அத்தியாயம் 21: காரணம் கண்டறியப்பட்டது

கன்யார்த்தீர்த்தியில் தியானம் மேற்கொண்ட காற்கோடையன் சற்று நேரத்தில் நடந்தவையை தன் ஞானதிருஷ்டியால் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரின் அதிர்ச்சியைக் கண்ட மதிநாகசுரன் தனக்கு தானே

“என்ன ஆயிற்று? ஏன் இவ்வாறு அதிர்ச்சி அடைகிறார் ஆசான்? அப்படி என்ன காரணம் நாம் அந்த நான்கு ஊர்களை நெருங்க முடியாமல் இருப்பதற்கு? அவர் தியானத்திலிருந்து வெளிவந்தால் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். பொறுமையாக இருப்போம்”

மனதில் எண்ணிக்கொண்டு காத்திருந்தான். ஒரு அரை மணி நேரத்தில் தன் தியானத்தை முடித்தார் காற்கோடையன். அவர் அமர்ந்திருந்த மேடைப் போன்ற பாறையிலிருந்து மெல்ல கீழே இறங்கி வந்தவர் மதிநாகசுரனைப் பார்த்தார். அவர் பார்வையில் ஏதோ நம்பிக்கை இழந்தவர் போல் தோன்றிட மதிநாகசுரன் அவரிடம்

“ஆசானே என்ன நடந்துள்ளது அல்லது நடக்கிறது என்பதைக் கூறுங்கள். நாம் நிச்சயம் அந்த ஊர்களையும் கைப்பற்றிடுவோம்.”

“ம்….ம்….”

“ஏன் தயங்குகிறீர்கள் ஆசானே எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். இவ்வளவு காலம் நாம் இணைந்து அனைத்தையும் செயல் படுத்தவில்லையா என்ன? நாளை மறுநாள் நமது அடுத்த வாரிசுகளும் இங்கே வந்து சேர்ந்திடுவார்கள். அப்போது நமது படை இன்னமும் பலம் பொருந்தியதாகிவிடும்.”

“என்ன சொல்கிறாய் மதிநாகசுரா? நம் பிள்ளைகள் இங்கு வருகிறார்களா? யார் அழைத்து வரச் சென்றுள்ளார்?”

“நம்ம சிகராசுன் சென்றுள்ளான் ஆசானே!”

“அவன் ஒருவனால் மட்டும் அது சாத்தியமாகுமா?”

“நிச்சயம் முடியும் ஆசானே அங்கே தான் நம் மந்தாகிஷி இருக்கிறாளே அவள் அணிமா சித்தியை பிரயோகப் படுத்தி அனைவரையும் அணுவளவுக்கு மாற்றிடுவாள் சிகராசுரன் அவர்கள் அனைவரையும் ஒரு கூடைக்குள் போட்டு இங்கு எடுத்து வந்திடுவான்”

“சரி சரி ….அவர்களும் வரட்டும் பார்ப்போம்”

“சரி நீங்கள் தியானத்தில் ஏதோ கண்டுள்ளீர் !!! அது என்ன? உங்கள் முகத்தில் அதிர்ச்சித் தெரிந்ததே எதனால்?”

“சொல்கிறேன் மதிநாகசுரா சொல்கிறேன்”

“கேட்க ஆவலாக உள்ளோம். ஏனெனில் காரணம் அறிந்தால் அதற்கு தகுந்தாற்போல் அவர்களை நம் அடிமைகளாக்கிடலாமல்லவா!!!”

“அது சாத்தியமா என்பதில் எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது மதிநாகசுரா!!!”

“ஆசானே!!!! என்ன சொல்கிறீர்? இத்தனை ஊர்களை ஒன்றுமில்லாமல் செய்த நம்மால் இந்த நான்கு ஊர்களை கைப்பற்றுவதில் தங்களுக்கு ஏன் சந்தேகம் எழுகிறது!!!”

“அதற்கு காரணம் இருக்கிறது மதிநாகசுரா”

“அது தான் என்ன காரணம் என்பதை விளக்குங்கள். அதன்பின் முடிவுக்கு வரலாம்”

“சரி….என் தியானத்தின் ஞானதிருஷ்டியில் கண்டது என்னை பல வருடங்களுக்கு பின் கொண்டுச் சென்றது. என்று நாம் நமது அசுரகிரிவனத்தை விட்டு உயிர்ப்பிழைத்து தப்பி ஓடி வந்தோமோ அந்த நாளை நான் மீண்டும் கண்டேன். அங்கே நமது அசுரர் குலமே தேவர்களுடன் பாற்கடலைக் கடைந்துக் கொண்டிருந்தனர். அமிர்தமும் வந்தது. அதை யார் முதலில் பருகுவது என்ற சர்ச்சை எழுந்ததும் மஹாவிஷ்ணு அதை அவர் கையில் வைத்துக் கொண்டு ஒரு முடிவு எடுப்பதற்குள்!!! அவர் கையிலிருந்த அந்த அமிர்தக் க
கலயத்தை மஹாவிஷ்ணுவின் வாகனமான கருடன் அவரிடமிருந்து பரித்துக் கொண்டுச் சென்றது. விஷ்ணுவும் அதன் பின்னாலேயே தன்னிடம் தந்துவிடும் படி கூறிக்கொண்டே சென்றார் ஆனால் கருடன் வெகு நேரம் அதைக் கொடுக்காமல் அலைக்கழித்தது. அவ்வாறு அது அங்கும் இங்குமாக அமிர்தக் கலசத்துடன் பறந்ததில் அந்த கலசத்திலிருந்த அமிர்தம் தளும்பியதில் நான்கு முறை கீழே பூமியில் சொட்டியது. அப்படி அமிர்தம் சொட்டிய அந்த நான்கு இடங்கள் தான் மாயாபுரி, பிரயாகா, அவந்தி மற்றும் த்ரிகான்தக். அது தான் நம்மால் அந்த ஊர்களுக்குள் செல்ல முடியாமல் போனதுக்கான காரணம் ஆகும். அந்த ஊர்களில் இன்றும் அந்த அமிர்தத் துளியை பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள்!!! அதுதான் அவர்களை நம்மிடமிருந்து காப்பாற்றுகிறது.”

“அந்த அமிர்தத்துளியை எங்கே எப்படி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்? அதன் மகிமையறிந்து தான் வைத்துள்ளனரா?”

“எங்கு வைத்திருந்தால் என்ன அதை நாம் எடுக்கவோ அழிக்கவோ முடியாது”

“அப்போ இதற்கு தீர்வு தான் என்ன ஆசானே?”

“அதை அந்த ஊர் மக்களில் எவரேனும் ஒருவரை நாம் செய்ய வைக்க வேண்டும். அதற்கு அவர்கள் அந்த அமிர்தத்துளியை எங்கே? எப்படி பாதுக்காத்து வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்”

“நம்மால் அந்த ஊருக்குள் செல்லவே முடியவில்லையே பின் எப்படி அதைக் கண்டுப் பிடிப்பது? ஒருவரை மாற்றுவது? பின் அவரை வைத்து அழிப்பது?”

“எல்லாவற்றிற்கும் ஏதாவது வழி பிறக்கும். பொறுமையாக சிந்தியுங்கள்”

“இதற்கு தான் நீங்கள் அதிர்ச்சி அடைந்தீர்களா?”

“இதற்காக இல்லை மதிநாகசுரா. இதை எப்படியாவது நீங்கள் செய்திடுவீர்கள் என்பதில் எனக்கு எந்த வித ஐயமுமில்லை ஆனால் அந்த கலசத்திலிருந்து வழிந்த ஒரு துளி அமிர்தமே நம்மை அந்த ஊருக்குள் நுழையக்கூட விட மாட்டேங்கிறதே அப்போ அதை அருந்திய தேவர்களிடம் நாம் நெருங்க முடியுமா? இந்த அமிர்தத் துளிக்கே இவ்வளவு சக்தி என்றால்…. !!!!”

“கவலை எதற்கு ஆசானே!!! நம்மால் நெருங்க முடியாவிட்டால் அந்த நான்கு ஊர் மக்களை வைத்து நிறைவேற்றிக் கொள்ளலாம்”

“அது எப்படி நடக்கும் மதிநாகசுரா?”

“அதற்கும் சேர்த்தே யோசிப்போம் ஆசானே. நமது இனத்தின் புது இளம் சிங்கங்கள் நம்முடன் சேரவுள்ளதல்லவா அவர்களிடமும் விவரத்தை விளக்கிடுவோம். புதிய திட்டம் தீட்ட வேண்டியது தான். காரணம் இதுதான் என்று இப்போது விளங்கிவிட்டது இனி அதற்கான செயலைக் குறித்து தீவிரமாக கலந்தாலோசித்து முடிவெடுப்போம். கவலை வேண்டாம் ஆசானே!! நாங்கள் இருக்கிறோம்”

“அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கிறது மதிநாகசுரா”

“அது போதும் ஆசானே. தங்களின் நம்பிக்கை எங்களை வெற்றியடையச் செய்திடும். அதோ நமது இளஞ்சிங்கங்கள் வந்து விட்டனர். வா சிகராசுரா வா ம்… உங்களை அனைவரின் வருகை நாளை மறுநாள் என்றல்லாவா நினைத்தித்துக் கொண்டிருந்தேன் ஆனால் இவ்வளவு சீக்கிரமே வந்துவிட்டாயே!!! பலே!! பலே!!!கூடையைத் திறந்து அவர்களை வெளியே வந்து நாம் கண்ட வெற்றியைக் காணச் சொல்.”

சிகராசுரன் முகம் வாடியிருந்தது. மதிநாகசுரன் தன் பிள்ளைகளைப் பார்க்க வேண்டிய ஆவலில் அவனை கவனிக்கத் தவறிவிட்டான். சிகராசுரன் கூடையைத் திறந்து விட்டான். அதனுள்ளிருந்த அனைவரும் வந்தனர். அவர்களில் மதிநாகசுரன், நவியாகம்ஷியின் மகன் நம்மாரசுரனும், சிம்பாசுரன், மந்தாகிக்ஷஷியின் மகன் ரவமாசுரனும், மிளானாசுரியும் மட்டும் இருக்கவில்லை. கோபரக்கன் கூடையை தூக்கிப் உள்ளே யாராவது மீதம் உள்ளனரா என்று பார்த்தான். தன் மிளானாசுரியைத் தேடினான். அப்போது சிம்பாசுரன் கோபரக்கன் தோளில் கையைப் போட்டுக் கொண்டு

“கோபரக்கா நம்ம மிளானாசுரிக்கும் மதிநாகசுரனின் மகன் நம்மாரசுரனுக்கும் ஏதோ ஒரு விஷ ஜந்து கடித்ததில்… அவர்களை எவ்வளவோ காப்பற்ற முயன்றும் முடியாமல் போனதை நினைத்து நாங்கள் இன்றும் வருந்திக் கொண்டு தான் இருக்கிறோம். எங்களை மன்னித்து விடு.”

அதைக் கேட்டதும் கோபரக்கன் “மிளானா” என்று கதறி அழுதான். அவனின் கதறல் சத்தம் அந்த கன்யார்த்தீர்தியையே அதிர வைத்தது. அப்போது நவியாகம்ஷி மந்தாகிஷியின் அருகில் சென்று

“உன் மகன் ரவமாசுரனுக்கு என்ன நேர்ந்தது மந்தா?”

“அவன் சிறு குழந்தையிலேயே நாங்கள் எதிர்பார்க்காத நேரம் கடலுக்குள் சென்று மூழ்கி இறந்து விட்டான் நவியா. நாங்கள் அதை துளியும் எதிர்பார்க்கவில்லை. எங்களுள் முதலில் அவனை தான் இழந்தோம்.”

அங்கிருந்த இறுக்கமான சூழலை மாற்ற எண்ணி சிம்பாசுரன்

“உங்கள் அனைவரையும் கண்டதில் எங்களுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. எப்போது உங்களை எல்லாம் பார்ப்போம் என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். இன்று நடந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.”

மதிநாகசுரன் ஓடிச்சென்று சிம்பாசுரனைக் கட்டிக் கொண்டு சமாதானம் செய்தான். பின்பு அனைவருமாக அமர்ந்து மீதமிருந்த குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் அன்றுவரை நடந்தது அனைத்தையும் கதை போல எப்படி அவர்கள் பெற்றவர்களுக்கு அன்று சொன்னானோ அது போல இன்று அவர்கள் பிள்ளைகளுக்குச் சொன்னான் மந்திராசுரன்.

அதைக் கேட்டதும் மதிராசுரனின் மகள் நாதவேழிரி எழுந்து

“என் அண்ணா மற்றும் தம்பி தங்கையரே அனைவருமாக உடனே ஏதாவது ஒரு திட்டம் தீட்டி நம் பெற்றவர்களின் சபத்தை நிறைவேற்ற கைக் கொடுப்போம்.”

என்று கூறியதைக் கேட்டதும் காற்கோடையன் அவளின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்துக்கொண்டே மதிநாகசுரனிடம்

“பார்த்தாயா மதிநாகசுரா !!!இவள் பேசுவதைக் கேட்டால் !!!எனக்கு நீ அன்று நாம் எல்லாவற்றையும் இழந்து தப்பித்தால் போதுமென்று பாதாளபுரிவனம் வந்தடைந்ததும் என்னிடம் பேசியது போலவே இருக்கிறது. புலிக்குப் பிறந்தது பூனையாகிடுமா என்ன?ம்…சபாஷ் நாதவேழிரி சபாஷ்”

ஆசான் தன் மகளைப் புகழ்ந்து பேசியதைக் கேட்டதும் மதிநாகசுரன் தன் அடர்த்தியான நீள் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே நவியாகம்ஷியை தன் வலது தோளால் அவளது இடது தோளைத் தட்டினான். அசுரர்களானாலும் பெற்றவர்களாயிற்றே!!!

பெரியவர்கள் அனைவரும் பல திட்டங்கள் தீட்டி அது சரிவராது இது சரிவராது என்று கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். சிறியவர் அனைவரும் ஒன்றுகூடி ஏதோ மண்ணில் வரைந்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நாதவேழிரி எழுந்து அனைவரையும் பார்த்து

“நம்ம வியழியசுரி ஒரு நல்ல யோசனையைத் தந்துள்ளாள். எல்லோரும் இங்கே வாருங்கள் இது நிச்சயம் சாத்தியம் என்று நாங்கள் அனைவரும் நம்புகின்றோம்”

என்று கூறியதும் அனைவரும் அந்த இடத்தில் ஒன்றாகக் கூடி நின்றனர்.

தொடரும்…..

பின் குறிப்பு

காற்கோடையன் சொன்னதுப் போல அன்று அந்த அமிர்த கலசத்திலிருந்து அமிர்தம் வழிந்து சொட்டிய இடமான அந்த நான்கு ஊர்களின் இன்றையப் பெயர்கள் மாயாபுரி – ஹரித்வார், பிரயாகா – அலகாபாத், அவந்தி – உஜ்ஜைன், த்ரிகான்தக் – நாசிக் என்பதாகும். அந்த கலசத்தை கருடனிடமிருந்து வாங்கி தேவர்கள் அருந்தி இழந்தவைகளை பெறுவதற்கு பண்ணிரெண்டு இரவு பண்ணிரெண்டு பகல் ஆனது. அந்த பண்ணிரெண்டு நாட்களும் தேவர்கள் அசுரர்களிடமிருந்து பயந்து ஒளிந்துக் கொண்டிருந்தார்கள். அந்த பண்ணிரெண்டு நாட்கள் தான் பூமியில் பண்ணிரெண்டு வருடங்களானது. ஆகையால் அமிர்தமிருந்த கும்பத்தை மீட்டு தேவர்கள் உட்கொள்ள பண்ணிரெண்டு நாட்களானதால் பூமியில் அந்த அமிர்தம் சிந்திய இடங்களில் கும்பமேளா என்ற பிரம்மாண்டமான நிகழ்வு பண்ணிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை கோலாகலமாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s