அத்தியாயம் 12: சாம்பீனிகள்

அவர் பயத்தில் உறைந்து நின்றதைப் பார்த்த மதிநாகசுரனுக்கு மனதில் ஏக மகிழ்ச்சியாக இருந்தது. தாரசியின் தலைவன் செய்வதறியாது மெல்ல நகர்ந்து வலதுபுறம் இருக்கும் கதவு வழியாக வெளியே செல்ல முயற்சிக்கும் போது அந்த கருநாகம் அவரை வழி மறைத்து பேசத் துவங்கியது….

“என்ன தலைவனே விளையாட்டை விளையாடாமல் தப்பிச் செல்ல முயற்சிக்கிறாய்? இது தான் உங்க தாரசி வழக்கமோ? என் கேள்விக்கான சரியான பதிலைக் கொடுத்தால் என் பின்னால் இருக்கும் கதவு வழி அடுத்த அறைக்கு முன்னேறிச் செல்லலாம். பதில் தெரியவில்லை என்றால் உன் வலது புறம் உள்ள கதவு வழியே வெளியே செல்லலாம் புரிகிறதா?”

என்று மதிநாகசுரன் அந்த நாகத்தின் வடிவில் ஊர் தலைவனோடு உரையாடினான். ஒரு நாகம் தன்னுடன் பேசுவதைக் கேட்டதும் தலைவன் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. ஆனாலும் எப்படியோ அங்கு மாட்டிக் கொண்டு விட்டோம் என்பதை உணர்ந்த அவர் வேறு வழியின்றி விளையாட ஒப்புக் கொண்டார். அவர் சம்மதித்ததும் அந்த கருநாகம் அவரை மெல்ல சுற்றிக் கொண்டே கேள்வியைக் கேட்க துவங்கியது…

“இது ஒரு புதிர். இதற்கான விடையை தந்து விட்டால் உன்னை விட்டுவிடுவேன் புரிகிறதா?”

தலைவனை அந்த நாகம் மெல்ல சுற்றுவது அவருக்கு ஏதோ செய்தது. வழுவழுவென்று இருக்கும் அந்த நாகம் அவரை மெதுவாக இறுக்கியப்படி சுற்றிக் கொண்டே கேள்வியை கேட்க துவங்கியது

“மரத்தின் மேலிருந்து தொங்கும்
வளைந்து நெளிந்து இருக்கும்
மலைப் பாம்பை போலிருக்கும்
பிடிக்க வீரனாக இருக்க வேண்டாம்
சிறு பாலகனே போதும்
அது என்ன?”

என்று தனது சிவந்த இரட்டை நாக்கை உஸ் உஸ் என்று வெளியே நீட்டி நீட்டி தலைவனின் முகம் பார்த்துக் கேட்டது. அதற்கு அவர் சற்று யோசிக்க அவகாசம் கேட்டார் ….உடனே அந்த கருநாகம்

“உனக்கு அவகாசம் கொடுத்தால் எனக்கு அவகாசம் யார் கொடுப்பார். எங்கள் வேலையை நாங்கள் செய்து முடிக்க வேண்டுமே…ம் …ம்… பதிலைக் கூறி அடுத்த அறைக்குள் செல்கிறாயா இல்லை வலது புறம் கதவு வழியே வெளியே செல்கிறாயா?”

தலைவனுக்கு அங்க நடக்கும் எதுவுமே சரியாக படவில்லை ஆகையால் பதில் தெரிந்தும்….தெரியாது என்று கூறி அவ்விடமிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறினார். அதைக் கேட்ட நாகம் சற்று சீறியது… பின்

“உன் மனதில் பதிலிருக்கு அது கூடவே பயமும் இருக்கு அதனால் வெறியேற நினைக்கிறாய். சரி உனக்கு உண்டான பரிசை நீயே வலது புறம் இருக்கும் கதவு வழியே சென்று ஏற்றுக் கொள்கிறாயா….இல்லை நான் உன்னை அங்கு வழியனுப்பி வைக்கட்டுமா?”

“வேண்டாம் வேண்டாம் நானே செல்கிறேன்”

என்று கூறியதும் நாகம் அவனை விடுவித்து வழிவிட்டது. வேகமாக தன் வலது புறமிருக்கும் கதவின் முன் நின்றான். கதவு திறந்தது. உள்ளே சிறிது தூரம் சென்றதும் தீப்பிழம்பைப் பார்த்தான் உடனே வந்த வழியே செல்ல முடிவெடுத்து திரும்பினான் அவன் முன் அந்த கருநாகத்தி‌ன் இரட்டை நாக்கு சர்ரென்று அவன் முன் அவனை கொத்த வருவது போல வேகமாக மின்னல் போல் வந்ததும் தடுமாறியவன் தீப்பிழம்பில் வீழ்ந்து மாண்டான்.

தீப்பிழம்பில் வீழ்ந்த தலைவன் காற்கோடையனின் சாம்பீனி மந்திரத்தின் உச்சாடனத்தினால் விணமாகி பொத் என்று பாதாள தளத்தில் வீழ்ந்தான். அவனைப் பார்த்த யாகம்யாழி

“அய்யோ இவன் என்ன இவ்வளவு அரூபமாக இருக்கிறானே!”

என்றாள். அதற்கு சிம்பாசுரன்

“சாம்பீனி மந்திரம் நரன்களை இப்படி அகோரமாக தான் மாற்றும் என்று மதிநாகசுரன் ஆசான் கூறியதாக சொன்னான்.”

“சரி சரி என்ன வீண் பேச்சு வேலையில் இறங்குவோம்” என்றான் கோபரக்கன்

உடனே அந்த விணத்தை சிம்பாசுரன் மற்றும் கோபரக்கன் இருவரும் சேர்ந்து இழுத்து ஒரு அறையில் தள்ளினர். அவர்கள் இழுத்து சென்ற அந்த விணத்தைப் பார்த்து மிளானாசுரியிடம்…

“அக்கா இது போல வருபவைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமே!!! என்ன பெயர் வைக்கலாம் அக்கா?”

“என்ன யாகம்யாழி எத்தனை விணத்திற்கு பெயர் வைக்க முடியும் என்று நினைக்கிறாய். நாம் எத்தனை ஊர் நரன்களை இப்படி அடைத்து வைக்கப் போகிறோம் அவைகள் அனைத்துக்கு பெயர் வைப்பதென்பது மிகவும் கடினமான வேலை ஆச்சே…”

“அய்யோ அக்கா…நான் தனிதனியாக பெயர் வைக்க வேண்டும் என்று கூறவில்லை பொதுவாக இவைகளை குறிக்கும் ஒரு பெயர் தான் வைப்போமா என்று சொன்னேன். தனிதனியாக பெயர் வைத்து அழைக்க இவைகள் என்ன நம்மவர்களா?”

“ஓ !!! நீ அப்படி கூறுகிறாயா!!! சரி சரி புரிந்தது. ஏன் நீயே ஒரு பெயர் சொல்லேன் பார்ப்போம்”

“என்ன அக்கா நான் ஒரு யோசனை சொன்னால் …என்னையே பெயர் வைக்க சொல்லுகிறீர்களே?”

“யோசனை சொன்னவளே அதற்கான பெயரையும் சொல்லவேண்டும்” என்றனர் நவியாகம்ஷியும், மந்தாகிஷியும்.

“ம்…ம்..சரி …சரி ‌…சரி… சற்று நேரம் பொறுமையாக இருங்கள் நானே கூறுகிறேன். உங்களின் கல்யாண நாள் இரவு எப்படி இருந்தது நவி, மிளா, மந்தா அதைப் பற்றி எவருமே ஒன்றுமே கூறவில்லையே…ம்… என்னிடம் சொன்னால் எனக்கு பின்னாளில் உபயோகமாக இருக்கும் அல்லவா?”

“அடிக் கள்ளி யாழி…பேச்சையா மாற்றுகிறாய். முதலில் பெயரைச் சொல் பின் நாங்கள் நீ கேட்டதற்கு விளக்கம் அளிக்கிறோம்…என்ன மிளா, மந்தா…நான் சொல்வது சரிதானே?”

“ஆம் நவி….நீ சொல்வது சரிதான். என்ன அழகாக பேச்சை திசை திருப்புகிறாள் இந்த யாழி!!! அடியே நவி சொன்னதைப் போல பெயர் முதலில் விளக்கம் முடிவில்”

“யாழி அக்கா நவி அக்காவும், மிளா அக்காவும் கூறுவது சரிதான். பேச்சை மாற்றாமல் தாங்கள் துவங்கியதை முதலில் முடியுங்கள்”

“அப்பப்பா என்ன ஒரு ஒற்றுமை மூவருக்குள்ளும்? கல்யாணமாகாத இந்த கன்னியை இப்படியா மிரட்டுவது?”

“ஏய் யாழி!! யாரடி உன்னை மிரட்டியது ?? பெயர் தெரியாதென்றால் ஒப்புக் கொள் நாங்களே யோசித்து ஒரு பெயர் வைத்துக் கொள்கிறோம்”

என்று மிளானாசுரி கூறியதும் யாகம்யாழி …

“வேண்டாம் !!வேண்டாம்!! நானே சிந்தித்து விட்டேன். கூறுகிறேன் நன்றாக கேளுங்கள்… நமது ஆசான் காற்கோடைன் என்ன மந்திரம் போட்டு நரன்களை இப்படி மாற்றி நம்மிடம் அனுப்புகிறார்?”

“என்ன யாழி? விடைக் கேட்டால் வினா கேட்கிறாய்?”

“அச்சோ நவி அக்கா. நான் கேட்டதுக்கு காரணம் இருக்கு. நீங்கள் சொல்லுங்கள்”

“ம்…ஏதோ சொல்கிறாய் …இருந்தாலும் சொல்கிறேன் …ஆசான் உச்சாடனம் செய்வதின் பெயர் சாம்பீனி மந்திரமாகும்”

“ம்… சரியான விடை நவி அக்கா பலே”

“அடியே யாழி எனக்கு பாரட்டுவிழா எடுத்தது போதும் பதிலைச் சொல்”

“ம்… சாம்பீனி மந்திரத்தால் உருவாகி வரும் இவைகளுக்கு பொதுவான பெயராக “சாம்பீனிகள்” என்று வைத்தால் என்ன? எப்படி??”

“ம்…நன்றாகதான் இருக்கிறது யாழி.” என்று அங்கு நடந்த பேச்சு வார்த்தைகளை கேட்ட சிகராசுரன் கூறியதும் மிளானாசுரி யாகம்யாழியைப் பார்த்து

“வேறு யார் சொல்ல வேண்டும் யாழி? சிகராவே நன்றாக இருப்பதாக சொன்ன பிறகு உனக்கு எங்கள் மூவரின் அபிப்ராயம் வேண்டுமா என்ன?”

“அது தானே!! இனி இதில் சொல்ல நமக்கு என்ன இருக்கிறது?”

என யாகம்யாழியை கிண்டல் அடித்தனர் நவியாகம்ஷி, மிளானாசுரி மற்றும் மந்தாகிஷி.

“போங்க அக்கா!! அடியே மந்தா நீயுமா இவர்களுடன் சேர்ந்து என்னை நகையாடுகிறாய்?. அவர் சொன்னது இருக்கட்டும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்”

“அருமையான பெயர் தான் வைத்துள்ளாய் யாழி. இனி நாம் அனைவரும் அவைகளை “சாம்பீனிகள்” என்றே அழைப்போமாக”

என்று நவியாகம்ஷி சொன்னதும் யாகம்யாழிக்கு ஏதோ சாதித்தது போல பெருமிதம் அடைந்தாள். தங்கள் கடமையை முடித்த பெருமிதத்தோடு அங்கு வந்தனர் சிம்பாசுரனும், கோபரக்கனும். சிம்பாசுரன் அங்கே பேசிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து

“என்ன இங்கே ஒரே சலசலப்பாக உள்ளது? அடுத்த விணம் வருகைக்கு அனைவரும் தயார் ஆகுங்கள்” என்றதும் மந்தாகிஷி அவனிடம்

“விணங்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆகயால் இப்பொழுது முதல் அவைகளை சாம்பீனிகள் என்றே அழைக்க வேண்டும்”

என்றாள். அதைக் கேட்டதும் சிம்பாசுரன்

“இது என்ன புதுப் பெயர்?”

“அது நம் யாகம்யாழியின் விருப்பம். அதற்கு நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டாகிவிட்டது. நீங்கள் இருவரும் என்ன கூறுகிறீர்கள்?”

“சாம்பீனிகள் ….இதுவும் நல்ல பெயராகத்தான் உள்ளது மந்தாகிஷி. பலே யாழி பலே இதை இன்றே நம் மதியிடமும் ஆசானிடமும் கூறிவிடுவோம். சரி அங்கே அடுத்து தலைவனின் மனைவி உள்ளே செல்கிறாள் பாருங்கள். அவளாவது அடுத்த அறைக்குள் செல்வாளா?”

“உஷ் ஷ்… அவள் மனைவி அல்ல அவனின் தங்கை ஆவாள் பார்ப்போம் ” என்றான் கோபரக்கன்.

“எவளாக இருந்தால் என்ன இன்னும் சற்று நேரத்தில் சாம்பீனி ஆக போகிறாள்” என்று சிரித்தாள் மிளானாசுரி

அனைவரும் முதல் சாம்பீனி ஆகிய தலைவனின் தங்கை முதல் அறைக்குள் நுழைந்ததும் நிகழப் போவதை ஆர்வத்துடன் பார்க்கத் துவங்கினர்.

தலைவனின் தங்கையும் முதல் அறைக்குள் நுழைந்ததும் அவளை தன் வசியத்திலிருந்து விடுவித்தாள் மிளானாசுரி. தலைவனின் தங்கை வசியத்திலிருந்து விடுப்பட்டதும் அவள் பின்னால் இருந்த கதவு படார் என்று மூடியது. அதிலேயே பயந்துப் போனாள் அவள். மூடிய கதவைப் பார்த்துவிட்டு திரும்பியவளுக்கு முன் படம் எடுத்து நின்ற கருநாகத்தைப் பார்த்ததும் மயங்கி கீழே விழுந்தாள். தன்னைப் பார்த்ததுமே மயங்கிய அவளை தீப்பிழம்பில் தள்ளியது அந்த நாகம். அவள் தீயில் கறைந்து கலந்து போனாள். ஆசானின் மந்திர உச்சாடனத்தால் சாம்பீனியாக பாதாள தளத்தில் பொத்தென்று வீழ்ந்தவளை இழுத்துச் சென்று அவள் அண்ணனை அடைத்த அதே அறையில் அடைத்து வைத்தனர் நவியாகம்ஷியும், மிளானாசுரியும்.

அடுத்து நுழைந்தார் மந்திரி. அவரையும் முதல் அறையினுள் நுழைந்ததும் தன் பிடியிலிருந்து விடிவித்தாள் நவியாகம்ஷி. சுயநினைவுக்கு வந்தவர் பின்னாலிருந்த கதவு படார் என சாத்தியதும் திரும்பிப் பார்த்து விட்டு முன்பக்கம் திரும்பியதும் படமெடுத்து நின்ற கருநாகத்தைப் பார்த்து சற்று பயந்து ஒரு அடி பின்னால் வைத்தவர் வெளியே பயமில்லாதது போலவே நின்றிருந்தவர் முக்ததிற்கு மிக அருகில் சென்றது நாகம். பின் மெல்ல அவரை சுற்றிக் கொண்டே அவர் தலைவனிடம் கூறிய விளக்கத்தை கூறி அவரிடம் கேட்ட புதிரை கேட்கத் துவங்கியது.

“மரத்தின் மேலிருந்து தொங்கும்
வளைந்து நெளிந்து இருக்கும்
மலைப் பாம்பை போலிருக்கும்
பிடிக்க வீரனாக இருக்க வேண்டாம்
சிறு பாலகனே போதும்
அது என்ன?”

நாகம் கேட்டு முடித்ததும், மந்திரி சட்டென்று

“விழுது”

என்ற பதிலைச் சொல்லிவிட்டு அது சரியா இல்லை தவறா என்ற குழப்பமின்றி நின்றவருக்கு முன்னால் இருந்த கதவு வழி செல்ல கருநாகம் வழி விட்டுக் கொண்டே மந்நிரியிடம்…

“பலே மந்திரியாரே பலே!! உங்கள் தலைவனும் அவர் தங்கையும் கொடுத்திராத சரியான பதிலை தாங்கள் கொடுத்ததால் நீங்கள் அடுத்த அறைக்குள் செல்லலாம். வாழ்த்துகள்”

என்று நாகம் சொன்னதைக் கேட்டதும் முன் வைத்த காலை சற்றே பின் வைத்து நாகத்திடம்…

“அப்போ என் தலைவரும் அவர் தங்கையும் எங்கே சென்றார்கள்? அவர்கள் வெளியே வரவில்லையே!!”

“கவலை வேண்டாம் மந்திரியாரே அவர்கள் இருவரும் உங்கள் வலது புறம் இருக்கும் கதவு வழியாக தங்கள் ஊருக்கே சென்றுவிட்டனர்.”

என்று நகையாடிக் கொண்டே கருநாகமாகிய மதிநாகசுரன் சொன்னதைக் கேட்ட மந்திரி தன் தலைவன் வென்றிடாததை தான் வென்று ஊருக்கு செல்ல வேண்டும் என மனதில் எண்ணிக்கொண்டே அடுத்த அறைக்குள் சென்றார். அவர் உள்ளே நுழைந்ததும் கதவு படார் என மூடியது.

இரண்டாவது அறையின் கதவடைந்ததும் முதல் அறையின் கதவு திறந்தது அடுத்த நரன் உள்ளே வந்ததும் மீண்டும் முதல் அறையின் கதவு படார் என மூடியது. இரண்டாவது அறையில் மந்திரியும், முதல் அறையில் அந்த ஊர் நரனும் விளையாடத் துவங்கினர்.

இவ்விருவரும் விளையாட்டில் முன்னேற்றம் அடைந்தார்களா இல்லை சாம்பீனிகளானார்களா? இரண்டாவது அறையில் என்ன காத்திருந்தது?

தொடரும்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s