அத்தியாயம் 38: தெளிவு பிறந்தது! கேள்வி எழுந்தது!

பிரயாகா எல்லையைச் சென்றடைந்ததும் மாயாபுரி ஊர்த்தலைவர் பிரயாகா ஊர் தலைமைக் காவலரிடம் சென்று

“எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்று யாரோ இங்கே வந்துள்ளனராமே யார் அவர்? எங்கே இருக்கிறார்?”

“அதோ அந்த குடிலுக்குள் அமர வைத்திருக்கிறோம். தாங்கள் மட்டும் சென்று பார்த்து வாருங்கள்”

“பரவாயில்லை கேசவனும் எங்கள் ஊர் காரர் தான் அவரும் வந்தால் தவறேதும் இல்லை”

“அப்படி என்றால் சரி தாங்கள் இருவருமே சென்று பார்த்து வாருங்கள்”

“நன்றி. நாங்கள் யாரென்று கண்டு தங்களிடம் தெரிவிக்கிறேன். நாங்கள் சென்று வருகிறோம். கேசவா வா நாம் சென்று அது யாரென்று பார்ப்போம்”

“ம்…ஆகட்டும் தலைவரே”

இருவருமாக தலைமைக் காவலர் சொன்ன குடிலை நோக்கி நடக்கலானார்கள். அப்போது கேசவனின் மனம் லட்சுமியையே எண்ணிக்கொண்டும் எதிர்ப்பார்த்துக் கொண்டுமிருந்தது. சிறிய அழகான குடிலின் வாயிலில் நின்றிருந்த காவலர் இருவர் கேசவனிடமும் ஊர்த் தலைவரிடமும் யார் என்னவென்று விசாரிக்க, அதற்கு இருவரும் பதிலளிக்க உடனே அந்த குடில் காவலர்களில் ஒருவர் ஏதோ ஒரு சிறிய கருவியை கையிலெடுத்து வாயில் வைத்து ஊத அதிலிருந்து ஏதோ மெல்லிய சப்தம் எழ உடனே தலைமைக்காவலர் இருந்த இடத்திலிருந்த காவலர் ஒருவர் அங்கிருந்து அதே போல் சப்தம் எழுப்பியதும் மாயாபுரி ஊர்த்தலைவரையும், கேசவனையும் குடிலுக்குள் அனுமதித்தனர். இருவரும் உள்ளேச் சென்றுப் பார்த்தனர். யாரோ ஒருவர் குடிலின் மற்றப்பக்கம் திரும்பிக்கொண்டு நின்றிருந்தார். கேசவனின் கண்கள் அந்த சிறிய குடிலினுள் தன் மனைவியை அங்குமிங்குமாக தேடிப் பார்த்தது. அவளில்லை என்று புரிந்ததும் சற்று சோர்வானான். அங்கிருந்தவரைப் பார்த்ததும் மாயாபுரி ஊர்த்தலைவர்

“ம்…யாரப்பா நீ? எங்கள் ஊரான மாயாபுரி என்றாயாமே?”

அவரின் கேள்விக்கு பதிலேதும் வரவில்லை. சற்று நேரம் மௌனம் அவ்விடத்தை சூழ்ந்தது. பின் கேசவன்

“நீங்கள் யாரென்று தெரிந்தால் தானே நம்ற தலைவர் இந்த பிரயாகா ஊர்த்தலைவரிடம் பேசி தங்களை ஊருக்குள் அழைத்துச் செல்ல முடியும். இப்படி பதிலேதும் பேசாமல் சுவற்றுப் பக்கமாக திரும்பி நின்றால் நாங்கள் என்ன நினைப்பது? சற்று எங்களைத் திரும்பிப் பாருங்கள் ஐய்யா”

என்று கேசவன் பேசியதைக் கேட்டதும் அவனின் குரலைக் கண்டுக்கொண்ட அந்த ஆள் சுவற்றுப் பக்கமாகவே பார்த்துக் கொண்டே

“என்னை மன்னித்து விடுங்கள் மாமா. என் அக்காளைக் காப்பாற்ற முடியாது தங்கள் முன் நின்றுக்கொண்டிருக்கும் பாவி நான்”

உடனே கேசவன் சட்டென்று அந்த மனிதர் அருகே சென்று அவரின் தோள்களைப் பிடித்துத் திருப்பிப் பார்த்ததும்

“அடேய்!!! கோதகா!! நீயா?”

என்று அவனைக் கட்டிக் கொண்டு மகிழ்ந்தான் கேசவன். ஆனால் அவனின் மகிழ்ச்சி வெகுநேரம் நிலைக்கவில்லை. ஏனெனில் கோதகன் தன் அக்காளைக் காப்பாற்ற முடியாததைச் சொன்னது அதன் பின் தான் கேசவனுக்கு உறைத்தது. உடனே அவன் கண்களில் இருந்து மளமளவென கண்ணீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. கலங்கி நின்ற கேசவனைக் கட்டிக்கொண்டு அழுதான் கோதகன். இருவரையும் சமாதானம் செய்த மாயாபுரி ஊர்த்தலைவர்

“சரி நீ ஏன் மாயாபுரி ஆள் என்று கூறியுள்ளாய்? நீ உண்மையில் கஷியைச் சேர்ந்தவனாயிற்றே!”

“அவ்வாறு கூறியதற்காக என்னை மன்னித்து விடுங்கள் தலைவரே! கஷியிலிருந்து வந்துள்ளேன் என்றால் என்னை உள்ளே விட மாட்டார்கள் என்று எண்ணி இந்த பொய்யைச் சொல்லி விட்டேன்”

“ம்….சரி!! சரி!!! நீ எப்படி அந்த அரக்கர்களிடமிருந்து தப்பித்தாய்?”

“மீண்டும் என்னை நீங்கள் இருவருமே மன்னிக்க வேண்டும்”

“இப்போது எதற்காக இந்த மன்னிப்பு?”

“கூறுகிறேன். நீங்கள் என் மாமா கேசவனிடம் அந்த மரப்பேழையைக் கொடுத்து பிரயாகா அனுப்பிய தினத்தன்றே நானும் கேசவன் மாமா பின்னாலேயே பிரயாகா நோக்கி பிரயாணம் செய்ய ஆரம்பித்து விட்டேன். என்ன அவர் குதிரை மீது சவாரி செய்தார் நான் அவர் பின்னாலேயே ஓடியும் நடந்தும் வந்துக் கொண்டிருந்தேன்”

“அட பாவி கோதகா!! உன்னை நம்பி தானே நான் என் லட்சுமியை விட்டுவிட்டு வந்தேன். நீ என்னடான்னா என்னைப் பின் தொடர்ந்து வந்துள்ளாய்? பார் அதனால் இப்போ நாம நம்ம லட்சுமியை பறிக்கொடுத்துட்டு நிக்கறோம். ஏன்டா இப்படி செய்த? எல்லாம் இந்த மரப்பேழைக்காக தானே!! நீ என்னிடம் அதைப் பத்தி தொனதொனவென்று வீட்டில் கேட்கும் போது ஏதோ விளையாட்டாக கேட்கிறாய் என்றெண்ணி விட்டது எவ்வளவு பெரிய தப்பா போயிடுச்சு? பாவம் நம்ம லட்சுமி நாம ரெண்டு பேருமே இல்லாமா ஊரை விட்டு வந்து இப்படி அனாதையா போய் சேர்ந்துட்டா”

“மாமா அக்கா உயிரோட தான் இருப்பா ஆனா மனுஷ ரூபத்துல இல்ல!!”

“என்ன உளறுகிறாய்?”

“ஆமாம் தலைவரே. எனக்குத் தெரிந்து நம் ஊர் மக்கள் அனைவரும் உயிரோடு தான் இருக்க வேண்டும் ஆனால் மனித ரூபத்தில் அல்ல….அவர்கள் இருவரும் பேசிக் கொண்டப்படி நம்மூர் மக்கள் அனைவரும் அவர்களின் அடிமைகளாக தான் இருக்க வேண்டும்.”

“யார் அவர்கள்? ஏன் நம் ஊர் மக்களை அவர்களின் அடிமைகளாக்க வேண்டும்? இதெல்லாம் உனக்கு எப்படி தெரிந்தது?”

“நான் பாதி தூரம் ஓடியும் நடந்தும் வந்ததில் களைத்துப்போய் மாமாவை பின்தொடர முடியாமல் ஓரிடத்தில் அமர்ந்தேன். அப்போது தான் ஒரு கூட்டம் தட தடவென வந்தது அங்கிருந்த அனைவரையும் கொன்றது. அதைப் பார்த்ததும் நான் அங்கேயே ஓடையின் அருகேயிருந்த பாறையின் பின் ஒளிந்துக் கொண்டேன். அப்போது இரண்டு ராட்சத உருவம் கொண்ட ஒரு பெண்ணும் ஆணும் வந்து அங்கேயிருந்த மற்றொரு பாறை மீது அமர்ந்தனர். அவர்கள் பேசிக்கொண்டது படி அவர்கள் இனம் தான் நம் ஊர் மற்றும் சுற்று வட்டாரங்களில் இருக்கும் ஊர்கள் எல்லாவற்றையும் அழித்து அந்தந்த ஊர் மக்களை அவர்களின் அடிமைகளாக….அகோரமான பிசாசுகளாக, அவர்களின் படைகளாக அவற்றை எல்லாம் மாற்றியுள்ளனர். ஒவ்வொரு ஊரின் ஆடு மாடுகள் உட்பட அனைத்தையுமே மாற்றி அவர்களோடு கொண்டு சென்றுள்ளனர். அதில் அந்தப் பெண்ணின் கனவரோ அல்லது காதலனோ சரியாக தெரியவில்லை! அவனை நம் ஊர் தலைமைக்காவலர் கொன்றுவிட்டதால் அவரைக் கொன்று வீழ்த்தி பிசாசாக மாற்றி தனக்கு அடிமையாக வைத்துள்ளாள். இதில் அவளுக்கு தங்கள் இருவரையும் தப்ப விட்டதில் பெரும் வருத்தமாம். அவர்கள் எல்லா நரன்களையும் அதாவது நம்மை அழித்து பிசாசுகளாக்கி ஏதோ பெரிய வேலையில் ஈடுப்படுத்தப் போகிறார்களாம். பிரயாகாவில் கூடவிருக்கும் நால்வரில் ஒருவரிடமிருந்து நீர்த்துளிப் பதக்கத்தை கைப்பற்ற வேண்டுமென வெறியுடன் அலைகிறார்கள். அதற்காக த்ரிகான்தக், அவந்திக்கும் அவர்களின் படை சென்றுள்ளதாம். அனைவரையும் ஏதோ சொன்னார்களே….பிசாசுகளாக மாற்றுவதற்கு… ஏதோ ஒரு வார்த்தை சொன்னார்களே…..ஆங் சாம்பீனிகளாக மாற்றி பிரயாகாவை நோக்கி படையெடுக்க திட்டமிட்டுள்ளார்கள் என்பது தான் அவர்கள் இருவரின் உரையாடலில் இருந்து நான் அறிந்துக் கொண்டது. தலைவரே அப்போது என் மாமாவிடமிருப்பதும் நாலில் ஒரு பதக்கமா?”

“பதக்கமா?”

“ஒண்ணுமில்லை கேசவா நீ குழம்பாதே! உன்னிடம் நான் கொடுத்தது ஒரு மரப்பேழை மட்டுமே அதை திறந்துப் பார்க்க நேரிடும் போது நீயே பார்த்து தெரிந்துக் கொள். எனக்கு இப்போது இந்த கோதகன் சொன்னது அனைத்தையும் கேட்டால் நமது மானிட இனத்தையே அந்த ராட்சதக் கூட்டம் அழித்துவிடும் என்ற அச்சம் தோன்றுகிறதே!!! அவந்தி, த்ரிக்கான்தக்கிலிருந்து இன்னமும் செய்தி ஏதும் வரவில்லையே என்ற கவலை வேறு இந்த விவரத்தை அறிந்ததும் அதிகமாகின்றது. சரி வாருங்கள் நாம் சென்று பிரயாகா ஊர்த் தலைவரான வீரசேகரனிடம் தெரிவித்து அதற்கான பாதுகாப்பு வேலைகளில் இறங்குவோம். திக்குத் தெரியாத காட்டில் இருப்பதைப் போல் இருக்கும் எங்களுக்கு நீ ஒரு ஒளியைக் காட்டியுள்ளாய். மிக்க நன்றி. இனி அந்த ஒளியை வைத்தே நாங்கள் நகர்வோம். நாங்கள் என்ன நாம் நகர்வோம். அந்த தீய சக்திகளை ஒழிப்போம். ம்…புறப்படுங்கள்”

என்று மாயாபுரி தலைவர் சொன்னதும் கோதகனும், கேசவனும் அவரைப் பின் தொடர்ந்துச் சென்றனர். பிரயாகா தலைவரான வீரசேகரனிடம் சென்று நடந்ததை விளக்கிக் கூறினார்கள் மூவரும். அதைக் கேட்டதும் வீரசேகரன்

“என்ன நடக்கிறதென்றே தெரியாது…கண்ணைக் கட்டிக் கொண்டு எதிரியை பாராது போரிட்டு வந்தோம் இப்போது கொஞ்சம் தெளிவு பிறந்துள்ளது. ஆனாலும் அவர்கள் யார்? எதற்காக நம் ஊர் மக்களை எல்லாம் அவர்களின் அடிமைகளாக வைத்துள்ளனர்? அவர்களுக்கு எப்படி பதக்கத்தைப் பற்றி தெரிந்துள்ளது? நமது ஊர்களை அழிப்பதால் அவர்களுக்கு அதில் என்ன ஆதாயம்? முதலில் நமது அவந்திக்கும் த்ரிகான்தக்கிற்கும் செய்தி அனுப்பி விசாரிப்போம் அவர்களிடமிருந்து பதில் வந்ததும் மேற்கொண்டு என்ன செய்யலாமென்று முடிவெடுப்போம். நீங்கள் இருவரும் சற்று வெளியே இருக்கிறீர்களா? நான் உங்கள் தலைவரிடம் மட்டும் பேச விருப்பப்படுகிறேன்”

“ஆகட்டும் தலைவரே நாங்கள் வெளியே காத்திருக்கின்றோம்”

என்று கேசவனும், கோதகனும் சென்றதும் வீரகேசவன் மாயாபுரி தலைவரிடம்

“நான் சொல்வதை நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். அந்த கோதகனுக்கு நீர்த்துளிப் பதக்கம் தான் அவன் மாமா கேசவன் கொண்டு வந்துள்ளான் என்பது தெரிய வந்துவிட்டது!! ஆகையால் அவனை வஜ்ரகேசவனிடமிருந்து பிரித்திடவேண்டும். இல்லையேல் அவன் தன் மாமாவிடம் சொல்லிவிடுவான். இந்த முறை தாங்கள் ஏதோ சொல்லி சமாளித்து விட்டீர்கள். அதை அந்த வஜ்ரகேசவனும் நம்பிவிட்டான். ஆனால் எப்போதும் நிலைமை ஒரே மாதிரி இருக்காது. வஜ்ரகேசவன் தெரிந்துக் கொண்டு விட்டால் பலனில்லாமல் போய் விடும். ஆகையால் அந்த நால்வரில் ஒருத்தியான எங்கள் ஊரைச்சேர்ந்த முழுமதியாளுடன் அந்த வஜ்ரகேசவனைத் தங்க வைத்து விடுவோம். இந்த கோதகனை தங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். நான் சொல்வது சரிதானே! என்ன சொல்கிறீர்கள்”

“ம்…அதுவும் சரி தான். அப்படியே செய்திடுவோம். தாங்கள் உடனே த்ரிகான்தக்கிற்கும், அவந்திக்கும் தூதனுப்பி அங்கிருந்து நால்வரில் இருவரான ஞானானந்தமும், வேதாந்தகனும் அவரவர் மரப்பேழைகளுடன் பிரயாகாவை நோக்கி பிரயாணம் மேற்கொண்டு விட்டனரா என்று தெரிந்துக் கொள்ளுங்கள். நான் வெளியே சென்று வஜ்ரகேசவனை உள்ளே அனுப்பி வைக்கிறேன். அவனை நீங்கள் சொன்னது போலவே தங்கவைத்து விடுங்கள். கோதகனிடம் ஏதாவது சொல்லி அவனை இங்கிருந்து என் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறேன்.”

“ஆகட்டும் அப்படியே செய்திடுங்கள். நானும் இப்போதே த்ரிகான்தக்கிற்கும், அவந்திக்கும் தூதனுப்புகிறேன்.”

என்று இரு ஊர்த்தலைவரும் பேசிக்கொண்டதுபடியே செய்தனர். அப்போது கோதகன் மாயாபுரி ஊர் தலைவரிடம்

“ஐய்யா மன்னியுங்கள் எனது மாமா கேசவன் இன்னும் வரவில்லை அதற்குள் எங்கோ செல்லலாமென்று கூறுகிறீர்களே?”

“கோதகா வஜ்ரகேசவன் இப்போது வீரசேகரனுடன் ஓர் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டியிருப்பதால் தான் உன்னை ஓய்வறைக்கு கூட்டிச்செல்கிறேன். அது முடியும் வரை நீ அங்கே எதற்காக காத்துக்கிடக்கணும். பாவம் நீ இவ்வளவு தூரம் பயணித்து வந்துள்ளாய். நானும் கேசவனும் நேற்று முழு தினமும் நன்றாக ஓய்வெடுத்து விட்டோம் ஆகையால் இன்று செயலில் இறங்கியுள்ளோம். அதே போல நீயும் இதோ இந்த அறைக்குள் சென்று நன்றாக ஓய்வெடு. உனக்கு வேண்டியதனைத்தையும் இந்த காவலர் பார்த்துக் கொள்வார் சரியா. நீ குளித்து பலகாரம் சாப்பிட்டு சற்று ஓய்வெடுத்து எழுவதற்குள் நானும் கேசவனும் வந்துவிடுவோம். உன்னை இங்கே விட்டுச் சென்று நானும் அந்த அலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும். நான் வருகிறேன். நிம்மதியாக படுத்துறங்கு. ம்…காவலரே கேசவனைப் பார்த்துக் கொண்டது போலவே இவரையும் பார்த்துக் கொள்ளுங்கள்”

“அப்படியே ஆகட்டும்.”

“சரி தலைவரே நீங்கள் சென்று அந்த கூத்தில் கலந்துக் கொண்டு அது முடிந்ததும் எனது மாமாவையும் இங்கேயே கூட்டிக்கொண்டு வந்துவிடுங்கள்”

“ம்…ம்…செய்கிறேன்.”

என்று கோதகனை கேசவன் தங்கியிருந்த அறையில் விட்டுச் சென்றார் மாயாபுரி ஊர்த்தலைவர். கோதகனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை எல்லாம் கொடுத்து நன்றாக கவனித்துக் கொண்டனர் பிரயாகா விருந்தினர் விடுதி காவலர்கள். அதில் அகமகிழ்ந்துப் போனாலும் தனது அக்காவைக் காப்பாற்றாது போனது கோதகனி உள்ளத்தைக் கிழித்துக் கொண்டேயிருந்தது.

த்ரிகான்தக்கில் யாகம்யாழியும், சிகராசுரனும் போரிட்டு அங்கிருக்கும் நரன்களை எல்லாம் தங்களின் சாம்பீனிகளாக்கினர். அங்கிருந்த நால்வரில் ஒருவனான வேதாந்தகன் அசுரர்களிடமிருந்து தப்பி பிரயாகாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான். அவனைத் தேடி அலைந்தனர் யாகம்யாழியும், சிகராசுரனும். ஆனால் அவர்கள் கண்ணில் படாதிருந்தான் வேதாந்தகன். அவனைத் தவிர மற்றனைவரையும் தங்கள் படைகளாக்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுக் கஷியை நோக்கிச் சென்றனர்.

கஷியில் பரமபத அரண்மனையின் மேல் தளத்திலிருந்து நவியாகம்ஷி பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது தொலைவில் ஒரு பெரும் படை தங்கள் கோட்டையை நோக்கி வருவதைக் கண்டு வேகவேகமாக கீழே வந்து தான் கண்டதை ஆசானிடமும் மதிநாகசுரனிடமும் விவரித்தாள்

“கருங்கடலென காற்றோடு கலந்தவாறு
புயலென பாய்ந்தவாறு
பெரும்படையொன்று பரமபத மனையை நோக்கியவாறு
திரண்டு வந்துக் கொண்டிருக்கிறது. தாங்களும் அந்த கண்கொள்ளாக் காட்சியை வந்து பாருங்கள்.”

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s