அத்தியாயம் 25: சுக்கிராச்சாரியாரும் சூட்சமமும்!

நாகத்தின் நாக்கு வெட்டுப்பட்டு வீழ்ந்த இடத்திலிருந்து வெளி வந்த உருவம் தரையிலிருந்து வான் வரை உயர்ந்து நின்றது. அந்த உருவம் மெல்ல கேசவன், கோதகன் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது. ஆனால் அவர்களுக்கு அது யாரென்று அடையாளம் தெரியாததால் பயத்தில் உறைந்து நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்து

“யார் இதை செய்தது? ஏன்? எதற்காக?”

என்று அந்த உருவம் கேட்டுக்கொண்டே இருவரையும் பார்த்தது. வெள்ளை நிற ஆடையில், நீண்ட வெண்ணிற முடி, தாடியுடன், வானுயர்ந்து நின்ற ரிஷி போன்ற அந்த உருவத்தைப் பார்த்த கோதகன்

“யார் நீ…நீங்கள்?”

“நான் தான் அசுரர்களின் குரு. எனது பெயர் சுக்கிராசாரியார்.”

“வ…வ…வணக்கம் குருவே”

கேசவனும், கோதகனும் நடுங்கிக்கொண்டே சொன்னார்கள். அதை ஏற்றுக் கொண்ட சுக்கிராச்சாரியார்

“சரி நீங்கள் இருவரும் யார்? எதற்கு என்னை அழைத்துள்ளீர்கள்? உங்களைப் பார்த்தால் அசுரர்கள் போலில்லையே!!”

“அச்சசோ!!! நாங்கள் அசுரர்கள் இல்லை”

“நாங்கள் மானிடர்கள்”

என்றனர் இருவரும்.

“ம்… இருக்கட்டும் இருக்கட்டும். எப்படி உங்களுக்கு இந்த பதக்கம் கிடைத்தது?”

சுக்கிராச்சாரியார் இந்த கேள்வியை கேட்டதும் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் பின் கேசவன்…

“இது எங்கள் ஊர் எல்லையிக்கு சற்றே வெளியே இருந்த மரத்தின் கிளையில் மாட்டியிருந்தது. அதை இதோ இந்த கோதகன் தான் தன்னுடன் எடுத்து வந்து விட்டான். மன்னித்துவிடுங்கள்”

“ம்…ம்…அது போகட்டும் இந்த பதக்கத்தின் சூட்சுமம் உங்களுக்கு எப்படி தெரியவந்தது?”

“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது சுவாமி. கோதகன் அதை வேண்டுமென்றான் நான் அது வேண்டாம் என்றேன். எங்களுக்குள் நடந்த கைகலப்பில் எங்களுக்கே தெரியாமல் ஏதோ செய்து விட்டோம். தாங்களும் வந்து விட்டீர்கள்”

“காரணமின்றி எந்த காரியங்களும் நடப்பதில்லை”

“தங்கள் பெயரை தெரிந்துக் கொண்டோம். தங்களைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் சுவாமி.”

“என்னை பற்றி சொல்வதென்றால்… சப்தரிசிகளுள் ஒருவரும், பிரம்மதேவரால் தன் படைக்கும் தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப்பட்ட பிரஜாபதியில் ஒருவரும், அவரது மானசபுத்திரராகவும் கருதப்படும் மகரிஷி பிருகு முனிவருக்கும், தக்க்ஷனின் மகளான கியாதிக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவன் தான் நான் சுக்ரன் என்கிற சுக்கிராச்சாரியார்.”

“ஓ!! அப்படியா. நமஸ்காரம் முனிவரே. தங்களது கண்ணுக்கு என்ன ஆயிற்று?”

“அது அந்த விஷ்ணுவின் வேலை. அவரையன்றி வேறு யார் இது போல் செய்வார்கள்”

“தாங்….கள்….சொல்வது மஹாவிஷ்ணுவையா?”

“ஆமாம் அவரையே தான் சொல்கிறேன். உங்களுக்கு வேண்டுமானால் அவர் மஹா….விஷ்ணுவாக இருக்கலாம் ஆனால் எனக்கு ……ம்…ம்..”

“தாங்கள் ஏன் அந்த பரந்தாமன் மீது கோபமாக உள்ளீர்கள்? அவர் நம்மை எல்லாம் காக்கும் கடவுளாயிற்றே!! அவருக்கும் தங்கள் கண் இவ்வாறு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்”

“நான் முன்னதாகவே சொன்னது போல அசுரர்களின் குரு ஆவேன். ஒரு முறை அசுரன் மஹாபலியிடம் அந்த விஷ்ணு வாமனன் வேடம் தரித்து மூணடி நிலம் வேண்டும் என்று வந்திருந்தார். வந்தவர் விபரீதமாக கேட்கப் போகிறார் என்பதை உணர்ந்த நான் பலியிடம் கொடுக்கவேண்டாமென்று சொன்னேன் ஆனால் அவனோ விஷ்ணு பக்தன் ஆயிற்றே வந்திருப்பது விஷ்ணு என்பதை நான் சொன்னதும் என் பேச்சைக் கேட்காமல் நிலத்தை தானம் செய்யும் பொருட்டு தாரை வார்த்துக் கொடுப்பதற்காக கிண்டிச் செம்பை எடுத்தான். என் அறிவுரையை ஏற்காமல் பலி தாரை வார்த்துக் கொடுத்து ஏமாந்து விடப் போகிறானே என்று எண்ணி நான் வண்டு உருவெடுத்து செம்பினுள் நுழைந்து நீர்த்துவாரத்தை அடைத்துக் கொண்டேன். செம்பிலிருந்து நீர் வரவில்லை. இதை அறிந்த விஷ்ணு அறுகம்புல் ஒன்றினால் துவாரத்தில் குத்தினார். அந்த அறுகம்புல் துவாரத்தை அடைத்துக் கொண்டிருந்த என் கண்களில் ஒன்றைக் குருடாக்கியது. அதனால் தான் என் கண் இப்படி உள்ளது”

“மன்னிக்கவும் ….ஆனால் தாங்கள் செய்ததும் தவறல்லவா!! பிறர், தானம் கொடுப்பதை தடுக்கலாகாதல்லவா!!”

“ம்…ஹும்…. அவர்மீது கொண்டுள்ள கோபத்திற்கு காரணம் அது மட்டுமல்ல…”

“வேறு என்ன காரணம் என்பதை நாங்கள் தெரிந்துக் கொள்ளலாமா?”

“அவரால் தான் நான் என் தாயை இழந்தேன். அந்த தேவர்களுக்காகவும் அவர்களை காப்பாற்ற வேண்டி அந்த விஷ்ணு….. உதவி கேட்டு வந்த அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுத்த என் தாயின் தலையை சுதர்சன சக்கிரத்தால் துண்டித்து துடிதுடிக்க செய்தார். இது போதாதா என் கோபத்திற்கான காரணம்.”

“ஓ!!! சரி சரி சரி”

“என்ன நான் கதையா சொல்கிறேன். ம்…சரி இப்போது என்னை ஏன் அழைத்தீர்கள்? இது அசுர குல தலைவனிடமிருக்கும் பதக்கச் சங்கிலி ஆயிற்றே!! அது எப்படி உங்க ஊர் எல்லைக்கு வந்தது? கடைசியாக இந்த சங்கிலி தலைவன் பலியிடம் அல்லவா இருந்தது”

“அது எவரிடம் இருந்தது என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சுவாமி. எங்களுக்கு எங்க ஊர் எல்லையில் தான் கிடைத்தது.”

“அப்படியென்றால் அசுரர்களுக்கு ஏதோ நேர்ந்திருக்க வேண்டும்.”

என கூறிக்கொண்டே ஞானதிருஷ்டியில் நடந்தவைகளை கண்டறிந்தார். பின் இருவரையும் பார்த்து…

“ம்…. என் சீடர்களாகிய அசுரர்களிடம் அமிர்தத்தில் பங்கு தருவதாக கூறி அவர்களை கொண்டு பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தனர் தேவர்கள். அமிர்தம் கிட்டியதும் உங்கள் மஹாவிஷ்ணு அசுரர்களை ஏமாற்றி அதையும் தேவர்களுக்கே வழங்கியுள்ளார். அதனால் அசுர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர் தேவர்கள். ஆகையால் தான் இவ்வனைத்தும் நடந்துள்ளது….ம்!!”

“சுவாமி என்ன நடந்துள்ளது? என் அப்பா, அம்மா, அண்ணன், நண்பர்கள் என எங்கள் ஊர் மக்கள் எவரையுமே காணவில்லை. ஊரே இருண்டு கிடக்கிறது. கஷியின் மக்களுக்கு என்ன ஆயிற்று என்று தாங்கள் தான் கூறவேண்டும்”

“நீங்கள் வணங்கும் உங்கள் மாஹா…விஷ்ணுவிடமே கேட்க வேண்டியது தானே? ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?”

“சுவாமி என்ன சொல்கிறீர்கள். நாங்கள் எப்படி பகவானிடம் கேட்பது?”

“ஏனென்றால் இங்கு நடந்தவை அனைத்திற்கும் அவர் தான் காரணம். அசுரர் குலத்தையே அழிக்க நினைத்து அதில் பத்தை தவறவிட்டு, அலட்சியமாக எகத்தாளம் செய்த இந்திரனின் அழிவுக்காக இவை அனைத்தும் நடக்கிறது.”

“இந்திரன்….என்றால் தாங்கள் கூற வருவது தேவர்களின் அதிபதி தேவேந்திரனா?”

“ஆம் அவனே தான். அமிர்தம் தருவதாக ஏமாற்றியதோடு நிற்காமல் அசுரர் குலத்தையே அழிக்க நினைத்த அந்த பாதகனுக்கு தண்டனை வழங்கவே இவையனைத்தும் நடந்துக் கொண்டிருக்கிறது.”

“இந்திரனை பழிவாங்க வேண்டுமென்றால் அவருடன் போர் புரியட்டுமே!!! அதற்காக ஏன் எங்க ஊர் மக்கள் காணாமல் போக வேண்டும். ஒன்றும் புரியவில்லையே சுவாமி”

“கோதகா யுதத்தில் நல்லவரும் சிலர் இறந்து போக வேண்டி வருமில்லையா!!”

“சுவாமி அப்படியென்றால் எங்கள் ஊர் மக்கள் மாண்டு விட்டனரா? ஆனால் மாண்டதற்கான எந்த வித அறிகுறிகளும் இங்கே இல்லையே”

“மாண்டனர் மீண்டும் உயிர்ப்பித்தனர்.”

“அப்போ எங்கே அவர்கள்?”

“அவர்கள் அனைவரும் இப்போது என் சீடன் பலியின் மகனான மதிநாகசுரனின் போர் படையில் இணைக்கப்பட்டுள்ளனர்”

“என்னது போர் படையிலா? என் அப்பா, அம்மா வயதானவர்களாயிற்றே!”

“வயதானாலும் பேராசை விடவில்லையே!”

“தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை சுவாமி. தயவுசெய்து என்னதான் நடந்தது அல்லது நடக்கிறது என்பதை விரிவாக எங்களுக்கு சொல்லுங்களேன்”

என்று கோதகன் பதற்றத்துடன் கேட்டதும் கேசவன், கோதகன் முன் தெரிந்தது அந்த பரமபதம் அரண்மனை. அதைப் பார்த்ததும் கோதகன்

“இது…. இது…..இந்த அரண்மனை…. ஏதோ விளையாட்டை விளையாட இதனுள் வரச்சொல்லி ஊர்மக்களை அழைத்தார்கள். அதுதானே இது”

“அதே தான் ஆனால் விளையாட்டை மட்டும் சொல்லி அழைத்தனரா இல்லை…..”

“இல்லை இந்த அரண்மனையில் அந்த விளையாட்டை விளையாடினாள் பற்பல பரிசுகளும், பொன்னும், பொருளும் தருவதாகவும் சொன்னார்கள்.”

“சொன்னார்களா….. நீ ஏன் அந்த அரண்மனைக்கு செல்லாமல் உன் அக்கா வீட்டுக்கு சென்றாய்”

“எனக்கு அக்காவை பார்க்க வேண்டுமென்று தோன்றியதால் சென்றேன். அதுவுமில்லாமல் என் அண்ணன் அங்கு போய் விளையாடுவதாக சொன்னார்”

“உன்னை உன்னிடமிருக்கும் அக்காள் பாசம் தான் காப்பாற்றியுள்ளது. உன் குடும்பத்தில் அனைவரும் இந்த பரமபதம் அரண்மனைக்கு பலியாகி இன்று அசுரர்களின் போர்ப் படையில் சாம்பீனிகளாக உள்ளனர்”

“சாம்பீனிகளா? அப்படியென்றால்?”

“கேசவா…. சாம்பீனி என்றால் மனிதனுமின்றி, மிருகமுமின்றி வாழும் ஒரு ஜந்து. அவைகளை உருவாக்கியவர்களின் கட்டளைகளை ஏற்று நடக்கக்கூடியவை. சமயத்தில் மனிதர்களையே உணவாகவும் அவைகள் உட்கொள்ளும். அது ஒரு நரக வாழ்க்கை”

“ஐயோ இது என்ன சோதனை!!! அப்போ எங்கள் ஊர் மக்கள் எல்லோரும் சாம்பீனிகளாகி விட்டார்களா?”

“உங்கள் ஊர் மக்கள் மட்டுமல்ல கோதகா….இன்னும் பல ஊர்களின் மக்கள் மதிநாகசுரனின் அடிமைகளான சாம்பீனிகளாகியுள்ளனர்.”

“அப்போது ஏன் மாயாபுரி மக்களை மாற்றவில்லை”

“அந்த ஊர் தலைவன் சிறந்தவனாவான். நல்லொழுக்கங்கள் நிறைந்தவனாவான். மாயாபுரியையும் நெருங்கியுள்ளனர் அசுரர்கள் ஆனால் உள்ளே நுழைய முடியாது நீர்த்துளி பதக்கம் அந்த ஊர் மக்களை காப்பாற்றியுள்ளது”

“நீர்த்துளி பதக்கமா? சரி அது ஏன் மாயாபுரியில் மட்டுமுள்ளது?”

“அது மாயாபுரியில் மட்டுமல்லாது இன்னும் மூன்று ஊர்களான த்ரிகான்தக், அவந்தி, பிரயாகாவிலும் உள்ளது. ஆகையால் தான் அசுரர்களால் அந்த நான்கு ஊர்களையும் நெருங்க முடியவில்லை. இந்த நான்கு ஊர்களைத் தவிர மற்ற அனைத்து ஊர்களையும் அதன் மக்களையும் தங்கள் வசம் சாம்பீனிகளாக வைத்துள்ளனர் அசுரர்கள்.”

“இதிலிருந்து தப்பிப்பது எப்படி சுவாமி?”

“அதற்கான ஏற்பாடுகளை மாயாபுரி தலைவன் மேற்கொண்டுள்ளான்.”

“அப்படியா? அப்போ அவருக்கு எல்லாமும் தெரியுமா என்ன?”

“எல்லாமெல்லாம் தெரியாது. உங்களுக்கு சிலவும் அவர்களுக்கு சிலவுமாக தான் தெரியும்”

“சரி இப்போது அந்த அசுரர்கள் எங்கே இருக்கிறார்கள்? எங்களை என்ன செய்யப் போகிறார்கள்?”

“அவர்கள் நிச்சயம் வருவார்கள்”

“எங்களை அவர்களிடமிருந்து தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும் சுவாமி”

“என் சொல்லுக்கெல்லாம் அடங்கமாட்டார்கள்… ஏனெனில் அவர்களின் வலி வேதனை அவ்வளவு. அந்த வேதனையில் இந்த சங்கிலியின் முக்கியத்துவம் அறிந்தும் தவறவிட்டிருக்கிறார்கள் என்றால் நீங்களே யூகித்துக் கொள்ளுங்களேன். நீங்கள் இங்கு வெகு நேரம் இருக்க வேண்டாம். கோதகா நீ நினைத்தால் ஒரு சமயம் சாத்தியமாகலாம்”

“என்னவென்று சொல்லுங்கள் சுவாமி நான் செய்கிறேன்”

“ம்….உங்கள் ஊரில் உள்ள அந்த நீர்த்துளி பதக்கத்தை எடுத்துக் கொண்டு இங்கே வந்து விடு …மற்றவை தானாக நடக்கும்”

என்று கூறியதும் மறைந்தார் சுக்கிராச்சாரியார். கேசவனும், கோதகனும் அங்கும் இங்குமாக தேடினார்கள். ஆனால் இருவராலும் அவரைக் காண முடியவில்லை. அந்த பதக்கச் சங்கிலியை மீண்டும் முதலில் செய்தது போல அவரை வரவழைப்பதற்காக செய்துப் பார்த்தனர். அவர் வரவில்லை. வேறு வழியின்றி அந்த சங்கிலியை கீழே போட்டுவிட்டு மாயாபுரியை நோக்கி நடக்கலானார்கள். அப்போது கோதகன் கேசவனிடம்

“மாமா நாம ஊருக்குள்ள போனதும் முதல்ல அந்த நீர்த்துளி பதக்கத்தை ஊர்த் தலைவரிடமிருந்து எடுத்துகிட்டு கஷி வரணும்”

“கோதகா அவசரம் வேண்டாம். அந்த சுவாமி சொன்னதை யோசித்துப் பார்!”

“என்னத்தை யோசிக்கணும்?”

“காரணமின்றி எந்த காரியமும் நடப்பதில்லைன்னு சொன்னார் இல்லையா”

“ஆமாம் மாமா அதுக்கு என்ன இப்போ?”

“அப்படிப் பார்த்தா அவர் வந்ததும் நம்மளை அந்த நீர்த்துளி பதக்கத்தை எடுத்துத் தர வைப்பதற்காகவா?”

“அப்படியே இருந்தாலும் என்ன மாமா! அதுனால நம்மளுக்கு நல்லது தானே நடக்க போகிறது”

“என்ன பேசுற கோதகா? அதுதான் அந்த அசுரர்களை நம்ம ஊருக்குள் வரவிடாமல் தடுத்திருக்கு அப்போ அதைக் கொண்டு வந்து இவர்கிட்ட கொடுத்தா மாயாபுரியையும் அந்த அசுரர்கள் அழிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? அதை நீ யோசிச்சயா?”

“மாமா!! மாமா!!! நீங்க ஏன் தேவையில்லாததை எல்லம் யோசிக்கிறீங்க? உங்களுக்கு பிடிக்கலையா விட்டுவிடுங்கள். நான் அதை எடுத்தே வந்து எங்கள் கஷியை மீட்கப் போகிறேன்.”

அசுரர்கள் பதக்கத்தை மாயாபுரியில் விட்டத்தின் பலன் மெல்ல கோதகன் மூலமாக கிடைக்கவிருக்கிறதா? இல்லையா!

காரணமின்றி எந்த காரியமும் இவ்வுலகில் நடப்பதில்லை. இவற்றை எல்லாம் நூல் கொண்டு ஆட்டிவிப்பவர் பரந்தாமனே. ஏன்? எதற்கு?

தொடரும்…..Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s