“ஓ!!! இவ்வளவு பேசிட்டாங்களா!!! அப்போ டேமேஜ் ஜாஸ்தி தான் ராஜா நான் ஒத்துக்கறேன். ரொம்ப சாரி டா. நாம ஒரு சூப்பர் கதையோட ஒரு பிலிம் எடுத்து இவங்க மூஞ்சில எல்லாம் கரிய பூசணும்…பூசணும் என்ன பூசுவோம் டா..நீ வேண்ணா பாரேன்…இது நடக்கத்தான் போகுது. ஆமா இவ்வளவு நடந்திருக்கே உங்க அப்பா என்ன சொன்னாரு?”
“சீக்கிரம் முதல்ல கதை ரெடி பண்ணுன்னு சொன்னாரு”
“சூப்பர் அப்பா. நீ லக்கி ஃபெல்லோ டா”
“சரி சரி…நான் கதைக்காக லைப்ரெரி போய் நிறைய புக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன் அதை எல்லாத்தையும் படிச்சிட்டு நானா ஒரு கதை எழுதலாம்ன்னு இருக்கேன்!! என்ன சொல்லுற ராஜேஷ்?”
“நல்ல ஐடியா வா தான் இருக்கு!!! எதுவானாலும் ஆறு மாசத்துல நடக்கணும்டா இல்லாட்டி … கையிலே பை, கழுத்துலே டை, வாயிலே பொய்ன்னு நான் போக வேண்டியிருக்கும் டா… சரி நானும் என் சைடிலிருந்து ட்ரைப் பண்ணறேன். பை டா ராஜா”
“பை பை ராஜேஷ் நாளைக்கு சந்திப்போம்”
இஞ்சினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்துவிட்டு ராமு தன் ஸ்கூல் நண்பர்களான விஸ்காம் முடித்த ராஜேஷ் மற்றும் ராஜாவுடன் இணைந்து ஷார்ட் பிலிம் தயாரிப்பில் இறங்கி ஒரு வருடம் ஆகப்போகிறது ஆனால் எந்த முன்னேற்றமும் இன்றி இருந்தனர். படத்தை தயாரிக்க வேண்டிய ஃபைனாஸை ராஜாவின் அப்பா ஏற்றுக் கொண்டார் மேலும் அதற்கான கேமரா மற்றும் தேவையான உபகரணங்கள் அனைத்தும் வாங்கியும் கொடுத்துள்ளார். இப்படியே இந்த மூவர் கூட்டணி வழக்கம் போல இன்றும் கூடிக் கலைந்துள்ளது. ரேஷன் கடையில் க்யூவில் காலை பதினோரு மணிக்கு ஐம்பதாவது ஆளாக நிற்க ஆரம்பித்த ராமு மத்தியம் ஒரு மணி அளவில் சர்க்கரை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தவன் கண்ணில் சாலையோரம் ஒரு போர்வை விரிப்பில் பழைய புத்தகங்களை பரப்பி விற்கும் கடை தென்பட்டது. அங்கு சென்று அங்கிருந்த புத்தகங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் அப்போது அந்த கடையிலிருந்த வியாபாரி அவனிடம்…
“என்னப்பா தம்பி… என்ன புக்கு வேணும் சொல்லு. எல்லாமே இங்க கிடைக்கும்.”
என்று கூற அது ராமு காதில் விழவே இல்லை ஏன்னெனில் அவன் கண்கள் ஒரு புத்தக்கத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அதை கவனித்த வியாபாரி அந்த கோரம் பாதி அழகு மீதி என்று வரைப்பட்டிருந்த அட்டைப் படம் கொண்ட புத்தகத்தை எடுத்து ராமுவிடம்
“அட இந்தா தம்பி இது சூப்பர் புக்கு தெரியுமா. ஆஹா இந்த டைட்டில பாரு தம்பி “உங்களோடு நான்”… டைட்டிலே அட்டகாசமா இருக்கே அப்போ கதை எப்படி இருக்கும் நினைச்சுப்பாரு…வாங்கிப் படி தம்பி”
“இந்த புக்கு எவ்வளவு?”
“நூறு ரூபாய் கொடு தம்பி”
“என்னங்க பழைய புக்குக்கு போய் நூறு ரூபாய் கேக்குறீங்க?”
“சரி முடிவா எவ்வளவு தரன்னு சொல்லு. கட்டுப்படியான தரப்போறேன் இல்லாட்டி நடையக்கட்டுன்னு சொல்லப்போறேன் அவ்வளவு தானே…கூச்சப் படாம கேளு தம்பி”
“என்கிட்ட ஐம்பது ரூபாய் தான் இருக்கு”
“என்ன தம்பி அதுக்குன்னு பாதி விலைக்கு கேட்குறியே நியாயமா?”
“ப்ளீஸ் தாங்களேன் என்கிட்ட இவ்வளவு தான் இருக்கு நீங்களே என் பர்ஸைப் பாருங்க. இதுவும் எங்க அம்மா சர்க்கரை வாங்க கொடுத்த காசுல மீதி வந்தது தான்.”
“சரி தம்பி இவ்வளவு சொல்லுற!!! ஐம்பது ரூபாய்க்கே எடுத்துக்க. பணத்தைக் குடு”
என்று கையை நீட்டினார் வியாபாரி. அவர் கையைப் பார்த்ததும் ஒரு அடி பின்னால் சென்றான் ராமு. உடனே அந்த வியாபாரி
“என்ன தம்பி பயந்துட்டீங்களா? அது ஒண்ணுமில்லை பா எங்க குடிசை எல்லாம் எறிஞ்சதுல நான் கொஞ்சம் கறிஞ்சிட்டேன் அவ்வளவு தான்.”
என அவர் கருகிய கரங்களில் ராமு ரூபாயை கொடுத்ததும் அங்கிருந்து வேகமாக நடக்கலானான். சற்று தூரம் சென்றதும் திரும்பி அந்த வியாபாரியைப் பார்த்தான் அவர் ராமுவையே சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் நடையில் வேகம் கூடியது ராமுவிற்கு. வீட்டிற்கு வந்தவன் சர்க்கரைப் பையை அம்மாவிடம் கொடுத்தான் அப்போது அவன் அம்மா லீலாவதி அவனிடம்
“ராமு மீதி ஐம்பது ரூபாய் எங்கடா?”
“அம்மா அதுக்கு… நான் இந்த புத்தகம் வாங்கிட்டேன் மா”
என்று அவன் வாங்கிய புத்தகத்தை காண்பித்தான். அதைப் பார்த்ததும் லீலாவதி..
“என்னடா புத்தகம் இது ஏதோ பேய் பிசாசு மாதிரி இருக்கு? இதெல்லாம் ஏன்ப்பா படிக்கிற?”
“அம்மா இன்னும் படிக்கவே ஆரம்பிக்கல அதுக்குள்ள ஏன் மா இப்படி கேக்குற?”
“அட்டப் படமே சகிக்கல அப்போ கதை மட்டும் நல்லாவா இருக்கும்?”
“அம்மா ஆங்கிலத்துல ஒண்ணு சொல்லுவாங்க”
“என்ன சொல்லுவாங்க?”
“டோன்ட் ஜட்ஜ் தி புக் பை இட்ஸ் கவர்”
“அப்படின்னா என்னவாம்?”
“ஒரு புத்தகத்தை அதன் அட்டைப் படத்தை வைத்து மதிப்பிடாதே ன்னு அர்த்தம். நான் படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லறேன் சரியா”
“சரிப்பா. ஆனா அப்பா கண்ணுல படாம பார்த்துக் கோப்பா”
“சரி சரி.”
என்று அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு உள் ரூமில் ஜன்னலுக்கு எதிர்ப்புறம் போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்து, சுவற்றில் சாய்ந்துக் கொண்டு தலையணையை மடியில் வைத்து அதன் மேல் புத்தகத்தை வைத்து மீண்டும் அட்டைப்படத்தை உற்றுப் பார்த்துவிட்டு மெல்லத் திறந்தான்.
தொடரும்…..