அத்தியாயம் 20: குழப்பம் நீடித்தது

வட்ஸாவுக்கு சென்று வந்த ராமு, ரங்கா சொன்ன விஷயங்கள் ஊர் தலைவரையும், தலைமைக் காவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. அங்கிருந்து கண்டெடுத்து வந்த அந்த கீரியைச் சுற்றிய பாம்பு பதக்கச் சங்கிலி ஊர் எல்லையில் மந்திரித்து புதைக்கப்பட்ட இடத்தையும் சென்றுப் பார்த்தார் ஊர் தலைவர். அவருக்கு அந்த சங்கிலியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அதன் செயல் அவரை வேண்டாமென தடுத்தது. தலைமைக் காவலரைப் பார்த்து சொன்னார்

“எனக்கு அந்த பதக்கம் கொண்ட சங்கிலியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் கூடிக்கொண்டே போகிறது ஆனால் தாங்கள் ராமுவுக்கு நேர்ந்ததை சொல்லிக் கேட்டதும் சற்று பயமும் தொற்றுகிறது. அதை காவலர் ரங்கா போட்டுப் பார்த்தானா?”

“ஆம் தலைவரே அவனும் போட்டுப் பார்த்துள்ளான். அவன் தான் அதை முதலில் அணிந்துள்ளான். ஆனால் அவனை அந்த சங்கிலி ஒன்றுமே செய்யவில்லையாம். அதனால் தான் அதை அவனிடமிருந்து வாங்கி தான் அணிந்துக் கொள்ள ஆசைப்பட்டுள்ளான் ராமு. அது ராமுவை மாற்றியுள்ளது. ஏன் ரங்காவை ஒன்றும் செய்யாத சங்கிலி ராமுவை மற்றும் அகோரமாக மாற்றியது என்ற கேள்வி என்னுள் கேட்டுக் கொண்டே இருக்கிறது தலைவரே!!”

“இப்படி யோசித்துப் பாருங்கள் தலைமைக் காவலரே….அந்த சங்கிலி அணிந்துக் கொள்பவர் மனம் போல் மாறுமோ!!! ஒரு வேளை அந்த சங்கிலியை அபகரிக்கவோ இல்லை அதன் மீது அதீத ஆசை வைக்கவோ செய்தால் அது அப்படி அவரை மாற்றிடுமோ? இல்லை எனில் வேறு என்ன காரமாக இருக்கும்”

“ஊர் தலைவரே தங்கள் பேச்சிலிருந்து எனக்கு ஒரு விஷயம் புலப்படுவதுப் போல தோன்றுகிறது. அது என்னவென்றால்….ஒரு வேளை அந்த சங்கிலி நம் மாயாபுரி மண்ணின் மைந்தர்களை ஒன்றும் செய்யாதோ?”

“ஏன் அப்படி சொல்கிறீர்கள் தலைமைக் காவலரே? ராமுவும் ரங்காவும் நம் மாயாபுரி மைந்தர்கள் தானே!”

“அங்கே தான் எனக்கு புரிய ஆரம்பித்தது. ரங்கா நம் மாயாபுரியை சேர்ந்தவன் தான் ஆனால் ராமுவின் பூர்வீகம் பக்கத்து ஊரான கஷியாகும். அவன் பெற்றோர்கள் பிழைப்புக்காக மாயாபுரியில் பல வருடங்களுக்கு முன் குடியேறியதால் அவன் நமது படையிலேயே காவலராகியுள்ளான்.”

“ஓ!!! இதில் இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா? சரி அதன் உண்மைத் தன்மையை இப்போதே பரிசோதித்துப் பார்த்தால்!!! தெரிந்திடுமே!!”

“என்ன சொல்ல வருகிறீர்கள் ஊர் தலைவரே? நிஜமாகவா சொல்கிறீர்கள்? ஆனால் யாரைக் கொண்டு நாம் பரிசோதிப்பது?”

“நானே அந்த சங்கிலியை மாட்டிக் கொள்கிறேன். அப்போது தெரிந்துவிடுமல்லவா? என்ன சொல்கிறீர் தலைமைக் காவலரே”

“தலைவரே அது எனது யூகம் தானே தவிர உண்மையா என்பது எனக்கே தெரியாதது!! அதனால் எதற்கு வீண் விஷப் பரீட்சை? அது அப்படியே மண்ணில் புதைந்து கிடக்கட்டும். விட்டுவிடுவோம் வாருங்கள் ஊருக்குள் சென்றிடுவோம்’

“இல்லை தலைமை காவலரே. அதை வெளியே எடுக்கச் சொல்லுங்கள். சோதித்துப் பார்த்து விடலாம். நமது சந்தேகத்திற்கும் குழப்பத்திற்கும் இப்போதே முற்றுப் புள்ளி வைத்திடுவோம். ம்….யார் அங்கே இந்த இடத்தைத் தோன்றுங்கள்”

இரு காவலர்கள் ஓடி வந்து ஊர் தலைவரின் ஆணைப்படியே அந்த சங்கிலியை புதைத்த இடத்தைத் தோன்றி அந்த பானையை வெளியே எடுத்தனர். மந்திரச் சரடுகளால் கட்டி பானையை மூடியிருந்த வெள்ளைத் துணியை அகற்றினர். பானையைத் தூக்கி அதனுள் பார்த்தார் ஊர் தலைவர். பின் தன் கைகளினால் அந்த சங்கிலியை பானையினிலிருந்து வெளியே எடுத்தார். சற்று நேரம் அதன் பதக்கத்தைப் பார்த்தார். பின் மெல்ல தன் கழுத்தில் அணிந்தார். ஒன்றுமே நேர்ந்திட வில்லை. தலைமைக் காவலரும், ஊர் காவலரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். தலைமை காவலரைப் பார்த்த ஊர் தலைவர்

“தங்கள் யூகம் சரிதான் தலைமைக் காவலரே. எனக்கொன்றும் நேந்திட வில்லையே!!! இதோ இப்போது தாங்கள் இதை அணிந்துப் பாருங்கள்”

தலைமைக் காவலர் ஊர் தலைவரின் ஆணையை ஏற்று அவரிடமிருந்து வாங்கிய சங்கிலியை அணிந்துக் கொண்டார். அவருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்றெண்ணியதும் அதை மறுபடியும் ஊர் தலைவரே அணிந்துக் கொண்டு ஊருக்குள் செல்ல முற்பட்டார் ஆனால் ஊள்ளே செல்ல விடாமல் ஏதோ ஒன்று அவரைத் தடுத்தது. பெரும் முயற்சி செய்தும் தோல்வியடைந்தனர். ஆகையால் மறுபடியும் அந்த சங்கிலியை அங்கே புதைக்காமல் எல்லையிலிருந்த மரத்தின் கிளையில் மாட்டிவிட்ட ஊர் தலைவர் அங்கிருந்த அனைத்து காவலர்களிடமும்

“இனி நம் ஊருக்குள் வருபவரை இந்த சங்கிலியை அணிந்துக் கொள்ளச் செய்து அவர்களுக்கு ஒன்றும் நேரவில்லை என்றால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் புரிகிறதா?”

“ஆகட்டும் தலைவரே!!”

“தலைமைக் காவலரே கஷிக்கு தாங்கள் அனுப்பிய காவலர்கள் மகிழன் மதுசூதன் வந்துவிட்டார்களா?”

“இல்லை தலைவரே அவர்களுக்காத் தான் காத்திருக்கிறேன். அநேகமாக இன்று மாலைக்குள் வந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்”

“அதோ தூரத்தில் யாரோ இருவர் வருது போல் எனக்குத் தெரிகிறதே…தங்களுக்கும் தெரிகிறதா?”

“ஆம் தலைவரே அவ்விருவரும் நமது ஊர் காவலர்கள் உடை தான் அணிந்துள்ழனர். கிட்டே வந்தால் யாரென்று தெரிந்துவிடும்”

“ஆம் நம் காவலர்களே”

“ஆம் தலைவரே அவர்கள் இருவரும் நம் காவலர்களான மகிழனும் மதுசூதனும் தான் கஷியிலிருந்து வருகிறார்கள்”

“வாருங்கள் காவலர்களே வாருங்கள்!! கஷியிலிருந்து என்ன செய்தி கொண்டு வந்துள்ளீர்கள்”

“வணக்கம் ஊர் தலைவரே. வணக்கம் தலைமைக் காவலரே. கஷியில் எவருமே இல்லை தலைவர்களே.”

“என்ன சொல்கிறீர்கள்? விவரமாக சொல்லுங்கள்”

“ஆம் தலைவரே நாங்கள் கஷியின் எல்லையை சென்றடைந்ததும் அந்த இடத்தை முழுவதுமாக இருள் சூழ்ந்திருந்தது. தீப்பந்தம் ஏந்திக் கொண்டு எல்லா இடங்களிலும் வீடுகளிலும் சென்றுப் பார்த்தோம். எங்கும் எவருமில்லை. மாடு ஆடு என எந்த விலங்குகளும் இல்லை. ஊரே அமைதியாக இருந்தது. அங்கு ஏதோ ஒரு விபரீதம் நடந்துள்ளது தலைவர்களே. ஆனால் சண்டை போட்டது போலவோ அல்லது ஊர் மக்களுக்கு தீங்கு விளைவித்ததுப் போலவோ ஒன்றும் தென்படவில்லை. அந்த ஆச்சர்யத்துடன் நாங்கள் கஷியின் எல்லையைத் தாண்டியதும் இருள் அகன்றது. வேகமாக அதை தங்களிடம் தெரிவிக்க ஓடி வந்து விட்டோம்”

“அப்படியா!!! ஆகட்டும் தாங்கள் இருவரும் இதைப் பற்றி ஊர் மக்களிடம் நாங்களாக சொல்லும் வரை மூச்சு விடக் கூடாது புரிகிறதா?”

“ஆகட்டும் தலைவரே! நாங்கள் இருவரும் எவரிடமும் கூறமாட்டோம்”

“நன்றி. தாங்கள் இருவரும் நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டு வந்துள்ளீர்கள் சென்று சற்று ஓய்வெடுங்கள்”

“நன்றி தலைவரே. நாங்கள் வருகிறோம்”

“ம்…தலைமைக் காவலரே விஷயம் ரொம்ப விபரீதமாக இருக்கும் என்று தோன்றுகிறது. சரி அன்று ஒரு பெண் தன் கணவனும் தம்பியும் கொசம்பிக்கு வியாபார விஷயமாக சென்றுள்ளனர் என்றாளே அவர்கள் திரும்பி நமது ஊருக்கு வந்து விட்டனரா? அதை விசாரித்தீர்களா?”

“மறுநாளே சென்று விசாரித்தோம். அவ்விருவரும் வீடு திரும்வில்லை என்பதால் நமது காவலர்களான மதிவானையும், அகம்பனையும் அன்றே அனுப்பியுள்ளேன். அவர்களும் இன்று வந்து சேர்ந்திடுவார்கள்”

“அவர்கள் என்ன செய்தி கொண்டு வருகிறார்கள் என்று பார்ப்போம். சரி வாருங்கள் நாம் சென்று உணவருந்தாலாம்”

தலைமை காவலரும், ஊர் காவலரும் மத்திய உணவருந்திக் கொண்டிருக்கும் போது வேகமாக வந்து வணக்கம் சொல்லி கொசம்பியிலும் எவரும் இல்லை என்பதையும், இருள் சூழ்ந்து மயானம் போலிருக்கிறது என்றும் கூறினர் அங்கு சென்று வந்த மதிவானனும் அகம்பனும். அதைக் கேட்டதும் இரு தலைவர்களும் சாப்பிடுவதிலிருந்து பாதியில் எழுந்தனர். வேகமாக கையைக் கழுவி விட்டு உடனடி ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார் ஊர் தலைவர்.

அதில் மாயாபுரியின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு அமர்ந்து கலந்துரையாடியதில் மூன்று ஊர்களிலும் (கஷி, வட்ஸா, கொசம்பி) என்ன நடந்துள்ளது என்பதைப் பற்றி பேசினார்கள். அப்போது ஊர் தலைவர் அனைவரையும் பார்த்து

“நமது ஊரான மாயாபுரியின் வடக்கில் இருக்கும் கஷியிலும், வட்ஸாவிலும் மற்றும் தெற்கே இருக்கும் கொசம்பியிலும் ஏதோ விபரீதம் நடந்துள்ளது. அங்கிருந்த மக்கள் அனைவரும் காணாமல் போயுள்ளனர். அப்படி ஊர் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எங்கு சென்றிருப்பார்கள்? பண்டிகை, விசேஷம், திருவிழா என்று ஒன்றுமே நடக்காத இந்த நேரத்தில் அவர்கள் எங்கு சென்றிருப்பார்கள் என்று யோசித்ததில் தான் எங்களுக்கு தெரியவந்தது நம்மூருக்குள் நுழை முயற்சித்த அதே தீய சக்தி தான் இந்த மூன்று ஊர்களின் மக்களையும், விலங்குகளையும் ஏதோ செய்திருக்க வேண்டும். இந்த மூன்று ஊர் மக்கள் தான் இவ்வாறு காணாமல் போயுள்ளார்களா? இல்லை இன்னும் நிறைய ஊர்களில் இது நடந்துள்ளதா? என்ற கேளவிகள் உதிக்கின்றது. நம்மால் இதற்கு மேல் அடுத்தடுத்த ஊர்களுக்கு ஆட்களை‌ அனுப்பினாலும் அவர்கள் வந்து நமக்கு செய்தி சொல்வதற்குள் நாட்கள் கடந்துவிடும். ஆகையால் எல்லா ஊர் தலைவர்களுக்கும் எப்படியாவது விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். புறா தூது அனுப்பினால் அந்த புறா திரும்பி வருமா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு தங்களில் எவரேனும் ஏதாவது ஒரு வழியைக் கூற முடியுமா?”

“தலைவரே புறா தூது தான் சரியான வழியாக எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் அதுவே சீக்கிரம் செய்தி சென்றடைய சிறந்த மார்க்கமாகும். நமக்கு அடுத்தடுத்த ஊர் தலைவர்களை அந்த தீய சக்தியிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி செய்திக் கொடுக்க வேண்டும் அவ்வளவு தானே!!! புறாதூது அதை செய்திடும். அதை செய்ததும் அந்த புறா திரும்பி வந்தால் அனைத்தும் தானாக புரிந்து விடாதோ? வராவிட்டாலும் நமக்கு செய்தி கிடைத்திடாதோ!!”

“ம்…அதுவும் சரிதான் இன்றே அனைத்து ஊர்களுக்கும் புறாக்கள் மூலம் தூது அனுப்பிடுவோம். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது.”

“நாம் தான் நிறைய முறை புறா தூது அனுப்பியுள்ளோமே தலைவரே இதில் ஏன் தங்களுக்கு சந்தேகம் எழுகிறது?”

“அதில் சந்தேகமில்லை ஆனால் நமது அக்கம்பக்கத்து ஊர்களான கஷி, வட்ஸா மற்றும் கொசம்பியை மர்மமான முறையில் ஆளில்லாமல் செய்த அந்த தீய சக்தி நம்மூருக்குள் ஏன் நுழைய முடியாமல் திரும்பிப் போனது?அந்த தீய சக்தியானது ஏன் நமது ஊரை நெருங்க முடியவில்லை? அப்படி என்ன நம்ம ஊரில் இருக்கிறது என்பதை அறிந்தால் நாம் அதை வைத்து பல ஊர்களைக் காப்பாற்றலாமே என்று தான் என் சிந்தனையாக இருக்கிறது. உங்கள் யாருக்காவது அதற்கான விடை தெரியுமா?”

இதே சமயத்தில் கன்யார்த்தீர்த்தியில் அசுரர்களின் பரமபத அரண்மனையில் மந்திராசுரன் தனது ஆசானிடம்

“ஆசானே வட்ஸா வரை நமது வேலைகள் செவ்வனே நடந்தது. ஆனால் என்று நாம் அந்த மாயாபுரிக்குள் செல்ல முயற்சித்தோமோ அன்று முதல் நாம் சற்று பின்னடைகிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த மாயாபுரியின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள வட்ஸாவையும், கொசம்பியையும் கைப்பற்ற முடிந்த நம்மால் ஏன் மாயாபுரியை கைப்பற்ற முடியவில்லை? அதே போல கொசம்பியை அழித்த நாம் ஏன் பிரயாகாவை ஒன்றும் செய்ய முடியவில்லை? அதன் பிறகு கிட்ச்சக்கா, சேடி, கருஷா, அனுபா வரை அனைத்து ஊர்களையும் நமதாக்கிக் கொண்ட நம்மால் ஏன் அவந்தியினுள் செல்ல முடியாமல் இருக்கிறோம்? அவந்திக்கும் த்ரிகான்தக்குக்கும் இடையே இருந்த ஹேயாயாவை நமதாக்கினோம் ஆனால் த்ரிகான்தக்கை மீண்டும் நெருங்க முடியாமல் பஸ்சிம் சமுத்தரா வழியே சென்று அடுத்தடுத்த ஊர்களான மிலாவான்டா, அதேனா, ஆம்ரிகோஸ் என அனைத்தையும் அழித்து நமது படையைத் திரட்டிக்கொண்டு மீண்டும் பஸ்சிம் சமுத்தரா வழியே வந்து முச்சிரி, கன்யார்த்தீர்த்தி வரை அழித்து அவ்வூர் மக்கள், விலங்குகள் என அனைத்தையும் நமதாக்கி விட்டோம். இனி நாம் பாதாளபுரிவனம் சென்று தேவேந்திரனையே போருக்கு அழைக்க நேரம் வந்து விட்டது. அசுரர்களின் படை பெரும் படையாகிவிட்டது. ஆகையால் இந்த சின்னச்சின்ன நம்மால் நெருங்க முடியாமல் நாம் விட்டுச் சென்ற ஊர்களான மாயாபுரி, பிரயாகா, அவந்தி மற்றும் த்ரிகான்தக் ஆகியவைகளைப் பற்றி நாம் அனாவசியமாக கவலைப் பட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்ன சொல்லுகிறீர்கள்?”

“ம்…அப்படியா சொல்கிறாய்? சரி நம் மதிநாகசுரனின் அபிப்பிராயத்தையும் கேட்போம். நீ சொல் அரசுரத் தலைவனே என்ன செய்யலாம் இப்பொழுது?”

“நாம் விட்ட அந்த நான்கு ஊர்களையும் நமதாக்க மீண்டும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் தான் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது ஆசானே!!! மந்திரா நீ சொல்வது சரி போல தோன்றினாலும் ஏன் அவர்களை மட்டும் விட்டு வைக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.”

“சரி அதெல்லாம் போகட்டும் நீங்கள் யாராவது ஏன் நம்மால் அந்த நான்கு ஊர்களுக்குள் நுழையக்கூட முடியாமல் போனது என்று யோசித்தீர்களா?”

“இல்லை ஆசானே. அதற்கான விடை தங்களுக்குத் தெரியுமா?”

“சரியாக தெரியவில்லை மதிநாகசுரா!! வயதாகிவிட்டதல்லவா!! ஆனால் ஒரு முறை தியானத்தில் மூழ்கினால் தெரிந்துக்கொண்டு விடுவேன் என்று என் மனம் கூறுகிறது”

“அப்படி என்றால் இதோ இந்த கன்யார்த்தீர்த்தியிலேயே தியானம் செய்யுங்கள். அதற்கு எந்த இடையூறுகளும் நேர்ந்திடாமல் நாங்கள் காவல் இருக்கிறோம்.”

“சரி ஆகட்டும் நான் இப்போதே தியானம் செய்ய துவங்குகிறேன். வெற்றியை நமதாக்கிடுவோம்”

தொடரும்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s