அத்தியாயம் 14: இடையூறாக இருக்கும் சாகரம்

கோபமாக சென்ற ஆசானை சமாதானம் செய்ய சென்றனர் மதிநாகசுரனும், மந்திராசுரனும். ஆசானின் கோபத்தைக் கண்ட மற்றவர்கள் நிலைமையை புரிந்துக் கொல்லாமல் விளையாடியமைக்கு மனவருத்தம் அடைந்தனர். தங்களை தேவர்களிடமிருந்து காப்பாற்றி இவ்வளவு வருடங்களாக தாயுமானவராக இருந்து பாதுகாத்து வளர்த்து பல வித்தைகளை கற்றுத்தந்த ஆசானின் சொல்மீறி நடந்ததை நினைத்து மிகவும் வருந்தினர். அந்த வருத்தம் அவர்களை வாட்டி எடுப்பதற்கு முன் ஆசானுக்காகவும் தங்கள் இனத்திற்காகவும் வேகமாக சாம்பீனிகளுக்கு அக்கணம் முதலே போர் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தனர்.

உள்ளே ஆசானை காணச் சென்ற மந்திராசுரனிடமும் மதிநாகசுரனிடமும் காற்கோடையன்…

“என்ன இவர்கள் விளையாட்டு பிள்ளைகளாகவே இருக்கின்றனர்? நாம் உயிரோடு இருப்பது எதற்கு என்பதை மறந்திட்டார்களா? நாம் எவ்வளவு சிரமப்பட்டு யோசித்து திட்டம் போட்டு தாரசி நரன்களை சாம்பீனிகளாக்கியுள்ளோம்!! அவைகளை எதற்காக அப்படி செய்தோம்? இவர்களுக்கு கால், கை பிடித்து விடவா? தண்ணீர், மோர் கொண்டு வந்து சேவகம் செய்யவா? நம் இனம் அழிக்கப்பட்டது இன்னமும் என் மனக்கண்ணில் காட்சியாக ஓடிக்கொண்டே இருக்கிறது. நமக்கு நாட்களும் குறைந்து கொண்டே வருகிறது. எப்படி இவர்கள் தங்கள் கடமையுணர்விலிருந்து மாறினார்கள்?”

என்று புலம்பித் தள்ளினார் ஆதங்கத்தில் காற்கோடையன். அதற்கு மந்திராசுரன்

“அவர்கள் செய்தது தவறு தான் ஆசானே ஆனால் சில நேரங்களில் இது போன்ற சில விளையாட்டுகளும் தேவை தானே ஆசானே அப்போது தான் அவர்கள் மனமும் உடலும் சற்று ஓய்வு பெறும்”

“என்ன சொல்கிறாய் மந்திரா? உனக்கு என்ன ஆயிற்று? நம் ஒவ்வொருவரின் மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுப்பதற்கு இதுவா நேரம். என்று நாம்..நம் இனத்தை அழித்த அந்த தேவர்களை அழிக்கிறோமோ அன்று தான் ஓய்வு அதற்கு முன் அதை பற்றி நினைத்தால் நம் காரியம், முயற்சி, தவம் அனைத்தும் வீண் ஆகிவிடாதா?”

“அவர்கள் அனைவரும் செய்தது தவறு தான், நானே அங்கிருந்திருந்தாலும் அவர்கள் அங்கு கூத்தடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் சற்று விளையாடிப் பாரத்திருப்பேன் என்று தான் தோன்றியது . அந்த சாம்பீனிகள் பார்ப்பதற்கு கோமாளிகளைப் போல இருப்பதாலோ என்னவோ அப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது. நான் உட்பட அனைவரையும் இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள் ஆசானே!! என்ன மந்திராசுரா அமையாக நிற்கிறாய் ம்….”

“ஆம் ஆசானே மதிநாகசுரன் சொல்வது உண்மை தான். தவறிழைத்து விட்டோம் இனி இது நிகழாமல் பார்த்துக் கொள்கின்றோம். இம்முறை மன்னியுங்கள்”

“ம்..ம்.. சரி சரி இனியாவது பொறுப்பாக நீங்களும் நடந்து மற்றவர்களையும் நடந்துக்கொள்ளச் செய்யுங்கள்”

“ஆகட்டும் ஆசானே. இப்போது வெளியே அவர்களிடம் சற்று நிதானமாக பேசுகிறீர்களா ஏனெனில் நிச்சயம் அவர்கள் தங்களின் கோபத்தைப் பார்த்ததில் துவண்டு போயிருப்பார்கள்”

என்று மந்திராசுரன் கூற அவன் கூடவே மதிநாகசுரனும்

“ஆம் ஆசானே அவர்கள் நம்மவர்கள் சற்றே தவறிழைத்தாலும் தங்களை மனவருத்தமடைய வைத்துவிட்டோமே என்று கட்டாயம் அவர்களும் வருத்தத்தில் தான் இருப்பார்கள். தயவுசெய்து வெளியே வந்து மீண்டும் அவர்களுக்கு உற்சாகத்தை வரவழைக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்”

“சரி சரி ஆகட்டும் வாருங்கள் செல்வோம்”

என்று ஆசான் சற்று அவரது கோபத்தை தளர்த்திக் கொண்டு வெளியே வந்தவர் கண்ட காட்சி அவரின் கோபத்தை முழுவதுமாக அவரை விட்டு விலகச் செய்தது. மதிநாகசுரனும், மந்திராசுரனும் அவரவர் கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தனர்.

அங்கே அனைத்து சாம்பீனிகளுக்கும் முறையாக பயிற்சி வழங்கப்பட்டதைப் பார்த்து பிரம்மித்துப் போன காற்கோடையன்

“பலே பிள்ளைகளே! பலே!! இதை தான் உங்களிடமிருந்து நான் எதிர்ப்பார்த்தேன். சபாஷ் என் மனம் முழுவதும் இப்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது. இதையே தொடருங்கள்”

“நன்றி ஆசானே எங்களை மன்னியுங்கள்”

என்று அனைவரும் ஒருமித்து சொன்னார்கள். அதற்கு ஆசான்

“ஆகட்டும் உங்கள் அனைவரையும் மன்னித்துவிட்டேன். இனி அது போல் ஒரு தவறிழைக்காமல் இருங்கள். அது போதும். ம்… ம்…உங்கள் வேலைகளை செவ்வனே இதே போல் செய்திடுங்கள். சாம்பீனிகளால் முடியாதது என்று ஒன்றுமே கிடையாது ஆகையால் நன்றாக பயிற்சி கொடுங்கள்”

மதிநாகசுரனும், மந்திராசுரனும், ஆசானும் திட்டங்கள் தீட்ட அதுபடி மற்றவர்கள் செயல்பட, அவர்கள் அடுத்தடுத்து சௌனி, சன்டோகன்டம்,
பூமதானி, ரோதகனி, நாகிரி, மேலன், போகனி, எம்னி, நாகதிப்பா, அனுரோகமி, கலீபி வரை அனைத்து ஊர்களையும் பரமபத அரண்மனையும், அதனுள்ளே இருக்கும் பரமபத விளையாட்டையும் வைத்து கைப்பற்றி அனைத்து நரன்களையும் சாம்பீனிகளாக்கி அவைகளுக்கு எல்லாவற்றையும் கற்றும் கொடுத்து மதிநாகசுரனின் படை விரிவடைந்தது அத்துடன் அவர்களின் இனப் பெண்களான நவியாகம்ஷி, மிளானாசுரி மற்றும் மந்தாகிஷி முவரும் அவர்கள் கர்ப்பகாலத்தில் இருந்தனர். கூடிய விரைவில் அவர்கள் இனமும் எண்ணிக்கையில் பெருகப் போகிறது என்ற மகிழ்ச்சியிலிருந்த மதிநாகசுரனை ஆசான் அழைப்பதாக மந்திராசுரன் கூற உடனே ஆசானை காணச் சென்ற மதிநாகசுரனிடம் ஆசான் அவர்கள் கைப்பற்ற வேண்டிய இடங்களின் வரைப்படத்தை ஓலையை விரித்து காட்டி

“மதிநாகசுரா நாம் நம் பாதாளபுரிவனம் அருகே மற்றும் சுற்றியுள்ள அனைத்து ஊர்களையும் நமதாக்கிவிட்டோம் அடுத்து நாம் இதோ இந்த பூர்வா ரச்னாக்கர் சாகரம் வழி சென்று கலிங்கா சென்றடைந்து விட்டால் பின் அங்கிருந்து வரிசையாக மற்ற இடங்களையும் கைப்பற்றிடலாம்”

“ஆகட்டும் ஆசானே அதுபடி செய்திடுவோம்”

“ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது மதிநாகசுரா”

“சிக்கலா!!! சிக்கலா!!! ஹா! ஹா! ஹா! அது என்ன புது சிக்கல் வந்துள்ளது ஆசானே? எதுவாக இருந்தாலும் கூறுங்கள். ஏதாவது வழி பிறக்காமலா போய்விடும்”

“கடலை கடப்பதென்பது கடினமானது தான் ஆனால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அதை செயல்படுத்த வேண்டியது உங்கள் இருவரின் பொறுப்பு”

“சொல்லுங்கள் ஆசானே செய்ய தயாரக உள்ளோம்” என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள் மதியும், மந்திராவும்

“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது ஆனாலும்….”

“கவலை வேண்டம் விஷயத்தைக் கூறுங்கள்”

“நாம் முதலில் கடலை கடக்க ஏதாவது ஒரு மார்க்கத்தை கண்டறிய வேண்டும். அது நம் அனைவரையும் சாம்பீனிகள் உட்பட அனைவரையும் கலிங்காவிற்கு கொண்டு செல்ல வேண்டும். நமது ஓலைகள் மற்றும் நம்மைப் பற்றிய அனைத்தும் இதே மகுடாந்த மலையினுள்ள குகையிலேயே இருக்கட்டும். இந்த ஓலையை மட்டும் நம்முடன் எடுத்துச் செல்வோம். அனைத்து இடங்களையும் கைப்பற்றியதும் மீண்டும் இங்கேயே வந்திடுவோம். அதன் பின் தேவர்களை நேருக்கு நேர் சந்தித்திடுவோம். என்ன சொல்கிறீர்கள்?”

“அப்படியா !!! சரி இந்த பூர்வா ரச்னாக்கர் வழி தான் சென்றாக வேண்டுமா? வேறு வழி இல்லையோ?” என்று கேட்டான் மதிநாகசுரன். அதற்கு ஆசான்

“சுற்றிலும் கடல் தான் உள்ளது ஆகையால் எவ்வழி சென்றாலும் கடலைக் கடந்தால் தான் செல்ல முடியும்”

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த மந்திராசுரனுக்கு ஒரு யோசனை வர அதை மதியிடமும் ஆசானிடமும்…

“எனக்கு ஒரு யோசனை!!! அது செயல்படுத்த முடியுமா என்பதை தாங்கள் தான் சொல்ல வேண்டும்”

“என்னவென்று சொல் மந்திரா செயல்பாட்டைப் பற்றி பிறகு யோசிப்போம்” என்றார் ஆசான்

மேற்கொண்டு தன் யோசனையை கூறலானான் மந்திராசுரன்

“நம் மதிநாகசுரனுக்கும், சிகராசுரனுக்கும் இலகிமா சித்தி தெரிந்துள்ளதால் இதைச் சொல்கிறேன். இவர்கள் இருவரைத் தவிற மற்ற அனைவரும் தங்கள் பரமபத அரண்மனையினுள் சென்றிடுவோம். இவர்கள் இருவரும் இலகிமா சித்தியை உபயோகித்து கடலில் நம் அரண்மனையை சுமந்துக் கொண்டே மிதந்து கலிங்கா சென்றடைந்தால்!!! என்ன சொல்கிறீர்கள்?”

“நல்ல யோசனைதான் ஆனால் நாங்கள் இருவரும் மட்டும் இத்தனை பேரை சுமந்து, மிதந்து செல்வதென்பது கொஞ்சம் கடினமானது. ஆனால் நீ கூறியதில் எனக்கொன்று புலப்படுகிறது என்னவென்றால் இலகிமா உபயோகித்து நாம் ஏன் காற்றில் பறந்து செல்லக் கூடாது?”

“ம்… ம்…ம்…. மதிநாகசுரா, மந்திராசுரா தங்கள் இருவரின் யோசனையும் நன்றாக தான் உள்ளது. பரமபத அரண்மனையில் அவ்வளவு தூரமெல்லாம் பயணிக்க முடியாது ஏனெனில் அது குறிப்பட்ட சிறிய காலத்துக்கானது தான். ஆகையால் மந்திராவின் யோசனையில் ஒரு பாதி நடக்க வாய்ப்பில்லை. ம் …ம்…. ம் ….பேசாமல் நாம் ஒரு பெரிய வடிவிலான எண்ணைச் சட்டிப் போல ஒன்றை உருவாக்குவோம், அதில் நாம் அனைவரும் அமந்துக் கொள்வோம், அதை மதிநாகசுரனும், சிகராசுரனும் தம்தம் இலகிமா சித்தியை பிரயோகித்து அந்த சட்டியை இலகுவாக்கி காற்றில் மிதந்து சென்றிடலாமா?”

“ஆசானே இலகிமா சித்தியை உபயோகித்து நாங்கள் இலகுவாக முடியும் ஆனால் அந்த சட்டியை எப்படி இலகுவாக்க முடியும்? நாங்கள் யாரும் அப்படி செய்துப் பார்த்ததில்லையே!”

என்றான் மதிநாகசுரன்.

அன்றுவரை நவியாகம்ஷி, மிளானாசுரி மற்றும் மந்திராசுரனை தவிற அவரவர் சித்திகளை அவரவர்களே உபயோகித்து தான் வந்துள்ளனர். அவர்கள் மற்றவர்கள் மீது பிரயோகம் செய்து கூட பார்த்ததில்லை ஏனெனில் அவர்களின் ஆசானின் கூற்றுப்படி அவர்கள் அவரினத்தவர்களிடம் பிரயோகம் செய்யக்கூடாதென்பதால் அதை செய்யாதிருந்தனர். மேலும் வேறு எவரிடமும் செய்து பார்க்க வேண்டிய அவசியம் அன்று வரை அவர்களுக்கு வரவில்லை.

இன்று மதிநாகசுரன் சொன்னதைக் கேட்ட ஆசான் அவனிடம்

“சரி நீங்கள் இன்றுவரை செய்யாததை இன்று முதல் மயற்ச்சித்துப் பாருங்களேன். ஆனால் நம்மவரிம் செய்து பார்க்கக் கூடாது.”

என்றார் ஆசான் அதைக் கேட்டதும் மதிநாகசுரன்

“அது தான் நம் அடிமைகளான சாம்பீனிகள் உள்ளனவே அவைகள் மீதே நம் பரிசோதனையை ஆரம்பிக்கலாம்.”

“நல்ல யோசனை மதிநாகசுரா அப்படியே செய்யுங்கள். காலம் கடத்தாமல் அது சாத்தியமா என்பதை கண்டறியுங்கள்”

“ஆகட்டும் ஆசானே நாங்கள் இருவரும் இப்போதே சென்று நம்மவர்களை உடனே சாம்பீனிகள் மீது அவரவர் சித்திகளை பிரயோகிக்க சொல்கிறோம். விரைவில் நற்செய்தியுடன் வந்து தங்களைப் பார்க்கிறோம்”

என்று அங்கிருந்து விடைப்பெற்றுக் கொண்டு வெளியே வந்தனர் மதிநாகசுரனும், மந்திராசுரனும். ஆசானுக்கு வயதாகிறது அதனால் அவரின் உடல் அவரின் மனவலிமைக்கு ஏற்றார்போல ஒத்துழைக்க மறுப்பதால் அப்பப்போ ஓய்வு எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். அன்றும் மதிநாகசுரனிடமும், மந்திராசுரனிடமும் கூற வேண்டியதை கூறிவிட்டு சற்று நேரம் ஓய்வெடுக்கத் துவங்கினார். வெளியே வந்த மதிநாகசுரன் அனைவரிடமும்

“நாம் நமது பாதாளபுரிவனத்தின் அருகிலுள்ள ஊர்களையும் சுற்றியுள்ள அனைத்து ஊர்களையும் கைப்பற்றி விட்டோம். இனி நாம் கடல் வழி பயணம் மேற்கொண்டு கலிங்காவுக்கு செல்ல வேண்டும்.”

என்று சொன்னதும் அவர்களுக்குள்…

“அது எப்படி சாத்தியமாகும்? கடலை எப்படி தாண்டுவது?”

என்றெல்லாம் பேசிக்கொள்ள சலசலப்பு ஏற்பட்டது. அதை பொறுக்க முடியாத மந்திராசுரன்

“அனைவரும் கொஞ்சம் அமைதியாக இருந்தே நம்ம மதிநாகசுரன் சொல்வதைக் கேளுங்கள்”

என்றதும் அமைதி நிலவியது. பின் மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தான் மதிநாகசுரன். ஆசான் தன்னிடம் கூறியதனைத்தையும் கூறி முடித்ததும் அங்கிருந்தவர்கள் சாம்பீனிகளை பார்த்தனர். ஆசானின் சொல்படி நடந்திட நவியாகம்ஷி, மிளானாசுரி மற்றும் மந்திராசுரனை தவிற அனைவரும் அவற்றிலிருந்து ஒவ்வொன்றைத் தேர்ந்தெடுத்தனர். அவைகள் மீது தங்களின் சித்திகளை பிரயோகம் செய்துப் பார்க்க தயார் ஆகினர்.

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s