அத்தியாயம் 19: தேடல் துவங்கியது.

ஊர் தலைவர் ஆணைப்படி ஊர் மக்கள் அனைவரும் அவர் வீட்டின் முன் ஒன்று திரண்டனர். அங்கே தன் மக்களின் வருகைக்காக காத்திருந்தார் தலைவர். எல்லோரும் வந்தாகிவிட்டது என்று அறிந்ததும் தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று பேசலானார் தலைவர்…

“என் ஊர் மக்களான தாங்கள் என் சொல் கேட்டு இங்கே வந்தமைக்கு மிக்க நன்றி. அனைவரும் பதற்றமடையால் நான் சொல்வதைக் கேளுங்கள். நம் ஊரை ஏதோ தீய சக்திகள் நெருங்க முயற்சிக்கின்றது. அதை நாம் அனுமதிக்கக் கூடாது. எல்லோரும் இங்கு இருக்கிறீர்களா? இல்லை அப்பா, அம்மா, அக்கா, அண்ணா, தம்பி, பிள்ளை என எவராவது வெளியூர் சென்றுள்ளனரா?”

என்று தலைவன் கேட்டதும் அனைவரும் ஒன்றாக கூச்சலிட்டுச் சொல்ல அது சரியாக புரியாத காரணத்தினால் தலைவர் அவர்களை வெளியூருக்கு சென்றுள்ள குடும்பத்தினர் குடும்பங்களையும் அனைத்துக் குடும்பத்தினரும் மாயாபுரியிலேயே இருக்கும் குடும்பத்தினருமாக இரண்டு பிரிவாக பிரிந்து நிற்கச் சொன்னார். அதுபடியே மக்களும் பிரிந்து நின்றனர். அந்தப் பிரிவில் வெளியூர் சென்றுள்ள குடும்பத்தினர் கொண்ட குடும்பங்கள் என ஐந்து குடும்பங்கள் மட்டுமே இருந்தன. அவர்களைப் பார்த்து தலைவர்

“மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இவ்வாறு பிரிந்து நின்று எங்களின் வேலையை சுலபமாக்கியது எங்களுக்குள் நிம்மதியை வரவைக்கிறது. சரி இந்த ஐவரை விசாரித்து விட்டு உங்களிடம் வருகிறேன் அது வரை நீங்கள் அனைவரும் அமர்ந்திருங்கள். யார் அங்கே? அவர்களுக்கெல்லாம் நீர் மோர் கொண்டு வந்து கொடுங்கள்!! ம்.. நீங்கள் சொல்லுங்கள்…முதலில் நீங்கள் வாருங்கள் தாயே.. உங்க குடும்பதிலிருந்து யார் வெளியூர் சென்றுள்ளார் எங்கே எதற்கு? என்பதைக் கூறுங்கள்”

“வணக்கம் தலைவரே! என்னோட ஒரே மகன் பக்கத்து ஊரான வட்ஸாவுக்கு அவன் அத்தையைப் பார்க்கச் சென்றுள்ளான். ஐந்து நாட்களில் வருவதாக சொல்லிவிட்டு தான் சென்றான் தலைவரே ஆனால் இப்போ பத்து நாட்கள் ஆகியும் இன்னும் அவன் வீடு வந்து சேரவில்லை”

என்று பதற்றமாக சொன்னாள்.

“அப்படியா ம்… தலைமைக் காவலரே தாங்கள் இரு காவலர்களை வட்ஸாவுக்கு உடனடியாக அனுப்பி இவர் மகனின் நலனைப் பற்றி அறிந்து வரச் சொல்லுங்கள்”

“ஆகட்டும் தலைவரே இதோ ராமு, ரங்கா ஆகிய இவர்கள் இருவரையும் உடனே அனுப்புகிறேன். நீங்கள் இருவரும் உடனே வட்ஸாவுக்குச் சென்று இவர் மகனின் நலனைத் தெரிந்து வாருங்கள்.”

ராமுவும், ரங்காவும் வட்ஸாவுக்கு சென்றனர். அடுத்து கைக்குழந்தையுடன் இளம் வயது பெண்மணி மற்றும் அவள் மாமனார் மாமியாரை விசாரிக்க அழைத்தார் தலைவர்

“என்ன மா உங்கள் குடும்பத்திலிருந்து யார் எங்கே சென்றுள்ளனர்?”

“தலைவருக்கு வணக்கம். என் புருஷனும் அவர் தம்பியும் கொசம்பிக்கு வியாபார விஷயமாக சென்றுள்ளனர். அவர்கள் சென்று இரு தினங்கள் ஆகிவிட்டது நாளை வந்து விடுவார்கள்”

“ஓ!! அப்படியா அப்போ நாளை வரைக் காத்திருப்போம் நாளையும் வரவில்லை என்றால் தலைமை காவலர் ஆட்களை அனுப்பித் தேடச் சொல்வார் சரியா மா. சரியா தலைமைக் காவலரே!”

“அப்படியே ஆகட்டும் தலைவரே நாளை இவள் கணவரும் அவன் தம்பியும் வரவில்லை என்றால் உடனே ஆட்களை கொசம்பிக்கு அனுப்பித் தேடச் சொல்கிறேன்”

“ரொம்ப நன்றி தலைவரே. ரொம்ப நன்றி தலைமைக் காவலரே”

மீதமிருந்த ஒரு நடுவயது பெண்ணும் அவள் மகளும் மட்டும் நின்றிருந்தனர். அவர்கள் இருவரையும் தலைவர் அழைத்து

“ம்…. சொல்லுங்கள் தாயே தங்கள் குடும்பத்திலிருந்து யார் எங்கே சென்றுள்ளனர்?”

“தலைவரே வணக்கம். என் கணவர் அவர் ஒண்ணுவிட்ட தங்கை வசுமதியின் திருமணத்திற்காக கஷிக்குச் சென்றுள்ளார். இரண்டு நாட்களில் வருவதாக சொல்லிச் சென்றவர் ஏழு நாட்கள் ஆகியும் வீடு வந்து சேரவில்லை. எங்களுக்கு பயமாக இருக்கிறது தலைவரே”

“கவலை வேண்டாம் பெண்ணே கஷியிலிருந்து வந்துள்ள ஒரு இளைஞன் இருக்கிறான் அவனிடம் விசாரிப்போம். கோதகா இங்கே வா”

“வணக்கம் தலைவரே”

“ம்… இருக்கட்டும்! இருக்கட்டும்! உங்கள் ஊரிலிருந்து நீ கிளம்பும் போது ஏதாவது திருமண விஷேஷம் நடந்ததா?”

“ஆமாம் தலைவரே! அந்த பெண் கூறுவது போலவே வசுமதிக்கு திருமணம் நடக்க இருந்தது ஆனால் நான் அதற்கு முன்னதாகவே மாயாபுரி வருவதற்காக அங்கிருந்து கிளம்பிவிட்டேன். ஆனால் இவர் கணவர் இன்னேரம் மாயாபுரி வந்திருக்க வேண்டுமே”

“ஓ!! அப்படியா! சரி! சரி!! தலைமைக் காவலரே இருவரை கஷிக்கு உடனடியாக அனுப்புங்கள்”

“ஆகட்டும் தலைவரே!! ஏய் நீங்கள் இருவரும் இங்கே வாருங்கள். மகிழன், மதுசூதன் என்பது தானே உங்கள் இருவரின் பெயர்?”

“ஆமாம் தலைமைக் காவலரே”

“நீங்கள் இருவரும் உடனே கஷியிக்கு சென்று இந்த பெண்மணியின் கணவனுக்கு என்ன ஆச்சு என்பதை அறிந்து வாருங்கள்”

“ஆகட்டும் தலைமைக் காவலரே. இதோ இப்பொழுதே கிளம்புகிறோம்.”

என்று கூறி அவர்கள் சென்றனர். இப்போது வெளியூர் எங்கும் செல்லாத குடும்பத்தினரைப் பார்த்து பேசலானார் ஊர்த்  தலைவர்

“ஆக நம்ம ஊரிலிருந்து நான்கு நபர்கள் பக்கத்து ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவர்களை நம் தலைமைக் காவலர் பார்த்துக் கொள்வார். இனி இங்கிருக்கும் மக்களே உங்கள் அனைவருக்கும் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். இனி  அடுத்த அறிவிப்பு எங்களிடமிருந்து வரும் வரையில் நம் ஊரை விட்டு எவரும் வெளியே செல்லவோ அல்லது நம் ஊருக்குள் வரவோ அனுமதி கிடையாது. தங்கள் வீடுகளுக்கு விருந்தினர் வருவதானால் அவர்கள் நம் ஊர் எல்லைக் காவலர்களிடம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் மட்டுமே ஊருக்குள் அனுமதிக்கப் படுவார்கள். இதை தாங்கள் அனைவரும் கடைப்பிடித்தால் நம் ஊரைச் சுற்றும் தீயசக்திகளை நாம் ஒழித்திடலாம். அனைவரும் என்ன சொல்கிறீர்கள்?”

“ஆகட்டும் தலைவரே தாங்கள் கூறியது போலவே நடந்துக் கொள்கிறோம்”

என்று ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக கூறினர். அதைக் கேட்டதும் தலைவர்

“மிக்க மகிழ்ச்சி. இனி நீங்கள் அவரவர் வீடுகளுக்கு செல்லலாம். நான் கூறியது படியே நடந்துக் கொண்டால் தான் நம் ஊரை எங்களால் காப்பாற்ற முடியும். கோதகா இது உனக்கும் பொருந்தும். நீயும் வெளியே போகக் கூடாது புரிந்ததா? கேசவா இவன் உன் பொறுப்பு.”

“ஆப்படி செய்கிறேன் தலைவரே. நான் நீங்கள் அனுமதிக்காமல் கோதகனை அவன் ஊருக்கு அனுப்ப மாட்டேன்”

“ம்… இப்போ இந்த கூட்டம் கலைந்திடலாம். அனைவரும் சென்று வாருங்கள்”

தலைவன் கூறியதும் மக்கள் அவரவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர். கேசவனும், கோதகனும், லட்சுமியும் அவர்கள் வீட்டுக்கு வந்தனர். லட்சுமி வீட்டின் கதவைத்திறந்தாள். மூவரும் வீட்டினுள் சென்றதும் லட்சுமி..

“டேய் கோதகா நீ இங்க வர வழியில என்னத்த டா பார்த்த? நீ சொல்லும் போது எனக்கு உண்மையாவே தோணல டா. ஆனா இப்போ நம்ம தலைவர் இப்படி எல்லாம் பேசும் போது கொஞ்சம் பயம் வருது டா!! ஊர்ல எல்லாரும் சௌக்கியமா இருப்பா இல்ல!!”

“ஆமாம் அக்கா நீ உன் தம்பி நான் சொன்னா  நம்ப மாட்ட உங்க தலைவர் சொன்னா மட்டும் நம்புவியாக்கும்”

“அதுக்கில்லடா…. உண்மையிலேயே ஏதோ கெட்டது நடக்கப் போறா மாதிரியோ இல்ல நடந்துட்டா மாதிரியோ  எனக்கு தோண ஆரம்பிச்சுடுத்து டா”

“போச்சு டா கோதகா…உன் அக்கா சட்டுன்னு எதையும் நம்ப மாட்டா… தவறுதலா நம்பிட்டா அப்புறம் அதைப் பத்தியே யோசிச்சுட்டே இருப்பா. இன்னைக்கு நமக்கு சாப்பாடு ககடைச்சா மாதிரி தான் போ”

“ஆமாம் ஆமாம் ரொம்ப சொல்லாதீங்க. என் தம்பிக்கு என்னைப் பற்றித் தெரியும். நான் எல்லாம் சமைச்சு வச்சுட்டு தான் தலைவர் வீட்டுக்கே வந்தேன். அது தெரியுமா உங்களுக்கு? அதெல்லாம் தெரிஞ்சுக்காம பேசக்கூடாது சொல்லிப் புட்டேன்”

“சரிங்க எஜமானி அம்மா.”

“ஹா! ஹா! ஹா! போங்க. சரி சரி ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம்”

மூவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.

மறுநாள் மத்தியம் ஒரு மூன்று மணி அளவில் தலைவர் வீட்டுக்கு தலைமைக் காவலர் அவர் வட்ஸாவுக்கு அனுப்பிய இரு காவலர்களான ராமு, ரங்காவுடன் பதற்றமாக வந்தவர்

“தலைவரே!! தலைவரே !!!”

“வாருங்கள் காவலர்களே. என்ன ஆயிற்று? ஏன் நீங்கள் மூவரும் பதற்றமாக உள்ளீர்கள்? என்ன நேர்ந்தது?”

“தலைவரே இவர்கள் வட்ஸாவிலிருந்து வந்து கூறியதைக் கேட்டதும் நான் அதிர்ந்துப் போனேன்.”

“அப்படி தாங்கள் அதிர்ந்துப் போகும் அளவுக்கு என்ன கூறினார்கள்?”

“அதை அவர்களே சொல்வார்கள் கேளுங்கள் தலைவரே…ம்…ராமு ரங்கா சொல்லுங்கள். தாங்கள் கண்டதை, என்னிடம் சொன்னதை அப்படியே நம் தலைவரிடம் கூறுங்கள்”

ராமுவும் ரங்காவும் ஒன்றாக இருவரும் சேர்ந்து சொன்னதில் ஒன்றும் புரியாததால் தலைவர் அவர்களில் ஒருவரை விவரிக்கச் சொன்னார். அதற்கு ராமு தான் கூறுவதாகச் சொல்லி விவரிக்க ஆரம்பித்தான்….

“தலைவரே நாங்கள் இருவரும் வட்ஸாவை நெருங்கும் போதே அவ்வூரை இருள் சூழ்ந்திருந்தது. இத்தகைக்கு இது பனிக்காலமும் அல்ல அவ்வளவு இருள் சூழ்வதற்கு !!! என்று பேசிக்கொண்டே சென்றுப் பார்த்தோம். ஊரே மயான அமைதியில் இருந்தது. ஊரில் ஆள் நடமாட்டமே இல்லை. ஒரு மாடு ஆடு கூட நாங்கள் பார்க்கவில்லை. அவ்வூர் தலைவர் வீட்டுக்கும் சென்றோம் அவர் வீடும் திறந்திருந்தது ஆனால் எவருமே இல்லை. சரி ஒவ்வொரு வீடாக பார்ப்போம் என்று ஒவ்வொரு வீடாகச் சென்றுப் பார்த்தோம் ஆனால் அந்த ஊரில் மனிதர்களோ விலங்குகளோ எதுவுமே இல்லை தலைவரே. ஊரே காலியாக இருள் சூழ்ந்திருந்தது. ஏதோ பேய் பிடித்த ஊர் மாதிரி இருந்தது அதனால் நாங்கள் பயந்து வந்துவிட்டோம்”

“அது மட்டும் இல்லை தலைவரே…எங்களுக்கு ஒரு கீரியை பாம்பு சுற்றிக் கொண்டிருப்பதுப் போல ஒரு பதக்கம் கொண்ட சங்கிலி அங்கிருந்து கிடைத்துள்ளது”

“எங்கே காட்டுங்கள் பார்ப்போம். அதிலிருந்தே ஏதாவது தகவல் கிடைக்குமா என்றுப் பார்ப்போம்”

“தலைவரே……”

“என்ன ஆச்சு ஏன் அந்த சங்கிலியைத் தர மறுக்கிறார்கள் தலைமைக் காவலரே”

“அது வந்து தலைவரே அதை அணிந்துக் கொள்பவர் அகோரமாக உருமாறி விடுகின்றனர். மேலும் அதை அணிந்திருந்தததால் ராமுவை நம் ஊர் எல்லைக்குள் ஏதோ ஒரு சக்தி வர விடவில்லை. அதை கழற்றி எறிந்துவிட்டு வரச்சொன்னால் ராமுவை அந்த பதக்கம் செய்ய விடாமல் தடுத்தது. ஆகையால் அவன் மீது மயக்க பாணத்தை ஏய்து அவன் மயங்கியப் பின் அதைக் அவன் கழுற்றிலிருந்து கழற்றி எல்லையிலேயே ஒரு பானையில் போட்டு மந்திரிச்சு பானையின் வாயை துணிக் கொண்டுக் கட்டி மண்ணில் புதைத்து வைத்து விட்டு வந்துள்ளோம். ராமுவின் கழுத்திலிருந்து அந்த சங்கிலியை கழற்றியப் பின் தான் அவன் அவனாக மாறினான்.”

“அப்படியா !!! சரி அப்போ அந்த ஊர் மக்கள் எல்லாம் எங்கே சென்றிருப்பார்கள்? அந்த ஊரில் எப்படி இப்படி ஒரு சங்கிலி கிடக்கிறது? எனக்கு ஒன்றும் பிடிக் கிடைக்க மாட்டேங்குதே? தங்களுக்கு ஏதாவது புலப்படுகிறதா காவலரே?”

“எங்களுக்கும் புரியவில்லைத் தலைவரே. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் வட்ஸாவில் ஏதோ தீய சக்திகள் அந்த ஊர் மக்களை ஏதோ செய்தாகிருக்க வேண்டும்.”

என்று ரங்கா சொன்னதற்கு தலைமைக் காவலர்

“ஆனால் ஊருக்கு எந்த வித சேதமும் நேரவில்லை என்றல்லவா இருவரும் கூறினீர்கள். எப்படி ஊர் மக்கள் அத்தகைய தீய சக்திகளுடன் சண்டையிடாமலா இருந்திருப்பார்கள்!!! அப்படி ஏதாவது நடந்திருந்தால் ஊர் சுத்தபத்தமாக இருக்க வாய்ப்பில்லை”

“ஆமாம் தலைமைக் காவலரே. ஊர், வீடுகள் என எல்லாமும் சுத்த பத்தமாகத் தான் இருந்தது. எந்த வித சேதமுமின்றி தான் வட்ஸா இருந்தது”

“குழப்பமாக உள்ளதே தலைமைக் காவலரே!!! சரி சரி ராமு ரங்கா இவற்றை எல்லாம் ஊர் மக்களிடம் இப்போது சொல்லிக்கொள்ள வேண்டாம். வட்ஸாவுக்கு சென்ற மகனுக்காகக் காத்திருக்கும் தாயிடம் சென்று அவன் இன்னும் சற்று நாட்கள் அங்கு இருந்துவிட்டு வருவதாக தங்களிடம் செய்தி அனுப்பியுள்ளான் என்று கூறி அவரிடத்தில் இந்த பொற்காசுகளை கொடுத்துவிட்டு வாருங்கள்”

“ஆகட்டும் தலைவரே. நாங்கள் சென்று வருகிறோம்.”

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s