அத்தியாயம் 36: மன நெருடல்

புழுதிப் பறக்க தட் தட் என்ற ஒலி எழுப்பிக் கொண்டு வந்தன நவியாகம்ஷி மந்திராசுரனின் சாம்பீனிப் படை. பரமபத அரண்மனையை தூரத்திலிருந்து பார்த்த சீதை சற்று பயந்துப் போனாள். அந்த அரண்மனையைச் சுற்றி இருள் சூழ்ந்திருந்தது‌. உயரமான சுழல் வடிவிலான கட்டிடமாக இருந்தது. பார்ப்பதற்கு கோரமான பாழடைந்த அரண்மனைப் போலவே தோற்றமளித்தது. அதன் வாயில் கதவைப் பார்த்ததும் ஞானானந்தத்திற்கு சற்று பதற்றம் தொற்றிக்கொண்டது. தேக்கு மரத்தில் பத்தடி உயரத்தில் கம்பீரமாக நின்றிருந்தது அந்த வாயிற் கதவு. அதன் நான்கு மூலையிலும் யானைத் தந்தத்தால் ஆன வேலைப்பாடுகள் பளிச்சிட்டன. கதவின் நடு பகுதி முழுவதும் கூர்மையான இரும்பினாலான முற்கள் இருந்தன. அதனைச் சுற்றி அதை விட சிறிய முற்கள் என்று அதிலும் அவர்களின் அழகான வேலைப்பாடும் ரசனையும் தெரிந்தது என்றாலும் ஞானானந்தத்திற்கு பயம் படக் படக் என்று மனதில் ஒலித்தது.

அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த முற்களாலான அரண்மனை வாயிற் கதவு நவியாகம்ஷி ஏதோ கையசைத்ததும் திறந்துக் கொண்டது. அனைவருமாக உள்ளே சென்றன. அது வரை அமைதியாக வந்த சாம்பீனிகள் கதவு திறந்து உள்ளே செல்ல ஆரம்பித்ததும் அங்குமிங்குமாக பிரிந்து எங்கோ சென்று மறைந்தன. அரண்மனையின் நடுவில் நவியாகம்ஷியும் மந்திராசுரனும் அவரவர் குதிரைகளிலும் அவர்களுக்கு அருகே ஞானானந்தமும் அவன் குடும்பமும் நின்றுக் கொண்டிருந்தனர். அங்கிருந்த உயரமான படிகளிலிருந்து மதிநாகசுரன் கிடு கிடுவென இறங்கி வந்து நவியாகம்ஷியை குதிரையிலிருந்து அப்படியே தூக்கிப் பிடித்து இறக்கி கட்டியணைத்தான். பின்னாலேயே காற்கோடையனும், கோபரக்கனும் இறங்கி வந்தனர். மந்திராசுரன் ஆசானைப் பார்த்ததும் தன் குதிரையிலிருந்து இறங்கி வணங்கினான். ஆசானைப் பார்த்ததும் நவியாகம்ஷியை தரையில் இறக்கினான் மதிநாகசுரன். நவியாகம்ஷியுப் வணங்கினாள்.

ஞானானந்தத்தையும் அவன் குடும்பத்தையும் அழைத்து வந்த நவியாகம்ஷியும் மந்திராசுரனையும் போலவே அங்கிருந்த அசுரர்கள் எல்லாம் ஏழடி எட்டடி உயரத்தில் இருந்தததைப் பார்த்த அவன் மனைவி பயத்தில் ஞானானந்தத்தின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கண்களை மூடி கடவுளை எண்ணி வேண்டிக்கொண்டிருந்தாள். அப்போது பலத்த குரலில்

“வாருங்கள் வாருங்கள்!! என்ன செய்தியுடன் வந்துள்ளீர்கள்? யார் இந்த நால்வர்?”

என்று ஆசான் காற்கோடையன் கேட்க அவரின் கனத்த குரலைக் கேட்டதும் நடுங்கிப்போன சீதை வேகமாக தன் இரு பிள்ளைகளையும் தன்னருகே இழுத்து வைத்துக் கொண்டாள். அதைப் பார்த்த ஆசான்

“ம்…அந்த பெண் மிகவும் பயந்திருக்கிறாள். என்ன செய்தீர்கள் மந்திராசுரா?”

“ஆசானே நான் ஒன்றுமே செய்யவில்லை எல்லாம் நவியா தான் செய்தாள். அவள் தான் இவர்களை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள். அதோ அந்த நரன் ஞானானந்தம் இருக்கிறானே அவன் தான் அந்த அவ‌ந்தியில் இருந்து பிரயாகாவுக்கு நீர்த்துளிப் பதக்கத்தை எடுத்துச் சென்றுக் கொண்டிருந்தான். அவனை அவன் மனைவி மற்றும் பிள்ளைகளைக் கொண்டு மடக்கிப் பிடித்து அழைந்து வந்துள்ளால் நமது நவியாகம்ஷி. ஆக நாலு பதக்கங்களில் ஒன்று நம் வசம் உள்ளது. அவர்களால் இனி ஒன்றும் செய்ய முடியாது. ஹா! ஹா! ஹா!”

என்று மந்திராசுரன் சொல்லி முடித்ததும் மதிநாகசுரன் ஆசானை பெருமைப் பொங்கப் பார்த்தான். மந்திராசுரன் சிரித்ததும் பூமியே அதிர்வதுப் போல் இருந்தது ஞானானந்தத்திற்கும் அவன் குடும்பத்தினருக்கும். அவர்கள் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு நின்றனர். அதை கவனித்த ஆசான்

“மந்திரா மெல்ல சிரி! பாவம் நரன்கள் உன் சிரிப்பொலியில் பயந்துப் போய் ஒருவரோடொருவர் கைக்கோர்த்து நிற்கின்றனர். ம்….அது சரி அப்போ எல்லாம் நவியா தான் செய்தாள் என்றாள் நீ ஒன்றுமே செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துவிட்டு வந்துள்ளாயா?”

என்று ஆசான் கூற…மந்திராசுரனுக்கு ஏன் ஆசான் அப்படி கேட்கிறார் என்ற குழப்பத்திலிருக்க உடனே நவியாகம்ஷி ஆசானிடம்

“ஆசானே ஏன் அப்படி சொல்கிறீர்கள். நான் இந்த ஒரு குடும்பத்தை மட்டுமே கவனித்து அவர்களை நம் வழிக்கு வரவழைத்து இங்கு அழைத்துவந்துள்ளேன் ஆனால் அவந்தியை முழுவதுமாக துவம்சம் செய்து. அங்குள்ள அனைத்து நரன்களையும் நமது அடிமை சாம்பீனிகளாக்கியது நம் மந்திராசுரன் தான். அவர் அவந்தியின் நரன்களை பார்த்துக் கொண்டதால் தான் என்னால் இவர்கள் பின்னால் சென்று பிடித்து வர முடிந்தது. மந்திராசுரன் இல்லையேல் ஒன்றுமே நடந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. ஆகையால் அப்படி அவரிடம் தாங்கள் கேட்டது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது.”

என்று நவியாகம்ஷி சொன்னதும் ஆசான் மதிநாகசுரனைப் பார்த்து “கேட்டாயா” என்பதுப் போல ஜாடைக்காட்டினார். பின் நவியாகம்ஷியிடம்

“சரி சரி அனைவரும் உள்ளே வாருங்கள். அந்த நரன்களையும் உள்ளே அழைத்து வா”

எனக்கூறிக் கொண்டே பரமபத அரண்மனைக்குள் சென்றார் காற்கோடையன். அவர் பின்னாலேயே மற்றவர்கள் செல்ல…நவியாகம்ஷி ஞானானந்தத்தைப் பார்த்து

“ம்….இன்னுமும் ஏன் அங்கேயே நிற்கிறீர்கள்? ஆசான் சொன்னது காதில் விழவில்லையா? ம்‌‌…..உன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு உள்ளே வா”

கூறியதும் அவர்கள் நவியாகம்ஷியை பின் தொடர்ந்து உள்ளே சென்றனர். உள்ளே சென்றதும் அதிர்ந்து போனார்கள் ஞானானந்தமும் அவன் மனைவி சீதையும். ஏனெனில் அந்த அரண்மனையின் வெளித் தோற்றம் அதிபயங்கரமாகவும் உள்ளே அழகிய வேலைப்பாடுகளுடன் வளைந்து வளைந்து அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் என்ன இவர்கள் அவ்வளவு பிரம்மாண்டமான உயரமான அரண் அரண்மனையினுள் சின்னஞ்சிறு பிள்ளைகளைப் போல் தெரிந்தனர். பயத்தினால் தயங்கி தயங்கிச் சென்றனர். அதைப் பார்த்த நவியாகம்ஷி

“என்ன இது மெல்ல மெல்ல அடியெடுத்து நடக்கிறீர்கள்…இப்படி நடந்தால் எப்படி நாங்கள் நடப்பது? ம்…வேகமாக நடந்திடுங்கள். ஆசானும் மற்றவர்களும் அதோ அங்கே சென்று விட்டனர்.”

என்று மிரட்டியதும் நடையில் வேகம் கூடியது ஞானானந்தத்திற்கும் அவன் குடும்பத்தினருக்கும். ஆசானின் அறைக்குள் அனைவரும் சென்றதும் ஆசான் மந்திராசுரனிடம்

“மந்நிரா இந்த நரன்களை நமது பாதாளா அறையில் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திடுங்கள். அவர்கள் அறையின் வாயிலில் நமது இரண்டு சாம்பீனிகளை காவலுக்கு வைத்திடுங்கள். அவர்கள் உண்பதற்கு பழங்கள், குடிப்பதற்கு தண்ணீர், உடுத்திக்கொள்ள ஆடைகள் என அனைத்தும் அந்த அறையில் வைத்திடுங்கள். அவற்றை எல்லாம் முடித்துவிட்டு இங்கே வாருங்கள். ம்…சென்று வாருங்கள்.”

என்றதும் மந்திராசுரனும் மதிநாகசுரனுமாக நரன்களை அழைத்துச் சென்று ஆசான் கூறியது போலவே அவர்களுக்கு எல்லாம் செய்துக் கொடுத்து விட்டு இரண்டு சாம்பீனிகளையும் காவலுக்கு வைத்துவிட்டு ஆசானின் அறைக்கு வந்தனர்.

“ஆசானே அவர்களுக்கு தாங்கள் சொன்னது போலவே அனைத்தையும் செய்துக் கொடுத்து விட்டோம்.”

என்றான் மந்திராசுரன். அவனைத் தொடர்ந்து மதிநாகசுரன்

“ஆசானே அந்த நரன்களிடமிருந்து அந்த நீர்த்துளிப் பதக்கத்தை வாங்கிக் கொண்டு அவர்களையும் நமது சாம்பீனிகளாக்கிடாமல் எதற்கு அவர்களுக்கு இவ்வளவு உபசாரம் செய்கிறோம்?”

“அங்கே தான் சூட்சமம் ஒளிந்திருக்கிறது மதிநாகசுரா”

“என்ன அந்த சூட்சமம்?”

“அது அதன் பெயர் மாதிரி சாதாரணமான நீர்த்துளி அல்லவே!! அந்த அமிர்தத்தின் துளி ஆயிற்றே!! நம்மால் அந்த கேசவனின் கைக் காப்பையே தொட முடியவில்லை என்றிருக்கும் போது எப்படி அந்த அமிர்தத்துளிப் பதக்கத்தை தொட முடியும்? அது அந்த மாஹாவிஷ்ணு தொட்டு அந்த தேவர்களுக்கு அளிக்கப்பட்டது ஆகையால் நிச்சயம் நம்மால் தொட முடியவே முடியாது. அதனால் தான் அதை வைத்திருப்பவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளச் சொன்னேன். அதை அவர்களிடமே இருக்கச்செய்து அந்த பிரயாகாவையும் மற்ற மூன்று பதக்கங்களையும், தேவர்களையும் அழித்தாக வேண்டும். புரிகிறதா?”

“நன்றாக புரிகிறது ஆசானே! இனி அவர்களை நன்றாக கவனித்துக் கொள்கிறோம்.”

“அதற்கு முன் அவர்களிடம் அந்த பதக்கம் உள்ளதா என்பதை தெரிந்துக் கொண்டாக வேண்டும்”

“அதற்கு எந்த அவசியமுமில்லை ஆசானே!! அவர்களைப் பிடித்து வரும் போதே அந்த மரப்பேழையை ஞானானந்தத்திடம் காண்பிக்கச் சொல்லிப் பார்த்தேன். அது அவனிடம் தான் உள்ளது”

“நிச்சயமாக பார்த்தாயா நவியா?”

“ஆமாம் ஆசானே நன்றாக தான் பார்த்தேன். அது அவனிடம் தான் உள்ளதென்பதையும், அதை அவன் பிரயாகா எடுத்துச் சென்றுக் கொண்டிருக்கிறான் என்பதையும் நன்கு விசாரித்து தெரிந்துக் கொண்ட பின்பே இவர்களை நம்மிருப்பிடத்திற்கு அழைத்து வந்தேன். “

“அப்படி என்றால் சரி. நான் உன்னை நம்புகிறேன் நவியா”

“நன்றி ஆசானே!”

“சரி சரி நீங்களும் களைப்பாக இருப்பீர்கள் சென்று சற்று நேரம் ஓய்வெடுங்கள்”

என்றதும் அனைவரும் ஆசானின் அறையிலிருந்து வெளியே வந்தனர். அப்போது மதிநாகசுரனைப் பார்த்து நவியாகம்ஷி

“மதி நம்ம மந்தாகிஷி எப்படி இருக்கிறாள்? அவளை இதுவரை காண முடியவில்லையே! சிம்பாவின் இழப்பு அவளை பாதித்திருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும் ஆனாலும் அவள் சற்று தேர்ந்தால் தான் நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் நல்லது”

“அவள் மீண்டும் மாயாபுரி சென்று நமது சிம்பாவைக் கொன்றவனின் தலையையும் சிரத்தையும் தனிதனியாக பிரித்தெடுத்து, அவனையும் சாம்பீனியாக்கி அவளின் அடிமையாக்கி வைத்திருக்கிறாள். இப்போது அவளுக்கு ஆறுதல் அவள் பிள்ளைகள் தான். அவர்களுடன் அவள் அறையிலேயே தான் இருக்கிறாள். அவள் மகன் ராவினாசுரன் தான் அவளை நன்கு கவனித்துக் கொண்டிருக்கிறான்”

“சரி மதி. நீங்கள் சென்றுக் கொண்டே இருங்கள்… நான் போய் அவளைப் பார்த்துவிட்டு நமது அறைக்கு வருகிறேன்.”

“சரி நவியா. சீக்கிரமாக வந்துவிடு. நானும் நமது பிள்ளைகளும் உனக்காக ரொம்ப நாட்களாக காத்திருக்கிறோம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்”

“ம்…ம்…எனக்கு புரிகிறது. நன்றாகவே புரிந்தது. வந்துவிடுகிறேன்.”

“உனது வெற்றியை கொண்டாடிட காத்திருப்பேன்”

“கொண்டாடிவிடுவோம். செல்லுங்கள். நானும் சென்று வருகிறேன்.”

என்று கூறிக் கொண்டு இருவரும் இரண்டு திசையில் சென்றனர். நவியாகம்ஷி மந்தாகிஷியின் அறைக்குள் சென்று பார்த்தாள்

அறையின் மூலையில் இருந்த ஒரு தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள் மந்தாகிஷி. கண்கள் இரண்டும் வற்றாது கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்ததில் அவளின் முகம் வீங்கி கன்னமிரண்டிலும் கண்ணீர் கறைகளுடன் இருந்த தன் தோழியைப் பார்த்ததும் நவியாகம்ஷிக்கு அழுகை வர துவங்கியது. அவள் மெல்ல மந்தாகிஷியின் தோள்களில் தன் கைகளை வைத்துத் தடவிக் கொடுத்தாள். உடனே சட்டென திரும்பிப் பார்த்த மந்தாகிஷி அழுதுக் கொண்டே நின்றிருந்த நவியாகம்ஷியின் கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டே

“வேண்டாம் நவியா. வேண்டாம். மீதம் வைத்துக் கொள். நாம் இறங்கியுள்ள இந்த யுதத்தில் யாருக்கு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாமில்லையா!! நாளைக்கே நானே கூட போய் விடுவேன் அப்போது எனக்காக இரண்டு சொட்டு கண்ணீர் விட நீயாவது இரு நவியா இரு”

என்று சொல்லி நவியாகம்ஷியைக் கட்டிக்கொண்டு தன் கண்களையும் துடைத்துக் கொண்டாள். பின் நவியாகம்ஷியின் கைகளைப் பிடித்துக் கொண்டு

“ம்…நீயும் மந்திராவும் சென்ற வேலை நல்லபடியாக முடிந்ததா?”

“ம்…நன்றாகவே முடிந்தது மந்தா. அந்த ஊரின் பதக்கத்தை… அதை எடுத்துச் சென்றவனோடு பிடித்து வந்துவிட்டோம். அவன் தன் குடும்பத்தினருடன் நமது பாதாள அறையில் வைக்கப்பட்டுள்ளான்.”

“பலே ! பலே!! நவியா நீ சிறு வயது முதலே வீரமானவள், விவேகமானவளாயிற்றே !! நீ நிச்சயம் வெற்றியோடு தான் வருவாய் என்பது நாங்கள் அனைவரும் அறிந்ததே! அதிலும் சிம்பாவிற்கு உன் மேல் நிறைய நம்பிக்கையும் மரியாதையும் இருந்தது தெரியுமா!”

என்று கூறிக்கொண்டே தன் கண்களில் வழிந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அதை கவனித்த நவியாகம்ஷி

“கவலை வேண்டாம் மந்தா. உனக்கு நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். அதுவுமில்லாமல் நமது சிம்பா இங்கேயே நம்மைச் சுற்றிக் கொண்டுதான் இருப்பார். இப்போது நாம் பேசுவதைக் கூட கேட்டுக் கொண்டிருப்பார்”

“ம்…. அவரின் நினைவாக என் பிள்ளைகளைப் பார்த்து தான் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அதிலும் ராவினாசுரனின் பேச்சு நடை உடை எல்லாவற்றிலும் நமது சிம்பாவைக் காண முடிகிறது நவியா.”

“நல்லது மந்தா. நான் அவந்தியிலிருந்து வந்ததும் ஆசானிடம் பேசிவிட்டு நேராக உன்னைக் காண வந்து விட்டேன் மந்தா. நீ எதற்கும் கலங்காதே வெற்றி நமதே! சரி நான் சென்று என் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு வரட்டுமா”

“சென்று வா நவியா”

“வருகிறேன் மந்தா. மீண்டும் நாளை சந்திப்போம்”

என்று கூறி மந்தாகிஷியிடமிருந்து விடைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்று தன் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டாள் நவியாகம்ஷி.

ஆசானுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று அவர் மனம் அவரிடம் கூறிக்கொண்டே இருந்ததில் அவரால் எந்த வேலைகளிலும் சரியாக ஈடுபட முடியாமல் தன் அறையிலேயே அங்குமிங்குமாக உலாத்திக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த மந்திராசுரன் அவரிடம்

“என்ன ஆயிற்று ஆசானே? ஏன் உங்கள் முகத்தில் ஒருவகையான குழப்பம் தெரிகிறது?”

“என்னமோ தெரியவில்லை மந்திரா… அந்த நரன்களைப் பார்த்ததிலிருந்தே என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை”

“நாங்கள் பிடித்து வந்த நரன்களைப் பார்த்தா?”

“ஆமாம் அவர்களைப் பார்த்து தான். ஏதோ சரியில்லை என்று மனம் என்னிடம் கூறிக் கொண்டே இருக்கிறது…என்னால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை”

“எதனால் அப்படி ஆசானே?”

“தெரியவில்லையே மந்திரா!! சரி இரு எதற்கும் அந்த நரன்கள் இருக்கும் பாதாள அறை வரைச் சென்று பார்த்துவிட்டு வருகிறேன்! அப்போதாவது என் மனம் நிம்மதியாகிறதா என்று பார்ப்போம்”

“நானும் தங்களுடன் வருகிறேன் ஆசானே”

“வேண்டாம் வேண்டாம் நீ படுத்துறங்கிக் கொள். நீயே களைப்பில் படுத்திருக்கிறாய்!! நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேன். என்னைத் தேடாதே சரியா”

“சரி ஆசானே போய் வாருங்கள்”

என்று மந்திராசுரன் சொன்னதும் வேகவேகமாக பாதாள அறையை நோக்கிச் சென்றார் காற்கோடையன். அந்த அறையின் வாயிலில் இருந்த சாம்பீனிகள் ஆசானைக் கண்டதும் வழிவிட்டன. காற்கோடையன் அந்த அறையைத் திறந்தார். அதனுள் தூங்காது விழித்துக் கொண்டிருந்த ஞானானந்தத்தையும் சீதையையும் பார்த்தார் ஆசான். அவர்கள் பிள்ளைகள் அவர்களின் மடியில் படுத்துறங்கிக் கொண்டிருந்தனர். ஆசானைப் பார்த்ததும் இருவரும் பிள்ளைகளைத் தரையில் படுக்க வைத்துவிட்டு எழுந்து நின்றனர். அப்போது ஆசான் அவர்களிடம்

“ம்…எங்கே அந்த பதக்கமிருக்கும் மரப்பேழை?”

“என்னிடம் உள்ளது ஐய்யா”

“அது தெரிந்து தானே கேட்கிறேன். எடுத்து என்னிடம் காட்டு”

“இதோ காட்டுகிறேன்”

என்று அவனிடமிருந்த சிறிய மரப்பேழையை தன் பையினுளிருந்து எடுத்துக் காட்டினான் ஞானானந்தம். அதைப் பார்த்ததும் சற்று சமாதானமாகிய ஆசான் அந்த அறையை விட்டு வெளியெறி சற்று தூரம் சென்றதும் ஏதோ தோன்ற உடனே திரும்பி மீண்டும் அந்த அறைக்குள் சென்றதும் மீண்டும் ஞானானந்தமும் அவன் மனைவியும் எழுந்து நிற்க அவர்களிடம் ஆசான்

“சரி அந்த மரப்பேழையை திறந்துக் காட்டு”

என்றதும் ஞானானந்தமும் சீதையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்‌. அதைப் பார்த்த காற்கோடையன்

“என்ன நான் இங்கே கேட்டுக்கொண்டே இருக்கிறேன் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு விழிக்கிறீர்கள்? ம்…திறந்து காட்டு”

பயத்தில் உறைந்து நின்றனர் ஞானானந்தமும் அவன் மனைவி சீதையும்.

தொடரும்…….
Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s