அத்தியாயம் 24: பதக்கம் சங்கிலி பயமானது

“அப்படி என்னத்தை ரகசியமா பேசிக்கிட்டு இருந்தீங்க ரெண்டு பேரும். என்னன்னு சொல்லுங்களேன்.”

“அது ஒண்ணுமில்லை லட்சுமி. நாளைக்கு காலையில சீக்கிரம் எழுந்து வெளியே போகணும் அது பத்தி தான் பேசிகிட்டு இருந்தோம்.”

“எங்க போகணும்?”

“சும்மா நம்ம கஷி வரைக்கும் போயிட்டு வரலாமேன்னு”

“ஏங்க!! என்ன பேசறீங்க? நம்ம ஊர் தலைவர் தான் யாரும் எங்கேயும் போகக்கூடாதுன்னு சொல்லிருக்காரே…அதை மீறி போக போறீங்களா? வேண்டாங்க !!”

“என்ன சொல்லுற லட்சுமி? அவர் சொல்லிட்டா எப்படி நாம நம்ம சொந்தக்காரர்களை பார்க்காம இருக்க முடியும்?”

“ஓ!! அப்படின்னா நானும் உங்க கூட வரட்டுமா?”

“அச்சச்சோ!!! நாங்களே காவலர்களை மீறி போக போறோம் இதுல நீ வேறயா?”

“என்னங்க எனக்கும் என் அப்பா அம்மா கூடப் பொறந்தவங்களை எல்லாம் பார்க்கணும்னு இருக்காதா?”

“இருக்கலாம் லட்சுமி தப்பே இல்ல ஆனா அதுக்கான நேரம் இது இல்லை மா. மொதல்ல நாங்க போயிட்டு வர்றோம் அதுக்கப்புறம் உன்னை அழைச்சுட்டு போறேன் சரியா.”

“சரிங்க. நீங்க பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க. ஊர் தலைவர் கட்டளையை மீறி போக போறீங்க ஜாக்கிரதையா இருந்துக்கோங்க”

“சரி சரி அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம். இன்னொரு முக்கியமான விஷயம்”

“என்ன அது?”

“நாங்க கஷிக்கு போயிருக்கோம்ன்னு யார்கிட்டேயும் நீ சொல்லக் கூடாது. சரியா?”

“ஏன் சொல்லக் கூடாது? உங்களை விசாரிச்சிட்டு யாராவது வந்தாங்கன்னா நான் என்னன்னு சொல்லுவது?”

“நாங்களே தலைவர் கட்டளையை மீறி போக போறோம் இதுல நீ எல்லாகிட்டேயும் சொன்னேனா என்ன ஆகும்ன்னு கொஞ்சம் யோசிச்சுப்பார். அப்படி என்னையோ இல்லை கோதகனையோ யாராவது விசாரிச்சிட்டு வந்தாங்கன்னா எங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி அனுப்பிடு என்ன புரிஞ்சுதா?”

“ம்.. புரிஞ்சுது. இதுனால உங்களுக்கு எந்த பாதிப்பும் வந்திடாதில்ல?”

“நாங்க திரும்பி வரவரைக்கும் நீ உன் வாயைத் திறந்து எதுவும் சொல்லாம இருந்தீன்னா எங்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாம பத்திரமா போண வழியே வந்திடுவோம்.”

“சரி சரி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். காலையில எத்தனை மணிக்கு கிளம்பணும்?”

“ஆறு மணிக்கெல்லாம் கிளம்பணும். பார்த்தையா உன் கூட பேசிட்டு இருந்ததுல நேரத்தை கவனிக்கலை. சரி படுப்போமா. இப்போ தூங்கினா தான் காலையில கிளம்ப முடியும்.”

“சரி சரி படுத்து தூங்குங்க.”

இருவரும் படுத்துறங்கினர். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கஷிக்கு செல்ல புறப்பட்டனர் கோதகனும் கேசவனும். அவர்களுக்கு வழியில் சாப்பிடுவதற்கு பலகாரங்களை செய்து கொடுத்தாள் லட்சுமி. மேலும் தன் சொந்தங்களுக்கென்று தனியாக ஒரு தூக்கில் தான் செய்த பலகாரங்களை கட்டியும் கொடுத்தனுப்பினாள். கோதகனும் கேசவனும் அவற்றை எடுத்துக் கொண்டு லட்சுமியிடம் விடைப் பெற்று கஷிக்கு பயணம் மேற்கொண்டனர். அவர்கள் இருவரும் ஐந்தரை மணிக்கெல்லாம் எல்லையை சென்றடைந்தனர். ஆறு மணிக்கு தான் காவலர்கள் மாறுவார்கள் என்று அதுவரை அங்கிருந்த புதருக்குள் ஒளிந்துக் கொண்டு காத்திருந்தனர்.

காத்திருந்த போது கோதகன் அந்த புதரின் அருகே இருந்த மரத்தின் கிளையில் விசித்திரமான பதக்கம் கொண்ட சங்கிலி மாட்டியிருப்பதைப் பார்த்தான். மெதுவாக கேசவனை அழைத்து

“மாமா அங்கே பாருங்கள். அந்த பதக்கம் வித்தியாசமாக இருக்கிறது”

“அட ஆமாம் கோதகா. அது என்ன அப்படி இருக்கு!!! அதை யாரு மரத்துல மாட்டியிருக்காங்க? ஏன் மட்டியிருக்காங்க?”

“மாமா அதை எடுத்துக்கலாமா?”

“அதை எதுக்கு எடுத்துக்கணும் கோதகா? அதைப் பார்த்தாலே ஒரு மாதிரி பயமா இருக்கு. அதுவுமில்லாம அதை எல்லைக்கு சற்று வெளியே உள்ள மரக்கிளையில் மாட்டி வைத்திருக்கிறார்கள் என்றால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும். அதை நாம் எடுத்து அதனால் நமக்கேதாவது நேர்ந்தால்!!! வேண்டாம் கோதகா வேண்டாம். நாம் வந்த வேலையை மட்டும் பார்ப்போம்”

என்று பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை இருவருக்கும். அந்த பதக்கம் கோதகனின் கவனத்தை ஈர்த்தது. அரைமணி நேரத்தில் காவலர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அந்த சரியான நேரத்தில் இருவரும் புதரிலிருந்து வெளியே வந்து அங்கிருந்து அடுத்த காவலர்கள் வருவதற்குள் கஷியை நோக்கி வேகவேகமாக ஓடலானார்கள். அவர்கள் ஓடுவதை தூரத்திலிருந்து எல்லைக்கு வந்துக் கொண்டிருந்த காவலன் ராமன் பார்த்துவிட்டு ஏதோ தங்களை நோக்கி ஓடி வருவதாக தவறாக எண்ணி மற்ற காவலர்களிடமும் கூறி தயாராக இருக்கச் சொன்னான். ஆனால் ஒன்றுமே அவர்களின் எல்லைக்கு வரவில்லை என்றதும் அனைத்து காவலர்களும் ராமனை முறைத்துவிட்டு ஏளனம் செய்து அவரவர் வேலையில் மூழ்கினர். ராமன் தன் மனதிற்குள்

“நாம் நிச்சயம் எதையோ பார்த்தோம் ஆனால் அது என்னவாக இருக்கும்? அது ஏன் அவ்வளவு வேகமாக ஓடிவந்தது கிட்ட வராமல் போணது? நாம் சொன்னது பொய்யாக போணதே!!!”

என்று குழம்பிக் கொண்டிருந்தான். அவனிடம் மற்ற காவலர்கள்

“டேய் ராமா என்ன ஆழ்ந்த சிந்தனையில இருக்க போல? போதும்டா இனி உன் கதையை நாங்க நம்ப மாட்டோம். பேசாம ஒழுங்கா போய் காவல் காக்குற வேலையை பாரு…போ போ….”

என்று சொன்னதும்… மனதில் குழப்பத்தோடு எழுந்து சென்றான் காவலர் ராமன்.

காவலர்களுக்கு பயந்து பாதி தூரம் ஓடி வந்ததிலும் வேகமாக நடந்து வந்ததிலும் இரண்டு நாட்களில் கஷிக்கு அருகில் சென்றனர் கோதகனும், கேசவனும். கஷியை நெருங்க நெருங்க பகல் இரவானது. இருவருக்குள்ளும் அச்சம் சற்று தலைத்தூக்கியது. கேசவன் கோதகனிடம்

“என்னடா கோதகா கோலாகமா இருக்குற உங்க ஊரு இப்படி இருண்டு கிடக்கு!! ஏன் ஊர் எல்லையில் யாரையுமே காணோம்?”

“ஆமாம் மாமா எனக்குள்ளும் அதே கேள்வி தான் எழுந்தது. ஏன் இப்படி ஊர் எல்லையே இருட்டா இருக்கு? சரி வாங்க உள்ள போய் பார்த்து கேட்டு தெரிஞ்சுக்குவோம்”

“ம்…உள்ள போகணுமா கோதகா? எனக்கென்னவோ பயமா இருக்குடா. ஏதோ பேய் பிசாசு பிடித்த இடம் போல இருக்கு!!”

“வாங்க மாமா ஊருக்குள்ள போய் பார்த்தா தானே விவரம் தெரிஞ்சுக்க முடியும். ம்…வாங்க நான் இருக்கேன் இல்ல”

“சரி சரி வரேன். வேற வழி!!”

“என்ன மாமா ஊருக்குள்ள யாரையுமே காணோம்!!! எல்லையில தான் யாருமில்லைன்னு நினைச்சா ஊருக்குள்ளேயும் யாருமில்லையே. எங்க வீட்டுக்கு போயி பார்ப்போம் வாங்க”

இருவரும் மனதில் சற்று பயம் மற்றும் கலக்கத்துடன் கோதகன் வீட்டைச் சென்றடைந்தனர். அங்கேயும் எவரும் இருக்கவில்லை. வீடு சுத்தமாக எல்லா பொருட்களும் வைத்த இடமாறாமல் இருந்தது. அதைக் கண்ட கேசவன் கோதகனிடம்

“கோதகா இனியும் நாம் இங்கிருப்பது சரியில்லை என்று எனக்கு தோன்றுகிறது. வா உடனே இங்கிருந்து புறப்பட்டு விடுவோம். அந்த சாமியார் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. பேசாமல் நாம் திரும்பி மாயாபுரிக்கு போய் ஊர் தலைவரிடம் சொல்லிடலாம் வா…வாடா…கோதகா”

“மாமா என்ன பேசறீங்கன்னு தெரிஞ்சுதான் பேசறீங்களா? எங்க குடும்பம் சொந்த பந்தங்கள் நண்பகள்ன்னு ஒருத்தரையுமே காணவில்லை. என்னதான் இங்கே நடந்திருக்கும்? எல்லாரும் எங்கே போயிட்டாங்கன்னு தெரிஞ்சுக்காம நாம இங்கிருந்து போகக்கூடாது.”

“என்னடா சொல்லுற கோதகா!!! இதுல ஏதோ விபரீதம் இருக்கும் போல தெரியுதுடா. வேண்டாம் டா இந்த விஷப் பரீட்சை. இங்க உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் லட்சுமிக்கு என்னடா பதில் சொல்லுவேன்?”

“உண்மை தான் மாமா. அக்கா நாம திரும்பி போணதும் கேட்பா. கஷியில் எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு நிச்சயம் கேட்பா. அதுக்கு நம்மகிட்ட பதில் இருக்க வேண்டாமா? அதை தெரிஞ்சுகிட்டு இங்கிருந்து போவோம்”

“வேண்டாம் கோதகா. அதுக்கு நாம உயிரோட போகணும் இல்லையா. வந்துடு டா போயிடலாம்.”

“கொஞ்ச நேரம் அமைதியா இருங்க மாமா. என்னை யோசிக்க விடுங்க”

“என்னடா குரலை ஒசத்தி பேசற?”

“உஷ்….”

என்று கேசவனிடம் கூறிவிட்டு தன் பையிலிருந்து ஒரு சங்கிலியை வெளியே எடுத்தான் கோதகன் அதைப் பார்த்ததும் கேசவன்

“டேய் கோதகா இது …இது….எங்க ஊர் எல்லை மரத்தில் தொங்கிக்கிட்டு இருந்தது தானே?”

“ஆமாம்”

“அதை எப்போ டா அந்த மரக்கிளையிலிருந்து எடுத்த?”

“நாம ஓடி வரும் போதே அதை எடுத்து என் பையினுள் போட்டுக்கிட்டேன். இதைப் பாருங்க மாமா….எவ்வளவு அழகா இருக்குன்னு.”

“என்ன… பாம்பு கீரியை சுத்தி வளைச்சுருக்கு. இதுல என்னடா அழகிருக்கு? சரி என்ன நீ ஊருக்கும் வரமாட்டேங்கற இங்கேயும் எதுவும் பண்ணாம இந்த சங்கிலியை ரசிச்சுக்கிட்டிருக்க?”

என்று கேசவன் சொன்னது கோதகன் காதில் விழுந்தாலும் அசையாமல் கோதகன் அந்த பதக்கத்தையே தடவி தடவி ரசித்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த கேசவன் கோதகனிடமிருந்து அந்த சங்கிலியை பறித்து தூர வீசி எறிந்தான். சங்கிலியை அவ்வாறு தூக்கி எறிந்ததற்காக கேசவனின் கழுத்தை நெறித்தான் கோதகன். கேசவனுக்கு மூச்சு முட்டத் தூவங்கியதும் அவன் கோதகனை தன் கையிலிருந்த பையால் ஓங்கி பலமாக தலையில் அடித்தான். கோதகன் சற்று மயங்கியவாறு தரையில் வீழ்ந்தான். கேசவன் தன் கழுத்தை சரி செய்துக் கொண்டு கோதகன் அருகில் சென்று அவனின் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டு…

“கோதகா …கோதகா….எழுந்துரு கோதகா….வேறு வழியில்லாம தான் உன்னை அடிச்சேன் டா.. எழுந்திரிடா”

சற்று நேரத்தில் கோதகன் எழுந்தான். அதுவரை அவனை தன் மடியில் படுக்க வைத்திருந்த கேசவன்…அவன் எழுந்ததும்

“கோதகா !!கோதகா!!! வா எழுந்திரு நாம ஊருக்கே போகலாம்.”

“இல்லை மாமா. அந்த பதக்கம் எங்கேன்னு தேடணும்”

“டேய் அது உன்னை என்னமோ பண்ணிருக்குடா. அது வேண்டாம்டா கோதகா. வா நாம இங்கிருந்து சீக்கிரம் போயிடலாம்”

“ஒரே ஒரு தடவை அந்த பதக்கத்தை தொட்டு பார்த்துடறேன் மாமா. அதுக்கப்பறம் உங்க கூட ஊருக்கே வந்துடறேன்”

என்று கூறிக்கொண்டே அந்த சங்கிலியை தன் கைகலால் எடுத்தான் கோதகன். அதிலிருந்த நாகத்தின் வாலைப் பிடித்தான். அதைக் கண்ட கேசவன் கோபத்துடன் அந்த சங்கிலியை கோதகன் கையிலிருந்து பிடுங்கினான். அவன் இழுத்த வேகத்தில் கோதகன் பிடித்திருந்த நாகத்தின் வால் திரும்பியது. வால் திரும்பியதும் கீரியின் தலை திரும்பி கோதகனைப் பார்த்தது. அதைப் பார்த்த கேசவன் அந்த சங்கிலியை மீண்டும் கீழே வீசி எறிந்தான். இருவருக்குள்ளும் வாக்குவாதம் எழுந்தது. கேசவனை திட்டிக் கொண்டே அதை தேடி எடுத்தான் கோதகன். எடுத்ததுமில்லாமல் அந்த கீரியின் தலையை தன் கையினால் திருப்பினான். உடனே நாகத்தின் தலை கேசவன் பக்கம் திரும்பியது. நாகத்தின் வாயிலிருந்து அதன் நாக்கு போன்ற ஒன்று கேசவனை நோக்கி நீண்டது. அதிலிருந்து தப்பிப்பதற்காக கேசவன் தன் கையிலிருந்த கத்தியால் அந்த நாக்கை துண்டித்தான். நாகத்தின் நாக்கு துண்டாகி தரையில் விழுந்த இடத்திலிருந்து ஓர் உருவம் வெளி வந்தது. அதைப் பார்த்ததும் கேசவனும் கோதகனும் பயந்து ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு நடுங்கியவாறு அதன் முன் நின்றிருந்தனர்.

தொடரும்…..
Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s