அத்தியாயம் 28: நால்வரில் ஒருவர்

“ஏன் மறுபடியும் கஷிக்கான்னு அலர்றேங்கள்!!”

“அதுக்கில்ல லட்சுமி இப்போ தான் பிரயாணத்தை முடிச்சுட்டு ஒரு வழியா நம்ம ஊருக்கு வந்து சேர்ந்திருக்கோம் இதுல மறுபடியும் உடனே எல்லாம் போக முடியாது மா. அதுவுமில்லாம நம்ம ஊர் தலைவர் கட்டளையை ஒரு தடவை மீறியாச்சு… அதுவே பெரிய தப்பு இதுல மறுபடியுமான்னு கேட்டேன் அவ்வளவு தான். அது மிக பெரிய மன்னிக்க முடியாத செயல் ஆகிடும். அப்புறம் நீயும் மறுபடியும் பொய் சொல்லி சமாளிக்க வேணும். இதெல்லாம் தேவையா சொல்லு? அது யார்கிட்ட இருக்கு என் மச்சினன் கிட்ட தானே!!! அவனே இங்க வரும்போது கொண்டு வந்து தந்திடுவான் இல்லாட்டி நாம இந்த ஊர் கட்டுப்பாடெல்லாம் ஓஞ்சதும் போய் வாங்கிண்டு வந்துட்டா போச்சு. என்ன நான் சொல்லறது?”

“அதுவும் சரிதான். என்னால மறுபடியும் ஊர் காராளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுப்பா. நீங்க இல்லாமல் என்னால சமாளிக்க முடியலை. சரி அண்ணனே கொண்டு வந்து தந்திடுவார் பாருங்கோ”

“ம்…ம்… வந்திடுவார் வந்திடுவார்”

“ஏன் அதை அப்படி சொல்லறேங்கள். நிச்சயம் கூடிய சீக்கிரமே வந்து உங்க கையில் அந்த காப்பை மாட்டி விடுவாரா இல்லையான்னு பாருங்கோ!”

“ம்… நடந்தா நல்லது தானே”

“அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு? கொஞ்சம் முன்னாடி தானே உங்க மச்சினன், தந்திடுவார்ன்னு எல்லாம் சொன்னேங்கள் இப்போ என்னடான்னா இப்படி சொல்லறேங்கள்?”

“அச்சசோ அக்கா விடேன். அண்ணா வந்து தந்திடுவார். மாமா ஏதோ பயணக் களைப்புல உளருரார். விடுவியா….அதையே பிடிச்சுண்டு படுத்தறயே”

“சரி டாப்பா நான் உன் மாமாவை ஒண்ணுமே இனி கேட்கலை போதுமா!”

“ஆங் அது நல்ல அக்காவுக்கு அழகு”

என்று ஒருவழியாக கோதகனும், கேசவனுமாக நிலைமையை சமாளித்தனர். அவர்கள் சாப்பிட்டு எழுந்ததும் லட்சுமி பாத்திரங்களை தேய்ப்பதற்காக ஒழித்து போட்டுக்கொண்டிருக்கையில் கோதகன் கேசவனிடம் வந்து

“மாமா இந்த காப்பு விஷயம் நம்மளை மாட்டிக் கொடுத்திடுமோ?”

“என்னடா கேசவா நீ பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு இப்போ இப்படி கேட்கற?”

“அது அங்கேயே தானே கிடக்கும்”

“அங்கேயே தான் கிடக்கணும்…”

“சரி மாமா இப்போதைக்கு சமாளிச்சாச்சு…இனி மறுபடியும் இந்த கேள்வி வரும்போது பார்த்துப்போம். இப்போ போய் படுத்து தூங்குங்கோ”

என்று கூறிவிட்டு கோதகன் உறங்கச்சென்றான். கேசவனும் பயணக் களைப்பில் படுத்துறங்கினான்.

மதிநாகசுரன் கொண்டு சென்ற காப்பை தன் ஆசானிடம் காட்டினான். அப்போது ஆசான் அதை தன் கரத்தினால் எடுத்துப் பார்க்க முயன்ற போது

“ஆசானே அதை தங்கள் கரத்தினால் தொடாதீர்கள்”

“ஏன் மதிநாகசுரா?”

“அதில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அதைத் தொட்டதினால் என் கரத்தைப் பாருங்கள். வெந்துவிட்டது. ஏதாவது மரத்தாலான கம்பு எல்லது குச்சியை வைத்து தூக்கிப்பாருங்கள் அப்போது அது எந்தவித தீங்கும் செய்திடாது”

“இது வெறும் காப்பு தானே மதிநாகசுரா இதற்கு ஏன் நீ இவ்வளவு பயப்படுகிறாய்”

“இது காப்பு தான் ஆசானே ஆனால் இதை தொட்டால் சுட்டுப் பொசுக்கி விடுகிறதே!!! அதனால் தான் சொல்கிறேன்”

“அப்படியா எங்கே நான் சற்று தொட்டுப் பார்க்கிறேன்”

என்று ஆசான் அந்த காப்பைத் தொட்டதும் சுட்டது. உடனே கையை அதிலிருந்து எடுத்தவர் மதிநாகசுரன் சொன்னது போலவே மரக் கம்பைக் கொண்டு எடுத்துப் பார்த்து தனது ஞானதிருஷ்டியில் அது யாருடையது என்பதை அறிந்துக் கொண்டார்.

“மதிநாகசுரா இது அந்த நரன் கேசவனுடையதாகும். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக்கொண்டதில் கீழே விழுந்த இந்த காப்பை கவனிக்கவில்லை. ஆனால் இன்னேரம் காணவில்லை என்பதை உணர்ந்திருப்பார்கள். இது பல வேதங்கள் ஓதி மந்திரிச்ச காப்பு அதனால் தான் சுடுகிறது‌. இதை அங்கே அந்த பாறையின் மீது வைத்துவிடு. அதை எவரும் தொட வேண்டாமென்றும் சொல்லிவிடு.”

“அப்படியே செய்கிறேன் ஆசானே.”

“சரி சுக்கிரகுரு பதக்கம் எடுத்து வந்தாயா? எங்கே அது?”

“இதோ என் கழுத்தில் மாட்டிக் கொண்டு விட்டேன். இனி இதை தவற விடவே மாட்டேன்.”

“நல்லது. சரி நம்ம சிம்பா தவம் மேற்கொள்ள சென்று பல நாட்கள் ஆகிறதே!! தங்களில் யாரேனும் ஒருவர் சென்று பார்த்து வாருங்களேன்”

“ஆகட்டும் ஆசானே நான் இப்போதே புறப்படுகிறேன்”

“இப்போது வேண்டாம் மந்திரா நாளை விடிந்ததும் சென்று கண்டு வா. ம்…இப்போது அனைவரும் ஓய்வெடுங்கள்”

அனைவரும் சென்றதும், ஆசான் எப்படியாவது அந்த நீர்துளி பதக்கமிருக்கும் இடத்தையும் அது எவரிடம் இருக்கும் என்றும் கண்டறிய பல வழிகளை ஆராய்வதில் மூழ்கினார்.

ஊர் தலைவர் மற்ற மூன்று ஊர்களுக்கு புறா தூது அனுப்பியதற்கு… பதில் அதே புறாக்கள் மூலம் வந்து சேர்ந்தது. அதில் அவர்களும் அவர்கள் ஊரின் அந்த நாயகனை கண்டறிந்ததும் தூது அனுப்புவதாக குறிப்பிட்டிருந்தனர். அதைப் பார்த்ததும் தலைவர் தலைமை காவலரை அழைத்து வர உத்தரவிட்டார். அவர் வந்ததும்

“வணக்கம் ஊர் தலைவரே”

“தலைமை காவலரே வாருங்கள். வணக்கம். நம்ம சுவாமி சொன்னது போலவே நான் செய்ததில் மற்ற மூன்று ஊர் தலைவர்களும் நமக்கு பதில் அனுப்பியுள்ளனர். அவர்கள் அந்த நாயகன்களை தேடுதலில் இறங்கிவிட்டனர். நமது ஊரில் “வ” என்ற எழுத்தில் துவங்கும் பெயரைக் கொண்டு, சுவாதி நட்சத்திரம் துலா ராசிக்கு சொந்தக்காரனான அந்த நாயகன் யாரென்று கண்டறிந்து விட்டீரா?”

“தேடிக்கொண்டே இருக்கின்றோம் தலைவரே!! வ என்ற எழுத்தில் பெயரிருந்தால் நட்சத்திரம் வேறாகவும், நட்சத்திரமும் ராசியும் பொருந்தினால் பெயர் வேறாகவும் இருக்கிறது என்ன செய்ய? எப்படியும் இந்த வாரத்திற்குள் கண்டுப் பிடித்திடுவோம் கவலை வேண்டாம்”

“ம்… அப்படி என்றால் சரி. ஏனெனில் மற்ற மூன்று ஊர்களும் கண்டுபிடித்து விட்டு நாம் அதை செய்யத் தவறிடக்கூதடாதல்லவா அது தான் கேட்கிறேன். தாமதமும் ஆகாக்கூடாது. எப்படியாவது இந்த வாரம் கண்டறிந்திட வேண்டும் தலைமைக் காவலரே கண்டறிந்திட வேண்டும். உங்கள் ஆட்களை சற்று மும்முரமாக தேடச்சொல்லுங்கள். ஒன்று செய்தால் என்ன?”

“என்ன தலைவரே?”

“பேசாமல் நமது ஊர் மக்கள் அனைவரிடமும் ஒரு ஓலையில் அவர்கள் வீட்டிலிருக்கும் நபர்களின் பெயர்களையும் அவரவரின் நட்சத்திரங்களையும் ராசிகளையும் எழுதி நம்மிடம் தரச்சொன்னால் என்ன? நாமும் இருந்த இடத்திலிருந்தே அது யாரென்று கண்டுப்பிடித்திடலாமே!!”

“நல்ல யோசனை தான் தலைவரே ஆனால் மக்கள் ஏன் எதற்கு என்று கேள்வி எழுப்புவார்களே!!! நாங்கள் வீடுவீடாக சென்று விசாரித்தற்கே பல கேள்விகளை எழுந்தன!!”

“நம் ஊர் மக்கள் அனைவரின் பெயர் நட்ச்சத்திரத்தையும் பக்கத்து ஊரில் அண்ட சராசரத்தின் நலனுக்காக நடக்கவிருக்கும் யாகத்திற்கு அனுப்பவேண்டும் என்று கூறி கேட்டால் தராமல் இருந்திடுவார்களா என்ன?”

“தருவார்கள் என்று தான் நினைக்கிறேன்!!! செய்து பார்ப்பதில் தவறேதுமில்லை.”

“அப்படி என்றால் இன்றே நான் அதற்கான ஆணையை பிறப்பிக்கின்றேன். தாங்கள் அதை ஊர் மக்களிடம் கொண்டு சேர்த்து ஆக வேண்டியதை சீக்கிரம் செய்யுங்கள். இதோ இதை வைத்துக் கொண்டு வேலையை எளிதாக்குங்கள்”

“ஆகட்டும் தலைவரே! இப்போதே செய்து முடிக்கின்றேன்”

தலைமைக் காவலர் ஊர் தலைவரின் ஆணையை எடுத்துக் கொண்டு சென்று ஊர் தண்டோரா காரனை வரவழைத்து அதை ஊர் முழுவதும் தண்டோரா போட்டு அறிவிக்கச் சொன்னார். அவனும் தலைமைக் காவலரின் அறிவுரைப்படியே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு மக்கள் அனைவருக்கும் அறிவித்தான். மக்களுக்கு அவர்கள் பெயர்களையும் நட்சத்திரம், ராசியையும் எழுதித்தருவதற்கு அன்றைய நாள் மட்டுமே வழங்கப் பட்டது. எழுதத் தெரிந்தவர்கள் தாங்களுக்கும், எழுதத் தெரியாதவர்களுக்கும் பெயர் மற்றும் நட்சத்திரம், ராசி ஆகியவற்றை எழுதி காவலர்களிடம் கொடுத்தனர்.

கேசவனும் லட்சுமியும் அவர்கள் வீட்டிலிருந்த இருவர் பெயரையும் எழுதிக் கொடுத்தனர். ஊர் மக்கள் அனைவரிடமிருந்தும் ஓலைகளைப் பெற்றுக்கொண்டனர் காவலர்கள். அவற்றை ஊர் தலைவயிடம் அன்று இரவு கொண்டு சேர்த்தனர். அங்கே ஊர் தலைவரால் பத்துக் காவலர்கள் கொண்ட ஒரு ஆய்வுக் குழு நிறுவப்பட்டிருந்தது. அவர்களிடம் அனைத்து ஓலைகளையும் ஒப்படைக்கச் சொன்னார் ஊர் தலைவர். காவலர்களும் அதையே செய்தனர். பின் அந்த ஆய்வுக் குழு காவலர்கள் அனைத்து ஓலைகளையும் குடும்பம், தெரு என்று பிரித்து வைத்தனர்.

அனைத்து ஓலைகளையும் பிரித்து வைத்தப்பின் ஒவ்வொன்றாக எடுத்து “வ” எழுத்தில் பெயர், சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை அலச ஆரம்பித்தனர். இரவு முழுவதும் தேடல் தொடர்ந்தது. மறுநாள் காலை விடிந்தும் நடந்துக் கொண்டிருந்தது. அன்று மத்தியம் ஒரு காவலன் எழுந்து ஊர் தலைவரிடம் ஒரு ஓலையைக் கொண்டுப் போய் கொடுத்து

“ஐயா தாங்கள் கேட்டுக் கொண்டது படியே இதோ வ எழுத்தில் பெயரும், சுவாதி நட்சத்திரமும், துலாம் ராசியும் கொண்ட நபரின் குடும்ப ஓலை. இப்போது தான் என் கண்களுக்குப் புலப்பட்டது.”

“பலே காவலரே பலே!! நீங்கள் அனைவரும் சென்று மத்திய விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன் அதை உண்டு, தங்களுக்கான பரிசைப் பெற்றுக் கொண்டு, பின் நன்றாக ஓய்வெடுங்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. சென்றுவாருங்கள்”

“நன்றி ஐய்யா. நாங்கள் விடைப்பெற்றுக் கொள்கிறோம்”

“ஆகட்டும்”

தனது காவலர்கள் என்ன செய்கிறார்கள்? அந்த நபரைக் கண்டுப் பிடித்து விட்டார்களா இல்லையா என்ற விவரத்தைத் தெரிந்துக் கொள்ள ஊர் தலைவர் வீட்டிற்கு வந்தார் தலைமைக் காவலர். அவரின் வருகையைக் கண்டதும்

“வாருங்கள் தலைமை காவலரே வாருங்கள். நமது தேடலுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்று நினைக்கிறேன். நானே தங்களை வரச்சொல்லி ஆள் அனுப்ப இருந்தேன். அதற்குள் நீங்களே வந்துவிட்டீர்கள்.”

“அப்படியா ஊர் தலைவரே. ஆமாம் எனக்கும் வேலை ஏதும் ஓடவில்லை இவர்கள் அந்த நபரை கண்டுப்பிடித்துவிட்டார்களா இல்லை இன்னும் தேடல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறதா என்பதைப் பற்றித் தெரிந்துக் கொள்ளவே நான் இங்கு வந்தேன். அந்த நபர் பற்றிய ஓலை கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. யார் அந்த நபர் தலைவரே?”

“நான் இன்னும் திறந்துப் படிக்கவில்லை தலைமைக் காவலரே. இதோ அந்த நபர் யாரென்று எழுதப்பட்ட ஓலை என் கையில் உள்ளது. நாம் இருவருமாக யார் நமது புவியைக் காக்க வந்த நம்மூர் நாயகன் என்று படித்துத் தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.”

“இதோ வருகிறேன் தலைவரே. நான் படிக்கட்டுமா!! இல்லை தாங்களே வாசிக்கிறீர்களா?”

“நானே படிக்கின்றேன்”

“சரி தலைவரே. சீக்கிரம் படியுங்கள்”

“வ என்ற எழுத்தில் பெயர் என்னவென்றால் வஜ்ரகேசவன்.. அது சரி, அடுத்தது நட்சத்திரம் சுவாதி …அதுவும் சரியே, அடுத்தது ராசி துலாம்…அதுவும் சரி தான். அப்போ நாம் தேடும் நபர் இவனே தான். ம்….இருங்கள் ….இது என்ன இவன் குடும்பம்.!!!!!”

“எல்லாம் சரியாக இருக்கிறதே தலைவரே அப்புறம் என்ன ஆயிற்று?”

“நீங்களே பாருங்கள் அவன் குடும்ப விவரத்தை அப்போது தான் உங்களுக்கு எனது மனக்குழப்பம் புரியும்”

“அட ஆமாம் !!! அவனா இவன்!!!! எப்படி? அவன் பெயர் இதுவா? எதற்கு நாம் குழப்பிக்கொண்டிருக்க வேண்டும் தலைவரே பேசாமல் ஒரு காவலனை அனுப்பி அவர்களை அழைத்து வரச்சொல்லி விடலாம். அவர்கள் வந்தால் எல்லாம் தெளிவாகிவிடும்.”

“அதுவும் சரிதான். யார் அங்கே”

தொடரும்…..Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s