அத்தியாயம் 33: தடயம்

சிம்பாசுரனின் உடலையும் சிரத்தையும் கஷிக்கு கொண்டு வந்து சேர்த்ததும் நவியாகம்ஷி மந்தாகிஷியைப் பார்த்து

“மந்தா நீ இங்கேயே இருந்துக்கொள் நாங்கள் சென்று அந்த நரன்களுக்கு இதற்கான பாடத்தை பயிற்றுவித்து வருகிறோம். உன் இழப்பு பெரியதே அதற்காக நரன்கள் இழக்கப்போவது அதனையும் விட பெரியதாகவே இருக்கும்.”

“இல்லை நவியா எனக்கு கண்ணீர் வரவில்லை, கவலை வரவில்லை, துக்கம் இல்லை. ஆனால் என் மனதில் அந்த தலைமைக் காவலனின் சிரம் தான் நிறைந்திருக்கிறது. பழிவாங்க என் உள்ளம் தவிக்கிறது. அவனின் உடலில் இருந்து அவன் சிரத்தை வெட்டி தனியாக எடுத்து வீசி எறிந்தால் தான் என் சிம்பா மகிழ்வார். அதை செய்து முடிக்கும் வரை எனக்கு வேறெந்த உணர்வுக்கும் என் மனதில் இடமில்லை. மீண்டும் செல்வோம் வா”

என்று மந்தாகிஷி கூறியதைக்கேட்ட சிம்பாசுரனின் சாம்பீனிகள் அனைத்தும் மந்தாகிஷி அருகே வந்து அவளைச் சூழ்ந்துக் கொண்டு “ஆவ்” “ஓவ்” “ஏவ்” என்று சப்தமிட்டது. அப்போது தான் சாம்பீனிகளிடமிருந்த மாற்றத்தை உணர்ந்தனர் அசுரர்கள். அன்று வரை ஜடங்களாக மட்டுமே இருந்து வந்த சாம்பீனிகள் முதல் முறையாக உணர்ச்சிவசப்படுவதைக் கண்ட ஆசான் சற்று பதற்றமானார் உடனே மந்திராசுரனை அழைத்து

“மந்திரா சாம்பீனிகளுக்குள் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது. அது நமக்கு நல்லதல்ல. சிம்பாவை நாம் இழந்திருப்பது பெரும் இழப்பு தான் ஆனால் அதற்கு நாம் சோர்ந்து விடக்கூடாது. அந்த நான்கு ஊர்களுக்கும் அடி மேல் அடி விழவேண்டும். சரி இரு அங்கே என்ன நடக்கிறதென்பதை அறிந்துக் கொண்டு பின் என்ன செய்லாமென்பதை முடிவு செய்வோம்”

என்று காற்கோடையன் மீண்டும் சிக்கிரகுரு பதக்கம் மற்றும் கேசவனின் கைக் காப்பு வைத்துப் பார்த்தார். அங்கே மக்கள் அனைவரும் ஊரைக் காலி செய்துக்கொண்டு பிரயாகாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது தெரிய வந்ததும் அவர் ஏதோ யோசித்தார் …..மந்திராசுரனைப் பார்த்து

“மந்திரா அனைவரும் பிரயாகாவில் தான் கூட உள்ளனர். ஆகையால் நீங்கள் மூன்று அணிகளாக பிரிந்து அவந்தி, மாயாபரி, த்ரிகான்தக் ஆகிய மூன்று ஊர் நரன்களும் பிரயாகா சென்றடைவதற்கு முன் உங்களால் முடிந்த வரை அழித்து நமது சாம்பீனிப் படையை விரிவுப் படுத்துங்கள். இதில் நானும் மதிநாகசுரனும் இங்கிருந்துக் கொண்டு அடுத்து செய்ய வேண்டியதை செய்து முடிக்கிறோம்… ம்… புறப்படுங்கள். சீக்கிரம் சென்று வெற்றியுடன் வாருங்கள்”

“ஆகட்டும் ஆசானே. இப்போது நாங்கள் பிரிந்து செல்கிறோம்”

ஆசான் கூறியது போலவே

மந்திராசுரனும் நவியாகம்ஷியும் அவந்தியை நோக்கிச் சென்றனர்.

மந்தாகிஷியும் கோபரக்கனும் மாயாபுரியை நோக்கிச் சென்றனர்.

யாகம்யாழியும் சிகராசுரனும் த்ரிகான்தக் சென்றனர்.

மந்தாகிஷியும் கோபரக்கனும் தங்கள் இருவரின் சாம்பீனிகளோடு சிம்பாசுரனின் சாம்பீனிகளையும் சேர்த்துக் கொண்டு மாயாபுரியை சென்றடைந்ததும் தான் அவர்களுக்கு புரிந்தது அங்குள்ள நரன்கள் பிரயாகாவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம். உடனே வேகத்தைக் கூட்டி பிரயாகா நோக்கி தங்கள் சாம்பீனி படைகளுடன் சென்றனர். அவர்கள் சென்ற வேகம் பூமியை அதிரச்செய்தது. அந்த அதிர்வு நடந்துச் சென்றுக்கொண்டிருந்த மாயாபுரி மக்களையும் அதிர வைத்தது. அத்துடன் பிரயாகாவுக்கு மிக அருகிலிருந்த வஜ்ரகேசவனுக்கும் லேசான அதிர்விருந்தது. அவனை பின்னால் தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்த கோதகன் பாதி வழியிலேயே ஓட முடியாமல் நின்றதனால் அவனுக்கு அந்த அதிர்வு பலமாக இருந்தது. அது என்னவாக இருக்கும் என்று தெரிந்துக் கொள்ள மாயாபுரியை நோக்கி நடக்கலானான்.

சிம்பாசுரனின் மனைவி மந்தாகிஷியும், அவனது உயிர் நண்பன் கோபரக்கனும் கொலைவெறியுடன் சென்று கண்ணில் பட்ட மாயாபுரி நரன்களை கொன்று வீழ்த்தினர். மாண்டு விழுந்த நரன்கள் அனைவரும் அவர்களின் அடிமைகளான சாம்பீனிகளாகின. மாயாபுரி மக்கள் அந்த திடீர் தாக்குதலில் சிக்காமலிருக்க அங்குமிங்மாக அலறிக்கொண்டே சிதரிச் சென்றனர். சற்று தொலைவிலிருந்து இதைப் பார்த்த கோதகன் அதிர்ந்துப் போனான். வேகமாக ஒரு பெரிய பாறையின் பின்னால் ஒளிந்துக் கொண்டு மக்கள் மாண்டு வீழ்ந்ததையும், சாம்பீனிகளாக மீண்டு எழுந்ததையும், அவைகளே தங்கள் மக்களை மீண்டும் தாக்கியதையும் பார்த்தான். என்ன நடக்கிறது என்பது புரியாமல் குழம்பி உறைந்து நின்றான். அனைத்து நரன்களையும் குழந்தைகள் பெரியவர்கள் என்ற எந்தவித பேதமுமின்றி அழித்து சாம்பீனிகளாகினர் மந்தாகிஷியும் கோபரக்கனும். அவர்கள் குதிரையும் அவர்களும் மாயாபுரி ரத்தத்தில் குளித்தவர்கள் போல கோதகன் மறைந்திருந்த பாறையின் அருகில் இருந்த சிறு சிறு பாறைகள் மீது தங்கள் குதிரையிலிருந்து இறங்கி அமர்ந்தனர். கோதகன் தன் மூச்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது மந்தாகிஷி

“எனக்கு இன்னமும் வெறி அடங்கவில்லை கோபரக்கா.”

“ஏன் மந்தா? அது தான் அந்த மாயாபுரி தலைமைக் காவலனை அழித்து நமது அடிமை சாம்பீனியாக்கி விட்டோமே!!”

பாறையின் பின்னாலிருந்த கோதகன் தன் மனதிற்குள்

“என்ன மாயாபுரி தலைமைக் காவலரை அழித்துவிட்டனரா? அப்போ நம்ம அக்கா லட்சுமி என்ன ஆனாளோ? ச்சே நான் அவளை விட்டுவிட்டு வந்திருக்கவே கூடாது. மடத்தனம் செய்து விட்டேன்‌. சரி இவர்கள் பேசுவதை வைத்து ஏதாவது புரிகிறதான்னு பார்ப்போம்”

என்று எண்ணிக்கொண்டு பதற்றம் கலந்த பயத்துடன் நடுங்கிக் கொண்டே அங்கிருந்து தப்பிக்காது தன் அக்கா நிலைமையையும் அவள் ஊர் மக்களின் நிலைமையையும் தெரிந்துக் கொள்ள முடிவு செய்து மறைந்திருந்து அவர்களின் பேச்சைத் தொடர்ந்துக் கேட்கலானான்.

“இல்லை கோபரக்கா எனக்கென்னவோ இந்த மாயாபுரி மக்களனைவரையும் அழித்து நமது அடிமை சாம்பீனிகளாக்கிய பின்பும் மனதில் ஏதோ ஒரு நெருடல் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. ஏதோ எங்கோ தவறிழைக்கிறோமோ என்று தோன்றுகின்றது”

“தவறா !!! எதைச் சொல்கிறாய்?”

“எனக்கென்னவோ மாயாபுரி மக்கள் அனைவரையும் நாம் கொன்றுவிட்டோமா என்ற சந்தேகம் இருக்கிறது.”

“அது தான் அனைவரும் நம்மிடம் உள்ளனரே …அடிமைகளாக….பின் ஏன் உனக்கு இந்த சந்தேகம்?”

“அந்த வஜ்ரகேசவன் என்ற நரன் நீர்த்துளிப் பதக்கத்துடன் தப்பித்து விட்டானே!!”

என்று மந்தாகிஷி சொன்னதும் கோதகன் தனக்குள்

“அப்போ நம்ம மாமா எடுத்துட்டு போனது நான் சந்தேகப்பட்டது போலவே அந்த பதக்கம் தான். ஆனால் அவர் ஏன் அதை பிரயாகா எடுத்து செல்ல வேண்டும்”

என்று யோசித்துக் கொண்டே அசுரர்களின் உரையாடலைக் கேட்கத் துவங்கினான்.

“அது மட்டுமல்ல கோபா அந்த ஊர்த்தலைவரையும் தப்பிக்க விட்டுவிட்டோமே என்றெண்ணும் போது தான் எனக்கு கோபம் அதிகரிக்கிறது.”

“அவசரம் வேண்டாம் மந்தா. எப்படியும் அவனும் பிரயாகா தான் சென்றிருப்பான். நமது மற்ற படைகள் அவந்தியையும், த்ரிகான்தக்கையும் அழித்து நமது படைகளாக்கி வந்திடுவார்கள். அதன் பின்னர் நாம் அனைவருமாக பிரயாகாவை நோக்கி படையெடுப்போம். அனைத்தையும் நம் வசமாக்குவோம்”

“சரி சரி வா வா கோபா. ஆசான் நம்மைத் தேடுவார். நமது இந்த வெற்றியை சென்று அவரிடம் தெரிவிப்போம். அவரும் நம் தலைவனான மதிநாகசுரனும் மகிழ்ச்சியடைவார்கள். நானும் என் சிம்பாவுக்கு செய்ய வேண்டியதை செய்து முடிக்க வேண்டும். ம்… புறப்படுவோம். அடிமை சாம்பீனிகளே எங்களை தொடர்ந்திடுங்கள்”

என்று கூறி குதிரையில் ஏறிச் சென்றனர் மந்தாகிஷியும், கோபரக்கனும். அவர்கள் பின்னாலேயே அனைத்து சாம்பீனிகளும் சென்றன. அவர்கள் அங்கிருந்து சென்றதும் “ஓ” என்று கதறி அழுதான் கோதகன்.

“அய்யோ மாமா நீங்க சொன்னதைக் கேட்காமல் என் அக்காளை பறிக்கொடுத்துவிட்டேனே….அங்கே சென்றுக் கொண்டிருக்கும் அந்த அகோரமான ஜந்துக்களில் என் அக்காவும் ஒருத்தி ஆகிவிட்டாளே…நான் என்ன செய்வேன் ஆண்டவா,…எங்கள் குடும்பத்தை அழித்து விட்டனரே!”

என்று சொல்லி கத்தினான் கதறினான்‌. நடந்தவைகளைப் பார்த்ததில் பித்துப் பிடித்தவன் போல புலம்பிக் கொண்டே சற்று நேரமிருந்தான். பின் அன்று கஷியில் அந்த சுக்கிரகுரு சொன்னதையும், தன் மாமா கேசவன் சொன்னதையும் அசைப்போட்டுப் பார்த்தான். தன் மாமா சொன்னதுதான் சரி என்று அவன் மனம் அவனிடம் சொன்னதைக் கேட்டு பிரயாகா நோக்கி நடக்கலானான். தன் மாமாவிடம் நடந்த விவரங்களை தெரிவிப்பதற்காக வேக வேகமாக ஓடினான்.

கோதகன் சற்று நின்றுவிட்டதால் கேசவன் பிரயாகா சென்றடைந்து விட்டான். ஆனாலும் கோதகன் தன் மாமாவைத் தேடிச் சென்றான். கேசவன் பிரயாகா உள்ளே சென்றதும் அவனை அழைத்துச் செல்ல இரு காவலர்கள் காத்திருந்தனர். அவர்கள் கேசவனின் அடையாளத்தை பரிசோதிக்க மரப்பேழையைக் காட்டச் சொன்னார்கள். கேசவனும் காட்டினான். அதன் பின் அவனை மரியாதையுடன் அவர்கள் ஊர்த் தலைவரிடம் அழைத்துச் சென்றனர்.

அங்கே வஜ்ரகேசவனுக்கு வரவேற்பு நடந்தது. அவன் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குளித்ததும் உணவருந்த அழைத்துச் சென்றனர். அவனுக்கு பெரிய விருந்தே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்தும் முடிந்தபின் அவனுக்கென்று ஓர் அறை குடுக்கப்பட்டது. அதனுள் சென்று ஓய்வெடுக்கும்படி கூறினர். கேசவனும் சரி என்று கூறிக் கொண்டே உண்ட மயக்கத்தில் அறையைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றான்.

அலங்காரமான பிரம்மாண்ட அறை. அதிலிருந்த வேலைப்பாடுகளைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தான் கேசவன். அங்கு அவனுக்கு என்று போடப்பட்டிருந்த மெத்தையைத் தடவிப் பார்த்தான். வழுவழுப்பாக இருந்தது. அதுவரை மெத்தையை கண்டிடாத கேசவன் அதை சுற்றி சுற்றி வந்து அதன் வழுவழுப்புத் தன்மையை கையால் தடவி தடவிப் பார்த்தான். மெல்ல தன் கைகளால் அமுக்கிப் பார்த்தான். மெத்தை மெத்மெத்தன இருந்தது. அதில் படுத்துருள வேண்டுமென தோன்றினாலும் அதில் படுத்தால் உறக்கம் வராதே என்ற எண்ணத்தில் தரையில் அங்கிருந்த பாயை விரித்தான். அந்த பாயோ பட்டுப்பாய். அதைப் பார்த்ததும் அவன் கண்கள் விரிந்தன. அந்த பாயையும் தடவிப்பார்த்துவிட்டு அதனருகே தரையில் அமர்ந்தான். தனக்குள்ளே

“ஒரு சிறிய மரப் பேழையை கொண்டு வந்து குடுத்ததற்கு எனக்கு இத்தனை மரியாதையா? பட்டுப் பாயென்ன!! பட்டு மெத்தை என்ன!! விருந்து உபசாரமென்ன!!! அட அட அட….இப்படின்னு தெரிஞ்சிருந்தா நம்ம தலைவர்ட்ட சொல்லி லட்சுமியையும் கூட்டிகிட்டு வந்திருக்கலாமே!!! ம்….நமக்கென்ன இதெல்லாம் கிடைக்கும்ன்னு ஜோசியமா தெரியும்….ம்….சரி நாம கட்டைய கொஞ்ச நேரம் சாய்ப்போம்”

என்று தரையில் தனது மேல் துண்டை உதறி விரித்துப் படுத்தான் கேசவன். படுத்ததும் பயணக்களைப்பில் உறங்கிப் போனான். சற்று நேரமானதும் கேசவன் விருட்டென்று எழுந்துப் பார்த்தான். அவனருகில் இன்னொருவர் படுத்திருந்தார். அது யாரென்று தெரிந்துக் கொள்ள தன் கண்களைக் கசக்கி தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு அவரை முன்னால் சென்று பார்க்க மெல்ல நகர்ந்து சென்றான்.

அங்கு கேசவனருகில் படுத்திருந்தவர் முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துப் போனான் வஜ்ரகேசவன். அதிர்ச்சியில் வலது கையால் இடது கையை தன்னைத்தானே கிளிக் கொண்டு

“நான் காண்பது கனவல்ல நிஜமே”

என்று கூறிக்கொண்டே மெல்ல சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான்‌.

தொடரும்…..
Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s