அத்தியாயம் 22: நீர்த்துளி பதக்கம்

நாதவேழிரி எழுந்து கூறியதும் அனைவரின் பார்வையும் வியழியசுரி மீது இருந்தது. உடனே வியழியசுரி எழுந்து நின்று

“நாம் அசுரர்கள் நம்மால் தான் அந்த ஊரின் எல்லையை நெருங்க முடியவில்லை இல்லையா?”

“ஆமாம் அது தான் உண்மை.”

என்றான் மதிநாகசுரன். அதற்கு வியழியசுரி

“நாம் பிடித்து சாம்பீனிகளாக வைத்திருக்கும் நரன்களை மீண்டும் நரன்களாக மாற்றி நாம் சொல்வதை மட்டும் கேட்கும்படிச் செய்து அவற்றை அனுப்பினால்!!!”

“ம்….இது நல்ல யோசனை தான் வியழியசுரி!! சபாஷ்!! ஆசானே தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?”

என்று மதிநாகசுரன் காற்கோடையனிடம் கேட்க

“நல்ல யோசனை தான் ஆனால் மீண்டும் சாம்பீனிகளை நரன்களாக மாற்ற வேண்டுமென்றால் அதற்கு நரன்சாம் மந்திரத்தைக் கற்க வேண்டும். அதற்கு கால தாமதமாகுமே!!”

“எவ்வளவு நாளாகும் ஆசானே நான் கற்று வென்று வருகிறேன்”

“சிம்பாசுரா….எப்படியும் ஒரு மண்டலம் சிவபெருமானை நினைத்து தவமிருந்து பூஜித்து அடுத்த ஒரு மண்டலம் கடும் விரமிருந்தால் ஒரு வேளை அதை அறிந்துக் கொள்ளலாம். ஆனால் இதில் நிச்சயம் ஏதும் இல்லை. அது தான் யோசனையாகவே இருக்கிறது”

“முயற்சிப் பதில் தவறொன்றுமில்லை ஆசானே. நான் அந்த முயற்சியில் ஈடுபடுகிறேன் நீங்கள் அனைவருமாக வேறேதாவது முயற்சியுங்கள். சும்மா யோசனையிலேயே நேரத்தை விரயும் செய்யாமல் அவரவரால் முடிந்ததை அவரவர் முயற்சிக்கலாமே”

“ஆம் ஆசானே சிம்பாசுரன் கூறுவது சரி தான். சிம்பா நீ உன் முயற்சியில் இறங்கு நாங்கள் மற்ற வழிகளை கண்டறிய முயற்சிக்கின்றோம்”

“உத்தறவு கொடுங்கள் ஆசானே!”

“சென்று வென்று வா சிம்பா.”

“அந்த ஈசனிடமிருந்து நரன்சாம் மந்திரத்துடன் வருகிறேன்.”

என்று அனைவரிடமிருந்தும் விடைப் பெற்றுக் கொண்டு தவமிருக்கச் சென்றான் சிம்பாசுரன். அவன் சென்றதும் மீண்டும் அனைவருமாக வேறு வழிகளைப் பற்றிய கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதே நேரம் அங்கு மாயாபுரியில் ஊர் தலைவரும், தலைமைக் காவலருமாக ஏன் தங்கள் ஊரை தீய சக்திகளால் நெருங்க முடியவில்லை என்ற தேடலில் ஈடுப்பட்டப் போது. அவர்கள் கஷியிலிருந்து வந்த கோதகனை மீண்டும் விசாரித்தனர்.

“வா கோதகா வா வா. நீ இந்த மாயாபுரிக்கு வரும் போது நடந்ததை ஒன்று விடாமல் கூறு!!”

“நான் அன்றே சொல்லிவிட்டேனே தலைவரே!!”

“பரவாயில்லை இன்னும் ஒருமுறை நன்றாக யோசித்துக் கூறு”

என்று தலைவர் சொன்னதும் கோதகன் யோசித்தான் அப்போது அவனுக்கு அவன் கண்ட அந்த சாமியார் தான் நினைவுக்கு வந்தார். உடனே அதை தலைவரிடம் கூறினான். அதைக் கேட்டதும் தலைமைக் காவலர் அவர் கீழிருக்கும் காவலர்களை அழைத்து அந்த சாமியாரைத் தேடச் சொன்னார்.
இரண்டு மூன்று நாட்கள் ஆனபின் ஒரு நாள் காவலன் ஒருவர் சாமியார் என்றொருவரை அழைத்து வந்தார். உடனே கோதகனை அழைத்து வர உத்தரவிடப்பட்டது. கோதகனும் வந்தான். அவனிடம் ஊர் தலைவர்

“கோதகா நீ பார்த்த சாமியார் இவரா என்று பார்த்துச் சொல்”

கோதகனுக்கு இரண்டு ஆட்களாக தெரிந்தார் அந்த சாமியார். அதில் ஒன்று அவன் பார்த்த சாமியார் மற்றொன்று வேறு ஏதோ ஒரு சாமியாராக தெரிந்தது. அவன் கண்களை நன்றாக கசக்கிக் கொண்டபின் மீண்டும் உற்றுப் பார்த்தான்‌..

“ஆமாம் தலைவரே இவரே தான் நான் அன்று ஊர் எல்லையில் பார்த்த சாமியார்”

என்றான்

அவரிடம் ஊர் தலைவர் நடந்தவைகளை விளக்கினார். அதற்கு அவர் மெல்லிய புன்னகையுடன்

“அனைத்தும் அறிவேன். தங்களுக்கு இப்போது என்னிடமிருந்து என்ன வேண்டுமென்பதை மட்டும் கூறுங்கள்”

“சாமி ஏன் நம்ம ஊரை மட்டும் தீய சக்திகளால் நெருங்க முடியவில்லை என்ற காரணமறிந்தால் அதை வைத்து மற்ற ஊர்களையும் காப்பாற்றிடுவோம். அதை அறிந்துக் கொள்ளத் தான் தங்களைத் தேடி அழைத்து வர ஆட்களை அனுப்பினோம்.”

என்று ஊர் தலைவர் சொன்னதைக் கேட்ட சாமியார் புன்னகைத்துக் கொண்டே

“யார் யாரைக் காப்பாற்றுவது!
காப்பாற்றுவதற்கு இனி என்ன உள்ளது!
அழிந்தன அனைத்தும் பேராசையால்!
மீதமிருப்பதோ நாலு!
அவற்றையும் கைப்பற்ற துடிக்கிறது ஒரு கூட்டம்!
படைகளை பெருக்கி அனைத்தையும் ஆண்டிட தவிக்கிறது!
தப்பித்த நாலுக்குள்ளும் உள்ளது சூட்சமம்!
அந்த பொக்கிஷத்தை தன்னுள் வைத்துக் கொண்டும் தேடுது இங்கே ஒரு கூட்டம்!
அதைத் தேடி தவமிருக்குது அங்கே ஒரு கூட்டம்!
கிட்டினால் பிழைப்பது எந்த கூட்டம்?”

“சாமி தாங்கள் சொன்னதிலிருந்து எனக்கு புரிந்தது என்னவென்றால் எங்களிடம் ஏதோ உள்ளது, அது தான் எங்களைக் காப்பாற்றியுள்ளது. அது என்னவென்றும் தாங்களே சொல்லி எங்களுக்கு வழி காட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.”

“சூட்சமம் என்ன என்று கேட்கிறாயா?”

“ஆம் சுவாமி.”

“உன் மூதாதயர் பல ஆண்டுகளாக பேணிக் காத்து வந்த நீர்த்துளி வடிவிலிருக்கும் ஒரு பதக்கம் உங்கள் பூஜை அறையில் இருக்கிறதல்லவா?”

“ஆமாம் சுவாமி. அதனுள் ஏதோ தெய்வீக நீர் உள்ளதாகவும் அதை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படியும் எனது தந்தைக்கு அவர் தந்தை சொல்லிக் கொடுத்தார் என்று என் தந்தை என்னிடம் அதைக் கொடுத்து அதையே சொல்லி மறைந்தார். அன்று முதல் அதை நான் மிகவும் பத்திரமாக பூஜை அறையில் வைத்து பூஜித்து வருகிறேன்”

“அது தான் உங்கள் ஊரைக் காப்பாற்றிய சூட்சமம். புரிகிறதா?”

“அந்த சிறிய நீர்த்துளி வடிவிலிருக்கும் பதக்கமா எங்கள் ஊரையே காப்பாற்றியுள்ளது!!!”

“ஆமாம்!!! அது இருக்கும் வரை எந்த தீய சக்திகளாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது ஆனால் அது அழிக்கப்பட்டால் உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!!!”

“அதை அழிக்க விடமாட்டேன் சுவாமி. அப்படியே நடந்தால் ஏதாவது பரிகாரம் இருக்கிறதா சுவாமி?”

“பரிகாரம் என்று ஒன்றுமில்லை ஆனால்!!!”

என்று ஏதோ கூற வந்த சுவாமிகள் கோதகனைப் பார்த்து முறைத்தார். அதுவரை அங்கேயே நின்றிருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த கோதகனை கவனித்த ஊர் தலைவர் கோதகனிடம்

“கோதகா நீ இன்னுமா போகவில்லை!!! சரி சரி நீ வீட்டுக்குச் செல். தாங்கள் வீட்டினுள் வாருங்கள் சுவாமி”

என கோதகனை அனுப்பி விட்டு, வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த சுவாமியை வீட்டினுள் அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்து

“யார் அங்கே சுவாமிகளுக்கு பலகாரம் எடுத்து வாருங்கள்”

“இல்லை எனக்கு எதுவும் வேண்டாம் மகனே. இருக்கட்டும்”

“ஏதோ சொல்ல வந்தீர்களே சுவாமி அது என்ன?”

“அது என்ன என்பதை சொல்வதற்கு முன் எது எப்படி உங்கள் அப்பாவிடம் / தாத்தாவிடம் வந்தது அது என்ன என்பதைப் பற்றி நீ முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்”

என்று சுவாமிகள் பாற்கடலை கடைந்து அதிலிருந்து வெளிவந்த அமிர்தம் பற்றியும், சிந்தியது பற்றியும், அது சிந்தியதால் அந்த இடங்கள் வளமானதாகியதைப் பற்றியும், அது சிந்திய இடத்திலிருந்த ஈரத்தன்மையுடைய மண்ணை எடுத்து அதை இந்த நீர்த்துளி வடிவிலான பதக்கத்தில் வைத்து பூஜித்து வருவதைப் பற்றியும் விவரமாக கூறினார். அதன் பின் ஊர் தலைவரைப் பார்த்து

“உன்னிடம் உள்ளது போலவே நான் கூறிய மற்ற மூன்று ஊர்களான அவந்தி, பிரயாகா, த்ரிகான்தக்கிலும் இதே போல நீர்த்துளி வடிவில் இன்னும் மூன்று பதக்கங்கள் உள்ளன. அது தான் அந்த ஊர்களையும் பாதுக்காத்து வருகிறது. இந்த நான்கு ஊர்களின் தலைவர்களும் ஒன்று கூடி அவர்தம் பதக்கங்களை ஒன்றாக இணைத்து அதை சங்கிலியாக கழுத்தில் மாட்டிக் கொள்பவன் எவனோ அவனே அந்த தீய சக்தியை அழிப்பான்.”

“அவ்வளவு தானே சுவாமி அதை உடனே செய்து விடுகிறோம்.”

“அது அவ்வளவு சுலபமானது அல்ல மகனே!! அதை செய்யவிடாமல் தடுக்கும் அந்த தீய சக்தி.”

“அதை செய்யக்கூடியவன் யாரென்றும் கூறிவிட்டீர்களேயானால்….”

“அது யாரென்று எனக்கு தெரியாது மகனே ஆனால் முதலாமவன் உங்கள் ஊரைச் சேர்ந்தவன், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்து துலாம் ராசிக்கு சொந்தக்காரராவான். அவனது பெயர் “வ” என்ற எழுத்தில் துவங்கம். இரண்டாமவன் அவந்தி ஊரைச் சேர்ந்தவன், பரணி நட்சத்திரத்தில் பிறந்து மேஷ ராசிக்கு சொந்தகாரனாவான். அவனது பெயர் “ஞா” என்ற எழுத்தில் துவங்கும். மூன்றாமவன் பிரயாகா ஊரில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்து மிதுன ராசிக்காரனாவான். அவன் பெயர் “மு” என்ற எழுத்தில் துவங்கும். நான்காமவன் த்ரிகான்தகில் பூரம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியில் பிறந்து “வே” என்ற எழுத்தில் பெயர் கொண்டவனாவான். இவர்கள் நால்வரும் தான் அவரவர் ஊரிலிருக்கும் இதே போன்ற நீர்த்துளி பதக்கங்களை எடுத்து பிரயாகாவில் சந்தித்துக் கொண்டு அவற்றை ஒன்றாக இணைத்தால் அந்த நான்கு நீர்துளிகளும் அழகான பூ வடிவும் பெறும். நால்வரில் ஒருவர் அதை கழுத்திலிட்டுக் கொண்டு இந்த பிரபஞ்சத்தையே காத்தருளப் போகிறான்.”

“ஓ!!! இதில் இவ்வளவு இருக்கிறதா? சரி சுவாமி இப்போதே தாங்கள் கூறிபடி பொருத்தமுள்ள நால்வரை கண்டுபிடித்து அழைத்து வர உத்தரவிடுகிறேன்.”

“அவசரம் வேண்டாம் ஊர் தலைவரே!!! அந்த பதக்கம் ஏன் அவர்கள் எடுத்துப் பிரயாகா செல்ல வேண்டும் என்ற உண்மையோ அல்லது அதை வைத்து அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றோ அவர்களுக்கு அறியாமல் அவர்களை செய்ய வைக்க வேண்டும். முன்னதாகவே விவரம் அறிந்தால் அந்த பதக்கத்தின் வலிமையை அவர்கள் இழக்க நேரிடும் என்பதை தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்”

“அப்படியே ஆகட்டும் சுவாமி. எதையும் அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறேன். முதலில் மற்ற ஊர் தலைவர்களுக்கும் புறா தூது அனுப்பி விவரத்தைக் கூறி அவர்கள் ஊரின் அந்த நாயகன்களை கண்டறியச் சொல்கிறேன். நானும் எங்கள் ஊரின் நாயகனைத் தேடிக் கண்டுப் பிடிக்கிறேன் அதன் பின் மற்றவைகளைப் பற்றி பார்ப்போம் …என்ன சொல்கிறீர்கள் சுவாமி?”

“ம்…ம்…அதுவே சரியான முறை. ஆகட்டும் மகனே”

“சுவாமி அதுவரை தாங்கள் எங்கள் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”

“அப்படியே ஆகட்டும்”

“மிக்க நன்றி சுவாமி. யார் அங்கே சுவாமிக்கு அந்த அறையை எல்லா வசதிகளுடனும் ஏற்பாடு செய்யுங்கள்”

என்று வேலை ஆட்களிடம் கூறிவிட்டு தலைமைக் காவலரிடம் எல்லா வற்றையும் விளக்கமாக கூறி… மாயாபுரியில் சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில், “வ” என்ற எழுத்தில் துவங்கும் பெயருடைய நபரை தேடி அழைத்து வரச்சொன்னார் ஊர் தலைவர். அதோடு அவரே புறாக்கள் மூலம் மற்ற மூன்று ஊர் தலைவர்களுக்கும் விவரங்களை தூது அனுப்பினார்.

நான்கு ஊர்களிலும் நான்கு நாயகன்களுக்கான தேடல் மும்முரமாக நடப்பெற்றன.

விவரத்தை அரைகுறையாக கேட்ட கோதகன் வீட்டிற்கு வந்ததும் தன் அக்காளிடமும் மாமாவிடமும்

“அக்கா நம்ம ஊரைச் சுற்றி ஏதோ நடக்கிறது.”

“ஏன் டா கோதகா என்ன ஆச்சு உனக்கு? சரி தலைவர் கூப்பிட்டு அனுப்பினாரே!! என்னவாம்?”

“அவர் ஒரு சுவாமியைக் காட்டி அவர் தான் ஊர் எல்லையில் நான் பார்த்த சாமியாரான்னு கேட்டார். நானும் ஆமாம் என்று சொன்னேன்”

“அதுக்கா வீட்டுக்கு வரத்துக்கு ஏன் இவ்வளவு நேரமாச்சு?”

“அக்கா அந்த சாமியார் சொன்னதைக் கேட்டா எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்கு. அவர் சொன்னதுல எனக்குப் புரிஞ்சது நம்ம ஊரைத் தவிர வேறெந்த ஊரிலும் எவரும் உயிரோடு இல்லைன்னு…. “

“என்னடா கோதகா சொல்லுற!!! நாம தான் உயிரோடு இருக்கிறோமே அப்புறம் என்னவாம்? அப்போ என்ன கஷியில நம்ம அப்பா அம்மா அண்ணன் எவருமே இல்லைங்கறாயா?”

“அப்படித் தான் அவர் சொன்னார்.”

“அவாளுக்கெல்லாம் என்ன ஆச்சாம்? சரி அப்புறம் என்ன சொன்னார்”

“ஏதோ சொல்ல வந்தார் உடனே நிறுத்திட்டு என்னை முறைத்துப் பார்த்தார்….உடனே தலைவர் என்னை வீட்டுக்குப் போகும்படி சொல்லிவிட்டார், நானும் வந்துவிட்டேன்”

“சரி இதை தெரிஞ்சிக்க நமக்கு ஒரு வழி இருக்கு. செய்வோமா!!! அப்போ தெரிஞ்சிடும் அந்த சாமியார் சொன்னது உண்மையா இல்லையான்னு!!”

“என்னது அது?”

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s