அத்தியாயம் 17: அதீத நம்பிக்கையால் நேர்ந்த பிழை

காற்கோடையனும் மந்திராசுரனுமாக கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதை மறு நாள் விடிந்ததும் அனைவரிடமும் கூறி அவர்களின் அபிப்பிராயங்களையும் கேட்க காத்திருந்தனர். மறு நாள் ஆனது. காற்கோடையன் அனைவரையும் வரவழைத்து பேசலானார்

“அனைவருக்கும் ஒரு விஷயத்தை இப்போது சொல்லப் போகிறேன். கவனமாக கேட்டுவிட்டு தங்கள் அபிப்பிராயங்களை சொல்லலாம். சரியா”

“சரி ஆசானே” என்று அனைவரும் ஒருசேர சொன்னார்கள் அதைக் கேட்ட காற்கோடையன்

“சரி. நம்ம நவியாகம்ஷி, மந்தாகிஷி மற்றும் மிளானாசுரி ஆகியோர் தாய்மார்கள் ஆனதிலும் நமது இனம் தழைத்ததிலும் எனக்கு பெரும் மகிழ்ச்சியே ஆனால் இதனால் நமது இலக்கு மாறிவிடக் கூடாதென்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆகையால் நான் மிகவும் யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். அது என்னவென்றால் நமது இந்த குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் வரை மந்தாகிஷியும், மிளானாசுரியும் இந்த தீவிலேயே நாம் நிறுவிய இந்த மாளிகையிலேயே இருப்பார்கள் அவர்களுடன் சிம்பாசுரனும் இருப்பான். நவியாகம்ஷியின் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பும் இவர்களையே சேரும். மற்ற அனைவரும் இன்றே நமது பயணத்தை மேற்கொண்டு கலிங்கா செல்ல வேண்டும். என்ன சொல்கிறீர்கள்? “

காற்கோடையன் தனது யோசனையைச் சொன்னதும் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின் மதிநாகசுரன் முன்வந்து

“ஆசானே நவியாவும் இங்கேயே இருக்கட்டும் மீதம் இருப்பவர்கள் அனைத்தையும் சமாளித்துக் கொள்வோம்”

“ம்….ம்…. அதுவும் சரி தான் மதிநாகசுரா.”

“இல்லை! இல்லை! ஆசானே நான் இங்கிருக்கவில்லை. தங்களுடனே கலிங்காவுக்கு கிளம்ப தயாராக உள்ளேன். என் குழந்தைகளை மிளானாவும் மந்தாவும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம். நான்கு பேர் இங்கே இருந்துவிட்டால் அங்கே நாம் உருவாக்க போகும் சாம்பீனிகளை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது? மேலும் ஒவ்வொரு ஊருக்குள்ளும் சென்று அவர்களை எப்படி நமது பரமபத அரண்மனைக்கு அழைத்து வருவது? ஆகையால் இவர்கள் மூவரும் இங்கிருக்கட்டும் நான் உங்களுடன் வருகிறேன்”

“நீ சொல்வது சரிதான் நவியாகம்ஷி. அதை எல்லாம் யோசித்துத்தான் இவர்கள் மூவரை மட்டும் இங்கிருக்கச் சொன்னேன். அதுவுமில்லாமல் மந்தாகிஷியின் அணிமா சித்தி நம் யாகம்யாழியிடமும், மிளானாசுரியின் சித்தி நவியாகம்ஷியிடமும் உள்ளது மேலும் சிம்பாசுரனின் சித்தியான கரிமா இப்போது அவசியப்படாது அதன் அவசியம் வரும்பொழுது நமது திட்டத்தை மாற்றிக் கொள்ளலாம். என்ன மதிநாகசுரா இப்போது புரிகிறதா?”

“புரிகிறது ஆசானே. நன்றாக புரிகிறது. நவியாவின் உடல்நலத்துக்காக சொன்னேன் ஆனால் எப்பொழுது அவளே சம்மதித்து விட்டாளோ இனி எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. எப்பொழுது புறப்படுவோம்?”

“நமது சிம்பா, மிளானா, மந்தா இருக்கப் போகும் இந்த தீவிற்கும் இந்த மாளிகைக்கும் பெயர் வைக்க வேண்டுமே!!! என்ன வைக்கலாம்…யாழி நீ தான் பெயர் வைப்பதில் சிறந்தவள் ஆயிற்றே எங்கே சொல்லுப் பார்ப்போம்!!”

என்று மந்திராசுரன் கூற யாகம்யாழி அவனிடம்

“மந்திரா அண்ணா ஏதோ அந்த விணங்களுக்கு சாம்பீனிகள் என்று ஒருமுறை பெயர் சூட்டியதற்கு தாங்கள் இப்படி கூறுகிறீர்களே!”

“பரவாயில்லை யாழி ஏதேனும் பெயர் சொல்லு அதையே வைப்போம்”

“ம்…ம்…. இந்த தீவில் தான் நம் இனம் தழைத்துள்ளதனால்….ம்…. என்றென்றும் நம் தலைவரான மஹாபலி யின் பெயரைச் சேர்த்து ….ம்… பலிதழைத் தீவு எப்படி?”

“ம்…நன்றாகவே இருக்கிறது யாகம்யாழி. இன்று முதல் இந்த தீவு பலிதழைத் திவு என்றே அழைக்கப் படும்”

“ஆசானே சற்றுப் பொறுங்கள் யாழி இந்த மாளிகைக்கும் பெயர் வைக்க வேண்டுமே!! அதையும் சொல்லட்டும் ஒன்றாக பாராட்டிடலாம். ம்… யாழி மாளிகைக்கு பெயர் என்ன?”

“இருங்கள் மந்திரா அண்ணா. சற்று யோசிக்க வேண்டாமா!!! ம்…. ஹாங் ….கிடைத்து விட்டது…இந்த மாளிகையில் நம்ம மிளானா அக்கா, சிம்பா மற்றும் மந்தா மட்டும் வசிக்கப் போவதனால் இதற்கு சிம்மிந்தா மாளிகை எனப் பெயர் வைக்கலாம்!! என்ன சொல்கிறீர்கள் ?”

“ம்… பலே பலே என் காலத்துக்குப் பிறகு தங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கோ பெயர் சூட்ட வேண்டுமெனில் நம் யாகம்யாழி என் வாரிசாக இருக்கிறாள் என்பதில் நான் அளவில்லா ஆனந்தம் கொள்கிறேன். சபாஷ் யாழி சபாஷ். சரி இந்த பலிதழைத் திவிலுள்ள சிம்மிந்தா மாளிகையிலிருந்து நாம் அனைவரும் புறப்படுவோமா கலிங்காவிற்கு?”

“ஆகட்டும் ஆசானே! சிம்மிந்தா மாளிகையையும், பலிதழைத்தீவையும், நம் பிள்ளைகளையும் மூவருமாக நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். நாங்ள் சென்று வெற்றிக் கண்டு, தங்களின் தேவையிருந்தால் வந்து அழைத்துச் செல்கிறோம் இல்லையேல் நமது இலக்கை அடைந்து வெற்றியுடன் பாதாளபுரிவனம் திரும்பிச் செல்லும் போது தங்களையும் நம் பிள்ளைகளையும் அழைத்துச் செல்கின்றோம். அதுவரை பாதுகாப்பாக இருங்கள்”

“ஆகட்டும் மதிநாகசுரா நீங்கள் சென்று வெற்றியுடன் திரும்புங்கள் நாங்கள் இங்கே பிள்ளைகளை வீரர்களாக வளர்க்கின்றோம். சென்று வென்று வாருங்கள்”

“நன்றி சிம்பா.”

“ஆகட்டும் மந்திரா. புறப்படுங்கள்”

கோபரக்கன் மிளானாசுரியிடம் சென்று…

“நமது பிள்ளைகள் அனைவரையும் பார்த்துக் கொள் மிளானா. நான் சென்று வருகிறேன்”

நவியாகம்ஷி மிளானா மற்றும் மந்தாகிஷியிடம்

“மிளானா, மந்தா இன்று முதல் நீங்கள் இருவரும் தான் எங்கள் பிள்ளைகளுக்கும் தாய். பிள்ளைகளை நன்றாக எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்து வளர்த்திடுங்கள். நாங்கள் சென்று வருகிறோம்”

என்று கூறிக்கொண்டே தன் பிள்ளைகளிடம்

“பாற்கடையானே உன்னை காண மீண்டும் இந்த பாற்கடலைத் தாண்டி வந்திடுவேனடா

நாதவேழிரி உன்னை நாள்தோறும் எண்ணிக் கொண்டிருப்பேனடி

ராட்சதரசி கூடியவிரைவில் இந்த அண்டசராசரங்களையும் ஆட்டுவிக்கப் போகும் மதியின் இளவரசி நீதானடி

நம்மாரசுரா நம்மால் இந்த உலகம் மாறப் போகிறதடா. அதில் நீ நன்றாக வாழப்போகிறாயடா

என் செல்வங்களே நான் சென்று வருகிறேன்”

என அக்குழந்தைகளைத் தூக்கி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர் அனைவரும். மீண்டும் அனைவரையும் அணிமா சித்திக் கொண்டு அணு அளவில் மாறியப் பின் சாம்பீனிகளை மூன்று கூடையிலும், காற்கோடையன், மந்திராசுரன், கோபரக்கன், நவியாகம்ஷி மற்றும் யாகம்யாழி ஆகியோர் ஒரு கூடையிலும் என நான்கு கூடைகளையும் துணியால் கட்டி அவற்றை கம்பில் மாற்றிக்கொண்டு பறக்கலானார்கள் மதிநாகசுரனும், சிகராசுரனும். அவர்கள் பறந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தனர் சிம்பாசுரனும், மந்தாகிஷியும், மிளானாசுரியும் கையில் பிள்ளைகளோடு. பறந்து சென்றவர்கள் இவர்கள் கண்களில் இருந்து மறைந்ததும் மாளிகைக்குள் சென்றனர்.

சில காலம் ஓடியது. அசுரர்கள் பிள்ளைகளாயிற்றே!! அசுர வேகத்தில் வளர்ந்தனர். அவர்களுக்கு அனைத்து வகையான சித்து விளையாட்டுகளையும் கற்பித்தனர்.

இவர்கள் இங்கே வளர்ந்துக் கொண்டிருந்த வேகத்தில் மற்ற அசுரர்கள் மதிநாகசுரன் தலைமையில் வெற்றிகரமாக கலிங்கா வந்தடைந்தனர். அங்கிருந்து தங்கள் வேலையைத் துவங்கினர்.

கலிங்கா, ஓதரா, உட்கலா, வாங்கா ஷுமா, அங்கா, விதேஹா, விரிஜி, மல்லா, ஷக்கியா, கோசலா, கஷி ஆகிய அனைத்து இடங்களையும் தங்கள் வசப்படுத்தி தோல்விகளின்றி சென்ற இடமெல்லாம் வெற்றிகளை குவித்துக் கொண்டே தங்கள் சாம்பீனி படைகளின் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டே அவற்றிற்கு சரியான பயிற்சிகள் அளித்துக் கொண்டே அடுத்தடுத்து அடி வைத்துச் சென்றனர் அசுரர்கள்.

இவ்வனைத்து இடங்களையும் கைப்பற்றிய பிறகு அவர்களின் அடுத்த இலக்கு வட்ஸா என்னும் இடம். அங்கே அந்த ஊரின் எல்லையில் வழக்கம் போல பரமபத அரண்மனையை நிறுவி மூவர் ஊருக்குள் சென்றனர். எப்போதும் எப்படி ஊர் மக்களிடம் சொல்லி அழைத்து வருவார்களோ அதேப் போல் இங்கேயும் செய்தனர்.

அன்று அவ்வூரைச் சேர்ந்த கோதகன் என்ற ஒரு வாலிபன் அவர்கள் பக்கத்து ஊரான மாயாபுரிக்கு தன் ஆக்காளைக் காணப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். இந்த பரமபத அரண்மனைப் பற்றியும் அதனுள் சென்று விளையாடி வெற்றிக் கண்டால் பொன்னும் பொருளும் வழங்கப்படும் என்பதைப் பற்றியும் அறிந்துக் கொண்டதும் அக்காள் வீட்டுக்கு அடுத்த நாள் செல்லலாம் என்று மனதில் எண்ணிக்கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்றவனிடம் அவன் தம்பியான கேந்தமதன்

“அண்ணா கோதகா நீங்கள் நம் அக்காள் வீட்டுக்குச் சென்று வாருங்கள். நான் இந்த பரமபத அரண்மனைக்குள் சென்று விளையாடி வெற்றியுடன் வருகிறேன். இதற்காக தங்கள் பிரயாணத்தைத் தள்ளிப் போடாதீர்கள். நமது அக்கா அங்கே தங்களுக்காக காத்திருப்பாள்.”

என்று தம்பி கேந்தமதன் கூறியதும் அது கோதகனும் அது தான் சரி என்று சொல்லிவிட்டுச் மாயாபுரிக்குச் சென்றான்.

வெற்றி மட்டுமே கண்டுக்கொண்டிருந்த அசுரர்கள் அன்று வரை அவர்கள் சென்ற ஊர்களில் எல்லாம் ஒருவரைக் கூட விட்டு வைக்காமல் அனைவரையும் சாம்பீனிகளாக்கினர். அடுத்த ஊருக்கு விஷயம் தெரியாதவாறு மிகவும் கவனமாக செய்து வந்தனர். தொடர் வெற்றிகளால் அவர்களுக்குள் அதீத நம்பிக்கை தலையெடுக்க சற்றே கவனக்குறைவு ஏற்பட்டது. பரமபத அரன்மணையைப் பற்றி விவரம் தெரிந்த கோதகன் தன் ஊரான கஷியிலிருந்து மாயாபுரி சென்றதை அசுரர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.

கோதகன் கஷியிலிருந்து மாயாபுரி சென்றடைவதற்குள் அவன் ஊர் மக்கள் அனைவரையும் சாம்பீனிகளாக்கினர் அசுரர்கள். அசுரர்களின் மாயாஜாலத்திலிருந்து வெளிவந்த கோதகன் மாயாபுரி எல்லைக்குள் நுழைய விடாமல் ஏதோ அவனைத் தடுத்தது. அப்போது அவ்வழியாக சென்ற ஒரு சாதுவிடம் தன் நிலைமையை எடுத்துரைத்தான் கோதகன். அதைக் கேட்டதும் அந்த சாது

“அப்படி எதுவும் இந்த மண்ணின் எல்லையில் நடக்க வாய்ப்பில்லையே!! சரி இரு நான் எங்கள் ஊரின் புணித நீரை உன் மீது தெளிக்கிறேன்.”

என்று கூறிக்கொண்டே ஏதோ மந்திரத்தை சொல்லி கோதகன் மீது மூன்று முறை புணித நீரைத் தெளித்ததும்

“ம்….இப்போது வந்து பார்”

“ஆஹா என்ன அற்புதம் சுவாமி என்னால் இப்போது வர முடிகிறதே!! ஏன் என்னால் அப்போது உள்ளே வர முடியவில்லை?”

“அதுவா நீ எங்கிருந்து வந்தாயோ அங்கே தான் அதற்கு பதிலும் உள்ளது….வரட்டுமா”

என கோதகனைப் பார்த்து புன்னகைத்து சொல்லிக் கொண்டே சென்றவர் சற்று தூரம் சென்றதும் காணாமல் போனார். அதைப் பார்த்ததும் அதிர்ந்துப் போனான் கோதகன். அவர் மறைந்துப் போன இடத்திற்குச் சென்று சுற்றும் முற்றும் பார்த்தான். திடீரென பூமியே அதிர்வதுப் போல இருந்ததும் நிமிர்ந்துப் பார்த்தவன் அதிர்ந்துப் போனான். ஏனெனில் அவன் கண்ட காட்சி அது போலிருந்தது. தூரத்தில் சாம்பீனிகள் படையெடுத்து மாயாபுரியை நோக்கி வருவதைக் கண்ட கோதகனின் மனதில்

“அவைகள் எல்லாம் என்ன? மனிதர்கள் போல தெரியவில்லையே!! ராட்சதர்களா? அவர்கள் ஏன் மாயாபுரி வரவேண்டும்? அய்யோ பார்ப்பதற்கே அகோரமாக இருக்கும் இவர்களுக்கு மாயாபுரியில் என்ன வேலை?”

என்று எண்ணிக் கொண்டே நிமிந்துப் பார்த்தவன் மீண்டும் அதிர்ந்துப் போனான். ஆயிரம் யானைகள் நடந்து வந்தால் எப்படி புழுதியைக் கிளப்பிவிடுமோ அதேப் போல தூரத்தில் முதலில் அவன் கண்ட அந்த அகோர உருவங்களின் படை வெரும் புழுதியை மட்டும் கிளப்பிவிட்டு மறைந்துப் போனது.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s