அத்தியாயம் 29: சம்மதமும்! சந்தேகமும்!

“வணக்கம் தலைவரே”

“ம்..ம்.. உடனே சென்று இந்த ஓலையில் குறிப்பிட்டிருக்கும் வீட்டிற்கு சென்று அங்குள்ளவர்களை நான் அழைத்ததாக கூறி அழைத்து வாருங்கள்”

“ஆகட்டும் தலைவரே”

“ம்.. சென்று கையோடு அவர்களை அழைத்து வாருங்கள்”

“உடனே அழைத்து வருகிறோம் தலைவரே”

என்று கூறிவிட்டு இரண்டு காவலர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அப்போது தலைவர் தலைமை காவலரைப் பார்த்து

“ஒரே விந்தையாக உள்ளது தலைமைக் காவலரே”

“எதை சொல்கிறீர்கள் தலைவரே?”

“அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவரால் தான் நாம் சில உண்மைகளையும் அந்த சாமியார் பற்றியும் அறிந்துக் கொண்டோம் இல்லையா!!”

“ஆம் தலைவரே”

“இப்போது என்னவென்றால் அதே குடும்பத்திலிருந்து தான் நம் ஊரைக் காக்கப் போகிறவரும் வரப்போகிறார். அந்த குடும்பம் ஏதோ தெய்வீக அம்சம் பொருந்திய குடும்பம் என எனக்கு தோன்றுகிறது. பார்ப்போம்!! அவர்கள் வரட்டும். விவரங்களைக் கேட்டு பின் ஒரு முடிவுக்கு வருவோம். என்ன சொல்கிறீர்கள் தலைமைக் காவலரே?”

“அப்படியே ஆகட்டும் தலைவரே. சற்று நேரத்தில் எல்லாம் தெரிந்துவிடும். அதுவரை காத்திருப்போம்”

ஊர் தலைவர் அனுப்பிய காவலர்கள் நேராக ஓலையில் குறிப்பிட்டிருந்த வீட்டிற்கு முன் சென்று

“நாங்கள் தலைவர் காவலர்கள் வந்துள்ளோம்.”

என்று கூறிக்கொண்டே கதவின் தாழ்ப்பாளை தட்டினர். உள்ளிருந்து லட்சுமி எட்டிப் பார்த்தாள் பின் நேராக அவர்களிடம் வந்து

“வாங்க !! வாங்க!! என்ன ஆச்சு? ஏன் வந்துள்ளீர்கள்?”

“தலைவர் தங்கள் குடும்பத்தினரை கையோடு அவர் இருப்பிடத்திற்கு அழைத்து வரச் சொன்னார். அதற்காக தான் வந்துள்ளோம். சீக்கிரம் கிளம்பி எங்களுடன் வருகிறீர்களா”

“அப்படியா!!”

வீட்டின் பின் புறத்திலிருந்து உள்ளே வந்துக் கொண்டே கேசவன்

“யாரு லட்சுமி அது? அட காவலர்கள்! வாருங்கள் என்ன விஷயம்?”

“தலைவர் நம்மளை கையோடு அழைத்து வரச் சொல்லியிருக்கார். அதுதான் இவர்கள் நம்மளை கூட்டிட்டு போக வந்துள்ளனராம். புறப்படுவோமா?”

“கோதகன் எங்கே? ஆளைக் காணமே! அவனிடம் சொல்லிட்டுப் புறப்படுவோம்”

“அவன் காலையிலேயே எங்கயோ கிளம்பி போயிட்டான்”

“எங்கே போயிருக்கான்?”

“வேறெங்கே கோவிலுக்கு தான் போயிருப்பான்”

“தயவுசெய்து உடனே புறப்பட்டு எங்களுடன் வாருங்கள். ஊர் தலைவரும், தலைமை காவலரும்  தங்களுக்காக காத்திருக்கிறார்கள்”

“இதோ கிளம்பிட்டோம் பா. லட்சுமி கதவை பூட்டிட்டு வா”

“இதோ பூட்டிட்டேன். வாங்கோ போகலாம்”

இருவரும் காவலர்களுடன் ஊர் தலைவர் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருக்கையில் வழியில் கோதகன் வந்தான்

“அக்கா மாமா எங்கே போறேங்கள்?”

“ஊர் தலைவர் அழைச்சுட்டு வரச்சொன்னாராம் அதுதான் போயிட்டிருக்கோம். இந்தா வீட்டு சாவி.”

“நானும் வரணுமா?”

“இல்லை கோதகா அவர் எங்க ரெண்டு பேரை தான் கூட்டிட்டு வரச்சொல்லிருக்கார். அதுனால நீ வீட்டிலேயே இரு. நாங்க என்ன ஏதுன்னு கேட்டுட்டு வந்திடறோம்”

“மாமா ஜாக்கிரதை. நாம பேசினப்படியே எல்லாம் இருக்கட்டும். ஞாபகம் வச்சுக்கோங்க”

“ம் ..ம்… அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு. நீ கவலைப் படாதே”

“என்ன சம்மந்தமே இல்லாம பேசிக்கறேங்கள் ரெண்டு பேரும்?”

“அதெல்லாம் எங்களுக்குள்ள அக்கா. அதை விடு. நீங்க போயிட்டு சீக்கிரமா வீட்டுக்கு வாங்கோ”

என்று கூறிவிட்டு கோதகன் வீட்டுக்குச் சென்றான். கேசவனும், லட்சுமியும் காவலர்களுடன் ஊர் தலைவர் வீட்டுக்குச் சென்றனர்.  அங்கே அவர்கள் சென்றதும் வாசலில் காத்திருந்த தலைவர் அவர்களைப் பார்த்ததும்

“வாங்க வாங்க கேசவன். வாம்மா லட்சுமி. உள்ளே வாங்க”

என்று அழைத்து சென்றதும் சற்று ஆச்சர்யமானார்கள் இருவரும். தலைவர் பின்னாலேயே சென்றனர். தலைவர் அவர்களை நேராக பூஜை அறைக்குக் கூட்டிச் சென்றார். அங்கே நான்கு இருக்கைப் பலகைகள் போடப்பட்டிருந்தது. அதில் இரண்டை கைக் காட்டி

“கேசவா, லட்சுமி நீங்கள் இருவரும் இதில் அமருங்கள்”

“எதற்காக அழைத்து வரச் சொன்னீர்கள் தலைவரே? நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாலே நாங்கள் செய்திருப்போமே!”

“இல்லை இல்லை அது சரியில்லை கேசவா”

“என்ன சொல்கிறீர்கள் தலைவரே?”

“அது ஒன்றுமில்லை கேசவன் அவர்களே அதாவது அந்த சாமியார் சொன்னது போல….”

“தலைமை காவலரே….சற்று பொறுமையை கடைப்பிடித்தால் நல்லது. ம்…ம்… அது ஒன்றுமில்லை கேசவா தலைமை காவலர் சற்றே குழப்பத்தில் இருந்ததால் ஏதேதோ சொல்கிறார். எங்களுக்காக …அதாவது மக்களுக்காக நீங்கள் ஒன்று செய்ய வேண்டும்.”

“எதுவானாலும் சொல்லுங்கள் தலைவரே! நாங்கள் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்”

“கேசவா நீ மட்டும் செய்தால் போதும். லட்சுமி ஏதும் செய்ய வேண்டாம்.”

“சொல்லுங்கள் தலைவரே. செய்ய காத்திருக்கிறேன்”

“பெரிதாக ஒன்றுமில்லை நான் உன்னிடம் ஒரு பொருளைத் தருவேன். நீ அதை எடுத்துக் கொண்டு பிரயாகா சென்று வர வேண்டும்.”

“அதை பிரயாகாவில் யாரிடம் கொடுக்க வேண்டும் தலைவரே? நீங்கள் சொல்லுங்கள் நான் அதை செய்து முடித்து விட்டு வருகிறேன்”

“கேசவா நீ அதை அங்கு எடுத்துச் சென்றாலே போதும். அதை என்ன செய்ய வேண்டும்? யாரிடம் கொடுக்க வேண்டுமென்பதெல்லாம் நீ அங்கு சென்றதும் உனக்கு புறா தூதனுப்பி விளக்குகிறேன். இப்போதைக்கு நீ அதை அங்கு எடுத்து செல்ல தயாரா என்பது மட்டும் தான் நாங்கள் தெரிந்துக் கொள்ள ஆசைப் படுகிறோம்”

“நிச்சயமாக எடுத்துச் செல்கிறேன் தலைவரே. இப்போதே கிளம்பட்டுமா?”

“இல்லை ! இல்லை ! நான் சொல்லும் போது சென்றால் போதும். இதற்கு நீ ஏன் எதற்கு என்ற எந்த வித கேள்விகளும் எழுப்பாமல் சம்மதம் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி”

“அச்சோ தலைவரே!! எதற்கு நன்றி எல்லாம். நீங்கள் நமது ஊரையும் எங்களையும் எவ்வளவு பாதுக்காத்து வருகிறீர்கள்!! அதைவிட நான் ஏதும் பெரிதாக செய்துவிடப் போவதில்லையே பின் எதற்கு நன்றி என்ற பெரிய வார்த்தை எல்லாம் உபயோகிக்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் நாங்கள் தான் உங்களுக்கு நொடிக்கு ஒரு முறை நன்றி தெரிவிக்க வேண்டும்”

“சரி சரி!!! இனி கூற மாட்டேன் கேசவா. என்னம்மா லட்சுமி உன் கணவரை பிரயாகா வரை இந்த வேலைக்காக அனுப்ப உனக்கு சம்மதமா?”

“ம்…சொல்லு லட்சுமி தலைவர் கேட்கிறார் பதில் சொல்லு”

“ம்… எனக்கும் சம்மதம் தலைவரே”

“ரொம்ப சந்தோஷம் மா. சரி கேசவா நான் எப்போது பயணம் மேற்கொள்ள வேண்டுமென்ற விவரங்களை கூடிய விரைவில் உனக்கு சொல்கிறேன். எனது அழைப்புக்கு காத்திரு. யார் அங்கே!! ம்…அதை எடுத்து வாருங்தள்”

என்று தலைவர் கூறியதும் ஒரு காவலன் ஏதோ ஒரு பையை எடுத்து வந்தான். அதை வாங்கி கேசவன் லட்சுமியிடம் கொடுத்தார் தலைவர். அதை வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்குச் சென்றனர் கேசவனும் லட்சுமியும்.

வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் லட்சுமி கேசவனிடம்

“என்னத்தை எடுத்துக் கொண்டு உங்களை பிரயாகா வரை போகச் சொல்லிருப்பார்?”

“ஏன் அதை அங்கே அவர்கிட்ட கேட்க வேண்டியது தானே!! இப்போ என்கிட்ட கேட்கிற!! எல்லாமே உன் முன்னாடி தானே சொன்னார். அப்புறம் எனக்கு மட்டும் எப்படி தெரியும்!!! எதுவா இருந்தா என்ன அவர் நம்ம தலைவர் நமக்கு என்றுமே நல்லதை மட்டுமே எண்ணுபவர். அவர் சொல்வதை தட்டாமல் செய்திட்டால் நமக்கு நல்லதாகத்தான் முடியும்.”

“ஓ!!! அப்போ ஏன் அவர் ஆணையை மீறி கஷிக்கு மாமனும் மச்சானுமாக போனேங்களாம்?”

“அது….அது வந்து”

“என்ன இழுக்கறேங்கள்….பதில் சொல்லுங்கோ”

“நம்ம சொந்தக்கார மேலிருந்த அக்கறை அப்படி செய்ய வச்சுது.”

“ம்…..ம்….எதையாவது சொல்லி என் வாயை அடைச்சிடுவேங்களே. சரி சரி பேசிட்டு வந்திலே வீடு சீக்கிரம் வந்தது போல இருக்கு. வாங்கோ உள்ள போயி பேசிப்போம்”

“வீடு வரலை. அது அங்கேயே தான் இருக்கு!! நாம தான் சீக்கிரம் நடந்து வந்திருக்கோம்!!!”

“அட !அட! அட! ஹாசியமாக்கும்!!! கோதகா கோதகா கதவை திறடா. இவன் பட்டப் பகல்ல கதவை சாத்திண்டு என்ன பண்ணறான்…கோதகா நாங்க வந்துட்டோம் கதவைத் திற”

என்று லட்சுமி தாழ்ப்பாளை கதவில் தட்டுத்தட்டென தட்டினாள். கோதகன் வேகமாக வந்து கதவைத் திறந்துக் கொண்டே

“அக்கா ஏன் உனக்கு பொறுமை இல்லாம போச்சு. வேலையா இருக்கேன் ல. வாங்கோ வாங்கோ.”

“என்னடா அப்படி வேலையா இருந்த?”

“ம்….நீங்க ரெண்டு பேரும் தலைவர் கூப்பிடறார்ன்னுட்டு போட்டது போட்டப்படி அப்படியே கிளம்பி போயிட்டேங்கள். நான் தான் எல்லா வேலையையும் செய்து சமைத்து முடிச்சிட்டு வெளில நீ காயப்போட்டிருந்த துணியெல்லாம் எடுத்து உள்ளே வைக்க வீட்டின் பின் புறம் போயிருந்தேன் அப்போ தான் நீ கதவை லொட்டு லொட்டுன்னு தட்டிட்டிருந்த..‌‌.அங்கேருந்து வரதுக்கு கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு”

“ஓ!!! அப்படியா!!! சரி சரி சரி. பாத்தேங்களா என் தம்பிய… சமத்து டா நீ. உன்னை கட்டிக்கப் போறவ ரொம்ப குடுத்துவச்சவ டா கோதகா. உன் மாமாவும் இருக்காரே இங்க இருக்குறதை அங்க நகத்தி கூட வைக்க மாட்டார் தெரியுமா!!”

“அப்படியா மாமா!!! ஏன் இப்படி இருக்கேங்கள்? என் அக்காவுக்கு உதவக் கூடாதா?”

“கோதகா ஏன்டா நீ வேற….சும்மா இருடா”

“ம்…சும்மா தான் கேட்டேன் மாமா. அது சரி தலைவர் வீட்டுக்குப் போனேங்களே!! எதுக்கு வரச்சொல்லிருந்தார்?”

“அது டா கோதகா”

“லட்சுமி நான் அவன்ட்ட சொல்லிக்கறேன் நீ போய் சாப்பாடு எடுத்து வை. இன்னைக்கு நம்ம கோதகன் சமையலை ஒரு பிடி பிடிப்போம்”

“ம்…சரி சரி நீங்களே சொல்லிக்கோங்கோ”

“ரெண்டு பேர்ல யாராவது சொல்லுறேங்களா!!!”

“நான் சொல்லறேன் கேளு. அவருக்கு ஏதோ ஒரு பொருளை பிரயாகாவுக்கு கொண்டு சேர்க்கணுமாம். அதுக்கு என்னை போயிட்டு வரச் சொல்லிருக்கார். அதை எடுத்துட்டு அங்கே போயி வர எங்களுக்கு சம்மதமான்னு கேட்கத் தான் வரச் சொல்லிருந்தார்”

“ஓ!! அப்படியா!!!  நீங்க பிரயாகா எடுத்துட்டு போக வேண்டிய அந்த பொருள் என்னது மாமா?”

“அதெல்லாம் தெரியாது கோதகா. அதை நான் எப்படி தலைவரிடம் கேட்பது? அவர் சொன்னார் நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன்”

“சரி அது போகட்டும்…அது ஏன் குறிப்பா உங்களை அனுப்பறார்? ஏதாவது ஒரு காவலன் கிட்ட கொடுத்தனுப்பலாமே!!”

“அட ஆமாம்!!! ஏன்?”

“ம்…என்ட்ட கேளுங்கோ. நீங்க அவர்ட்ட கேட்க வேண்டியது தானே மாமா”

“எப்படி டா அவர்கிட்ட போய் அப்படி எல்லாம் கேட்கறது? அது அதிகபிரசங்கி தனமா இருக்காது!!”

“அதெல்லாம் என்னவா வேணும்னாலும் இருக்கட்டும் மாமா. ஆனா எதை எடுத்துண்டு உங்களை பிரயாகா போகச் சொன்னார்? ஏன் உங்களை மட்டும் போக சொன்னார்? இதெல்லாம் தெரிஞ்சுக்காம நீங்க எங்கேயும் போகாதீங்கோ”

“ம்…நீ சொல்லறதும் சரி தான்…ஆனா தலைவர்கிட்ட போயி இதெல்லாம் எப்படி கேட்பதுன்னு தான் யோசனையா இருக்கு கோதகா!!”

“இதுல யோசிக்க ஒண்ணுமே இல்லை மாமா. நீங்க போக மாட்டேன்னா சொல்லப் போறேங்கள்!!! இல்லையே!! ஏன்? எதற்கு? எதை? என்ற விவரம் தானே கேட்கப் போறேங்கள். அதை கேட்டா அவர் ஒண்ணும் உங்களை தப்பா நினைச்சுக்க மாட்டார்.”

“அதுவும் சரி தான். பார்ப்போம் நாளைக்கு இதைப் பத்தி கேட்டுப்  பார்க்கிறேன்”

“மாமா எனக்கு ஒரு சந்தேகம்!!”

“என்னது உன் சந்தேகம்”

“ஒரு வேளை அந்த சுக்கிராச்சாரியார் சொன்னதுப் போல  நீர்துளி பதக்கத்தை தான் உங்களிடம் கொடுத்து பிரயாகா கொண்டு சேர்க்கும் படி சொல்லியிருப்பாரோ!!!”

“அவ்வளவு பாதுக்காப்புடன் வைக்க வேண்டியதை …என்னைப் போல ஒருவனிடமா கொடுத்தனுப்புவார்கள்!!! போடா போ…கஷியிலிருந்து வந்ததிலிருந்தே உனக்கு அந்த பதக்கம் நினைப்பு தான். அதை மறந்துடறேன்னு என்கிட்ட சொன்னயே!! அது என்ன ஆச்சு?”

“ஆங் !!! ம்… ம்… சும்மா கேட்டேன். அது தானே அதை பலத்த பாதுகாப்புடன் அல்லவா எங்காவது எடுத்து செல்வார்கள்!!! ஏதோ தோணியது கேட்டேன் அவ்வளவு தான் மாமா. நான் அந்த பதக்கத்தை மறந்து பல நாள் ஆச்சு”

“அப்படின்னா சந்தோஷம் தான் கோதகா.”

கோதகன்.. சுக்கிராச்சாரியார் சொன்னதை மனதில் அசைப் போட்டுப் பார்த்தான். அவர் சொன்னதில் பிரயாகா என்ற பெயரும் வந்ததை நினைவு கூர்ந்தான். இப்போது தலைவர்  தனது மாமாவை மட்டும் ஏன் பிரயாகா அனுப்ப வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? அவரிடம் கொடுத்தனுப்பப்படவுள்ள பொருள் என்னது? சுக்கிராச்சாரியார் சொன்னது போல அவருக்கு பாதி விஷயம் தெரிந்துள்ளதால்… அவர் பிரயாகாவில் ஏதோ செய்வதற்காக தன் மாமாவை அனுப்புகிறார் என்றெல்லாம் சிந்தித்து தனக்குள்ளே பல கேள்விகள் எழுப்பி அதற்கான விடைகளையும் தானே யூகித்து….அவன் நினைப்பது தான் சரி என்ற எண்ணம் தோன்ற…தன் மாமாவிடம் தலைவன் கொடுக்கும் பொருளை எப்படியாவது பார்த்தாக வேண்டும் என்று மனதில் முடிவெடுத்து அங்கிருந்த தூணில் தன் கையை மடக்கி ஓங்கி தட்டிக் கொண்டே மனதில் பேசுவதாக எண்ணி சத்தமாக

“ம்…அதுதான் செய்ய வேண்டும்”

என்றதும் அதைக் கேட்ட கேசவன்

“எதை செய்ய வேண்டும் கோதகா? ஏன் தூணை அவ்வளவு வேகமாக தட்டினாய்? அப்படி என்ன பலத்த சிந்தனை?”

“ஆங் !!! அது வந்து மாமா…”

தொடரும்…..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s