அத்தியாயம் 16: அசுரர் குலம் தழைத்தது

மதிநாகசுரனும் சிகராசுரனும் ஒரு சின்ன தீவில் இறங்கினர். அங்கே மணலில் அந்த கூடைகளை வைத்தனர். வெகு நாட்கள் பிரயாணம் செய்ததினால் அங்கு சற்று ஓய்வு எடுக்கலாம் என்றும் அப்படியே கிழுந்த கூடைத் துணியை மாற்றிடவும் எண்ணி, கூடைகளை கீழே வைத்ததும்  முதல் இரண்டு கூடைகளின் துணியை அவிழ்த்து கூடைக்குள் இருந்த அசுரர்களை வெளியே வரச்சொன்னான் மதிநாகசுரன். பின் மந்தாகிஷியையும் யாகம்யாழியையும் மீண்டும் அவரவர்களை மாற்றும் படிச் சொல்ல அனைவரும் அவரவர் உருவம் கொண்டனர். பழையபடி மாறியதும் ஆசான் மதிநாகசுரனைப் பார்த்து

“மதிநாகசுரா ஏன் இங்கு இறங்கியுள்ளோம்? இது என்ன இடம்? ஏன் கலிங்கா சென்றடைவதற்கு முன்னதாக இங்கு இருவரும் இறங்கினீர்கள்?”

என்று பல கேள்விகளை அடிக்கிக் கொண்டே போனார் ஆசான். அதற்கு மதிநாகசுரன்

“ஆசானே !!பொறுமை! பொறுமை! அதைச் சொல்லத்தானே உங்கள் அனைவரையும் கூடையிலிருந்தே வெளிவரச்செய்தேன். சரி அந்த சாம்பீனிகளையும் கூடையிலிருந்து சற்று நேரம் விடிவிக்க வேண்டுமா? இல்லை அப்படியே விட்டு விடலாம?”

“அவைகளுக்கு ஒன்றும் நேர்ந்திடாது. முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்”

“ஆசானே இங்கே பாருங்கள் இந்த கூடைக் கட்டப்பட்டிருந்த துணி எப்படியோ கிழிந்துள்ளது. அதனால் கூடை கீழே இறங்கியது. இதன் துணியை மாற்றாமல் நாங்கள் சென்றிருந்தால் இந்தக் கூடையும் அதனுள்ளே இருந்த நம்மவர் நால்வரும் இந்த கடல் உயிரினங்களுக்கு இரையாகி இருப்பார்கள்.”

“அதை கட்டியிருந்த துணி எப்படி கிழிந்தது?”

என்று காற்கோடையன் கேட்டதும் மிளானாசுரி, சிம்பாசுரன் மற்றும் கோபரக்கன் மூவரும் மந்தாகிஷியைப் பார்த்து முறைத்தனர். அதை கவனித்த சிகராசுரன் சட்டென

“அது எங்களுக்கு தெரியவில்லை ஆசானே!! காற்றினால் கூட கிழிந்திருக்கலாம். சற்று நேரம் நாம் இங்கே இளைப்பாறிய பின் செல்வோம். அதுவரை நம்மைச் சுற்றியுள்ள பெருங்கடலைக் கண்டு களியுங்கள்.”

என சமாளித்தான். உடனே மிளானாசுரி மந்தாகிஷி அருகில் சென்று.

“மந்தா நாங்க உன்னை இந்த தடவை காட்டிக் கொடுக்கவில்லை ஆனால் மறுபடியும் இதுபோல் செய்திடாதே. சிகராசுரனும் மதிநாகசுரனும் கவனித்திருக்கவில்லை என்றால் நாம் இந்த கடலுக்குள் மூழ்கியிருப்போம். இதோ இப்போது கடலைப் பார்த்து ரசித்துக் கொள். புரிகிறதா?”

“சரி அக்கா. என்னை மன்னித்து விடுங்கள். இனி இது போல் செய்யமாட்டேன்.”

என்று மந்தாகிஷி கூறியதும் அனைவரும் சற்றி கடல் அலைகளில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த ஆசான்

“என்ன மதிநாகசுரா புறப்படுவோமா? இவர்களை இப்படியே விட்டோமேயானால் அவர்களின் இலக்கை மறந்திடப் போகிறார்கள்!”

“சரி ஆசானே இங்கிருந்து கிளம்பலாம். அனைவரும் வாருங்கள். யாகம்யாழி,  மந்தாகிஷி ம்…ஆகட்டும்”

என்று மதிநாகசுரன் சொன்னதும் மீண்டும் அணிமா சித்தியை பிரயோகித்து அனைவரும் அணு அளவாக மாறி அவரவர் கூடைகளுக்குள் சென்றனர். இரண்டு கூடைகளையும் புது துணிக் கொண்டு கட்டியதும் அதை கம்பில் மாட்டி மீண்டும் காற்றில் பறக்க ஆரம்பித்தனர் மதிநாகசுரனும், சிகராசுரனும்.

இரண்டாவது கூடைக்குள் இருந்த சிம்பாசுரன் தன் மனைவியான மந்தாகிஷியைப் பார்த்து

“மந்தா நீ தப்பித்துக்கொண்டாய்!! மிளானாசுரியோ அல்லது கோபரக்கனோ துணியை கிழித்தது நீ தான் என்று சொல்லியிருந்தால் !!! ஆசானின் கோபத்துக்கு ஆளாகியிருப்பாய். தயவுசெய்து அது போல எதுவும் செய்திடாமல் அமைதியாக வா. அது தான் சமுத்திரத்தை சற்று நேரம் பார்த்து ரச்சித்தாகிவிட்டயே இனி உன் கையை வைத்துக்கொண்டு கலிங்கா போய் சேரும் வரைச் சும்மா இரு. புரிகிறதா?”

“புரிந்தது சிம்பா. நான் என்றுமே இனி இதுபோல் நடந்துக்கொள்ள மாட்டேன். என்னை எல்லாரும் மன்னியுங்கள்”

“நீ வேண்டுமென்று எதையும் செய்யவில்லை என்பது நாங்கள் அனைவருக்கும் நன்கு அறிந்ததே. நீ ஒரு ஆர்வக்கோளாறு என்பதும் எங்களுக்கு நன்றாக தெரியும் மந்தா, அதனால் தான் நானும், கோபரக்கனும்,  சிகராசுரனும் உன்னைக் காட்டிக்கொடுக்கவில்லை!”

“என்ன அக்கா சொல்கிறீர்கள்? சிகராசுரனுக்கு எப்படித் தெரிந்தது?”

“அவனுக்கு தெரிந்தா இல்லையா என்பது என்னால் ஊர்ஜிதமாக சொல்ல முடியாது ஆனால் அவன் உன்னைப் பார்த்தப் பார்வையில் எனக்கு புரிந்தது அது தான். அதனால் சொன்னேன்”

“அப்பப்பா இனி எதையும் பார்க்கும் ஆர்வம் என் மனதில் எழவே எழாதுப்பா…போதும்!! போதும் !!இது எனக்கு நல்ல பாடமாகிவிட்டது. அதை நான் கற்றும் கொண்டுவிட்டேன்”

“சரி சரி இந்த பேச்சை விடு. நாம் கவிங்காவுக்கு சென்றதும் வேலையைத் துவங்குவோமா? இல்லை சிலபல நாட்கள் கழிந்ததும் துவங்குவோமா? இதைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா கோபரக்கா?”

“இல்லை சிம்பா! எனக்கு அதைப் பற்றி ஒரு விபரமும் தெரியாது. பார்ப்போம் அங்கே போனதும் ஆசான் சொல்வார் அது படி நடக்க வேண்டியது தான்.”

“அதுவும் சரி தான் கோபா”

என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் மெல்ல கண் அசந்தனர். வெகு நேரம் நன்றாக உறங்கினர். மிளானாசுரி முதலில் விழித்துக் கொண்டாள். அவளுக்கு அவர்கள் பறக்காது ஒரே இடத்தில் நிற்பதுப் போல தோன்ற உடனே கோபவையும் சிம்பாவையும் எழுப்பி விவரத்தைக் கூறினாள். கோபரக்கன் அவளிடம்

“எதற்கு நீ இப்படி பதற்றம் ஆகிறாய் மிளானா? ஒரு வேளை கலிங்கா வந்தடைந்திருப்போமோ என்னமோ!! சற்று பொறுத்திருந்துப் பார்ப்போம். எப்படியும் மதி அல்லது சிகரா வந்து தான் நம்மை திறந்து விட வேண்டும் இல்லையா அது வரை காத்திருப்போம்”

“கோப சொல்வது மிகச் சரி. மிளானா நீ அமைதியாக அமர்ந்திரு. கலிங்கா வந்துவிட்டால் அவர்கள் நம்மை வெளியே அழைப்பார்கள். கவலைவேண்டாம்”

என மூவரும் பேசிக் கொண்டிருந்ததில் மந்தாகிஷியும் எழுந்துக் கொண்டாள். அவள் எழுந்ததும்

“என்ன ஆயிற்று? ஏன் நாம் ஒரே இடத்தில் இருப்பதுப் போல தோன்றுகிறது? நாம் கலிங்கா வந்துவிட்டோமா?”

என்று மிழானாசுரி கேட்டவைகளையே இவளும் கேட்க சிம்பாசுரன் அவளிடம் மிளானாவுக்கு சொன்ன விஷயங்களையே மீண்டும் சொன்னான்.
இரண்டாவது கூடையில் இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் குழந்தைகள் அழும் சத்தம் கேட்டது. உடனே மந்தாகிஷி

“ஹேய் குழந்தைகள் அழுகுரல் கேட்கிறது. அப்படி என்றால் நம்ம நவியாகஷிக்கு குழந்தைப் பிறந்து விட்டன. ஒரு வேளை அதற்காகத் தான் நின்றிருப்பார்களோ?”

“இருக்கலாம்!! நம்மையும் திறந்து விட்டிருந்தால் நாமும் உதவியிருப்போமே!!”

“ஆமாம் அக்கா. நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் ஏன் நம்மை வெளியே விடவில்லை?”

“சரி அப்படியே நவிக்கு குழந்தைப் பிறந்திருந்தாலும் ஒரு குழந்தையின் அழுகுரல் அல்லவா கேட்க வேண்டும் ஆனால் எனக்கு நிறைய குழந்தைகளின் அழுகுரல் கேட்கிறதே!!! உங்களுக்கெல்லாம் அப்படி கேட்கிறதா?”

“ஆமாம் மிளானா எனக்கும் மூன்று நான்கு குழந்தைகள் அழுவதுப் போல கேட்கிறது”

“எங்களுக்கும் அப்படித் தான் கேட்கிறது”

என்றனர் சிம்பாசுரனும், மந்தாகிஷியும்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அவர்களின் கூடையை திறப்பதுப் போல இருக்க அனைவரும் ஒரு பக்கமாக அமர்ந்துக் கொண்டனர். சிகராசுரன்  கூடையைத் திறந்து அவர்களை வெளியே வரச் சொன்னான். வெளியே வந்ததும் அவர்கள் கண்ட காட்சி அவர்கள் கண்ணில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. அங்கு மற்றவர்களும் மகிழ்ச்சியிலிருந்தனர். மீண்டும் ஏதோ ஒரு தீவில் இருந்தனர்.

அங்கேயிருந்த ஒரு மரத்தின் நிழலில் நவியாகம்ஷி தன் இடது புறம் இரண்டுக் குழந்தைகள் வலது புறம் இரண்டு குழந்தைகள் என நான்கு அசுரர்குல அடுத்த வாரிசுகளை வைத்துக் கொண்டு படுத்திருந்தாள்‌. அவளிடம் வேகமாக சென்றனர் சிம்பாசுரன், கோபரக்கன், மிளானாசுரி மற்றும் மந்தாகிஷி. அவர்களின் அடுத்தத் தலைமுறையினரை அனைவருமாக வரவேற்றனர்.

காற்கோடையனுக்கு கலிங்கா சென்றடைய காலதாமதம் ஆகிறதே என்று அறிவு உணர்த்தினாலும் அவரின் மனம் அந்த பிஞ்சு அசுரர் குலத்து வாரிசுகளைப் பார்க்கும் போது மகிழ்ச்சியில் மதிநாகசுரனை கட்டி அனைத்துக் கொண்டார்.

மதிநாகசுரன் தன் ஆசானிடம்

“ஆசானே தாங்கள் தான் எங்கள் அனைவரையும் வளர்த்து ஆளாக்கினீர்கள் இனி எங்கள் பிள்ளைகளையும் தாங்கள் தான் வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் எங்கள் பிள்ளைகளுக்கு தாங்களே நல்ல பெயர்கள் வைக்கவேண்டும்”

“வைத்து விட்டால் போகிறது. உங்களை எல்லாம் வளர்த்த நான் இனி அடுத்து தங்களின் வாரிசுகளையும் சிறந்தவர்களாக வளர்த்திடுவேன். என் முதுமை என்னை ஆட்கொள்ளாமல் இருக்க வேண்டும் அதற்காக என்றென்றும் அந்த ஈசனை வேண்டிக் கொள்வேன். சரி நம்ம மதி மற்றும் நவியின் வாரிசுகளான நான்கு குழந்தைகளுக்கும் பெயர்கள் யோசிக்க வேண்டுமே. ம்…..ம்…..இருங்கள் சற்றுப் பொறுங்கள்”

என்று கூறிவிட்டு காற்கோடையன் தனியாக சென்று ஓரிடத்தில் கடலைப் பார்த்தமர்ந்தபடி அமர்ந்துக் கொண்டு யோசித்தார். மற்றவர்கள் பிறந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டும் அவர்களுக்குள் பேசிக் கொண்டுமிருந்தனர். அப்போது மிளானாசுரி

“அடியே யாழி நீ தான் நவியாக்கு பிரசவம் பார்த்தாயா?”

“ஆமாம் மிளானா அக்கா. நான் தான் பார்த்தேன்”

“யாழி அக்கா எங்களையும் உதவிக்கு அழைத்திருக்கலாம் இல்லையா.”

“அழைக்கும் நிலையில் இங்கு எவருமில்லை மந்தா. திடீரென நவியாக்கு வலி வந்தது. உடனே தரையிக்கச் சொன்னார் ஆசான். ஆனால் அவர்கள் நம்மை இறக்கி வைக்க ஏதாவது தீவு தென்படுமா என்ற தேடலில் இருந்தனர். அவர்கள் கண்ணில் இந்த தீவு தென்பட்டதும் தரையிறக்கினர். கீழே இறங்கி நவியாவை அணிமாவிலிருந்து விடுப்படித்தியதும் முதல்ல இந்த குட்டிப் பையன் வந்தான். அவனுக்குப் பின்னால் இவள் வந்தாள். இவளுக்கு பின் இவள் அதற்குப் பிறகு இதோ இவன் இந்த கடைக்குட்டி வந்தான். மற்றவர்கள் அனைவரும் பதற்றத்திலிருந்ததால் தங்களை திறந்து விட அவர்களுக்கு நிச்சயம் தோன்றிருக்காது.”

என நடந்ததைப் பற்றியும், நான்கு குழந்தைகளின் வரவுப் பற்றியும்  விரிவுரை அளித்தாள் யாகம்யாழி.
அதைக் கேட்டதும் மிளானாசுரி

“நீங்கள் நால்வரும் என்ன மனநிலையில் இருந்திருப்பீர்கள் என என்னால் உணர முடிகிறது யாழி. எங்களுக்கு நாங்கள் ஏதோ ஓர் இடத்தில் இறங்கி விட்டோம் என தோன்றியது. ஆனால் ஏன் எதற்கு என்ற விவரம் தெரியாததால் நாங்களாகவே ஒவ்வொரு காரணங்கள் கூறிக்கொண்டு அமர்ந்திருந்தோம்.”

என்று கூறினாள். இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலே காற்கோடையன் வேகமாக அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சாய்ந்து சாய்ந்து நடந்து வந்து ஓர் இடத்தில் மணலில் அமர்ந்தார் அங்கிருந்து மதிநாகசுரனிடம்

“மதிநாகசுரா உன் குழந்தைகளும் நம் இனத்தவரின் அடுத்த வாரிசுகளுமான நம் செல்வங்களை பிறந்த வரிசைப்படி தூக்கிக் கொண்டு இங்கே வாருங்கள்”

என்று ஆசான் கூறியதும் முதல் மகனை மதிநாகசுரனும்,  இரண்டாவது மகளை நவியாகம்ஷியும், மூன்றாவது மகளை மந்திராசுரனும், நான்காவதாக பிறந்த மகனை யாகம்யாழியும் தூக்கிக் கொண்டு ஆசான் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றனர்.

காற்கோடையன் மதிநாகசுரனிடமிருந்த முதல் பிள்ளையை கையில் வாங்கி கண்களை மூடி ஏதோ மந்திரத்தை உச்சாடனம் செய்து பின் அந்த குழந்தைக்கு  பாற்கடையான் என்று பெயர்ச்சூட்டினார். 

அடுத்து நவியாகம்ஷியை அழைத்து அவள் கையிலிருந்த பெண் குழந்தையை வாங்கி மந்திரத்தை உச்சாடனம் செய்ததும் அக்குழந்தைக்கு நாதவேழிரி  என்ற பெயரை வைத்தார்

மந்திராசுரனிடமிருந்து வாங்கி தன் மடியில் படுக்கவைத்துக் கொண்ட மூன்றாவது குழந்தைக்கு ராட்சதரசி என்றும்

நான்காவது குந்தையை யாகம்யாழியிடமிருந்து வாங்கிக் கொண்டு மற்ற மூன்று குழந்தைகளுக்கும் உச்சாடனம் செய்த மந்திரத்தை மீண்டும் கூறி அந்த கடைக்குட்டி அழகான ஆண் குழந்தைக்கு
நம்மாரசுரன் என்றும்

நான்கு குழந்தைகளுக்கும் பெயர் சூட்டி அக்குழந்தைகளை ஆசான் வைத்தப் பெயர் சொல்லிச் சொல்லி அழைத்து  அனைவரும் மகிழ்ந்தனர்.

அப்போது மிளானாசுரிக்கு வலி ஏற்பட்டது. உடனே அவளை நவியாகம்ஷியைப் படுக்க வைத்த இடத்திலேயே படுக்க வைத்தனர். அவளுக்கு பிரசவம் பார்க்க யாழியும், மந்தாகிஷியும் சென்றனர்.

சற்று நேரத்தில் மிளானாவுக்கும் கோபரக்கனுக்கும் இரண்டு மகன்கள் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் பிறந்தன. மீண்டும் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தனர். கோபரக்கன் ஆசானிடம் தன் பிள்ளைகளுக்கும் பெயர் சூட்டும்படி சொல்ல அவரும் மதிநாகசுரன் பிள்ளைகளுக்கு செய்தவாறே மூன்று குழந்தைகளையும்  நீரில் அலம்பி தூய்மைப்படுத்தியதும் எடுத்துவரச் சொல்லி மந்திரத்தை உச்சாடனம் செய்தபின்

முதல் ஆண் குழந்தைக்கு கேந்தகாரகன் என்றும் இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு வியழியசுரி என்றும் மூன்றாவது கடைக்குட்டிக்கு
நரமாழியரக்கன் என்றும் பெயர் சூட்டினார்.

அடுத்து மந்தாகிஷிக்கும் சிம்பாசுரனுக்கும் தான் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் யாகம்யாழி மந்தாகிஷியிடம்

“என்ன மந்தா? நீயும் உன் பிள்ளையும் / பிள்ளைகளும் என்ன சும்மா இருக்கிறீர்கள்? பார்த்தீர்களா நம்ம நவியாவையும் மிளானாக்காவையும். மடமடவென பெற்று வேலையை முடித்து விட்டார்கள்.ஹா! ஹா! ஹா!! ஒரு வேளை உங்களுக்கெல்லாம் இப்படி பிரசவம் பார்க்க வேண்டி வரும் என்பதால் தான் அந்த பைரவி எனக்கு திருமண ஆசையை கொடுக்கவில்லைப் போல தோன்றுகிறது!!! மந்தா அடுத்து உன் பிரசவம் தான்!! என்று சொல்லி முடிக்கவும் மந்தாகிஷிக்கு வலி வரவும் சரியாக இருந்தது. அவளுக்கு யாழியும் நவியாவுமாக பிரசவம் பார்த்தனர்.

சிம்பாசுரனுக்கும், மந்தாகிஷிக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தன. அனைவரும் ஆச்சர்யத்தில் என்ன செய்வதென்று தெரியாது திகைத்துப் போனார்கள். ஏனெனில் அவர்கள் அன்று தான் முதன்முதலில் அவர்கள் இனக் குழந்தைகளை காண்கின்றனர். ஆச்சர்யம் ஒருபக்கம் இருந்தாலும் அவர்கள் மனதில் மகிழ்ச்சி அந்த கடலினும் பெரிதாக பொங்கிக் கொண்டிருந்தது.

சிம்பாசுரன், மந்தாகிஷி குழந்தைகளுக்கும் காற்கோடையன் பெயர் சூட்டினார்
முதல் பெண் குழந்தைக்கு சிந்தாசுரி
இரண்டாவது ஆண் பிள்ளைக்கு ராவினாசுரன்
மூன்றாவது பெண்ணிற்கு சிப்பியாழிசுரி
நான்காவது பெண் குழந்தைக்கு சிச்சத்தசுரி
ஐந்தாவது ஆண் கடைக்குட்டிக்கு ரவமாசுரன்

ஆக அசுரர் இனம் தழைத்த அந்த தீவில் அவர்கள் ஒரு பைரவி சிலையை நிறுவி பூஜைகள் மேற்கொண்டனர். அன்று பச்சிளம் குழந்தைகளுடன் பிரயாணம் செய்யமுடியாத காரணத்தால் அந்தத் தீவிலேயே சிறிய மாளிகை ஒன்றை தன் மந்திர சக்கியால் உருவாக்கினார் காற்கோடையன். அன்று அங்கு அந்த மாளிகையில் அனைவரும் தங்கினர். சாம்பீனிகளையும் அணிமாவிலிருந்து வெளிவரவைத்து அவைகளையும் அந்த மாளிகையில் தங்க வைத்தனர். அனைவரும் அவரவர் அறைகளுக்குள் குழந்தைகளுடன் சென்றதும்

மந்திராசுரன் காற்கோடையனிடம்

“ஆசானே இப்போது எப்படி இந்த பிஞ்சுக் குழந்தைகளுடன்  நாம் பிரயாணம் செய்வது?”

“அதைப் பற்றித் தான் நான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன் மந்திராசுரா!”

தொடரும்….Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s