அத்தியாயம் 34: பிராப்தி சித்தி பூர்த்தியானது!

கோபரக்கன், மந்தாகிஷி இருவரும் தங்கள் சாம்பீனி படைகளுடன் கஷியை சென்றடைந்தனர். அங்கே காத்திருந்த ஆசானைக் கண்டு

“நாங்கள் அனைத்து மாயாபுரி நரன்களையும் நமது அடிமை சாம்பீனிகளாக மாற்றி அழைத்து வந்து விட்டோம் ஆசானே”

“ம்….நல்லது. என்ன மந்தாகிஷி உன் ஆத்திரம் தீர்ந்ததா?”

“ஆத்திரம் தீர்ந்தது ஆசானே ஆனால் என் மனம் என் சிம்பாவைத் தேடுகிறதே!! நான் என்ன செய்வேன்”

என்று அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை காட்டு வெள்ளம் போல பொங்கி எழுந்தது. அவளை தட்டிக்கொடுத்து தேற்ற கிட்டே சென்ற ஆசானைக் கட்டிக் கொண்டு அழுதாள் மந்தாகிஷி. அன்பு, பாசம், காதல் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல அசுரர்களுக்கும் இருக்கிறதென்பது இந்த சம்பவம் உணர்த்தியது. சற்று நேரம் அழுதுவிட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டு ஆசானை பார்த்து

“ஆசானே என் சிம்பாவை மறுபடியும் கொண்டு வர முடியுமா?”

“அது…. அது….முடியாதே மந்தாகிஷி. அப்படி முடிந்திருந்தால் நான் மிளானாசுரியையும் மதிநாகசுரனின் மகனையும் உயிர்த்தெழச் செய்திருப்பேனே!!!”

“சரி அவரையும் சாம்பீனியாகவாவது மாற்ற முடியுமா?”

“அந்த சாம்பீனி மந்திரம் நரன்களின் மீது தான் உபயோகிக்க முடியும் என்பது உனக்கும் நன்றாக தெரிந்தது தானே மந்தா!!”

“வேறு எந்த வழியுமே இல்லையா?”

என்று அழுதவளை மதிநாகசுரன் சமாதானம் செய்து அமரச்செய்தான். அப்போது கோபரக்கன்

“அவளை விடு மதி. அவள் அழுது தீர்க்கட்டும். என் மிளானா போனபோது எனக்கிருந்த அதே வலி தானே இப்போது அவள் அனுபவிக்கிறாள். அழட்டும். அழுது அழுது அவள் கண்ணீர் வற்றட்டும். என்ன செய்ய!!! நாம் ஒன்றாக வளர்ந்தோம் ஆனால் இன்று நம்முள் இருவர் இல்லை என்றெண்ணும் போது எனக்கே அழுகை வருகிறது.”

என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலே சிம்பாசுரன் மந்தாகிஷி பிள்ளைகள் சிந்தாசுரி, சிப்பியாழ்சுரி, சிச்சத்தசுரி மற்றும் ராவினாசுரன் ஆகியோர் மற்ற பிள்ளைகளுடன் சிம்பாசுரனின் மரணமறிந்து ஓடி வந்தனர். அங்கே அழுதுக் கொண்டிருந்த மந்தாகிஷகயைப் பார்த்ததும் “தாயே” என்று கூறிக்கொண்டு அவளைக் கட்டிக் கொண்டு அழுதனர். அதில் ராவினாசுரன் மந்தாகிஷியின் முகத்தைத் தன் பக்கம் திருப்பி அவளின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே

“தாயே என் தந்தையை அழித்தவனை இந்நேரம் தாங்கள் கொன்று புதைத்திருப்பீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவர் அழிவிற்கு காரணமான அந்த நரன் இனத்தையே கொன்று தங்கள் அடிமைகளாக்குவேன். இது என் தந்தை சிம்பாசுரன் மீது ஆணை”

“சபாஷ் ராவினாசுரா சபாஷ்!! நான் சொல்ல நினைத்ததை அப்படியே நீ கூறிவிட்டாய். அதுவே எனது ஆணையும் ஆகும்”

“அக்கா சிந்தாசுரி, அண்ணா ராவினாசுரா அவர்களே தங்களுக்கு உதவ நாங்கள் காத்திருக்கின்றோம்.”

என்று மற்ற அனைத்து பிள்ளைகளும் கூறியதும் மந்தாகிஷிக்கு துக்கத்திலும் தன் பிள்ளைகள் இருக்கிறார்களே என்ற ஒரு மனநிம்மதி கிடைத்தது. பிள்ளைகளின் வீரமான விவேகமான பேச்சைக் கேட்டதும் ஆசான் மந்தாகிஷியிடம் சென்று

“இதோ பார் மந்தா உன் சிம்பா உனக்காக விட்டுச் சென்றுள்ள முத்துக்களை. இனி நீ இவர்களுக்காக வாழ்ந்து உன் சிம்பாவின் வீரப் பராக்கிரமங்களை இவர்களுக்கு எடுத்துரைத்து நான்கு சிம்பாசுரன்களை உருவாக்கு. ம்….எழுந்திரு மந்தா நாம் சிம்பாவுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்து முடிப்போம் வா”

என்று ஆசான் கூறியதும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு பிள்ளைகளை வாரி அணைத்துக் கொண்டு சிம்பாசுரனின் இறுதி சடங்குகளை கஷியின் ஊர் எல்லையில் செய்தாள். சிம்பாசுரனின் உடல் எரிந்து சாம்பலானதும். அந்த சாம்பலை எடுத்து தன் மேனி முழுவதும் பூசிக் கொண்டாள் மந்தாகிஷி. சிப்பியாழ்சுரி மரத்தாலான ஐந்து பதக்கங்களை செய்தாள். அந்த ஐந்திலும் தன் தந்தையின் சாம்பலை நிறப்பினாள். மரத்தின் பசையைக் கொண்டு அவற்றை ஒன்றாக இணைத்தாள். ஒவ்வொரு பதக்கத்தையும் ஒவ்வொரு கயிற்றில் கட்டினாள். அவற்றை தன் தாயிடமும் சகோதர சகோதரிகளிடமும் கொடுத்துக் கழுத்தில் போட்டுக் கொள்ளச் சொன்னாள். அனைவரும் அவளின் சொல்படி கழுத்தில் போட்டுக் கொண்டனர். அவர்களைப் பார்த்து சிப்பியாழ்சுரி

“நமது தந்தை சிம்பாசுரன் எங்கும் போகவில்லை நம்முடனே இருக்கிறார்.”

என்று அந்த பதக்கத்தை இரு கைகளுக்குள் வைத்து மூடிக்கொண்டு முத்தமிட்டாள். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை தேற்றினர். பின் ஆசானுடன் கஷிக்குள் மீண்டும் சென்றனர். மற்ற இரண்டு படைகளுக்காக காத்திருந்தனர். அப்போது மதிநாகசுரன் ஆசானிடம்

“ஆசானே மீண்டும் அந்த காப்பையும் சுக்கிரகுரு பதக்கத்தையும் வைத்து அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்துத் தெரிந்துக் கொள்வோமா?”

“அது சற்று முடியாத காரியமானது மதி. ஏனெனில் அந்த கைக் காப்புக்கு சொந்தக்காரனான அந்த கேசவன் பெரும் பலம் பொருந்திய ஊருக்குள் நுழைந்து விட்டான். அங்கே பலத்த சக்தி ஏதோ உள்ளது ….அது அங்கே நடப்பதை நாம் பார்க்க தடையாக உள்ளது. நான் என் ஞானதிருஷ்டியில் காண முயன்றேன் அதற்கும் தடை வந்தது…பார்ப்போம் நமது மற்ற இரண்டு படைகளும் கொண்டு வரும் செய்தியையோ அல்லது ஏதாவது துருப்பையோ வைத்து தான் நாம் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும். அவர்கள் எதற்கு அந்த நீர்த்துளி பதக்கங்களோடு பிரயாகா செல்ல வேண்டும்? அங்கு அவற்றை வைத்து என்ன செய்ய உள்ளார்கள்? அப்படி நான்கு பதக்கங்களும் ஒன்றானால் என்ன நேர்ந்திடும்? இவற்றுக்கெல்லாம் நமக்கு பதில் தெரிந்தால் தான் நாம் அடுத்து என்ன செய்யலாமென்று முடிவெடுக்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம். வேறு வழி”

என்று ஆசான் சொன்னாலும் மதிநாகசுரனின் மனம் சமாதானம் ஆகவில்லை. ஆசான் கூறியதைப் போல எப்படியாவது அந்த நான்குப் பதக்கத்தில் ஒன்றையாவது அழிக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்தான். அதற்கு என்ன செய்யலாமென்று தீவிரமாக யோசித்தான்.

அவந்தியை நோக்கிச் சென்ற மந்திராசுரனும் நவியாகம்ஷியும் எப்படியாவது அந்த ஊரின் நீர்த்துளிப்பதக்கத்தை பிரயாகா சென்றடையாமல் தடுப்பதற்கான திட்டம் ஒன்றைத் தீட்டினர். அது படி அவர்கள் அந்த ஊரை நெருங்கவும் அந்த நீர்த்துளி பதக்கத்தை எடுத்துக்கொண்டு அவந்தியின் எல்லையை ஞானானந்தம் தாண்டவும் சரியாக இருந்தது. நவியாகம்ஷி அந்த ஊர் தலைவரின் மனைவியை பிராப்தி சித்துக் கொண்டு வசியம் செய்து தலைவரிடமிருந்து யார் அந்த பதக்கத்தை எடுத்துக் கொண்டு பிரயாகா சென்றுள்ளார் என்ற விவரத்தை தெரிந்துக் கொண்டாள். விவரம் அறிந்துக் கொண்டதும் மந்திராசுரனை போர் புரியும் படி சொல்லிவிட்டு தனது சாம்பீனிகளையும் மந்திராசுரனுக்கு உதவும்படி கட்டளையிட்டு விட்டு அந்த ஊரிலிருந்த ஞானானந்தத்தின் மனைவியான சீதையை அடையாளம் கண்டு கொண்டு அவளின் இரண்டு பிள்ளைகளையும் அவளையும் தன் பிராப்தி சித்து கொண்டு வசியப்படுத்தினாள். பின் அவர்களிடம் ஊருக்கு வெளியே வரும்படி கட்டளையிட்டாள். அவளின் வசியத்திலிருந்த ஞானானந்தம் மனைவியும் பிள்ளைகளும் அவள் சொல்படியே ஊரின் எல்லையைத் தாண்டி வந்தனர். அங்கே அவர்கள் வந்ததும் தன் பிராப்தி சித்திலிருந்து சீதையை மட்டும் விடுவித்தாள். உடனே சீதை தன் பிள்ளைகளைப் பார்த்து ஓடினாள் ஆனால் நவியாகம்ஷி இரண்டு பிள்ளைகளையும் மரத்தில் ஏறச்சொல்லி கட்டளையிட்டாள் அவர்களும் ஏறினர். பின் அங்கிருந்த கிளையிலிருந்து தலைகீழாகத் தொங்கச் சொன்னாள் அந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் அது படியே செய்தனர். நவியாகம்ஷி தனது சாம்பீனிகளில் இரண்டை அங்கே வரச்செய்து அவற்றை இரண்டு பிள்ளைகள் தொங்கும் மரக்கிளையின் கீழ் நிற்கச் சொல்லிவிட்டு சீதையைப் பார்த்து

“நீ எங்களுக்கு ஒரு உதவி புரிய வேண்டும். அதை செய்துக் கொடுத்தால் உன் பிள்ளைகள் உனக்குக் கிடைப்பார்கள்…மறுத்தால் கீழே இருக்கும் எனது சாம்பீனிகளுக்கு இரையாகி விடுவார்கள். என்ன சொல்கிறாய்?”

சீதை தன் பிள்ளைகள் தலைகீழாக மரக்கிளையில் தொங்குவதைப் பார்த்தும் ….அதன் கீழ் அகோரமானா சாம்பீனிகளைப் பார்த்தும் நடுநடுங்கிப் போனாள். தன் பிள்ளைகளைக் காப்பாற்றிட எண்ணி நவியாகம்ஷியிடம்

“சரி நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல் செய்கிறேன். என் பிள்ளைகளை ஒன்றும் செய்திடாதே….நீயும் ஒரு பெண்ணா?”

“ஹா ஹா ஹா !!! நான் பெண்ணா இல்லையா என்பது இப்போ முக்கியமல்ல நீ எங்களுக்காக செய்யப்போகும் உதவி தான் மிக மிக முக்கியமானது. உன் பிள்ளைகளை காப்பாற்றப் போவது”

“அய்யோ சரி சரி…என்ன செய்ய வேண்டும் சொல். செய்து தருகிறேன்”

“பெரிதாக ஒன்றும் நீ செய்ய வேண்டியதில்லை…உன் கணவன் ஞானானந்தம் கொண்டுச் சென்றிருக்கும் அந்த பதக்கம் தான் வேண்டும். அதை அவனிடமிருந்து வாங்கி என்னிடம் தந்து விடு. உன்னையும் உன் பிள்ளைகளையும் விட்டுவிடுகிறேன். ஆனால் இதில் ஏதாவது பிழை நடந்ததென்றால் உன் பிள்ளைகளும் அந்த சாம்பீனிகள் போல் ஆகி விடுவார்கள் புரிகிறதா?”

“என்ன பதக்கம்? என் கணவர் எந்த பதக்கத்தையும் கொண்டு செல்லவில்லையே!!”

“என்ன உளறுகிறாய்?உங்கள் ஊர் தலைவன் ஞானானந்தத்திடம் தானே அந்த பதக்கத்தை கொடுத்தனுப்பியுள்ளதாக சொன்னான்!! என்ன உன் பிள்ளைகளின் உயிருடன் விளையாடுகிறாய்…ம்…”

என்று நவியாகம்ஷி சொன்னதும் சாம்பீனிகள் சீதையின் பிள்ளைகளைப் பிடிக்க முயற்சித்தன. அதைப் பார்த்ததும் பதபதைத்துப் போன சீதை

“அய்யோ!!! தாயே!! ஊர் தலைவர் அவரிடம் ஒரு சிறிய மரப் பேழையைத் தான் கொடுத்தனுப்பியுள்ளார். அதில் என்ன இருக்கிறதென்பது எங்களுக்கு தெரியாது! இது தான் உண்மை. நம்புங்கள்”

“ம்….போதும் சற்று நேரம் நிறுத்துங்கள்”

என்று சாம்பீனிகளுக்கு நவியாகம்ஷி கட்டளையிட்டதும் அவை அமைதியாகின. பின் சீதையைப் பார்த்து

“சரி உன்னை நான் நம்புகிறேன். அப்போ நீ அந்த மரப்பேழையை அவனிடமிருந்து வாங்கி என்னிடம் தர வேண்டும். என்ன சொல்கிறாய்?”

“அவர் இப்போது ஊரில் இல்லையே!”

“அது எனக்கும் தெரியும். அவன் பிரயாகா செல்வதற்கு முன் உன்னை நான் அவனிடம் கூட்டிச் செல்கிறேன். நீ அவனிடமிருந்து அதை வாங்கி இந்த பெட்டியில் போட்டு அதை இந்த பையினுள் வைத்து நன்றாக கட்டிட வேண்டும். புரிகிறதா?”

“சரி ஆகட்டும் அப்படியே செய்கிறேன். ஆனால் அவர் தர மறுத்தால்?”

“ம்….உன் பிள்ளைகளின் நிலைமையை எடுத்துக் கூறி வாங்கித் தா. வளவளவென்று எதற்கு பேச்சு. வா நான் உன்னை அவனிருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.”

என்று கூறி சீதையிடம் ஒரு மரப்பேழையையும் அதைப் போடுவதற்கான ஒரு பையையும் கொடுத்து அவளை ஒரு குதிரையில் அமரச்சொன்னாள் நவியாகம்ஷி. அவள் அமர்ந்ததும் தன் குதிரைப் பின்னாலே சீதையை வரச்சொல்லிவிட்டு காற்றை விட வேகமாக இருவரும் அவரவர் குதிரைகளில் பறந்தனர். சற்று நேரத்தில் எல்லாம் ஞானானந்தத்தை கண்டறிந்தார்கள் இருவரும். அவனுக்கு முன்னே சென்று அவன் செல்லும் வழியில் சற்று தூரத்தில் சீதையை நிற்கச் செய்தாள் நவியாகம்ஷி. நடு காட்டில் தன்னந்தனியாக தன் மனைவி நிற்பதைப் பார்த்த ஞானானந்தம் பதறிப் போனான். தன் குதிரையை நிறுத்தி சீதை அருகே சென்றான். அவள் அழுதுக் கொண்டிருந்ததைப் பார்த்து

“சீதை நீயா? நீ எப்படி எனக்கு முன்னாடி இங்க வந்த? ஏன் அழுவுற? சீதை ஏதாவது சொல்லு சீதை சொல்லு”

என்று தன் மனைவியை உலுக்கினான். அப்போது சீதை அவனிடம்

“தாங்கள் பிரயாகா எடுத்துச் செல்லும் அந்த சிறிய மரப்பேழை எனக்கு வேண்டும். தந்து விடுங்கள் சுவாமி”

“என்ன உளறுகிறாய் சீதை? அதை எல்லாம் உன்னிடம் தர முடியாது. அதை பிரயாகாவில் கொண்டு சேர்க்க வேண்டும். அதுதான் நம் தலைவரின் கட்டளை. எது நடந்தாலும் இதை அங்கு கொண்டு போய் சேர்த்தாக வேண்டும். ஆமாம்! அதை ஏன் நீ கேட்கிறாய்? முதலில் நீ எப்படி எனக்கு முன் இங்கு வந்தாய்?”

என்று ஞானானந்தம் கேட்டதும் சீதை நடந்தவைகளை விளக்கினாள். அவற்றைக் கேட்டதும் அதிர்ந்துப் போனான் ஞானானந்தம். அவன் மனைவியைப் பார்த்து

“என்ன சொல்கிறாய் சீதை? நம்ம ஊர் அழிந்து விட்டதா? தலைவரும் இறந்து விட்டாரா? நீயும் குழந்தைகளும் தான் தப்பியுள்ளீரா? அய்யோ இது என்ன கனவா இல்லை நினைவா!! ஆண்டவா!! இது என்ன சோதனை”

“இதோ பாருங்கள் நாம் தாமதிக்கும் ஒவ்வொரு துளி நேரமும் நமது குழந்தைகளுக்கு தான் ஆபத்தாகிவிடும். சீக்கிரம் அந்த மரப்பேழையை இந்த பெட்டிக்குள் போடுங்கள். ம்…எல்லாம் போய்விட்டது…நாம் நமது குழந்தைகளையாவது காப்பாற்றுவோம்”

“ம்…சரி இந்தா”

என்று அந்த சிறிய மரப்பேழையை சீதைக் கொடுத்த மரப்பெட்டிக்குள் வைத்து அதை அவள் கொடுத்த பையிலிட்டு இறுக்கக் கட்டியதும் அவர்கள் முன் தோன்றினாள் நவியாகம்ஷி. ஆறரை அடி உயரத்தில் கம்பீரமான ராட்சதத் தோற்றத்தில் அவளைப் பார்த்ததும் ஒரு அடி பின்னால் சென்றான் ஞானானந்தம்

“பயப்பட வேண்டாம் நரனே!! உன்னால் இன்று உன் மனைவியும் உனது இரண்டு பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். சரி நாம் இங்கே இனி நேரம் கடத்த வேண்டாம். நீங்கள் இருவரும் அந்த பையுடன் சீதை வந்த குதிரையில் ஏறுங்கள். நாம் சென்று உங்கள் பிள்ளைகளை விடுவிப்போம்”

என்று நவியாகம்ஷி கூறிக் கொண்டே அவர்களிடமிருந்து பத்தடித் தள்ளியே தன் குதிரையில் சென்றாள். பிள்ளைகள் மரக்கிளையில் தலைகீழாக தொங்குவதையும் அவர்களை தின்பதற்கு கீழே காத்திருந்த சாம்பீனிகளையும் பார்த்ததும் பயந்துப் போனான் ஞானானந்தம். பயத்தில் குதிரையிலிருந்து வேகமாக இறங்கி

“அய்யோ இது என்ன கொடுமை? குழந்தைகளா !! நாங்கள் நீ சொல்வது போலவே செய்கிறோம் அவர்களை விட்டு விடு. முதலில் அந்த மரக்கிளையிலிருந்து அவர்களை தரைக்கு அழைத்து வா.”

“என்னது!!! நீ, வா என்று பேசுகிறாய்?”

“அய்யோ மன்னியுங்கள் தாயே! மன்னியுங்கள். தயவுசெய்து என் குழந்தைகளை கீழே கொண்டு வாருங்கள்”

“ம்….அது!! இந்த மரியாதை என்றும் எப்போதும் குறையவேக்கூடாது. புரிகிறதா. சாம்பீனிகளே அவர்களை கீழே அழைத்து வாருங்கள்”

“அய்யோ இவைகளா? பிள்ளைகள் பயந்துவிடப் போகிறார்கள் தாயே!”

“அதெல்லாம் ஒன்றும் ஆகாது. உன் பிள்ளைகள் இப்போது என் வசம். அவர்கள் நான் என்ன சொன்னாலும் செய்வார்கள். சாம்பீனிகள் சென்று அழைத்து வருவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் அவர்களை மரத்திலிருந்து கீழே விழச் சொன்னாலும் செய்வார்கள். பார்க்கிறீர்களா?”

“அய்யயோ அம்மா வேண்டாம் தாயே அவைகளே அழைத்து வரட்டும்”

சாம்பீனிகள் அவ்விரண்டு பிள்ளைகளையும் கீழே அழைத்து வந்ததும் அவர்களை தன் குதிரையில் அமர்த்திக் கொண்டாள் நவியாகம்ஷி. பின் ஞானானந்தத்தையும் சீதையையும் பார்த்து

“நீங்கள் இருவரும் எனது பின்னாலேயே எங்களுடன் கஷிக்கு வர வேண்டும். அந்த பெட்டியை பத்திரமாக எடுத்து வர வேண்டும்”

“கஷிக்கா? எதற்கு நாங்கள் அங்கு வர வேண்டும்?”

“ம்…உங்கள் கேள்விக்கு பதில் வேண்டுமெனில் உங்கள் பிள்ளைகளை நீங்கள் இழக்க வேண்டும். எப்படி வசதி?பதில் வேண்டுமா? இல்லை… எங்களுடன் கஷிக்கு வருகிறீர்களா? ம்…சீக்கிரம் ஆகட்டும்”

“சரி…. சரி…..வருகிறோம். எங்கள் பிள்ளைகளை ஒன்றும் செய்திடாதீர்கள்.”

நவியாகம்ஷி இந்த ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு அவர்களுடன் வருவதற்குள் மந்திராசுரனும் சாம்பீனிகளும் அவந்தியை துவம்சம் செய்திருந்தனர். நவியாகம்ஷி ஞானானந்தத்துடனும் சீதையுடனும் அவர்களின் பிள்ளைகளுடனும் வந்ததைப் பார்த்த மந்திராசுரன்

“பலே நவியா பலே!!! நீ சாதித்து விட்டாயே! இங்கே அவந்தியில் நம் வேலை முடிந்தது நாம் இவர்களைக் கூட்டிக் கொண்டு கஷிக்கு செல்லலாமா?”

“ம்… செல்லலாம் மந்திராசுரா. ஞானானந்தம் நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். ஏதாவது தப்பிக்க முயன்றீர்களேயானால் உங்கள் பிள்ளைகளும் சாம்பீனிகளாக்கப்படுவர்.”

“ஆகட்டும் தாயே! நாங்கள் உங்கள் பின்னாலேயே வருகிறோம். எங்களுக்கு எங்கள் பிள்ளைகள் தான் முக்கியம். நீங்கள் சொல்வதுப் போலவே செய்கிறோம்”

என்று கூறிக்கொண்டே அவர்களை சூழ்ந்திருந்த சாம்பீனிப் படையைப் பார்த்து பயத்தில் உறைந்துப் போனார்கள் ஞானானந்தமும் சீதையும். நவியாகம்ஷி சொன்னது போலவே அவள் பின்னாலேயே சாம்பீனி படை சூழ கஷியை சென்றடைந்தனர்.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s