அத்தியாயம் 13: தாரசி கைப்பற்றப்பட்டது

இரண்டாவது அறைக்குள் நுழைந்த மந்திரியை வரவேற்றது ராட்சத கருப்பு நிற சிலந்தி. மந்திரியின் மனதில் ஓடும் எண்ணத்தை அறிந்த சிலந்தி அவரிடம்..

“என்ன மந்திரியாரே தங்கள் தலைவனும் அவர் தங்கையும் தவறவிட்டது அனைத்தையும் சேர்த்து அள்ளிக் கொண்டு செல்ல வேண்டும் என்று வந்துள்ளீரோ?”

“நான் மனதில் நினைத்ததை வாய் விட்டுச் சொல்லிக் கேட்டது போலவே சொல்கிறதே இந்த சிலந்தி இது என்ன இடம் இங்கு எப்படி நான் வந்தேன்”

“எப்படியோ வந்து விட்டீர்கள் விளையாட்டை விளையாடி விட்டு சென்றிடுங்கள். வேண்டாம் என்றால் தங்களின் வலது புறம் இருக்கும் வாயில் வழியே தங்கள் ஊருக்கே சென்றிடலாம் நான் தடுக்க மாட்டேன்”

“சரி சரி நான் என்ன செய்ய வேண்டும்”

“என் விடுகதைக்கு பதில் சொன்னால் அடுத்த அறை இல்லையேல் வலது வாயிற் கதவு வழியே வெளியேற வேண்டும். புரிந்ததா?”

முதல் அறையில் கருநாகம் கேட்டதுக்கே சட்டென்று பதில் சொன்ன மந்திரி தன் தலைவனை விட தான் சிறந்தவன் என்று நிரூபிக்க எண்ணி இதற்கும் அஞ்சாமல் உடனே

“புர‌கிறது நன்றாக புரிகிறது. ம்… உன் கேள்வியை கேள்”

என்று சற்று திமிருடனே சொல்ல. சிலந்தி தன் வலையை மந்திரி மீது சுற்றிக் கொண்டே கேட்கத் துவங்கியது…

“அரண்மனை வாயிலின் நிறமோ இளஞ்ச்சிவப்பு
திறந்தால் வரிசையாக முப்பத்திரெண்டு காவலர்கள்
எதைக் கொடுத்தாலும் நொறுக்கி விடுவார்கள்
அறியா வயதில் அவர்கள் மாண்டால் உண்டு மறுபிறப்பு
நன்கு அறியும் வயதில் மாண்டால் எப்போதும் இல்லை அவர்களுக்கு பிறப்பு”

மந்திரி சிந்தித்துக் கொண்டிருக்கையில் சிலந்தி தன் வலையால் அவரை இறுக்கிக் கொண்டே

“என்ன மந்திரியாரே பதில் எங்கே?”

“சற்று பொறு சொல்கிறேன்”

“பொறுமை என்ற குணம் என்னிடம் இல்லையே நான் என் செய்வேன். ம்…பதில் இல்லை எனில் வலது புறம் வழியே ஊருக்கு செல்லலாம்…ம்…சீக்கிரம் எனக்கு கோபம் வரத்துவங்கி விட்டது…ம்..மந்திரி பதிலை கூறு”

என்று அவரை சிந்திக்க விடாமல் செய்தது சிலந்தி ரூபத்திலிருக்கும் மதிநாகசுரன். மந்திரி சற்று தாமதித்ததால் அவரை தன் வலையால் இறுக்கி சுற்றி வலது புறம் வாயிற் கதவு வழியாக வீசியது. மந்திரி குழம்பிப் போனார். அவர் தன் மனதில்

“யோசிக்கக் கூட விடாமல் இது என்ன விளையாட்டு? சரி நாம் நம் ஊருக்கே சென்றிடுவோம். ஆனால் வழி எங்கே அதோ ஏதோ ஒரு வெளிச்சம் தெரிகிறது அங்கே சென்று பார்ப்போம்” என தீப்பிழம்பின் வெளிச்சத்தை நோக்கி நடக்கலானார். அதைப் பார்த்ததும்

“அய்யோ இது என்ன தீப்பிழம்பு இதைத் தாண்டி எப்படி செல்வது?”

என்று கூறி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே மேலே பார்த்தவர் மீது ஒரு பெரிய சிவப்பு நிற சிலந்தி விழ அவர் அதனிடமிருந்து தப்பிக்க நினைத்து தன் இடது புறம் சறுக்கிச் சென்று தான் நின்றிருந்த நடை மேடையின் அடியிலிருந்த ஒரு கம்பியைப் பிடித்தப் படி தொங்கினார். கீழே தீப்பிழம்பு மேலே ராட்சத சிலந்தி செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த வேளை அந்த சிலந்தி அவர் முன் சட்டென தோன்றியதும் பயத்தில் கம்பியிலிருந்து கைகளை எடுத்தார். தீப்பிழம்பில் வீழ்ந்து சாம்பீனி ஆனார்.

முதல் அறையில் வந்த நரன் நம் மந்திரியாருக்கு முன்னதாகவே தீப்பிழம்பில் வீழ்ந்து சாம்பீனி ஆனான்.
தாய்மார்கள் அனைவரும் அவரவர் பிள்ளைகளுடன் உள்ள அனுமதிக்கப் பட்டனர். கருநாகத்தை கண்டதும் தங்கள் பிள்ளைகளை கொத்தி விடுமோ என்ற பயத்திலேயே கேள்வியை கேட்கக் கூட அவர்கள் நிற்கவில்லை உள்ள நுழைந்ததும் வலது புற வாயிற் வழியே வெளியேறி பாம்பிடமிருந்து தப்பித்து பாழாப்போன தீப்பிழம்புக்கு இறையானார்கள். இப்படியே அந்த தாரசி மக்கள் அனைவரும் சாம்பீனிகளாக மாற்றப்பட்டு சிறையிலிடப்பட்டனர். மந்திரியைத் தவிர வேறு யாருமே இரண்டாவது அறைக்குக் கூட செல்லவில்லை.

தாரசியை அழித்த மகிழ்ச்சியிலிருந்த மதிநாகசுரன் தன் ஆசான் சொல்படி பாதாள தளத்திற்கு சென்று சாம்பீனிகளுக்கு கட்டளைகள் பல வழங்கி அதுபடியே நடக்கிறார்களா என்று சோதித்தும் பார்த்ததில் ஏக மகிழ்ச்சி அடைந்தான். பின் வேகமாக ஆசான் இருக்கும் அறைக்குள் நுழைந்து

“ஆசானே தாரசி நம் வசம் ஆனது. சாம்பீனிகள் அனைத்தும் தாங்கள் கூறியது போலவே என் கட்டளைகளை நிறைவேற்றும் படி பயிற்சி அளித்து அதில் வெற்றியும் கண்டேன்”

“நல்லது மதிநாகசுரா. மகிழ்ச்சி. அது என்ன சாம்பீனிகள்?”

“அதுதான் அனைத்து விணத்துக்கும் நம்ம யாழி வைத்த பெயர். நன்றாக இருப்பதால் நாங்களும் அப்படியே அழைக்க துவங்கிவிட்டோம்”

“ம்… நன்றாக தான் இருக்கிறது. சரி இனி நாம் நமது மகுடாந்த மலைக்கு செல்லவேண்டும். ஊர் மக்கள் அனைவரையும் சாம்பீனிகளாகி விட்டனவா “

“ஆம் ஆசானே அனைவரும் சாம்பீனிகளாயினர். இதில் என்ன வேடிக்கை என்றால் தாரசி மந்திரி மட்டுமே இரண்டாவது அறைக்கு முன்னேறி பின் சாம்பீனியானார். மற்ற அனைத்து நரன்களும் முதல் அறையை தாண்டக் கூடவில்லை. ஹா! ஹா! ஹா! எனக்கென்னவோ இது மிக சுலபமான வேலையாக தோன்றுகிறது”

“எல்லா ஊர் அல்லது நாட்டு மக்களும் ஒரே மாதிரி இருப்பார்கள் என தப்பு கணக்கு போட வேண்டாம் மதிநாகசுரா.”

“ஆகட்டும் ஆசானே”

“சரி சரி இங்கிருந்து புறப்பட்டு மகுடாந்த மலைக்குச் சென்று இவைகளை அடுத்த ஊர் நரன்களை சாம்பீனிகளாக மாற்றுவதற்கு எப்படி உபயோகிக்கலாம் என்று யோசித்து அதற்கு அவைகளை தயார் செய்ய வேண்டும்”

“ஆசானே எனக்கு ஒரு யோசனை”

“என்னது அது சொல் மதிநாகசுரா”

“நாம் இந்த அரண்மனையை கொண்டும், அதிலுள்ள பிராணிகளைக் கொண்டும், விளையாட்டுகளைக் கொண்டும் மட்டும் அடுத்தடுத்த ஊர் நரன்களை சாம்பீனிகளாக்குவோம். இவைகளின் செயல் அந்த தேவந்திரனை அழிக்க வல்லமையானதாக்குவோம். அதுவரை மகுடாந்த மலையில் சாம்பீனிகள் நமது போருக்கான கருவிகள் எல்லாவற்றையும் தயாரிக்க வைப்போம். அது கூடவே அவைகளை போருக்கும் தயார் செய்வோம். என்ன சொல்கிறீர்கள் ஆசானே?”

“ம்… நீ சொல்வதும் சரிதான். இப்போதே இவைகளை உபயோகித்தால் அனைத்து லோகத்துக்கும் விஷயம் தெரிந்துவிடும். சரி நீ கூறியது போலவே செய்வோம் மதிநாகசுரா. இப்போது மகுடாந்த மலைக்குச் செல்வோமா?”

“செல்வோம் ஆசானே”

என்று மதிநாகசுரன் சொன்னதும் ஆசான் இடம்மாற்றிசை மந்திரத்தை உச்சாடனம் செய்ய துவங்கினார். சற்று நேரத்தில் அவர்கள் அனைவரும் அந்த அரண்மனையோடு மகுடாந்த மலைக்கு முன் சென்றனர். அரண்மனையிலிருந்து வெளியே வந்த ஆசான்

“மகு மகு மகுடாந்த மலையே
முட்களாக காட்சியளிக்கும் மலையே
உன்னுள் இருக்கும் குகையே
எங்கள் இனத்தின் ஆதாரமே
பைரவியின் பிள்ளை வந்துள்ளேனே
என்னை உள்ளே அனுமதித்திடுவாயே”

என்று கூறியதும் மகுடாந்த மலையின் வாயில் கதவு திறந்தது. அனைவரையும் சாம்பீனிகளை அழைத்துக் கொண்டு உள்ளே வரச்சொன்னார் ஆசான். சிம்பாசுரனும் கோபரக்கனும் சிகராசுரனுமாக சாம்பீனிகள் அடைப்பட்டுக்கிடந்த சிறை அறையை ஒவ்வொன்றாக மதிநாகசுரனின் ஆணைப் படி திறக்க, அதிலிருந்து வெளியே வந்த சாம்பீனிகளிடம் நேராக மகுடாந்த மலைக்குள் செல்ல கட்டளையிட்டான் மதிநாகசுரன். அவனின் கட்டளைப் படியே அனைத்து சாம்பீனிகளும் மலைக்குள் வரிசையாக சென்றன. அனைத்தையும் மலையினுள் அனுப்பியப்பின் அசுரர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்றனர். கடைசியாக மதிநாகசுரன் சென்றான். அவன் மலையினுள் நுழைந்ததும் மலையின் வாயில் மூடியது.

அனைவரும் அவர்களின் முதல் வெற்றியை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். அதைப் பார்த்த ஆசான் அவர்களிடம்…

“நாம் முதல் படியை தான் அடைந்துள்ளோம். இன்னும் பல படிகள் ஏறவேண்டியிருக்கிறது. ஆகையால் உங்கள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் கடைசி படியில் வைத்துக் கொள்ளுங்கள். அதுவரை நமது வேலைகளை தொடர்வோமாக.”

என கூறியதும் அனைவரும் அமைதியாகினர். பின் மதிநாகசுரன் தன் நண்பர்களைப் பார்த்து

“நம் ஆசான் கூறுவதும் உண்மைதான். சரி நாளைமுதல் சிம்பாசுரன் நீ எங்களுடன் அடுத்த ஊருக்கு வர வேண்டாம். அதற்கு பதில் இங்கிருக்கும் சாம்பீனிகளுக்கு காலை முதல் மாலை வரை போர் பயிற்சிக் கொடு, மாலை முதல் மறுநாள் காலை வரை போருக்கான கருவிகளை உருவாக்கக் கற்றுக் கொடுத்து அதை செய்ய வை. புரிகிறதா சிம்பா?”

“புரிகிறது மதி ஆனால் அவைகள் என் கட்டளைக்கு அடிபணிந்து நான் சொல்வதை கேட்குமா?”

“நிச்சயம் சிம்பா. அதற்கான மந்திரமான விணத்தடக்கியை உனக்கு நான் சொல்லித் தருகிறேன் அதை மூன்று முறை உச்சாடனம் செய்து விட்டு அவைகளிடம் செல் நீ சொல்வதனைத்தையும் கேட்கும். அதன் படியே நடக்கும். அந்த விணத்தடக்கி மந்திரத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம் என்று எனக்கு தோன்றுகிறது ஆகையால் கூறுகிறேன் அனைவரும் கற்றுக்கொள்ளுங்கள்.”

“சபாஷ் மதிநாகசுரா சபாஷ். இது தான் நல்ல தலைவனுக்கான குணம். சரி நீ இவர்களுக்கு விணத்தடக்கி மந்திரத்தை சொல்லிக் கொடுத்துவிட்டு உள் குகைக்குள் வா. அடுத்த ஊரான சௌனியை கைப்பற்ற சில பல யுக்திகளை பற்றி உன்னுடன் பேச வேண்டும்.”

“ஆகட்டும் ஆசானே. தாங்கள் முன்னே செல்லுங்கள் பின்னாலேயே வந்திடுகிறேன்”

என் கூறி ஆசான் சென்றதும் மதிநாகசுரன் மற்றவர்களுக்கு விணத்தடக்கி மந்திரமான

“தீப்பிழம்பில் வீழ்ந்து மரணித்த உங்களை
மந்திரத்தால் மீட்டுயிர்ப்பிக்கச் செய்து
நரனிலிருந்து விணமாகியிருக்கும்
நீங்கள் எங்கள் அடிமைகள்
நாங்கள் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும்
ஹே பாதாள பைரவி
ஹே பாதாள பைரவி
ஹே பாதாள பைரவி…

இதை கூறினால் சாம்பீனிகள் நீங்கள் சொல்வதனைத்தையும் கேட்கும் அதுபடி செய்யும். புரிந்துக் கொண்டீர்களா? நான் ஆசானிடம் செல்லட்டுமா? அது வரை நீங்கள் இதை பரிசோதித்துப் பாருங்கள்”

“ஆகட்டும் மதி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீ ஆசானிடம் சென்று வா”

என்று சிம்பாசுரன் கூறியதும் அங்கிருந்து பறப்பட்டு உள் குகைக்குள் ஆசானை காணச் சென்றான் மதிநாகசுரன்.

ஆசானும் மதிநாகசுரனும் அவர்களின் சௌனி ஊரை கைப்பற்ற மேற்கொண்ட பேச்சு வார்த்தை முடிந்ததும் மீண்டும் வெளியே வந்தவர்கள் அங்கு கண்ட காட்சியை கண்டதும் ஆச்சர்யமானார்கள். ஆம் வெளியே விணத்தடக்கி மந்திரத்தை உச்சாடனம் செய்து சாம்பீனிகளை வேடிக்கை காட்ட வைத்து அதைப் பார்த்து நகையாடிக் கொண்டும், சில சாம்பீனிகளை அவர்களுக்கு சின்ன சின்ன வேலைகளை செய்யச் சொல்லியும் கூத்தடித்துக் கொண்டிருந்தனர் சிம்பாசுரன், கோபரக்கன், சிகராசுரன், யாகம்யாழி, நவியாகம்ஷி, மிளானாசுரி, மந்தாகிஷி. சாம்பீனிகள் தண்ணீர் கொண்டு வருவதும், அசுரர்களுக்கு பூச்சிகளை பிடித்து சமைத்து உண்ணக் கொடுத்துக் கொண்டும் அங்கும் இங்குமாக அலைந்துக் கொண்டிருந்தன. இதைப் பார்த்ததும் ஆசானுக்கு கோபம் வந்தது. மதிநாகசுரனுக்கோ அந்த கூத்தில் பங்கெடுத்துக் கொள்ளமுடியாமல் போனதே என்று மனதினுள் நினைத்தாலும் ஆசானின் கோபம் அறிந்ததும் அவன் அனைவரையும் ஓங்கிய குரலில் சத்தம் போட்டான். உடனே அனைவரும் அமைதி ஆனார்கள் ஆனால் ஒரே ஒரு சாம்பீனி மட்டும் சிம்பாசுரனுக்கு தோள்பட்டையை தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தது. அதை கவனித்த ஆசான் சடால் என்று சிம்பாசுரன் பக்கம் திரும்பி பார்க்க உடனே அவன் அந்த சாம்பீனியை சும்மா நிற்கும் படி கட்டளையிட்டான். பின் ஆசான் கூறலானார்

“என்ன நடக்கிறது இங்கே? நாம் எதற்காக நரன்களை சாம்பீனிகளாக மாற்றியுள்ளோம் நம் ஒவ்வொருவருக்கும் சேவகம் செய்யவா? இல்லை இவைகளை பெரும் படைகளாக மாற்றி தேவேந்திரனை அழித்து நமது இனத்தை காக்கவா?”

மயான அமைதி நிலவியது. உடனே மதிநாகசுரன் ஆசானிடம்

“ஆசானே தயவுசெய்து இந்த ஒரு முறை அவர்களை மன்னித்து விடுங்கள். இனி இது போல் நடந்திடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். ஏதோ தெரியத்தனமாக விளையாடிவிட்டனர்.”

என்று சொன்னதும் ஆசான் மதிநாகசுரனை கோபமாக ஒரு பார்வைப் பார்த்து விட்டு விருட்டென்று மீண்டும் உள் குகைக்குள் சென்றார்.

தொடரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s