அத்தியாயம் 32: போர்! பதற்றம்! போராட்டம்!

சிம்பாசுரனும், மதிநாகசுரனும் காற்கோடையன் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். மந்திராசுரன் ஆசானுடன் அங்கேயே இருந்துக் கொண்டான். மதிநாகசுரன் தன் இனத்தவர்களை அழைத்து ஆசான் சொன்னவற்றை கூறி அனைத்து ஏற்பாடுகளும் உடனே தொடங்கவேண்டுமென கட்டளையிட்டான். அவனின் கட்டளைப்படி அனைவரும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் துவங்கினர்‌. அப்போது நவியாகம்ஷி மதிநாகசுரனிடம்

“என்ன இது மதி? நம்மால் அந்த நான்கு ஊர் எல்லையைக் கூட நெருங்க முடியவில்லை இதில் போருக்கு தயாராகச் சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை”

“நவியா ஆசான் எங்களிடம் சொன்னதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துக் கொண்டாகிவிட்டது. அவர் சொன்னால் அதில் ஏதாவது காரணமிருக்கும். ஆகையால் நாம் செய்யவோம்”

“அது உண்மை தான். ஆசான் சொல்வதெல்லாம் சரியே ஆனால் நாம் மீண்டும் போய் ஏமாற்றத்துடன் வந்தோமே என்றால் இப்போது நமது அடுத்த தலைமுறையினரும் உள்ளனர். அதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் இல்லையா”

“அது சரி தான். ஆனால் எனக்கென்னவோ இம்முறை நாம் தான் வெற்றிப் பெறுவோம் என்று தோன்றுகிறது நவியா. நமக்கு இதை விட்டால் வேறு வழியுமில்லை. இந்த சிம்பாசுரனும் கவிழ்த்தி விட்டான். இப்படியே வழிகளை யூகித்தும், யோசித்தும் கொண்டிருப்பதில் எந்த பலனுமில்லை. நமது ஆசான் சொல்படி இதை முயற்சித்துப் பார்ப்போமே”

“ஆகட்டும் மதி. ம்… எனது நவியா சாம்பீனிகளே என் புன்னால் வாருங்கள். உங்களுக்கு தீனிப் போட நேரம் வந்தாகிவிட்டது….”

என்று நவியாகம்ஷி அவள் பயிற்று வித்த சாம்பீனிகளை அழைத்துச் சென்றாள். அதே போல அனைத்து சாம்பீனிகளையும் மீதமுள்ள ஆறு பேரும் சிம்பாசாம்பீனிகள், மந்தாசாம்பீனிகள், சிகராசாம்பீனிகள், யாழிசாம்பீனிகள், கோபசாம்பீனிகள், மதிநாகசுரன் மட்டும் மதிசாம்பீனிகள் மற்றும் மந்திரசாம்பீனிகள் என மந்திராசுரனின் சாம்பீனிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். அனைத்து சாம்பீனிகளிலும் மதிநாகசுரனின் சாம்பீனிகள் அனைத்தும் மற்ற சாம்பீனிகளோட ஒட்டாது எப்போதும் தனியாகவே இருந்தன. அதை நவியாகம்ஷி கவனித்து மதியிடம் பல முறைக் கேட்டும் அவன் அதற்கான சரியான பதிலை என்றுமே தந்ததில்லை. இதனால் எப்போதுமே மதிநாகசுரனின் சாம்பீனிகள் மீது நவியாகம்ஷியின் கவனம் இருந்துக் கொண்டேயிருந்தது.

ஆக கன்யார்த்தீர்த்தியில் மிக வேகமாக போருக்கான எல்லா ஏற்பாடுகளும் துவங்கி அவர்கள் அனைவரும் மாயாபுரி அருகே இருந்த கஷியை அவர்களின் சித்து வேலைகளால் வான்வழியாக சென்றடைந்தனர்.

அதே நேரம் மாயாபுரியிலிருந்து தனத்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த குதிரை மீதேறி தனது பிரயாணத்தை மேற்கொண்டான் வஜ்ரகேசவன். அவன் பின்னாலேயே வேகவேகமாக ஓடியும் நடந்தும் மறைந்து மறைந்துச் சென்றான் கோதகன். ஊர் தலைவர் வீட்டிலிருந்து கேசவன் புறப்பட்டுச் சென்றதும் தன் வீட்டுக்குச் சென்றாள் லட்சுமி. அங்கே கோதகனை காணாத லட்சுமி அவன் ஏதாவது வேலையாக வெளியே சென்றிருப்பான் என்று எண்ணிக் கொண்டு தன் வீட்டு வேலைகளில் ஈடுப் படத் துவங்கும் போது அவள் பக்கத்து வீட்டுப் பெண் லட்சுமியிடம்…

“என்ன லட்சுமி உங்களுக்கு இப்போ எல்லாம் ஊர் தலைவர் தலைமைக் காவலர் இவர்களோடு தான் பேச்சு வார்த்தை போக்கு வரத்து எல்லாம் இல்ல…கேசவன் அண்ணனை ஏதோ முக்கியமான வேலைக்காக பிரயாகா அனுப்பிருக்காங்களாமே!!! அது என்ன வேலை லட்சுமி?”

“அக்கா அதுக்குள்ள செய்தி இங்க வரைக்கும் வந்துடுச்சா?? அது வேர ஒண்ணுமில்ல அக்கா ஏதோ ஒரு சின்ன மரப்பெட்டியை பிரயாகவில் இருப்பவரிடம் கொண்டு குடுத்துட்டு வரணும்ன்னு தலைவர் சொன்னதால் அவர் போயிருக்கார் அவ்வளவு தான்”

“என் வீட்டுக்காரர் காவல் துறையில இருக்காரு மா….அதுதான் செய்தி வந்தது. சரி அந்த சின்னப் பெட்டிய குடுக்க எத்தனையோ காவலாலிகள் எல்லாம் இருக்காங்களே அவங்ககிட்ட குடுத்தனுப்பிருக்கலாமே!! ஏன் என் வீட்டுக் காரர்கிட்டயே குடுத்தனுப்பிருக்கலாமே!!! முன்பு ஒரு முறை இவர் தான் அவந்தி வரை போய் அந்த ஊர் தலைவரிடம் நம்ம ஊர் தலைவர் கொடுத்தனுப்பிய பெரிய பெட்டகத்தையே ஒப்படைச்சுட்டு வந்தார் தெரியுமா!!! பெரிய பெரிய ஆட்களுடன் எல்லாம் இப்போ நீங்க நெருக்கமாயிட்டீங்க ….எங்களை எல்லாம் மறந்துடாதீங்க மா!!”

“அய்யோ அக்கா!!! ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் கல்யாணமாகி இந்த ஊருக்கு வந்ததுலேந்து உங்ககிட்ட தான் ரொம்ப பழகியிருக்கேன். என் சொந்த அக்காவா தான் நினைக்கிறேன்‌. அப்படி இருக்கும் போது எப்படிக்கா மறப்பேன்!!!! நீங்க சொல்லறதும் வாஸ்த்தவம் தான் அக்கா உங்க வீட்டுக்காரர் மாதிரி நிறைய காவலர்கள் இருந்தும் ஏன் அவரை அனுப்பினாங்கன்னு எனக்கும் சந்தேகமிருக்கு க்கா”

“ஒரு வாரம் முன்னாடி நம்ம பொறந்த தேதி நட்சத்திரம் எல்லாம் கேட்டாங்கள்ல அது இதுக்குத் தானோ என்னவோ!!!”

“அப்படி பிறந்த தேதி, நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து அனுப்புறாங்கன்னா ஏதாவது மாந்த்ரீகமா இருக்குமோ அக்கா!!!” அவர் பாவம் க்கா….அவருக்கு அதெல்லாம் ஒண்ணுமே தெரியாது. அப்படி ஏதாவதுன்னா அவருக்கு சமாளிக்கக் கூடத் தெரியாது. எனக்கு இப்போ தான் கொஞ்சம் பயம் வருதுக்கா”

“அட அசடே!! நீ பயப்படறதுக்காகவா நான் சொன்னேன். எல்லாத்தையும் அலைசி ஆராய்ந்துப் பார்த்து பேசினா தானே உண்மை தெரிஞ்சுக்க முடியும்? அதுக்குத்தான் அப்படி சொன்னேன். நீ கவலைப் படாதே. எல்லாத்தையும் நம்ம தலைவர் பார்த்துப்பார். கேசவனும் பத்திரமா வந்திடுவார்.”

“அம்மா இங்க வாயேன்….இவனைப் பாரு மா என்னோட பொம்மையை தர மாட்டேங்கறான்…அம்மா ….அம்மா”

“கேட்டே இல்ல….இப்போ நான் போகலைன்னா என் பெயரை ஏலமிட்டு விடுவா என் பொண்ணு. சரி லட்சுமி நீ எதையும் போட்டுக் குழப்பிக்காதே. கேசவன் இரண்டு நாள்ல வந்திடுவார். நான் வரேன். அப்புறமா பேசுவோம் சரியா”

“சரி அக்கா……அக்கா என் தம்பி கோதகனைப் பார்த்தேங்களா?”

“அவன் நீங்க ரெண்டு பேரும் வெளியே கிளம்பிப் போனதுமே வீட்டைப் பூட்டிக்கிட்டு உங்க பின்னாடியே வந்தானே….சரி மா நான் வரேன்.”

“ம்….சரிக்கா….எங்க பின்னாடி வந்தவன் எங்கே போனான்? ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை? இவன் எங்கே போனான்? இப்போ இவனைத் தேடி நான் போக முடியுமோ!!! வரட்டும் அவனை”

என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே வீட்டினுள் சென்று கதவைத் தாழிட்டாள் லட்சுமி.

சிம்பாசுரன் தலைமையில் அசுரர் குலத்தவர்கள் காற்கோடையன், மந்திராசுரன், மதிநாகசுரன், அடுத்த தலைமுறையைச்சேர்ந்தவர்களைத் தவிற மற்ற ஆறு பேரும் அவரவர் பயிற்று வித்த சாம்பீனிகளுடன் மாயாபுரியை துவம்சம் செய்யத் தயார் நிலையில் அந்த ஊரின் எல்லையிலிருந்து சற்று தூரம் தள்ளி சூழ்ந்துக் கொண்டு காற்கோடையனின் சொல்லுக்காகக் காத்திருந்தனர்.

வஜ்ரகேசவன் குதிரையில் சென்றுக் கொண்டிருந்ததை அந்த சுக்கிரகுரு பதக்கம், கேசவனின் கைக் காப்பு காற்கோடையனுக்கு காட்டிக் கொண்டிருந்தது. வஜ்ரகேசவன் மாயாபுரி எல்லையைத் தாண்டி சற்று தூரம் பிரயாகாவை நோக்கி சென்றதும் காற்கோடையன் தங்கள் படையை மாயாபுரிக்கு செல்ல உத்தரவிட்டார். அதை மந்திராசுரன் பிராகாம்யம் சித்து உபயோகித்து கூடு விட்டு கூடு பாய்ந்து அவன் சாம்பீனி மூலம் சிம்பாசுரனுக்கு தெரிவித்தான். ஆசானின் சொல் வந்து சேர்ந்ததும் சாம்பீனி படைகளுடன் மாயாபுரியை நோக்கி முன்னேறியது அசுரர்களின் படை.

மாயாபுரி எல்லையில் காவலுக்கிருந்த காவலாளிகள் தூரத்தில் மண் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பெரும் படை அவர்களை நோக்கி வருவதை உணர்ந்தனர். அனைத்து காவலாளிகளையும் தயாராகச் சொன்னார்கள். தலைமைக் காவலருக்கு செய்தி சென்றது. உடனே அவர் அந்த இடத்துக்கு விரைந்து வந்தார். வந்தவர் காவலர்களை ஊக்குவித்துக் கொண்டே படைகலத்துடன் தயாரானார். கூர்மையான ஈட்டிகளும், வில்களிலிருந்து அம்புகளும், மழைப் போல் அசுரர்கள் படை மீது பொழிந்தன. ஆனால் அசுரர்களுக்கு ஒன்றுமே நேரவில்லை. ஈட்டி, அம்புப் பட்டு வீழ்ந்தவர்கள் மீண்டும் எழுந்து அந்த அம்பை எடுத்து எறிந்துவிட்டு முன்னேறி வந்தனர். ஆனால் அவர்கள் எந்தவித தாக்குதலும் செய்யவில்லை. இதைப் பார்த்ததும் தலைவர் தன் படையிடம் விளைவிற்பொறி கொண்டு தங்கள் ஊரின் இந்த எல்லையை சுற்றி வேலி போல அமைக்க ஆணையிட்டார். அதுபடியே நடந்தது. சற்று நேரத்தில் எல்லாம் அசுரர்கள் படை மாயாபுரியை நெருங்கியது.

அசுரர்கள் மாயாபுரியை நெருங்கியதும் சாம்பீனிகளைப் பார்த்த காவலர்கள் சற்று பின்னேச் சென்றனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு

“இதெல்லாம் என்ன? விலங்குகளா? இவ்வளவு அகோரமாக இருக்கின்றனவே”

என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதில் கூச்சல் அதிகமானது. சாம்பீனிகளைப் பார்த்ததில் தலைமைக் காவலரும் சற்று பதற்றமானார். இவைகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை என்ற கேள்வி அவருக்குள் உதித்தது. ஆனால் அதற்கான விடை தேடுவதற்கு துளியும் நேரமில்லாததால் தன் சந்தேகத்தை மனதில் பூட்டி வைத்து விட்டு அனைத்து காவலர்களும் அசுரர் படையோடு தொடர்ந்து போர் புரிந்தனர்.

அவர்கள் உருவாக்கிய விளைவிற்பொறியை பொருட்படுத்தாத சாம்பீனிகள் அதனை தாண்டிச் சென்றன. இரண்டாக கிழிந்தாலும் தாண்டிச் சென்றதும் ஒட்டிக் கொண்டன. இவற்றைப் பார்த்து பல காவலாளிகள் மயங்கி விழுந்தனர். அசுரர்களின் படை எல்லைக்குள் நுழைந்ததும் தாக்குதலை சாம்பீனிகள் மூலம் துங்கினர். சாம்பீனிகள் காவலர்களை தூக்கிப் பிடித்து, கடித்து துப்பி வீசி எறிந்தனர். அவ்வாறு சாம்பீனி தீண்டியவர்களும் சாம்பீனிகளாக மாறி போரிட்டனர். என்ன செய்தாலும் சாம்பீனிகளை அழிக்க முடியாத மாயாபுரி காவலர்கள் பயந்துப் போய் ஊருக்குள் ஓடிச் சென்றனர். தலைமைக் காவலர் சிம்பாசுரன் தான் அனைத்து கட்டளைகளையும் இந்த பிசாசுகளுக்கு வழங்குகிறான் என்பதை உணர்ந்து அவனை நோக்கிச் சென்றார். அவனுடன் போரிட்டு இறுதியில் அவனின் தலையை தனது கூர்மையான வாள் கொண்டு சர்ரென வெட்டினார். சிம்பாசுரனின் தலை தரையில் உருண்டோடியதைக் கண்ட நவியாகம்ஷி உடனே தங்கள் படையை திரும்பச் சொன்னாள். சிம்பாசாம்பீனிகள் தங்கள் தலைவனின் தலையையும் உடலையும் தூக்கிக் கொண்டு நவியாகம்ஷியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு முழுப் படையும் மீண்டும் கஷிக்கே சென்றனர்.

தலைமைக் காவலருக்கு சற்று நேரம் என்ன நடந்ததென்று புரிவதற்குள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு அங்கிருந்து மறைந்தனர் அசுரர் படை. நடந்தவைகளைப் பார்த்த தலைமைக் காவலர் ஊருக்குள் ஊர் தலைவரைக் காணச் சென்றார். அவர்கள் படையில் சிறு சிறு காயங்களுடன் இருந்த காவலாளிகளுக்கு மருத்துவர் சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார். மிகவும் பதற்றத்துடன் அங்குமிங்குமாக நடந்துக் கொண்டிருந்த ஊர்தலைவர் தலைமைக் காவலர் வந்ததும் என்ன ஏதென்று விவரங்களைக் கேட்டார் அப்போது தலைமைக் காவலர்

“தலைவரே நாம் மோத நினைப்பது மனிதர்களே அல்ல. அவைகள் என்ன இனமென்று கூட தெரியவில்லை!! ஆனால் ஏதோ தீய சக்திகளால் உருவாக்கப்பட்ட ஜடங்களைப் போலிருந்தன அவைகள். அவைகள் நம் காவலர்களை இரண்டாக பிளந்தும், கடித்துக் கிழித்தும் போட்டது. அப்படி அவைகளால் தாக்கப் பட்ட அத்துனை காவலர்களும் அந்த இனமாகவே மாறி நம்மைத் தாக்க வந்தனர். அவைகளுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தவனை கண்டறிந்தேன் அவனை நோக்கிச் சென்று அவனின் சிரத்தை உடலில் இருந்து பிரித்தெடுத்தேன். அவ்வளவு தான்…‌அனைத்து படையும் எங்களைத் தாக்குவதை நிறுத்தி விட்டனர். அவனின் சிரம், உடலை ஏந்திக் கொண்டு சென்று விட்டனர். அவைகளை எங்களால் அழிக்க முடியவில்லை இரண்டாக பிளந்தாலும் ஒன்றாகி மீண்டும் தாக்குகின்றன. நான் கொன்றவனும் மனிதனைப் போல் தெரியவில்லை. ஆனால் அவன் அந்த அகோரமான இனத்தைச் சேர்ந்தவனுமில்லை. அவர்கள் யாராக இருப்பார்கள் தலைவரே? எதற்காக நம்மீது போர்த் தொடுத்துள்ளனர்?”

“எனக்கு தோன்றுவதெல்லாம் ஒன்று தான் தலைமைக் காவலரே. அன்று நம் ஊரின் எல்லைகயைக் கூட நெருங்க முடியாது சென்றவர்கள் இவர்களாக தான் இருக்கக் வேண்டும். நம்மிடமிருந்த நீர்த்துளிப் பதக்கத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அந்த பதக்கம் நம்மூரிலிருந்து வெளியே சென்றதுமே நம்மைத் தாக்க வந்துள்ளனர். சரி காயமடைந்த காவலர்களுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டதா? அவைகள் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரக்கூடும் ஆகையால் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

“தலைவரே இனியும் இந்த உண்மையை நம் ஊர் மக்களிடம் மறைப்பது சரியா?”

“அவர்களுக்கு தெரியப்படுத்தி எதற்காக அவர்களின் நிம்மதியையும் நாம் தொலைக்க வேண்டும்?”

“தலைவரே எனக்கு ஒரு யோசனை!!”

“என்ன அது தயங்காமல் சொல்லுங்கள்”

“நமது காவலர்களில் பாதி பேரை அவைகள் அனைத்தும் அவைகளின் இனமாக மாற்றி அவைகளுடனே கூட்டிச் சென்றுவிட்டன. மீதமிருக்கும் காவலர்களையும் நாம் இழந்திடாதிருக்க…..நாம் அனைவரும் இந்த ஊர் மக்களுடன் ஏன் பிரயாகா சென்று விடக் கூடாது? அங்கு அந்த நீர்த்துளிப் பதக்கமிருக்கே!!! அதுவுமில்லாமல் நாம் அங்கு செல்லவதற்குள் அங்கு நான்கு பதக்கங்களும் வந்திடுமே. அப்போ இந்த அகோரமான படை நம்மை ஏதும் செய்ய முடியாதல்லவா? என்ன சொல்கிறீர்கள்?”

“நல்ல யோசனையாகத் தான் இருக்கிறது. நாம் ஏன் இன்னும் நம் மக்களை அவர்கள் படைகளாக மாற்ற இங்கிருக்க வேண்டும்? நீஙகள் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது…ஆனால் கோழைப் போல ஏன் ஓட வேண்டுமென்ற எண்ணமும் எழுகிறது”

“தலைவரே நாம் நம்மைப் போல மனிதர்களுடன் போரிடாமல் சென்றால்….அது கோழைத்தனம்.
..ஆனால் இவை எந்த இனத்தைச் சேர்ந்தவை என்பதே அறியாமலிருக்க அது எப்படி கோழைத்தனமாகும்? இப்போது அவைகளின் குணாதிசயங்களும் அவைகளால் நமக்கு என்ன பாதிப்பு வருமென்பதையும் அறிந்துக் கொண்டு விட்டோம். இனி அவைகளிடமிருந்து நம் மக்களைக் காப்பாற்ற வேண்டியதும் நம் கடமையாயிற்றே தலைவரே!!! இப்போதே அனைவருக்கும் செய்தி அனுப்பி இங்கிருந்து உடனே பறப்படுவோம். நான் நேராக அந்த கோரமான ஜந்துக்களையும் அவற்றின் வீர்யத்தையும் கண்டவன். நான் சொல்வதைக் கேளுங்கள் தலைவரே!”

“சரி ஆகட்டும் தலைமைக் காவலரே உடனே இங்கிருந்து புறப்படுவோம். மக்கள் அனைவருக்கும் சொல்லி அனுப்புகிறேன். இன்னும் அரைமணிக்கூறுக்குள் இடத்தைக் காலி செய்தாக வேண்டும். அனைவரையும் அவரவருக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு புறப்படச் சொல்லுங்கள்.”

ஊர்த்தலைவரின் கட்டளை மக்களைச் சென்றடைந்தது. உடனே அனைவரும் அவரவர்களுக்கு தேவையாதை மட்டும் எடுத்துக் கொண்டு ஊர் எல்லையை நோக்கிப் புறப்பட்டனர். அப்படிச் சென்றுக் கொண்டிருக்கும் போது லட்சுமியிடம் அவள் பக்கத்து வீட்டுப் பெண்

“என்ன லட்சுமி உன் வீட்டுக்காரர் பிரயாகா போனதும் நம்ம ஊரே கிளம்பிடுச்சே!!!”

“அட போங்கக்கா”

“உனக்கென்னமா உன் மனசுக்குள்ள சந்தோஷம் தாண்டவமாடிட்டிருக்கும். ஆனா எங்களை மாதிரி புள்ள குட்டி இருக்கறவங்களை நினைச்சுபா பார் இதுங்களை எல்லாம் எழுப்பி கிளப்பி இப்படி அறைகுறைத் தூக்கத்தில் இழுத்துக் கிட்டு வரதுங்கறது அப்பப்பா..‌‌…எதுக்கு நம்ம எல்லாரையும் பிரயாகா போக தயாராகச் சொன்னாங்க??? என்னவா இருக்கும்???”

“அக்கா அது அங்க போன தெரிஞ்சுடப் போவுது. தாங்க அக்கா உங்க குட்டிப் பொண்ணை நான் தூக்கிக் கிட்டு வரேன்”

“ஆமாம் உன் தம்பி வரவேயில்லை இல்ல!!! எங்க போனான் அவன்?”

“அது தாங்க்கா எனக்கும் வருத்தமா இருக்கு. நாளைக்கு காலையில தலைவரைப் பார்த்து சொல்லலாம்னு நினைச்சுக்கிட்டிருந்தப்ப தான் இந்த செய்தி வந்தது. சரி ஏதாவது அவசரமா இருக்குமேன்னு வந்துட்டேன். அவன் எங்க போனான் என்ன ஆனான்னே தெரியலையேக்கா!!”

தொடரும்…‌…..
Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s