அத்தியாயம் 37: வழியும் பிறந்தது, வந்தவரையும் அறிந்தது!

காற்கோடையன் மரப்பேழையைத் திறக்கச் சொன்னதும் ஞானானந்தமும் அவன் மனைவி சீதையும் பயந்ததைக் கண்டவர், அவர்கள் கைகளிலிருந்து அதைப் பறிக்க முற்பட்டார். அவர்கள் அருகே சென்றதுமே சட்டென ஏதோ சுட்டதுப் போல் இருக்க ஒரு அடி பின்னை சென்று…

“ம்…அந்த மரப்பேழையைத் திறந்துக் காண்பியுங்கள். ஏன் இவ்வளவு தாமதிக்கிறீர்கள்? ஆகட்டும் …ம்..”

“அதற்கில்லை….இதை நான் பிரயாகா சென்றடையும் வரை திறந்துப் பார்க்கக் கூடாதென்பது எங்கள் தலைவர் உத்தரவு. அதை மீறி எப்படி திறப்பது என்று தான் யோசிக்கின்றேன். வேறொன்றுமில்லை”

“ஹா! ஹா! ஹா! தலைவனா? எவனவன்? எங்கே இருக்கிறான்? ஹா! ஹா! ஹா! அவன் இன்னேரம் உங்கள் வைகுண்டமோ, கைலாசமோ அல்லது நரகமோ சென்றிருப்பான். அவன் சொல்லிற்கு இனி இங்கே மதிப்பேது?”

“அப்படி அல்ல. அவர் சொல்லிற்கு அவரில்லா விட்டாலும் மதிப்புண்டு. அவர் இதை என்னிடம் குடுத்து அனுப்பும் போது என்ன இன்னல்கள் வந்தாலும் அவரே இல்லை என்றானாலும் இதை பிரயாகா சென்றடையும் வரை திறக்கலாகாது என்பது தான். அதனால் தான் யோசிக்கின்றேன்!”

“இதில் உமக்கு எந்த வித யோசனையும் வேண்டாம் நரனே. நான் சொல்கிறேன் அதைத் திற”

“அப்படி பிரயாகா சென்றடைவதற்கு முன் இதைத் திறக்க நேரிட்டால் பேராபத்து நேர்ந்திடும் என்றும் சொல்லியிருக்கிரார். நான் இப்போது தங்கள் பேச்சைக் கேட்டு திறந்து உங்களின் இந்த இடத்திற்கும் இங்குள்ளவர்களுக்கும் ஏதாவது நேர்ந்தால்!!”

“ஒன்றும் நேர்ந்திடாது. எங்களை எதுவும் ஒன்றும் செய்திடாது. அந்த தேவேந்திரனே எங்களைக் கண்டு நடுங்குவான். இந்த பதக்கமா ஏதாவது கேடு விளைவித்திடப் போகிறது?”

“பதக்கமா? என்ன சொல்கிறீர்கள்?”

“ஓ!! இதில் என்ன இருக்கிறதென்பதே உனக்கு தெரியாதா?”

“ம்…ஹும்”

“ஏன் உன் தலைவன் சொல்லவில்லையோ!”

“இல்லை.”

“ஏன் நீ கேட்கவில்லை?”

“ஏனென்றால் அவர் எங்கள் தலைவர். அவர் என்றும் எங்கள் நலனில் பெரிதும் அக்கறையுள்ளவர். அவர் எது செய்தாலும் அதில் ஏதாவது அர்த்தமிருக்கும் ஆகையால் எதிர் கேள்வி கேட்க எங்களுக்கு தோணியதே இல்லை. அது தான் உண்மை”

“கேள்வி கேட்காதவன் எதையும் அறிந்துக் கொள்ள மாட்டான்.”

“எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை”

“கேள்வி கேட்காதவன் அத்துனைப் பேரும் என்னைப் பொருத்தவரையில் மூடர்களே”

“விஷயம் புரியவில்லை அல்லது தெரியவில்லை என்றால் தான் கேள்வி கேட்க வேண்டும். தெரிந்ததைப் பற்றி எதற்கு தேவையில்லாமல் கேள்விக் கேட்டுக்கொண்டு நேரத்தை வீண் செய்ய வேண்டும்?”

“அப்படியென்றால் உனக்கு இந்த மரப்பேழைக்குள் இருப்பது என்னவென்று தெரிந்திருக்க வேண்டுமே! ஏனெனில் நீ அதை உன் தலைவனிடமிருநத்து பெற்றுக்கொள்ளும் போது கேள்வி கேட்கவில்லை என்றாயே! ஆனால் உனக்கு உண்மையிலேயே அதனுள் இருப்பது என்னவென்று தெரியாதிருக்கிறாயே!”

“ஆமாம் அதில் உள்ளது என்ன என்பது வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம் ஆனால் இது ஏதோ ஒரு பெரிய காரியத்துக்காக என்பதை உணரமுடிந்தது. மேலும் இவ்வளவு விவரங்கள் சொன்ன எங்கள் தலைவர் அதனுள் இருப்பது என்னவென்று நான் அறிந்திருக்க வேண்டுமென்றால் என்னிடம் அதையும் கூறியிருப்பார். அவர் கூறாததால் அது நான் தெரிந்துக் கொள்ளக் கூடாதது என்று நான் புரிந்துக் கொண்டு அதுபடி நடந்துக் கொண்டுமிருக்கிறேன். இதில் எங்கே இருந்து வந்தது மூடத்தனம?”

“ம்…நன்றாக தான் பேசுகிறாய். பலே உன் தலைவன் சிறந்த ஆளைத் தான் இந்த வேலைக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறான். ம்..ம்…சரி சரி சீக்கிரம் அந்த மரப்பேழையைத் திறந்துக் காட்டு”

“மன்னிக்கவும் அதற்கு எனக்கு அதிகாரமில்லை. என்னை பிரயாகா அழைத்துச் செல்லுங்கள் அங்கே வைத்து அங்கிருக்கிறவர்கள் முன்னிலையில் திறந்துக் காட்டுகிறேன்”

“என்ன விளையாடுகிறாயா? இப்போதே நீ திறந்துக் காட்டாவிட்டால் உன் பிள்ளைகளை துண்டு துண்டாக்கி எனது அடிமை சாம்பீனியாக்கிடுவேன்”

“ம்….உங்களாலும் சரி எங்களை அழைத்து வந்தார்களே அவர்களாலும் சரி எங்களிடம் ஒரு எல்லை வரைத்தான் நெருங்க முடிகிறது இதில் எப்படி எங்களை நீங்கள் ஏதும் செய்வது? எங்கள் பிள்ளைகள் எங்களிடமிருந்து தனியாக இருந்ததால் அவர்கள் பிடித்துள்ளனர் ஆனால் இப்போது தங்களால் எங்களை நெருங்க முடியாததைக் கண்டு தான் அதை நான் உணர்தேன். எங்கே எங்கள் பிள்ளைகளிடம் நெருங்கித் தான் பாருங்களேன்!”

“ம்….ம்….நீ ரொம்ப திமிராகப் பேசுகிறாய். பேச்சை நிறுத்தி பெட்டியைத் திறந்துக் காட்டு. அதைப் பார்த்ததும் நான் சென்று விடுகிறேன்.”

“மீண்டும் மன்னிக்கவும் அது மட்டும் என்னால் முடியாது”

“ம்…..”

“என்ன இது வந்தார் பெட்டியைத் திறந்துக் காட்டச் சொல்லி ஏதேதோ பேசினார். நீங்கள் முடியாதென்றதும் கோபப்பட்டுச் சென்று விட்டார்? அப்படி என்ன தான் அந்த பெட்டியில் உள்ளது!! இந்த ராட்சதர்கள் நம்மை இதற்காக சிறைப்பிடித்து வந்துள்ளாகள்!”

“அதுதான் எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம் ஏதோ விபரீதமாக நடக்கவுள்ளதைத் தடுக்கவே நமது தலைவர் இதைகீ கொடுத்து பிரயாகா அனுப்பி வைத்துள்ளார். அவர் உயிரோடிருக்க மாட்டார் என்பதை அறிந்தும் இதை என்னிடம் கொடுத்தனுப்பியதற்கு ஏதோ பலத்தக் காரணமிருக்கிறது சீதை.”

“அதெல்லாம் சரி. அவர்கள் நம்மை நெருங்க முடியாது என்பது உங்களுக்கு தெரிந்திருந்தும் எதற்காக இங்கே அவர்கள் பின்னாலே வந்தீர்கள்?”

“அவர்களால் நம்மை நெருங்க முடியாதென்பதை நம்மை அழைத்து வந்த அந்த இருவர் நம்மிடம் காட்டிக் கொள்ளவில்லை அதனால் எனக்கு அப்போது அது தெரியாது. ஆனால் இப்போ இந்த பெரியவர் வந்து நம்மிடமிருந்து இந்த பெட்டியை பறிக்க முயற்சித்தப் போது நான் கவனித்தேன் அவரை ஏதோ நம்மிடம் நெருங்க விடாமல் தடுத்ததை. அதை உணர்ந்ததும் தான் இதை அவரிடம் கொடுத்து விடக் கூடாதென்று உறுதியாக இருந்தேன். அவரும் அதற்கு மேல் நம்மிடம் தர்க்கம் செய்யாது சென்றுவிட்டார் பார்த்தயா”

“ம்…ஆமாம். ஆமாம்‌. எனக்கு ஒரு யோசனை!”

“என்னது அது சீதை?”

“நம்மிடம் இந்த பெட்டி இருக்கும் வரை அவர்களால் நம்மை நெருங்க முடியாதென்றால் நாம் ஏன் கைதிகளாக இங்கிருக்க வேண்டும்? பேசாமல் தப்பித்து விடலாமே”

“ம்….என் மனதிலும் அதுதான் தோன்றியது. ஆனால் இந்த ராட்சதர்கள் என்ன செய்வார்கள் என்று நமக்குத் தெரியாது! அதுவுமில்லாமல் வெளியே வாயிலில் காவலிருக்கும் அந்த பூதகணங்களால் நம்மை நெருங்க முடியுமா என்பதும் நமக்கு தெரியாது. அதுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்”

“இதில் சிந்திக்க என்ன இருக்கு? பேசாம நாம வாசலுக்குப் போய் அவைகளிடம் ஏதாவது சொல்லி சீண்டிப்பார்ப்போம்… அப்போது தெரிந்துவிடுமே”

“என்ன விளையாடுகிறாயா? ஒருவேளை அந்த பூதகணங்களால் நெருங்க முடியுமென்றால் அவைகள் நம்மை தின்று ஏப்பம் விட்டுவிடாதா!! அதை யோசிக்காமல் பேசுகிறாயே”

“ஓ!! அப்படி ஒன்றிருக்கிறதல்லவா? சரி நாம் செல்ல வேண்டாம் இந்த மரப்பேழையை அவற்றின் அருகே கொண்டுச் செல்லுங்கள் அப்போது நான் அந்த இரண்டு புதகணங்களையும் கவனித்தால் தெரிந்துவிடுமே!”

“ம்.. இது நல்ல யோசனை தான் ஆனால் நமது பிள்ளைகள் நன்றாக உறங்குகிறார்கள் இவர்கள் எழுந்ததும் தான் நாம் அதை செய்துப் பார்க்க வேண்டும் ஏனெனில் இவர்களை தனியாக எப்போதும் விடக்கூடாது. ஆகையால் பொறுமையாக இருந்து சிலவற்றைத் தெரிந்துக் கொண்டு அதன் பின் ஒரு முடிவெடுப்போம்”

“ம்…அப்படியே செய்வோம் ஆனால் எதுவானாலும் சீக்கிரம் செய்யுங்கள். எனக்கு இங்கிருக்க ரொம்ப பயமா இருக்கு. அதுவும் அந்த பூதகணங்களைப் பார்த்தால் அருவெறுப்பாக இருக்கிறது”

“முயற்சிச் செய்வோம். மற்றவையை மேலிருப்பவர் பார்த்துக் கொள்வார். சரி இன்று முழுவதும் நீ அந்த ராட்சதப் பெண்ணால் வதைப்பட்டிருக்கிறாய். சற்று நேரமாவது ஓய்வெடு அப்போது தான் நாளைக்கே இங்கிருந்து தப்பித்து செல்ல முடிந்தால் உன்னால் என்னுடன் தெம்பாக வர முடியும். பிள்ளைகளோடு நீயும் நிம்மதியாக உறங்கு நான் இருக்கிறேன்.”

“தங்களுக்கு ஓய்வு வேண்டாமா?”

“அந்த கவலை எல்லாமின்றி உறங்கு சீதை. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்”

ஞானானந்தத்தின் இந்த அறிவாற்றலும் சமயோசித புத்தியும் தான் அவனை இந்த செயலுக்காக தேர்ந்தெடுக்க மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

வஜ்ரகேசன் தனக்கான காவலருடன் பிரயாகா தலைவரிடம் அழைத்துச் செல்லப்பட்டதும் முதலில் அவருக்கு வணக்கும் தெரிவித்த கேசவன் அவரருகே தனக்கு பக்கத்து மெத்தையில் முன்னாள் இரவு படுத்திருந்த தனது ஊர் தலைவரை பிரயாகா ஊர்த்தலைவருடன் பார்த்ததில் மீண்டும் அதிர்ச்சிக் கலந்த மகிழ்ச்சியிலிருந்தான். அவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு ஏதும் கேட்காமல் நின்றிருந்தவனிடம்

“என்ன வஜ்ரகேசவா? எப்படி இருக்கிறாய்? மாயாபுரியிலிருந்து பிரயாகா வரையிலான உனது பிரயாணம் எப்படி இருந்தது? நான் கொடுத்தனுப்பிய மரப்பேழையை பத்திரமாக வைத்திருக்கிறாயா?”

“தலைவரே நான் நன்றாக இருக்கிறேன். பிரயாணமும் இனிதாகவே இருந்தது. தாங்கள் என்னிடம் கொடுத்தனுப்பிய மரப்பேழை இதோ..”

“ம்….அதை நீயே வைத்துக் கொள். அது உன்னிடம் தான் இருக்க வேண்டும்.”

“சரி தலைவரே! ஆனால் ….நீங்கள்….எப்படி…”

“என்ன உனக்குள் இருக்கும் சந்தேகங்களைக் கேட்டுவிடு கேசவா”

“தலைவரே தாங்கள் எப்படி இவ்வளவு சீக்கிரமாக இங்கு வந்துள்ளீர்கள்? அப்படி தாங்களே வருவதானால் எதற்கு என்னிடம் இதைக் கொடுத்தனுப்பினீர்கள்? நான் ஏதாவது தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்”

“இதில் தவறொன்றுமில்லை கேசவா! நீ இந்த ஊர் மண்ணில் கால் வைத்ததும் அங்கே நம்ம ஊரை துவம்சம் செய்தனர் அந்த தீய சக்திகள். அங்கிருந்து அனைவருமாக சேர்ந்து தான் பிரயாகா வந்துக் கொண்டிருந்தோம் அப்போது அந்த தீய சக்திகள் எங்களைப் பின்தொடர்ந்து வந்துத் தாக்கியதில் எத்தனை பேரை இழந்தோமோ! எத்தனைப் பேர் தப்பித்தனரோ! என்று கூட தெரிந்துக் கொள்ள முடியாது போனது கேசவா!!! என்னையும் தாக்கியதில் நான் மயங்கிப்போனேன் என்னை ஏதோ ஒன்று வீசியெறிந்ததில் அருகே இருந்த கங்கையில் வீழ்ந்தேன் அவள் என்னை அடித்துக் கொண்டு யமுனையில் சேர்த்தாள். நான் அந்த யமுனை கறையில் கிடந்திருந்தேன். அப்போது அங்கிருந்த பிரயாகா வாசிகள் என்னைக் காப்பாற்றி இங்கே கொண்டு வந்து சேர்த்துள்ளனர். கங்கையும் யமுனையுமே நான் உன்னோடு இங்கே வந்து சேரக் காரணமானார்கள். என்னை மன்னித்து விடு கேசவா. என்னை நம்பி நீ உன் மனைவியையும் அவள் தம்பியையும் விட்டுவிட்டு இங்கே வந்தாய். ஆனால் என்னால் அவர்கள் இப்போது உயிரோடிருக்கிரார்களா இல்லையா என்று கூட சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். மன்னித்துவிடு கேசவா!! என்னை மன்னித்துவிடு!!”

“அய்யஹோ!!! என்னென்னவோ நடந்துள்ளதே தலைவரே!! என் லட்சுமி அவள் தம்பி கோதகன் என்ன ஆனார்களோ? என்னென்ன இன்னல்களுக்குள்ளானார்களோ? சரி நம்ம மாயாபுரியிலிருந்து வேறு யார் யார் தப்பித்துள்ளனர்?”

“நானே இப்போது தான் சுயநினைவுக்கு வந்துள்ளேன் கேசவா. அந்த விவரமெல்லாம் இனிதான் திரட்ட வேண்டும். அதற்காக நமக்கு இந்த ஊர் தலைவரான வீரசேகரன் உதவுவதாகக் கூறியதோடு நின்றிடாமல் தேடுதலிலும் இறங்கியுள்ளார்.”

“தலைவரே எனக்கு எல்லாமே என் லட்சுமியும் அவள் குடும்பமும் தான் வேறு எனக்கென்று எந்த சொந்தங்களுமில்லை.”

“கவலைப் படாதே கேசவா. பார்ப்போம். நான் என் கண் முன்னே எனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் பறிகொடுத்துவிட்டு நிற்கிறேன். உனக்காவது உன் மனைவி திரும்பக் கிடைக்க அந்த கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்”

“என்ன சொல்கிறீர்கள் தலைவரே?”

“ஆமாம் என்ன செய்வது?”

“நம் மக்களை அழித்த அந்த தீய சக்திகள் எப்படி இருந்தன தலைவரே?”

“அவைகளில் சிலவற்றைப் பார்த்தேன் மிகவும் அகோரமாக இருந்தன. அவைகளை பின்னாலிருந்து யாரோ இருவர் இயக்கிக் கொண்டிருந்ததையும் பார்த்தேன் ஆனால் புழுதி்யில் சரியாக தெரியவில்லை கேசவா”

“தலைவரே நான் ஒரு பெரிய தவறிழைத்து விட்டேனோ என்று இப்போது தோன்றுகிறது”

“தவறா!! நீயா? என்ன செய்தாய்?”

“தலைவரே நானும் என் மச்சினன் கோதகனுமா உங்களுக்குத் தெரியாம கஷிக்கு நம்ம காவலர்களை மீறிச் சென்றோம்.”

“என்னது கஷிக்கா? எப்போது சென்றீர்கள்? எப்படி சென்றீர்கள்? அங்கே ….”

“ஆமாம் தலைவரே அங்கே ஒன்றுமே, ஒருவருமே இருக்கவில்லை. எங்களை மன்னியுங்கள். லட்சுமியின் குடும்பத்தினரைக் காணச் சென்றோம். அங்கே நாங்கள் கண்டதும், தெரிந்துக் கொண்டதையும் நம்ம ஊருக்கு வந்ததும் உங்களிடம் அனைத்தையும் சொல்லிவிட வேண்டுமென்றிருந்தேன் அதற்குள் பிரயாகா பிரயாணம் வந்ததால் அதை தங்களிடம் கூற சந்தர்ப்பமே வரவில்லை.”

“சரி அங்கே அப்படி என்னத்தை கண்டீர்கள்? என்ன நடந்தது?”

கேசவன் கஷியில் நடந்தது அனைத்தையும் தலைவரிடம் கூறினான். அதைக் கேட்டதும் தலைவர்

“விடு கேசவா!! எல்லாம் விதி! என்ன பண்ண?”

“வணக்கம் தலைவரே!”

“வணக்கம்”

“தங்கள் ஊரிலிருந்து யாரோ வந்துள்ளதாக பிரயாகா எல்லையில் கூறிக்கொண்டிருக்கிறார். அவர் உங்கள் ஊர்க்காரர் தானா அவரை உள்ளே அனுமதிக்கலாமா என்பதை தாங்கள் வந்து பார்த்து சொன்னால் தான் அனுமதிக்க முடியுமென்று தங்களை கையோடு அழைத்து வரச்சொல்லியிருக்கார் எங்கள் தளபதி வீரராகவன். தயவுசெய்து வாருங்கள்”

“தலைவரே அது யாராக இருக்கும்?”

“தெரியவில்லையே கேசவா! சரி நான் போய் பார்த்து அடையாளம் சொல்லி அது நம்ம ஊர் ஆள் என்றால் கூடவே அழைத்து வருகிறேன்.”

“தலைவரே நானும் தங்களுடன் வருகிறேன்.”

“சரி வா நாம் சென்று வருவோம். காவலரே வாருங்கள் பிரயாகா எல்லைக்கு செல்லலாம்”

கேசவனின் மனம் படக் படக் என்று அடித்துக் கொண்டது……அது அவன் மனைவி லட்சுமியாக இருக்க வேண்டுமே என்றுக் கடவுளிடம் வேண்டிக் கொண்டே மாயாபுரி ஊர்தலைவருடன் சென்றான்.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s