அத்தியாயம் 15: நடுவானில் நடுக்கம்

ஒவ்வொருவரும் அவர்கள் சித்தியை சாம்பீனிகள் மீது பிரயோகம் செய்தனர். அது பலித்திடவே சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்கள் அசுரர்கள். அன்று வரை அவர்கள் எவரிடத்திலும் அவரவர்களின் மந்திரத்தை பிரயோகம் செய்யாதிருந்தது இன்று இப்படி ஒரு மகிழ்ச்சியைத் அனுபவிக்கத் தான் போலிருக்கிறது. அதைக் கண்டதும் மந்திராசுரன்

“மதிநாகசுரா நான் காண்பது கவனா இல்லை நிஜமா?”

“நிஜமே மந்திரா நிஜமே”

“மதி இதை ஆசானிடம் உடனே தெரிவிக்க வேண்டும்”

“இதோ ஒரு நொடியில் தெரிவித்து வந்து விடுகிறேன்”

என்று புறப்பட்ட மதிநாகசுரனை…மந்திராசுரன் தடுத்து நிறுத்தி

“மதி எனக்கு ஒரு யோசனை. இப்பொழுது தான் நமக்கு தெரிந்து விட்டதே !!! நம்மவர்களால் தங்கள் சித்தியை அடுத்தவர்கள் மீதும் பிரயோகம் செய்ய முடியுமென்று!!! ஆகையால் ஏன் நாம் ஒரு திட்டம் தீட்டியப் பின் ஆசானிடம் சென்று கூறினால்… அவரும் மிகவும் மகிழ்ச்சி அடைவார் இல்லையா”

“ம்…அதுவும் சரிதான் அப்படியே செய்வோம்‌”

என்று மதிநாகசுரன் கூறியதும் அனைவரையும் ஒன்றுக் கூடச் சொன்னான் மந்திராசுரன். உடனே அவர்கள் சாம்பீனிகளுக்கு வேலைகளை பிரித்துக் கொடுத்துவிட்டு வந்தனர். பின் திட்டம் தீட்ட ஆரம்பித்தனர். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக அவரவர்களுக்கு தோன்றிய எண்ணங்களைக் கூறினர். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மதிநாகசுரன் எழுந்து அனைவரையும் பார்த்து

“உங்கள் அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் அனைவரின் பங்களிப்பும் எனக்கு ஒரு திட்டத்தை வியூகிக்க ஏதுவாக இருந்தது. சரி நீங்கள் உங்கள் சாம்பீனிகளுடன் இருங்கள் நானும் மந்திராசுரனும் ஆசானைப் பார்த்து என் மனதிலுள்ள திட்டத்தை கூறிவிட்டு வருகிறேன்”

என்று அங்கிருந்து விடைப்பெற்றுச் சென்றான் மதிநாகசுரன். ஆசான் இருக்கும் இடத்திற்கு அந்த குகை வழியாக செல்லும் பொழுது மந்திராசுரனிடம் திட்டத்தை விளக்கினான். அதைக் கேட்டதும் மந்திராசுரன்

“சபாஷ் மதி சபாஷ். எனக்கென்னவோ ஆசானுக்கும் இந்த திட்டம் மிகவும் பிடிக்கும் என்று தான் எனக்கு தோன்றுகிறது. பார்ப்போம் வா”

“வணக்கம் ஆசானே. நாங்கள் இரண்டு நற்செய்திகளுடன் வந்துள்ளோம்.”

“இரண்டு செய்திகள் என்று சொன்னால் போதுமானது அதை சொல்வதற்கு முன்னதாகவே நல்லதா கெட்டதா என்று முடிவெடுத்து விடக்கூடாது மந்திராசுரா. ம்..சரி என்ன இரண்டு செய்திகளுடன் வந்துள்ளாய்? எங்கே கூறு பார்ப்போம்”

“முதல் விஷயம் நம்மவர்களால் அவர்களின் சித்திகளை அடுத்தவர் மீதும் பிரயோகம் செய்ய முடிகிறது.”

“சரி நல்லது தான். அடுத்தது என்ன?”

“வெளியே அனைவருமாக சாகரத்தை கடக்க வேண்டி பல யுக்திகளைப் பற்றி கலந்துரையாடினோம் அதில் நம்ம மதிநாகசுரன் இந்த பூர்வா ரச்னாக்கர் சாகரத்தை கடக்க ஒரு அருமையான திட்டத்தைத் தீட்டியுள்ளார். அதைக் கூறத்தான் வந்தோம் ஆசானே”

“அப்படியா மதிநாகசுரா?”

“ஆம் ஆசானே”

“அப்படி என்ன திட்டம் தீட்டியுள்ளாய் மதிநாகசுரா? எங்கே சொல்லு கேட்போம்”

“தாங்கள் சொன்ன எண்ணெய் சட்டி திட்டம் போல தான் ஆனால் அதில் நம்மவர்களின் சித்திகளைக் கொண்டு செய்யப் போகிறோம். நம் யாகம்யாழியும், மந்தாகிஷியும் அவர்களின் அணிமா சித்தியைக் கொண்டு அவர்கள் உட்பட அனைவரையும் சிறிய உருவமுடையவர்களாக மாற்றிடுவார்கள். பின் நம்மவர்கள் அனைவரும் இரண்டு கூடையினுள்ளும் சாம்பீனிகள் அனைத்தும் மூன்று கூடையினுள்ளும் சென்றிட வேண்டும். அந்த கூடைகளை ஒரு துணி போட்டு கட்டிடுவோம் நானும் சிகராசுரனும் பின் ஒரு கம்பில் அந்த கூடைத் துணியின் முடிச்சுகளை வரிசையாக மாட்டிவிட்டுவிடுவோம். அந்த கம்பின் ஒரு புறத்தை நானும் மறுபுறத்தை சிகராசுரனும் பிடித்துக் கொண்டு இலகிமா சித்தியை பிரயோகம் செய்து அனைவரையும் காற்றிலே தூக்கிக் கொண்டு மிதந்தே கலிங்கா சென்றடைந்திடலாம். என்ன சொல்கிறீர்கள் ஆசானே?”

“எல்லாம் நன்றாகவே இருக்கிறது ஆனால் நம்முள் கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டும் அதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.”

“நிச்சயமாக!! மிகவும் கவனமாகவே அவர்களை கையாள்வோம் கவலை வேண்டாம் ஆசானே! என்ன சொல்கிறீர்கள்? இந்த திட்டத்தை நிறைவேற்றலாமா?”

“ஆகட்டும் மதிநாகசுரா நாளைக்கே பயணிக்க ஆயத்தம் ஆக அனைவரிடமும் கூறிவிடுங்கள் நானும் முக்கியமானவைகளை எடுத்து வைத்துக் கொள்கிறேன். சென்று அனைவரிடமும் சொல்லிவிடுங்கள்”

“ஆகட்டும் ஆசானே நான் போய் வேண்டியவைகளை ஏற்பாடு செய்கிறேன்.”

“மந்திராசுரா எனக்கு நீ சிலவற்றை எடுத்துக்கொண்டு போக உதவி செய்ய வேண்டும் ஆகையால் நீ இங்கேயே இரு. மதி நீ போய் அனைவரையும் தயாராக சொல்லி அந்த சாம்பீனிகளையும் தயாராக்கச் சொல்”

“அகட்டும் ஆசானே மந்திரா நீ ஆசானுக்கு வேண்டியதை செய்துக் கொடு நான் வெளியே செல்கிறேன்”

“அப்படி செய்கிறேன் மதிநாகசுரா. நீ சென்று வா. ஆசானை நான் பார்த்துக் கொள்கிறேன்”

மதிநாகசுரன் வெளியே வந்து ஆசானுடன் உள்ளே பேசியவற்றை கூறி யாகமயாழியிடமும் மந்தாகிஷியிடமும் அவர்களது சித்திதான் மிகவும் உபயோகப்படப்போவதாக கூறி பயணத்திற்கு தயாராகச் சொன்னான். சிகராசுரனை அழைத்து அவர்கள் இருவரும் சேர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினான்.

அன்று மகுடாந்த மலையினுள் பரபரப்பாக வேலைகள் நடந்துக் கொண்டிருந்தன. அவரவர்களுக்கு தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டனர். அன்றிரவு உறங்குவதற்குப் படுத்தப் போது நவியாகம்ஷி மதிநாகசுரனிடம்

“மதி நம் அனைவரையும் ஆசான் அசுரகிரிவனத்திலிருந்து பாதாளபுரிவனத்துக்கு சட்டென ஏதோ மந்திரம் போட்டு அழைத்து வந்தாரே! அதே போல் இப்போது அந்த மந்திரத்தைச் சொல்லி நம்மை கலிங்காவிற்கு அழைத்துச் செல்ல அவரால் முடியாதா?”

“நவியா அதை பற்றி நாங்கள் சிந்திக்காமல் இருப்போமா? அந்த மந்திரம் ஒரே எல்லைக்குள் பிரயோகிக்கலாமே தவிற கடல் தாண்டி பிரயோகம் செய்ய முடியாது. ஏன் உனக்கு பயமாக இருக்கிறதா?”

“நான் மட்டுமென்றால் பயமிருந்திருக்காது இப்போது இருவராக இருக்கிறோமே என்ற கவலை பயமாக தோற்றமளிக்கிறது.”

“அடி கள்ளி இருவர் என்று உன்னையும் நம் பிள்ளையும் மட்டும் கூறுகிறாய்! நாம் மூவர் அல்லவா?”

“உங்களுக்கென்ன அசுரர் தலைவரே! தாங்கள் வீராதி வீரர். வீர பராக்கிரமங்களின் அதிபதி…உங்களை நினைத்து நாங்கள் இருவரும் எதுக்காக பயப்படப் போகிறோம்?”

“சரி… அப்படிப்பட்ட வீரனின் மனைவியும் அவள் வயிற்றில் வளரும் நம் பிள்ளையும் பயப்படுவது சரியா? அந்த வீரனுக்கு இவ்விருவரையும் காக்கத் தெரியாதா?”

“ஓ!! மன்னியுங்கள் தலைவரே!!! இனி எங்களுக்கு எந்த வித பயமுமின்றி பயணம் செய்ய இந்த தாயும் சேயும் தயார்”

“மிக்க மகிழ்ச்சி. இப்போது சற்று நேரம் ஓய்வெடுங்கள் இருவரும். நான் சென்று சிகராசுரனுடன் நாளைய பயணம் பற்றி சற்று உரையாடி விட்டு வருகிறேன்”

என்று கூறி அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்து சிகராசுரனின் அறையின் வாயிலில் நின்றுக் கொண்டு அவனை வெளியே அழைத்தான் மதிநாகசுரன். சிகராசுரனும் வந்தான். இருவருமாக பலத்த கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர். வெகு நேரம் பேசிவிட்டு அவரவர் அறைகளுக்குள் சென்று உறங்கினர்.

காலை ஆனது. சூரிய பகவான் விழித்துக் கொண்டாலும் அவரால் எல்லா இடங்களிலும் பிரகாசிக்க முடியவில்லை. ஆம் அசுரர்கள் கைப்பற்றிய அனைத்து இடங்களையும் இருள் சூழ்ந்திருந்தது. சூரிய தேவன் தன் ஆயிரங்கரங்களில் சிலவற்றை குறிப்பிட்ட சில இடங்களில் நீட்ட முடியாமல் போக சற்று குழப்பத்தில் ஆழ்ந்தார். அதைப் பற்றி தேவேந்திரனிடம் அன்றிரவு பேச வேண்டும் என்றும் மனதில் எண்ணிக் கொண்டே தன் வேலையை செய்துவந்தார்.

அசுரர்கள் அவர்களின் திட்டப்படியே அவரவர்களுக்கு தேவையாவைகளை கையில் எடுத்துக் கொண்ட பின் யாகம்யாழியும் மந்தாகிஷியும் அனைவரையும் (மதிநாகசுரன், சிகராசுரன் தவிற) அணிமா சித்திக் கொண்டு அணுவின் அளவிற்கு மாற்றி தங்களையும் மாற்றிக் கொண்டனர். வடிவில் சிறியதானதும் அனைவரும் அவரவர் கூடைகளுக்குள் சென்றனர். சாம்பீனிகளுக்கு மூன்று கூடைகளைக் காட்டி அதனுள் செல்லும்படி உத்தரவிட்டான் மதிநாகசுரன். அவனின் கட்டளைப்படி அனைத்து சாம்பீனிகளும் கூடைகளுக்குள் சென்றன. சிகராசுரனும், மதிநகாசுரனுமாக ஐந்து கூடைகளையும் துணி கொண்டு கட்டி, அவற்றை நீளமான கம்பில் மாட்டிவிட்டு, அந்த கம்பை தூக்கிக் கொண்டு மகுடாந்த மலையை விட்டு வெளியேவந்ததும் மலை வாயில் மூடியது. இருவரும் அனைவரும் அடங்கிய கூடைகளுடன் வெளியே வந்ததும் அவர்கள் இலகிமா சித்தி மந்திரமான

“இலைப் போல காற்றில் மிதந்திட
லயமாக தவழ்ந்திட
கியமதமின்றி தேடிட
காற்றைப் போல எட்டுத்திக்கும் பறந்திட”

என்று உச்சாடனம் செய்ததும் கம்பில் மாட்டிய ஐந்து கூடைகளுடன் மதிநாகசுரனும், சிகராசுரனும் காற்றில் மிதக்கத் துவங்கினார்கள். தாரசி, அனுரோகமி, கலீபி வான்வழியே காற்றில் மிதந்துக் கொண்டே பூர்வா ரச்னாக்கர் சாகரத்தின் மேல் பறக்கலானார்கள். கூடையிலிருந்தவர்களுக்கு வெளிய பார்க்க ஆவல் இருந்தது ஆனாலும் துணி கொண்டு மூடப்பட்டிருந்ததால் பார்க்க முடியவில்லை. ஆகையால் அமைதியாக அமர்ந்திருந்தனர். முதல் கூடையில் காய்கோடையன், மந்திராசுரன், நவியாகம்ஷி, யாகம்யாழியும், இரண்டாவது கூடையில் கோபரக்கன், சிம்பாசுரன், மந்தாகிஷி மற்றும் மிளானாசுரி அமர்ந்திருந்தனர்.

மந்தாகிஷிக்கு வெளியே சாகரத்தைப் பார்த்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்ற அதை சிம்பாசுரனிடம் தெரிவித்தாள். சிம்பாசுரனும் ஏதாவது செய்து வெளியே எட்டிப் பார்க்க முடியுமா என்று முயற்சிப்பதைப் பார்த்த மிளானாசுரியும் கோபரக்கனும் அது கூடாது என கட்டளையிட்டு அமைதியாக இருவரையும் அமரச் சொன்னார்கள். மந்தாகிஷியின் ஆசை அவளை சும்மா உட்காரவிடவில்லை.

அவள் கையை பின்னால் வைத்துக் கொண்டு விரலில் இருந்த நீண்ட நகத்தினால் கூடையின் துவாரம் வழியே அதைக் கட்டப்பட்டிருந்த துணியில் ஓர் இடத்தில் துளைப் போட மெல்ல சிறிய கீறல் போட்டாள். இதை அந்த கூடையிலிருந்த மற்ற எவரும் கவனிக்காதவாறு செய்தாள். சிம்பாசுரனுக்கே தெரியாதவாறு செய்தாள். ஆனால் அந்த கீறல் வழியே சாகரத்தைப் பார்க்க வேண்டுமெனில் அவள் திரும்பி அமர்ந்தாலே முடியும். எனவே மனதில் ஒரு திட்டம் தீட்டினாள், அதன்படி தன்னை சாகரத்தை பார்க்க விடாத கோபரக்கனிடமும் மிளானாசுரியிடமும் கோபித்துக் கொள்வது போல பாவனைச் செய்து, அவர்களை பார்க்க விருப்பமில்லை எனச் சொல்லி திரும்பி கூடையின் சுவற்றைப் பார்த்து அமர்ந்தாள். மந்தாகிஷியின் நடவடிக்கைகள் அந்த கூடையிலிருந்த மற்ற மூவருக்கும் சற்று சந்தேகத்தைக் கிளப்பியது, ஆனாலும் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்தனர்.

அவர்கள் உறங்குவதற்காக காத்திருந்தாள் மந்தாகிஷி. சற்று நேரத்தில் மூவரும் உறங்கிப் போனார்கள். உடனே மந்தாகிஷி அந்த கூடையின் துவாரத்தில் நகம் கொண்டு துணியில் போட்ட கீறல் வழியே வெளியே பார்க்க முயன்றாள், ஆனால் அவளின் பெருத்த வயிறு அவளை பார்க்க விடவில்லை ஏனெனில் அந்த கீறல் சற்று கீழே போட்டிருந்தாள். வெளியே எட்டிப் பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது மந்தாகிஷிக்கு. அனைவரும் உறங்குகிறார்கள் என்பதால் அவள் உயரத்துக்கு கூடையிலேயே துளைப் போட்டு அதன் வழியே துணியை நகத்தால் கிழித்தால்.

துணி கிழிந்ததும் அந்த கூடை மற்ற கூடைகளை விட சற்று கீழே தாழ்ந்தது. பாதி கடல் தாண்டியிருந்தனர். கூடையினுள் நடப்பதறியாது சிகராசுரன் அந்த கூடை இறங்கியதை கவனித்தான். உடனே..

“மதிநாகசுரா நமது இரண்டாவது கூடையின் துணி கிழிந்து கூடை சற்று இறங்கியுள்ளது. என்ன செய்யலாம்?”

என்று முன்னே கம்பைப் பிடித்துப் பறந்துக் கொண்டிருந்த மதிநாகசுரனிடம் கூற இருவரும் ஒரே இடத்தில் நின்றுக் கொண்டே காற்றில் மிதந்தனர். பறப்பது நின்றதும் முதல் கூடையிலிருந்த ஆசான்

“என்ன மந்திரா அவர்கள் பறப்பதை நிறுத்தி விட்டார்கள் போல எனக்கு தோன்றுகிறதே!!! உனக்கு அப்படி தோன்றுகிறதா?”

“ஆமாம் ஆசானே!! எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது. ஒரு வேளை நாம் கலிங்கா வந்துவிட்டோமோ!!!”

“இருக்காது!! அதற்கு இன்னும் நேரமாகவில்லை!!! ஏதோ வெளியே நடந்திருக்கிறது அதனால் தான் அவர்கள் நின்றிருக்க வேண்டும் என்று என் மனதில் படுகிறது”

“நம்மால் பார்க்கவும் முடியாதே!!! என்ன செய்வது ஆசானே?”

“என்னது இது நம்மை எங்கோ கீழே மண்ணில் வைப்பது போல தோன்றுகிதே? நாம் வந்துவிட்டோமா?”

என்று தூக்கத்திலிருந்த மிளானாசுரி எழுந்து கேட்க மற்ற இருவரும் எழுந்துக் கொண்டனர். மந்தாகிஷி அமர்ந்திருக்கும் விதத்தைப் பார்த்த மிளானாசுரி அவளை திரும்பச் சொன்னாள் மந்தாகிஷியும் மெல்லத் திரும்பி மிளானாசுரியைப் பார்த்து அமர்ந்தாள். அவள் திரும்பும் பொழுது கூடையிலிருந்த துவாரத்தைப் பார்த்துவிட்டாள் மிளானாசுரி உடனே மந்தாகிஷியை அங்கிருந்து நகர்ந்து அமரச்செய்தனர். பின் அவளைப் பார்த்து

“என்ன மந்தாகிஷி உனக்கு எத்தனை முறை நாங்கள் சொன்னோம்!! ஏன் இப்படி செய்துள்ளாய்? இதனால் ஏதாவது பிரச்சினை வந்திருந்தால் நாம் நமது கடமையிலிருந்து தவரவேண்டிவராது? சொல் ஏன் இப்படி செய்தாய்?”

“இல்லை அக்கா வெளியே சாகரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கும் ஆவலில் செய்துவிட்டேன் என்னை மன்னியுங்கள்”

“வெளியே நம்மை தரையிறக்கியது எதனால் என்று தெரியவில்லையே!!! ஒரு வேளை நீ செய்த காரியத்தினால் என்றால் ஆசானின் கடுங்கோபத்திற்கு ஆளாவாய் மந்தாகிஷி.”

அதைக் கேட்டதும் நடுங்கிப் போன மந்தாகிஷி

“அச்சச்சோ!! சிம்பாசுரா நீயே இப்படி சொன்னால் நான் என்ன செய்வது?”

“உஷ் …உஷ்…யாரோ நம் கூடையை ஏதோ செய்கிறார்கள்…அமைதியாக இருங்கள்”

என்றான் கோபரக்கன்.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s