அத்தியாயம் 5: குழந்தையும், நாகமும்!

ராஜா பக்கத்தைத் திருப்பியதும் ராமு அவனிடம்

“அந்த பக்கத்துல கறுப்பு நிற ராட்சத பட்டாம் பூச்சி வரைஞ்சிருக்கா? அதோட ரெக்கையில இரண்டு இதயங்கள் வரைஞ்சிருக்கா?”

“ஆமாம் நீ சொன்னா மாதிரி தான் இருக்கு. டேய் ராமு நீ பார்த்துட்டு தானே இங்கே எடுத்துட்டு வந்திருக்க அப்புறமென்ன இருக்கா இருக்கான்னு கேட்கிற? ஏதோ மாயாஜாலமா நீ இதுல கொண்டு வந்தா மாதிரி இருக்கு நீ பேசுறது”

“இரு இரு இப்போப் பாரு !! கொஞ்ச நேரத்துல மாயாஜாலம் போல தான் இருக்கும் வெயிட் ராஜா வெயிட்…எதுக்கும் அந்த புக்கை உன் முகத்திலிருந்து சற்று தள்ளி வச்சுக்கோ”

என ராமு கூறியதும் இருவரும் காத்திருந்தனர் ஆனால் ராமுவுக்கு நடந்தது ராஜாவுக்கு நடக்கவில்லை. புத்தகத்திலிருந்து பட்டாம்பூச்சிகள் பறந்து வரவில்லை. அதை பார்த்ததும் ராமு ராஜா அருகே வந்து

“அது ஏன் நீ இந்த பக்கத்தைத் திருப்பியதும் வரவில்லை!!!! புரியலையே!!”

“ராமு என்ன வரலை? கதைக்காக அலைஞ்சதுல நீ ரொம்ப குழம்பிப் போயிருக்கனு நினைக்கறேன்”

“இல்ல ராஜா நான் அந்த பக்கத்துக்கு வந்து அந்த பட்டாம்பூச்சி ஓவியத்தைப் பார்த்ததும் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிங்க என் முகத்துக்கு முன்னாடி பறந்து வந்துச்சு ஆனா நீ பார்க்கும் போது ஏன் வரலைன்னு தெரியலையே?”

“என்ன டா சொல்லுற ராமு!! உண்மையாவா?”

“ஆமாம் நான் சொல்லுறது அத்தனையும் உண்மை தான். சரி நீ இந்த பக்கத்தையும் திருப்பு என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்”

என்று ராமு கூறியதும் ராஜா மெல்ல பட்டாம்பூச்சி வரையப்பட்டிருந்த பக்கத்தைத் திருப்பினான். அதில் ஒரு அழகான குழந்தைப் படம் வரையப்பட்டிருந்தது. அதை ராஜாப் பார்த்ததும்

“என்னடா இது குழந்தைப் படம் போட்டிருக்கு”

என்று ராமுவிடம் சொன்னதும் அந்த ஓவியத்திலிருந்த குழந்தை குவாக், குவாக், குவாக் என சத்தமாக அழத் துவங்கியது. ராஜாவின் அறையிலிருந்து குழந்தையின் அழுகுரல் கீழே ஹாலை சுத்தம் செய்துக் கொண்டிருந்த மங்களத்துக்கு கேட்டது. உடனே அவள் அலறி அடித்துக் கொண்டு அவன் அறைக்குச் சென்று கதவைத் தட்டி..

“தம்பி, தம்பி.. ராஜா தம்பி…. கதவை திறங்க தம்பி. உங்க ரூம்ல குழந்தை அழுவுற சத்தம் கேட்குது தம்பி.”

“ஆங் மங்களம் அக்கா இருங்க இதோ வர்றேன்”

என கூறி அந்த புத்தகத்தை மூடி கீழே வைக்கப் பார்த்தான் அப்போது ராமு அவனிடம்

“டேய் ராஜா புத்தகத்தை மூடாதே. அப்புறம் திறக்க முடியாம போயிடப்போவுது. நான் செய்த தப்ப நீயும் செய்யாதே”

“அப்போ என்ன தான் செய்றது இப்போ அந்த அக்கா உள்ளே வந்தா இதைப் பார்ப்பாங்களே! இந்த குழந்தையின் அழுகையும் அடங்க மாட்டேங்குதே”

“சரி ஒண்ணுப் பண்ணு அந்த புக்கை மெத்தையில் கமுத்தி வச்சிடு. அப்போவாவது சத்தம் குறையுதான்னுப் பார்ப்போம்”

ராஜா தன் மெத்தியில் அந்த புத்தகத்தை கமுத்தி வைத்ததும் குழந்தையின் அழுகுரல் நின்றது. பின் வேகமாகச் சென்று அறையின் கதவைத் திறந்தான். மங்களம் உள்ளே வந்து

“என்ன தம்பி இவ்வளவு நேரமா ஒரு குழந்தை அழுவுற சத்தம் இந்த வீட்டையே உலுக்கிச்சு!!! இப்போ நீங்க கதவைத் தொறந்ததும் அழுவுற சத்தத்தையே காணமே? என்ன ஆச்சு தம்பி? நான் கீழே சுத்தம் செய்துக்கிட்டு இருந்தேன். சத்தம் கேட்டதும் ஓடி வந்தேன். ஏன் நீங்க ரெண்டு பேரும் பேயறைஞ்சா மாதிரி நிக்குறீங்க? நான் வேணும்னா ஐய்யாவுக்கோ இல்ல அம்மாவுக்கோ ஃபோன் போட்டுச் சொல்லவா?”

“ஐயோ !! மங்களம் அக்கா. ஏன் நீங்க என்னென்னவோ யோசிக்கிறீங்க! நாங்க கொஞ்சம் டிவில வால்யூம் ஜாஸ்த்தி வச்சிட்டோம் அவ்வளவு தான்.”

மங்களம் டிவியைப் பார்த்தாள்…

“ஆனா டிவி ஆஃப் ஆகி இருக்கே தம்பி!”

“இதோ இப்ப நீங்க கதவைத் தட்டியதும் தான் அதை ஆஃப் செய்தேன். நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க அக்கா”

“அப்படியா!!! சரி தம்பி நான் வரேன்”

“அக்கா நான் கூப்பிட்டா மட்டும் வந்தா போதும் சரியா”

“சரி தம்பி”

என்று கூறிச் சென்றாள் மங்களம். அவள் சென்றதும் ரூமின் கதவை தாழிட்டு விட்டு மீண்டும் அந்த புத்தகத்தை கையில் எடுத்தான் ராஜா. அதிலிருந்து மீண்டும் குழந்தையின் அழுகுரல் வந்தது. அதை நிப்பாட்ட முடியாமல் தவித்த ராஜாவிடம் ராமு

“ராஜா சீக்கிரம் அடுத்தப் பக்கத்தை திருப்பிடு டா. அப்போ தான் இந்த சத்தம் நிக்கும் போல….ம்…சீக்கிரம் ….இல்லாட்டி மறுபடியும் மங்களம் அக்கா வந்திடப் போறாங்க”

ராஜாவும் வேகமாக அடுத்தப் பக்கத்தைத் திருப்பினான். அந்த பக்கத்தில் அடர்ந்த காடு ஒன்றின் படம் வரையப்பட்டிருந்தது. அந்த பக்கத்தைத் திறந்ததும் அந்த காடு உயிர்ப்பித்தது. பறவைகளின் சப்தமும், வண்டுகளின் ரீங்காரமும், பூச்சிகளின் சத்தம், மிருகங்கள் புதர்களின் ஊடே செல்லும் போது ஏற்படும் சலசலப்பு சப்தம், காட்டின் நடுவே ஓடும் சிறிய ஓடை நீரின் சப்தம் என இனிமையாக ஒலித்தது. அவற்றையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் போது அதிலிருந்த ஒரு மரத்தை உற்றுப் பார்த்தான் ராமு. அந்த மரம் முழுவதும் கறுப்பு நிற ராட்சதப் பட்டாம்பூச்சிகள் நிறைந்திருந்தன. அதை ராஜாவுக்கு காண்பித்தான் ராமு. உடனே ராஜா

“அட ஆமாம் என்னடா ராமு இந்த பட்டாம்பூச்சிங்க நீ சொன்னா மாதிரியே இருக்கு!!!”

என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த மரத்தின் கிளையில் கொடிப் போல தொங்கிக் கொண்டிருந்த நாகம் ஒன்று ராஜாவின் முகத்தருகில் உஸ்ஸென்று சீறியது. அதைப் பார்த்ததும் அதனிடமிருந்து தப்பிப்பதாக எண்ணி புத்தகத்தை கீழே வீசி எறிந்தான் ராஜா.

தொடரும்….























Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s