அத்தியாயம் 31: பதற்றம் நிலவியது

நூற்றியெட்டாவது மலரை எடுத்த சாம்பீனி அதை தன் தலையில் சூடிக்கொண்டது. சற்று நேரத்தில் அந்த அகோரமான சாம்பீனி சிம்பாசுரன் உச்சாடனம் செய்த நரன்சாம் மந்திரத்தால் அழகிய பெண்ணுருவம் கொண்டது. அதைப் பார்த்த சிம்பாசுரன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அந்த பெண்ணை தன் அருகில் வரும்படி அழைத்தான். அவளும் மறுப்பேச்சின்றி அவனருகில் வந்து நின்றாள். தனது கட்டளையை ஏற்று அதன் படி செய்கிறாள் என்ற எண்ணம் சிம்பாசுரனுக்கு இரட்டை மகிழ்ச்சியைத் தந்தது. அவன் நேராக ஆசானிடம் சென்று

“ஆசானே எப்படி இது என்னால் சாத்தியமானது!!! நான் தான் ஒரு மண்டல விரதத்தை சரிவர முடிக்கவில்லையே!!! பின்பு எப்படி இது நிகழ்ந்தது? என்னை என்னாலேயே நம்ப முடியவில்லையே!!! ஏதாவது கூறுங்கள் ஆசானே”

என்று அவரிடம் கேட்டுக்கொண்டிருக்கையில் மந்திராசுரன் அந்த பெண்ணின் அருகில் சென்று பார்த்து

“உன் பெயர் என்ன பெண்ணே?”

“என் தலைவரிடம் கேட்டுச் சொல்கிறேன் சற்று பொறுங்கள்”

என்று கூறிவிட்டு நேராக சிம்பாசுரனிடம் தனது பெயர் என்ன என்று மந்திராசுரன் கேட்பதாக சொல்லி கேட்டாள். அதற்கு சிம்பாசுரன் அவளிடம்

“உன் பெயர் வள்ளி என்று சொல் ஆனால் அதை சொல்லி முடித்ததும் அவரின் கணையாழியை அவருக்கே தெரியாமல் கழற்றி வா ம்…செல்”

“கணையாழி என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?”

என்று வள்ளி கேட்டதும் தன் கையில் இருந்த கணையாழியைக் காண்பித்து அதேபோல் அவர் அணிந்திருப்பதை எடுத்து வரச் சொன்னான். அவளும் நேராக மந்திராசுரன் அருகே சென்று

“என் பெயர் வள்ளி. உங்கள் பெயர் என்ன?”

என்று கேட்டுக் கொண்டே மந்திராசுரனைப் பார்த்தாள் அவன் அவள் வசமானான். அவனின் கணையாழியைக் கழற்றித் தரச் சொன்னாள் அவனும் கழற்றிக் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு வந்து சிம்பாசுரனிடம் கொடுத்து

“தங்களின் ஆணைப் படி செய்தேனா தலைவரே”

“ம்….பலே. சரி இப்போது நீ அங்கே சென்று அமர்ந்திரு”

“ஆகட்டும் தலைவரே”

என்று கூறிவிட்டு சென்று சிம்பாசுரன் காண்பித்த இடத்தில் அமர்ந்துக் கொண்டாள். சிம்பாசுரன் மீண்டும் தன் ஆசானைப் பார்த்து

“பார்த்தீர்களா ஆசானே!!! ஏன் நீங்கள் ஒன்றுமே பேசாமல் இருக்கிறீர்கள்.”

அப்போது அங்கு நடந்தவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மதிநாகசுரன் சிம்பாசுரனைப் பார்த்து

“சிம்பா அந்த பெண் செய்தது வசியம்…அதை நாம்மில் மூவருக்கு தெரியுமே இதில் என்ன ஆச்சர்யம்?”

“மதிநாகசுரா நாம் அசுரர்குலத்தவர்கள் நமக்கு அனைத்து சித்துக்களும் அத்துப்படி …அதிலும் சிலருக்கு சிலது வராது அப்படி இருக்கும் போது… ஆனால் அவளோ நரனிலிருந்து சாம்பீனியாகி இப்போது மீண்டும் நரனாகியிருக்கிறாள் ….அவள் செய்வதில் ஆச்சர்யம் இல்லையா சொல்லு”

“ம்…நீ சொல்வதிலும் ஏதோ இருக்கத்தான் செய்கிறது. சரி நம்ம மந்திரா எப்போது வசியத்திலிருந்து வெளிவருவான்?”

“இதோ இந்த நீரை மந்திராசுரன் மீது தெளித்து விடு. சுயநினைவு வந்துவிடும்”

சிம்பாசுரன் சொன்னது போலவே செய்தான் மதிநாகசுரன். அந்த நீர் மந்திராசுரன் மீது பட்டதும் சிலிர்த்துக் கொண்டு

“என்னவாயிற்று? நான் எங்கிருக்கிறேன்?”

என்று கேட்க அதற்கு மதிநாகசுரன்

“மந்திரா நீ இங்கேயே தான் இருக்கிறாய். சற்று நேரம் அந்த நரன் குலத்தைச் சார்ந்த பெண்ணின் வசியத்தில் சிக்கி உன் கணையாழியை தொலைத்தாய் அவ்வளவு தான்”

“என்னது? என்னால் நம்ப முடியவில்லையே மதி”

அங்கு நடந்த அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஆசானிடம் சென்று சிம்பாசுரன் மந்திராசுரனின் கணையாழியை காட்டி

“ஆசானே இவள் ஒருத்தியை வைத்து நாம் அந்த நீர்த்துளி பதக்கத்தை மாயாபுரியிலிருந்து எடுத்திடலாம் என்ன சொல்கிறீர்கள்?”

என்று சொல்லி முடிப்பதற்குள் பயங்கரமான ஒரு சப்தம் கேட்டு சிம்பாசுரன், மதிநாகசுரன், மந்திராசுரன் மூவரும் திரும்பிப் பார்த்தனர்.

அந்த நரன் குலப் பெண் மீண்டும் அகோரமான சாம்பீனியாகி முன்பை விட வீர்யமாக அங்குமினங்குமாக அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. அதை கட்டுக்குள் கொண்டு வர சிம்பாசுரன் பல கட்டளைகள் இட்டும் ஏதும் பலிக்கவில்லை இருதியில் ஆசான் ஏதோ ஒரு மந்திரத்தை உச்சாடனம் செய்ய அது சிம்பாசுரன் கட்டளைகளை ஏற்கும் சாம்பீனியாக மாறியது. அங்கு நடந்த அந்த சம்பவம் மூவரையும் திகைப்பில் ஆற்றியது. மூவரும் ஆசானை நோக்கினார்கள்

“சிம்பா இது தான் நடக்கும் என்பது எனக்குத் தெரிந்ததே.”

“அதை தாங்கள் ஏன் முன்னதாகவே சொல்லவில்லை ஆசானே”

“சொல்லியிருந்தாலும் நீ முயற்சித்துப் பார்ப்பாய் அதனால் நீங்களே முயற்சித்து தெரிந்துக் கொள்வதற்காக தான் நான் அமைதியாக காத்திருந்தேன். ஒரு மண்டலம் சிவனை எண்ணி தியானம் செய்ததில் கிடைத்த வரம் தான் அந்த சாம்பீனியை நரன் குலத்தவளாக மாற்றியது. அதன் பின் நடந்தவை எல்லாம் இரண்டாவது மண்டலத்தில் நீ இழைத்த தவறால் நேர்ந்தது. இப்போது புரிந்ததா? அறைகுறையாக எதையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதை நம்பி செயலில் இறங்குவது என்பது எப்போதும் ஆபத்தையே பரிசாக தரும் என்று!!”

“நன்றாக புரிந்தது ஆசானே. என்னை மன்னியுங்கள்”

“இருக்கட்டும் சிம்பாசுரா. தவறை உணர்ந்தாயே என்றால் மீண்டும் அதை ஒருபோதும் செய்ய மாட்டாய் என்பது எனது நம்பிக்கை”

“நிச்சயம் ஆசானே உங்கள் நம்பிக்கைக்கு என்றுமே தீங்கிழைக்க மாட்டேன்”

“சரி ஆசானே இப்போது நாம் என்ன செய்வது? இந்த வழி அடைந்துவிட்டது அப்போ வேறு என்ன மார்கம் உள்ளது? அந்த நீர்த்துளி பதக்கத்தை நாம் கைப்பற்ற!!!”

“ம்….சிந்தியுங்கள்.”

“ஆசானே தாங்கள் இந்த சுக்கிரகுரு பதக்கத்தை வைத்து ஏதாவது வழியோ அல்லது அந்த நீர்த்துளி பதக்கம் இருக்கும் இடத்தையோ கண்டறிய முடியாதா?”

“முயற்சிக்கலாம் மதிநாகசுரா. நிச்சயம் முயற்சிக்கலாம். இப்போது சென்று வாருங்கள். இன்று மாலை சூரிய அஸ்த்தமனத்துக்கு பின் சுக்கிரகுரு பதக்கத்தையும் அந்த நரன் கேசவனின் காப்பையும் எடுத்துக் கொண்டு மூவரும் இங்கே வாருங்கள். முயற்சித்துப் பார்ப்போம்”

“ஆகட்டும் ஆசானே நாங்கள் இப்போது சென்று மாலை வருகிறோம்”

“ம்…சென்று வாருங்கள்”

என்று ஆசான் சொன்னதும் மூவரும் அங்கிருந்து அவரவர் இருப்பிடத்திற்கு சென்றனர்.

மாயாபுரியில் வஜ்ரகேசவனை ஊர்காவலர் கண்டறிந்ததையும் அவர் கண்டறிந்த வழியையும் மற்ற ஊர்தலைவர்களிடம் பகிர்நதுக் கொண்டதால் அவர் ஊரில் கண்டறிந்தது போலவே

பரணி நட்சத்திரத்தில் பிறந்து மேஷ ராசிக்கு சொந்தக்காரனான “ஞா” என்ற எழுத்தில் துவங்கும் அவந்தியின் நாயகனான ஞானானந்தம்

பூரம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியில் பிறந்து “வே” என்ற எழுத்தில் பெயர் துவங்கும் த்ரிகான்தக் நாயகனான வேதாந்தகன்

திருவாதிரை நட்சத்திரத்தில் மிதுன ராசியில் பிறந்து “மு” என்ற எழுத்தில் பெயர் துவங்கும் பிரயாக நாயகியாக
முழுமதியாள்

ஆகியோரும் கண்டறியப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் பிரயாகாவில் சந்திக்க வேண்டிய நாள்(பௌர்ணமி) நட்சத்திரம் (மகம்) எல்லாவற்றையும் அந்தந்த ஊர்தலைவர்கள் முடிவு செய்து புறா தூதனுப்பி விவரங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

மாயாபுரி ஊர் தலைவர் தங்கள் ஊரின் பாதுக்காப்பை பலப்படுத்தினார். ஊரின் மூன்று புறமும் காவலை அதிகரிக்கச் சொன்னார். தங்கள் ஊரிலுள்ள அனைத்து போர் கருவிகளையும் தயார் நிலையில் வைக்கச் சொல்லி தலைமை காவலருக்கு உத்திரவிட்டார். தலைமை காவலரும் ஊர் தலைவரின் கட்டளைகள் அனைத்தையும் செவ்வெனே செய்து முடித்தார். அனைத்து தரப்பும் தயார் நிலையில் இருப்பதை அறிந்துக் கொண்ட பின் வஜ்ரகேசவனுக்கு செய்தி அனுப்பி உடனே அவர் இல்லத்துக்கு வரச்சொன்னார் ஊர் தலைவர். வஜ்ரகேசவனும் அவன் மனைவி லட்சுமியும் உடனடியாக ஊர் தலைவர் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் பின்னாலேயே கோதகனும் மறைந்து மறைந்துச் சென்றான்.

வஜ்ரகேசனும் அவன் மனைவியும் ஊர் தலைவர் வீட்டின் வாசலில் சென்றதும் அவர்களை வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றார் தலைவர். வீட்டினுள் என்ன நடக்கிறது என்பதறியாத கோதகன் தான் மறைந்திருந்த இடத்தில் தவித்துக் கொண்டிருந்தான்.

ஊர் தலைவர் அந்த நீர்த்துளி பதக்கத்தை அலங்காரமான சிறிய மரப்பேழைக்குள் பூஜை அறையில் வைத்திருந்தார்.

அங்கே வஜ்ரகேசவனையும் அவன் மனைவியையும் அழைத்துச் சென்று கேசவனிடம் அந்த அலங்கரிக்கப் பட்ட சிறிய மரப் பேழையைக் கொடுத்து

“வஜ்ரகேசவா இதை பத்திரமாக எடுத்துச் பிரயாகா செல். அங்கு உன்னை சிலர் சந்திப்பார்கள் அவர்கள் அதற்கு மேல் என்ன செய்யவேண்டுமென்பதை உனக்கு சொல்வார்கள் சரியா. அதுவரை இதை திறந்துப் பார்க்கக் கூடாது புரிந்ததா?”

“ஆகட்டும் தலைவரே. தங்கள் கட்டளை என் பாக்கியம். எப்போது பிரயாணத்தைத் துவங்க வேண்டும்?”

“இப்போதே!! இக்கனமே!! உன் மனைவிடம் பேசவேண்டியதை பேசிவிட்டு உடனே புறப்படு. உன் பிரயாணத்துக்கு வேண்டிய அனைத்தும் ஒரு குதிரை மீது கட்டி அந்த குதிரையும் உன்னுடன் வருவதற்கு தயாராக இருக்கிறது. சரி நான் வெளியே காத்திருக்கிறேன். நேரம் கடத்தாமல் லட்சுமியிடம் சொல்லிக்கொண்டு அங்கே வா”

என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் ஊர் தலைவர். வஜ்ரகேசவன் லட்சுமியைப் பார்த்தான்…அவள் விழியோரம் கண்ணீர் துளிகள் உருண்டோடக் காத்திருந்தன. அவளை தட்டிக் கொடுத்து

“இங்கே பாரு லட்சுமி இந்த ஊர்ல எவ்வளவு பேர் இருக்காங்க அவங்களை எல்லாம் விடுத்து என்னை நம்ம தலைவர் இந்த செயலைச் செய்யத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால் அது கவலைப் படவேண்டிய விஷயமல்ல!!! நீ உன் கணவனை நினைத்து மகிழ்ச்சிக் கொள்ள வேண்டிய தருணமிது. நான் அவர் சொன்னது போல பிரயாகா சென்று வருகிறேன். நீயும் கோதகனும் பத்திரமாக இருகங்கள். உங்களுக்கு ஏதாவது வேண்டுமெனில் தலைவருக்கு தெரியப்படுத்துங்கள். உங்களின் நலனில் அவர் பொறுப்பேற்றிருக்கிறார் என்ற மனத் திருப்தியுடன் நான் சென்று வருகிறேன். மலர்ந்த முகத்துடன் என்னை வழியனுப்பி வை லட்சுமி.”

“ஆகட்டும். நீங்களும் பத்திரமா போயிட்டு வாங்க. நான் உங்களுக்காக தினம் தினம் வேண்டிக்கொண்டே இருப்பேன். அந்த அம்பாள் உங்க கூடவே இருப்பா. தைரியமா போயிட்டு வாங்கோ”

“அட அசடே!!! நான் என்ன போருக்கா போரேன். இந்த சின்ன பெட்டியை கொண்டு போய் கொடுத்து வந்திடப் போறேன்….இதுக்கு போய் என்னமோ நான் போர் வீரன் மாதிரியும் …நீ வெற்றி திலகம் போட்டு வழியனுப்பறா மாதிரியும் இருக்கு நீ பேசறது….சரி சரி தலைவர் நமக்காக காத்திருப்பார் வா வா அங்கே போவோம்”

என்று ஏதோ ஒரு பொருளை ஒப்படைக்கப் போகும் தூதனாக தன்னை எண்ணிக் கொண்டு பூஜையறையிலிருந்து தலைவரை நோக்கிச் சென்றான் வஜ்ரகேசவன்‌. உண்மையிலேயே அவன் எதற்கு செல்கிறான்? அவனின் இந்த பயணத்தின் நோக்கம் என்ன? கேசவனால் என்ன நிகழப்போகிறது? என்பதேதும் அறியாது தலைவரின் கட்டளையை தன் பாக்கியமாக கருதிக் கொண்டு சென்றான்.

மாலை சூர்ய அஸ்த்தமனமானது. சிம்பாசுரன், மதிநாகசுரன், மந்திராசுரன் மூவரும் சுக்கிரகுரு பதக்கத்தையும், கேசவனின் கைக் காப்பையும் எடுத்துக் கொண்டு ஆசானின் இருப்பிடத்திற்குச் சென்றனர். அங்கே அவர்களின் ஆசான் காற்கோடையன் காற்றில் மிதந்தவாறு தவத்திலிருந்தார். அதைப் பார்த்ததும் மௌனமாக ஓரிடத்தில் காத்திருந்தனர். சற்று நேரத்தில் எல்லாம் காற்கோடையன் தியானத்திலிருந்து வெளி வந்தார். வந்தவர் மூவரையும் பார்த்து

“நான் கேட்டதிரண்டையும் எடுத்து வந்துள்ளீர்களா?”

“இதோ தங்கள் முன் வைத்துள்ளோம் ஆசானே”

தியானம் செய்யும் போது அவர் கையில் வைத்திருந்த கோல் கொண்டு சுக்கிரகுரு பதக்கத்தை எடுத்து அதை அந்த காப்பின் நடுவே போட்டார் ஆசான். பின் மீண்டும் ஏதோ மந்திரங்களை உச்சாடனம் செய்தார். சற்று நேரத்தில் அந்த கேசவனின் கைக்காப்பு தானாக சுக்கிரகுரு பதக்கத்துடன் மேலே எழும்பியது. ஆசான் மந்திரத்தை உச்சாடனம் செய்ய செய்ய அது மேலே மேலே சென்றது. ஒரு குறிப்பிட்ட அளவு மேலே சென்றதும் மந்திர உச்சாடனத்தை நிறுத்தினார் காற்கோடையன். அவர் நிறுத்தியதும் தரையிலிருந்து ஒரு ஒளி வட்டம் அந்த காப்பு தொங்கும் உயரம்வரை பிரகாசித்தது. அதில் மாயாபுரி ஊர் தலைவர் வீடு தெரிந்தது. அதைப் பார்த்ததும் ஆச்சர்யத்துடன் மூவரும் ஆசானின் அருகே சென்று நின்றனர். அப்போது மதிநாகசுரன்

“ஆசானே இவன் யார்? இது எந்த இடம்?”

“மதிநாகசுரா இது தான் மாயாபுரி ஊர் தலைவர் இருப்பிடம்.”

“அவன் ஏன் மிகவும் பரபரப்பாக இருக்கிறான்?”

“சற்றே பொறுமையாக இரு மதிநாகசுரா.”

இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஊர் தலைவர் நின்றிருந்த இடத்திற்கு வந்தார்கள் கேசவனும் லசனட்சுமியும். அவர்களைப் பார்த்ததும் காற்கோடையன்

“ம்….ஏதோ நடக்கவிருக்கிறது. மதிநாகசுரா இவன் தான் இந்த காப்பின் சொந்தக்காரன். அவன் கையில் இருப்பது என்ன? இவன் எங்கோ செல்லவிருக்கிறான். மாயாபுரியைச் சுற்றி காவல் பலப்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. ஆனால் ஏன்? அவர்கள் ஊருக்கு பாதுகாப்பாக தான் அந்த நீர்த்துளி பதக்கமிருக்கே!!! பின்பு ஏன் ஆயுதங்களுடன் இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்துள்ளான் அந்த தலைவன்!!! அப்படி என்றால் அவர்கள் ஊரை ஏதோ தாக்கக் கூடும் என்ற எண்ணத்தில் தானே இதை செய்திருக்க வேண்டும்!!! இவ்வளவு நாட்கள் இல்லாமல் திடீரென எதற்கு இந்த ஏற்பாடு? சற்று குழப்பமாக இருந்தாலும் ….எனக்கென்னவோ அந்த கேசவன் கையிலிருப்பது நீர்த்துளி பதக்கமாக இருக்குமோ என்ற ஒரு சந்தேகம் என் மனதில் எழுகிறது. அப்படி என்றால் அதை அவனிடம் எங்கோ கொடுத்தனுப்புகிறார்கள்!!! எங்கு இருக்கும்? சரி நாம் ஒன்று முயற்சித்துப் பார்க்கலாம்.”

“ஆசானே அங்கே பாருங்கள் அந்த வீட்டின் வெளியே இருக்கும் புதருக்குள் இருந்து ஒரு நரன் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்”

என்றான் மந்திராசுரன்.

“அப்படியென்றால் அவன் தான் நமக்கான நரனா?”

என்ற கேள்வி எழுப்பினான் சிம்பாசுரன்.

“ஆசானே என்ன செய்துப் பார்க்கலாம் என்பதை சொல்லுங்கள். உடனே அதற்கான வேலைகளில் இறங்குகிறோம்”

“மந்திராசுரா நீ பார்த்தை நானும் பார்த்தேன். அந்த நரன் நல்ல எண்ணத்தில் அங்கு இல்லை. சிம்பா நீ சொல்வது போலவும் அவன் தான் நமக்கானவனாகவும் இருக்கலாம். அதற்கு காலமும் நேரமும் கூடி வந்தால் தெரிந்துவிடும். மதிநாகசுரா நமது சாம்பீனி படைகளையும் நமது ஆட்களையும் ஒரு போருக்குத் தயார் செய்யவும். நான் சொல்லும் போது மாயாபுரியை தாக்க வேண்டும் புரிகிறதா?”

“ஆகட்டும் ஆசானே. தாங்கள் கூறியபடி அனைத்தையும் உடனே ஏற்பாடு செய்கிறேன். ஆனால் ஆசானே அந்த ஊருக்குள் தான் நம்மால் அடியெடுத்து வைக்கக்கூட முடியவில்லையே இதில் எப்படி இது சாத்தியமாகும்? அங்கே நீர்த்துளி பதக்கமிருக்கிறதே!!! அதை கைப்பற்றாமல் எப்படி?”

“என் கணக்கு படி நான் நினைப்பது சரியென்றால் நம்மால் மாயாபுரியை நிச்சயம் அழிக்க முடியும். மற்ற மூன்று ஊர்களையும் என்ன செய்யலாம் என்பதை அதன் பின் பார்த்துக் கொள்ளலாம். என் கட்டளைக்கு அனைவரும் தயாராக இருங்கள். ம்…மந்திரா நீ இங்கேயே இரு. நான் சொன்னதும் நீதான் மதிநாகசுரனிடம் எடுத்துச் செல்லவேண்டும். இப்போது நீங்கள் இருவரும் சென்று வாருங்கள்.”

“ஆகட்டும் ஆசானே நாங்கள் சென்று வருகிறோம். தங்களின் கட்டளைக்காக காத்திருப்போம்.”

தொடரும்…….
Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s