அத்தியாயம் 27: சமாளிப்பு

மதிநாகசுரன் கஷிக்கு சென்று அவனின் பரம்பரை பதக்கமான சுக்கிரகுரு பதக்கத்தை எடுத்து சற்று நேரம் உற்றுப் பார்த்தான். அந்த பதக்கத்தை தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு அதை தன் கையில் பிடித்தப்படி

“உன் அருமை தெரியாது இத்துனை காலம் கழுத்தில் மாட்டியிருந்தேன் என்னை மன்னித்துக்கொள். இனி என் கழுத்திலிருந்து ஒருபோதும் உன்னை கீழிறக்க மாட்டேன். இது என் தந்தை மீது ஆணை”

என்று கூறிக்கொண்டே தரையில் ஏதோ மின்னுவது போல் இருந்ததை கவனித்தான். அது என்னவென்று தெரிந்துக் கொள்ள தன் கையினால் எடுத்து அருகில் வைத்துப் பார்த்தான். சற்று நேரம் பிடித்துப் பார்த்ததிலேயே அவன் கரம் சுட்டது. சூடு தாங்காமல் சட்டென அதை கீழே போட்டான். அவன் கீழே போட்டது கேசவன் கையில் அணிந்திருந்த காப்பு ஆகும். அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று எண்ணி அதை தன் கரங்களால் எடுக்காமல் அங்கேயே அதன் அருகிலிருந்த ஒரு கம்பு கொண்டு தூக்கிப் பார்த்தான். ஒன்றும் நேரவில்லை. உடனே அதை தன்னிடமிருந்த மரத்தாலான கத்தி உறையிலிருந்து கத்தியை எடுத்து வீசிவிட்டு அதனுள் அந்த காப்பை கம்பால் எடுத்துப் போட்டு அந்த உறையின் முடிச்சை இறுக்கிவிட்டு அதனை தன் இடுப்பு மரப்பட்டையில் மாட்டிக்கொண்டு தன்னவர்கள் இருக்கும் இடம் நோக்கி விரைந்தான் மதிநாகசுரன்.

மாயாபுரிக்குள் செல்ல நேரம் பார்த்திருந்த கேசவனும் கோதகனும் இரவு காவலுக்காக பகல் காவலர்கள் மாறிய சரியான நேரத்தில் ஊருக்குள் சென்று விட்டனர். நேராக தங்கள் வீட்டுக்கு சென்று வாயிற் கதவை தட்டினான் கேசவன். கதவைத் திறந்தாள் லட்சுமி. தலையில் துண்டு போட்டுக்கொண்டு முகத்தை பாதி மறைத்திருந்ததால் லட்சுமி அவர்களிடம்

“யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?”

என்று கேட்டுக்கொண்டிருக்கையில் இருவரும் லட்சுமியின் இடது வலது புறமாக வீட்டினுள் சென்றனர். அதைப் பார்த்த லட்சுமி அவர்கள் பின்னாலேயே கத்திக்கொண்டு சென்றாள். அப்போது கோதகன் தன் அக்காள் வாயை தன் கைகளால் மூடினான். கேசவன் கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்து லட்சுமியிடம் தன் முகத்தைக் காட்டினான். அதற்கு பின் கோதகன்… லட்சுமி வாயை மூடியிருந்த தன் கைகளை அகற்றினான். கேசவனையும் கோதகனையும் பார்த்ததில் லட்சுமி அழ ஆரம்பித்தாள். உடனே கேசவன் அவளிடம்

“ஏய் எதுக்கு அழற இப்போ?”

“அக்கா ஏன் அழற?”

என்று இருவரும் மாறி மாறி கேட்டுக்கொணாடிருக்கும்போது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. கேசவனை இழுத்துக்கொண்டு பின் புறம் சென்றான் கோதகன். லட்சுமி தன் கண்களை துடைத்துக்கொண்டே பின் புறம் கதவை திரும்பி பார்த்துக் கொண்டே வாசற் கதவை திறக்கச் சென்றாள்.

கேசவனை இழுத்து வந்த கோதகனிடம் கேசவன்

“டேய் ஏன்டா இப்படி நம்ம வீட்டிலேயே ஒளிஞ்சுக்க வைக்கிற? பாவம் டா உன் அக்கா பயந்து போயிருக்கான்னு நினைக்கிறேன்!! நான் போய் யாரு என்னன்னு பார்த்துவிட்டு வந்திடறேன்”

“ஐயோ மாமா!!! இங்கே வாங்க!! காரியத்தையே கெடுத்திடுவீங்க போல!!! பேசாம இங்கேயே கொஞ்ச நேரம் இருங்க”

என்று முன்னே செல்லவிருந்த கேசவனை பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அமைதியாக இருக்கும் படி சொல்லி நிற்க செய்தான் கோதகன். பின் மெல்ல தன் அக்கா என்ன செய்கிறாள் என்பதைப் பார்க்க மெதுவாக தலையை வெளியே நீட்டி வாசலைப் பார்த்தான்.

லட்சுமி தயங்கி தயங்கி சென்று கதவருகே சென்றதும்.

“யாரது?”

“நான் தான் சுந்தரி. கதவைத் திற லட்சுமி. ஏதோ நீ கத்தினா மாதிரி எங்க வீடு வரை சத்தம் கேட்டுச்சு அதுதான் என்னன்னு பார்க்க வந்தேன்.”

என்றதும் லட்சுமி கதவைத் திறந்து

“வா வா சுந்தரி உள்ளே வா”

“என்னாச்சு லட்சுமி? ஏன் உன் முகம் எதையோ பார்த்து பயந்தா மாதிரி இருக்கு?”

“அது ஒண்ணுமில்லை சுந்தரி எல்லாம் என் வீட்டு ஆண்களை பிடிச்சிருக்கும் பாழாப் போன வியாதிதான்.”

“ஏன் அவங்க பாட்டுக்கு படுத்தப் படுக்கையா தானே இருக்காங்க!!! அதுனால என்ன?”

“அது தான் பிரச்சினையே சுந்தரி. இப்போ கொஞ்சம் முன்னாடி தான் என் தம்பி கோதகனுக்கு சுய நினைவு திரும்பிச்சு. ஏதோ கத்தினான்… நான் ஓடிப்போய் பார்க்கறதுக்குள்ள மறுபடியும் மயக்கமாயிட்டான். அவன் கத்தினது தான் உன் வீடு வரை கேட்டிருக்கும்ன்னு நினைக்கிறேன்”

“அப்படியா சொல்லுற!”

“அப்படித்தான் சுந்தரி!! சரி நான் போய் அவங்க ரெண்டு பேருக்கும் வெண்ணீறு ஒத்தடம் கொத்துட்டு போய் தூங்கறேன். நீயும் போய் தூங்கு சுந்தரி”

“ஆனா எனக்கு உன் குரல் இல்லையா கேட்டுது!!! சரி சரி நான் ஏதாவது உதவணுமா?”

“வேண்டாம் வேண்டாம் இது வழக்கமான என் வேலைகள் தானே !!! நானே பார்த்துக்கறேன் சரியா. நீ போம்மா உன் பொண்ணு தேடப்போறா உன்னை!!”

என்று சமாளித்து சுந்தரியை அவள் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள் லட்சுமி. சுந்தரி அங்கிருந்து ஒரு சந்தேகத்துடனே லட்சுமியை திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே தன் வீட்டினுள் சென்றாள். அவள் தன் கண்களிலிருந்து மறைந்ததும் லட்சுமி கதவை சாத்திவிட்டு வேகமாக பின் புறம் சென்று பார்த்தாள். ஆனால் அங்கே கேசவனும் கோதகனும் இருக்கவில்லை. உடனே தனக்குத் தானே

“நான் கண்டது நிஜமா இல்லை கனவா!! இப்போ தானே அவர்களை பார்த்தேன்!! அதற்குள் எங்கு மாயமானார்கள்?”

பேசிக்கொண்டே தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். அப்போது கோதகன் ஒரு அறையிலிருந்து வெளியே வந்துக்கொண்டே தன் அக்காளைப் பார்த்து

“அக்கா அக்கா ரொம்ப கிள்ளிக்காதே வலிக்கப் போறது. நாங்க வந்துட்டோம். நீ கனவெல்லாம் காணலை”

மற்றொரு அறையிலிருந்து கேசவனும்

“ஆமாம் லட்சுமி நீ கண்டது கனவல்ல நிஜமே தான்”

என்று கூறிக் கொண்டே வந்ததும் லட்சுமி அவர்களைப் பார்த்து

“போகும்போது தான் விடியற்காலையில் கள்வனைப் போல சென்றீர்கள். வரும்போது என்னை இப்படியா பயமுறுத்துவீர்கள்?”

“நாங்கள் உன்னை பயமுறுத்தவே இல்லை. நீயாகவே பயந்துக் கொண்டால் அதற்கு நாங்களா பொறுப்பு?”

“ஆமாம் ஆமாம். இந்த ராத்திரி வேளையில் கள்வர்களைப் போல முகத்தை மறைத்துக் கொண்டு வந்து என்னைத் தள்ளிவிட்டு வீட்டினுள் சென்றால் பயப்படாமல் மகிழவா முடியும். ஆமாம் நீங்கள் போன வேலை நல்லபடியாக முடிந்ததா? கோதகா அப்பா, அம்மா, அண்ணா எல்லாரும் நலமா? நான் செய்து கொடுத்த பட்சணங்கள் எல்லாம் நன்றாக இருந்தனவா? அம்மா சாப்பிட்டு என்ன சொன்னா? அண்ணனுக்கு பிடித்த அதிரசம் கொடுத்தனுப்பினேனே அதை குடுத்தையா கோதகா இல்லை வழியில் நீயே உண்டு விட்டாயா? உங்கள் பயணம் பத்தி சொல்லுங்களேன். கேட்க ஆவலாக உள்ளேன்…வேண்டாம் இருங்கள் முதலில் உங்கள் இருவருக்கும் பலகாரம் கொண்டு வருகிறேன். அதை உண்ட பின் நிதானமாக பேசுவோம். இதோ ஒரு நொடியில் வந்து விடுகிறேன்”

என்று கூறிவிட்டு இருவருக்கும் உண்பதற்கு பலகாரம் எடுத்து வரச் சென்றாள் லட்சுமி. அந்த நேரத்தில் கேசவன் கோதகனிடம்

“உன் அக்காவிடம் எப்படி டா அங்கு நாம் கண்டதை கூறுவது? தன் குடும்பமே அழிந்து விட்டது என்றால் அவள் எப்படி தாங்குவாள்? அதை முதலில் நான் எப்படி அவளிடம் சொல்வேன்? அங்கு நாம் கண்டதையும் கேட்டதையும் அவளிடம் சொல்ல எனக்கு தைரியமில்லை கோதகா தைரியமில்லை”

“மாமா நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். அக்காவிடம் இப்போதைக்கு எந்த உண்மையையும் நாம் சொல்ல வேண்டாம். நீங்கள் உங்கள் முகத்தை இப்படி சோகமாக வைத்துக் கொள்ளாதீர்கள். சரியா மற்றதை நான் அக்காவிடம் பேசிக்கொள்கிறேன். ஆமாம் உங்க கையிலிருந்த தங்க காப்பு எங்கே காணவில்லையே!”

“என்ன”

என்று கேசவன் தன் கையைப் பார்த்தான். அவன் கையில் காப்பு இல்லாததைப் பார்த்ததும் பதட்டத்தில்

“டேய் கோதகா அங்கு உன்னுடன் போட்ட சண்டையில் எனது காப்பை எங்கோ தவற விட்டுவிட்டேன் போல தோன்றுகிறது. இப்போ என்ன செய்வேன்? கஷிக்கு எப்படி நான் மீண்டும் போவேன்? அங்கே ஆபத்து காத்திருக்கிறதே!! உன் அக்கா கண்ணில் இன்னும் படவில்லை நல்ல வேளை!!! அவள் வந்து கேட்டால் என்ன சொல்வது? கல்லு போல நிற்கிறாய்!!! ஏதாவது சொல்லு டா கோதகா!! அச்சச்சோ லட்சுமி வருகிறாளே!!”

என்று தன் வலது கையை பின்னால் மறைத்துக் கொண்டான் கேசவன். அதைப் பார்த்த கோதகன் லட்சுமி காதில் விழாதபடி மெதுவாக கேசவனிடம்

“மாமா அக்கா சாப்பிட பலகாரம் கொண்டு வந்துட்டு இருக்கா. எப்படியும் நீங்க உங்க வலது கையை வைத்து தானே சாப்பிடணும்…அப்போ தெரிய தானே போகுது!!! அப்புறம் எதற்கு இப்படி கையை பின்னால் ஒளித்துக் கொள்கிறேன் என்ற பெயரில் எங்க அப்பா குதிருக்குள் இல்லை என்பது போல காட்டிக் கொள்கிறீர்கள்!!!”

“டேய் அவ மட்டும் கண்டு பிடிச்சிட்டா அவ்வளவு தான் கேள்வி மேல கேள்வி கேட்டு குடைஞ்சு எடுத்துடுவா…அதுக்கு தான் பயப்படறேன்”

“பயம் வேண்டாம் மாமா அதையும் நானே சமாளித்துக் கொள்கிறேன்”

“உன்னால தானே தொலைந்தது… நீ தான் சமாளிக்கணும்…சரி சரி வந்துட்டா வந்துட்டா”

“என்ன மாமானும் மச்சானுமா மறுபடியும் குசுகுசுன்னு பேசிக்கறீங்க? என்ன மறுபடியும் எங்கேயாவது போகணுமா என்ன?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை லட்சுமி…சும்மா தான் பேசிக்கிட்டு இருந்தோம். இல்லடா கோதகா!!”

“ஆமாம் ஆமாம். அக்கா நீ எப்படி இங்கே நாங்கள் இல்லாததை சமாளிச்சே? ரொம்ப சிரமம் பட்டயோ”

“அதை ஏன்டா கேட்குற கோதகா!! இந்தாங்கோ ரெண்டு பேருமா முதல்ல இதை சாப்பிடுங்கோ. சாப்பிட்டுக்கிட்டே கேளுங்கோ”

“சரி சரி எங்களுக்கும் நல்ல பசிக்கறது…ம்…இந்த மாதிரி பஞ்சு போல இட்டிலியும் தக்காளி தொக்கும் சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகுது இல்லடா கோதகா”

“என்னது? ஏன்? எங்க அம்மா விதவிதமா செய்து தந்திருப்பாளே! ஏன் இப்படி சொல்லறேங்கள்”

“அது ஒண்ணுமில்லை அக்கா உன் கையால சாப்பிடறதை தான் மாமா சொல்லறார். இல்லையா மாமா?”

“ம்…ஆமா ஆமா கோதகன் சொல்வது தான் சரி. நான் அதை எண்ணித்தான் சொன்னேன்.”

“அம்மா எங்களுக்கு நேரத்துக்கு ஒரு பலகாரம்ன்னு செய்து தந்து வயிற்றை காலியா இருக்க விடவே இல்லை தெரியுமா!!”

“அது தான் எனக்கும் தெரியுமே அதுனால தானே அவர் அப்படி சொன்னதும் ஆச்சர்யபபட்டு கேட்டேன். இந்தாங்கோ இன்னும் போட்டுக்கோங்கோ…ஆமாம் உங்க கையில இருந்த காப்பு எங்கே காணமே!!”

“அட ஆமாம் காணமே!! நானே இப்போ தான் பார்க்கறேன்!! கோதகா எனக்கு ஞாபகமில்லை…எங்கேயாவது ஞாபகமறதியா வச்சுட்டேனா?”

“அட அதுவா அக்கா…அதை மாமா கழட்டி அம்மாகிட்ட காட்டினாரா அப்புறம் அண்ணன் வாங்கி பார்த்துட்டு அப்பாகிட்ட குடுத்தார். அப்பாவும் பார்த்துட்டு மாமா கிட்ட கொடுத்தார். அப்போ மாமா தான் அண்ணன்ட்ட போட்டுப் பார்க்கச் சொன்னார். அண்ணன் வேண்டாம்ன்னு தான் சொன்னார் ஆனாலும் மாமாவின் வற்புறுத்தலால் போட்டுண்டார். ஒரு நாள் பூறா போட்டுக்கச் சொல்லி மாமா சொல்ல அப்படியே மறந்துட்டு கிளம்பி வந்துட்டோம் அக்கா. என்ன மாமா இப்போ ஞாபகம் வந்ததா!!”

“ஓ!!!ஓஹோ!!”

“என்ன ஓஹோ?”

“ஆங் ஆங் ஆங் இப்போ ஞாபகம் வந்தது. ஞாபகம் வந்தது. நான் மறந்தே போயிட்டேன் பாரேன் கோதகா!!”

“நீங்க என் அண்ணன்கிட்ட போட்டுக்கச் சொல்லிக் கொடுத்தது வரை சந்தோஷம் தான் …ஆனா அதுக்காக இப்படியா மறந்துட்டு வருவேங்கள்? இனி அதை திருப்பி எடுத்து வர மறுபடியும் கஷிக்கு எப்போ போகப் போறேங்கள்?”

“மறுபடியும் கஷிக்கா நானா!!!!!!!!!!!!”

தொடரும்…….


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s