அத்தியாயம் 18: எல்லையில் ஏமாற்றம்

கோதகன் ஊர் எல்லையில் பார்த்ததையும், சுவாமிகள் சொன்னதையும் மனதில் அசைப் போட்டுக் கொண்டே தன் அக்காள் வீட்டிற்கு நடக்கலானான். வீடு சென்றடைந்ததும் அவன் அக்காள் லட்சுமி

“வாடா கோதகா வா வா..உட்காருப்பா. இந்தா முதலில் தண்ணீர் குடிச்சிட்டு சற்று இளைப்பாறு அதற்குள் உன் மாமா வந்துவிடுவார் அனைவருமாக சாப்பாடு சாப்பிடுவோம். எப்படி இருக்கிறாய்? ஊரில் அனைவரும் நலமா?”

“உங்கள் ஊர் தண்ணீரும் சுவையோ சுவை அக்கா. ஆங் அனைவரும் நலமே. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”

“நாங்கள் நன்றாக உள்ளோம் தம்பி. இதோ உன் மாமாவும் வந்து விட்டார். நீ அவருடன் பேசிக் கொண்டிரு நான் சாப்பாட்டை எல்லாம் எடுத்து வைக்கிறேன். வாங்க வாங்க யாரு வந்திருக்கான்னு பாருங்க”

“வாடா கோதகா வா வா!! நீ வரப்போறன்னு உன் அக்கா நேத்தேலேந்து அத செய்ய வா இதை செய்யவா தம்பிக்கு அது பிடிக்கும் தம்பிக்கு இது பிடிக்கும்ன்னு ஒரே அமர்களம் பண்ணிட்டா. சரி சரி நீ எப்படி இருக்க? ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”

“நான் நல்லா இருக்கேன் மாமாம. ஊர்லேயும் எல்லாரும் நல்லா இருக்காங்க.”

“கோதகா நீயும் மாமாவும் முகம் கை கால் கழுவிட்டு சாப்பிட வாங்கப்பா”

என்று லட்சுமி குரல் குடுத்ததும் இருவரும் எழுந்து சாப்பிடச் சென்றனர். சாப்பிட்டுக்கொண்டே கோதகன் ஊர் எல்லையில் தான் கண்ட காட்சியை தன் அக்காவிடமும் மாமாவிடமும் பகிர்ந்துக் கொண்டான். அதைக் கேட்ட லட்சுமி

“அட போடா!! நம்ம ஊர் எல்லையில் ராட்சதர்களாமே!! என்னங்க கேட்டீங்களா என் தம்பி சொல்லும் கதையை. நம்ம வீட்டுக்கு வர வழியிலே எதையோ பார்த்து பயந்திருக்கான்னு நினைக்கிறேன். இரு விபுதி எடுத்துக்கொண்டு வருகிறேன்”

“என்னடா சொல்லுற கோதகா? உண்மையாவா?”

“அட ஆமா மாமா. அக்கா தான் என்னை நம்பல நீங்களுமா? முதல்ல இந்த ஊர் தலைவரிடம் சொல்லி எச்சரிகை செய்யுங்கள்”

“ம்…சரி சரி …நீ சாப்பிடு நான் பார்த்துக் கொள்கிறேன். உன் அக்காள் வருகிறாள் அவளிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ளாதே”

“கோதகா உன் நெற்றியைக் காட்டு. இந்த விபூதி உன் மனதில் இருக்கும் பயமெல்லாத்தையும் எடுத்திடும். நிம்மதியா சாப்பிடுப்பா”

இருவரும் சாப்பிட்டு எழுந்தப் பின் லட்சுமியும் உணவருந்தினாள். பின் சற்று நேரம் படுத்துக்கொண்டு விட்டு. மாலையில் காபி அருந்தியதும் கோதகனை அழைத்துக்கொண்டு ஊர்த் தலைவர் வீட்டுக்குச் சென்றார் அவனின் மாமா கேசவன்.

ஊர் தலைவர் கேசவனைப் பார்த்ததும்

“வா வா கேசவா. யார் இந்த வாலிபன்?”

“தலைவரே இவன் பெயர் கோதகன் என் மைத்துனர்”

“ஓ அப்படியா!! என்ன தம்பி எங்க ஊர் பிடித்திருக்கிறதா?”

“வணக்கம் ஐயா! ஓ மிகவும் பிடித்திருக்கிறது”

“ம்… என்ன விஷயமாக வந்துள்ளாய் கேசவா?”

“தலைவரே இவன் அவர்கள் ஊரான கஷியிலிருந்து நம்மூருக்கு வரும் வழியில் ஏதோ பார்த்ததாக கூறுகிறான் அது தான் அதை தங்களிடமும் கூறிவிட்டுச் செல்லலாம் என வந்துள்ளோம்”

“அப்படியா!!! அப்படி என்ன பார்த்தாய்? எங்கே விவரமாக சொல் பார்ப்போம்”

என்று தலைவர் கேட்டதும் கோதகன் விவரமாக நடந்தவைகளை விளக்கினான். அதைக் கேட்டதும் ஊய் தலைவர்

“இவன் சொல்வதை கேட்டால் உண்மையாக தான் தோன்றுகிறது. சரி தம்பி நான் அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்கிறேன். கவலை வேண்டாம். கேசவா இதை அலட்சியம் செய்யாமல் நம் ஊர் மீது அக்கரைச் செல்லுத்தி இவ்வளவு தூரம் வந்து சொன்னதுக்கு மிக்க நன்றி. நீங்கள் இருவரும் மாலை சிற்றுண்டியை என்னுடன் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் வாருங்கள்”

என இருவரையும் அவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று அவர்களுக்கு மாலை சிற்றுண்டியைப் பரிமாறச் சொல்லி அவர்களுடன் தலைவரும் அமர்ந்து அருந்திய பின் இருவருக்கும் கொஞ்சம் பொன் பொருள் கொடுத்து அனுப்பி வைத்தார்‌‌. அதன் பின் அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டி கோதகன் சொன்ன விஷயம் பற்றி பேசி ஒரு முடிவெடுத்து எல்லை பாதுக்காப்புக்காக ஆட்களைப் பிரித்து மாயாபுரியை பாதுகாப்பு வளைத்துக்குள் கொண்டு வந்தனர் அவ்வூர் மக்கள்.

வழக்கம் போல அசுரர்கள் ஊர் எல்லையில் தங்கள் அரண்மனையை நிறுவுவதில் மும்முரமானார்கள். மந்திராசுரன், நவியாகம்ஷி ஆகியோர் மக்களை அரண்மனைக்கு வரவழைக்க வேண்டி ஊருக்குள் செல்ல ஆயத்தம் ஆகிச் சென்றவர்கள் ஊர் எல்லையில் பாதுகாப்பு பலமாக இருப்பதைக் கண்டனர். உடனே நவியாகம்ஷி

“என்ன இது மந்திரா அண்ணா? புதிதாக இருக்கிறதே!! ஏன் இப்படி பாதுகாப்பு போட்டுள்ளனர்? நம்மால் உள்ளே போக முடியாமல் போய் விடுமோ?”

“கவலை எதற்கு நவியா. வா வா அருகில் சென்றுப் பார்ப்போம்”

“இதுவரை எவ்வளவோ ஊர்களைக் கைப்பற்றியுள்ளோம். அங்கெங்கும் நாம் காணாத காட்சியை இந்த மாயாபுரியில் காண்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. ஏன் இவர்கள் ஊரில் ஏதாவது பொக்கிஷம் உள்ளதா?”

நவியாகம்ஷி சொன்னதைக் கேட்டதும் பலமாக சிரித்தான் மந்திராசுரன். அவனது சிரிப்பின் அர்த்தம் புரியாமல் அவனிடம்

“அண்ணா தாங்கள் இவ்வளவு சிரிக்கும் அளவுக்கு நான் ஏதும் சொல்லவில்லையே!! எதற்காக இந்த பலத்த சிரிப்பு என்பதை நான் அறிந்துக் கொள்ளலாமா?”

“ஓ !! தாராளமாக நவியா. நீ சொன்னதுப் போல பொக்கிஷம் இருந்தால் நமக்கென்ன நவியா? இவர்கள் அனைவரும் இன்னும் இரண்டே நாட்களில் நமது அடிமைகளாகப் போகிறார்கள். அதை நினைத்தேன் சிரித்தேன்”

“அது சரி தான் அண்ணா‌. சரி சரி நாம் ஊர் எல்லையை வந்தடைந்து விட்டோம்.”

அவ்விருவரையும் தடுத்து நிறுத்தினான் ஒரு காவலன்.

“சற்று நில்லுங்கள். நீங்கள் இருவரும் யார்? என்ன வேலையாக மாயாபுரி வந்துள்ளீர்கள்? யாரைக் காண வேண்டி வந்திருக்கிறீர்கள்?”

“அப்பப்பா! நவியா பார்த்தாயா !! எவ்வளவு கேள்விகள் கேட்கிறார்கள் ? ஏனப்பா இந்த மாயாபுரிக்கு இவ்வளவு பாதுகாப்பு? “

“எங்கள் ஊர் தலைவரின் ஆணை. சரி நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இங்கிருந்து நீங்கள் ஊருக்குள் செல்ல இயலாது. என்னை கேள்வி கேட்பதை விடுத்து என் கேள்விகளுக்கு பதிலளித்தால் உள்ளே செல்ல அனுமதிக் கிடைக்கும்”

“அண்ணா நாம் உள்ளே செல்ல இவர் அனுமதி வேண்டுமாம். ஹா! ஹா! ஹா!”

“பெண்ணே என்ன நகையாடுகிறாய்?”

“நவியா பாவம் இவன். சரி இனி நீ இவனாகு”

“என்ன? நீ இப்போது என்ன சொன்னாய்?”

என்று அந்த காவலன் கூறிமுடிப்பதற்குள் நவியாகம்ஷி அவனை தன் வயப்படுத்தி மற்ற காவலர்களிடம் மந்திராசுரனையும் நவியாகம்ஷியையும் ஊருக்குள் செல்ல அனுமதி வழங்கச் சொன்னான். அதுபடியே அனுமதியும் வழங்கப்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டே மாயாபுரி எல்லையில் கால் வைத்தனர்.

அவர்கள் கால் வைத்ததும் இருவரின் உடல் முழுவதும் நடுங்கியது. தீயில் கால் வைத்ததைப் போல சுட்டதும் இரண்டடிப் பின்னால் சென்றனர் மந்திராசுரனும், நவியாகம்ஷியும். இதைக் கண்ட காவலன் ஒருவன்

“என்ன செய்கிறீர்கள்? அது தான் அனுமதிக் கொடுத்தாகிவிட்டதே…ம்… உள்ளே செல்லுங்கள்.”

என்றதும் மீண்டும் முயற்சித்தனர் ஆனால் இருவராலும் முடியவில்லை. உடனே மந்திராசுரன் ஊர் எல்லைக்குள் இருந்த காவலன் மீது தன் சித்தியான பிராகாமியத்தை உபயோகிக்க முயற்ச்சித்தான் ஆனால் முடியவில்லை. நவியாகம்ஷி தன் வசம் வசியப்படுத்திய காவலன் ஊர் எல்லைக்குள் சென்றதும் அவள் பிடியிலிருந்து விடுப்பட்டு அவர்களையே மீண்டும் யாரென்று கேட்டது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவர்களின் சித்து விளையாட்டு மாயாபுரி ஊருக்குள் எடுபடாது என்பதை உணர்ந்த மந்திராசுரனும் நவியாகம்ஷியும் உடனே அங்கிருந்து புறப்பட வேண்டி திரும்பினார்கள். அப்போது அந்த காவலர்கள்

“எங்கே செல்கிறீர்கள் மாயாபுரி இந்த பக்கம் இருக்கிறது. நீங்கள் இருவரும் வந்த வழியே செல்கிறீர்கள்? திரும்புங்கள் ம்….”

என கூறிக் கொண்டே அவர்கள் பின் சென்றவன் சற்று தூரம் சென்றதும் அவ்விருவரும் மறைந்துப் போனதைக் கண்டவன் வேகமாக ஓடி வந்து மற்ற காவலர்களிடம் நடந்ததை விவரித்தான். இதை அறிந்த தலைமைக் காவலன் உடனே தங்கள் ஊர் தலைவரிடம் சென்று நடந்தவைகளை விவரித்தான்.

அதைக் கேட்ட தலைவன் சற்று அதிர்ந்தாலும் சுதாரித்துக் கொண்டு கேசவனையும் அவன் மைத்துனர் கோதகனையும் கையோடு அழைத்து வரும் படிச் சொன்னார். அவர்களும் தலைவர் ஆணைப் படியே அவர் வீட்டிற்கு வந்தனர்.

கோதகனிடம் அவன் கண்ட காட்சியை தலைமைக் காவலரிடம் விளக்கும் படிச் சொன்னார். கோதகனும் விளக்கமாக கூறி முடித்ததும் தலைவர் தலைமை காவலரிடம்

“தாங்கள் பார்த்தவர்களும் கோதகன் கூறுவதை போல் இருந்தார்களா?”

“ஏகதேசம் அப்படித்தான் இருந்தனர் ஆனால் அகோரமாக இருக்கவில்லை, அசுரர்கள் போல் தோற்றம் இருந்தது.”

“ஆக கோதகன் சொன்னது போலவே நம் ஊரைச் சுற்றி ஏதோ தீய சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உறுதியானது. இனியும் நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கலாகாது. உடனே ஊரைக் கூட்டுங்கள். நான் நம் மக்களிடம் பேசியாக வேண்டும். நம் ஊர் நலனுக்காகவும் நம் மக்கள் நலனுக்காகவும் சில முக்கிய முடிவுகளை உடனடியாக எடுத்து அதை அனைவரிடமும் அறிவிக்க வேண்டும்.”

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s