அத்தியாயம் 35: குணவான்

கேசவன் அவனருகே இருந்த மெத்தையில் யார் படுத்திருக்கிறார் என்று சுற்றி வந்து அவர் முன்னால் சென்று முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துப் போய் தன் கையை தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டவன் மீண்டும் அவரின் முகத்தை உற்றுப் பார்த்தான். பின் தனக்குத் தானே

“இவர் எப்படி இங்கே? அதுவும் நான் வந்த சில மணி நேரங்களிலெல்லாம் வந்திருப்பார் போலும். ஆனால் என்னை அனுப்பிவிட்டு பின்னாலேயே இவர் வர காரணம் என்னவாக இருக்கும்? இவரை எழுப்பிக் கேட்போமா? ம்…வேண்டாம் வேண்டாம் பாவம் பயணக்களைப்பில் நன்றாக தூங்குகிறார். தூங்கட்டும். நானும் என் தூக்கத்தைத் தொடர்கிறேன்”

என்று பேசிக்கொண்டு விட்டு மீண்டும் உறங்குவதற்காக படுத்துக் கொண்டான். ஆனால் அவன் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடையைத் தேடிக் கொண்டே இருந்ததில் அவனுக்கு தூக்கம் வரவில்லை. சீக்கிரம் விடிய வேண்டுமென்று வேண்டிக் கொண்டே படுத்திருந்தான். பொழுதும் விடிந்தது.

கோதகன் பயத்திலும் பதற்றத்திலும் பிரயாகாவை நோக்கி ஒன்றுமே உண்ணாமல் ஓடி வந்ததில் பாதி வழியிலேயே மயக்கமாகி கீழே விழுந்தான். அவனைச் சுற்றிவளைத்தன பெரும் மந்திக் கூட்டம். ஒன்று அவன் கைகளை தூக்கிப் பார்த்தது, சில அவன் கால்களை தூக்கிப் பார்த்தது, நான்கு மந்திகள் அவன் மீது ஏறி தலையிலிருந்து கால் வரை அங்குமிங்குமாக நடந்தன, இன்னும் சில மந்திகள் அவனின் முடியைப் பிடித்து இழுத்து விளையாடின ஆனாலும் அசையாதுக் கிடந்த கோதகனை அவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இழுத்துக் கொண்டு அருகே ஓடிக் கொண்டிருந்த ஓடையில் தள்ளிவிட்டு கொக்கரித்தன.

சில்லென ஓடை நீர் தன் மேல் பட்டதும் கோதகனுக்கு மயக்கும் தெளிந்தது. பசியிலும் தாகத்திலும் அவன் வேக் வேகமாக அந்த ஓடை நீரைப் பருகினான். அவன் அந்த ஓடை நீரைப் பருகும் வேகத்தைக் கண்டதும் அங்கிருந்த சில மந்திகள் காட்டினுள் சென்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு பழத்தைக் கொண்டு வந்து கோதகனைப் பார்த்து வீசின. அப்போது தான் தன்னை ஒரு மந்திக் கூட்டமே சுற்றி வளைத்திருந்ததைப் பார்த்தான் கோதகன். அவைகள் தனக்காக தான் அந்த பழங்களை தன் மீது வீசி எறிகின்றன என்பதை உணர்ந்தாலும் குரங்குக் கூட்டமாயிற்றே அதை எடுத்தால் எல்லாமுமாக தன் மீது பாய்ந்து விடுமோ என்ற அச்சம் அவனை அந்த பழங்களை எடுக்கவிடாமல் தடுத்தது. ஆனால் அவன் வயிறோ அவனை அந்த பழங்களை எடுத்து தனக்கு தரும் படி அவனை உள்ளிருந்து வதைத்தது. அதன் எதிர் ஒலி மூளை வரை சென்று அவன் கண்கள் அவனைச் சுற்றியிருந்த மந்திகளைப் பார்த்துக் கொண்டே… அவன் கைகள் மெல்ல குரங்குகள் வீசியெறிந்த பழங்களை எடுக்க நீண்டது.

கோதகனின் பயத்தை அறிந்துக் கொண்ட குரங்குகள் ஒன்றோடு ஒன்று க்ரீச் க்ரீசென பேசிக் கொள்ள அனைத்தும் சேர்ந்து பலத்த சப்தம் எழுப்பிக் கொண்டே அவனை வைத்து விளையாட திட்டமிட்டு அவன் எடுக்கப் போகும் பழத்தை அவனிடமிருந்து தட்டிப் பறித்து அதை அங்குமிங்குமாக அவைகளுக்குள் வீசி எறிந்தும் அதைப் அவைகளே பிடித்தும் விளையாடின. குரங்குள் தன்னுடன் விளையாடுகின்றன என்பதை உணர்ந்த கோதகன் அதன் பின் எந்த பழத்தையும் எடுக்க முயற்சிக்காமல் ஓடையருகேயிருந்த ஒரு பாறைமீது அமர்ந்துக் கொண்டான். சற்று நேரம் விளையாடிய குரங்குள் கோதகனிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை அவன் பழத்தை எடுக்கவோ அல்லது அவைகளிடமிருந்து பறிக்கவோ முயற்சிக்கவில்லை என்பதை அறிந்துக் கொண்ட குரங்குகள் அனைத்துப் பழங்களையும் அவனருகே வைத்து விட்டு அவனைப் பார்த்து ஏதோ கீச் கீச் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அனைத்து மந்திகளும் ஒன்றாக மரக்கிளைகளைப் பற்றிக் கொண்டு காட்டுக்குள் சென்றன.

குரங்குள் அனைத்தும் சென்றனவா என்பதை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவைகள் சென்று விட்டன என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டாலும் எங்கேயாவது மரக்கிளைகளிலிருந்து மீண்டும் வந்திடுமோ என்ற பயத்தோடு மெல்ல சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே தன் கைகளை நீட்டி மண்ணிலிருந்த வாழைப் பழத்தை எடுத்தான். எங்கிருந்தும் குரங்குகள் வரவில்லை என்றதும் வேகவேகமாக அங்கே கீழே கடந்த ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் என அனைத்தையும் உண்டு முடித்து ஓடை நீரை அருந்தி தான் இரண்டு நாள் மறந்திருந்த வயிற்று பசியை போக்கிக் கொண்டான். வயிற்றுப் பசி அடங்கியதும் தான் அவனுக்கு தன் அக்கா, மாமா, அசுரர்களின் உரையாடல் என அனைத்தும் ஞாபகத்துக்கு வந்தது. உடனே புத்துணச்சியோடு மீண்டும் பிரயாகா நோக்கிய தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

விடிந்தும் வெகுநேரம் தூக்கம் வராமல் படுத்துப் புரண்டுக் கொண்டிருந்த கேசவன் அவனுக்கே தெரியாது அதிகாலை நன்றாக உறங்கிப் போனான். திடீரென அவனை யாரோ தட்டி எழுப்புவதுப் போல தோன்ற விருட்டென்று எழுந்துப் பார்த்தான். அவனருகே ஒரு காவலன் நின்றுக் கொண்டிருந்தான். அவனிடம்

“நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ?”

“இல்லை இல்லை தங்களை எழுப்பி தயாராகச் செய்யும் படி எனக்கு எங்கள் ஊர் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார். அதனால் தான் நான் உங்களை எழுப்பினேன்”

“ஓ!! அப்படியா!! சரி சரி சரி…அது வந்து இது புது இடமா அதுனால தூக்கம் வர்றதுக்கு ரொம்ப நேரமாயிடுச்சு அது தான் இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் …இல்லாட்டி எங்க ஊர்ல எல்லாம் விடியற் காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வேலைக்குப் போயிடுவேன்”

என்று கூறிக்கொண்டு எழுந்து தரையில் விரித்திருந்த தன் தோள் துண்டை எடுத்து உதறிவிட்டு அதை தன் தோளில் போட்டுக் கொண்டே மெத்தையைப் பார்த்த கேசவன் அதிர்ந்துப் போய்

“ஏன்ப்பா இங்கே நேத்து.. நல்லிரவு இருக்கும் ..அப்போ தான் சட்டென விழித்து திரும்பிப் பார்த்தேன் அப்போ இந்த மெத்தையில ஒருத்தர் படுத்திருந்தார். அவரைப் பார்த்ததும் தான் என் தூக்கம் சுத்தமா போச்சு. அதுக்கப்புறம் ரொம்ப நேரமா சும்மா புரண்டுட்டு தான் இருந்தேன். எனக்கே தெரியாம தான் தூங்கிருக்கேன்னா பாரேன்….சரி அவர் எங்க இப்போ?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது ஐய்யா. நீங்கள் என்னுடன் வந்தீர்களேயானால் உங்களுக்கு நீராடும் இடத்தைக் காட்டுவேன். அங்கே குளித்து, உடைகளை மாற்றிக் கொண்டு, காலை உணவருந்தினீர்களானால் நாம் எங்கள் ஊர் தலைவரைக் காணச் செல்லலாம். அவர் தங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.”

என்றதும் சற்று குழப்பமடைந்தான் கேசவன்.

“நல்லிரவில் பார்த்தது அப்போ கனவா? இல்லையே நான் கிள்ளிப் பார்த்தேனே வலித்ததே…ம்….” என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டான். பின் காவலனைப் பார்த்து

“அவரைத் தான் நான் நேற்றே பார்த்துவிட்டேனே. அதுவுமில்லாம இந்த மரப்பேழையை அவர்ட்ட ஒப்படைக்கணும். நான் ரொம்ப நாள் எல்லாம் இங்கே தங்க முடியாதுப்பா. நான் எங்க ஊருக்குக் கிளம்பணும். அதுவும் இன்னிக்கே.”

“நேற்று நீங்கள் பார்த்தது எங்கள் தலைவருக்கு இளையவர் வீரராகவன். எங்கள் தலைவர் வீரசேகரனின் தளபதி அவரின் ஒரே தம்பி.”

“ஓ!! சரி சரி.!! சரி வாங்க நாம போய் குளிச்சிட்டு தலைவரைப் போய் பார்ப்போம்”

“இல்லை இல்லை குளித்துவிட்டு, காலை உணவை அருந்தியப் பின் தான் தங்களை அழைத்து வரச் சொல்லியிருக்கிறார் எங்கள் தலைவர்”

“சரியப்பா சரி!!! அப்படியே செய்கிறேன். வா நாம் செல்லலாம்.”

என்று காவலனுடன் சென்று நீராடிவிட்டு அவர்கள் கொடுத்தப் பட்டுடையை பார்த்ததும் வஜ்ரகேசவன்

“அச்சச்சோ இது என்ன? பட்டு வஸ்திரம்!!! இது எனக்கா?”

“ஆமாம் ஐய்யா. இது உங்களுக்கே தான்”

“எனக்கெதுக்கு பட்டெல்லாம்? வேண்டாம். என்னுடைய உடைகளையே தந்திவிடுங்கள் அதையே உடுத்திக் கொள்கிறேன்”

“இல்லை ஐய்யா. தரமுடியாது! மன்னிக்கவும். இதைத் தான் தங்களை அணிந்து வரச் சொல்லியிருக்கிறார்கள்.”

“அப்படியா!! இது என்னப்பா தர்மசங்கடமான நிலை.!!! சரி தா போட்டுட்டு வரேன். இது மாதிரி பட்டு உடுத்தினா என்னால சாதாரணமா நடக்கவோ, உட்காரவோ எல்லாம் முடியாதுப்பா. ஏன்னா இந்த உடை அப்படி. இது எவ்வளவு விலை இருக்கும் இதைப் போட்டுட்டு தரையில எப்படி உட்காருவது? நீயே சொல்லு”

என்று காவலனிடம் புலம்பிக் கொண்டே அவர்கள் கொடுத்த பட்டாடையை அணிந்துக் கொண்டதும் அந்த அறையை விட்டு வெளியே வந்தான் வஜ்ரகேசவன். அவனைப் பார்த்ததும் காவலனே திகைத்துப் போனான். ஏனெனில் அந்த உடையில் வஜ்ரகேசவனின் தேஜஸ் கூடியிருந்தது. அவனைப் பார்த்ததும் இருக் கைக்கூப்பி கும்பிடத் தோணியது அந்த காவலனுக்கு. அவனும் அதைச் செய்தான். அவனிடம் வஜ்ரகேசவன்

“அட என்னப்பா என்னை எல்லாம் கும்பிட்டுட்டு இருக்க?”

“ஐய்யா!!! உங்களை இப்போது பார்க்கும் போது தானாக எனது கரங்கள் இரண்டும் தங்களைத் தொழுகின்றன. தங்களிடம் ஏதோ தெய்வீக அம்சம் தெரிகிறது ஐய்யா”

“அடடா!! என்னப்பா நீ. நான் உன்னைப் போல சாதாரனமான ஆசாமி தான்ப்பா…சரி சரி வா..வா…நேரமாகிறது உங்கள் தலைவரைக் காணச் செல்வோம்”

“ஐய்யா தாங்கள் உணவருந்தவில்லையே”

“பரவாயில்லைப்பா தங்கள் தலைவரைப் பார்த்தப்பின் சாப்பிட்டுக் கொள்கிறேன்.”

“ம்…ஹூம்…அது சரி இல்லை ஐய்யா. நீங்கள் என்னுடன் வாருங்கள். உங்களுக்காக காலை உணவு தயாராக இருக்கிறது. அதை உண்டபின் தலைவரிடம் அழைத்துச் செல்கின்றேன்”

“என்னப்பா நீ….சரி வா. சாப்பிட்டு விட்டே செல்லலாம்.”

என்று காலை உணவருந்த சென்ற வஜ்ரகேசவன் அவனுக்காக செய்து வைத்திருந்த உணவு வகைகளைப் பார்த்ததும் வியப்பில்

“என்னது இதனைத்தும் எனக்கா?”

“ஆமாம் ஐய்யா”

“என்ன விளையாடுகிறீர்களா? என்னால் இவ்வளவெல்லாம் சாப்பிட முடியாதுப்பா”

“ஐய்யா தங்களால் சாப்பிட முடிந்ததை மட்டும் சாப்பிட்டால் போதும்.”

“ம்…அதை அல்லவா நீ முதலில் சொல்லியிருக்க வேண்டும்!! சரி இதோ இது போதும் எனக்கு. நீ சாப்பிட்டாயா?”

“இல்லை ஐய்யா தங்களைத் தலைவரிடம் அழைத்துச் சென்ற பின் தான் சாப்பிட வேண்டும்”

“அச்சச்சோ!! சரி வா நீயும் என்னுடன் சாப்பிடு. பின் இருவருமாக உங்கள் தலைவரைக் காண ஒன்றாகப் போகலாம்”

“ஐய்யா அது சரி இல்லை. நீங்கள் சாப்பிட்டதும் தங்களை தலைவரிடம் அழைத்துச் சென்றப் பின்னர் நான் சாப்பிட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து தாங்கள் சாப்பிடுங்கள். என்னையும் தங்களுடன் உணவை உட்கொள்ள அழைப்பு விடுத்ததற்கு நன்றி”

“உன் நன்றி எல்லாம் எனக்கு வேண்டாம். இப்போது நீ என்னுடன் சாப்பிட்டால் தான் நாம் சீக்கிரம் இங்கிருந்து செல்ல முடியும். இல்லை என்றால் நானும் சாப்பிட மாட்டேன் பின் காலதாமதம் ஆகிவிடும்”

“ஐய்யா இது என்ன சோதனை!! சரி வாருங்கள் நானும் தங்களுடன் சாப்பிடுகிறேன்.”

என்று காவலன் வஜ்ரகேசவனுடன் சேர்ந்து காலை உணவை உட்கொண்டான். காவலர் சாப்பிடுவதைக் கண்டு மனநிறைவோடு தானும் உண்டு அங்கிருந்து தலைவரைக் காண இருவரும் புறப்பட்டுச் சென்றனர். கேசவனின் நல்ல உள்ளம் தான் அவனை இந்த பெரும் முயற்சிக்கு கடவுளே தேர்ந்தெடுக்கக் காரணமாகியிருக்கிறது.

“நிலமதில் குணவான் தோன்றின் நீள்குடித் தனரும் வாழ்வார்,…” என்பதற்கு உதாரணம் வஜ்ரகேசவன் என்றால் அது மிகையாகாது.

நல்லது உதித்தால் தீயது அழிந்துவிடும். நல்லதை உதிக்கச் செய்து தீயதை அழிப்பதென்பது அந்த கடவுளின் கணக்கு. ஒரு நாட்டுக்கோ அல்லது வீட்டுக்கோ நல்லது நடக்க வேண்டுமென்றால் அது என்றுமே நல்லுள்ளம் படைத்த மக்களால் தான் நடந்தேறும்.

நவியாகம்ஷி மந்திராசுரன் தங்களின் சாம்பீனிப் படையை இரட்டிப்பாக்கிக் கொண்டும், நான்கு நரன்களுடனும் கஷியின் எல்லையை நோக்கி வந்துக் கொண்டிருந்ததை தங்களின் பரமபதக் கோட்டையின் உச்சியில் நின்றுக் கண்டுக் கொண்டிருந்த மதிநாகசுரன் வேகமாக கீழேச் சென்று அவர்களின் வருகையை ஆசானிடமும், மந்தாகிஷியிடமும், கோபரக்கனிடமும் கூறினான். அதோடு நின்னறிடாமல் தங்களின் அடுத்த அசுரர் வாரிசுகளை மேலே அழைத்துச் சென்று நவியாகம்ஷியின் திறமைகளை பெருமையாக கூறிக் கொண்டிருக்கையில் ..அதைக் கேட்டுக் கொண்டே கடைசியாக மேலே ஏறி வந்த ஆசான் மதிநாகசுரனிடம்

“மதிநாகசுரா…மந்திராசுரனின் பெருமைகளும் போற்றுதற்குரியதே. அதை நவியாகம்ஷியே இங்கு வந்ததும் கூறுவாள் பொறுத்திருந்து பார்”

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s