யுங்கள்”

“அடடே சபாஷ் நீங்கள் இருவரும் சரியான ஜோடி தான்….அவளுக்கு உங்களை எவ்வளவு பிடித்திருக்கிறதென்பது எனக்கு நல்லாவே தெரியும் தம்பி..”

என்று மெல்ல வேதாந்தகனிடம் சொல்லிவிட்டு

“சரிமா நீயும் உன் விருப்பத்தைச் சொல்லிவிடு. அதன் பின் என்ன செய்யலாம் என்பதை முடிவெடுப்போம்”

“ம்…எனக்கு அவரைப் பிடித்திருக்கிறது.”

“அப்புறம் என்ன டும் டும் டும் கல்யாணம் தான்”

“அவசரம் வேண்டாம் கேசவன் அண்ணா. நான் அவரிடம் சிலவற்றை கேட்டு தெளிவுப் படுத்திக் கொண்ட பின்னரே எனது முழு விருப்பத்தையும் என்னால் சொல்ல முடியும். அதற்கு அவர் தயாரா என்றுக் கேட்டுச் சொல்லுங்கள்”

“தம்பி தான் எல்லாத்துக்கும் தயாரா இருக்கிறாரே மா. அப்புறம் என்ன? கூட்டிட்டுப் போய் பேசி தெளிவுப் படுத்திக்கோ. போங்க தம்பி”

என்றதும் வேதாந்தகன் முழுமதியாள் பின்னாலேயே சென்றான். அதைப் பார்த்த அவளின் தாய் கேசவனிடம்

“இந்த பொண்ணு ரொம்பத் தான் பண்ணுறா தம்பி. அப்பனும் இல்ல…வயசான தாத்துவும் அம்மாவும் தான் இருக்கோம். இதுல இவ்வளவு நல்ல புள்ளையை உங்களால கைப்பிடிக்கறதுக்கு அவ குடுத்து வச்சிருக்கணும். அதை உணராது ஏதேதோ சொல்லிகிட்டிருக்கு இந்த பொண்ணு. கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கணுமே”

“கவலைப் படாதீங்க மா. முழுமதி நல்ல வீரமான பொண்ணு. சமயோஜிதப் புத்தியும், எதற்கும் எவருக்காகவும் அஞ்சாத துணிச்சலும் நிறைஞ்சப் பொண்ணு. நீங்க அவளை நினைத்து வருத்தப்படுவதை விடுத்து பெருமைப் படுங்கள்.”

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே வெளியே தனியாக பேசச்சென்ற முழுமதியாளும் வேதாந்தகனும் உள்ளே வந்தனர் அப்போது முழுமதியாள் பெரியவர்களிடம் தனக்கு வேந்தாந்தகனைத் திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றாள். உடனே வேதாந்தகனை கட்டி அணைத்துக் கொண்டான் கேசவன். பின் அவனிடம்

“சரி அப்படி என்ன தான் என் தங்கை உன்னிடம் கேட்டாள்?”

“அது எனக்கும் தங்கள் தங்கைக்குமானது. அதை எப்படி உங்களிடம் நான் சொல்வேன்”

“சபாஷ். இதை தான் நான் எதிர்ப்பார்தேன். முழுமதியாள் சிறந்தவனைத் தான் தன் துணையாக தேர்ந்தெடுத்திருக்கிறாள். அம்மா நமது வீட்டுக்கு மாப்பிள்ளையாகப் போகிறார் வேதாந்தகன்.”

“ரொம்ப சந்தோஷம்ப்பா. நீயும் எங்க மதியும் ரொம்ப ஆண்டுகள் சந்தோஷமா பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்ப்பா. அது தான் என்னோட தினசரி வேண்டுதலாக இருக்கும்”

“வாழணும் இல்ல அம்மா நிச்சயம் வாழ்வார்கள். சரி நான் சென்று வீரசேகரன் தலைவரைப் பார்த்து விவரம் சொல்லி திருமணத்திற்கு வேண்டியவைகளை ஏற்பாடு செய்யத் துவங்குகிறேன்.”

“நானும் வரட்டுமா?”

“வேண்டாம். நீங்க இப்போ கல்யாண மாப்பிள்ளை. நீங்க இங்கேயே இவர்களையும் பார்த்துக் கொண்டு இருங்கள் நான் சென்று வந்து விடுகிறேன்”

“ம்…ஆகட்டும்”

கேசவன் வீரசேகரனிடம் சென்று நடந்தவைகளை எல்லாம் விளக்கமாக எடுத்துரைத்து திருமணத்திற்கு நல்ல நாள் குறிக்க வேண்டுமென கூறி நின்றான். அதைக் கேட்ட வீரசேகரன்

“கேசவா!!! திருமணத்திற்கு இது உகந்த நேரமல்ல”

“இன்றே நடத்த வேண்டுமென்றில்லை தலைவரே என்று நடத்தலாம் என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ளத் தான் வந்துள்ளேன்”

“இது என்றால் நான் கூறியது இன்றல்ல கேசவா…..இப்போது நாம் ஒரு முக்கியமான இக்கட்டான சூழலில் இருக்கின்றோம்…இந்த நேரத்திலா என்று தான் கேட்டேன்”

“ஓ!!! இளசுகள் ஒருவர் மீதொருவர் ஆசை வைத்து விட்டார்கள். அவர்களை சேப்பதிலாவது. நாம் இருக்கும் இந்த இறுக்கமான சூழ்நிலையிலிருந்து அனைவருக்கும் சற்றே விடிவுக் கொடுத்து மகிழ்ச்சிக்கலாமே தலைவரே!”

“ம்.‌..கேசவா!!! சரி நான் அமைச்சர்களுடனும், சாமியாரிடமும் கலந்துரையாடி விட்டு முடிவைச் சொல்லி அனுப்புகிறேன். இப்போது நீ சென்று வா”

“மிக்க மகிழ்ச்சித் தலைவரே! தங்களிடமிருந்து நல்ல செய்தியையே நானும் அந்த குடும்பத்தினரும் எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருப்போம். நான் வருகிறேன்”

“ம்…சென்று வா. இன்று மாலைக்குள் சொல்லி அனுப்புகிறேன்”

கேசவன் வீட்டிற்குச் சென்றதும் முழுமதியாளும் வேதாந்தகனும் விவரமறிய அவனருகே சென்று அமர்ந்துக் கொண்டு கேட்டனர். கேசவனும் தலைவரோடுடனான உரையாடலை சொல்லி முடித்தான். அதைக் கேட்டதும் முழுமதியாள்

“அவர் சொல்வதும் சரிதானே அண்ணா. மற்ற ஊர்கள் எல்லாம் அழிந்த இந்த நேரத்தில் எங்களுக்கு இந்த திருமண வைபோகம் வேண்டுமா என்ன?”

“என்ன சொல்கிறாய் மதி?”

“ஆமாம் அண்ணா முழுமதி சொல்வதும் சரிதான். எங்கள் ஊரையும் என் மக்களையும் நான் இழந்துள்ள இந்த நிலையில் இது தேவை தானா என்று இப்போது எனக்கும் தோன்றுகிறது”

“அட வேதாந்தகா நீயுமா? இருங்கப்பா தலைவர் மாலைக்குள் சொல்லி அனுப்புவதாக கூறியிருக்கிறார் அதுவரைப் பொறுமையாக இருங்களேன்”

“இல்லை அண்ணா ஏதோ வயதுக் கோளாறில் இப்போதிருக்கும் ஊரின் நிலைமையை மறந்து இப்படி நடந்துக் கொண்டு விட்டேன். உங்கள் ஊரையும் மனைவியையும், வேத்ந்தகரின் ஊரையும் குடும்பத்தினரையும் அழித்த அந்த தீய சக்திகளை நாம் அழிப்பதே நமது முதல் கடமை. அவற்றிடமிருந்து பிரயாகாவைக் காப்பாற்ற வேண்டும். அது நடந்தப் பின் மற்றவைகளைப் பற்றி யோசிப்போம். என்ன சொல்கிறீர்கள் வேதாந்தகரே”

“அது தான் சரி முழுமதி. எங்களை மன்னியுங்கள் கேசவன் அண்ணா. எங்களின் சிறுபிள்ளைத்தனமான முடிவுக்கு மரியாதைக் கொடுத்து தலைவர் வரைச் சென்று எங்களுக்காக பேசியதற்கு மிக்க நன்றி.”

“அடே பசங்களா கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா. எந்த முடிவெடுத்தாலும் அவசரம் தானா? மதி நீ உன் அம்மாவையும் தாத்தாவையும் கொஞ்சம் யோசித்துப் பார். அவர்களுக்கும் உன் திருமணம் பார்க்க வேண்டுமென்ற ஆசையிருக்காதா?”

“இருக்கட்டும் அண்ணா. நமக்கும் அந்த தீயசக்திகளுக்குமான இந்த யுதத்தை ஜெயித்தப் பின் பண்ணிக்கொண்டால் போச்சு. அதுவரை நாங்கள் இருவரும் காத்திருக்கத் தயார். தயவுசெய்து பெரியவர்களான தாங்களும் காத்திருத்தல் வேண்டும்”

“சரி மா…இன்று மாலை வரை இருவரும் காத்திருங்கள். நம்ம தலைவர் வீரசேகரன் என்ன முடிவெடுக்கிறாறோ அதுபடி செய்யுங்கள்.”

தொடரும்……
Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s