அத்தியாயம் 3: புதிரான பக்கங்கள் !

புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்த முகவுரையைப் படித்தான் அதில்

“உங்களோடு நான்
இணைந்திருந்தேன்
பிரித்திட யாருமின்றி
வாழ்க்கையை வாழ்ந்திருந்தோம்
பிரித்தனவே நம்மை
ஆண்டவனோ!! இயற்கையோ!!
இணைந்திடுவோம் வாரீர்!!!
உங்களோடு நான் இருப்பது இதைப் படிக்கும் உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகும். நன்றாக கவனமாக பார்த்து! படியுங்கள்! பார்த்தும், படித்தும் புரிந்தால் தேடுவீர்கள் என்னை.

இப்படிக்கு
சாண்டி”

என்று படித்துக் கொண்டிருக்கும் போது ரூமினுள் நுழைந்த லீலாவதி

“ஏன்டா ராமு ஏன் உன் முகமெல்லாம் இப்படி வியர்த்து விடுது? என்ன ஆச்சு? இதுக்குத்தான் இந்த மாதிரி கண்ட கண்ட புத்தகத்தை எல்லாம் படிக்காதேன்னு சொன்னேன். இந்தா இந்த துண்டை வைச்சு முகத்தை துடைச்சுக்க”

டப்பென புத்தகத்தை மெத்தை மீது வைத்துவிட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டான் ராமு. தன் அம்மா வெளியே சென்றதும் மீண்டும் படிக்கலானான்…அடுத்த பக்கத்தைத் திருப்பினான் காலியாக இருந்தது.

“என்ன காலியா இருக்கு? இதுக்கா மொதோ பேஜ்ல அவ்வளவு பில்ட்அப்பு!!”

என்று தனக்குத் தானே பேசிவிட்டு பார்த்தவன் அதிர்ந்துப் போனான் ஏனெனில் அந்த காலியான பக்கத்தில் கிடுகிடுவென ஓர் வீடு எந்த வித எழுதும் உபகரணமின்றி தானாக வரையப்பட்டது. அந்த வீட்டை நன்றாக பார்த்தான் ராமு. அது ஏதோ காட்டு வாசிகளின் குடில் போல அவனுக்கு தோன்றியது. சரி வேற ஏதாவது இன்னும் வரையப்படுமோ என்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த பக்கத்தில் அவ்வளவு தான் என்று எண்ணி அடுத்தப் பக்கத்தை திருப்பினான்.

அதில் அழகான கறுப்பு நிற பட்டாம்பூச்சியின் மீது இரண்டு சிவப்பு நிற இதயங்கள் வரையப்பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த புத்தகத்தின் உள்ளிருந்து பட்டாம் பூச்சிகள் நூற்றுக் கணக்கில் சட்டென ராமுவின் முகத்துக்கு முன் பறந்து வந்ததில் பயந்து “ஆ”என்று கத்திக்கொண்டே புத்தகத்தை கீழே போட்டான். கீழே புத்தகம் வீழ்ந்ததும் சர்ரென்று கட்டிலுக்கு அடியில் சருக்கிச் சென்றது. அதை தன் தங்கையின் பேட்மிண்டன் ராக்கெட்டின் கைப்பிடிக் கொண்டு தள்ளித் தள்ளி வெளியே எடுத்தான். எடுத்ததும் திறக்க முயற்சித்தான் ஆனால் அவனால் திறக்க முடியவில்லை. அதைப் பார்த்ததும் அப்படியே உறைந்து நின்றான். அவன் ‘ஆ’ என்று கத்திய சத்தம் கேட்டு அடுப்படியிலிருந்து ஓடி வந்த லீலாவதி

“டேய் ராமு என்னடா ஆச்சு? ஏன் கத்தின? ராமு ராமு”

என்று இரண்டு முறை கூப்பிட்டு உலுக்கியப் பிறகே சுயநினைவிற்கு வந்தவன் அந்த அறையை சுற்றி சுற்றிப் பார்த்தான் ஒரு பட்டாம்பூச்சிக் கூட இருக்கவில்லை உடனே

“ஆங் அம்மா!!”

“என்னப்பா ஆச்சு? ஏன் இப்படி நிக்கிற?”

“அம்மா இந்த புக்க கீழே போட்டேன் ல அது தான் ஆ ன்னு கத்தினேன். வேற ஒண்ணுமில்லை மா. நீங்க போய் உங்க வேலையப் பாருங்க மா”

“வேற ஒண்ணுமில்லையே ராமு!!! இதுக்குத் தான் இந்த மாதிரி புத்தகத்தை எல்லாம் படிக்காதேன்னு சொன்னேன்!! நீ கேட்கலை”

“அம்மா ஒண்ணுமில்லைமா நீங்க தான் இந்த புக்கை படிக்காமயே இவ்வளவு பயப்படுறீங்க..நான் பார்த்துக்கறேன் நீங்க போங்க மா”

“பார்த்துப்பா எங்களுக்கு இருக்கிறது ஒத்த ஆம்பளப்புள்ளப்பா நீ!!!”

“அய்யயோ அம்மா என்னமோ நான் எங்கயோ போகப்போறா மாதிரி பேசறீங்க…உங்களோட காமெடியா இருக்குமா.”

“இருக்கும் டா இருக்கும்!!! காமடியா இருக்காம் இல்ல?”

என்று கூறிக்கொண்டே அடுப்படியில் வேலைகளை முடித்துவிட்டு ஹாலில் ஃபேனை போட சுவிட்சில் கையை வைத்துக் கொண்டே ஃபேனைப் பார்த்தவள்

“டே….ய்…. ராமு இங்க வாடா”

என்று சத்தம் போட்டு கூப்பிட ராமு என்னமோ ஏதோ என்று அவன் ரூமிலிருந்து ஓடி வந்து சுவிட்சில் கை வைத்திருந்த தன் அம்மாவிடம்

“என்ன மா ஷாக் அடிச்சிடிச்சா!! இருங்க நான் கட்டை எடுத்துகிட்டு வரேன்”

“டேய் எனக்கு ஷாக் அடிக்கலை டா. நீ மேல ஃபேனைப் பாரு”

“என்ன மா ஃபேனை ஏன் பார்க்கணும். அதுல என்ன இருக்கு பாக்கறதுக்கு?”

என கூறிக்கொண்டே தலையை நிமிர்த்தி மேலே பார்த்தவன் அதிர்ந்துப் போனான். அந்த ஃபேனின் இறக்கைகளில் கறுப்பு நிற ராட்சத பட்டாம்பூச்சிகள் அவற்றின் இறக்கைகளை திறந்து மூடி, திறந்து மூடிக் கொண்டிருந்தன. அவைகள் இறக்கைகளை திறக்கும் போது அதனுள் இரண்டு சிவப்பு நிற இதயங்கள் தெரிந்தன. மூடியதும் முழுவதும் கறுப்பாக இருந்தது. அவற்றை தன் கையிலிருந்த முகம் துடைத்த துண்டு கொண்டு பறக்கச் செய்தான் ராமு அவைகளும் பறந்து சென்றன அதில் ஒன்று ராமு முகத்திற்கு முன் வந்து தன் இறக்கையை விரித்து காட்டியதில் இரண்டு இதயங்களும் துடிப்பதை மிக மிக அருகில் பார்த்த ராமுவுக்கு மனதில் ஏதோ தோன்றியது. ஒரு ராட்சத பட்டாம் பூச்சி தன் மகன் முன் பறந்து ஏதோ செய்ததைப் பார்த்த லீலாவதி

“டேய் ராமு என்னடா நடக்குது இங்க? எப்படிடா இவ்வளவு பட்டாம்பூச்சிங்க நம்ம வீட்டுக்குள்ள வந்தது? எப்போ வந்தது? அதெல்லாம் ஏன் இவ்வளவு கறுப்பு கலர்ல இருந்துச்சு? அதுங்களுக்குள்ள எப்படி அந்த இதயம் வரைஞ்சிருந்தது? டேய் ஏதாவது சொல்லேன்டா?”

“அம்மா எப்படியாவது வந்திருக்கும் மா …பூச்சி பட்டாம்பூச்சி வந்ததுக்கெல்லாம் ஏன் மா இவ்வளவு கேள்விகள் கேக்குற? அதுதான் எல்லாம் பறந்துப் போயிடுச்சில்ல இப்போ ஃபேனைப் போட்டுக்கமா. வேண்டாம் நகரு நானே போடறேன்”

என்று ஃபேனை ஆன் செய்து தன் அம்மாவைப் படுக்க வைத்து

“நீ பயப்படாம படுத்துக்க நான் என் ஃப்ரெண்டு ராஜா வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்”

என்று கூறிக்கொண்டே சட்டையை மாட்டிக்கொண்டு அந்த புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டவனிடம் லீலாவதி…

தொடரும்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s