அத்தியாயம் 61: விடாது ஆசை!

ராமானுஜமும் அம்புஜமும் அவர்கள் டி.வி.எஸ் 50 யில் நவீன் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிப்பாட்டி விட்டு கேட்டு வரைச் சென்றதும் அதை திறக்க சற்று யோசித்தார் ராமானுஜம். அதை கவனித்த அம்புஜம்

“இவ்வளவு தூரம் வந்துட்டோம் உள்ளே போறதுக்கு என்னத்துக்கு யோசிக்கறேங்கள். நாம பொண்ணப் பெத்தவா… வேற வழி! வாங்கோ”

என்று கேட்டைத் திறந்தாள். உடனே உள்ளேயிருந்து பர்வதம் எட்டிப் பார்த்து

“வாங்கோ வாங்கோ. உள்ளே வாங்கோ என்று வரவேற்றாள்”

அதைப் பார்த்ததும் மிருதுளா பெற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பர்வதம் யாரை வரவேற்கிறாள் என்று எட்டிப் பார்த்த ஈஸ்வரனும் வாய் முழுவதும் சிரிப்புடன் வரவேற்க ராமானுஜமும் அம்புஜமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

இது தான் சாமர்த்தியவாதிகளின் இயல்பு. ஆம் இங்கு அன்று அசிங்கப்பட்டு அவமானப்பட்டு போனது மிருதுளாவின் பெற்றவர்கள் அதனால் அவர்களால் சகஜமாக பழக முடியாமல் தடுத்தது அவர்களின் வேதனையும், அவமானமும் ஆனால் அவமானப்படுத்தி அசிங்கப்படுத்திய ஈஸ்வரன் பர்வதம் இருவரும் ஒன்றுமே நடக்காதது போல வரவேற்றனர்.

அடித்தவனை விட அடி வாங்கியவனுக்குத்தானே வலி அதிமாக இருக்கும். அடித்தவனுக்கு சிரிக்க சொல்லியா கொடுக்க வேண்டும். மீண்டும் அடுத்தவர் உணர்வுகளை நாக்கு என்னும் சாட்டைக் கொண்டு விலாசி விளையாட ஆள் கிடைத்து விட்டனர் என்ற மகிழ்ச்சியின் வெளிபாடு என்பது பேச ஆரம்பித்தால் தானாக தெரிந்துவிடும். இது போன்றவர்கள் நாக்கு என்னும் ஒரு நச்சுயிரியை வைத்து அப்படியும் இப்படியுமாக பேசி எப்படியும் வாழ்வார்கள். ஆகையால் இவர்கள் நடந்தவைகளை மறந்தது போலவே நடந்துக்கொள்வதில் கெட்டிக்காரர்கள். இது போன்றவர்கள் அவர்கள் தவறுகளை உணர்வதென்பது என்றுமே நடந்திடாது ஒன்றாகும். இப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகி வாழ்வதே நல்லது.

அந்த காலத்தில் பெண்ணைப் பெற்றவர்கள் அனைவரும் கடந்து வந்த பாதையே அது. ராமானுஜமும் அம்புஜமும் ஏதோ தவறிழைத்தைப் போல தயங்கி தயங்கி தங்கள் மகளின் சீமந்தத்தைப் பற்றி பேச்சை ஆரம்பித்தனர். அதைக் கேட்டதும் ஈஸ்வரன்

“ஓ!! ஆமாம் அது வேற இருக்கு இல்ல? எப்போ வர்றது?”

என்று திமிராக கேட்க அதற்கு ராமானுஜம் பொறுமையாக

“அடுத்த வாரம் பத்தாம் தேதி நல்ல நாள்ன்னு குறிச்சுக் குடுத்திருக்கா. அது தான் அதைப் பத்தி உங்க கிட்ட பேசிட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கோம்”

“பேஷா பண்ணிடலாம். பத்திரிகை எனக்கு தெரிஞ்ச ப்ரஸ் ஒண்ணு இருக்கு அங்கே குடுத்திடுங்கோ. பத்திரிகை எழுதி வாங்கியாச்சா?”

“இதோ இருக்கு நீங்க படிச்சுட்டு எல்லாம் சரியான்னு சொல்லுங்கோ ப்ரிண்ட்டுக்கு கொடுத்திடலாம்”

என்று ராமானுஜம் ஒரு பேப்பரை ஈஸ்வரனிடம் கொடுத்தார். அதை வாங்கிப் படித்த ஈஸ்வரன் எல்லாம் சரியா இருக்குன்னு சொல்லும் போது பர்வதம் குறுக்கிட்டு

“பதினோரு நாள் தானே இருக்கு. எப்படி எல்லாருக்கும் பத்திரிகை போய் சேரும்?”

“கவலை வேண்டாம் மாமி நாம ஸ்பீடு போஸ்ட்ல அனுப்பிடலாம்”

என்றாள் அம்புஜம்.

ஈஸ்வரனும் பர்வதமும் செய்ய வேண்டியதை ராமானுஜமும் அம்புஜமும் செய்கிறார்களே என்ற எந்த வித கூச்சமும் இன்றி கேள்வி மேல கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர் மூத்த தம்பதியர். இடையிலே பர்வதம் அடுப்படிச் சென்று காபி போட்டு வந்து அவர்களிடம் கொடுத்துக் கொண்டே

“உங்க பொண்ணுக்கு கறுப்புப் புடவை எடுக்கணும் மறந்திடாதீங்கோ”

என்றாள். அதற்கு அம்புஜம்

“நிச்சயமா எடுப்போம் மாமி. அது மட்டுமில்லாமல் சீமந்தத்துக்கு பட்டுப் புடவையும் எடுக்கப் போறோம்”

என்றதும் கப்சிப் ஆனாள் பர்வதம். பின் ஈஸ்வரன்

“நவீனுக்கு சொல்லணுமே.”

“நாங்க நேத்தே மாப்பிள்ளைகிட்ட சொல்லியாச்சு அவரும் லீவு போட்டு வரேன்னு சொன்னார்.”

என்று அம்புஜம் தான் பேசியதை எதார்த்தமாக கூறியதும் பர்வதம்

“அப்போ எல்லாம் டிசைட் பண்ணிட்டு தான் எங்ககிட்ட ஒப்புக்கு சொல்ல வந்தேங்களாக்கும்”

“அச்சச்சோ மாமி….. ஆக்சுவலா இதை நீங்க தான் ஏற்பாடு பண்ணணும் அதுதான் நம்ம வழக்கம் ஆனா உங்ககிட்ட இருந்து எந்த வித தகவலும் வராததால தான் நாங்க பேச்சை ஆரம்பிக்க வேண்டியதா ஆயிடுத்து. ரெண்டு சைடும் பேசாம இருந்தா அப்புறம் ஒன்பதாம் மாசம் ஆரம்பிச்சுடும் அதுனால தான் வந்தோம்”

“நாங்க பண்ணணும்னு எங்களுக்கும் தெரியும் அதுக்கு உங்க பொண்ணு இங்க இருந்திருக்கணும்”

என மனசாட்சி இல்லாமல் கூறினாள் பர்வதம் அதைக் கேட்டதும்

“இங்கேயே நீங்க நல்லா பார்த்திண்டிருந்தா எங்களுக்கு ஏன் இந்த வீண் அலைச்சல் எல்லாம் சொல்லுங்கோ. இங்கேயிருந்து மிருது எங்காத்துக்கு வந்தப்போ அவளோட ஹெச் பி வெரும் எட்டு தான் இருந்தது டாக்டர் என்னைப் பிடிச்சுத் திட்டினா இப்போ பதிமூணு இருக்கு. இதுக்கு என்ன சொல்லறேங்கள்? மாமி பேசணும்னா நிறைய பேசலாம் ஆனா இப்போ நாங்க மிருதுவோட சீமந்தம் வளைகாப்பு பத்திதான் பேச வந்திருக்கோம் வேற எதுக்காகவும் நாங்க வரலை”

என்று மனதிலிருந்த ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தாள் அம்புஜம்.

“ஆமாம் !ஆமாம்! உங்க பொண்ணுக்கு முன்னாடியே என்னப் பிரச்சினை இருந்ததோ அதுனால கூட அப்படி ஆகிருக்கலாம் ஆனா பழியை எங்க மேல போட்டுப் பேசறேங்கள்?”

தங்கள் மருமகள் எப்படி இருக்கிறாள் என்று பேச்சுக்குக் கூட ஒரு வார்த்தைக் கேட்க தோன்றிடாத மூத்த தம்பதியர் பிரச்சினை பண்ணுவதற்காகவே பேசுவது போல தோன்றியதும் ராமானுஜம்

“சரி மாமா நீங்க சொன்ன ப்ரிண்டிங் ப்ரஸ்லேயே பத்திரிகை ப்ரிண்ட் பண்ண குடுத்துடறோம். பத்திரிகை வந்ததும் எடுத்துண்டு வந்து குடுக்கறோம். எனக்கு மத்தியானம் ஷிஃப்ட் இருக்கு இப்பவே மணி பண்ணண்டு ஆயிடுத்து அதுனால நாங்க உத்தரவு வாங்கிக்கறோம். கிளம்பலாமா அம்புஜம்”

என பிரச்சினையை வளரவிடாமல் வெட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள் ராமானுஜமும் அம்புஜமும். வண்டியில் வீட்டுக்கு வரும் வழியில் அம்புஜம் பின்னால் உட்கார்ந்துக் கொண்டு

“அந்த மாமிக்கு என்ன திமிரு பாருங்கோ!! இன்னமும் ஏதோ நம்ம பொண்ண நல்லா பார்த்துண்டா மாதிரியே பேசறா!!! தப்பெல்லாம் அவா பண்ணிட்டு நாம பண்ணினா மாதிரி என்ன அழகா பேசறா அவா ரெண்டு பேரும்.”

“சரி சரி நீ ஒழுங்கா பிடிச்சுண்டு உட்காரு. ஆடாதே. அவா அப்படி தான்னு உன்கிட்ட சொன்னேன் இல்லையா. பேசாம வா”

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். ராமானுஜம் மத்திய சாப்பாடு சாப்பிட்டதும் கிளம்பி வேலைக்கு சென்றுவிட்டார். அம்புஜம் சீமந்தம் வளைகாப்புக்கு வேண்டிய சாமான்கள் லிஸ்ட் போட்டாள்.

மறுநாள் காலை அம்புஜம் காலை டிபன் மத்திய சாப்பாடு எல்லாம் தயார் செய்ததோடு மகளுக்கு வேண்டிய பழங்கள் நறுக்கி வைத்தாள், ஜுஸ் பிழிந்து ஃப்ரிட்ஜில் வைத்தாள். பின் இருவரும் நல்ல நேரம் பார்த்து ஈஸ்வரன் சொன்ன ப்ரஸுக்கு சென்று பத்திரிகை அடிக்க கொடுத்து எப்போது கிடைக்கும் என கேட்டனர். அன்று மாலை ஒரு ஆறு மணிக்கு தயாராகிவிடும் என்றும் இரவு எட்டு மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் வந்து வாங்கிக் கொல்லலாம் என்றும் கூறினார் ப்ரஸ் ஓனர். சரி என்று சொல்லிவிட்டு இருவரும் சீமந்தத்திற்கு மண்டபம் பார்த்து அட்வான்ஸ் கொடுத்து விட்டு, தாம்பூலத்துடன் குடுப்பதற்கு டப்பா ஒரு ஐம்பது வாங்கிக் கொண்டு ஆட்டோவில் பஸ்டாண்டு வரை வந்து பின் பஸ்ஸில் வீடு வந்து சேர்ந்தனர். அன்றும் மத்திய உணவருந்தியதும் வேலைக்குச் சென்றார் ராமானுஜம்.

அன்று மாலை அம்புஜமும் மிருதுளாவும் ஒரு கார் வைத்துக் கொண்டு டவுனுக்குச் சென்றனர். அந்த ப்ரிண்டிங் ப்ரஸிலிருந்து ப்ரிண்ட் பண்ணின பத்திரிகைகளை வாங்கி காரில் வைத்துவிட்டு வளையல் கடைக்குள் நுழைந்தனர். அங்கே அம்புஜம்

“மிருது உனக்கு பிடிச்ச கண்ணாடி வளையல்களை நீ செலக்ட் பண்ணு நான் ஃபங்ஷனுக்கு வர பொண்டுகளுக்கெல்லாம் வளை வாங்கறேன்”

“சரி மா”

என்று இருவரும் அவர்கள் வாங்கிய வளையல்கள் அடங்கிய அட்டைப் பெட்டியை அந்த கடைப் பையனையே தூக்கிக் கொண்டு வந்து காரில் வைத்து தரும்படி கேட்டுக்கொண்டனர். அந்த பையனும் காரில் வைத்துவிட்டு சென்றான். இருவரும் காரில் ஏறி அந்த டவுனிலிருந்த பெரிய ஜவுளி கடைமுன் இறங்கிக் கொண்டு வண்டியை ஓரமாக நிப்பாட்டச் சொல்லிவிட்டு கடையினுள் சென்றனர்.

அங்கே ஒரு கறுப்புப் புடவையில் மெல்லிய கோல்டு நூலில் எம்ப்ராய்டரி போட்டு அழகான புடவையைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு மிகவும் பிடித்துப்போக தன் அம்மாவிடம் அதை வாங்கச் சொன்னாள். அதன் விலையைப் பார்த்த அம்புஜம் …

“மிருது அப்பா என்கிட்ட மூவாயிரத்துக்கு பட்டுப்புடவையும், ஆயிரத்துக்குள்ள கறுப்புப் புடவையும் தான் எடுக்கச் சொல்லி பணம் குடுத்தணுப்பியிருக்காடி. இந்த புடவையே ஆயிரத்தி எண்ணூறுன்னு போட்டிருக்கே அப்போ எப்படி பட்டுப் புடவை எடுக்கறது?”

“அம்மா எனக்கு இந்த புடவை ரொம்ப பிடிச்சிருக்கு மா. இதையே எடுத்துக்கறேன். பட்டுப் புடவையையும் இதே ரேஞ்சில் எடுத்தா அப்பா குடுத்த பணத்துக்குள்ள அடங்கிடும்மா. நான் அதுக்கு தகுந்தா மாதிரி எடுத்துக்கறேன் போதுமா?”

“சரி சரி இந்த புடவை அழகா தான் இருக்கு …. எடுத்துக்கோ”

என்று கூறி மிருதுளாவுக்கு பிடித்த கறுப்பு நிறப் புடவையையும் இரண்டாயிரம் ரேஞ்சில் ஒரு பட்டுப் புடவையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து மிருதுளாவுக்கு மிகவும் பிடித்த ஹோட்டலுக்கு டின்னர் சாப்பிடச் சென்றனர். அங்கே வேனு கூறியது போலவே காலேஜ் முடித்துவிட்டு லாப் அடெண்ட் பண்ணிவிட்டு நேராக அந்த ஹோட்டலுக்கு வந்து காத்திருந்தான். மூவரும் அமர்ந்து இரவு உணவருந்திவிட்டு காரில் வீடு வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் எல்லாம் ராமானுஜமும் அவர் ஷிஃப்ட் முடிந்து வீடு வந்தார். அனைவருமாக அமர்ந்து வாங்கி வந்ததை எல்லாம் பார்த்தனர். அம்புஜம் ஒரு பேப்பரில் கணக்குப் போட்டு மீதிப் பணத்தை ராமானுஜத்திடம் கொடுத்து

“எல்லா செலவும் இதோ இந்த பேப்பர்ல எழுதியிருக்கேன். இந்தாங்கோ மீதிப் பணம். நாளைக்கு காலை ல நாம சம்மந்தி ஆத்துக்கு போய் அவாளுக்கு வேண்டியப் பத்திரிகையைக் குடுத்துட்டு வருவோம் என்ன சொல்லறேங்கள்?”

“முதல்ல நாளைக்கு அவாகிட்ட ஃபோன்ல பேசு எல்லாம் வாங்கியாச்சுன்னு சொல்லு அப்புறம் பத்திரிகை எவ்வளவு வேணும் அதை கொண்டு வந்து தரோம்ன்னு சொல்லு அவாளே கிளம்பி இங்கே வந்து பத்திரிகையை வாங்கிண்டு போவா வேணும்னா பாரு இது நிச்சயம் நடக்கும்”

“அது எப்படி நடக்கும்?”

“நீ நான் சொன்னா மாதிரி பண்ணு அப்புறம் நடக்கறதா இல்லையான்னு பார்த்துக்கலாம்”

“இல்ல… அதையும் ஏதாவது சண்டையா மாத்திடப் போறா!! பேசாம போய் கொடுத்துட்டு வந்திடுவோமே எவ்வளவு நேரமாக போறது?”

“நீ நான் சொன்னா மாதிரியே ஃபோனில் சொல்லு போறும் எல்லாம் ஆட்டோமேட்டிக்கா நடக்கும்”

“என்னமோ சொல்லறேங்கள் நானும் அதுபடி பண்ணறேன் பார்ப்போம் நடக்கறதான்னு!!!”

மறுநாள் விடிந்ததும் அவரவர் அவரவர்கள் வேலைகளில் மூழ்கினர். அம்புஜம் தன் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்ததும் ராமானுஜம் சொன்னது போலவே ஃபோன் போட்டு பர்வதத்திடம் சொல்லி எப்ப வரலாம் என்று கேட்க அதற்கு பர்வதம்

“புடவை எல்லாம் எடுத்தாச்சா?”

“எல்லாம் ஆச்சு மாமி நேத்து ஒரு கார் வச்சுண்டு போய் வாங்கிண்டு வந்துட்டோம். மிருதுக்கு ஒரு மூணு பவுன்ல தங்க வளை வாங்கிருக்கேன்”

“சரி நீங்க தான் ரெண்டு மூணு நாளா வெளியே போயிண்டும் வந்திண்டும் இருக்கேங்களே. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ. சாப்டுட்டு நாங்களே அங்க வரோம். வந்து பத்திரிகையை வாங்கினா மாதிரியும் இருக்கும் அப்படியே நீங்க வாங்கினதெல்லாத்தையும் பார்த்தா மாதிரியும் இருக்கும் இல்லையா. என்ன நான் சொல்லறது?”

அம்புஜத்துக்கு ராமானுஜம் சொன்னதின் அர்த்தம் புரிந்ததும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.

“ஆங் …அதுவும் சரி தான் மாமி நீங்களே வாங்கோ. சரி மீதியை நேர்ல பேசிக்கலாமே ஃபோனை வச்சுடவா”

“ஆங் சரி வச்சுடுங்கோ நாங்க ரெண்டு பேருமா ஒரு மூணு மணிக்கு வரோம்”

என்று ஃபோனை துண்டித்ததும் அம்புஜம் மிருதுளாவிடம் நடந்ததைக் கூறி சிரித்தாள். அதற்கு மிருதுளா

“அம்மா அவா இங்க வர்றதே நாம வாங்கி இருக்கிற பொருட்களை எல்லாம் பார்க்கத் தான். பார்த்துட்டு சும்மா இருப்பான்னு மட்டும் நினைக்காதே!! நிச்சயம் ஏதாவது ஒரு குறை சொல்லுவா”

“குறை சொல்லறா மாதிரி நாங்க ஒண்ணுமே பண்ணலையே. எல்லாம் நிறைவா தானே பண்ணறோம்”

“என் கல்யாண கூறப் புடவையை கூட என் இஷ்டதத்துக்கு எடுக்க விடலை அவா…நீ வேணும்னா பாரு இங்க வந்தா ஏதாவது நொட்டு சொல்லத்தான் போறா”

“சரி சரி வா நாம ரெண்டு பேரும் சாப்பிடுவோம். அப்புறம் நான் கிட்சனை ஒதுக்கி வைக்கணும்.”

கடிகாரத்தில் மணி மூன்று அடித்தது. மிருதுளாவுக்கு அவள் வயிற்றில் மணி அடித்தது போல இருந்தது. ஏனெனில் பர்வதம் ஈஸ்வரன் வர போற நேரம் ஆனது. மூன்றரை மணிக்கு வீட்டு முன் ஆட்டோ வந்தது. மிருதுளா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் ஆட்டோவிலிருந்து ஈஸ்வரனும் பர்வதமும் இறங்கி கேட்டைத் திறந்து வந்தனர். அம்புஜம் அவர்களை வரவேற்று ஹாலில் அமர வைத்து தண்ணீர் கொண்டு வந்துக் கொடுத்தாள். மெல்ல மிருதுளா நடந்து ஹாலுக்கு வந்து

“வாங்கோ மா வாங்கோ பா”

என்று சொன்னாள். அதற்கு அவர்கள் தங்கள் தலையை மட்டும் ஆட்டினர். வேறெதுவும் பேசவில்லை. அம்புஜம் அவர்கள் வாங்கிய பொருட்களை எல்லாம் கொண்டு வந்து அவர்கள் முன் அடுக்கி வைத்தாள். அப்போது ஈஸ்வரன்

“அன்னைக்கு பத்திரிகை ப்ரூஃப் பார்க்க ஒரு பேப்பர் தங்தேங்கள் இல்லையா அதில் மண்டபம் பெயர் இருக்கலையே”

“ஆமாம் மாமா அப்போ ரெண்டு மண்டத்துல விசாரிச்சிருந்தோம் எதுன்னு முடிவு பண்ணலை அதுனால அதுல எழுதலை. இதோ இந்தாங்கோ பத்திரிகை. உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துக் கோங்கோ”

பத்திரிகையை வாங்கிப் படித்த ஈஸ்வரன்

“இந்த மண்டபமா? இது ரொம்ப சின்னதா இருக்குமே? கொஞ்சம் பெரிய மண்டபம் பார்த்திருக்கலாம்”

“இல்ல… மாப்ள கிட்ட கேட்டோம் அவர் சொன்ன ரேஞ்சுக்கு இந்த மண்டபம் தான் கிடைச்சுது. இதுவும் நல்ல மண்டபம் தான் சென்ட்டரான ஏரியால இருக்கு. பஸ்டாண்டும் பக்கத்திலயே இருக்கு”

“சரி மாமி நீங்க எடுத்தப் புடவையை காமிங்கோ”

“இதோ இது தான் நாங்க மிருது வளைகாப்புக்கு எடுத்த தங்க வளையல்”

“நல்லா இருக்கு !! ஆனா மூணு பவுனுக்கு இது ரொம்ப மெலீசா இல்ல?”

“நான் தான் அப்படி இருக்கட்டும்ன்னு எடுக்கச் சொன்னேன் மாமி. அங்க மூணு பவுனுக்கெல்லாம் பட்ட பட்டையா பார்க்க ஆறு பவுனு மாதிரி எல்லாம் வளையல்கள் இருந்தது ஆனா அதெல்லாம் டெய்லி வேர்க்கு சரிவராது நெளிஞ்சுடும். அதுனால தான் மெலீசா இருந்தாலும் நல்லா கெட்டியா இருக்கட்டும்ன்னு இதை மிருதுகிட்ட வாங்கிக்க சொன்னேன். இதோ இந்த ரெண்டுப் புடவையும் தான் மிருதுக்கு எடுத்திருக்கேன். இது பட்டுப் புடவை, இது மசக்கைப் புடவை”

என்று கூறி இரண்டு புடவைகளையும் பர்வதத்திடம் கொடுத்தாள் அம்புஜம். அதைப் பிரித்துப் பார்த்த பர்வதம்.

“இதென்ன கறுப்புப் புடவை? இதுல கோல்டு கலர்ல லைன் எல்லாம் இருக்கே? வெரும் கறுப்புப் புடவைன்னா எடுக்கணும்!!”

“அது எப்படி மாமி வெரும் கறுப்புப் புடவை நல்லா இருக்காதே!!! இதுல லைட்டா தானே லைன்ஸ் இருக்கு அதுவுமில்லாம எங்க மிருதுக்கு இந்தப் புடவை ரொம்ப பிடிச்சிப் போச்சு பரவாயில்லை மாமி”

“இல்லை இல்லை ஃபுல் கறுப்புப் புடவை தான் எடுக்கணும் பார்டர் ல வேணும்னா லைட்டா ஏதாவது வேற கலர் இருக்கலாம் ஆனா இந்த புடவையை மசக்கப் புடவைன்னு சொல்லவே முடியாது”

“அச்சோ மாமி இதோட விலை ஆயிரத்தி எண்ணூறு ரூபாய். நாங்க பில்லையும் தூக்கிப்போட்டுட்டோம். இப்போ மாத்தவும் முடியாதே….அப்போ வேறொரு புடவை தான் மறுபடியும் எடுக்கணும்”

“அதுனால என்ன சுறுக்க டவுன் போய் எடுத்துண்டு வந்திடுங்கோ!! ஃபங்ஷனுக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கே!!”

“அதுக்கில்ல !!அப்போ!!! எடுத்த இந்தப் புடவையை என்னப் பண்ணறது?”

“அதை எனக்குத் தந்திடுங்கோ”

என்று பர்வதம் கண் அடித்துக் கொண்டே அந்தப் புடவையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டாள். அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது. அம்புஜம் தன் மகளுக்கு மிகவும் பிடித்துப் போனதால் எடுத்தப் புடவை என்று சொல்லியும் தனக்கு தரும்படி கேட்டதுடன் நிற்காமல் வெடுக்கென்று அந்த புடவையை பர்வதம் எடுத்துக்கொண்டது அம்புஜத்திற்கும் ஆத்திரம் வரவழைத்தது. உடனே சுதாரித்துக் கொண்டு

“இல்ல மாமி எங்களுக்கு ஏகப்பட்ட செலவாயிடுத்து இப்போ இன்னொரு புடவை எடுக்கணும்னு சொன்னா மிருது அப்பா என்ன சொல்லுவாறோ தெரியாது. அதுனால இந்த புடவையை எடுத்த கடையிலேயே குடுத்து மாத்திக்க முடியுமான்னு பார்க்கணும் அதுதான் யோசிக்கறேன்”

“நீங்க தான் பில்லை தூக்கிப் போட்டுட்டேங்களே அப்புறம் எப்படி கடைக்காரன் மாத்துவான்?”

“இல்லை நேத்து தானே எடுத்தோம். கொண்டு போய் கேட்டுப் பார்க்கறோம் அப்படி மாத்திக்க மாட்டோம்ன்னு சொன்னா அப்புறம் என்ன பண்ணலாம்ன்னு பார்ப்போம்.”

என்று மெல்ல அந்த புடவையை பர்வதத்திடமிருந்து வாங்கினாள் அம்புஜம். பின் அனைத்தையும் அடுக்கி எடுத்து வைத்து விட்டு, அவர்கள் இருவருக்கும் காபிப் போட்டு ஒரு தட்டில் மிக்ஸ்சரும் ஒரு ஜாங்கிரியும் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அவர்களும் சாப்பிட்டு காபிக் குடித்துவிட்டு வேண்டிய பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அப்போது தாம்பூலத்தில் ஒரு புடவையும் ப்ளௌஸ் பிட்டும் வைத்து பர்வதத்திடம் கொடுத்தாள் அம்புஜம். பர்வதம் அதை வாங்கிக்கொண்டே…

“என்னத்துக்கு புடவை எல்லாம் வச்சுத் தறேங்கள்? குங்குமமே போதுமே!”

“அதுக்கில்லை மாமி நீங்க புடவைக் கேட்டும் கொடுக்காமல் அணுப்ப எனக்கு மனசு வரலை. அதுதான்… எடுத்துக்கோங்கோ”

“அப்படின்னா அந்த கறுப்புப் புடவையையே கொடுத்திருக்கலாமே”

பர்வதம் அந்த புடவை மீதே குறியாக இருந்தாள். அதற்கு அம்புஜம்

“இல்லை இல்லை மாமி கொடுத்திருக்கலாம் ஆனால் சுமங்கலிக்கு எப்படி கறுப்புப் புடவையை தாம்பூலத்துல வச்சு தர்றது சொல்லுங்கோ”

“ம்… சரி சரி…அப்போ நாங்க கிளம்பறோம்.”

என்று அந்த புடவை கிடைக்காததால் அரை மனதுடன் அங்கிருந்து புறப்பட்டாள் பர்வதம். இதற்கு என்ன பிரதிபலிப்பு இருக்கப் போகிறதோ பொறுத்திருந்து தான் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆசை இருக்கலாம் அதில் தவறில்லை
பேராசை இருந்தால் அது எதையும் பார்ப்பதில்லை.

மிருதுளா வேகமாக ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஃபோன் போட்டு அவர்கள் செல்வதற்கு ஆட்டோவை சீக்கிரம் வரவழைத்தாள். இருவரும் அதில் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்றதும் அம்புஜத்தை திரும்பிப் பார்த்தாள் மிருதுளா…

தொடரும்……

Leave a comment