அத்தியாயம் 30: சிம்பாசுரனும்! நரன்சாம் மந்திரமும்!

நரன்சாம் மந்திரத்தை கற்கச் சென்ற சிம்பாசுரனை தேடிச் சென்றான் மந்திராசுரன். அவன் பாதி வழி சென்றதும் எதிரில் சிம்பாசுரன் வருவதைக் கண்டான். உடனே ஓடிச் சென்று

“சிம்பா வா வா!! உன்னை காணவே நான் வந்துக்கொண்டிருக்கிறேன்”

“என்னையா? எதற்கு மந்திராசுரா?”

“ஆம் நீ சென்று எத்துனை நாட்கள் ஆகிறது!! ஆசான் கவலையுற்றார். அதனால் உன்னை கண்டு வரவே நான் வந்தேன்.”

“என்ன மந்திரா!!! ஆசானுக்கு என் மேல் அவ்வளவு தான் நம்பிக்கையா?”

“அப்படி இல்லை சிம்பா. அங்கு நடந்தவைகள் ஆசானை சற்று பதற்றமடையச் செய்தது அது தான். உன் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை”

“அப்படியா!!! அப்படி என்ன நடந்தது? நமது ஆசானே பதற்றமாகும் அளவிற்கு!!!”

“வா வா நம் இருப்பிடத்தை நோக்கி பயணித்துக் கொண்டே சொல்கிறேன்”

என்று சிம்பாசுரன் இல்லாத நேரம் அங்கு நடந்தவைகள் அனைத்தையும் விவரித்துக் கூறினான் மந்திராசுரன். அதை கேட்டதும் சிம்பாசுரன்

“ஓ!! இவ்வளவு நடந்துள்ளதா?”

“ஆம் சிம்பா. சரி நீ சென்ற காரியம் என்னவாயிற்று?”

“அது!! அது!! அது வந்து மந்திரா…”

“என்ன சிம்பா திடீர் தடுமாற்றம்?”

“அது முழுமையடையவில்லை மந்திரா”

“புரியவில்லை சிம்பா. விளக்க முடியுமா”

“எனது தவத்தால் அந்த ஈசனை காண முடிந்தது. அவரிடம் நரன்சாம் மந்திரத்தையும் வரமாக பெற முடிந்தது…”

“பலே சிம்பா பலே!! பின் ஏன் முழுமையடையவில்லை என்றாய்? அதுதான் மந்திரத்தை கற்றுக்கொண்டு விட்டாயே!!”

“இல்லை மந்திரா ஆசான் சொன்னது போல முதல் ஒரு மண்டலம் தவமிருந்து பெற்ற மந்திரத்தை அடுத்த ஒரு மண்டலம் விரதமிருந்து அதனை முழுமையடையச் செய்ய வேண்டும். அதில் தான் தவறு நேர்ந்தது”

“என்ன தவறிழைத்தாய் சிம்பா? அவ்வளவு சிரமப்பட்டு பெற்ற மந்திரத்தை எப்படி தொலைத்தாய்?”

“தொலைக்கவில்லை மந்திரா. இப்போதும் அந்த மந்திரத்தை நான் உச்சரித்தால் அது வேலை செய்யும் ஆனால் சரியாக செய்யுமா என்பதில் தான் சந்தேகம் உள்ளது.”

“அதெல்லாம் இருக்கட்டும். நீ விரதத்தில் என்ன தவறிழைத்தாய்?”

“அது வந்து ….நான் கடும் விரதம் மேற்கொண்டு அந்த மந்திரத்தை உச்சரித்து அதனை என்னுள் உருவேற்றிக் கொண்டிருந்த சமயம் எனது மந்தாகிஷி அங்கு வந்தது போல இருக்க நான் சிறிது நேரம் மயக்கமானதில் எனது விரதம் கலைந்துப் போனது.”

“மந்தாகிஷி எங்கிருந்து அங்கு வந்தாள்?”

“அது தான் எனக்கும் புரியவேயில்லை மந்திராசுரா. எனது மந்தாகிஷி மயக்கத்திலிருந்து நான் விடுப்பட்டதும் ஓர் அசிரீரி கேட்டது. அது என்னிடம் நான் அந்த விரதத்திற்கு தகுதியானவன் இல்லை என்றும், உடனே அங்கிருந்து புறப்படும் படியும் கூறியது. உடனே என் தவறை உணர்ந்த நான் அங்கிருந்து புறப்பட்டு வந்துக் கொண்டிருந்த வேளையில் தான் உன்னை சந்தித்தேன்”

“ஓ!!! என்ன சிம்பா? ஆனால் இதில் ஏதோ சித்து விளையாட்டுள்ளது. ம்… ஆசானிடம் சொன்னால் அவர் என்னவென்று சொல்வார்”

“அய்யோ மந்திரா!!! ஆசானிடம் நான் இதை எப்படிச் சொல்வேன்?”

“சொல்லித்தானே ஆகவேண்டும் சிம்பா. அவர் கேட்பாரே”

“அந்த தர்மசங்கடமான நிலையை எண்ணிக் கொண்டு தான் நடந்து வருகிறேன்”

“வேறு வழியில்லை சிம்பா. நடந்தவைகளை அப்படியே சொன்னால் தானே ஆசானும் என்ன ஏதென்று கண்டறிய முடியும். நீ நடந்ததை முழுவதுமாக ஆசானிடம் சொல்லிவிடு வேறு வழியே இல்லை”

“ம்…ஆகட்டும் மந்திரா”

என்று பேசிக்கொண்டே வந்ததில் சீக்கிரமாக அவர்கள் வசிப்பிடத்திற்கு வந்து சேர்ந்தது போல இருந்தது இருவருக்கும். அவர்களின் வரவைக் கண்ட மற்றவர்கள்

“அடடே மந்திராவும் சிம்பாவும் வந்துவிட்டனரே.”

என்று சிகராசுரனும்

“அடியே மந்தா உன்னவர் வந்துவிட்டாரடி”

என்று யாகம்யாழியும் கூற மற்ற அனைவரும் வாயிலில் வந்து நின்று வரவேற்றனர். அவர்கள் அனைவரையும் கண்டு சிம்பாசுரன் தன் மனதிற்குள்

“அய்யோ அனைவரும் எவ்வளவு நம்பிக்கையுடன் என்னை வரவேற்கின்றனர். ஆனால் நானோ வெறும் கையுடன் வந்திருக்கிறேனே”

என்று எண்ணி வருந்திக்கொண்டே அவர்கள் அருகில் சென்றான். அவன் கண்கள் ஆசானைத் தேடியது. அப்போது மதிநாகசுரன்

“வா சிம்பா வா வா. உன் பயணம் எல்லாம் நாம் நினைத்ததுப் போலவே இருந்தது அல்லவா!”

“ம்…ம்…”

“என்ன உன் பேச்சில் அது இல்லையே”

“மதி அவன் அனைத்தையும் கூறுவான். பொறுமையாக இரு”

“என்ன மந்திரா நீங்கள் இருவரும் முழிப்பதைப் பார்த்தால் ஏதோ சரியில்லையே. ம்..ம்..சரி சரி அனைவரும் அவரவர் வேலைகளை செய்யுங்கள். நாங்கள் எங்கள் வேலையை செய்யட்டும்”

என்று அனைவரையும் அங்கிருந்து அனுப்பிவிட்டு மூவருமாக ஆசானிடம் சென்றனர். அங்கே ஆசானை கண்டதும் ஏந்த வித விளக்கமும் அளிக்காமல் நேராக அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் சிம்பாசுரன். ஆசானும்

“விட்டுத்தள்ளு சிம்பா. நான் தான் போகும் போதே சொன்னேனே. சில சமயம் நடக்காமலும் இருக்குமென்று. சரி சரி என்ன நடந்தது சொல்”

என்று ஆசான் கேட்டதும் அனைத்தையும் கூறினான் சிம்பாசுரன். அதைக் கேட்டதும் ஆசான்

“ம்….சிவனளித்த மந்திரத்தை முழுமையடைய விடாது தடுத்தது அந்த மோகினியானவனான மாயவன், தேவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய விஷ்ணுவின் செயலே. போகட்டும். விஷ்ணுவால் அதை முழுமையடையத் தான் முடியவில்லை ஆனால் அந்த மந்திரம் உன்னுள் உள்ளதை அவரால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆகையால் நீ ஏதாவது ஒரு சாம்பீனியை தேர்ந்தெடுத்து அதன் மேல் பிரயோகித்துப் பார். என்ன நேர்ந்தாலும் சரி நான் பார்த்துக் கொள்கிறேன். முதலில் நீ சென்று சற்று ஓய்வெடு. நாளை காலை இங்கே நீ தேர்ந்தெடுத்த சாம்பீனியுடன் வந்தே முயற்சித்துப் பார் நானும் உன்னுடன் இருப்பேன்.”

“ஆகட்டும் ஆசானே. நான் வருகிறேன்.”

“ம்…சென்று வாருங்கள்”

என்று ஆசான் கூறியதும் மந்திராசுரன், மதிநாகசுரன், சிம்பாசுரன் ஆகிய மூவருமே ஆசான் அறையிலிருந்து வெளியேறினர். அப்போது மதிநாகசுரன் சிம்பாசுரனிடம்

“ஏன் சிம்பா நீ எங்கிருக்கிறாய் என்பது கூடவா மறந்துப் போனாய்? அங்கெப்படி மந்தா வருவாள் என்று சற்று எண்ணியிருந்தாலே போதுமே..”

“மதி அந்த நேரம் என்னை ஏதோ ஒரு சக்தி கட்டிப் போட்டது போலவே இருந்தது. நான் அதன் பிடிக்குள் இருந்தேன் ஆகையால் என்னால் நீ சொன்னது போல எல்லாம் சிந்திக்க தோன்றவில்லை”

“ம்… சரி சரி. இப்போ நிஜமாகவே சென்று மந்தாவைப் பார். போ போ….”

“போதும் மதிநாகசுரா. போதும். சிம்பாசுரனை அவ்வாறு செய்தது யாரென்று ஆசான் கூறியப் பின்னரும் ஏன் இந்த கேளிக்கை? நீ சென்று வா சிம்பா”

“ம்..ம்… மன்னித்து விடு சிம்பா.”

“இருக்கட்டும் மதி. நான் வருகிறேன்”

“நானும் சற்று ஓய்வெடுக்கட்டும். வருகிறேன் மதிநாகசுரா”

“ம்… ஆகட்டும் நாளை காலை ஆசானின் அறையில் சந்திப்போம்”

என்று கூறி மூவரும் அவரவர் இருப்பிடத்திற்கு சென்றனர். சிம்பாசுரன் மந்தாகிஷியிடம் நடந்தவைகளை விவரித்தான். அதைக் கேட்டதும் மந்தாகிஷியின் முகம் மலர்ந்தது. அதைக் கண்ட சிம்பா

“என்ன மந்தா? நீ என் மீது கோபம் கொள்வாய் என்று நினைத்துக் கொண்டே கூறினேன்….நீ என்னவென்றால்….”

“தாங்கள் கூறியதில் நான் கோபப்படும் படி ஒன்றுமே இல்லை என்று அர்த்தம். மேலும் உங்கள் மனம் முழுவதும் நானே! நான் மட்டுமே இருக்கிறேன் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளதை நினைத்து என் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருக்கிறது. அந்த பாற்கடலில் வீற்றிருக்கும் பெருமாளே என்னைப் போல உருமாறி வந்தது எனக்கு இன்னும் பெருமகிழ்ச்சி அளிக்கிறது”

“ம். ….ம்…. அப்படியா!!! அப்போ நான் ஏமாந்து வந்திருப்பது உனக்கு எந்தவிதத்திலும் வருத்தமளிக்கவில்லை அப்படித்தானே”

“அப்படி இல்லை. எந்த பெண்ணிற்கும் அவள் அசுரக் குலத்தவளோ இல்லை நரன் குலத்தவளோ இல்லை தேவலோகத்தவளோ எவராக இருந்தாலும் தன்னவர் தனது நினைப்பில் தான் எப்போதுமிருக்கிறார் என்பது தெரியவந்தால் அது அவளுக்கு பெருமகிழ்ச்சியைத் தான் தரும். மற்றது எதுவுமே அவள் மனதில் நிற்காது. அந்த நிலையில் தான் இப்போது நானும் உள்ளேன்”

தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சிம்பாசுரனை மகிழ்வித்தாள் மந்தாகிஷி. அசுரகுலப் பெண்ணானால் என்ன அவளும் பெண் தானே!

மறுநாள் விடிந்தது. மந்திராசுரன், மதிநாகசுரன் இருவரும் ஆசானின் அறையிலிருந்தனர். ஆசான் இருவரிடமும் சிம்பாசுரன் வந்ததும் தன்னை வந்து அழைக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றார். சிம்பாசுரனுனின் வரவுக்காக காத்திருந்தனர் மந்திராசுரனும் மதிநாகசுரனும். சிம்பாசுரன் வருவதற்கு சற்று தாமதமானது. அவன் உள்ளே நுழைந்ததும்

“வெகு நேரமாக காத்திருக்கின்றீர்களா. தாமதமானதற்கு மன்னிக்கவும்”

“ம்..ம்..மந்தாகிஷி பிம்பத்தைப் பார்த்தே மயக்கமானவன் தன்னருகிலேயே பார்த்தால் இப்படித் தான் தாமதம் ஆகும் என்பது நாங்கள் அறிந்ததே சிம்பா. இதற்கு ஏன் மன்னிப்பு எல்லாம் கேட்கிறாய்?”

“பார்த்தாயா மந்திராசுரா இந்த மதியை!! என்னை கேலி செய்வதிலே தான் என்ன ஒரு ஆனந்தம்!! சரி ஆசான் வந்தாரா?”

“அவர் வந்து உன்னைக் காணாது…நீ வந்ததும் அழைக்கச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டார். இதோ நான் போய் அழைத்து வருகிறேன். இப்போது சற்று நேரம் நீ காத்திரு சிம்பா”

என்று கூறிவிட்டு ஆசானை அழைத்து வரச்சென்றான் மதிநாகசுரன். அப்போது சிம்பாசுரன்

“மந்திராசுரா இந்த மதி என்னை விடப் போவதில்லை. இதை வைத்தே என்னை ஒரு வழி பண்ண போகிறான்”

“எத்துனை நாட்கள் இதையே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறான்? சிம்பா…விடு விடு….”

ஆசானும் மதிநாகசுரனும் வந்தனர். ஆசான் சிம்பாசுரனைப் பார்த்து

“சிம்பா எங்கே நீ பரிசோதித்துப் பார்க்கப் போகும் சாம்பீனி?”

“அதை வெளியே நிற்கும் படி சொல்லிவிட்டு வந்திருக்கிறேன் ஆசானே”

“ம்…. உள்ளே அழைத்து வா”

என்று ஆசான் சொன்னதும் சிம்பாசுரன் சென்று சாம்பீனியை அழைத்து வந்தான். அதை ஓரிடத்தில் நிற்க சொல்லிவிட்டு…தனது நரன்சாம் மந்திரத்தை உச்சாடனம் செய்யத் துவங்க முயற்சிக்கும் போது மதிநாகசுரன் குறுக்கிட்டு

“இரு… இரு …சிம்பா. சற்றுப் பொறு. ஆசானே தாங்கள் சற்று அங்கிருந்து பத்தடி விலகி நில்லுங்கள். மந்திராசுரா நீயும் தான். நம்ம சிம்பா கற்றுக்கொண்டு வந்துள்ள அரைகுறை மந்திரம் என்ன செய்யுமென்று நமக்குத் தெரியாதல்லவா அதனால் நமது நலனுக்காக சொல்கிறேன் அவ்வளவு தான்”

“மதிநாகசுரா போதும் உன் கிண்டலும் கேலியும். நிறுத்திக் கொள். ம்…சிம்பாசுரா ஆகட்டும்”

என்று ஆசான் சொன்னதும் தனது பேச்சை நிறுத்திக் கொண்டான் மதிநாகசுரன். ஆனால் ஆசானும் மந்திராசுரனும் மதிநாகசுரன் சொன்னது போலவே அங்கிருந்து பத்தடி தள்ளியே நின்றனர். அதைக் கண்ட மதிநாகசுரன் தன் மனதிற்குள்

“ஹா! ஹா! ஹா! நான் சொன்னால் நகையாடுகிறேன் என்பார்கள் ஆனால் அதைத்தானே இப்போது இவர்களும் செய்கிறார்கள். என்ன என்னைப் போல சொல்லாமல் செய்கிறார்கள் அவ்வளவு தான்…ஹீ ஹீ ஹீ!”

என்று மனதிற்குள் சிரிப்பதாக எண்ணிக் கொண்டு கொஞ்சம் சத்தமாக சிரித்து விட உடனே ஆசான் அவனைப் பார்த்து முறைத்தார். மதிநாகசுரன் தன் சிரிப்பை நிறுத்த முடியாமல் நிறுத்திக் கொண்டிருந்தான். இதற்கிடையில் சிம்பாசுரன் அவன் கற்ற நரன்சாம் மந்திரத்தை உச்சாடனம் செய்துக் கொண்டிருந்தான். அந்த சாம்பீனியும் சிம்பாசுரன் நிற்க வைத்த இடத்தில் அப்படியே நின்றுக் கொண்டிருந்தது. சற்று நேரமானது. அப்போது மதிநாகசுரன் மெல்ல நகர்ந்து மந்திராசுரன் அருகில் சென்று அவன் காதில்

“மந்திரா இது பலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. உனக்கிறுக்கிறதா?”

“உஷ்…பேசாமல் கவனி மதி. ஆசானின் கோபத்திற்கு ஆளாகாதே”

இருவரின் முனுமுனுப்பை கேட்ட ஆசான் திரும்பி இருவரையும் பார்த்தார். ஆனால் அப்படி எதுவுமே பேசிக்கொள்ளாததுப் போல நின்றிருந்தனர் மதிநாகசுரனும் மந்திராசுரனும். பின் மீண்டும் சிம்பாசுரனைப் பார்க்கலானார்.

நேரம் சற்று கடந்தது…சிம்பாசுரன் நூற்றியெட்டாவது முறை நரன்சாம் மந்திரத்தை உச்சாடனம் செய்து நூற்றியெட்டாவது மலரை சாம்பீனி மீது போட்டான். நூற்றிஏழு மலர்களையும் பியித்துப் போட்ட சாம்பீனி நூற்றியெட்டாவது மலர் தன் மீது விழுந்ததும் அதை எடுத்தது.

அதன் பின் நடந்ததைப் பார்த்த மதிநாகசுரனும் மந்திராசுரனும் வாயடைத்து, விழிகளில் எந்த அசைவுமின்றி, உறைந்துப் போய் நின்றிருந்தனர்.

தொடரும்…….Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s