அத்தியாயம் 39: த்ரிகான்தக்கும் வேதாந்தகனும்!

நவியாகம்ஷி அவளின் தோழி யாகம்யாழியின் வருகையை விவரித்ததும் அனைவரும் ஒன்றாக பரமபதம் அரண்மனையின் வாயிற் கதவைத் திறந்துக் கொண்டு காத்திருந்தனர். யாகம்யாழியின் குதிரையும், சிகராசுரன் குதிரையும் வேகமாக வந்து அரண்மணை வாயிலில் சட்டென நின்றது. இருவரும் கீழே தரையில் இறங்கி ஆசானை வணங்கினார்கள். அதை ஏற்றுக்கொண்ட காற்கோடையன்

“ம்…பலே யாழி, பலே சிகரா. நீங்களும் உங்களது வேலையை செவ்வனே செய்துள்ளீர்கள் என்று தங்கள் பின்னால் திரண்டு வந்துள்ள நமது அடிமை சாம்பீனிகளின் எண்ணிக்கையைப் பார்த்தாலே புரிந்துக் கொள்ள முடிகிறது. சபாஷ் வாருங்கள் உள்ளே சென்று மற்றவைகளைப் பேசுவோம்”

என்று கூறியதும் அடிமைகளை அவைகள் இருப்பிடத்திற்கு வழிக் காட்டிவிட்டு ஆசானைத் தொடர்ந்துச் சென்றனர் யாகம்யாழியும், சிகராசுரனும்.
உள்ளே சென்று அனைவரும் அமர்ந்ததும் காற்கோடையன் யாழியையும், சிகராவையும் பார்த்து

“ம்…இப்போது சொல்லுங்கள் எங்களுக்கு த்ரிகான்தக்கிலிருந்து என்ன செய்தி கொண்டு வந்துள்ளீர்கள்?”

“அந்த ஊரின் தலைவன் உட்பட அனைவரையும் கொன்று சாம்பீனிகளாக்கி கொண்டு வந்துள்ளோம் ஆசானே…..ஆனால்….”

“என்ன ஆனால்….என்று இழுக்கிறாய் சிகராசுரா?”

“அது ஒண்ணுமில்லை ஆசானே ஒரே ஒருவன் மட்டும் எங்களிடமிருந்து தப்பிவிட்டான்”

“அப்படியா யாழி? யார் அவன் எப்படித் தப்பித்தான்?”

“அவன்….அவன்….”

“என்ன சிகரா ஏன் இந்த குழப்பம்?”

“ஆசானே நாங்கள் அந்த ஊருக்குள் நுழைவதற்கும் அந்த நரன் அங்கிருந்து புறப்படுவதற்கும் சரியாக இருந்தது. இது கூட அவர்களில் ஒருவன் இறக்கும் முன் என்னிடம் சொன்னதால் தான் தெரிய வந்தது.”

“அப்படியா? என்ன சொன்னான்? அப்படி சொன்னவன் யார்?”

“ஆமாம் ஆசானே! அவன் அந்த ஊரின் தளபதி. அவன் இறக்கும் போது நம்மை அழிப்பதற்காக ஒருவன் பிரயாகா சென்றுள்ளதாகவும், அவன் அங்கே சென்றடைந்ததும் நம் அழிவு ஆரம்பமாகும் எனவும் கூறிவிட்டு இறந்துவிட்டான். உடனே நானும் சிகராசுரனுமாக காட்டுக்குள் சென்று தேடிப்பார்த்தோம் ஆனால் அப்படி எவரும் எங்களுக்குத் தென்படவில்லை. எங்கள் இருவரின் சித்நியை உபயோகித்தும் பார்த்தோம்!! பயனின்றி போனது. ஒரு வேளை அந்த தளபதி பொய் சொல்கிறானோ என்றெண்ணி திரும்பி வந்துவிட்டோம்”

“ம்….அவன் பொய் சொல்லவில்லை யாழி”

“ஐய்யோ அப்படியா? அப்படி என்றால் நாங்கள் மீண்டும் சென்று தேடிப் பிடித்திழுத்துக் கொண்டு வருகிறோம். உத்தரவிடுங்கள் ஆசானே”

“இல்லை சிகராசுரா….இல்லை அது உங்களால் இனி முடியாது.”

“ஏன் ஆசானே?”

“அவன் இன்னேரம் பிரயாகா எல்லையை சென்றடைந்திருப்பான்”

“எதற்கு அவன் பிரயாகா செல்ல வேண்டும்?”

“அது ஒரு பெரிய கதை யாழி நீ வா உனக்கு நான் விவரமாக சொல்கிறேன்.”

என்று யாகம்யாழியை நவியாகம்ஷி கூட்டிச்சென்றாள். அப்போது மந்திராசுரனிடம் ஆசான்

“மந்திரா நம்ம சிகராசுரன் கலைத்து வந்திருக்கிறான். அவனை அழைத்துச் சென்று அவனுக்கும் அனைத்தையும் விளக்கிவிடு”

“ஆகட்டும் ஆசானே. சிகராசுரா வா செல்வோம்”

என்று சிகராசுரனை அழைத்துச் சென்றான் மந்திராசுரன். எல்லோரும் அவர்கள் பின்னாலேயே சென்றதும் அந்த இடத்தில் ஆசானும் மதிநாகசுரனும் மட்டுமிருந்தனர். அப்போது மதிநாகசுரன் ஆசானிடம்

“ஆசானே இப்போது நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும்? நம்மிடமிருப்பது அந்த ஞானானந்தமும் அவன் குடும்பமும் தான். அவர்களை வைத்து நாம் என்ன செய்வது?”

“என்ன வேண்டுமானாலும் செய்யலாம் மதிநாகசுரா…என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதற்கு முன் அவர்களிடமிருக்கும் அந்த நீர்த்துளி பதக்கத்தை நாம் நமதாக்கிக் கொள்ள வேண்டும். அதையும் அவர்களையே செய்ய வைக்க வேண்டும்”

“அது எப்படி சாத்தியமாகும் ஆசானே?”

“அதை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னிடம் விட்டுவிடு. சரி இப்போது அவந்தி, த்ரிகான்தக், மாயாபுரி மக்கள் நமது அடிமைகளாகி விட்டனர். இன்னும் அந்த பிரயாகா உள்ளது. அங்கே அவர்கள் என்ன செய்யவிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள ஏதாவது வழியை முதலில் நாம் கண்டறிய வேண்டும்”

“ஆசானே இந்த நரன்களுடன் போரிட்டு நமது நேரத்தை விரயம் செய்யாமல்…..”

“ம்…ஏன் நிறுத்தி விட்டாய் மதிநாகசுரா? சொல்ல வந்ததை முழுவதுமாக சொல்லி விடு…விரயம் செய்யாது!! நாம் என்ன செய்ய வேண்டும்?”

“நாம் தான் மற்ற அனைத்து ஊர் மக்களையும் அழித்து பெரும்படையைத் திரட்டி விட்டோமே! பேசாமல் நேராக அந்த இந்திரனை நோக்கிப் படையெடுத்து அவனை அழித்து விட்டோமே என்றால் எல்லாம் முடிவுக்கு வந்துவிடுமே!”

“அப்படி வந்துவிட்டால் நல்லது தான் மதிநாகசுரா. ஆனால்….அதை அவ்வளவு சுலபமாக்கிட மாட்டார் அந்த இந்திரனை காப்பாற்றும் …அந்த மும்மூர்த்திகளும். இப்போதைக்கு பொறுமையை கையாள்வது மிக மிக அவசியம். புரிந்ததா?”

“இதைத் தானே என் சிறு லயது முதல் இன்று வரை என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்?புரியாமல் இருக்குமா?”

“இல்லையே புரிந்ததைப் போல எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் இப்போதும் நீ சீக்கிரமாக இந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்து ஆட்சி செய்ய தவக்கிறாய். சரிதானே?”

“ஆட்சிக்காக இல்லை ஆசானே!”

“பின்ன வேறு எதற்காக இந்த அவசரம்?”

‘அவசரமில்லை ஆசானே. தேவையின்றி எதற்கு அந்த பிரயாகாவையும் அதிலிருக்கும் நரன்களையும் பற்றி நாம் நமது பாதையிலிருந்து வழி மாற வேண்டும் என்று தான் கேட்டேன்!”

“அது வழி மாறி போவதல்ல மதிநாகசுரா…நாம் போக வேண்டிய வழி தெளிவாக தெரிவதற்காகவும்…இடையே ஏதும் தடங்கல் எந்த ரூபத்திலும் வந்துவிடக் கூடாதென்பதற்காகவும் தான் அந்த வழியைத் தேர்ந்தெடுத்துள்ளோம்‌. மேலும் இந்த வழியே இதுவரை நாம் சென்றதால் தான் நம்மிடம் பெரும் சாம்பீனிப் படையே உருவாகியுள்ளது. இங்க நடப்பதனைத்தையும் பார்த்து அந்த பரந்தாமனிடம் உதவிக் கேட்டு ஓடியிருப்பான் அந்த இந்திரன்‌. அதனால் தான் நமக்கு சில இடையூறுகள் வருகிறது.”

“ஓ!!! சரி ஆசானே அப்படியே செய்வோம். மதிநாகசுரா ஒருவேளை அந்த இந்திரனை நாம் வென்றோமே என்றால்….”

“அது என்ன “மே” “என்றால்” என்று கூறுகிறீர்கள் ஆசானே? நம்மால் முடியும்.”

“சரி முடியும். அவனை வென்றதும் நீ நமது அசுரர் குலத்தையே ஆளப் போகிறவன் இல்லையா!! அதனால் இன்னும் சற்று பொறுமையை வளர்த்துக் கொள் மதிநாகசுரா. பொறுமை என்ற குணம் நமக்கு பல வழிகளைக் காட்டும் வல்லமைப் பெற்றதாகும்.”

“ஆகட்டும் ஆசானே!”

“என்ன குரல் வெளியவே வர மாட்டேன் என்று அடம் பிடிப்பது போல தெரிகிறதே?”

“ஆகட்டும் ஆசானே”

“அது என் மதிக்கு அழகு. மன்னிக்கவும் எங்கள் குலத்தலைவருக்கு அழகு!”

பிரயாகாவில் கோதகனை மாயாபுரி தலைவர் தனியாக அழைத்துச் சென்றதும் கேசவனை வீரசேகரன் அழைத்துக் கொண்டு முழுமதியாள் இருப்பிடத்திற்கு சென்றார். அங்கே முழுமதியாள் அவள் தாயார் அண்ணம், மற்றும் அவளின் பாட்டனார் லோகேசுவரன் இருந்தனர். வீரசேகரன் அவர்களிடம்

“தாயே இவர் பெயர் வஜ்கேசவன். இவர் மாயாபுரியிலிருந்து உங்கள் மகளிடம் நான் கொடுத்ததுப் போலவே ஒரு மரப்பேழையை கொண்டுவந்துள்ளார். இவர் சில நாட்களுக்கு இங்கே தங்களுடனே தங்க வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் இருவருக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர்களும் பிரயாகா வந்ததும் இந்த மரப்பேழையை என்ன செய்ய வேண்டுமென்று கூறப்படும். அதுவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்….இருவரையும் மற்றும் இரண்டு மரப்பேழைகளையும்.”

“ஆகட்டும் தலைவரே. தாங்கள் சொல்வது பேலவே செய்ய நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம். வாப்பா உள்ளே வா.”

“நன்றி அம்மா. தலைவரே…..நான் ஏன் இங்கு தங்க வேண்டும்? கோதகனும் எங்கள் மாயாபுரி தலைவரும் எங்கே? நான் அவர்களுடனே இருந்துக் கொள்கிறேனே”

“அவர்கள் இருவரையும் வேறொரு வேலையாக அனுப்பியுள்ளேன். அவர்கள் வரும் வரை நீங்கள் இவர்களுடனே இருந்துக் கொள்ளுங்களேன். இந்த பெண் முழுமதியாளுக்கும் இரண்டு பெரியவர்களுக்கும் துணையாக இருக்குமல்லவா!”

“ஆகட்டும் தலைவரே! எங்கள் ஊர் தலைவரும் கோதகனும் அவர்கள் வேலைகளை முடித்ததும் இங்கே வந்திடச் சொல்லுங்கள்…இல்லை இல்லை அது மரியாதையாக இருக்காது. ஒரு செய்தி அனுப்புங்கள் நானே அங்கு வந்துவிடுகிறேன்”

“ம்……அப்படியே ஆகட்டும். நான் வருகிறேன்”

என்று வீரசுகரன் சென்றதும் முழுமதியாளின் பாட்டனார் கேசவனின் குடும்ப விவரங்கள் மற்றும் ஊர் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துக்கொண்டிருக்கையில்…..கேசவன் கூறுவதை உன்னிப்பாக கவனித்தாள் முழுமதியாள். தன் மனைவி தீய சக்திகளுக்கு இரையாதை சொன்னதும் ….

“ஐய்யோ பாவம் அந்த அக்கா. எவ்வளவு கஷ்டப்பட்டாங்களோ”

“ஆமாம் மா. எனக்கும் அதை நினைத்தால் தான் கவலை தொண்டையை அடைக்கிறது. இதில் என்ன கூத்தென்றால் அவள் உயிருடன் இருக்கிறாளாம் ஆனால் மனித ரூபத்தில் இல்லையாம்!!! இந்த கொடுமையை எங்கே சொல்வது.”

“எந்த ரூபத்திலிருந்தால் என்ன அவங்களுக்கு உங்க மேலே இருக்கும் அன்பும் பாசமும் அதே போல அவங்க மேல உங்களுக்கு இருக்கும் அன்பும் பாசமும் நிச்சயம் ஒரு நாள் உங்கள் இருவரையும் சேர்க்கும் பாருங்கள்..”

“உன் வார்த்தை பலித்தால் உன் அண்ணனான நான் உனக்கு என்ன வேண்டுமானாலும் ச
வாங்கித் தருவேன்”

“என்ன வேண்டுமானாலுமா?”

“என் சக்திக்கு உட்பட்டதென்றால் நிச்சயமாக வாங்கித்தருவேன் அல்லது செய்துத் தருவேன்”

“ம்…தாங்கள் எனக்காக இப்படி சொல்வதே எனக்கு சந்தோஷமளிக்கிறது. நன்றி கேசவன் அண்ணா”

“ஆஹா!! பிரயாகாவில் எனக்கொரு தங்கை கிடைத்துவிட்டாள்”

என்று கூறிக்கொண்டு அண்ணனும் தங்கையும் மகிழ்ந்தனர்.

பிரயாகவிற்கு வேதாந்தகன் என்றொருவர் த்ரிகான்தக்கிலிருந்து வந்திருப்பதாகவும், அவரிடம் அதே போல மரப்பேழை இருப்பதாகவும் வீரசேகரனுக்கு அவன் எல்லைக் காவலரிடமிருந்து செய்தி வந்ததும்… உடனே எல்லைக்குச் சென்று வேதாந்தகனை முழுமதியாள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனையும் அங்கேயே தங்கும்படி சொல்லிவிட்டு அவர்களுக்கு தேவையான காவலாளிகளை நியமித்து, சாப்பாட்டிற்கு சமையல்காரர்களையும் ஏற்பாடு செய்துவிட்டுச் சென்றார்.

பனை மரத்தில் பாதி உயரமும், நிலவும் தாமரையும் ஒன்றென கலந்த நிறமும், அழகான முகப் பொலிவும், அகன்று விரிந்த தோள்களும் கொண்ட இளைஞன் வேதாந்தகனைக் கண்டதும் முழுமதியாள் தன்னையே மறந்து நின்றாள்.

முழுமதியாள் அவள் பெயருக்கு ஏற்றார் போலவே அந்த நிலவின் ஒளி அவள் முகத்தில் மின்னியது. நீள் நீண்ட தலைமுடியை வாரி இறுக்கப் பின்னியக் கூந்தலை மல்லிகையும் ரோஜாவும் அலங்கரித்துக் கொண்டிருந்தது. அழகிய புடவையில் பெண்களுக்கே உரித்தான வெட்கத்துடன் நாணி நின்றிருந்தவளின் அழகில் பிரயாணக் களைப்பைக் கூட மறந்து அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனிடம் கேசவன்

“தம்பி ….தம்பி….தம்பீஈஈஈ”

“ஆங் !!ஆங் !!! சொல்லுங்கள்”

“இங்க இங்கப்பா…கூப்பிட்டது நானு. என் பேரு கேசவன்.”

“ஓ!! அப்படியா?”

“என்னப்பா ? ஓ!! அப்படியான்னு மட்டும் கேட்குற? நானும் உன்னைப் போல எங்க ஊரான மாயாபுரியிலிருந்து வந்திருக்கிறேன்”

“ஆங்…சரி. என் பெயர் வேதாந்தகன்”

“ஆங் ஆங் அதுதான் தலைவர் சொல்லிட்டாரே. உன்னைப்பத்தி மேலே சொல்லுப்பா…தம்பி…தம்பீபீபீபீ..சரியா போச்சு போ!! அம்மா முழுமதியாள் நீ உள்ளே கொஞ்சம் போறியாமா….தம்பி அப்போதான் பேசும் போல…”

“ஆங் …அண்ணா என்ன சொன்னீங்க?”

“சரியாப்போச்சு. நீ வா நாம பின்னாடிப் போயி வந்தவருக்கு சாப்பாடு தயார் செய்யலாம்”

என்று அங்கிருந்து நகர விரும்பாதவளை பிடித்து இழுத்துச் செல்லாத குறையாக கூட்டிச்சென்றான் கேசவன். இப்போதா அவளின் அண்ணனாயிற்றே!!

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s